Thursday, February 07, 2013

டேவிட் [U/A] (2013)






ஒரு பெயர்.... இரண்டு வாழ்க்கை.......

அதாவது இரண்டு டேவிட்!!

இதே படம் ஹிந்தியில்..... ஒரு பெயர்.... மூன்று வாழ்க்கை......

அதாவது மூன்று டேவிட்!!!

நான் ஸ்கூல்ல படிக்கும்போது எங்க க்ளாஸ்ல மொத்தம் நாலு பிரபு இருந்தோம்.....

அதாவது..... ஒரு பெயர்....... நான்கு வாழ்க்கை.....!!!! (அதுல ஒருத்தன் பேரு டேவிட் பிரபு!! ஹிஹிஹிஹி)

என்னதாண்டா சொல்ல வர்றன்னு எரிச்சலா கேக்குறீங்களா.......! அதான் அதான் அதேதான்.....! அதையேதான் எனக்கும் கேட்கணும் பிஜாய் நம்பியார்கிட்ட!!!! :-))))

"பாஸ்.... என்னதான் சொல்ல வர்றீங்க????????????????!!!!!!!!!!!!!!!"

ஜீவா பேரும் டேவிட்........  விக்ரம் பேரும் டேவிட்! ஜீவாவோட எபிஸோட் 1999ல மும்பைல நடக்குது......
விக்ரமோட எபிஸோட் 2010ல் கோவாவில் நடக்குது.......

ரெண்டும் சேர்த்து 2013 என்னாத்துக்கு தமிழ்நாட்டுல‌ வந்து எழவு கொட்டுதுன்னுதான் புரியல....!!!

வெல்.....

1999-ல் மும்பையில் ஒரு கட்சிப் பொதுக்கூட்டத்தில் ரோஹிணி ஹட்டங்காடி பெருங்கூட்டத்துக்கு முன்பாக மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து ஜீவா முன்வரிசையை நோக்கி வருகிறார்....... கையில் கத்தியுடன்!!! நமக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது....... ஏன்...........?? ஏன்னா அதான் ஃபர்ஸ்ட் சீன்!

2010-ல் கோவாவில் ஒரு கல்யாணம் நடக்குது.... விக்ரம் மாப்பிள்ளைத் தோழனா நிக்குறாரு...... மணக்கோலத்துல இருக்குற பொண்ணுகிட்ட ஏதோ வில்லங்கமா பேசப் பாக்குறாரு..... அதுவும் நமக்கு எதுவுமே புரியாது..... ஏன்னா அதுவும் விக்ரம் எபிஸோட்ல முதல் சீன்!

அப்புறம் ஒரே பேருடைய இந்த ரெண்டு வாழ்க்கையிலும் ரெண்டு ஃப்ளாஷ்பேக் ரெண்டு மணி நேரம் ஓடும்........

அதுக்கப்புறமா................

1999-ல் மும்பையில் ஒரு கட்சிப் பொதுக்கூட்டத்..... ரேஹிணி ஹட்ட...... பெருங்கூட்டத்....... மைக்கி..... பேசிக்.......போது  ஜீவா முன்வரிசையை நோக்கி வருகிறார் கையில் கத்தியுடன்!!!

2010-ல் கோவாவில் ஒரு..... கல்யா........விக்ரம்..... மாப்பி.......த்தோழ...... நிக்குறா.... மணக்கோ.... இருக்குற பொண்ணுகிட்ட ஏதோ வில்லங்கமா பேசப் பாக்குறாரு......!!!"

அதாவது...... அதே சீன் ரெண்டு மணி நேரம் கழிச்சு வருது.......ங்கொய்ய்யால..........அப்பவும் நமக்கு ஒரு எழவும் புரியலைன்னா என்னதாங்க பண்ணுறது!!!! :-)))

சரி.... அப்புறம் என்ன நடக்குதுன்னு கேக்குறீங்களா?! ஜீவா ரோஹிணி ஹட்டங்காடியைக் கொல்லுறமுன்னாடியே அவருக்குத் தெரிந்த இன்னொருத்தன் அவங்கள சுட்டுத்தள்ளிடுவான்...... விக்ரம் லவ் பண்ண அந்தப்பொண்ணை நிச்சியம் பண்ணபடி அவர் நண்பன்தான் கல்யாணம் பண்ணிக்கிறான்!

