ஒருவேளை இன்றைக்கு மேட்ச் பார்க்க மோக்கா இல்லாத இந்திய ரசிகர்கள் ரிசல்ட் கேட்டுப் பெரும்பாலும் இப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!! ("மோக்கா" என்றால் ஹிந்தியில் வாய்ப்பு - Chance or Opportunity என்று பொருள்!)
![]() |
| மோக்கா மோக்கான்னு பாடினியே....கடைசில இப்படி மொக்கை வாங்கிட்டுப் போயிட்டியே! |
பாகிஸ்தானால் இந்த வருடமும் வெடிக்க முடியாத பட்டாசு பொட்டலத்தை சௌத் ஆஃப்ரிக்க ஜெர்சியில் நம் இந்திய ரசிகருக்குக் காலிங்பெல் அடித்து அன்பளிக்கும், ஒரு சீரியல் போல தொடரும், அந்த "மோக்கா மோக்கா" விளம்பரம் உணர்த்துவதும் இதே விஷயத்தைத்தான், அதாவது தென்னாப்பிரிக்கா அணி கெப்ளர் வெஸ்ஸல்ஸ் காலத்திலிருந்து ஹான்ஸி குரோனியே, க்ரீம் ஸ்மித், இப்போது ஏபி டி வில்லியர்ஸ் வரையிலும் இந்தியாவுக்கு வெற்றிபெற ஒரு சிம்ம சொப்பணமாகத்தான் திகழ்ந்து வந்திருக்கின்றது! பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியிருந்தாலும் தற்சமயம் அது ஒரு பலவீனமான அணி என்று பாகிஸ்தானியர்களே பழிபோடுமளவு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது! இந்த நிலையில் "சௌத் ஆஃப்ரிக்காவை அடிங்கடா பார்க்கலாம்!" என்கிற உதார் மனப்பான்மையோடுதான் உலகம் உற்றுநோக்கியது இந்திய அணியை இன்று! ஆனால் நம்ம கேப்டன் கூல் டாஸோடு சேர்த்து மேட்சையும் அள்ளிக்கொண்டு வந்ததை கிள்ளிப் பார்த்துக்கொண்டுதான் உண்மையென்று உணர்கிறேன்! பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என்று ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும் இன்று கம்பீரமாய்க் கட்டவிழ்த்திருப்பது இந்தியாவின் எழுச்சியின் அறைகூவலை!
இத்தனை வலுவான அணியை ஆஸ்திரேலிய மண்ணில் அதுவும் மெல்போர்னில் இப்படி ஒரு க்ளீன் டாமினென்ஸுடன் (Clean dominance) வீழ்த்தியது நம்மவர்களின் அசாத்தியமான நம்பிக்கையைத்தான் பறைசாற்றுகிறது! சூப்பர்ப்பா!!!
![]() |
| The Match! |
டாஸ் லயே நம்ம டீம் பாஸ்! :
உலகின் மிக பிரம்மண்டமான மொல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த பத்துப் போட்டிகளில் முதல் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 280+ என்ற தகவலைப் பார்த்தபோது சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது! இந்த ட்வெண்டி-20 யுகத்தில் ஆடுகளங்கள் எல்லாமே பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாகத்தான் வடிவமைக்கப்படுகின்றனவோ என்னவோ! ஏற்கெனவே சவாலான சூழலில் இந்தப் போட்டியில் டாஸ் ஒரு மிக முக்கியமான அம்சம்.... தோனி எப்போதும் சொல்வதுபோல் "We can't take control over the toss" என்பது நூறு சதவீதம் உண்மைதானென்றாலும் நேற்றைய சூழலில் நம்ம தல தோனிக்கு அடித்த டாஸிலேயே இன்றைக்கு பாஸ் பண்ணிடுவோம்னு தோணியது நிஜம்!
