Tuesday, August 10, 2010

இன்செப்ஷன் (INCEPTION - 2010)

மனம்.....மனித உடலின் மந்திரப்புலண்!!

அண்டத்தில் புவி எவரின் படைப்போ?? ஆனால் புவியில் உலகம் மனிதப்படைப்பே..!!
மனிதனின் படைப்புகளுக்குப் பூமி ஒரு மேடை.... ஆனால் களம்?? அது உள்ளிருக்கும் மனம்தானே!! :)

மனமென்னும் இந்த மாயக்களத்தில் ஓர் உலகத்தையே கற்பனையால் கட்டுமானம் செய்யும் வல்லமையை நாமறிவோம்.... நம்முடைய திறமைகளும் ரசனைகளும் முழுச்செழுமையுடன் ஈடுபடும் இந்த நம்முடைய கனவுலகை மற்றவர்களுடன் பகிர்வது சாத்தியம் என்கிற ரீதியில் கதை துவங்கும்போதே திரையின் மையத்தில் கண்கள் குவிந்துவிடுகின்றன..... மூளையென்னும் வெறும் ஒன்றரைக் கிலோ தசை முடிச்சில் இருக்கும் மைக்ரோ அறைகளுக்குள் ஒளிந்திருக்கும் மெகா மகா சிந்தனைவெளியில் ஒரு நேவிகேஷன்தான், உலகெங்கும் விமர்சகர்கள் ஃபைவ் ஸ்டார்களை வாரி வழங்கியிருக்கும் இந்த இன்செப்ஷன்!!

"என்னிடம் ஒரு ரகசியம் இருக்கு... அதை என் மூளைக்குள் ஒரு ரூமுக்குள் போட்டு பூட்டிவிட்டேன்... செத்தாலும் வாய் திறந்து சொல்லமாட்டேன்... " என்று நீங்கள் சொன்னால் உங்கள் மனதுக்குள் நுழைந்து, உங்களைக் கனவுகளுக்குள் சிறைவைத்து அந்த ரகசியத்தைத் திருடிச்செல்லும் ஒரு வித்தை சொல்லியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலான்!!

"இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்" என்று "பாய்ஸி"ல் செந்தில் சொல்லுவாரே... அதே விஷயம்தான்... பலகோடி மதிப்புள்ள ஓர் இன்ஃபர்மேஷன் ஒருத்தன் மண்டைக்குள்ள மாட்டிக்குது, அதை அவன் மண்டைக்குள்ளயே புகுந்து திருடுவோம்ல! என்று ஹாலிவுட் ஆக்ஷனில் மேக்கிங்கில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டியிருக்கிறார்கள்...
டைட்டானிக்கின் இதயத்திருடன் லியார்னாடோ டிகாப்ரியோதான் இங்கு மனித மூளையின் அறைகளுக்குக் கள்ளச்சாவி வைத்திருக்கும் ஓர் அழகுத் திருடன்!! சேர்ந்து தூங்கும் (தனித்தனியாகத்தான்!!) நான்கு பேர் கனவுகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குட்டி மெக்கானிஸம்தான் கான்செப்ட்!!....

"செடேஷன்" எடுத்துக்கொண்டு கைகளை ஒரு வொயரால் இணைத்துக்கொண்டு சின்ன ஒரு சிஸ்டத்தின் துணையுடன் ஒரு டீமாக சேர்ந்து உறங்கி ஒரே கனவைப் பகிரும் சுவாரஸ்ய செடஅப்!! கனவுக்குக் களத்தை ஒருவர் உருவாக்குகிறார்... அது நாம் காணாத நிலமாக இருத்தல் நலம்... நிஜ வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத காடோ, மலையோ அல்லது ஏதோ ஒரு கனவு தேசத்தின் பிஸியான ரோடாகவோ இருக்கலாம்.... ஒரு கட்டத்தில் அந்த நிலப்பரப்பு தொடர்பின்றி முடிந்துவிடவேண்டும்... இப்படி ஒரு டிஸைனை உருவகம் செய்துகொண்டுவிட்டபின் உங்களூக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர் சப்கான்ஷியஸில் கனவெளியில் மிதந்துகொண்டிருப்பார் நீங்கள் உலவும் உங்கள் கனவுப் பிரதேசத்துக்கு அழைப்பை எதிர்பார்த்து....!! இப்படி நிஜத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் டீம் கனவில் நீங்கள் கட்டிவைத்திருக்கும் தேசத்தில் உயிரோடு வந்து உங்களுடன் கைகோர்க்கும்... இதில் யாருடைய மூளையில் இன்ஃபர்மேஷனை லவட்டவேண்டுமோ அவரையும் தந்திரமாகத் தூங்கவைத்துவிட்டு இந்த சிஸ்டத்தில் இணைத்துவிட்டால் அவரும் உங்கள் கனவுப் பிரதேசத்தில் உங்களோடு இருப்பார் சப்கான்ஷியஸில் உங்களிடம் திருட்டுக்கொடுக்க!!!

நிஜ வாழ்வில் ஒரு நொடிப்பொழுது கனவுலகில் மூன்று மடங்குகளுக்கும் மேலான பொழுதாக இருக்கும்.. பொதுவாகவே நம் கனவில் ஒரு நொடி நிகழ்வை ஒரு மணிநேரத்துக்கு உணர்வோமல்லவா அதே லாஜிக்தான்!! ஆக... இன்ஃபர்மேஷனை ஒளித்துவைத்திருப்பவரைக் கனவுலகத்தில் தூக்கத்துக்கும் கனவுக்கும் நடுவே(!) சிறைப்பிடித்துக் குறிப்பிட்ட ரகசியத்தை சொல்லிவிட்டால் நிஜஉலகு செல்ல நிச்சியமாக உதவுவதாக ரொம்ப ரொம்ப நல்லவன் போல ஸ்டைலாக லியானார்டோ மிரட்டுவது சேட்டையின் உச்சமாக இருக்கும்!!

