Showing posts with label பொது விஷயம். Show all posts
Showing posts with label பொது விஷயம். Show all posts

Monday, March 02, 2020

ஜாலியன் வாலாபாக் சமயத்தில் தற்போதைய மீடியா இருந்திருந்தால்.........

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஜெனரல் டயர் என்ற கோழையால் கொடூரமான முறையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோர வன்முறை சம்பவமான ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இப்போதுள்ள மீடியாக்கள் மற்றும் சோஷியல் மீடியா இருந்திருந்தால்..... என்று ஒரு கற்பனை.... இது  நகைச்சுவை பதிவு அல்ல என்பதை சோகத்துடன் சொல்லிக்கொள்கிறேன்!

ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்துவிட்டது அதன் முதல் ரிப்போர்ட்  ஒரு செய்திச் சேனலில்.......

காக்க..காக்க படத்தின் டைட்டில் இசையைப் போன்றதொரு வேகமான இசையை பேக்ரவுண்டில் போட்டுக்கொள்க.... ஒரு ரெட் கலர் பேக்ரவுண்டில் சுமார் இருபது நிமிடங்களுக்கு..... ப்ரேக்கிங் நியூஸ் என்று கொட்டெழுத்தில் வந்து வந்து போகும்....

பிரேக்கிங் நியூஸ்: 

ஜாலியன் வாலாபாக்கில் வன்முறை! போலீஸ் துப்பாக்கிச்சூடு......

சுதந்திரப் போராட்டக்காரர்கள் நடத்திய கூட்டத்தில் போலீஸ் தாக்குதல்.... துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாகத் தகவல்!


பக்கத்து சேனலில் ”திருடா... திருடா...” பட தீம் மியூஸிக் போல வேறொரு டெரர் மியூசிக்குடன்....

பிக் பிரேக்கிங்....

ஜாலியன் வாலாபாக்கில் போலீஸூக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்..... துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி பலர் படுகாயம்... பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!

சேனல்-1 ல் செய்தியாளர்:  ஜாலியன் வாலாபாக்கிலிருந்து முதல் காட்சிகள் வெளிவந்திருக்கின்றன அவை உங்கள் பார்வைக்கு.....

காட்சி: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்துக்கு அருகில் கேமரா வைக்கப்பட்டுள்ளது... தரையில் ரத்தக்கறைகளும் பத்துப் பதினைந்து தோட்டாக்களின் ஷெல்களும் தெரிகின்றன... அடுத்த ஃபுட்டேஜில்  நான்கைந்து சடலங்கள் அப்புறப்படுத்தப் படுவது தூரத்தில் தெரிகிறது.... போலீஸ் இங்குமங்கும் ஓடுகிறார்கள்....
பத்திரிக்கையாளர்களைப் போலீஸ் விரட்டுகிறார்கள்......

இந்த ஐந்து ஃபுட்டேஜ்களை 24 முறை ஒளிபரப்புகிறார்கள்...

பேக்ரவுண்டில் செய்தியாளர்: காவல்துறை எச்சரிக்கையையும் மீறி இன்றும் ஜாலியன் வாலாபாக்கில் போராட்டக்காரர்கள் பெருமளவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது... அப்போது காவல்துறை அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியபோது அங்கு லேசான மோதல் நடைபெற்றதாகத் தெரிகிறது அதன்பிறகு ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது... உறுதியான தகவல்களைத் தெரிந்துகொள்ள எமது செய்தியாளர் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார் விரைவில் அவரிடம் நேரடியான விவரங்களை அறிந்துகொள்ளலாம்....

சேனல்-2ல் ஓர் அரங்கு அமைக்கப்பட்டுவிட்டது.......

மூத்த பத்திரிக்கையாளர்..
சுதந்திரப் போராட்டக்காரர்
காந்தியவாதி
பிரிட்டிஷ் ஆதரவாளர்
பிரிட்டிஷ் இண்டியாவின் ஓய்வு பெற்ற கலெக்டர்

அமர்ந்திருக்கிறார்கள்......

தொகுப்பாளர்: ஜாலியன் வாலாபாக் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 8 பேர் பலியாகியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது... இது மேலும் உயரக்கூடும் என்றும் தெரிகிறது.... நான் முதலில் சுதந்திரப் போராட்டக்காரரிடமிருந்து ஆரம்பிக்கிறேன்... (அவரை நோக்கி) வணக்கம்... நீங்க இந்த சம்பவத்தை எப்படிப் பாக்குறீங்க ?

சுதந்திரப்போராட்டக்காரர்: என்ன சார் வன்முறை, துப்பாக்கிச்சூடுனு சொல்லுறீங்க? போராட்டத்துல எங்கசார் வன்முறை நடந்துச்சு?? அமைதியா போராடுன மக்களைக் கொடூரமா சுட்டுக்கொன்னுருக்காங்க ஜாலியன் வாலாபாக் படுகொலைன்னு சொல்லாம ஜாலியன் வாலபாக் வன்முறை சம்பவம் - போலீஸ் துப்பாக்கிச்சூடுன்னு சொல்லிட்டு இருக்கீங்க...

பிரிட்டிஷ் ஆதரவாளர்: சார்... வன்முறை நடக்கலைன்னு எப்படி சொல்லுறீங்க? போனவாரம் போராட்டம் நடக்குறதுக்கு முன்னாடி மூணு பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தாக்கத் திட்டம் போட்டு வாட்ஸப்-ல பரப்பியிருக்காங்க... போராட அனுமதி மறுத்ததுக்கு அப்புறமும் இத்தனை பேர் ஓரிடத்தில் குவிஞ்சா எந்த நேரமும் வன்முறையாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்குது சார்... சட்ட ஒழுங்கை அப்புறம் யார் பாதுகாக்குறது??

 நெறியாளர்: (சுதந்திரப் போராட்டக்காரர் மற்றும் காந்தியவாதியை அமைதி காக்க சொல்கிறார்) சரி இந்தப் போராட்டத்துக்கு முறைப்படி அனுமதி வாங்கலன்னு ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறார்  நம்ம நண்பர்.... இதை நீங்க எப்படிப் பாக்குறீங்க சார்....

பிரிட்டிஷ் இண்டியா முன்னாள் கலெக்டர்: ப்ரோட்டாக்கால் படி ஒரு போராட்டத்துல துப்பாக்கி சூடு நடந்திருக்குன்னாலே அங்க கலவரம் தூண்டப்பட்டிருக்குன்னு தான் அர்த்தம்.. சும்மா உணர்ச்சிவசப்பட்டுப் பேசுறதுல அர்த்தம் இல்ல... தன்னிச்சையா முடிவு பண்ணி இப்படி ஒரு துப்பாக்கிச்சூடு நடத்திட முடியாது.... கலவரத்தைத் தூண்டும்படியா அங்க சம்பவங்கள் நடந்திருக்கும் நிச்சியமா....

இப்படியாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்த ப்ரேக்கிங் நியூஸ்:

ஜாலியன் வாலாபாக் வன்முறையில் துப்பாக்கிச்சூடு: நாடு முழுவதும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் - அவசர நிலை பிரகடனம்...
போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்காமல் அறவழியில் போராடுமாறு ட்விட்டரில் காந்தி வேண்டுகோள்!


இதனையடுத்து ஃபேஸ்புக்கில் “ நாட்டாமை” பட மிக்சர் மீமில் காந்தியை வைத்து அதிக அளவில் மீம்கள் பகிரப்பட்டு வைரல் ஆகிறது...
பொறுத்தது போதும் பொங்கி எழு தீமிலும் பல்வேறு மீம்கள் வைரல் ஆகிறது.....

#மிக்சர் காந்தி என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்படுகிறது..
#I_stand_with_Gandhi என்று இன்னொரு ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிறது...
#கொலைகார_பிரிட்டிஷ்_அரசு என்று ஒரு ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆக பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகவும் சில ஹேஷ்டேக்குகள் இந்தியாவில் அரசு ஆதரவாளர்களால் ட்ரெண்டாக்கப் படுகிறது....(#கொலைகார_பிரிட்டிஷ்_அரசுஹேஷ்டேக் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலிருந்து உருவாக்கப்பட்டிருப்பதாக  பிரிட்டிஷ் அரசு ஆதரவாளர்கள் பேட்டி கொடுக்கிறார்கள்!)

உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 100 ஐத் தாண்டிவிட்டது....

சமூக வலைதளங்களும் சேனல்களும் பயங்கர பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன....

நிற்க......

இதற்குமேல் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை சமகாலத்தில் மீடியாக்களோடும் சமூக வலைதளங்களிலும் தொடர்பில் இருப்பவர்களால் எளிதில் கிரஹித்துக் கொள்ள முடியும்!

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஏப்ரல் 13, 1919ம் ஆண்டு இருந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அந்த சம்பவம் பற்றிய செய்தி தமிழகம் வந்து சேர்வதற்கே ஒரு வாரம் கூட ஆகியிருக்கலாம்! ஆனாலும்கூட வரலாற்றில் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் ஜாலியன் வாலாபாக் படுகொலை (Jalian Wala Bhag Massacre) என்று தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது அந்த சம்பவம்!  அன்றைய செய்திகள்தான் இன்றைய வரலாறுகளாக நமக்கு பதிந்து தரப்பட்டுள்ளது... ஆனால் இன்றைய செய்திகள் நாளைய தலைமுறைக்கு எப்படிப்பட்ட வரலாறுகளாக போய்ச் சேரும் என்று யோசித்துப் பார்த்தால் அவரவர் சார்ந்திருக்கும் கட்சி, சித்தாந்த, சாதி மற்றும் மத சார்பு நிலைகளுக்கு ஏற்றவாறு,  நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும், தரவுகளைத் தரும் மீடியாக்களும் இணையதளப் பதிவுகளும் தாரளமாய்க் கிடைக்கின்ற சமகாலத்தில் வாழ்ந்துவரும் நமக்கு சிரிப்பதா அழுவதா என்று இனம் புரியாத உணர்வுதான் எழுகிறது!

ஒரு சாதாரண மனிதன்கூட நொடிக்கு நொடி நடக்கும் சம்பவங்களை லைவ் டெலிகாஸ்ட் செய்யும் அளவு வளர்ந்துவிட்ட மீடியா தொழில் நுட்பத்தினால் செய்திகளும் தகவல்களும் வேகமாகப் பரவுகிறதே தவிர துல்லியமாக சென்றடைகிறதா என்னும் கேள்விக்கு மோர்ஸ் கோடுகளிடம் , வாட்ஸப் ஃபார்வோர்டுகள் தலைகுனிந்துதான் நிற்க வேண்டும்!
வந்தந்திகள் பரப்பப் பயன்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் செய்திகளைப் பகிரப் பயன்படுத்துக்கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு ஆபத்தானது?

மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று இப்போது எல்லா வரலாறுகளிலும் (பிரிட்டிஷ் பதிவுகள் உட்பட) தெளிவாக இடம்பெற்றிருக்கும் அந்தக் கொடூர சம்பவம் இப்போது நடந்தால் ஒருசில மீடியாக்களின் ஆசீர்வாதத்தினால் ஜாலியன் வாலாபாக் வன்முறை சம்பவமாகவும் ஜாலியன் வாலாபாக் என்கவுண்டர் என வெவ்வேறு நாமகரணங்கள் பெற்றிருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது!

பதிவின் நீளம் கருதி இதோடு முடிக்கிறேன்.....
சமகால மீடியா சாதனங்களின் மீதான பொதுப்படையான விமர்சனமாகவே இந்தப் பதிவைப் பதிகிறேன் இது தொடர்பாக உங்களின் நேர்மறை/எதிர்மறைக் கருத்துக்களையும் தயவுசெய்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.... 

அன்புடன்,
பிரபு எம்.


Tuesday, December 18, 2012

மாயன் காலண்டரும் நம்ம ஆளுங்களும்!


மாயன் காலண்டர் படி உலகம் அழியாதுன்னு உறுதியா சொல்லுறவங்ககூட உள்ளுக்குள்ள உதறிக்கிட்டுதான் இருக்காங்கன்னு உளவுத்துறை ரிப்போர்ட் வந்திருக்காம்!



சுனாமிலயே சும்மிங் போற நம்ம ஊரு பிரபலங்கள் "மாயனை"வெச்சு எப்டியெல்லாம் ப்ளான் பண்ணுவாங்கன்னு ச்சும்மாக்காச்சு கற்பனை செஞ்சு பாப்போம்....

ரஜினி ரசிகர்கள்:

மைண்ட் வாய்ஸ்:

1996ல இருந்து தெனமும் டெய்லி காலண்டர் கிழிக்கிறோம் தலைவர் அரசியலுக்கு இன்னிக்கு வருவாரு நாளைக்கு வருவாருன்னு..... கடைசில மாயன் காலண்டரே முடிஞ்சுபோச்சாம் தலைவா..... நீங்க இன்னும் மேலதான் கைய காட்டிட்டு இருக்கீங்க.....



டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)

யேய்!! ஜாலி  உலகம் அழியல........

அடிங்கடா நோட்டீஸு ஊருபூராம்....

"தலைவர் ஆளாமல் தரணி அழியாது....
இன்று கோச்சடையான்
நாளை கோட்டையை அடைவான்!!!!!"

மின்வாரியத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:

மைண்ட் வாய்ஸ்:

 "மாயா.... நீ சொன்னமாதிரி ஒலகம் கண்டிப்பா அழிஞ்சிடும்னு நம்பிதான் 2013ல பவர்கட்டே இருக்காதுன்னு தைரியமா அறிக்கைவிட்டிருக்கேன்...... ஒண்ணு ஒலகம் அழியணும் இல்ல.... அம்மா 7வது முறையா அமைச்சரவைய மாத்தும்போது என் இலாகாவ மாத்திடணும்!



டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)

கவுத்திட்டியேடா மாயா........

நல்லவேளடா சாமி.... 2013 ஜூன்லதான் நோ பவர்கட்னு சொல்லிவெச்சேன்...... இன்னும் ஆறு மாசத்துக்கா அமைச்சரவைய மாத்தாம இருக்கப்போறாங்க!!! ஹை ஜாலி!!!

சுப்ரமணியசுவாமி:

ஒலகத்தை அழிச்சுடலாம்னு நெனைக்கிறா......
இத்தாலி பக்கம் ஒரு தீவைத் தவிர எல்லா எடமும் அழியப்போகுது....
சோனியாவும் ராகுலும் சரத் பவாரோட கப்பல்ல அங்கே எஸ்கேப் ஆகப் போறா....
எல்லா ஆதாரமும் என்னோட லேப்டாப்ல இருக்குது.....



டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)

நியூக்ளியர் வெப்பன்ஸ வெச்சுதான் ஒலகத்த முடிக்கிறதா இருந்தா.....
நான் அவா சீனியர்கிட்டயே பேசி லாஸ்ட் மினிட்ல ஸ்டாப் பண்ணிண்டேன்....
நெக்ஸ்ட் டைம் சென்னை வரும்போது இந்த ஆதாரத்தையெல்லாம் வெச்சு சுப்ரீம்கோர்ட்டுல வழக்குபோடுவேன்....
சட்டதுல இருந்து யாரும் தப்பிக்க முடியாது....

இந்தியகிரிக்கெட் அணி

ஒலகம் அழிஞ்சா என்ன அழியாட்டி என்ன... நம்ம வோர்ல்டு கப் வாங்கியாச்சு...... நம்மதாண்டா வோர்ல்டு சாம்பியன்ஸ்!!!



டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)

மக்கள்: டேய்...... வோர்ல்டு கப் வாங்கினதுல இருந்தே உலகம் அழிஞ்சிடற மாதிரிதானடா விளையாடிட்டு இருக்கீங்க......
இன்னும் ரெண்டு வருஷத்துல திரும்பவும் வோர்ல்டுகப் வரப்போகுதுடா என் வென்று!!

நித்தியானந்தா:

"கதவைத் திற.... காத்தென்ன கேமராவே வரட்டும்" - அதான் எல்லாம் மொத்தமா முடியப்போகுதே!!!!



டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)

ப்ரஸ்மீட்டில்:

மறுபடியும் என்னைவெச்சு க்ராஃபிக்ஸ்ல மார்ஃபிங் பண்ணியிருக்காங்க சார்...... இந்த வீடியோல இருக்குறதும் நான் இல்லன்னு ப்ரூவ் பண்ணுவேன் சார்.......இந்தத் தடவையும் லேடீஸ் ஜெயில்லயே போடச்சொல்லுங்க சார்.....