![]() |
| பார்ட்னர்"ஷிப்" பின் மீகாமன்! |
"மீகாமன்" ஷிகார் தவான்! :
தன்னிகரற்ற பவுலிங்..... உலகத்தர பேட்டிங் இரண்டும் வாய்த்ததோடு மட்டுமில்லாமல் அதி அபாயகரமான ஃபீல்டிங்கும் வாய்க்கப்பெற்ற அணி தென்னாப்பிரிக்கா! கவர் மற்றும் பாய்ண்ட் உள்ளிட்ட திசைகளில் படுசாகசமாக பந்தினைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் திடுக்கிட வைக்கும் அவர்களது ஸ்டெம்பை நேராகத் தாக்கும் "த்ரோ"க்களும் உலகப் பிரசித்தம்! தென்னாப்பிரிக்காவின் இந்த குறிப்பிடும்படியான ஃபீல்டிங்கையும் "அதிசிய ஸ்விங்கர்" டேல் ஸ்டெய்னை எதிர்கொள்வது பற்றியும் மிகத் துல்லியமான ஓர் எச்சரிக்கையை இந்திய அணிக்கு வழங்கியிருந்தார் சச்சின் டெண்டுல்கர் இந்தப் போட்டிக்கு இந்தியா தயாராகும் சூழலில்! சச்சினின் அந்த எச்சரிக்கையையும் மீறி ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை ஒரு க்விக் சிங்கிளுக்காக ஓடி டைரக்ட் ஹிட்டாகி வெளியேறியபோது வேதனையாகத்தான் இருந்தது! ஸ்டெய்னின் பந்துவீச்சில் முதல் ஓவரை ரோஹித் ஷர்மா மெய்டனாக விடுவது இன்றும் ஒரு வாடிக்கையாகவே தொடர்ந்தது! ரோஹித் வெளியேறிய போது இந்திய மனதின் அத்தியாவசிய தேவையாக இருந்தது ஒரு பார்ட்னர்ஷிப்! அதனை அப்பழுக்கின்றிக் கொடுத்தது ஷிகார்-கோலி இணை!
முதல் விக்கெட்டைப் பறிகொடுத்து தத்தளித்த கப்பலுக்கு மீகாமனாக செயலாற்றினார் ஷிகார் தவான்..... சென்ற போட்டியிலேயே குறிப்பிட்டதைப்போல மிகக் கச்சிதமான "டச்"சில் இருக்கிறார் ஷிகார். ஆஃப் சைடில் ஃபிலாண்டரின் இரண்டாவது ஓவரில் பந்தை பவுண்டரிக்கு கனெக்ட் செய்த அந்த ஸ்கொயர்- கட் ஷாட்டிலேயே தெளிவாகத் தெரிந்தது தவானின் ஃபார்ம்..... நேற்று தவான் வெளிப்படுத்திய ஆட்டத்தில் ஷாட் செலக்ஷனில் தொடங்கி ஸ்ட்ரைக் ரொடேஷன் வரை பேட்டிங் டிபார்ட்மென்டில் எந்தக் குறையையும் காணமுடியாத அளவு நேர்த்தி! வழக்கத்துக்கு மாறாக நேற்று தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சைவிட ஸ்பின் தான் அதிகளவு சுழன்றது.... நம்மவர்கள் ஸ்பின்னில் ஆடுவதில் ஜாம்பவான்கள்தான் என்றாலும் துணைக்கண்ட ஆடுகளங்களில் சுழல்வீச்சை எதிர்கொள்வதை விட சற்றே வித்தியாசமான சவால் விடுப்பது ஆஸ்திரேலிய ஆடுகளங்கள்! உதாரணமாக நம்ம பிட்சுகளில் பேட்ஸ்மேன்கள் விரும்பி ஸ்லைஸ் செய்யும் "ஆங்குலர்" ஷாட்டுகள் ஆஸ்திரேலியாவில் ஸ்லிப் திசையில் விக்கெட்டைப் பறித்துவிடும்! மட்டையை நேர்கோணத்தில் தள்ளியும் இழுத்தும் ஆடுவதுதான் இவ்வகை ஆடுகளங்களில் நிலைத்து ஆட வழிமுறை அந்த வகையில் "ஃபுட் வொர்க்" மிகத் துல்லியமாக இருப்பதன் அவசியத்தை மிக அழகாக செய்து காட்டினார் ஷிகார் தவான்! அற்புதமான பேட்டிங்கில் 137 ரன்கள் எடுத்தார் நேற்றைய ஆட்ட நாயகன்!