குழப்பமா இருக்கா.... நீங்க குழம்பக்கூடாது ஏன்னா...... படம் சொல்லுற மெசேஜ்.... "வாழ்க்கைல வலியத் தாங்குறவன்தான் டேவிட்!"

அந்த‌வகையில் பார்த்தா படம் பாக்குற எல்லாருமே "டேவிட்"தான்!!!! :-))
என்கூட தியேட்டர்ல ஒரு 57 "டேவிட்"கள் படம் பாத்தாங்க......
ஸோ..... ஒரு பெயர்..... 57 வாழ்க்கை!!! :-))))

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோக்ஸ் அபார்ட்.....

வித்தியாசமான முயற்சின்னு சொல்லலாம்! ஹ்ம்ம்ம் சொல்லித்தான் ஆகணும்.....

ஜீவா எபிஸோட்....... சீஸனல் எஃபெக்டாக.....ஒரு கிறிஸ்தவக் குடும்பப் பின்னணியில் மும்பையில் நிகழ்கிறது.....
கல்லா கட்டுவதில் விருப்பமில்லாத நேர்மையான  ஃபாதர் நோயலாக நாசர் (ஆக்சுவலி பாஸ்டர் என்றுதான் அழைக்கவேண்டும்!) ஒரு சாதாரண பொலிடிகல் கேமுக்காக சம்பந்தமே இல்லாமல் ஃபாதர் நோயல் மிகக் கொடூரமானமுறையில் பப்ளிக்காக‌ அவமானப் படுத்தப்படுகிறார்... ஜீவாவால் எதுவுமே செய்யமுடியாமல் போகிறது...... நாசரின் மனநிலை இதனால் பாதிக்கப்படுவதால் ஜீவா ரொம்பவே டிஸ்டர்ப் ஆகிறார்..... நாசர் ஷேவ் செய்யும்போது முகத்தில் ஆர்ப்பாட்டக்கும்பல்தன் முகத்தில் கரிபூசி அவமானப் படுத்திய காட்சியை நினைத்து ரேசரால் முகத்தைக் கிழித்துக்கொள்ளும் காட்சி நிஜமாகவே மிக அழுத்தமானது! நாசர் நடிப்பு அபாரம்!...... ஜீவா நியாயம் கேட்கக் கிளம்புகிறார்.... அடிவாங்குகிறார்... அடிக்கவும் செய்கிறார்...... எல்லாம் எதார்த்தமாக நகர்வது பெரிய ஆறுதல்!
ஜீவா நியாயம்கேட்டுத் தட்டும் ஒவ்வொரு கதவும் ஏற்கெனவே திறக்காத கதவுகள் என்று சின்னவயதில் இருந்து சினிமா பார்ப்பவர்கள் அத்தனைபேருக்குமே தெரியும்! இருந்தாலும் காட்சிகளின் யதார்த்தம் பலமே!
நம்மைக் கொடுமைப்படுத்தாமல் மெல்லியதொரு அனுபவம் கொடுக்கும் காட்சித்தொகுப்பு ஜீவாவின் எபிஸோட்!