மன்மோகன்சிங்:

".....      ....................       ......................                  .................................... "



டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)

"........   .............   .........................          .........................................."

இவரு வாயத்திறந்து பேசிட்டாதான் ஒலகம் தானாவே அழிஞ்சிடுமே!

கலைஞர்:

உலகம் அழிவதைக் கண்டித்து டிச 21ம் தேதி (லஞ்சுக்கு அப்புறம்) உடன்பிறப்புகளிடம் சொல்லாமல் திடீரென்று ஓர் உண்ணாவிரதம் அறிவிக்கலாம்.....



ஒருவேளை உலகம் அழியாவிட்டால்...... மாலை 5:30 மணிக்கு நியூசிலாந்தில் மணி 12-ஐத் தாண்டிவிட்டது...
உலகம் அழியவில்லை.... உண்ணாவிரதம் வெற்றி என்று ஸ்வீட்... எடுத்துக் கொண்டாடி விரதத்தை முடித்தும் கொள்ளலாம்!! :-))





உலகம் அழிஞ்சாலும் சரி..... அழியலைன்னாலும் சரி..... இவங்க யாரும் மாறப்போறதில்ல....


ஒருவேளை உலகம் அழிஞ்சுட்டா.......

நம்ம ஜாதகத்துல எல்லாம் " நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்"னு அர்த்தம்

அழியலைன்னா......

மாயன் காலண்டர்ல "கடைசில கொஞ்சம் பக்கத்தக்  காணோம்"" னு அர்த்தம்....

ஓகே!

லெட்ஸ் வெய்ட் அன்டு ஸீ....

டிச 22ம் தேதி மீட் பண்ணலாம்... ;-)

அன்புடன்...
பிரபு எம்

Sunday, January 09, 2011

சச்சின் பாதி.... ஜாகிர்கான் பாதி....


எனக்கு மூணாம் கிளாஸ் படிக்கும்போது கணக்குப் பாடம் ரொம்ப் பிடிக்கும்! ஏன்னா அதுல கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் தவிர வேறஎந்தத் தொல்லையும் கிடையாது.... முக்கியமா இந்த அல்ஜீப்ரா கிடையாது!

நான் முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ்மீடியத்தில்தான் படித்தேன்..... அப்போது கணக்கில் அல்வாத் துண்டாக இரண்டு கேள்விகள் எப்போதும் பரீட்சையில் இருக்கும்.... அவை "எண் உரு எழுதுக" , "எண் பெயர் எழுதுக" என்று வரும்... அதாவது இப்போ காலாகாலத்துக்கும் செக் புக்ல எழுதுறோமே அதேதான்..... ஒரு நம்பர் கொடுத்திருப்பாங்க அதைத் தமிழ்ல நானூற்று இருபது (அட நம்ம நம்பர்!) ஐநூற்று நாற்பத்தியேழு ன்னு எண்பெயரும்..... அதையே மாற்றி எண்பெயர் கொடுத்து எண் உரு கேட்டா 420, 547 ன்னு நம்பரும் எழுதணும்... இதுக்கு எப்படியும் ஓர் அஞ்சு மார்க்காவது நிச்சியம்!! (இந்த விளக்கம் மெட்ரிகுலேஷன் அன்பர்களுக்கு மட்டும்! "எண் உரு" என்னவோ ச‌ங்க‌கால‌த்து வார்த்தை மாதிரியில்ல‌ இருக்கு!)

அதுவும் மூன்றாம் வ‌குப்பில் மூன்றில‌க்க‌ எண்க‌ளும்... நான்காவ‌து வ‌குப்பில் நான்கில‌க்க‌ எண்க‌ளும் என்று லெவல் பார்த்துதான் கொடுப்பார்க‌ள்!!

எதுக்கு இந்த‌ ஃப்ளாஷ்பேக் என்றால்.... நம்மள மாதிரி ஜீனியஸுக்கெல்லம் மூணாம் கிளாஸிலேயே மூன்றில‌க்க‌ எண்க‌ள்.... நான்கில‌க்க‌ ஏன் ஆறு ஏழ இல‌க்க‌ எண்கள் வரைக்குமே எண் உரு எழுதுறது அஸால்டுதான்.... என்ன‌ ப‌ண்ற‌து ஃபாஸ்ட் ப்ரில்லிய‌ன்ஸ்! ஸோ... நேற்று திடீர்னு தோணிச்சு.... "ச‌ரி பிர‌பு... இப்போ மூணாம் கிளாஸ் முடிச்சே கிட்ட‌த்த‌ட்ட‌ இருப‌து வ‌ருஷ‌ம் ஆகிடிச்சே இப்போ ந‌ம்ம‌ ரேஞ்சுக்கு ஒரு ந‌ம்ப‌ருக்கு "எண் உரு" எழுதிப்பார்ப்போமே"னு தோணிச்சு... அதுவும் ஒரு ஹாட் நம்பருக்கு.... அதுதான்.... அதே ந‌ம்ப‌ர்தான்.... அதாங்க.... ந‌ம்முடைய ஆளும் ஐக்கிய‌ முற்போக்குக் கூட்ட‌ணியின் லேட்டஸ்ட் ல‌க்கி ந‌ம்ப‌ரான‌ ஒரு ல‌ட்ச‌த்து எழுபத்தியெட்டாயிர‌ம் கோடி!!

ஒன்று.. பத்து.. ஆயிரம்.. பத்தாயிரம்... .... கோடி.... பத்துக்கோடி... நூறுகோடி...அவ்வ்வ்வ்வ்...முடிய‌ல‌ங்க‌!! :-((((

1780000000000

ரொம்ப‌ நேர‌ம் ரூம் போட்டு யோசிச்சு கூகிள்ல‌ தேடி இந்த‌க் கேள்வியை சால்வ் பண்ணியிருக்கேன்!! க‌ரெக்டான்னு பாத்து சொல்லுங்க‌.. :))

                           ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================

நேற்று இந்த‌ எண் உரு க‌ண்டுபிடிக்கும் ரிஸ‌ர்ச்-ல‌ ஈடுப‌ட்டிருந்த‌ ச‌ம‌ய‌ம்தான் ஐபிஎஸ் ஏல‌த்தின் ரிச‌ல்டுக‌ள் வ‌ர‌ ஆர‌ம்பித்திருந்தன‌... அந்த‌ மில்லிய‌ன் டால‌ர்... பில்லிய‌ன் டால‌ர் பிஸின‌ஸ்க‌ளையெல்லாம் இந்திய ரூபாய் ம‌திப்புக்கு மாற்றி மாற்றி அந்த‌ எண்க‌ளுக்கெல்லாம் எண் உரு எழுதிப்ப‌ழ‌கி ப்ராக்டீஸ் ப‌ண்ணித்தான் ஒருல‌ட்ச‌த்து எழுப‌த்தியெட்டாயிரத்தின் எண் உரு எழுதும் மைல்க‌ல்லை எட்டினேன்!!!

சில‌ சாம்பிள்க‌ள்..... 

க‌வுத‌ம் காம்பிரின் ஐபிஎல் ச‌ந்தை விலையின் எண்ணுரு: 110400000

யுவ்ராஜ்சிங்கின் ச‌ம்ப‌ள எண்ணுரு:  82600000

யூசிஃப் ப‌தானுக்கு ஷாருக் கொடுத்திருக்கும் விலை:  96800000


இப்ப‌டி எல்லா வீர‌ர்க‌ளின் விலைப்ப‌ட்டிய‌லும் நெட்ல‌ இருக்கு... ப்ராக்டிஸ் பண்ணிப்பாருங்க‌.... ப்ராக்டீஸ் மேக்ஸ் ப‌ர்ஃபெக்ட்!!!!!

                          =========================================

கிட்ட‌த்த‌ட்ட‌ இந்த‌ ஆராய்ச்சியிலேயே ரொம்ப‌ நேர‌ம் போயிருச்சு.... அப்போதான் திடீர்னு தோணிச்சு இந்த‌ ந‌ம்ப‌ருங்க‌ எல்லாம் ப‌ண‌மா?? என்று!!!! 

ந‌ம்ப‌ரை எழுதுற‌துக்கே நாக்கு த‌ள்ளுதே எப்ப‌டி இதையெல்லாம் எண்ணி வீட்டுக்குக் கொண்டுபோறானுங்க‌?? ஹ்ம்ம்ம்ம்.... என்று நான்விட்ட பெருமூச்சில் வீட்டுத்த‌ரையின் தூசு ப‌ற‌க்க‌ அப்ப‌டியே ஒரு ஃப்ளாஷ்பேக் ஓப‌னாச்சு....

ர‌ப்ப‌ர் ப‌ந்தையும்.... டென்னிஸ் ப‌ந்தையும் ஒரு ரீபோக் கிரிக்கெட் பேட்டை வைத்து நான் சிக்ஸ‌ரும் ஃபோருமாக‌ வெளுத்துக்கொண்டிருக்கிறேன்.... என்னை யாராலுமே அவுட்டாக்க‌வே முடிய‌ல‌.... ப‌வுலிங் டீம் கேப்ட‌ன் அவ‌ங்க‌ டீம் ஃபாஸ்ட் ப‌வுல‌ர்கிட்ட‌... "லெக் சைடுல‌ போடாத‌டா.. அடிக்கிறான்னு தெரியுதுல்ல‌.... ஆஃப் சைடுல‌யே மெயின்டைன் ப‌ண்ணு.... வெறும் 24ர‌ன்தான் அடிச்சிருக்கோம்"னு கெஞ்சுறது எல்லாம் என் கண்ணெதிர்ல‌யே நடக்குது!!! ஹ்ம்ம்ம்....

அடுத்து ப‌வுலிங் ஸீன்... இன்ஸ்விங்...அவுட்ஸ்விங்னு ப‌ந்து எகிற‌ ஸ்டெம்பு ஒண்ணொண்ணும் காத்துல‌ விஜ‌ய‌காந்த் கிட்ட‌ உதை வாங்குற‌ அடியாளு மாதிரி சும்மா சுழ‌ன்று சுழ‌ன்று விழுது!!

அடுத்த ஸீன்ல டீச்ச‌ர் கேக்குறாங்க‌.... " பிர‌பு எதிர்கால‌த்துல‌ நீ என்னாவாக‌ போற‌?"

ட‌வுச‌ர் போட்ட, மீசை முளைக்காத‌ பிர‌பு துள்ளியெழுந்து சொல்லுறான்          " நான் எதிர்கால‌த்துல‌ ஒரு பெரிய‌ கிர்க்கெட்ட‌ரா வ‌ர‌ப்போறேன் டீச்ச‌ர்!!!"

க‌ண்க‌ள்ல‌ நீரோட‌ ஃப்ளாஷ்பேக் க்ளோஸ் ஆக‌..... சுமார் பதினஞ்சு வருடங்களுக்குப் பிறகு.... இப்பொழுது என் வ‌ருட‌ ச‌ம்ப‌ள‌த்துக்கு எண் உரு எழுதிப்பார்த்தேன் ஆறே இல‌க்க‌த்துல‌ ஆர‌ம்பிக்குற‌துக்கு முன்ன‌டியே முடிஞ்சிருச்சு!!!!!

தென் பாண்டிச் சீமையில மேட்ச் ஆடும் வீதியில பேட்டோட வந்தவனே யாரடிச்சாரோ... டொண்ட டொண்ட டொண்ட டொண்டடொய்ங்...... :-((((((((((

ப‌ச‌ங்க‌ள‌ கிரிக்கெட் விளையாட‌ விடுங்க‌ப்பா..........

                           =========================================

ஆஃபீஸ்ல‌ கிரிக்கெட் டோர்ண‌மென்ட்.... விடுவோமா.... ஒரு வெள்ளை ச‌ட்டை வெள்ளை பேண்ட் ப‌வ‌ர் ஷு எல்லாம் போட்டுக்க்கிட்டு போய் நின்னுட்டேன்.... ஆனா அங்கேயும் ஜஸ்ட்மிஸ்ஸு...... டீம் செல‌க்ஷ‌ன் நெட்ஸ்ஸுக்கு லேட்டா போயிட்டேன்..... ஆனாலும் விடாம‌ இன்ஃப்ளுயென்ஸ் ப‌ண்ணி  ஆளுங்க‌ட்சி எம் எல் ஏ கிட்ட‌ லெட்டரெல்லாம் வாங்கிட்டு டீம் கோச் கிட்டப் போய் நின்னா....

"நீ பேட்ஸ்மானா ப‌வுல‌ராப்பா??" ன்னு சாதாரணமா கேட்டுட்டாரு!!......

போன‌ ஸீன்ல‌ நீங்க‌ பார்த்த‌ அதே ஃப்ளாஷ்பேக் காட்சிக‌ள் ம‌றுபடி க‌ண்முன்னே தோன்ற‌......

"என்னைப் ப‌த்தி சுருக்க‌மா சொல்லணும்னா..... ச‌ச்சின் பாதி.... ஜாகிர்கான் பாதி க‌ல‌ந்து செய்த‌ க‌ல‌வை நான்!!"

என்று ஆள‌வ‌ந்தான் கம‌ல் மாதிரி கையை விரிச்சு ஆக்ஷ‌ன் செய்ய‌ ஒரு மாதிரி பார்த்துட்டு "நாளைக்கு க்ர‌வுண்டுக்கு வ‌ந்திடு" ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.....

எம் ஆர் எஃப் பேட்..... ச‌ச்சின் கையெழுத்துவேற‌ போட்டிருக்குது பேட்ல‌.... ச‌ச்சின் ஸ்டைல்ல‌யே வான‌த்த‌ ஒருத‌பா அண்ணாந்து பாத்துட்டு.... ஆட‌ ஆர‌ம்பிச்சேன்.... ஆறுபால்... ஹ‌ஹ‌ஹாஆ என்னை அவுட் ஆக்க‌வே முடிய‌ல‌.... ஆனா என்ன ஆறு பந்துமே நான் எவ்வளவோ ஷாட்ஸ் ட்ரை பண்ணியும் பேட்ல படல‌....ப‌ர‌ந்து விரிஞ்ச‌ ந‌ம்ம‌ பாடில‌ எங்கேயாவ‌து ப‌ட்டுக் கீழே விழுந்துடிச்சு.... ஆனா ஒண்ணு ம‌ட்டும் உறுதி  ஒரு பந்துகூட இவனத் தாண்டி ஸ்டெம்புல படாது டெஸ்ட் மேட்சுக்கு சூப்பர் ப்ளேயர் என்று காதுபடப் புகழ்ந்தார்கள் மக்கள்!!!!!

ப‌ந்து ப‌ட்டு உட‌ம்பு பூரா உள்காய‌த்தோட அடுத்து ப‌வுலிங் போட‌ப்போனேன்..... ஆறு பாலும் முடிஞ்சிருச்சு ஒரு பாலைக்கூட‌ பேட்ஸ்மேன் பேட்டால‌ தொடக்கூட‌ முடிய‌ல‌...!!! ஆனா இன்னும் ஓவ‌ர்ல‌ ஆறு பாலும் அப்ப‌டியே மிச்ச‌ம் இருக்கிற‌தா அம்பெய‌ர் சொன்னான்... போட்ட‌ எல்லா பாலுமே வைடு பாலாம்!! ஆனா அதுவும் ப‌ற‌ந்து ப‌ற‌ந்து கேட்ச் பிடிக்குற‌துக்கு விக்கெட் கீப்ப‌ருக்கு ந‌ல்ல‌ ப்ராக்டீஸா இருந்துச்சுன்னு பாராட்டினாங்க!

ஓகே ஓகேன்னு சத்தமில்லாம பெவிலியன் பக்கம் ஒதுங்கினவனைத் தேடிவந்து....

"ச‌ச்சின் பாதி.... ஜாகிர்கான் பாதி ... க‌ல‌ந்து செய்த‌ க‌ல‌வை நான்"னு சொன்னியேப்பா???? என்று கோச் ஞாப‌க‌மாக‌க் கேட்க‌.....

"அதைத்தான் சார் இப்ப‌வும் சொல்றேன்.... என்ன‌ கொஞ்ச‌ம் மாத்திக் கல‌ந்த‌ க‌ல‌வை நான்... ச‌ச்சின் மாதிரி ப‌வுலிங்கும்... ஜாகிர்கான் மாதிரி பேட்டிங்கும் ப‌ண்ணுவேன்!! ஹி ஹி ஹி!!"

