நடிப்பு: டாக்டர். மயிலிசை , கன்னியாகுமரி ஆனந்தன், நீர்மாலை ஆத்தாராமன், "ஹட்ச்" தாஜா, சௌக்கிதார் சிங்காரம் மற்றும் சிலர்
ஓளிப்பதிவு: ஆன்ட்ராய்டு ஃபோன் கேமராவில் பலபேர் எடுத்திருக்கிறார்கள்
இசை: படத்துக்குப் பின்னணி இசை என்று தனியாக இல்லை
தயாரிப்பு: தமிழக பாஜக பேனரில் தன் சொந்த செலவில் மயிலிசையேதான் தயாரித்திருக்கிறார்!
இயக்கம்: யார் பெயரும் போடவில்லை (எ ஃபிலிம் பை "எல்லாம் அவன் செயல்" என்று என்டு கார்டு போடுகிறார்கள்)
தென்சென்னைப் பகுதியில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்போவதாக டாக்டர். மயிலிசை அறிவித்திருந்த "கடல் தாமரை" திரைப்படம் தேர்தல் ரிலீஸாக வெளியிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்..... தென்சென்னையில் ஆளுங்கட்சியினர் படம் எடுப்பதால் ஷுட்டிங் பர்மிஷன் கொடுக்கவில்லை எனவே அவர்கள் ஏற்கெனவே "ஷுட்டிங்" செய்து பலபேரைக் கொன்ற ஏரியாவான தூத்துக்குடியில் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார் டாக்டர். மயிலிசை!
அன்பான அப்பா கன்னியாகுமரி ஆனந்தனின் மகளாக வரும் மயிலிசைக்கு அந்த ஏரியாவின் ஆத்தா அப்பத்தா அத்தனை பேராலும் சிக்கெடுக்க முடியாததொரு சிகையாகத் தலைமுடி வளர்ந்திருக்கிறது... இருந்தாலும் அதுவும் ஓர் அழகாகவே இருக்க, தினமும் மல்லிகைப் பூ வாங்கித் தருகிறார் அவரது அன்பான அப்பா.... காலையில் வைக்கும் மல்லிகைப் பூ சாயங்காலம் வாடிய பின்பும் தலையிலிருந்து அதை எடுப்பதற்கு அரைமணி நேரம் ஆவதால் தன் மகளைப் பற்றிக் கவலைப் படுகிறார் கன்னியாகுமரி ஆனந்தன்! திடீரென ஒருநாள் மயிலிசை ஒரு தாமரைப்பூவுடன் வந்துத் தன் தந்தையிடம் இனிமேல் தான் தாமரைப் பூவைத்தான் சூடிக்கொள்ளப் போவதாகத் தெரிவிக்கிறார்.. இதனால் மனமுடைந்து போகும் கன்னியாகுமரி ஆனந்தன் விரக்தியில் வெளியூர் சென்று விடுகிறார்.... தாமரைப் பூ வைத்ததிலிருந்து அந்த ஊரில் யாருக்குமே மயிலிசையைப் பிடிக்காமல் போனாலும் தாமரைப் பூவிற்கு மயிலிசையை மிகவும் பிடித்துப்போய்விடுகிறது காரணம் கதைப்படி இந்தத் தாமரை மயிலில் (சென்சாருக்காக ஸ்பெல்லிங்கை மாற்றியிருக்கிறார்கள்!) தான் மலர்கிறது!
இதற்கிடையே டெல்லியில் இருக்கும் தாமரை மன்னர் "சவுக்கிதார்" சிங்காரத்தை, சிங்காரத்தின் விருப்பம் இல்லாமலேயே தன்னுடைய வளர்ப்புத்தந்தையாக தத்தெடுத்துக்கொள்கிறார் மயிலிசை... சவுக்கிதார் சிங்காரமும் மயிலிசையை வேண்டா வெறுப்பாக "ஜித்து" என்று செல்லப் பெயர் வைத்து அழைக்கிறார்...இப்போது சவுக்கிதார் சிங்காரத்துக்காகத் தமிழ் நாட்டில் குளம்வெட்டித் தாமரை வளர்க்க முடிவுசெய்கிறார் ஜித்து (எ) மயிலிசை. தாமரை வளரும் வாய்ப்புள்ள சிலபல சுமாரான இடங்களையெல்லாம் படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களான நீர்மாலை ஆத்தாராமனும், "ஹட்ச்" தாஜாவும் ஆக்கிரமித்துக்கொள்ள தூத்துக்குடிக்கு வருகிறார் மயிலிசை! அங்கே ஒரு கலவரம் நடக்கிறது அதில் ஆயிரம் பேரைக் காப்பாற்றுவதற்காகச் சில சமூக விரோதிகளைக் கொல்கிறார்கள்.. ஆனால் ஆயிரம் பேரைக் காக்க நினைத்த மயிலிசையின் நல்ல உள்ளத்தைப் புந்துகொள்ளாமல் மக்கள் அவரை ஊருக்குள் தாமரைக் குளம் வெட்ட அனுமதிக்காமல் துரத்தியடிக்கிறார்கள்... பற்பல தடைகளைத் தாண்டி... இடையே சிலபல ட்விஸ்ட்டுகளைத் தாண்டி இறுதியில் தூத்துக்குடியின் கடல் பகுதியில் நடுக்கடலில் அலைகளுக்கு இடையே (க்ராஃபிக்ஸில்)பல தாமரைப்பூக்களை மலரவைத்துப் படத்தை முடித்திருக்கிறார்கள்!!
