டிசம்பர் 12 விடிவதற்குள்ளாகப் பதிவிட்டுவிடுகிறேன்....
இந்த நாள்... டிசம்பர் 11....
இன்று அதிகாலை உதித்த அதே சூரியன், ஒருநூறு வருட இளமையுடன், இதே இந்த நன்னாளில் சுமார் 128 ஆண்டுகள் முனபு உதித்திருந்தபோது, பூமியில் ஒரு சூரியன் சின்னதொரு அக்கினிக் குஞ்சாய்ப் பிறந்திருந்ததாம்...
மகாகவி பாரதியாரின் 128ஆவது பிறந்த நாளல்லவா இன்று....
எத்தனைக் காலம் தொடர்ந்து எரிந்தாலும் நெருப்பின் புகை நரைப்பதில்லை...
அதுபோலத்தானோ இவரின் சிகையும் நரைத்திடவில்லை? :-((
("தழல் வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!")
நூறாண்டிற்கும் மேலான முதிர்ச்சியை முப்பதாண்டிலேயே எய்திவிட்டு 'இன்னும் என்ன?' என்று தமிழால் கேட்டு நிமிர்ந்து நின்றதால்தான் இவருக்கு முதுமையைப் படைத்திருக்கவே இல்லையோ, இவரை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்ட சிவசக்தி...?
நல்லதுதான்.... இன்னும் வாழ்ந்திருந்தால் மட்டும் கொண்டாடியிருக்கவா போகிறோம்...
சிலருடைய எழுத்துகள் வருங்காலத்துக்கானவை என்று சொல்லப்படுகின்றன.... ஆனால்....
"வருங்காலம்" என்று பாரதியார் அவர்தன் "ஞானரதத்தில்" ஏறிச்சென்று பார்த்ததாய்ப் புனைந்த கனவைப் படித்தபின் உணர்ந்தேன் அது பூமியில் என்றுமே வரப்பெறாத வசந்தகாலம்
என்று...
வேற்றுகிரகத்தில் பிறக்க வேண்டிய ஓர் உன்னத உயிர் பிரம்மப் பிழையால் பூமிக்கு வந்தாரோ??? .... அச்சம் தவிர்த்து... நேர்ப்பட பேசி.... நையப்புடைத்து... ரௌத்திரம் பழகி... இந்தத் தலைமுறை மனிதர்கள் மட்டுமல்ல இனிவரும் தலைமுறையினரும் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்ததையே வியப்பாகக் காணுமளவு முடிவிலாத ஒரு பயணத்தை, வெகுசீக்கிரம் விடைபெற்றும், தொடர்ந்துகொண்டிருக்கும் அணையா நெருப்பாம், உண்மையிலேயே ஒரு "வித்தியாசப்பட்ட மனிதர்" மகாகவி சி சுப்ரமணிய பாரதியாரை அஞ்சித் தொழுகிறேன் அவர் பிறந்த இந்த நினைவுதினம் முடியுமுன்பு.....
பாரதியாரின் அழகுக் காதல் தமிழை வார்த்தைக்கு வலிக்காமல் மெல்லிசை மன்னர் இசையமைத்து அதனைத் தன் தேன் குரலால் எஸ் பி பி அவர்கள் பாடிய இந்தப் பசுந்தேன் பைந்தமிழ் கானத்தைப் பார்த்து, கேட்டு மகிழவும்....
தாமதமாகப் பதிவிட்டதற்கு வருந்தி....
அன்புடன்,
பிரபு எம்