 என்று ம‌ழுப்பிவிட்டு ஆஃபீஸில் என் ஸீட்டுக்குப் போய் லேப்டாப்பைத் திற‌ந்து வேல‌ய‌ப் பார்த்துட்டு வீட்டுக்குப்போனேன்!

ஐந்தில் வ‌ளையாத‌து இப்போல்லாம் இருப‌த்திய‌ஞ்சுல‌ கூட‌ வ‌ளைய‌மாட்டேங்குதுங்க‌!!! ஸோ டச்சுல இருங்க பாஸு!!!

வர்ட்டா....


வ‌ருங்கால‌ ஐபிஎல் ம‌துரை அணியின் கேப்ட‌ன்,

பிர‌பு எம்





 

Wednesday, March 17, 2010

33%

செய்தித்தாள் படிக்க ஆரம்பித்து, கடைசிபக்க விளையாட்டுச் செய்திகளைத் தாண்டி நாட்டுநடப்புப் பக்கங்களையும் கவனிக்க ஆரம்பித்திருந்த பள்ளி நாட்களிலேயே புரிந்திருந்தது 33 ஒரு பெண்பால் எண் என்று!!

எப்பவும் 50 தானே கேட்பாங்க இதென்ன பாஸ்மார்க்கைவிட ரெண்டு கம்மியா 33 க்கு சண்ட போடுறாங்களே? என்ற ஒரு சந்தேகத்துக்கும், "இடஒதுக்கீடு" என்ற‌ அரசியல் சார்ந்த சொல்லுக்கும் எனக்கு அர்த்தம் புரிந்தது நான் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த ஓர் உள்ளாட்சித் தேர்தலின்போதுதான்....

காரணம் : அப்போது எங்கள் வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது!!

அதே எலக்ஷனில் மதுரையில் இன்னொரு பெண்கள் வார்டில் அமோக வெற்றி பெற்றவர்தான், நேர்மை மற்றும் தைரியம் என்னும் கூடாத காம்பினேஷனில் சில காரியங்கள் செய்ய முற்பட்டதால், வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண் கவுன்சிலர் லீலாவதி...

இப்போது 33 சதவீதம் ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறிய நாளில் நாடளுமன்றப் பெண் உறுப்பினர்களெல்லாம் கட்சிபேதம் மறந்து கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.....

" ஆண்கள் அதிகாரத்தில் அதிகளவு இருப்பதைத் தகர்க்க அந்நியநாடுகளின் சதி இது" 

என்று நேற்று முத்துதிர்த்து இருக்கிறார் இந்த மசோதாவை எப்படியாவது (பெண்ணியத்துக்கு எதிரானவர்கள் எனும் முத்திரை வாங்கிடாமல்)தடுத்துவிடத் துடிதுடிக்கும் மூவரில் ஒருவரான‌ முலாயம்சிங் யாதவ்.... இவர் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கிறார் என்று தெரியவில்லை.... :-)

இது பெயரளவில் ஒரு சட்டமாக இயற்றப்பட்டுவிட்டு இதன் அடிப்படையில் பெண்களுக்கு அதிகளவில் தொகுதிகளை இடஒதுக்கீடு செய்வதினால் அரசியலில், ஏன் பெண்கள் சமூகத்துக்குமே கூட, பெரிதாய் என்ன மாற்றம் விதைக்கப் படப்போகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை...

இட ஒதுக்கீட்டினால் நம்முடைய‌ மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்!!



உலகில் எந்தவொரு நாட்டின் பார்லிமெண்டிலும் இல்லாத அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவில் இடம்பெறப் போவதின் சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....

நட்புடன்,

Thursday, March 04, 2010

கதவுகளை உடைப்பவர்கள் கண்களையா மூடிக்கொள்ளப் போகிறார்கள்??



இதுபோன்ற விஷயங்களையெல்லாம் எழுதுவதா?? படிப்பது கூட தேவையற்ற காலவிரயம்தான்.....
எங்கே விடுகிறார்கள்.... "உடனடியாக சன் நியூஸ் பார்க்கவும்" என்று குறுஞ்செய்தி வந்தது...
இதற்கு முன்பு எனக்கு இப்படிக் குறுஞ்செய்தி வந்தது கலைஞர் கைதுண்ட போதும், செப்டம்பர் 11 ட்வின் டவர் இடிபட்டபோதும் தான்.... ஏதோ நடக்கிறதோ என்று டிவியை ஆன் செய்தேன்..... அந்த‌ கண்றாவிதான் அரங்கேறிக் கொண்டிருந்தது....

குறுஞ்செய்தி அனுப்பியவனுக்கு வேறு யாரோ சன் நியூஸ் பார்க்குமாறு செய்தி அனுப்ப, என்னவென்றே பாக்காமல் நண்பர்கள் அனைவருக்கும் ஃபார்வோடு செய்திருக்கிறான் இந்த சமூக சேவகன்... அவனைச் சொல்வதா அல்லது நாளொன்றுக்கு நூறு எஸ் எம் எஸ் இலவசமாகத் தரும் அலைபேசி சேவையைச் சொல்வதா??

ஓர் அந்தரங்க வீடியோ பதிவெடுக்கப் பட்டுள்ளது.. அது எதற்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பப் பட வேண்டும்... காவல்துறையின் விலாசங்கள் மக்களுக்குத் தெரிவதில்லையா??( காவிகளுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட‌ காக்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் அவலங்களின் ஆரம்பமோ??) அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது... இன்னுமோர் ஆன்மிக வியாபாரியின் முகத்திரை கிழிந்துபோனது...... ஆராதித்த ஏமாளிக் கூட்டமே இன்று அவன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கியுள்ளது.... சரி... அவன் மேல் இதுவரை ஒரு வழக்கு பதிவாகி உள்ளதா? யார் வழக்கு பதிவு செய்வது? எந்த குற்றத்தின் அடிப்படையில்?? ஆக இரண்டு நாட்களாக, ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது மீடியாவில், சட்டம் என்றும் நீதித்துறை என்றும் காவல்துறை என்றும் இருக்கிறவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?? மீடியாவுக்கும் மக்களுக்கும் இடையே சட்டத்திற்கு இடம் என்றுதான் ஏதேனும் இருக்கிறதா??

அவன், அவனது துறவற நெறிகளை மீறியிருக்கிறான்....சரி.. கூடவே மாட்டிக்கொண்டுள்ள அவனைவிடப் பிரபலமான அவள்???? அவன் அடுத்த சிலகாலம் கழித்து சில வெள்ளைத்தோல் பக்தசிகாமணிகளுடன் அமெரிக்காவில் ஆசிரமம் ஆரம்பிப்பான்..... மீண்டும் இவள்????

"கதவைத் திற காற்று வரட்டும்" என்று ஆன்மிகத் தொடர் எழுதவிட்டு அவனை ஆராதித்த குமுதம் ஆளுக்கு முந்தி "சாமியாரின் முகத்திரை கிழிக்கும் எக்ஸ்க்ளூஸிவ் வீடியோ" என்று இமெயில் அனுப்புகிறது... இத்தனை நாள் அவன் எழுத்தைப் பதிவுசெய்து அவனுக்குப் பெரும் அந்தஸ்து கொடுத்ததற்கு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?? யார் கொடுப்பது??

இந்த வெட்கங்கெட்ட சம்பவங்கள் நமக்குப் புதிதல்லவே அல்ல.... ஆனால் சமீபகாலமாகவே மீடியாவின் அத்துமீறல்கள் அடக்குமுறையின்றித் தொடர்ந்துகொண்டே இருக்குமானால் தணிக்கைக் குழு, நீதித்துறை இவையெல்லாம் எதற்கு இருக்கவேண்டும்?? இழுத்து மூடிவிடலாமே..... எதை ஒளிபரப்புவது.. எதை விடுப்பது என்று எந்த வரையரையுமே கிடையாதா நம் நாட்டில்??... புரியவில்லை...நாளைக்கு ஒரு கொலையையும் கற்பழிப்பையும்கூட வீடியோ கொடுத்தால் ஒளிபரப்புவார்களா??

இந்த ஒரு ஸ்காண்டல் எத்தனை முக்கியச் செய்திகளை கவனங்களிலிருந்து இருட்டடிப்பு செய்திருக்கிறது என்பதை ஒருமுறை யோசித்துப் பார்க்கவும்....

வீரப்பன் செத்துப்போனதோடு  " நக்கீரன்" தன் நெற்றிக்கண்களைக் கதவுகளின் சாவித்துவாரங்களில்தான் விடாது பொருத்திவைத்திருக்கிறான் கல்லா கட்டுவதற்காக....

ஜுவி, ரிப்போர்ட்டர்களைத் தொட்டு நாளாகிவிட்டது, விகட குமுதங்களின் மீதும் மரியாதை போய்விட்டது...   வேறெந்தவொரு வெகுஜன‌ பத்திரிக்கையையும் தொடவே  விருப்பமற்றுப் போய்...  மேலும் சினிமா.. டிவி எல்லாம் வெறுத்துப்போய்.... அடப்பாவிகளா... கடைசியில் நம்மள துறவி (உண்மையான துறவின்னு தான் அர்த்தம்... மாத்திப் புரிஞ்சிக்கப் போறீங்க‌!!) யாக்கிடுவானுங்க போலயே....

எங்கே செல்லும் இந்தப் பாதை.......


எனக்கு சமூகத்தில் விடை தெரியாத கேள்விகளைதான் இங்கே கேட்டிருக்கிறேன்.... வேறெங்கு கேட்பது நான், என் வலைப்பூவை விட்டால்??  இருப்பினும்  சுத்தம் சுகாதாரம் கருதி..... இதை நானே அழித்துவிடுவேன் விரைவில்.....

Saturday, February 06, 2010

குழந்தைகள் மனநலம் : மதுரை கருத்தரங்கம்

அந்த அருமையான மாலை வேளையில் நம் பதிவுலக நண்பர்களுடன் நானும் இருந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!!

ஒருவேளை, அன்று இரவு நான் சென்னைக்குப் போக வேண்டியதைக் காரணமாகக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சென்றிருக்கலாம்.... அதன்பின் கருத்தரங்கைப் பற்றிய நண்பர்களின் இடுகைகளில் படித்துவிட்டு வரமுடியாமல் போனதற்காக‌ தூர்தர்ஷன் போல "வருந்துகிறேன்" என்று ஸ்லைடு போட்டிருக்கலாம்... ஆனால் அப்படி நேர்ந்திருந்தால் எத்தனை அற்புதமான ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன் என்று கலந்துகொண்டபின்புதான் புரிந்துகொண்டேன்!! அப்படிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும், எனவே ஏற்கெனவே கருத்தரங்கு தொடர்பான நண்பர்களின்  இடுகைகளைப் படித்துவிட்டேன் என்றாலும் இங்கு நானும் ஒரு பார்வையாளனாகப் பதிய விழைகிறேன்....

அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹால்... கல்லூரி வாழ்வின் பல ஃப்ளாஷ்பேக்குகளைக் கிளப்பியது..... முதன்முதலில் ஒரு சின்ன உரையாற்ற வாய்ப்பளித்த இடம் எனக்கு!!.... நான் அந்தக் கோயிலில்தானே படித்தேன்!! ஓகே நோ   ஃப்ளாஷ்பேக்ஸ்......

கருத்தரங்கைப் பொறுத்தவரை  நான் செய்த ஓர் உருப்படியான காரியம் ,"குழந்தைகள் மனநலம்"... சிறுவர் சிறுமிகளின் மீது தொடுக்கப்படும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு விழிப்புணர்வு என்ற‌ தலைப்பை அறிந்ததுமே, என் அம்மாவை என்னுடன் அழைத்து சென்றதுதான்!! குழந்தைகளின் பரிட்சை மார்க்குகளைவிட அவர்களின் மனநலத்தில் அதிக அக்கறை கொண்டு முப்பது வருடம் குழந்தைகள் உலகில் ஆசிரியையாகப் பணியாற்றியர் அல்லவா... அதனால் தலைப்பைச் சொன்னவுடன் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டார்...மிகுதியான‌ மனநிறைவுடன் இருவரும் வீடு திரும்பினோம்!!

டாக்டர் ஷாலினி....

பொதுவாகஓர் இதய சிகிச்சை நிபுணரோ அல்லது  ஒரு மூளை நரம்பியல் நிபுணரோ வந்து மனித உடலைப் பற்றியும், உள்ளுறுப்புகளையும் பற்றி ஓர் உரையாற்றுகிறார் எனில் அதற்கான வரவேற்பும் சரி... தயாரிப்பும் சரி முற்றிலும் "ஒன்வே ட்ராஃபிக்" காகத்தான்  இருக்கும்.... ஏனெனில் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றியெல்லாம் ஹார்ட் அட்டாக்கோ, நியூரோ ப்ராப்ளமோ வராமல் நாம் கூகுளில் கூடத் தேட‌மாட்டோம்...

ஆனால் "மனநலம்" பற்றி இன்றைய‌ காலகட்டத்தில் கருத்தரங்கம் வழங்குவது நிச்சியம் சவாலனது... ஏனெனில் ஒரு சிறுகதையில்கூட‌ "சைக்கலாஜிக்கல் டச்" வைக்கும் காலமிது....
டான்ஸ் ஷோவில்கூட "கெமிஸ்ட்ரி"க்குதானே  பத்து மார்க் கிடைக்குது!!!
 கனவுல காளமாடு முட்டுச்சுன்னு சொன்னால்,  என் நண்பன் , "மச்சான் இதுக்கு ஃப்ராய்டு என்ன விளக்கம் சொல்றாருன்னா..." என்று தாடையைச் சொறிய ஆரம்பிக்கிறான்......அந்த  அளவுக்கு "மனநலம்" சார்ந்த கருத்துகளும், புத்தகங்களும், சொற்பொழிவுகளும் மலிந்துகிடக்கின்றன...

சீரியல் ரேப்பிஸ்ட் ஒருத்தன் போலீஸிடம் சிக்கினால் நம்ம "ஜூவி", "ரிப்போர்ட்ட"ருக்கெல்லாம் ஏக குஷியாகி வக்கிரம் சொட்ட வர்ணித்துவிட்டு டாக்டர். நாராயணரெட்டியிடம் கருத்துகேட்டு அவற்றை "மனவியல் ரீதியாக‌"  அணுகும் (கொடுமடா சாமி!!) அன்றாடக் கூத்துகளுக்கு மத்தியில்.....

கல்வியாளர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள, பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் முன் ஒரு தேர்ந்த "உளவியல் மருத்துவராக" டாக்டர். ஷாலினி, அன்றாட வாழ்வின் உளவியல் நிதர்சனங்களுக்கு சாதாரண உடற்கூறு சார்ந்த காரணங்களில் தொடங்கி... ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசம்வரைதொட்டு விளக்கி எங்களையெல்லாம் கட்டிப்போட்டு  மனித மனத்தின் படம் வரைந்து பாகம் குறித்த பாங்கிற்கு ரசிகர் மன்றமே வைக்கலாம்!!

"குட் டச், பேட் டச்" என்று பேசத் துவங்கியதுமே "எங்களைப் (மனநல மருத்துவர்கள்) பொறுத்தவரை எதுவுமே குட் என்றும் பேட் என்றும் கிடையாது என்ற டாக்டரின் துவக்கமே "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று திருக்குறள் சொன்னது!!

குழந்தைகள் என்று துவங்கி... மனித ஆண் மற்றும் மனிதப் பெண் என்று பிரித்து ... அவர்களின் தொடு உணர்வு சார்ந்த சைக்காலிஜிகளையெல்லாம் வெள்ளிடை மலையாகத் தெளிவுபடுத்தி.... விலங்குகளிட‌மிருந்து பரிணாம வளர்ச்சியினால் பிரிந்து வந்த மனிதப் பெண்  தன் உடல், தோல், உரோமங்கள் முதலியவைகளில் இயற்கைக்கு மாறாகக் கண்டிருக்கும் பரிணாம மாற்றங்கள்.... அதனால் அவளுக்கு ஏற்படும் ஸ்பரிசம் உள்ளிட்ட  விளைவுகள்..... அதன்மீதான கலாசாரப் பார்வைகள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்று விரிந்துகொண்டே சென்ற கான்செப்டை உளவியல் கூறுகளாக உள்ளடக்கி அன்றாடம் அவர் சந்திக்கின்ற‌, சிகிச்சை அளிக்கிற‌ பொதுமக்களின், அனுபவங்களை மேற்கோள்காட்டி டாக்டர். ஷாலினி அவர்கள் விளக்கியது, நிச்சியம் அவரின் துறை சார்ந்த மற்ற நிபுணர்களுக்குமே கூட சாத்தியமாவது சந்தேகமே!! விஷயங்கள் தெரிந்தாலும் விளக்கிச் சொல்ல வேண்டுமே..... கேட்போர் அனைவருக்கும் விளங்க வைக்க வேண்டுமே!!!

