Tuesday, January 19, 2010

தூரம்


நிலாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் அன்று அலுவலகத்தில்.... ஆளாளுக்கு ஒரு கதை.. ஒன்றிரண்டுபேர் கவிதைகூட சொன்னார்கள்....

திடீரென ஒரு யதார்த்த கேள்வி வந்து விழுந்தது....  

"இவ்ளோ பேசுறோமே... நேற்றிரவு நிலவை நம்மில் எத்தனைப் பேர் பார்த்திருப்போம்.. கடைசியாக நிலவைப் பார்த்த நாளாவது நமக்கு நினைவிருக்குமா?" 

துபாயில் உடன் பணிபுரியும் சக சாஃப்ட்வேர் தமிழ் சகா ஒருவன் கேட்டபோது.... அங்கே முந்தைய நாள் பிறை நிலவைக் கண்டிருந்த ஒரே நபர் அவர்களின் மரியாதைக்குரிய சீனியர் பிரபாகர் மட்டும்தான்!!  

" ஊர்ல இருக்குற என் பொண்ணும் நானும் ஒண்ணா பார்க்க முடிஞ்ச‌ ஒரே நிஜப் பொருள் அதுதானே!!... தினமும் பார்ப்பேன்.. என் பொண்ணும் பார்ப்பா.... நான் ஊரைவிட்டு வரும்போதும் ஊர்ல இருந்து இங்க வரைக்கும் கூட வர்றதும் அதுதானே!! அதுனால தினம் பார்ப்பேன்... ரொம்ப ஓவரா இருக்கோ!!" ஒரு சிரிப்புடன் முடித்தார்....  

கலகலப்பான ஆள்தான் என்றாலும் இரவு நேரங்களில் ரூம்மேட்களிடம்கூட அதிகம் பேசுவதில்லை பிரபாகர்... 
பதினான்காவது மாடியில் இருக்கும் அவர் வீட்டு பால்கனியில் நின்று வானத்தையும், துபாயின் இரவு நேர ஜொலிப்பையும் வெறித்த வண்ணம் சில நிமிடங்கள் கழித்தபின்தான் உறங்கச் செல்வார் தினமும்....  

கேட்டால் அமைதியைக் காதால் கேட்க முடியாது கண்களால்தான் பார்க்க முடியும் என்று சொல்வார்! 

உண்மைதான்.... இரவு நேர கருப்பு வானத்திடம் ஓர் ஆட்கொள்ளும் அமைதி உண்டுதானே.... கண்களால் அந்த அமைதியைத் தொடர்ந்து உள்வாங்க உள்வாங்க பூலோக இரைச்சல்கள் கவனத்தைவிட்டே கரைந்துபோகும்!! அந்த அமைதி ஒரு பொய்தான்... வானத்துப் பேரிரைச்சலைக் கேட்கும் தொலைவில் நாமில்லை என்பதால்தான் இந்த நிசப்தம்....!!

ஆம் தூரம் அமைதி தரும்.... தூரத்தில் இருப்பதால் பிரபாகருக்கு அழகான அவர் குடும்பத்தில் இரைச்சல்கள் எதுவுமில்லை...

தொடரும்....

(பி.கு : சிறுகதை ஒன்றை எழுதத் துவங்கினேன் அது இப்படியெல்லாம் விரிந்து சென்றது... எழுதிய வரை இன்று பதித்துவிட்டுச செல்கிறேன்.. நாளைக்குத்தான் தெரியும் இக்கதையின் தலைஎழுத்து!! சிறுகதையாகப் போகிறதா அல்லது சைஸ் கூடுமா என்று!! Anyways ur comments please....)


Friday, January 01, 2010

2010 : புதுசு கண்ணா புதுசு...!!


31 12 2009 23:59:57
31 12 2009 23:59:58
31 12 2009 23:59:59


01 01 2010 00:00:00

இந்த நொடி சிறப்பாகக் கொண்டாடப் பட்டது!! 