கனவில் நீங்கள் வாழும்போது அங்கிருக்கும் மனிதர்களால் நீங்கள் தாக்கப்பட்டால் அந்த வலியை நிஜத்திலும் உணர்வீர்கள் (இதுவும் நம் கனவில் உணர்வதுதானே!!)... ஒருவேளை கனவில் உங்கள் டீமில் யாரேனும் கொல்லப்பட்டு விட்டால்.. அவர்கள் நிஜத்தில் கண்விழிக்கும்ப்போது அவர்களுக்கு எதுவுமே நினைவிருக்காது என்பதுதான் ரிஸ்க்!! :)

இந்த ஒரு செட்டப்பில், ஒரு மிகப்பெரிய மோனோபாலியாக உருவெடுக்கப்போகும் ஒரு பிஸினஸ் சாம்ராஜ்யத்தின் தலைவரின் மகனின் மனதுக்குள் நுழைந்து ரகசியத்தைத் திருட, அவர் போகும் ஃபிளைட்டில் பிஸினஸ் க்ளாஸில் இந்தத் திருட்டுட் டீமும் புகுந்து செடேஷன் மூலம் ஒரு பிரம்மாண்டக் கனவுலகில் அவரை இணைப்பார்கள்.... அந்தக் கனவுலகைப் புத்திசாலித்தனமாக உருவாக்கியிருப்பது கதாநாயகி எல்லின் பேஜ்.... கனவுலகில் ஒரு காருக்குள் மீண்டும் தூங்கிக் கனவின் அடுத்த அடுக்குக்கு நகரும் டீம்... மீண்டும் அங்கும் தூங்கி அடுத்தக் கனவில் ஒரு பனிமலையில் சங்கமிக்க க்ளைமாக்ஸ் அதகளம் திரையில் அத்துமீறி அரங்கேறும்...!! தூக்கத்தில் கனவு.. கனவில் தூக்கம்.. இப்படி நான்கு அடுக்குகள்!!!!... தூங்கும் உடல்களும் விழித்திருக்கும் கனவுருகளும் சேர்ந்து பங்குகொண்டிருக்கும் அசரடிக்கும் க்ளைமாக்ஸில்!!!

திரையில் த‌வ‌ற‌விட்ட‌வ‌ர்க‌ள் அடுத்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் க‌ண்டிப்பாக‌ப் பாருங்க‌ள் I do recommend :) .........(ரொம்ப‌நாள் க‌ழித்து ஒரு ப‌ட‌த்தை ரெக‌மெண்ட் செய்யும‌ள‌வு துணிந்திருக்கிறேன் பார்த்த‌வ‌ர்க‌ள் யாரும் இதுவ‌ரை திட்ட‌வில்லை!!)

சில‌ திய‌ரிக‌ளின் அடிப்ப‌டையில் அமைந்த‌ திரைக்க‌தைக‌ளை குழ‌ப்ப‌த்தின் உச்ச‌ம்தொட்டு ஃபாலோசெய்த‌ வ‌லிக‌ள் நினைவைவிட்டு அக‌லாதிருக்க, இங்கு க‌ற்ப‌னையில் ஒரு திய‌ரியையே உருவாக்கிப் புரிய‌வைத்து அந்த‌ப் புரித‌லைத் தொட்டே க‌தைக்குள் க‌தையாக‌ விரியும் க‌ஷ்ட‌மான‌ திரைக்க‌தையை இத்த‌னைத் தெளிவாக கையாண்டிருப்ப‌து ஆச்சர்ய‌த்தின் உச்ச‌ம்.....

மேக்கிங்?? சொல்ல‌வா வேண்டும்... படத்தை இயக்கியிருப்பது "டார்க் நைட்" இய‌க்குன‌ர் கிறிஸ்டோப‌ர் நோல‌ன், சும்மா மிர‌ட்டியிருக்கிறார் ம‌னித‌ர்... ஒரு காட்சியில் இருபுற‌மும் பிர‌ம்மாண்ட‌மான‌ க‌ண்ணாடிக‌ளுக்கு ந‌டுவே லியோனார்டோவும் எல்லினும் நிற்பார்க‌ள் க‌ண்ணாடியில் அவர்களின் ஆயிரம் பிம்ப‌ங்க‌ள் தோன்றி நிற்க‌.... அந்த‌க் காட்சியில் கேம‌ராவை எங்கே வைத்திருந்தாரோ ஆண்ட‌வ‌னுக்குத்தான் வெளிச்ச‌ம்...
ம‌ன‌தின் அறைக‌ளுக்குள் ரகசிய கேம‌ரா பொருத்திப் புதுசா ரொம்ப‌ப் புதுசா ஒரு க‌தை சொல்லியிருக்கிறார்க‌ள்....

அறிவும் ம‌ன‌மும் ஆளுக்குப்பாதியாக‌ ஆக்கிர‌மித்திருக்கும் மூளைவெளியில் ஒரு ஜாலித் திருட்டு....
இன்செப்ஷ‌ன் ஓர் அனுப‌வ‌ம்....!!


அன்புட‌ன்
பிர‌பு எம்