Hats off to you ma'am!!

Dr.  ஷாலினி சொன்ன விஷயங்கள் அதே ஆழத்தோடு நம் சமுதாயத்திற்குப் போய்ச்சேர்வது... குறிப்பாக நம் பெண்கள் சமுதாயத்தைச் சென்றடைவது அவசியம்... மொத்தக் கருத்தரங்கமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது... நிச்சியம் அது இன்னும் பலரை சென்றடையும் என்று நம்புகிறேன் மேலும் தூரத்தைப் பொருட்படுத்தாது "ஒரு சக பதிவராகவே என்னிடம் கலந்துரையாடுங்கள்" என்று ரொம்பவே தோழமையாக முன்வந்து தன் அழகான, ஆழமான உரையை வழங்கிய டாக்டரே தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சி மற்றும் வேறு மீடியாக்களின் வழியாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வைத் தொடர்ந்து வழங்குவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.... என்ன... நம் மக்கள் கிசுகிசுக்களைப் படிக்கும் ஆர்வத்தையும், ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒருகாலத்தில் அவமதிக்கப்பட்ட ஆட்டத்திற்கு இன்று மூன்று பேர் உட்கார்ந்து மார்க் போடும் நிகழ்ச்சிகளில் எல்லாம் காட்டும் ஈடுபாட்டை இதுபோன்ற ஆரோக்யமான எழுத்துகளைப் படிப்பதிலும், நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் காட்ட வேண்டும், யாருக்காகவும் அல்ல.... பேசுற பாஷை முழுசா பிடிபடாத.. தன்னோட உறுப்புகளுக்கு தனக்கே பெயர் தெரியாத உங்க‌ வீட்டு பிஞ்சுகளுக்காக...!!

குழந்தைகளுக்கு அவர்களின் உறுப்புகளின் பெயர்களை எப்போது சொல்லித்தர வேண்டுமோ அப்போதே உடலின் அந்தரங்கப் பகுதிகளுக்கும் பெயர்களைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்... விரசமான பெயர்களாக‌ அவற்றை அவர்கள் அறியாவண்ணம் உறுப்புகளுக்கு ஆங்கிலப் பெயரைச் செல்லிக் கொடுக்கலாம்...

குழந்தைகள் சில சமயங்களில் ப்ரைவேட் உறுப்புகள் மற்றும் ஆண் பெண் உடல் வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குழந்தைத்தனமாக விளையாடும் சில வில்லங்கமான விளையாட்டுகளை விளையாட எத்தணிக்கும் சமயங்களில் வன்மையாகக் கண்டித்து அதன் ஆர்வத்தை மேலும் தூண்டாமல்..... குழந்தைகள் தனியாக விளையாடும்போது பெற்றோர்களும் இணைந்து விளையாடுவதுபோல் கண்காணிக்கலாம்....

இவையெல்லாம் டாக்டர் சொன்னபோது எளிமையாகத் தென்பட்டாலும், எண்ணிப் பார்க்கையில் கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்துபோய்க் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சென்ஸிடிவான விஷயங்களாகக் கவனிக்கப் பட வேண்டியவைகளாகவே தோன்றியது....

பெண்களுக்கு டிஃபென்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு அப்படியே உல்டாவாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று அவளை நம் கலாச்சாரம் தயார் படுத்தும் எதிர்மறையையும் கம்பீரமாகத் தெளிவு படுத்தினார்.....

குழந்தைகளுக்கு எதிராகப்போய் ஏனிது போன்ற வக்கிரங்கள் சில ஆண்களால் ஏற்படுகிறது?? என்னும் கேள்வியை அனைவருமே கேட்க மறந்திட... அவராகவே அந்தக் கேள்வியை எழுப்பி அதன் பின்னால் அமிழ்ந்துள்ள சைக்காலஜியை விளக்கினார்.... ஆண்கள் பொதுவாகவே குழந்தை முகமுள்ள பெண்களால் கவரப்படுவது என்னும்  இயல்புதான் இந்த அநீதிகளுக்கு ஆரம்பப்புள்ளியாக‌ அமைந்துவிடுகிறது என்று சிம்பிளாக சொன்னார் ஒரு மருத்துவராக :)

எல்லாவற்றுக்கும் மேல் ஒரு திறமான Root cause Analysஸாக‌... இதுமாதிரியான குற்றங்களுக்குக் கூட அதைப் புரிபவர்களைவிட  இந்தக் குற்றங்களுக்குக் காரணமான பின்னணியாக அமைகிற சில விஷயங்களைப் பக்குவமாக அடிக்கோடிட்டுக் காட்டியது அற்புதம்....

அதாவது ஆரோக்யமான இல்லறம் அமைந்தாலே இதுபோன்ற மிருகத்தனங்கள் பெரும்பாலும் தலைதூக்குவதில்லை.... என்று குழந்தைகள் மனநலத்தைப் பாதுகாக்க ப்ராக்டிகலாக ஏராளமான யோசனைகளை வழங்கியதோடு,  இதனை சமுதாயத்திலுருந்தே களையெடுக்க அடல்ட்களின் மனநலத்தின் அத்தியாவசியத்தைக் சுட்டிக்காட்டி முடித்து நிகழ்ச்சிக்கு ஒரு முழுமையைக் கொடுத்து முடித்துவைத்தார்!!

மனதார சொல்கிறேன் ஒரு பிரஜையாக.... டாக்டர். ஷாலினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் :)

இந்த நிகழ்ச்சி தொடர்பான இடுகையில் நண்பர் கார்த்திகை பாண்டியன் நாமும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் சாத்தியமான நிகழ்வாக இதைக் குறிப்பிட்டிருந்தார்... நம் பதிவர்கள் சாதித்திருக்கும் ஓர் அரும்காரியமாக இது நடந்தேறியது என்று உரக்கவே கூறலாம் மார்தட்டி.....

வெறும் பார்வையாளனாக வந்து கலந்துகொண்டுவிட்டு முதல் ஆளாகக் கிளம்பிச் சென்றுவிட்டேன்.... கைக்கெட்டும் தூரத்தில் உன்னதமான ஒரு முயற்சி நடந்துகொண்டிருகுக்கும்போது அதில் பங்கெடுக்காது போனதற்காகத் தலைகுனிகிறேன்.... அடுத்தமுறை இதுபோன்ற முயற்சிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று இப்போது முகமறிந்த நண்பர்களாகிவிட்ட மதுரை பதிவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்...

பதிவர்களையெல்லாம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசியது ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுத்தது... எழுத்தால், தமிழால் இணைந்த நண்பர்கள்.... பள்ளி, கல்லூரி தோழர்களைப் போல் யதார்த்தமாகப் பழகுவதைக் கண்டு ரொம்பவே கண் வைத்துவிட்டேன்!! என்னையும் ஒரு பதிவராக இணைத்துக் கொண்டு ஒன்றாக ஃபோட்டோவுக்கு நின்றோமே.... உண்மையாக அகமகிழ்ந்தேன்... அந்த புகைப்படத்தில் நிச்சியம் சிரித்த முகமாகத்தான் இருந்திருப்பேன் அது ஃபோட்டோவுக்கு சிரித்த சிர்ப்பல்ல.... மனமகிழ்ந்து முகம் மலர்ந்த தருணம் அது....

அதிகமான சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன்,

Friday, January 01, 2010

2010 : புதுசு கண்ணா புதுசு...!!


31 12 2009 23:59:57
31 12 2009 23:59:58
31 12 2009 23:59:59


01 01 2010 00:00:00

இந்த நொடி சிறப்பாகக் கொண்டாடப் பட்டது!! 

வான வேடிக்கைகள்... தூரத்து வெடி முழக்கம்... அதற்கு இணையாக பக்கத்து சர்ச்ச்சுகளின் கோஷம்..!! 1982ல் வெளியாகி கால் நூற்றாண்டு கழிந்துவிட்டாலும் அதே "சகலகலாவல்லவன்" கமல்தான் இவ்வருடமும் அதே பைக்கில் திரையைக் கிழித்துக் கொண்டு வந்து 'பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்.... பப்பாய்ங்" சவுண்டுடன் விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் என்று தெருவுக்குத் தெரு ஸ்பீக்கர்களில் பாடிக் கொண்டிருந்தார்!! பைக்கில் "வ்வ்ர்ர்ர்ர்ரூரூம்ம்" என்று ஹேப்பி நியூ இயர் சொன்னவாறே குட்டிக் குட்டி ஜாலி ஊர்வலங்களையும் காணமுடிந்தது.... நிச்சியம் ஓர் ஐநூறு பேர் "இன்று முதல்" குடிப்பதையோ, புகைப்பதையோ நிறுத்தியிருப்பார்கள்!! (மார்ச் மாதம் கொஞ்சம் கொஞ்சமாய் அத்தனை பேரும் பேக் டு ஃபார்ம் ஆகிவிடுவது வரலாறு!!)

எங்கும் மகிழ்ச்சி... செல்ஃபோன் சிணுங்கல்கள்... எல்லாமே மெல்ல மெல்ல அடங்கிப்போக பூமி சலனமில்லாமல் அடுத்த ரவுண்டைத் துவங்கிவிட்டது!! 2010ல் இரண்டு மணி நேரங்கள் ஓவர் பிரதர்!! என்று என்னைப் பார்த்து சிரிக்கிறது வீட்டுக் கடிகாரம்!! :)

கைமேல் 365 புத்தம் புதிய நாட்கள்... புதிய சிந்தனைகள்... மகிழ்வான துவக்கம்.... நல்ல வார்த்தைகள்... ஆசீர்வாதங்கள்... ஜனவரியில் வெயிலும் அதிகம் எறித்திடாத‌ வசந்தகாலம்... எனவே, நேற்று இரவு வரை அதிருப்தியிலும் தோல்வியிலும் வலித்திருந்தாலும்... மென்மையாக ஒரு புதிய துவக்கத்தைப் புதிய காலண்டரின் கவரைக் கிழித்துச் சுவரில் மாட்டி இனிதே துவங்கலாம் முதலிலிருந்து இன்று!!  

விடிந்தவுடன்... டிவிப் பெட்டியின் அர்த்தமற்ற "சிறப்பு நிகழ்ச்சிகளை"ப் பார்க்காமல், நம் வாழ்வில் இந்த வருடம் "மோஸ்ட் ப்ராபப்ளி " நடக்கப் போகும் "சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு"த் தயாராவோமாக‌..... !!  

இந்த வருடம் நிறைய நிறைய படிக்க வேண்டும் என்று சிரத்தையாக ஒரு முடிவெடுத்துள்ளேன்.... முதல் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய புத்தகங்களை நீண்ட காலமாய்த் தேக்கி வைத்திருக்கிறேன்... வாசிக்காமலும், பாதி வாசித்தும்!! நிறைய படிக்க வேண்டும்... நிறைய பார்க்க வேண்டும்... நிறைய நிறையப் பழக வேண்டும்.... சொல்கிறேன்... செய்ய வேண்டும்!! பார்த்த, கேட்ட, படித்தவை அனைத்தையும் பதிவுலகில் பகிர்ந்து கொள்வதும் செயல் திட்டத்தில் அடங்கும்... பார்க்கலாம் செய்கிறேனா என்று!! :)  

இந்தப் புதுவருஷம் நம்ம எல்லாரும் எல்லா விதத்திலும் மகிழ்ச்சியயும் நம் முனைப்பில் தெளிவும்.... இலக்குகளை நோக்கி உழைக்கப் போதுமான நேரமும், அத்தியாவசியமான மன நிம்மதியும் பெற்று, வெற்றிகளில் மயங்கிடாது, தோல்விகளில் துவண்டிடாது... இந்தப் புத்தாண்டு பிறப்புதின மகிழ்ச்சி அதிர்வுகளை இந்த ஆண்டு முழுதுமாக நாம் அனைவருமே எதிரொலித்திருப்போமாக!! :)  

ரொம்பவே சத்தமாக சொல்லிக்கொள்கிறேன்...
"ஹை எவரிப்டி ஐ விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்ர்ர்ர்" 
பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்..... பப்பாய்ங்....!! :)  

அன்புடன்,


Tuesday, December 29, 2009

2009 சில வெற்றிகளும் தோல்விகளும்...



"எல்லாப் புகழும் இறைவனுக்கே.." என ஆஸ்கர் இரவில் தமிழ் ஒலித்த 2009ஆம் ஆண்டு முடிய இன்னும் சில மணித்துளிகள்தான் உள்ளன!!  

"இப்போ தான் புதுவருஷம் பொறந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்திருச்சு!!" எல்லாருமே ஒருமுறையேனும் கேட்டிருப்போம் இந்த வசனத்தை!! நம் வாழ்க்கைச் சுழல் பூமியின் சுழல் வேகத்தை விஞ்சி எங்கோ சென்றுவிட்டதன் விளைவு.. கடிகார நொடிமுள்ளும்... காலண்டர் தினங்களும் தடதடத்து ஓடும் பிரமை வருடந்தோறும் தொடர்கிறது!!

எல்லா பக்கமும் ஜனவரி முதல் இன்றுவரை நடந்த சம்பவங்கள் எல்லாம் விடாது அசைபோடப் பட்டுக்கொண்டிருக்கிறது!! ஒட்டுமொத்தமாகக் கடந்த 365 நாட்களில் பதிவுகொள்ளப் பட்ட வெற்றி, தோல்விகளின் மொத்தக் கணக்கை உலகம் சரிபார்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை... இதில் என் கவனத்தைக் கவர்ந்த சில வெற்றிகளையும் தோல்விகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.....  

அதற்குமுன் ஒரு விஷயம்....

இந்த வெற்றி, தோல்விகளுக்கு இடையே, இந்த வருடம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் முக்கியமான பாடம் ஒன்று உள்ளது.... "வென்றது என்று அறிவிக்கப் படுவதெல்லாம் வெற்றியல்ல... " என்பதுதான் அது... !! 

ஆம்... வெற்றிகளிலேயே பலவகைகள் உண்டு.. அதிலும் சுத்தமான சில வெற்றிகளும், பெருமைக்குரிய சில‌ தோல்விகளும் உலகில் உள்ளன என்பதை முன்பைவிட ரொம்பவே தெளிவாக உணர்ந்து ஊர்ஜிதம் செய்துகொண்டது இந்த வருடம்தான்!! 

இனி சில வெற்றிகளும் தோல்விகளும்...  

ஏ.ஆர் ரகுமான் ‍ - உன்னத வெற்றி :

"ரோஜா" காலங்களில் எஸ்.பி.பி ஒருமுறை ரஹ்மானிடம் "சாதிச்சுட்டப்பா.." என்கிற ரீதியில் பேசியபோது.. "இங்கே போட்டிகள் ரொம்பப் பெருசு... ஓர் ஐந்து வருடம் இந்தக் களத்தில் தாக்குப் பிடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்" என்று பதில் சொன்னாராம்..... அதே ரஹ்மானிடம் "உயிரே" சமயம் அதே கேள்வியை எஸ்.பி அவர்கள் மீண்டும் நினைவூட்டியபோதும் ரஹ்மான், " இறைவன் எனக்கு இன்னும் கொஞ்சம் கிரேஸ் பீரியட் கொடுத்திருக்கிறார் போல!" என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்!!  

ரகுமானின் கூற்று அவரது தன்னடக்கத்தைக் காட்டினாலும்.... அவர் சொல்லியிருப்பதில் ஓர் அழுத்தமான உண்மை உள்ளதை மறுக்க முடியாது! விடாத உழைப்பிற்கும், மங்காத திறமைக்கும் அவ்வப்போது கிடைக்கும் இளைப்பாறல்தான் "வெற்றிகள்" ஒரு வெற்றிக்கு செலவிட்ட உழைப்பு இன்னொரு வெற்றியைப் பெற்றுத்தராது!! அதைவிட அதிக உழைப்போடும் தேடலோடும் களத்தில் முன்பைவிட வேகமாக மீண்டும் முதலிலிருந்து துவங்கினாலே மீண்டும் வெற்றி கிட்டும்..... இதற்கு சரியான உதாரணம் ஏ ஆர் ரஹ்மான்!! 