ஒருபக்கம் ஜீவாவின் கதை படு க்விக்காக டேக்-ஆஃப் எடுத்து சீரியஸாகக் கிளம்பிவிட...... மறுபுறம் கோவாவில் சீயான் விக்ரம் எந்த லட்சியமும் இல்லாத ஒரு லைட்டான கதையமைப்பில் குடி..குடி...குடி யென்று குடித்துத்தள்ளுகிறார்..... "குடிப்பழக்கம் உடல்நலத்திற்குக் கேடு" என்னும் வார்னிங் வாக்கியம் ஏதோ சேனல் லோகோ போல ஸ்க்ரீனின் ஓர் ஓரத்தில் நிரந்தரமாக இடம்பிடித்துவிடுகின்றது விக்ரம் எபிசோட் முழுக்க!!  திருமணம் முடிவான  மணநாளன்று விக்ரமின் மணப்பெண் தன் பாய்ஃப்ரெண்டுடன் ஓடிப்போய்விட அந்த விரக்தியின் வலியில் உழலும் கேரக்டர் விக்ரமுக்கு! அவரது ஒரே தோழி மசாஜ் பார்லர் வைத்திருக்கும் தபு.... "என் கல்யாணம் நின்னுபோனப்போ  ஊரே என்னப் பாத்து சிரிச்சப்ப நீ மட்டும்தான் எனக்காக அழுத..!!" என்று தபுவைப் பார்த்து போதையில் விக்ரம் எமோஷன் கொட்டும்போது.... "உன் கல்யாணப்பொண்ணு ஓடிப்போகும்போது என் நகைய எல்லாம் தூக்கிட்டுப் போயிட்டா அத நெனச்சுதான் நான் அழுதேன்னு உன்கிட்ட நிறைய தடவ சொல்லிட்டேன் டேவிட்!!!"னு அசால்டாகச் சொல்லுவார் தபு......... :-)) இப்படித்தான் முழுக்கதையும் நகரும்! நடுவே நண்பனுக்கு நிச்சியக்கப்பட்ட ஓர் அழகான அர்ச்சனாவ ("மொழி" ஜோதிகா பேரு!! புரிஞ்சிக்கோங்க!) விக்ரம் லவ் பண்ண ஆரம்பிப்பார்..... அவளும் தன்னை விரும்புறா என்று சைகை மொழிக் குழப்பத்திலும், 24/7 போதையிலும் விக்ரம் தானும் நம்பி தபுவையும் நம்ப வைப்பது சுவாரஸ்யம்...... கடைசியில் விக்ரமின் நண்பனுக்குத்தான் கிடைப்பாள் அந்த மௌன தேவதை!!!

இரண்டு கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத கதைகள்... கடைசியில் இரண்டு டேவிட்டுகள் சந்தித்துக் கொள்வதைத் தவிர வேறு எந்த சினிமாத்தனமும் இல்லாமல் நகர்வது நல்ல விஷயம்!

கோவா ...... ஜாலி ஆவியாக வலம்வரும் விக்ரம் அப்பா கேரக்டர்..... விக்ரம் எடுக்கும் "கிறுக்கு சாண்டா!!" காமிக் கேரக்டர்...... மற்றும் புதுமையான கோவா வாழ்க்கை போன்றவை விக்ரம் ஸ்பேஸை ஜாலியாகக் கொண்டுபோனாலும் ஒருபக்கம் ஜீவா சீரியஸ்ஸாகப் பாதிகிணறு தாண்டிவிட்ட போதும் தேமேயெனத் தண்ணியடித்துக் கொண்டிருக்கும் சீயான் படத்தில் சோலோ டிராக் காமெடி செய்கிறாரோ என்றுதான் தோன்றும்!

ஜீவா பகுதியில் லாரா தத்தா இயல்பாக வந்தாலும் அரைகுறையாகப் போய்விடுவார்..... அதுவும் யதார்த்தம்தான்!

யதார்த்தமும், பரிசோதனையின் புதுமையும் தவிர "டேவிட்" ஒரு விபரீத  முயற்சிதான்.... அதிலும் குறிப்பாகத் தமிழில்!

ஏற்கெனவே தொடர் தோல்விகள் தந்துகொண்டிருக்கும் ஜீவாவை இன்னும் நாலுபடி கீழே தள்ளிவிடும் கான்செப்ட் இது! ஆனால் உடல்மொழியும், டயலாக் டெலிவரியிலும் ஜீவா பின்னியெடுக்கிறார்! நடிப்பு சூப்பர்பா வருது ஜீவாவுக்கு......... விக்ரம், தபு, மற்றும் எல்லாருமே நடிப்பில் படு கேஷுவலாகக் கலக்கியிருப்பார்கள்! நடிகர்கள் எந்தக் குறையும் வைக்கல..........