![]() |
| மூழ்காத ஷிப்பே பார்ட்னர்ஷிப்தான்! |
இந்தியாவின் பார்டர்னர்ஷிப்புகள்:
டெஸ்ட், ஒருநாள், ட்வெண்டி-20 என எந்தவகைக் கிரிக்கெட் போட்டியென்றாலும் பேட்டிங்கில் அத்தியாவசியமானது "பார்ட்னர்ஷிப்" அமைப்பதுதான்..... டெஸ்ட் போட்டியென்றால் மூன்று முதல் ஐந்து பார்ட்னர்ஷிப்கள் சிறப்பாக அமைவதும், ஒரு நாள் போட்டிகளில் இரண்டு அல்லது மூன்று , டி-20யில் குறைந்தபட்சம் ஒன்று என்று எண்கள் மாறுமே தவிர ஜோடிபோட்டு ஸ்கோர்செய்வதன் அவசியம் மாறப்போவதில்லை! நேற்றைய போட்டியில் இந்திய அணி அமைத்த இரண்டு சத பார்ட்னர்ஷிப்களை ஒரு பாடமாகவே ஆவணப்படுத்திவைக்கலாம் அத்தனை அற்புதமான கூட்டு முயற்சி அது!
கோலி - தவான் இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்களை சேர்த்தது 24.2 ஓவர்கள் களத்தில் நின்று! ஓவருக்கு வெறும் 3 ரன்கள் என்று முதல் பவர்ப்ளே முடிவில் தடுமாறிய அணியின் ரன்விகிதத்தை அசராமல் 5.18க்குக் கொண்டுசென்ற நேரம் பார்த்து கோலி எதிர்பாராதவிதமாகத் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.... இம்ரான் தாஹிரின் பந்தைத் தொடர்ந்து ஆன்-ட்ரைவ் செய்ய ஆர்வமாய் இருந்த கோலியை சிம்பிளாக ஷார்ட்-மிட்வெக்கெட்டில் ஒரு ஃபீல்டரை நிறுத்தித் தூக்கியது தென்னாப்பிரிக்காவின் சாதுர்யம்! அற்புதமான பார்ட்னர்ஷிப் அந்தத் தருணத்தில்(27வது ஓவர்) உடைந்துபோனபோது அடுத்து 35 ஓவர்கள் வரை அணியை வழிநடத்த இன்னொரு பார்ட்னர்ஷிப் அமைந்தாகவேண்டிய நெருக்கடி ஆட்கொண்டது (35 ஓவர்களுக்குமேல் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்த ரெய்னா-தோனியிடம் ஒப்படைத்துவிடலாம் என்னும் எளிமையான ஸ்ட்ராடெஜியின் அடிப்படையில்!)
இதனை அருமையாக சுமந்தது அஜின்க்யா ரஹானே!
தவான் - ரஹானே இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 125 ரன்களை வெறும் 16 ஓவர்களில் சேர்த்தது அசாத்தியமான 7.6 ரன்விகதத்தில்!
![]() |
| ரகளையாகக் கலக்கிய ரஹானே! |
ரஹானேயின் பேட்டிங் பவர்ப்ளே:
விக்கெட்டில் நிலைத்து ரன்வேகத்தை மெல்ல மெல்ல உயர்த்த ஆரம்பித்த நிலையிலேயே கோலியின் விக்கெட்டை இந்தியா இழந்தபோதே தெரிந்துவிட்டது பேட்டிங் பவர்ப்ளே விதிகளுக்குக் கட்டுப்பட்டு 35 - 40 ஓவர்களில்தான் எடுக்கப்படும் என்று! வந்த வேகத்திலிருந்தே மிக அழகாக ரன்களை சேர்க்கத் துவங்கிய ரஹானே, பவர்ப்ளே நெருங்கும் முன்பாகவே சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசத் துவங்கிவிட்டார்.... நேர் திசையில் லாங்-ஆன், லாங்-ஆஃப் இரண்டிலுமே அனாயசமாகப் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு எளிமையாய் ரஹானேவால் வழியனுப்பிவைக்க முடிந்தது! மிகக் குறிப்பாக பேட்டிங் பவர்ப்ளேவில் தவான்-ரஹானே இணை விக்கெட் இழக்காமல் சேர்த்த 44 ரன்கள் மிக முக்கியமானவை....! எதிர்பார்ப்பையும் கடந்து 43-வது ஓவர் வரை நீடித்தது இந்த இணை....! இன்னும் ஏழு ஓவர்களே மீதமிருக்கும் சூழலில் ஆரோக்யமான ரன் விகிதத்தில் இன்னும் ஏழு விக்கெட்டுகள் கைவசம் இருப்பதுதான் ஒருநாள் போட்டிகளில் மிக வலுவான நிலை.... அதன்பிறகு இழக்க ஒன்றுமில்லை முடிந்தவரை ரன்களை அதிகப்படுத்துவதே ஒரே நோக்கமாக மைதானத்தின் ஒவ்வொரு முடுக்கிலும் அடித்து ஆட முயற்சி செய்ய...... தவான், ரெய்னா,ரஹானே, ஜடேஜா என வரிசையாக நடையைக் கட்டத் துவங்கினாலும் 315 ரன்கள் வரை சேர்க்க வாய்ப்பு மிகத் தெளிவாக இருந்தது இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக தோனியின் விக்கெட்டை ஒரு ஸ்லோ பவுன்சர் காவு வாங்கிவிட அஷ்வினின் முயற்சியால் வலுவான 307 / 7 என்கிற வலுவான ஸ்கோருடன் பேட்டிங்கை முடித்தது இந்தியா!