முதல்படத்திலேயே தேசிய விருதுடன் ஆட்டத்தைத் துவக்கிய இசைப்புயல் அடுத்தடுத்து கண்டது வெவ்வேறு களங்கள்... முற்றிலும் வேறு இலக்குகள்... பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒவ்வொரு களத்தையும் சரியாகப் புரிந்துகொண்டுத் தன்னை அவற்றுக் கேற்றவாறு சிறிதும் பிசகாமல் மாற்றியமைத்துக் கொண்டு, உழைப்பிலும் தன் கவனத்திலும் சிறிதும் குறைவைக்காமல் அடுத்தடுத்த களங்களுக்கு வெற்றிநடையைத் தொடர்ந்த நம் ஏ ஆர் ரகுமான் நீண்ட நாட்களாக இந்திய சினிமா ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை ஒன்றுக்கு இரண்டாக அள்ளிக் கொண்டுவந்தார்!!.. அப்படி வந்தபோதும், தொடரும் தன் இசைவாழ்விலும் இன்னும் அதே ரகுமானாகத்தான் இருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு!! வெற்றிகளாலும் தோல்விகளாலும் மாறாதவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கும் சரியான உதாரணம்: ஏ ஆர் ரஹ்மான்!! :) 

ரஹ்மானின் 2009ஆம் ஆண்டு வெற்றி குறுக்கு வழியின்றி முழுக்க முழுக்க உழைப்பால் பெற்ற உன்னதமான வெற்றி என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது!!  

சன் பிக்சர்ஸ்!! - __________ வெற்றி  :

"கலாநிதி மாறன் வழங்கும்" என்று டைட்டிலுடன் இந்த வருடம் எட்டு படங்கள் வெள்ளித்திரையிலும் அதற்கு எட்டு லட்சம் டிரெய்லர்கள் சின்னத் திரையிலும் திரைகண்டன!! கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தனையுமே வெற்றிப் படங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை..!! அதாவது... ஒரு திரைப்படமானது எடுத்தவர்க்கும், எடுத்த படத்தை அப்படியே விலை கொடுத்து வாங்கியவர்க்கும் போட்ட காசைவிட ஏதாவது ஒரு வழியில் போட்டதைவிட அதிக லாபத்தைப் பெற்றுத் தந்தால் "வெற்றி" என்ற நியதி உண்மையென்றால் சன் பிக்சர்ஸின் படங்கள் எல்லாமே வெற்றிகள்தான்!! ஆனால் அதையும் தாண்டி "கனவு தொழிற்சாலை" , "கலைக்குடும்பம்" என்றெல்லாம் (ஒரு காலத்தில்) அழைக்கப் பட்டது நம் தமிழ் சினிமா... இப்போது சினிமா... ஜஸ்ட் பிசினஸ்!!  

இதுவும் வெற்றிதான் ஆனால் எப்படிப் பட்ட வெற்றியென்று நீங்களே கோடிட்ட இடத்தில் ஒரு வார்த்தையைப் போட்டுக் கொள்ளுங்கள் (அந்த நேரமும் உங்கள் டி.வி "புலி உருமுது... புலி உருமுது.. " என்று மிரட்டிக் கொண்டிருக்கும்!!) 

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" - அழகிய வெற்றி :

(2009 தமிழ்ப்படங்களில் என்னுடைய ஹிட்லிஸ்ட்!!  

ரசித்துப் பார்த்தவை : " பசங்க", " யாவரும் நலம்" , "உன்னைப்போல் ஒருவன்" , " நாடோடிகள்" , "ஈரம்" மற்றும் சில..  

கொடுமைகள் : "கந்தசாமி", "வில்லு", "வேட்டைக்காரன்", "அயன்", "ஆதவன்", "படிக்காதவன்", "எஸ் எம் எஸ்" மற்றும் பல....)  

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" என்னைப் பொறுத்தவரை கோடம்பாக்கம் கொடுத்த அழகிய வெற்றிகள்!! (உன்னைப்போல் ஒருவன் ரீமேக் என்பதால் விடுபடுகிறது!!)  

"பசங்க" : 
தயாரிப்பாளர் சசிகுமாரின் அற்புதமான தேர்வு!! சசிகுமார் அன்ட் கோ வின் அலட்டிக்கொள்ளாமல் அடித்த‌ இன்னுமொரு அழுத்தமான வெற்றி!! உலக சினிமாக்களின் பாதிப்பு, எதையும் சாத்தியமாக்கிக் காட்டும் தொழில்நுட்பம், விதிகளை மாற்றிக் கொண்டிருக்கும் புதிய மார்க்கெட்டிங் முறை என்று பல உக்திகளை நம்பிக்கொண்டு எங்கெங்கோ கதை தேடும் மற்ற மேக்கர்களுக்கு இடையே..... நமக்குள்ளும், நமக்குக் கொஞ்சம் தள்ளி அக்கம் பக்கத்திலும் புரளும் சாதாரண உணர்வுகளை மற்றும் சுற்றியுள்ள உலகு என்னதான் மாறினாலும் மாறாத ஒரே நிதர்சனமான சிறுவர் உலகை அப்படியே அச்சு அசலாகப் பிடித்துக் கொடுத்து பாண்டிராஜ் வெற்றிக் கோப்பையை லாவிக்கொண்டு சென்றது உண்மையிலேயே ரொம்ப அழகுதான்!!  

யாவரும் நலம்: "அயன்" போன்ற படங்களைப் பார்த்தபோது.... தமிழ்சினிமா டெக்னாலஜியின் வீச்சும், மார்க்கெட்டிங்கின் முக்கியத்துவமும் தெளிவாகத் தென்பட்டன.... அப்போது மனதில் பட்ட ஒருவிஷயம்..... 

"இப்போது நம்மிடம் இருப்பது புதுமையான, உலகத்தரம் வாய்ந்த கேமரா... அடுத்த தலைமுறை தொழில் நுட்ப சாதனங்கள், உலகத்தர நிபுணர்கள்... என எல்லாம் மாறிவிட்டது ஆனால் கதைகளை எழுத மட்டும் அதே அந்தப் பழைய பேனாவையும், கெட்டுப் போன இங்கையும் தான் தூக்கியெறிய மறந்துவிட்டோம்"  என்று தோன்றியது!  

ஆனால் முற்றிலும் புதிய கதையுடன் வந்து அடித்து ஜெயித்த விக்ரம்குமாரின் வெற்றியும் சந்தேகமில்லாமல் ஓர் அழகிய வெற்றிதான்!! நல்ல சினிமா எடுக்க‌ எத்தனை எத்தனையோ வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும், "திரைக்கதை" என்னும் மந்திரம் மட்டுமே போதுமானது அல்லது அதுதான் பிரதானமானது என்று ஓங்கியடித்துக் கூறிய படம்.. படம் ஹாலிவுட்டுக்குப் போகுதாமே... சிம்ப்ளி சூப்பர்ப்!! :)  

விஜய் - தொடர் தோல்வி  :

2009ல் ரொம்பவும் ரிவிட்டு வைத்தது திரையுலகைப் பொறுத்தவரை விஜய்க்குதான் என நினைக்கிறேன்  

"வாழ்வின் பொருள் என்ன.. நீ வந்த கதை என்ன.."  

ஏனோ எனக்கு இந்த பழைய பாடல் வரிதான் நினைவில் ஒலித்தது விஜய் தன் அரசியல் முயற்சிகளை இந்த ஆண்டு அறிவித்தபோது!! 
ரஜினி, கமல் உட்பட எல்லா நடிகர்களுக்குமே சில வெற்றிகள்தான் அவர்களை நிலை நிறுத்தியிருக்கும்... ஆனால் தொடர் தோல்விகளால் நிலை நிறுத்தப் பட்ட ஒரே "ஸ்டார்" ஹீரோ விஜய் என்றுதான் நினைக்கிறேன்!! " நாளைய தீர்ப்பு" துவங்கி "காலமெல்லாம் காத்திருப்பேன்" வரைக்கும் தொடர்ந்து எத்தனை தோல்விகளைத் தாங்கினார் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்!! எப்படியோ சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்தாகி விட்ட நிலையில்.... ரொம்பவே அசால்டாக அரசியல் பக்கம் போய் அடிமேல் அடி வாங்கி இவ்வருடத்தை முடித்திருக்கிறார் விஜய்!! 

"ஒருதடவ முடிவு பண்ணிட்டா தன் பேச்சைத் தானே கேட்காத" போக்கிரியார், யார் பேச்சைக் கேட்டு "வில்லு", "வேட்டைக்காரன்" படங்களைத தேர்வு செய்தார் என்பதுதான் ஒரே கேள்வி.... அப்படி ஒருவர் இருந்தால் விஜய் அவரை, "தமிழ் நாட்டுல என்னை மரண அடி அடிச்ச மொத ஆள் நீங்கதாங்ணா.." என்று சொல்லி ஒரு ஃபோட்டோ எடுத்துவைத்துக் கொள்ளலாம்..... விஜய்யைப் பொறுத்தவரை யாரு அடிச்சா பொறிகலங்கி பூமி அதிருரது கண்ணுல தெரியுமோ அதுதான் 2009!!  

தன் பொதுவாழ்வின் பெரிய தோல்விகளைத் தொடர்ச்சியாக‌ சந்தித்திருக்கிறார் விஜய்.... அவருக்கு 2010க்கு குட்லக்!! 

ராமதாஸ் - பலநாள் ஒத்திவைக்கப்பட்ட பெரிய தோல்வி

ஏனோ சிலர் தோற்கும்போது மனது சந்தோஷப் படுகிறது.... !! ஹி ஹி

ஒரு காலத்தில் ரஜினியுடன் வீண் மல்லுக்கட்டிய போது "ரஜினி ஒரு பலூன்.. "டொப்" அதன் காற்றைப் போக்கியாச்சு" என்று ஸ்டைலாக சொன்னவரின் நிலை "எப்புடி இருந்த நான் இப்புடி ஆகிட்டேன்" என்பதுதான்!! 

"சூரியன்" சுட்டு விட்டால் "அன்பு சகோதிரி" , "சகோதிரியுடன் சண்டையென்றால் மீண்டும் சூரியன்"என்றே இத்தனை வருடம் இருந்த தீராத தலைவலிக்கு, ஒருவேளை சூரியனும், இலையும் சேர்ந்து கைவிரித்தால் என்ன ஆகும்? என்று எப்படியோ 2009ல் கழகங்களுக்குத் தோன்றிவிட, கசப்பான மருந்து கொடுத்து தலைவலி அடக்கப் பட்டிருக்கிறது!! விளைவு...மாம்பழம் சீசனிலாமல் தவிக்கிறது.... 

ஜாதி அரசியல், மரங்களை வெட்டியது, கூட்டணி கேம் ஆடியது, மகனை அரசியலில் திணித்தது.. என அப்போதெல்லாம் தப்பித்து நீண்ட ஒத்திவைப்புக்குப் பின் மருத்துவருக்குக் கிட்டியிருக்கும் பெரிய தோல்வி இது....  

2010ல் மீண்டு வர வாய்ப்பு இல்லாமலும் இல்லை!! பார்ப்போம்!! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....  

அழகிரி - போட்டியில்லா வெற்றி

சினிமாவில் கலாநிதி மாறன் என்றால், இடைத்தேர்தல்களில் அழகிரி!!

2009 முழுதும் அவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்..... ஆனால் அவர் லேசாகத் தொட்டவற்றையெல்லாம் பின்னாலேயே பணமும், பவரும் அழுத்தித் தொட்டிருப்பதை மறைக்கவியலாது, மறைக்க யாரும் முயலக்கூட இல்லை!! 

காசு கொடுத்தால் மட்டும் வோட்டு விழுந்திடுமா?? ஏன் மற்றவர்கள் காசு கொடுத்ததில்லையா?? என்றெல்லாம் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன... பதில்... இவர் தேர்தலின்போது மட்டும் பாய்ந்துவிட்டு மற்ற நாட்களில் கொடநாடு போய்த் தூங்குவதில்லை... நல்லதோ கெட்டதோ 2009 முழுதும் விடாது எதிர்முகாம்களின் வேர்களில் வெந்நீரைப் பாய்ச்சிக் கொண்டேதான் இருந்தார்.... விளைவு.. கட்டதுரைகளெல்லாம் தாய்க்கழகம் திரும்பிவிட எதிர்த்தது எல்லாமே கைப்புள்ளகள் தான்!! 

கட்- அவுட் ஹீரோவுக்கு சொல்லிக் கொள்ளுமளவு பலமான வில்லன் யாரும் திரையில் வரவேயில்லை 2009ல்.... 2010ல் பார்ப்போம்... மதுரை தேர்தலில் இவருக்குத்தான் நான் வாக்களித்தேன் என்பது பின்குறிப்பு!!  

தோணி - ஆரோக்யமான வெற்றி

ப்ளேயர் ஆஃப் தி இயர் ICC விருதை 2008ஐத் தொடர்ந்து 2009லும் ஒருநாள் போட்டிகளுக்காகப் பெற்றிருக்கிறார் கேப்டன் கூல்!! கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நம்பர் ஒன் அணியாக இந்தியா டெஸ்ட் அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது.. கிரிக்கெட் என்பது பதினோரு பேர் சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டு என்ற உண்மையையே இந்திய அணியும் சரி பிசிசிஐயும் சரி புரிந்து கொண்டது 2009ல் தான் என்று சொன்னாலும் தகும்!! இக்கட்டான சூழ்நிலைகளிலும் அழுத்தத்தை மொத்தமாகத் தானே தனியாக சுமந்து கொள்வதும், கேப்டன், விக்கெட் கீப்பிங் என்று பொறுப்புகள் இறுக்கினாலும் பேட்டிங்கில் இன்றும் வலிமை குறையாமல் பார்த்துக் கொள்வதும் தோணியின் ஆரோக்யமான வெற்றிக்கு அரிச்சுவடிகள்.... அப்படியே 2010லும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்!!  

இன்னும் இன்னும் நிறைய வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன..... நேரமிருந்தால் 2009ன் இன்னும் சில வெற்றி தோல்விகளும் தொடரும்!!


புத்தாண்டு வாழத்துக்களுடன்,



Thursday, December 10, 2009

அஜீத் & மீடியா


சென்றவார விகடனில் கவனித்த ஒரு பகுதி........ 

"பில்ட் அப் வேண்டாம்.: அஜீத் எச்சரிக்கை"  

சென்ற வாரத்துக்கான விகடனின் விளம்பரங்கள் அனைத்திலுமே இந்தக் கட்டுரை ஹைலைட் செய்யப் பட்டிருந்தது.... ரஜினியின் அட்டைப்படம் வேறு.....ஆக‌ இந்தவாரம் விகடன் செம சேல்ஸ்தான்.... என்று நினைத்துக் கொண்டு விகடனைத் திறந்தேன்....  

"என்ன... மறுபடியும் அஜீத் "எச்சரிக்கைகள்" விடுக்க ஆரம்பித்து விட்டாரா??"  

என எண்ணிதான் அந்தப் பேட்டியைப் படித்தேன்... படித்தபின் தலையில்தான் அடித்துக்கொள்ளத் தோணியது..... அது அஜீத்தின் பேட்டியே அல்ல!!! "அசல்" பட‌ இயக்குனர் சரணின் பேட்டி!!  

சரி அஜீத் ஏதேனும் "எச்சரிக்கை" விடுத்திருக்கிறார் என்று சரணாவது சொல்லியிருக்கிறாரா ?? என்று பார்த்தால் அதுவும் இல்லை....சரணையாவது தனிப்பட்ட முறையில் அஜீத் எச்சரித்திருக்கிறாரா என்றால் அப்படியும் இல்லை...... அட விடுங்க.... அஜீத் தன்னிடம் சொன்னதாக சரண் அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கும் அந்த வார்த்தைகளையே பாருங்க......  