படத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் இசை! அனிருத்தோட சேர்த்து மொத்தம் ஆறேழு பேர் போடுறாங்க டைட்டிலில்.... பாட்டும் சரி..... இசையும் சரி இனிமை புதுமை!

ரத்னவேலு மற்றும் வினோத்தின் ஒளிப்பதிவு இரண்டு கதைகளையுமே யதார்த்தமான நிறங்களில் கண்களுக்குக் குளுமையாகப் பரிமாறியிருக்கிறார்கள்......

ஆனால்...........எல்லாம் இருந்தும் எதுவுமேயில்லை என்கிற மாதிரிதான் இருக்கும் படம் முடிந்தபின்பு!

புதுமையென்று சொன்னால் "12-பி" கூடத்தான் புதுமையான முயற்சி... ஆனால் விளைவு என்ன ஆனது? அதேதான் இங்கும்!!

வலியைத் தாங்கும் "டேவிட்"..... ஒரு பெயர்...... இரண்டு வாழ்க்கை

அழுத்தமே இல்லாத "டேவிட்" ஒரு படம்..... இரண்டு கதைகள்........!! :

மொத்தத்தில் .......

ஆடியன்ஸுக்கு "டேவிட்" -  ஒரு டிக்கெட்....... இரண்டு நூறு ருபாய் நோட்டு....... ஊஊஊஊஊஊ... கோவிந்தா கோவிந்தா!!!! :-))))

சீக்கிரம் விஜய் டிவில போட்டுடுவாங்க..............பாருங்க!!

அன்புடன்,
பிரபு எம்


Tuesday, February 05, 2013

விஸ்வரூபம் [U/A ] (2013)





"தக தக தக.....

தின தின தின....

னாகனாக தகிடதகிட......" வென கச்சிதமான "கதக்" வெட்டுக்களுடன் அபிநயக் கமல் திரையில் தோன்ற ஆர்ப்பரிப்பது இந்தமுறை கமல் ரசிகர்கள் மட்டுமல்ல...... அவரைப் படுத்தியெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் புண்ணியத்தில ஆதரவுமொழியில் அரங்கமே கைதட்டி வரவேற்கிறது கமலை....... மரியாதையுடன்!! :-))

தகிட தகிடவெனக் குறும்பாகக் குழையும் விஸ்வநாத‌  எபிஸோட் சட்டென முடியும்வேகத்தில் படம் தடதடக்க ஆரம்பித்து நிற்காமல் தொடரும் ஜாலத்தில் தாமதமாகத்தான் நினைவுக்கு வருகிறது "தடை பண்ண இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்று?!"

தடைகளை மட்டுமல்ல...... தமிழ் சினிமா இயங்கிவரும் தளங்களையும் உடைத்து விஸ்ஸ்ஸ்ஸ் எனக் கிளம்பியிருக்கும் "விஸ்வரூபத்"தின் முதல் அத்தியாயம் இது!!!!

பொதுவாகவே பயங்கரவாதத்தைத் (Terrorism) தீவிரவாதம் (Extremism) என்று அழைக்கும் தவறான வார்த்தைப்பிரயோகம் தமிழில் சகஜம்!

பூமியில் பயங்கரங்களை விதைப்பவர்களின் பெயர் பயங்கரவாதிகளே! அந்த பயங்கரவாதம் ஓரளவு நியாயப்படுவதுபோல் தெரியும் (இன்றைய மீடியா/சோஷியல் நெட்வொர்க்கிங் நியதிகளின்படி!) "தீவிரவாதிகள்"அல்லது இன்னும் சிறப்பாகப் "போராளிகள்"என்று அழைக்கப்படும்போது!!! இந்த பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதங்களை உள்ளும் புறமுமாக அணுகுவது விஸ்வரூபத்தின் புதுமை என்றால் அதற்கு இத்தனை வேகமான திரைக்கதையும் விவேகமான காட்சியமைப்பும் சாத்தியமா(க்)கியிருப்பது நிச்சியமாக அத்தனை சாதாரணமான காரியமில்லை!