![]() |
| நாங்களும் ரன்-அவுட் செய்வோம்ல! |
அழுத்தத்துக்கு அடுத்தடுத்து வீழ்ந்த தென்னாப்பிரிக்கா:
மின்னொளியில் பந்து ஸ்விங் ஆனது மட்டுமின்றி நல்ல மூவ்மெண்டும் கொடுக்கும் ஆஸ்திரேலிய சூழல்களில் என்பது பொதுவான கணிப்பு..... அது நேற்றும் பொய்யாகவில்லை....! இருந்தாலும் பலவீனமான இந்திய பவுலிங் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே! ஹஷிம் ஆம்லா ஒரு பெருஞ்சுவர் என்றால் இளம் வீரரான க்விண்டென் டி காக் ஓர் அதிரடி சரவெடி... அதுவும் நேற்றைய போட்டிக்கு முந்தைய ரெகார்டின் படி இந்தியாவுக்கு எதிராக க்விண்டன் டி காக்கின் சராசரி மட்டுமே 103.3 என்று இருந்தது! ஆடுகளத்தின் நிலைக்கு ஏற்ப முகம்மது ஷமி வீசிய ஸ்விங் பவுலிங் மற்றும் வேக மாற்றங்கள் 22 வயதான டி காக்கின் அனுபவமின்மையைத் தெளிவாகவே சோதித்தது! அவசரகதியில் அடித்தாடத்தான் விழைந்தாரே தவிர நீடிக்கும் துவகத்தைத் தர அவர் எத்தணிக்கவில்லை...... சொற்பமாக மிட்-ஆஃபில் கேட்ச் கொடுத்து விக்கெட்டைத் துறந்தார்.....! அடுத்துவந்த டுப்ளெஸி பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அருமைதான்.... ஆனாலும் ஏனோ தெரியவில்லை ஆம்லாவும் அவரும் அதிகம் பேசிக்கொள்ளக்கூட இல்லை! சரியான திட்டமிடல் இல்லாததுபோன்ற தோற்றத்தைத்தான் கொடுத்தது மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டிய அந்த அனுபவ இணை...... சுதாரிப்பின்றி ஆம்லா ஆடிய தவறான ஷாட் மிக மிகக் காஸ்ட்லியான அவரது விக்கெட்டை இந்தியாவுக்குத் தாரை வார்த்தது! கேப்டன் டி வில்லியர்ஸ் என்னைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பேன்! ஆனாலும் அழுத்தமான சேஸிங்கில் அவர் அத்தனை சோபிப்பதில்லை என்னும் வழக்கமான புகாரை இன்றும் தொடர்ந்து வாசித்தார்.... ஒரு முனையில் டுப்ளேஸி தன்னால் முடிந்தவரை நிலைத்து ஆடினாலும்..... டுமினி, மில்லர் என அணியின் கடைசி நம்பிக்கைகளும் சலனமேயின்றிக் கதையை முடித்துக்கொள்ள ஒரு ஹேண்ஸம் ஹேண்ட்ஷேக்குடன் ஆட்டத்தை முடித்தது இந்திய அணி மீதமுள்ள விக்கெட்டுகளைச் சம்பிரதாயமாய் சரித்துவிட்டு!
மோஹித் ஷர்மா மற்றும் அஷ்வினின் பந்துவீச்சு பங்களிப்பு நன்றாகக் கைகொடுத்தது தனிச்சிறப்பு!