// 'மக்கள்ல ஒருத்தனா என்னைக் காட்டுங்க. ப்ளீஸ்.... அநாவசியமான பில்ட் -அப் வேண்டாம்'னு என் தோள் மேல கை போட்டுச் சொன்னார் அஜீத்.//  

இது எப்படி பாஸ் "எச்சரிக்கை" ஆகும்??? பாவம் மனிதர் ஃப்ரண்ட்லியாக ஒரு வேண்டுகோள்தானே வைத்திருக்கிறார்....

பொதுவாகவே கவனித்திருக்கிறேன்........ சிலகாலம் முன்பு , எங்கெல்லாம் அஜீத்தின் பேட்டி வெளிவருகிறதோ.. அதற்குக் கீழ் எப்போதுமே "அஜீத் ஆவேசம்"...... "அஜீத் குமுறல்".... "உருமல்".... "எச்சரிக்கிறார் அஜீத்...... கொதிக்கிறார் அஜீத்" என்றெல்லாம் tags இருக்கும்..... அந்த பேட்டிகளையெல்லாம் படித்ததாக நினைவு இல்லை.......... ஆனால் ஒருமுறை சேனல் பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவரிடமே ஒரு கேள்வி கேட்கப்பட்டது.... அதற்கு அவர்....  

" நானும் கவனித்திருக்கிறேன்... ஆனால் அந்தப் பேட்டிகளின் தலைப்புதான் அப்படிச் சொல்லும் அதையே உள்ளே வாசிச்சுப் பார்த்தீங்கன்னா.... அது ஒரு குமுறலாகவோ, எச்சரிக்கையாகவோ, ஆவேச உரையாகவோ இருக்காது.... நார்மலாதான் பேசியிருப்பேன்....சினிமா ஜர்னலிசத்துக்கு பரபரப்பு அவசியம் ஸோ நான் அவங்கள சொல்லி ஒண்ணும் இல்ல!!"

என்று ரொம்பவே பக்குவமாக, கேஷுவலாகச் சொன்னார் அஜீத்!! அவரின் அந்தப் பேச்சும் அணுகுமுறையும் என்னைக் கவர்ந்திருந்த‌ காரணத்தினால்தான் இந்த "எச்சரிக்கை"யைப் படித்ததும் பகிர்ந்துகொள்ள விழைந்தேன்...  

இந்தியக் கிரிக்கெட் அணியின் Assertive Captain (Sometimes Aggressive too!!) சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் கேரியரிலும் அவர் பேசியவற்றாலும், பேசியவ‌ற்றில் ரெண்டு மூன்று ஸ்பூன்கள் 'மிர்ச்சி' சேர்த்து மீடியாக்கள் ரிப்போர்ட் செய்ததாலுமே பல சிரமங்களுக்கு ஆளானார்.... சில சமயங்களில் அஜீத்திடமும், கஙகுலியிடமும் Personality ரீதியிலான சிற்சில ஒற்றுமைகளை அவ்வப்போது கவனித்திருக்கிறேன்...... ஆனால் கங்குலி மீடியாக்களிடம் often over exposed.... ஆனால் அஜீத்தோ அந்த விஷயத்தில் கொஞ்சம் ரிசர்வ்ட்தான்.... ஆனாலும் இருவருமே மீடியாக்களுக்கு எக்குத்தப்பாகத் தீணி போட்டவர்கள்!!

எது எப்படியோ... மீடியா என்னும் வார்த்தையின் அர்த்தம் "ஊடகம்".... "ஒலி"க்கு ஊடகம் காற்று... தாங்கிச் செல்ல காற்று எனும் "ஊடகம்" இருந்தால்தான் மலைமேல் நின்று கத்தினாலும் நம் ஒலி ஊருக்குக் கேட்கும்... பத்திரிக்கை, டி.வி போன்ற ஊடகங்கள் எல்லாம் காற்றைப் போலத்தான் செலிபரிட்டிகளுக்கு!! தான் தாங்கிவரும் செய்தி உண்மையா? பொய்யா? சாதகமா? பாதகமா? என்றெல்லாம் காற்றுக்குத் தெரியாது. (ஆனால் காற்று, தன்னிடம் சொன்னதை என்றும் திரித்து சொல்லாதுதான்!!!) கேட்கும் நம் காதுகள்தான் பகுத்துப் பார்க்க (பார்த்துத் தொலைய) வேண்டும்....  

அடுத்து "அஜீத் கர்ஜனை" என்று ஒரு பேட்டி வந்தாலும் நிச்சியம் வாங்கிப் படித்துப் பார்த்தால்தான் அது உண்மையான "கர்ஜனை"யா?? என்று தெரியும், அதுவும் அந்த பத்திரிக்கைக்கு லாபம்தான்!! ஆக எப்ப‌டி பாத்தாலும் அவர்கள் வியாபாரம் சக்சஸ்தான்.....!!  

ஆகமொத்தம் தமிழனுக்கு........ மெய்ப்பொருள் காண்பது "செலவு"!!
ஹ்ம்ம்ம்ம்.... என்னா வில்லத்தனம் :)  

(பிரபலங்களின் பேட்டிகளை விரும்பிப் படிப்பதும், Perrsonality Watching கிலும் ரொம்பவே ஈடுபாடு எனக்கு... அந்த வகையில் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள எண்ணினேன்....)


அன்புடன்,


Monday, August 17, 2009

ஒரே ஒரு சச்சின்..எத்தனை வினோத் காம்ப்ளிகள்?? -- 2



சென்ற‌ இடுகையின் தொட‌ர்ச்சி....

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்திய 1996ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு ஒரு வலிமை வாய்ந்த அணியாகத்தான் களம்கண்டது இந்தியா. கென்யாவுடனான முதல்போட்டியில் 127 ரன்கள் குவித்துக் கலக்கினார் சச்சின்.. கடுமையான பயிற்சி, இலக்குகளின் மீதான சிதறாத கவனம் என சச்சின் அந்தக் காலகட்டத்தில் தனது விஸ்வரூபத்தைத் துவக்கிவிட்டிருந்தார்.... காம்ப்ளியோ ஒரு காதில் கடுக்கன், ஒட்ட வெட்டிய தலைமுடி,ஃப்ரெஞ்ச் தாடி, அவரின் டிரேட் மார்க்காகிப் போயிருந்த தங்க நகைகள் என வித்தியாசமான உருவம் தரித்துப் போயிருந்தார்....

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சச்சின் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த சூழ்நிலையில் ஆட்டம் மெல்ல வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமாக நகரும் சூழ்நிலை... சித்து, அசார், சச்சின் அடுத்தடுத்து அவுட்டாகிவிட மனோஜ் பிரபாகர் ஒரு முனையில் மறுமுனையில் காம்ப்ளி.... க்வாலியரில் நடந்த மேட்சில் பிரபாகரைக் கூட நம்பும் மக்கள் காம்ப்ளியை நம்பவில்லை அந்தளவு விளையாட்டில் கவனமின்றி அதிருப்தி சம்பாதித்து வைத்திருந்தார்... ஒரு கட்டத்தில் பிரபாகரும் அவுட்டாகிவிட... மோங்கியாவும், காம்ப்ளியும் நிற்கிறார்கள் கர்ட்லி அம்புரோஸ் பந்துவீச வர ரசிகர்கள் நகம் கடித்துக் கொண்டிருந்தனர்.... காம்ப்ளியை நோக்கி அம்புரோஸ் வீசிய பவுண்சரை லெக் திசையில் ஹூக் செய்து சிக்ஸராக்கினார் காம்ப்ளி.... புத்துணர்வுடன் ஆடி (33ரன்கள்*) வெற்றியும் தேடித்தந்தார்!! காம்ப்ளியின் கம் பேக் (come back) என மகிழ்ந்தது இந்தியா!!

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டி ச‌ச்சின், காம்ப்ளியின் சொந்த‌ ம‌ண்ணாம் வான்க‌டே மைதான‌த்தில்... இந்தியா தோல்விய‌டைந்த‌ இந்த‌ப் போட்டியில் ச‌ச்சின் க‌டுமையாக‌ப் போராடி 90ர‌ன்க‌ள் குவித்தார் காம்ப்ளியோ ட‌க்-அவுட் ஆகிவிட்டு அல‌ட்சிய‌மாக‌ப் பெவிலிய‌ன் திரும்பினார்.... க‌டும் அவுட் ஆஃப் ஃபார்மினால் அதிக‌ப்ப‌டியான‌ விம‌ர்ச‌ன‌த்துக்குத் தின‌ம் ஆளாகிவ‌ந்த‌ காம்ப்ளி தான் ஒரு சாதார‌ண‌மான‌ குடும்ப‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர் என்ப‌தையெல்லாம் ம‌ற‌ந்துவிட்டு ஏதோ ஒரு ஹாபி போல‌க் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த‌து தேர்வுக் குழுவின‌ரைக் கூட‌ எரிச்ச‌லுக்குள்ளாக்கிய‌து... ஜிம்பாப்வேக்கு எதிரான‌ ஆட்ட‌த்தில் அதிர்ச்சியாக சச்சின் 3 ரன்களுக்கு போல்டாகிவிடத் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தவித்த அணியை 106ரன்கள் அடித்து மீட்டார் ஆட்ட நாயகன் காம்ப்ளி....

அதன்பின் காலிறுதியில் அதிரடியாகப் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி சென்ற இந்திய அணி தன் வ‌ர‌லாற்றின் க‌ருப்புதின‌மாக‌, இல‌ங்கைக் கெதிராக‌ ஈட‌ன் கார்ட‌ன் மைதான‌த்தில் ந‌ட‌ந்த‌ ஆட்ட‌த்தைப் ப‌திவுசெய்த‌து.... இந்தியா வெறும் 120 ர‌ன்க‌ளுக்கு 8 விக்கெட்டுக‌ள் இழ‌ந்த‌ நிலையில் க‌டுப்ப‌டைந்த‌ ர‌சிக‌ர்க‌ள் ர‌க‌ளையில் ஈடுப‌ட‌, காம்ப்ளி க‌ண்ணீர் சிந்தி அழுத‌வாறே மைதான‌த்தைவிட்டு வெளியேறினார்.... இந்தியா தோல்விய‌டைந்த‌து.... ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் அர‌ங்கில் இத்த‌னை பெரிய‌ அவ‌மான‌ம் ஏற்ப‌ட்டுவிட்ட‌தைத் தொட‌ர்ந்து க‌டுமையான‌ சில‌ முடிவுக‌ளைத் தேர்வுக்குழு எடுக்கத் த‌யாரான‌து.... "குட் ஸ்டூட‌ண்ட்" ஆக‌ எல்லார் ந‌ன்ம‌திப்புக‌ளையும் பெற்றிருந்த‌ "ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம்" ச‌ச்சின் அணியின் கேப்ட‌ன் ஆனார்... அனைத்துத் த‌ர‌ப்பின‌ரின் கோப‌ம் ம‌ட்டும் அவ‌ந‌ம்பிக்கைக்கு ஆளாகிப் போயிருந்த‌ காம்ப்ளி அணியிலிருந்தே நீக்க‌ப்ப‌ட்டார்...

அந்த‌ சூழ்நிலையில் கூட‌ விழித்துக்கொண்டு உத்வேக‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டிருந்தால் அணிக்குள் மீண்டு வ‌ந்திருக்க‌லாம் ஆனால் அவ‌ரோ ஃபோர் ஸ்க்ய‌ர், செவ‌ன் அப் என‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் த‌ன்னை பிஸியாக்கிக் கொண்டார்... அல‌ட்சிய‌த்தின் மொத்த‌ உருவாகிப் போன‌ காம்ப்ளிக்குக் க‌டைசிவ‌ரைக் கைகொடுத்த‌து உண்மை ந‌ண்ப‌னாக‌ இருந்த‌ ச‌ச்சின்தான். காம்ப்ளிக்காக‌த் தொட‌ர்ந்து போராடி மீண்டும் அணியில் இட‌ம் வாங்கிக் கொடுத்தார்... ப‌ல‌னில்லை... பின்னொரு க‌ட்ட‌த்தில் காம்ப்ளி ப‌ழைய‌ சேட்டைக‌ளைக் குறைத்துக் கொண்டு பொறுப்பான‌ ஆட்ட‌க்கார‌ராக‌ ச‌ச்சின் கொடுத்த‌ தைரிய‌த்தில் அணியில் இண்டிபெண்ட‌ன்ஸ் க‌ப், ச‌ஹாரா க‌ப், பாகிஸ்தான் ப‌ய‌ண‌ம் என‌ வ‌ந்துகொண்டிருந்த‌ போது... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ ஓர் ஆட்ட‌த்தில் ப‌ந்தைத் த‌டுக்கையில் கால் எலும்பு முறிவுக்கு ஆளானார்.... அத்துட‌ன் முடிந்துபோன‌து அவ‌ர‌து கிரிக்கெட் வாழ்க்கை.... க‌ங்குலி, டிராவிட், ராபின் சிங் என‌ இவ‌ர் இட‌த்துக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் தொழிலில் மிகுந்த‌ சிர‌த்தையாக‌த் த‌ங்க‌ள் இட‌த்தைத் த‌க்க‌வைத்துக் கொள்ள‌க் காம்ப்ளியோ த‌ன் ஒழுங்கீன‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் அற்புத‌மான‌ திற‌மையையும், க‌டின‌ உழைப்பையும், ர‌சிக‌ர்க‌ளின் எதிர்பார்ப்புக‌ளையும், நண்பன் ச‌ச்சின் க‌டைசிவ‌ரை கொடுத்த‌ ஊக்க‌த்தையும் எல்லாவ‌ற்ற‌வையும் ஒருங்கே கோட்டைவிட்டு இன்று கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் துவ‌ங்கி அந்த‌ விழாவிலேயே த‌ன் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வுபெறுவ‌தாக‌ எவ்வித‌ப் ப‌ர‌ப‌ர‌ப்புமின்றி அறிவித்திருக்கிறார்!!

ஒரு தோற்றுப்போன‌ ஒருவ‌னைப் ப‌ற்றி, ஒரு சாதார‌ண‌ப் பெட்டிச் செய்தியை எத‌ற்கு இவ்வ‌ள‌வு விரிவாக‌ எழுத‌வேண்டும் என்று நிச்சிய‌ம் தோன்றலாம்... அத‌ற்கான‌ கார‌ண‌ம்.... ந‌ம்மிடையே ஓரிரு ச‌ச்சின்க‌ளைத் தான் காண‌முடியும் ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ ந‌ம் எல்லோருக்குள்ளுமே எண்ண‌ற்ற‌ வினோத் காம்ப்ளிக‌ள் இருக்கிறார்க‌ள்.... வாழ்வில், இல‌க்கில் க‌வ‌ன‌மின்றி, சின்ன‌ச் சின்ன‌க் க‌ளிப்புக‌ளில் க‌வ‌ன‌மிழ‌ந்து ந‌ம்முன் நாமே வைத்து நட‌க்க‌த் துவ‌ங்கிய‌ இல‌க்கு நோக்கிய‌ ப‌ய‌ண‌ங்க‌ளில் பிச‌கும்போது ஒவ்வொரு முறையும் நினைத்துப் பார்க்க‌ வேண்டிய‌ விளையாட்டு வீர‌ர் ந‌ம‌து வினோத் காம்ப்ளி.... காம்ப்ளியின் க‌தையிலிருந்து பாட‌ம் க‌ற்றுப் ப‌ல‌ ச‌ச்சின்க‌ள் ப‌ல்வேறு துறைக‌ளிலும் உருவாக‌ வேண்டும்.... சுக‌வாசம் ப‌ழ‌கிவிட்டால் வாழ்வில் வ‌ன‌வாச‌ம் வ‌ந்தே தீரும் என்று எங்கெருந்தோ ம‌வுன‌ சாட்சியாகியிருக்கிறார் காம்ப்ளி....

அவ‌ரின் எதிர்கால‌ செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்பாக‌ இருக்க‌ வாழ்த்துவோம்!

பிர‌பு எம்

ஒரே ஒரு ச‌ச்சின்.. எத்த‌னை வினோத் காம்ப்ளிக‌ள்??



செய்தி: வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்...