நியூயார்க் நகரில் ஒரு நியூக்ளியர் குண்டுவெடிப்பை நிகழ்த்த தாலிபான்களின் தலைவர் ஓமர் (ராகுல் போஸ்) ஒரு மெகா மகா திட்டம் தீட்டுகிறார்...... "திட்டம்" என்றால் ஒரு டெரர் ப்ளான் என்று கடைசி சீனில் துப்பறியும் அதிகாரி சிரித்துக்கொண்டே விளக்கிச் சொல்வதுபோல் இல்லாமல்..... நுணுக்கமாக, மிக மிக நுட்பமாக...... பயங்கரவாத சம்பவங்களில் இதுவரை வெளிவந்திருக்கும் ஒவ்வொரு ஃபுட்டேஜும் எப்படித் தயாராகியிருக்கும் என்கிற ரீதியிலெல்லாம் செல்லும் அசுரத்தனமான கற்பனை...... அமெரிக்க மற்றும் உலக நாடுகளின் கோணத்தில் திரைக்கதையின் பார்வை வைக்கப்படும்போது தாலிபான்களின் அனைத்து செயல்பாடுகளும் உணர்வுகளும் மொத்தமாகவே "பயங்கரவாதம்" என்று நமது மனங்களால்  லேபிள் குத்தப்படும்! அதே திரைக்கதை அடுத்த தளத்தில் அந்த ஆஃப்கன் மண்ணிலேயே கால்பதித்து ரத்தமும் யுத்தமுமாய் கோணத்தை மாற்றும்போது...... "பயங்கரவாதம்" என்னும் வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் ஜிஹாதியில் தொடங்கி..... பாசம், தியாகம், புனிதம் என்றெல்லாம் நவரசமும் வெளிவந்து பதைபதைக்க வைத்திருப்பதுதான்  திரைக்கதையின் விஸ்வரூபம்!
இப்படித் தீவிரவாதத்தை "உள்ளும் புறமுமாக" அணுகியிருப்பது எப்படி சாத்தியமானது என்று கமல் ஒருநாள் விளக்கிச்சொல்ல வேண்டும்...... என்னைப் பொறுத்தவரை தீவிர/பயங்கரவாதங்களை உலகம் அணுகவேண்டிய மாற்றுக் கோணத்தில் உலக நாயகன் அணுகியிருக்கிறார்! (செகண்ட் பார்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வம் பெருகுகிறது!)

ஆஃப்கானிஸ்தானின் யுத்தக்கள மண்ணைப் பரிசோதித்து அம்மனிதர்களின் ரத்த ரசாயணங்களை அளந்துபார்த்தபின் தன் கதைக்கான விதைகளைத் தூவியிருப்பது அறுவடையில் யதார்த்தமாய் அழகாக மட்டுமின்றி அழுத்தமாகவும் வந்திருக்கிறது!

ஒரு பட்டனில் உடல்சிதறி உயிர்விடப்போகும் சிறுவனின் முந்தைய இரவின் இருநிமிட கடைசி ஆசையாக ஊஞ்சலில் கண்மூடிக் காற்று வெளியில் அவன் மிதக்கும் ஏகாந்தம் அடுத்தகாட்சியில் அவன் உயிர்விடும்போது அந்த "மனித வெடிகுண்டின்" உயிரிழப்புக்கூட உஷ்ண‌ப்படுத்துகிறது! ரேடியோ ஆக்டிவ் சீசியத்தை வெறும் விரல்களால் சுரண்டி கேன்ஸரை அன்புடன் வரவழைத்து ஸ்லோ டெத்துக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்களை பயங்கரவாதிகள் என்பதா இல்லை தீவிரவாதிகள் என்பதா இல்லை என்னவென்று அழைப்பது?!! கால்படாத இடங்களில் நம்கண்பட வைப்பதைத்தான் கடல்தாண்டிய தமிழ்சினிமா செய்திருக்கும் சாதனை....... விஸ்வரூபம் கண்படா இடங்களை மனதில் விழவைத்திருப்பது அபூர்வம்!