ஹைலைட்டுகள்:
* நேற்றைய போட்டியில் இந்தியாவிடம் மிகவும் ரசித்தது மிக வேகமான களத்தடுப்பாட்டம்.... சில த்ரோக்களும் கடினமான கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிடுவதில்கூட பிழையில்லை களத்தில் இத்தனை ஆக்ரோஷமான தாக்குதல் தடுப்பாட்டத்தில் மொத்த அணியும் திமிரும்போது! நேற்று இந்தியாவின் ஃபீல்டிங் முனைப்பு அட்டகாசம்!
* என்னதான் ரஹானே இன்று ஓர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிக வலுவாக அணியை நிலை நிறுத்தியிருந்தாலும் கடைசி ஓவர்களில் இன்றும் சீட்டுக்கட்டாக சரிந்தது இந்திய அணி! தோணி தனது ஹெலிகாப்டரைப் பழுதுபார்த்தே ஆகவேண்டும் மிக விரைவில்!
* ஏபி டி வில்லியர்ஸின் கேப்டன்ஸியில் நேற்று நான் ரசித்தது உற்று நோக்கியது இரண்டு விஷயங்களை...
ஒன்று...... அவர் ஃபீல்டிங் பொஸிஷன்களைத் தேர்த்து வழங்குவதன் சைக்காலஜி! மிடில் ஓவர்களில் ஷார்ட்-தேர்ட் மேனாக (ஃப்ளை ஸ்லிப்) மார்னே மார்கலை நிறுத்தினார்.... ஸ்லிப்பைத் தாண்டி தூக்கியாடும் வாய்ப்பினை அடியோடு தவிர்க்க ரஹானேவைத் தீவிரமாக உந்தியது மார்க்கெல்லின் உயரம்! அதே போல பொதுவாகவே ஒரு நாள் போட்டிகளில் மிகவும் பயனளிக்காத ஷார்ட் கவர் , ஷார்ட் எக்ஸ்ட்ரா கவர் பொஸிஷன்களில் அவர் தொடர்ந்து ஃபீல்டர்களை நிறுத்தியவிதத்தில் அருகில் இருக்கும் ஃபீல்டர்களால் ஏதோ ஒருவகையில் டிஸ்டர்ப் ஆகத்தான் செய்தார்கள் பேட்ஸ்மேன்கள்......
இன்னொரு விஷயம்.... தனது வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங்கில் தேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்கர்கள் பந்து சிக்கும்போது எல்லாம் விடாத கவனுத்துடன் பந்தின் ஒருபகுதியின் பளபளப்பைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது! இப்போதெல்லாம் கேப்டன்கள் அதிகம் மறக்கும் யுக்தி இது..... டெத் ஓவர்களில் டேல் ஸ்டெயினால் ரிவர்ஸ் ஸிவிங் கச்சதமாக டெலிவர் செய்ய முடிந்தது இந்த வித்தையினால்தான்! மற்றபடி திட்டமிடுதல்.... சேஸீங் அழுத்தத்தைக் கையாளுதல் என எதிலும் எவ்விதப் புதுமையோ அல்லது உத்வேகமோ இல்லாத ஃப்ளாட் (Flat) செயல்பாடுதான் ஆக்கிரமித்திருந்தது தென்னாப்பிரிக்காவை இம்முறை!
* இந்தியாவைப் பொறுத்தவரை இது அற்புதமான எழுச்சி..... இனிமேல் வரும் ஆட்டங்களில் பெரும்பாலும் அஸோஸீயேட் டீம்களுடன் தான் மோதவிருக்கிறோம்..... இந்த ஆட்டங்களில் நமது பெஞ்சில் இருக்கும் வீரர்களை ஆடப் பணித்து நமது பெஞ்ச் ஸ்ட்ரெந்தையும் ஊர்ஜிதம் செய்து கொள்ள சிறந்த வாய்ப்பு இருந்தாலும் தொடர் வெற்றிகளின் தேவையைக் குறைத்து எண்ணும் வழியில்லை! UAE அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸ் ஜிம்பாப்வே எனப் போகும் பயணத்தைப் பார்த்து ரசிப்போம்!
இந்தியாவுக்கு சூடு பற்றிக்கொள்ளப் போவதென்னவோ இனிமேல் க்வார்ட்டர் ஃபைனலில்தான்......!
அடுத்த போட்டியில் சந்திப்போம்!
அன்புடன்,
பிரபு எம்.





