37 வயதாகிவிட்ட வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு நாள் ஓய்வில்தானே இருந்தார் என்று மனதில் கேள்வி எழுந்தால் ஆச்சர்யம் அல்ல... அவர் கடைசியாக இந்தியாவுக்காக ஆடியது 2000ம் ஆண்டில்! ச‌ச்சின் ஒரு ச‌காப்த‌ம் என்றால் அவ‌ருட‌ன் இணையாய்க் கிள‌ம்பிய‌ காம்ப்ளி வெகுசீக்கிர‌ம் ம‌ற‌ந்துபோய் விட‌க் கூடிய‌ ஒரு வ‌ர‌லாறாகிப் போன‌த‌ற்கு முழுப்ப‌ங்கும் அவ‌ரையே சாரும்... ச‌ச்சினின் க‌தையைப் போல் காம்ப்ளியின் க‌தையும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து... இவ‌ர்க‌ளின் எழுச்சியையும், காம்ப்ளியின் வீழ்ச்சியையும் அவை சொல்லும் பாட‌த்தையும் ப‌திய‌ முனைகிறேன்.....

குட்டிப் புயல்களாய் சச்சினும் காம்ப்ளியும் பள்ளிக் கிரிக்கெட்டில் 664 ரன்கள் குவித்து உலகசாதனை புரிந்தனர்... அடுத்த சில நாட்களிலேயே சச்சின் எனும் இளம்புயல் சர்வதேச கிரிக்கெட்டில் மையம் கொண்டது... சச்சின் எனும் ஒரு வரலாறு விதையாகி வேறூன்ற ஆரம்பித்திருந்த நாளில் மூன்று வருடம் கழித்து ஷார்ஜாவில் நடந்த விலஸ் டிராபி'91ல் பெவிலியனில் இருந்து புது பேட்ஸ்மேனாகக் கள்மிறங்கினார் வினோத் காம்ப்ளி... அதே போட்டியில் இந்திய அணியில் களம்கண்ட இன்னொரு புதுமுகம் ஜவகல் ஸ்ரீநாத்!!

ஆர‌ம்ப‌த்தில் த‌டுமாறினாலும் மிக‌விரைவில் ச‌ர்வ‌தேச‌ ஆடுக‌ள‌த்தைப் புரிந்துகொண்டு துடிப்பான‌ இளைஞ‌னாக‌ ஜொலிக்க‌த் தொட‌ங்கிய‌ காம்ப்ளியும், "எவர்கிரீன் அட்ராக்ஷன்" ச‌ச்சினும் இந்திய‌ அணியின் அப்போதைய‌ ர‌ஜினி-க‌ம‌ல் ஆனார்க‌ள்!! ஆஸ்திரேலியாவிட‌மும் பாகிஸ்தானிட‌மும் த‌வ‌றாம‌ல் ம‌ர‌ணஅடி வாங்கும் அன்றைய‌ இந்திய‌ அணியில் ஸ்ரீகாந்துட‌ன் சித்துவோ அல்ல‌து ர‌விசாஸ்திரியோ துவ‌க்க‌ ஆட்ட‌க்காரராக‌க் க‌ள‌மிற‌ங்குவ‌ர்... அதிர‌டி ஸ்ரீகாந்த் அவுட் ஆகிவிட்டால் அடுத்து க‌ள‌மிற‌ங்குப‌வ‌ர் கேப்ட‌ன் அசாருதீன்... அடுத்த இடமான பொறுப்பான 2- டவுனை (2-down) நீண்ட‌ நாட்க‌ளாக‌ ஆக்கிர‌மித்துவ‌ந்த‌ ச‌ஞ்ச‌ய் ம‌ஞ்ச்ரேக்க‌ரிட‌மிருந்து ச‌ச்சினுக்கு முன்பாக‌வே ப‌றித்துவிட்டார் காம்ப்ளி.... அசார்-காம்ப்ளி இணை அணியை ச‌ரிவிலிருந்து மீட்கும் வ‌லுவான‌ மிடிலஆர்டர் அஸ்திரமாகப் ப‌ல‌முறை புக‌ழ‌ப்ப‌ட்ட‌து.... அசார், காம்ப்ளி, ம‌ஞ்ச்ரேக்க‌ர் ஆகியோருக்கு அடுத்துக் க‌ள‌மிற‌ங்குவ‌தால் ச‌ச்சினால் கபில்தேவோடு இணைந்து நாற்ப‌து ஓவ‌ருக்கு மேலான‌ அதிர‌டி ஆட்ட‌ம் ம‌ட்டுமே ஆட‌ முடிந்தது.... அந்த‌ நேர‌த்தில் இங்கிலாந்திற்கு எதிரான‌ ஹோம்சீரிஸ் ஒன்றில் திடீரென்று த‌ன் முத‌ல் ச‌த‌ம‌டித்துக் க‌ல‌க்கினார் காம்ப்ளி!!

த‌ட‌த‌ட‌வென‌ முன்னேறிய‌ காம்ப்ளி ச‌ச்சினை மெல்ல‌ மெல்ல‌ ஓவ‌ர்டேக் செய்து ஸ்டார் அவ‌தார‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ எடுத்தாகிவிட்ட‌ நாட்க‌ளில் ச‌ச்சினும் காம்ப்ளியும் ப‌ங்குபெறும் பெப்ஸி விள‌ம்பரம் டிவிக்க‌ளில் மிக‌வும் ஹாட்டான‌து!! ஸ்பின்ன‌ர்க‌ளை ச‌மாளித்து ஆடுகையில் காம்ப்ளியின் அபார‌மான‌ ஃபுட் வொர்க் உல‌க‌ம் முழுவ‌தும் பிரிசித்து பெற்றுவ‌ந்த‌து... அதற்கேற்ப ஓர் ஒருநாள் போட்டியில் ஷேன் வார்னின் ஒரே ஓவ‌ரில் காம்ப்ளி அனாய‌ச‌மாக‌ 22 ர‌ன்க‌ளை விளாசித்த‌ள்ளினார்.... 90க‌ளில் ஷேன் வார்ன் ஓர் உயிர்வாங்கும் ப‌ய‌ங்க‌ர‌ சுழ‌ல் அஸ்திர‌ம் என்ப‌தையும், அப்போதைய‌ ச‌ராச‌ரி ர‌ன்ரேட்க‌ள் 3 அல்ல‌து 4 ஆக‌த்தான் இருக்கும் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும்! தொட‌ர்ந்து இர‌ண்டு இர‌ட்டை ச‌த‌ங்க‌ள் அடித்த‌ காம்ப்ளி கிட்ட‌த்த‌ட்ட‌ ச‌ச்சினை முந்திக்கொண்டு அணியில் த‌ன‌க்கென‌ ஓர் த‌னி இட‌த்தை முத்திரை வீர‌ராக‌ ஆட்கொண்டேவிட்டார் என்றுதான் சொல்ல‌வேண்டும்....

ம‌றுபுற‌ம் ச‌ச்சினுக்கோ தொட‌ர்ந்து சோத‌னைகள்... அருமையாக‌ ஆடிவ‌ந்தாலும் நிலையான‌ ஃபார்ம் இல்லாத‌து ச‌ச்சினுக்குப் பெரும் த‌லைவ‌லியாக‌ இருந்துவ‌ந்தது. பெரும் எதிர்பார்ப்புக‌ளால் க‌டுமையான‌ அழுத்த‌த்தையும் அவர் ச‌ந்தித்து வ‌ந்தார்... இருப்பினும் த‌ன்ன‌ம்பிக்கையுட‌ன் த‌ன் தொழிலில் ஆர்வ‌த்துட‌னும் சிர‌த்தையுட‌னும் தொட‌ர்ந்து செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌ ச‌ச்சினுக்கு ஒரு நியூசிலாந்து ப‌ய‌ண‌த்தில் நீண்ட‌நாள் காத்திருந்த‌ துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ர் வாய்ப்பு கிடைக்க‌த் த‌ன்னை முழுமையாக‌ நிலை நிறுத்திக் கொண்டார் மாஸ்ட‌ர் பேட்ஸ்மேன்!! தொட‌ர்ந்து சிற‌ப்பாக‌ ஆடிவ‌ந்த‌ ச‌ச்சின், "நீண்டநாட்களாகியும் ஒரு ச‌தம்கூட‌ அடிக்கவில்லை" எனத் தொடர்ந்து விம‌ர்சிக்க‌ப் ப‌ட்டுவ‌ந்த‌ க‌ள‌ங்க‌த்தையும் துடைத்தார், கொழும்புவில் ந‌ட‌ந்த‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டியில் துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ராக‌ இற‌ங்கிய‌ ச‌ச்சின் த‌ன் ஒருநாள் போட்டியின் முத‌ல் ச‌த‌த்தைக் க‌ட‌ந்தார் அந்த‌ப் போட்டியில் 110 ர‌ன்க‌ளைக் குவித்திருந்தார்... அடுத்த‌டுத்து ச‌த‌ங்க‌ளைக் குவிக்கத் தொடங்கிய ச‌ச்சின் பின்னாளில் உல‌கில் யாருமே குவித்திராத‌ அள‌வுக்கு ச‌த‌ங்க‌ளைக் குவிப்பார் என்று அந்நாளில் அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ளே கூட‌ நினைத்திருக்க‌ மாட்டார்க‌ள்!!

ச‌ச்சினின் க‌வன‌மும் ஆர்வ‌மும் தொட‌ர்ந்து ர‌ன்குவிப்பிலேயே ஊறித்திளைத்துக் கொண்டிருந்த‌ அதேக‌ண‌ம் த‌ங்க‌ ந‌கைக‌ள் அதிக‌ம் அணிந்துகொள்ளும் ஆர்வ‌த்துக்காக‌ சில‌ ப‌த்திரிக்கைக‌ளில் க‌வ‌ர்ஸ்டோரி ஆனார் வினோத் காம்ப்ளி.... வித‌வித‌மான‌ கெட்-அப்க‌ளோடு ஆட‌ ஆர‌ம்பித்த‌ காம்ப்ளி ஷார்ட் பால்க‌ளுக்குத் (Short ball) தொட‌ர்ந்து இறையாக‌ ஆர‌ம்பித்தார்... ஹேர் ஸ்டைலையும், கேர்ள் ஃப்ரெண்டையும் அடிக்க‌டி மாற்ற‌த் துவ‌ங்கிய‌ காம்ப்ளி க‌ல்லி பொஸிஷ‌னில் (Gully Slips) ப‌ல‌முறைத் தொட‌ர்ந்து த‌ன் விக்கெட்டைப் ப‌றிகொடுத்தும்கூட‌ப் பிர‌ச்னைக்குரிய‌ த‌ன் பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ள‌வே இல்லை!!

1996ம் ஆண்டு வில்ஸ் உல‌க‌க்கோப்பை இந்தியாவில் ந‌ட‌ந்த‌போது காம்ப்ளி உள்ளிட்ட‌ப் ப‌ல‌வீர‌ர்க‌ளுக்குத் தெரியாது அது அவ‌ர்க‌ளின் த‌லையெழுத்தையே மாற்ற‌ப் போகிற‌து என்று!


தொட‌ரும்......


பி.கு

(ச‌ச்சினின் க‌தை இன்ஸ்பிரேஷ‌ன் என்றால் காம்ப்ளியின் க‌தை நம் அனைவ‌ருக்கும் ஒரு எச்ச‌ரிக்கைப் பாட‌ம்... திற‌மை, உழைப்பு, வாய்ப்பு மூன்றும் வாய்த்த‌போதும் காம்ப்ளி ஒரு தோல்வி நாய‌க‌னாய்ப் மாறிப்போன‌து துர‌திர்ஷ்ட‌ம்!! அவ‌ர் க‌தை முன்னேற‌த் துடிக்கும் ஒவ்வொரு இளைஞ‌னுக்கும் ஓர் எச்ச‌ரிக்கை ம‌ணி... ச‌ச்சினிட‌ம் do's ஐயும் , காம்ப்ளியிட‌ம் dont's ஐயும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்!!)

Sunday, August 16, 2009

ஷாருக்கானின் க‌ச‌ப்பான‌ அமெரிக்க‌ அனுப‌வ‌ம்!


உலகளாவிய பாலிவுட் ரசிகர்களின் "மோஸ்ட் வான்டட் ஹீரோ" ஷாரூக் கான் நியூஜெர்ஸி விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இம்மிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டடு சோத‌னைக்கு உட்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருக்கிறார்!!

விதிகளுக்கு உட்பட்ட சந்தேகக் காரணங்களால் இரண்டாம் கட்ட இமிகிரேஷன் சோதனைக்கு ஆட்படுத்தப் பட்டவர்களின் பட்டியலில் ஒரு சூப்பர் ஸ்டார் மாட்டிக் கொண்டது துரதிர்ஷ்டமே!! மிகவும் பொதுப்படையான பெயரைக் கொண்டிருப்பதால் இரண்டாம் கட்ட குடியேற்ற சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டார் என்பது அமெரிக்க அதிகாரிகளின் விளக்கம்...ஆனால் "இதுவரைத் தன் வாழ்வில் "ஷா ருக்" எனும் பெயரில் வேறு எந்தவொரு மனிதரையும் நான் சந்தித்ததேயில்லை அப்படியிருக்க எப்படிப் பொதுவான பெயராகக் கருத முடியும்?" இது ஷாரூக்கின் வாதம்... பிரச்னை "ஷாரூக்" இல் இல்லை இரண்டாவது பெயர் "கான்" இல் தான் இருந்திருக்கிறது!!!

"என் பெயர் கான்"(My Name is Khan) இதுதான் கரண் ஜோகர் இயக்கத்தில் ஷாருக் நடித்துக்கொண்டிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் அடுத்த படத்தின் பெய‌ர்.... ஆனால் பாவ‌ம் இவர் பெயர் கான் என்று சந்தேகிக்கப் பட்டதாலேயே இவ்வளவு இன்னல்களை சந்தித்திருக்கிறார் மிஸ்டர். கான்!!

அமெரிக்க அதிகாரிகளைச் சொல்லியும் குற்றமில்லைதான்... அனைத்து விஜயகாந்த் பட வில்லன்களின் பெயரும் அநேகமாகக் "கான்" என்றுதானே முடிந்துத் தொலைக்கிறது!! உல‌க‌ளாவிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ப் போர்க‌ளினால் ஒட்டுமொத்த‌மாக‌ ஒரு ம‌த‌த்தின் பெய‌ரால் ஒரு சமூகமே துன்புறுவ‌து வேத‌னையாக‌ இருந்தாலும் அதற்கான‌ பதிலைப் பாதிக்க‌ப்ப‌டும் பொதும‌க்க‌ள் அந்த ம‌தத்தின் பெய‌ரால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ச் செய‌ல்க‌ளில் ஈடுப‌டும் வ‌ன்முறையாள‌ர்க‌ளிட‌ம்தான் கேட்க‌ முடியும்...

ச‌ரி.. மாட்டிக்கொண்ட‌ ஷாருக்கிடம் வ‌ருவோம்.... ப‌ய‌ண‌ம் செய்த‌ பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான‌ம் ஏற்கென‌வே ஷாரூக்கின் ல‌க்கேஜ்க‌ளைக் கொண்டுவ‌ருவ‌தில் தாம‌த‌ம் நேர்ந்திருக்கிற‌து என‌வே நிச்சிய‌ம் நொந்து நூடுல்ஸாக‌த் தான் இமிகிரேஷ‌னுக்கே சென்றிருப்பார் ஷாருக்... அவ‌ரின் போர்ட்(Boarded) செய்ய‌ப்ப‌ட்ட‌ உட‌மைக‌ள் ம‌ட்டும‌ன்றி ஹேண்ட் ல‌க்கேஜ்க‌ளையும் கூட‌ சோத‌னை செய்திருக்கிறார்க‌ள் அதிகாரிக‌ள்... "நான் ஒரு ந‌டிக‌ன்... இங்கு அட்லாண்டிக் சிட்டியில் ஒரு ஷோ வுக்காக‌த்தான் வ‌ந்திருக்கிறேன்" என்று ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையைச் செய்துகொண்டிருக்கும் போது அப்பாவியாகப் புல‌ம்பியிருக்கிறார் "கிங் கான்"!!

"நான் மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டேன்... மிக‌வும் கோப‌மாக‌வும் எரிச்ச‌லாக‌வும் உண‌ர்ந்தேன்... ந‌ல்ல‌வேளை என் குடும்ப‌த்துட‌ன் நான் வ‌ர‌வில்லை, வ‌ந்திருந்தால் என்னென்ன‌ இன்ன‌ல்க‌ளுக்கு ஆளாகியிருப்பேனோ!!... சுத‌ந்திர‌ தின‌த்தன்று எனது சுத‌ந்திர‌ இந்தியாவிலேயே நான் இருந்திருக்க‌லாம் போலும்!!" என்றெல்லாம் நொடித்துப் போய் இப்பொழுது முத்துதிர்த்திருக்கும் ஷாருக்... இவ்வாறு ந‌ட‌ப்ப‌து முத‌ன்முறைய‌ல்ல‌ எப்போதுமே அமெரிக்கா செல்லும்போது தான் அசௌக‌ரிய‌ங்க‌ளுக்கு ஆட்ப‌டுவ‌தாக‌வும் முண‌கித் தீர்த்திருக்கிறார்....!!