வான வேடிக்கைகள்... தூரத்து வெடி முழக்கம்... அதற்கு இணையாக பக்கத்து சர்ச்ச்சுகளின் கோஷம்..!! 1982ல் வெளியாகி கால் நூற்றாண்டு கழிந்துவிட்டாலும் அதே "சகலகலாவல்லவன்" கமல்தான் இவ்வருடமும் அதே பைக்கில் திரையைக் கிழித்துக் கொண்டு வந்து 'பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்.... பப்பாய்ங்" சவுண்டுடன் விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் என்று தெருவுக்குத் தெரு ஸ்பீக்கர்களில் பாடிக் கொண்டிருந்தார்!! பைக்கில் "வ்வ்ர்ர்ர்ர்ரூரூம்ம்" என்று ஹேப்பி நியூ இயர் சொன்னவாறே குட்டிக் குட்டி ஜாலி ஊர்வலங்களையும் காணமுடிந்தது.... நிச்சியம் ஓர் ஐநூறு பேர் "இன்று முதல்" குடிப்பதையோ, புகைப்பதையோ நிறுத்தியிருப்பார்கள்!! (மார்ச் மாதம் கொஞ்சம் கொஞ்சமாய் அத்தனை பேரும் பேக் டு ஃபார்ம் ஆகிவிடுவது வரலாறு!!)

எங்கும் மகிழ்ச்சி... செல்ஃபோன் சிணுங்கல்கள்... எல்லாமே மெல்ல மெல்ல அடங்கிப்போக பூமி சலனமில்லாமல் அடுத்த ரவுண்டைத் துவங்கிவிட்டது!! 2010ல் இரண்டு மணி நேரங்கள் ஓவர் பிரதர்!! என்று என்னைப் பார்த்து சிரிக்கிறது வீட்டுக் கடிகாரம்!! :)

கைமேல் 365 புத்தம் புதிய நாட்கள்... புதிய சிந்தனைகள்... மகிழ்வான துவக்கம்.... நல்ல வார்த்தைகள்... ஆசீர்வாதங்கள்... ஜனவரியில் வெயிலும் அதிகம் எறித்திடாத‌ வசந்தகாலம்... எனவே, நேற்று இரவு வரை அதிருப்தியிலும் தோல்வியிலும் வலித்திருந்தாலும்... மென்மையாக ஒரு புதிய துவக்கத்தைப் புதிய காலண்டரின் கவரைக் கிழித்துச் சுவரில் மாட்டி இனிதே துவங்கலாம் முதலிலிருந்து இன்று!!  

விடிந்தவுடன்... டிவிப் பெட்டியின் அர்த்தமற்ற "சிறப்பு நிகழ்ச்சிகளை"ப் பார்க்காமல், நம் வாழ்வில் இந்த வருடம் "மோஸ்ட் ப்ராபப்ளி " நடக்கப் போகும் "சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு"த் தயாராவோமாக‌..... !!  

இந்த வருடம் நிறைய நிறைய படிக்க வேண்டும் என்று சிரத்தையாக ஒரு முடிவெடுத்துள்ளேன்.... முதல் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய புத்தகங்களை நீண்ட காலமாய்த் தேக்கி வைத்திருக்கிறேன்... வாசிக்காமலும், பாதி வாசித்தும்!! நிறைய படிக்க வேண்டும்... நிறைய பார்க்க வேண்டும்... நிறைய நிறையப் பழக வேண்டும்.... சொல்கிறேன்... செய்ய வேண்டும்!! பார்த்த, கேட்ட, படித்தவை அனைத்தையும் பதிவுலகில் பகிர்ந்து கொள்வதும் செயல் திட்டத்தில் அடங்கும்... பார்க்கலாம் செய்கிறேனா என்று!! :)  

இந்தப் புதுவருஷம் நம்ம எல்லாரும் எல்லா விதத்திலும் மகிழ்ச்சியயும் நம் முனைப்பில் தெளிவும்.... இலக்குகளை நோக்கி உழைக்கப் போதுமான நேரமும், அத்தியாவசியமான மன நிம்மதியும் பெற்று, வெற்றிகளில் மயங்கிடாது, தோல்விகளில் துவண்டிடாது... இந்தப் புத்தாண்டு பிறப்புதின மகிழ்ச்சி அதிர்வுகளை இந்த ஆண்டு முழுதுமாக நாம் அனைவருமே எதிரொலித்திருப்போமாக!! :)  

ரொம்பவே சத்தமாக சொல்லிக்கொள்கிறேன்...
"ஹை எவரிப்டி ஐ விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்ர்ர்ர்" 
பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்..... பப்பாய்ங்....!! :)  

அன்புடன்,