வெல்....இந்தப் படத்தை ரசிக்கக் கொஞ்சம் பொதுவிஷய தரிசனமும் உலகத்திரை பரிச்சியமும் இருப்பது நலம்..... ஜஸ்ட் பார்த்துவிட்டு உவ்வே.... மொக்கபடம்னு யார் சொன்னாலும் " நோ கமெண்ட்ஸ்"தான்....... எப்படி தடை செய்யப் படத்தில் என்ன இருக்கின்றது என யோசித்தபோது புரியவில்லையோ அதேபோலத்தான் படத்தை மொக்கை, சப்பையென்று தூற்றுவதற்கும் எதுவுமில்லை........ விஸ்வரூபம் தருவது ஒரு திரைஅனுபவத்தை......! அனுபவத்தில் நல்ல அனுபவம்..... மொக்கை அனுபவம் என்று பகுத்துப்பார்ப்பதற்கெல்லாம் ஏழறிவு வேண்டும்....அதனால‌... வெரி சாரி..... எனக்கு ஆறுதான் இருக்கு!  ;-)

கமல் நடிப்பு.......... "பாட்ஷா"வில் மாணிக்கம் திடீரென்று பாட்ஷாவாகும் சீனைப்போன்று இதிலும் ஒரு பவர்ஃபுல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன் உண்டு...... அதில் கமல் மாற்றிக்காட்டும் இரண்டு பாத்திரங்களுக்கும் இடையேயான டிஃப்ளெக்ஷன் கோணத்தை அளப்பதற்கு நடிப்புலகில் ஏதேனும் மெட்ரிக் அளவு இருந்தால் எல்லா மொழிகளிலும் திரைநடிப்புப் பள்ளிகளில் பாடமாக்கிவைக்கலாம்! இத்தனை ஆழமான கதையமைப்பிலும், காட்சியமைப்பிலும் கமல் தன் நடிப்பையும் இயக்க ஸ்பேஸ் எடுத்துக்கொண்டதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்! காரணம் "விருமாண்டி"யில் அந்த விஷயத்தில் எனது ஏமாற்றத்தைப் பதிவுசெய்திருந்தேன்! கமல் அபாரம்!

பூஜாகுமார்... பாத்திரம்..... என்னைப்பொறுத்தவரை பளிச் சென்று திரைக்கதையில் தெரியும் ஒரு லெட்-டவுன்...
கமல் படத்து 'பொம்மனாட்டிகள்' எல்லாரும் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரிகின்ற அளவுக்கு அதே பேட்டர்ன்..! இதில் அவர் ந்யூக்ளியர் ஆன்காலஜியில் பி.ஹெச்.டி முடித்தவர்வேறு... சூழ்நிலை கைமீறிப்போய்..... டெரரிஸம்..... கொலை....அம்மாஞ்சிக் கணவனின் "விஸ்வரூபம்"என சர்வகொடூரத்தையும் சாதாரணமாகக் கண்முன்னே பார்த்தபின்னும்கூட அவ்ளோ அறிவாளிப்பொண்ணு "தசாவதாரம்" அசின் மாதிரி மொன்னத்தனமாக கேள்விகேட்பதும் கதறுவதுமாக இருப்பது இத்தனை அசாத்தியமான முயற்சியில் அசட்டுத்தனமாகத் தெரிந்தது....
ஆனால் க்ளைமேக்ஸின் மைக்ரோவேவ் கான்செப்ட்.....வாவ்!!