மயிலிசையின் குணச்சித்திர நடிப்பு நம்மைப் பாராட்டவும் வைக்கிறது பரிதாபப்படவும் வைக்கிறது! தாமரைக் குளம் வெட்ட இடமிருக்கும் இடங்களை நீர்மாலைக்கும், தாஜாவுக்கும் விட்டுக்கொடுக்கும் காட்சிகளில் உள்ளே சோகத்தையும் வெளியே சிரிப்பையும் ஒருசேரக் காட்டி அசரடிக்கிறார்! ஆரம்பத்தில் காமெடி செய்தாலும் தாஜா திடீரென அதிரடிக் காட்சிகளில் களமிறங்கி ஆச்சர்யப்படுத்துகிறார்! ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளிலெல்லாம் அவருடைய அட்மினை வைத்து 'டூப்' போட்டுப் படமாக்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது! இண்டர்வெல்லுக்கு அப்புறம் திடீரென ரீ-என்ட்ரி கொடுக்கும் கன்னியாகுமரி ஆனந்தன் மயிலிசையிடம் உருக்கமாக, " நீ என் புள்ள.. உன்னை ஒரு பலி ஆடாத்தான் சவுக்கிதார் சிங்காரம் வளக்குறாரு"ன்னு சொல்லுற இடத்தில் திரைக்கதை வேகம் எடுக்கப் போகிறது என்று நாம் எதிர்பார்க்கிறோம் ஆனால் அந்த இடத்தில் சம்பந்தமே இல்லாமல் கேமராவைப் பார்த்து மயிலிசை கண்களை எல்லாம் விரித்து உடம்புக்குள் ஆத்தா புகுந்துவிட்டது போல ரியாக்ஷன் கொடுத்து கேமராவைப் பார்த்து பஞ்ச் டயலாக் பேசுகிறார்.. " நான் பலி ஆடு இல்லடா..... பனங்காட்டு நரி...." ஊஊஊஊஊ என்று பயங்கரமாக ஊளை இட்டுக்கொண்டே தூத்துக்குடி முழுக்க சுற்றிவருகிறார்.... இடையில் இஸ்லாமியர்களைக் கவரும் விதமாகச் சில காட்சிகளில் அவர் பர்தா அணிந்து மாறுவேடத்தில் வருவதும் பின்பு அதைத் துறந்துவிட்டுத் தான் யாரென்று காட்டும் காட்சியில் அவரது ஃபேஸைப் பார்த்து மெயின் வில்லனுக்கு ஹார்ட் அட்டாக் வருவதும் பிரபுதேவா நடித்த பழைய "விஐபி" படத்தில் மணிவண்ணன் மனைவியாக வரும் "பீவி" கேரக்டரை நினைவுபடுத்துகிறது.... படத்தில் கிராஃபிக்ஸும் சரியில்லை... ஒரு காட்சியில் கடும் மழையில் மயிலிசை ஒரு பெண்ணிற்குப் பிரசவம் பார்க்கும் காட்சியில் அது நிறைமாத வயிறே இல்லை வெறும் தொப்பை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது! மேலும் சுட்டுக் கொல்லப்படும் சமூக விரோதிகள் கேரக்டருக்கு ஸ்கூல் படிக்கும் அப்பாவிப் பெண்குழந்தைகளை எல்லாம் பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் அலட்சியத்தைக் காட்டுகிறது!
இறுதிக் காட்சியில் க்ராஃபிக்ஸில் நடுக்கடலில் தாமரைப் பூக்கள் மலர்வதாகக் காட்ட மிகவும் மெனக்கிட்டிருந்தாலும் சுற்றி வேடிக்கை பார்க்கும் பல லட்சம் ஜுனியர் ஆர்டிஸ்ட்டுகள் எல்லாரும் அவர்கள்பாட்டுக்குக் கதை பேசிச் சிரித்துக் கொண்டிருப்பது நம்மையும் படத்தோடு ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது!
ஓளிப்பதிவு, இசை, எடிட்டிங் என எல்லாவற்றையுமே கைக்காசைப் போட்டு மயிலிசையே கிடைத்த ஆட்களை வைத்து செய்திருக்கிறார்.... ஏனோதானோவென இருக்கிறது! டெல்லியிலிருந்து ஃபோட்டோஷாப்பில் டிசைன் செய்யப்பட்ட போஸ்டர்கள் மட்டும் படு சூப்பராக இருக்கிறது!
மொத்தத்தில் தேர்தல் ரிலீஸ் படங்களில் மயிலிசையின் "கடல் தாமரை"யைத் தியேட்டருக்குச் சென்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுக் குடும்பமாகச் சென்று பார்த்து சிரித்து மகிழுங்கள்!