ஆண்ட்ரியா, சேகர் கபூர்..... திரைக்கதை போகும்போக்கில் பொருந்திக்கொண்டு கோ-ஆப்பரேட் செய்திருக்கிறார்கள்.......

ராகுல் போஸின் "விஸ்வரூபத்தை"ப் பார்க்கவாய்ப்பில்லை...... ஆனால் ஒரு சூடான சந்தர்ப்பத்தில் விரல்களால் துப்பாக்கி சுடும் காட்சியில் "இவன் யாரென்று தெரிகின்றதா?!" என்று பாட்டு கேட்கும் அவர் யாரென்று தெரிந்தவர்களுக்கு!

"அல்லா ஏன் இப்படிச் செய்யறாரு ?" என்று ஃபுல்டைம் டெரரிஸ்ட் (ராகுல்தான்!) ஆற்றாமையில் அழுவதாக ஒரு காட்சி வரும்..... ரொம்ப ரொம்ப சென்ஸிடிவ்வான காட்சியது...... திரையில் பாருங்கள்!

நாசர்..... அடப்போங்க சார்..... நீங்க எல்லா பாலும் சிக்ஸர் அடிப்பீங்கன்னு நான் வேற சொல்லணுமா!!

சானு வர்கீஸின் ஒளிப்பதிவில்..... தாலிபான் தீவிரவாதிகளே தமிழ்ல பேசினாலும்கூட தமிழ்ப்படம்னு நம்பமுடியல அத்தனை சாகசாமான சர்வதேசத்தரம்! இந்தப் படத்துக்கு இவ்ளோ வேணும்தான்.... கொஞ்சம்கூட காம்ப்ரமைஸ் செய்துகொள்ள முடியாத பொறுப்பை ஏற்றுத் தானும் இம்மியளவு காம்பரமைஸ் செய்துகொள்ளாமல் மிரட்டியிருக்கிறார் மனிதர்......

படம் போன வேகத்தில் மகேஷ் நாராயணனின் எடிட்டிங்கை நிதானித்து கவனிக்கமுடியவில்லை.... இதுக்குமேல என்ன சொல்லணும்!

ஷங்கர்-லாய்-எகாஸனின் இசை மிரட்டுகிறது பின்னணியில்!

தொழில்நுட்பம் அபாரம்.... எனக்கு ஆரோ 3டியில் காணும் வாய்ப்பு கிட்டவில்லை..... எனினும் டால்பி-க்யூபிலேயே மிரட்டிய சவுண்ட் எஞ்சினியரிங் ஆரோ 3டியில் அதிரடித்திருக்கும் என்று நம்புகிறேன்!
ரொம்பவே ஹை-ஃபை தொழில்நுட்பத்தில் கலக்கியிருக்கிறார்கள்.......

"வில்லன்" என்று யாரும் இல்லாததும் "வில்லத்தனம்" என்பது நாயகன் உட்பட எல்லாரிடமும் இருப்பதும் நான் ரசித்த மிகமுக்கியமான பொதுப்பொருள் "விஸ்வரூபத்தில்"!

இது வேறுமாதிரியான முயற்சி....... பொத்தாம்பொதுவான பொதுப்பொருளாகிவிட்ட சர்வதேச தீவிரவாதத்தின் கருப்பொருள் சிதையாது வந்திருக்கும் மிகவும் ப்ரோடோடைப் இந்தியப் பதிவிது உலகசினிமாவில்!

இன்னும் ஹோம்-க்ரவுண்டிலேயே படம் ரிலீஸாகத காரணத்தால் கதையையும், சிலாகித்த பல காட்சிகளையும் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறேன்..... படம் பார்த்தவர்களுக்கு ஸாரி!

விஸ்வரூபம் - விஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......வ்ர்ர்ர்ர்ரரூரூம்ம்ம்ம்!!!!

நல்ல வித்தியாசமான விஸ்தீரணமான திரை அனுபவத்திற்காக விஸ்வரூபம் பாருங்க!

அன்புடன்,
பிரபு எம்