ஷாரூக்கிற்கு ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்....

"அமெரிக்கா செல்லும்போதெல்லாமே நான் க‌டும் அசௌக‌ரிய‌ங்க‌ளுக்கு ஆளாகிறேன்" என்று இப்பொழுது கதறும் பாலிவுட் பாட்ஷா... சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு பூச்சி ம‌ருந்து க‌ல‌ப்பு போன்ற‌ குற்ற‌ச்சாட்டுக‌ளால் பெப்ஸியை இந்தியாவில் த‌டை செய்ய‌க்கோரி மாண‌வ‌ர்க‌ளும் சுற்றுச்சூழ‌ல் ஆர்வ‌ல‌ர்க‌ளும் ஒட்டுமொத்த‌மாகக் கிள‌ர்ந்தெழுந்த‌போது இதே ஷாரூக் கான்,
"பெப்ஸியை இந்தியாவில் த‌டைசெய்தால் நான் அமெரிக்கா சென்று பெப்ஸி பான‌ங்க‌ளைப் ப‌ருகுவேன்!" என்று நிர‌ந்த‌ர பிராண்ட் அம்பாஸிடராக ஆண்டுதோறும் கூலி கொடுத்த‌ அமெரிக்க‌ முத‌லாளிக‌ளுக்காக‌ முந்திக்கொண்டு வ‌ந்து ஜால்ரா அடித்தார்... அடுத்த‌முறை மீண்டும் பெப்ஸிக்குப் பிர‌ச்னை வ‌ந்தால் தங்க‌ள் பெய‌ருக்குப் பின்னால் உள்ள‌ "கானை" நீக்கிக்கொண்டு அமெரிக்கா போய் பெப்ஸி குடிப்பீங்க‌ளா ஷாருக் சார்??!!

டெயில் பீஸ்:

இதே அமெரிக்க‌ விமான‌த‌ள‌த்தில் "மொஹ‌ம‌த் குட்டி" என்ற‌ இய‌ற்பெய‌ர் தாங்கியதால் ந‌ம்ம‌ "த‌ள‌ப‌தி தேவராஜ்" ம‌ம்முட்டியும் இதேபோன்ற‌தொரு அசௌக‌ரிய‌த்துக்கு ஆளாகியிருக்கிறார் ஆனால் அவ‌ர் இதைப் ப‌ற்றி யாரிட‌மும் முணுமுணுத்துக் கொண்டிருக்க‌வில்லை.... உண‌ர்ச்சி வேக‌த்தில் உளறித்தள்ளும் ஷாருக்கைப் பொறுத்த‌வரை யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் ஃப்ளாஷ்பேக்கால் சொல்லிழுக்குப் ப‌ட்டு!!

Monday, August 10, 2009

பேருந்துக்குள் வன்முறை


(குறிப்பு: இது நான்குபேர் உருட்டுக்கட்டையுடன் வழிமறித்து வண்டியேறி அட்டகாசம் செய்த வன்முறையல்ல... கதை, திரைக்கதை வசனமெழுதித் திரைத்துறையினருடன் போக்குவரத்துத் துறை இணைந்து வழக்கமாகவே பேருந்துகளில் அரங்கேற்றப்படுகின்ற ஒரு வன்முறை!!)

குடும்ப அலுவலாகச் சென்னை சென்றிருந்தேன்... அங்கிருந்து திரும்ப மதுரைக்கு வர எப்போதும் செல்லும் பிரபல தனியார் டிராவல்ஸின் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம்.. இதுவரை நான் அந்த டிராவல்ஸின் பஸ்ஸில் பயணித்தது எல்லாமே நள்ளிரவுப் பேருந்துகளில்தான்... அப்போதெல்லாமே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இரு இருக்கை வரிசைகளுக்கு இடையே உயரத்தில் அமைதியாகத் தொங்கிக்கொண்டு வந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்.... அவர்களது பேருந்துகளில் திரைப்படங்கள் போடுவதில்லைப் போலும் என்று தப்புக் கணக்கு போட்டவனாக எப்போதும் போல் அதே கம்பெனி பஸ்ஸில் இம்முறை மாலை 7 மணி பஸ்ஸில் பயணமானேன்...

இதுவரை சும்மாவே தொங்கிக்கொண்டு வந்தே நான் பார்த்த அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி பயணம் ஆரம்பித்த‌ சில நிமிடங்களிலேயே உயிர்பெற்றது... ஓபனிங்கிலேயே பெருங்குரலெடுத்து மிரட்டத்துவங்கிய டிவிப்பொட்டியில் சிம்பு மற்றும் தனுஷ் குத்தாட்டம் போட்ட பாடல்கள் மாறி மாறி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.... இந்தப் பாடல்கள் எல்லாம் பிரபலமானதாக இருந்தும், சுதந்திர‌ இந்தியாவின் பேச்சுரிமை எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் பெற்ற குடிமகனாகிய நான் எனது சொந்த உரிமைகளின் பேரால் "பார்க்க வேண்டாம்" எனத் தவிர்த்திருந்த திரைப்படங்கள் இவை என்ற காரணத்தினால், இந்தப் பாடல்கள் எனக்குப் புதிதாக இருந்தன....

"சிலம்பாட்டம்" படத்தில் ஒருபாடலில் சிம்பு ஒரு கூட்டத்தோடு ஆடிக்கொண்டிருந்தார்... அவ்வப்போது சுற்றி ஆடுபவர்கள் அனைவரும் சுற்றி நின்று ஆர்ப்பரிக்க சிம்பு மட்டும் நடுவே தனியாவர்த்தண நடனம் (?) செய்வதாகக் காட்சி அமைக்கப் பட்டிருந்தது.... சிம்பு முழங்காலில் நின்றுகொண்டு "வெடுக் வெடுக்" கென எழுந்து நிற்கிறார்.... பின்பு முழங்காலில் நின்றவாறே கைகளைப் பின்பக்கமாகத் தரையில் ஊன்றிக்கொண்டு இப்பொழுது கால்பாதங்களைத் தரையில் பதித்து, மல்லாந்த உடலைக் கை ஊன்றித் தாங்கிக் கொண்டு கால்களை மேலே உதறுகிறார்... பிறகு மீண்டும் "வெடுக் வெடுக்" என எழுந்து அமர்கிறார்.... பின்னணியில் அதிரடிக்கும் குத்தாட்ட இசை வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது.... அந்த‌ ந‌ட‌ன‌க்காட்சியை என் ம‌ன‌துக்குள் இசையைத் தவிர்த்து 'ம்யூட்' செய்து பார்க்கையில்.... க‌டுமையான‌ ம‌ல‌ச்சிக்க‌லால் ப‌ல‌ச்சிக்க‌லுக்கு ஆளாகிவிட்ட‌ ஓர் இளைஞ‌ன் காலையில் ஃப்ரீயாக‌ப் போவதற்காக‌ மேற்கொள்ளும் க‌டும் பிர‌ய‌த்த‌ன‌ங்கள் இவை என்று டைட்டில் போட்டுக் காட்டினால் ந‌ம்பும் மாதிரியாக‌ இருந்த‌து!!

இவ்வாறாக‌ செங்க‌ல்ப‌ட்டு தாண்டி எங்கோ ஒரு மோட்டலில் சாப்பாடுக்காக‌ நிறுத்தினார்க‌ள்.... சாப்பிட்டு ஏறிய‌தும் அதே டி.வி மீண்டும் உயிர்பெற்று எழுந்த‌து!
இம்முறை ஒரு திரைப்ப‌ட‌ம்.... க‌லாநிதி மாற‌ன் வ‌ழ‌ங்கும், த‌னுஷ் ந‌டிக்கும் என்று பில்ட‌ப் கொடுத்து "ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தைப் போட்டார் டிரைவ‌ர்.... அடுத்த‌ சில‌ நொடிக‌ளிலேயே புரிந்தது இத்த‌னை நாள் இந்த‌ ப‌ஸ்ஸில் நான் அல‌ட்சிய‌மாக‌ப் பார்த்துவ‌ந்த‌ அந்த‌த் தொலைக்காட்சி இய‌ந்திர‌ம் தூங்கும் ஓர் மிருகம் என்று! அது விழித்துக் கொண்டால் என்னென்ன‌ அவ‌ல‌ங்க‌ளை உருவாக்கும் என்ப‌த‌ற்கு நான் க‌ண்ணால் க‌ண்ட ஒரு சாட்சியானேன்!!

"ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தை நான் பார்த்திருக்க‌வில்லை... ஆனால் அதுவொரு வெற்றிப் ப‌ட‌ம் என்று கேள்வியுற்றிருக்கிறேன்.... வ‌ன்முறையாக‌ அந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்தேயாக‌ வேண்டுமென்று நிர்ப‌ந்திக்க‌ப் ப‌ட்ட‌தில் நான் பார்த்த‌வ‌ரை அப்ப‌ட‌த்தில் ச‌த்த‌த்தையும் ர‌த்த‌த்தையும் த‌விர‌ வேறெதுவுமே இல்லை! ஸ்பென்ஸ‌ர் ப்ளாஸாவிலும் ஆந்திராவின் ஒரு ப‌ப்ளிக் மார்க்கெட்டிலும் துப்பாக்கி ம‌ற்றும் வாள் போன்ற‌ ஆயுத‌ங்க‌ள் தாங்கிய‌ இர‌ண்டு ப‌டைக‌ள் பெரும்போர் புரிகின்ற‌ன‌... மூன்று நான்கு ர‌வுடிகளைப் போர்வீர‌ர்க‌ளுட‌னும் அர‌ண்ம‌னையோடும் குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ளாக‌க் காட்டுகிறார்க‌ள்.... அட‌ எதுக்கு இந்த டுபாக்கூர் ப‌ட‌த்த‌ப் ப‌த்தி இவ்ளோ பேசிக்கிட்டு.... கேவ‌ல‌மான‌ ஒரு குப்பைப் ப‌ட‌ம் பாஸ்.... ப‌ஸ்ஸூக்குள்ள‌ ஏத்தி மூச்சுத் திண‌ற‌த் திண‌ற‌ முழுப் ப‌ட‌த்தையும் போட்டுக்காட்டித் திருச்சி வ‌ரைக்கும் சாவ‌டிச்சுட்டுதான் விட்டாங்க...

இப்போ மேட்ட‌ருக்கு வ‌ர்றேன்....

பேருந்துக‌ளுக்குள் க‌ண்டிப்பாக‌த் திரைப்ப‌ட‌ம் போட‌வேண்டுமா?

இது வியாபார‌ உல‌க‌ம்... ந‌ட‌ந்துகொண்டிருப்ப‌தோ "இல‌வ‌ச‌" யுக‌ம்....
வார‌ இத‌ழ் வாங்கினால் சிம்கார்டு இல‌வ‌ச‌ம்.... காஃபித்தூள் வாங்கினால் பாத்திர‌ம் துல‌க்கும் ஜெல் இல‌வ‌ச‌ம்... ஏன் வோட்டு போடுற‌துக்கு இல‌வ‌ச‌மா ஹாட்கேஷ் (hot cash) கொடுக்கும் அள‌வு வ‌ந்துவிட்ட‌ இந்த‌ உல‌கில் ப‌ஸ்ஸில் டிக்கெட் வாங்கினால் இல‌வ‌ச‌மாக‌ ஒரு ப‌ட‌ம் போடுவ‌து சாதார‌ண‌ம்தான்... ஆனால் கோதுமை ரொட்டி வாங்கினால் ரெண்டு வாழைப்ப‌ழ‌ம் இல‌வ‌ச‌ம் என்று கையில் கொடுத்தால் ஓகே... ஆனால் வாங்குப‌வ‌ன் ச‌ர்க்க‌ரை நோயாளியாக‌ இருந்தாலும் கூட‌ கோதுமை ரொட்டி வாங்கிவிட்டாய் என்று இல‌வ‌ச‌ வாழைப்ப‌ழ‌த்தை வ‌ன்முறையாக‌ வாயில் திணித்தால்???... அதுபோன்ற‌தொரு ம‌னித‌ உரிமை மீற‌லாக‌த்தான் என‌க்குத் தெரிகிற‌து பேருந்துக்குள் இப்படி ம‌கா ச‌த்த‌மாக‌ப் ப‌ட‌ம் போட்டு மிர‌ட்டுவ‌து! "உன‌க்குப் பிடிக்குதோ பிடிக்க‌லையோ போடுற ப‌டத்த நீ பாத்துத்தான் ஆகணும்... என்ன‌து தூங்கிடுவியா??...அடீங்க்க‌... ம‌வ‌னே எங்க‌ ஹீரோ ப‌ற‌ந்து பறந்து தாவி... தார‌ த‌ப்ப‌ட்டையெல்லாம் தெறிக்க‌ வில்ல‌னை வ‌த‌ம் செய்யுற‌ ச‌வுண்டு எஃபெக்ட்ல‌ நீ எப்டி டா ராசா தூங்குவ‌!!" என்று க‌ண்ட‌க்டர் க‌லாய்க்காத‌ குறைதான்....

சரி... லீக‌லா ஒரு லா பாயிண்ட்டு வைக்கிறேன்..... எல்லா திரைப்ப‌ட‌ங்களிலும் டைட்டில் கார்டு போடுவ‌த‌ற்கு முன்பாக‌ ச‌ம்பிர‌தாய‌மாக‌ இன்றும் கூட‌ "யு" , "ஏ" , "யுஏ" என்றெல்லாம் சென்சார் போர்டு ச‌ர்டிஃபிகேட்டுக‌ள் போடுகிறார்க‌ள்.... 18 வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் என்று (ஏட்டில் ம‌ட்டும்) சில‌ க‌ட்டுப்பாடுக‌ள் இன்றும் இருக்கிற‌து... அட்லீஸ்ட் இதை வெகுசில‌ வீட்டிலாவ‌து சில‌ பெற்றோர்க‌ள் பின்ப‌ற்றுகிறார்க‌ள்.... இப்ப‌டி பொத்தாம் பொதுவாக‌ ஆபாச‌ம் வ‌ன்முறை என்று எந்த‌க் கட்டுப்பாடும் இல்லாம‌ல் ஏற‌க்குறைய‌ எல்லா ப‌ஸ்ஸிலுமே திருட்டு விசிடிக் க‌ளில் ப‌ட‌ம் போடுகிறார்களே.... ஆபாச‌ போஸ்ட‌ர்க‌ளில் சாய‌ம் அடிக்கும், தியேட்ட‌ர்க‌ளை உடைக்கும் ந‌ம‌து "க‌லாச்சார‌ பாதுகாவ‌ல‌ர்க‌ள்" இதையெல்லாம் க‌ண்ட‌தே இல்லையா???

ப‌ர்ச‌ன‌லாக‌ அன்றைக்கு நான் பேருந்தில் வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் விப‌த்தில் ப‌லியான‌ உற‌வின‌ரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வ‌ந்து கொண்டிருந்தேன்... இப்ப‌டிப் ப‌ல‌ரும் ப‌ல‌ க‌வ‌லைக‌ளுட‌னும் நிம்ம‌தியான‌ ஒரு ப‌ய‌ண‌த்தைத் தேடி வ‌ந்து அம‌ர்ந்திருக்க‌லாம்... அந்த‌ வேளைக‌ளில் அத்துமீற‌லாக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை வ‌ம்ப‌டியாக‌த் திணிப்ப‌து என்ன‌ ம‌னிதாபிமான‌மோ தெரிய‌வில்லை.....

பேருந்துக‌ளில் ப‌ய‌ண‌க்க‌ளைப்பு இல்லாம‌ல் இருக்க‌ வாத்திய‌ இசை இசைக்க‌லாம்... அல்ல‌து ப‌ய‌னுள்ள‌ சில‌ வீடியோக்க‌ளைக் கூட யாருக்கும் கஷ்டம் தராத வண்ணம் ஒளிப‌ர‌ப்ப‌லாமே.... அட‌... அப்போகூட‌ த‌மிழ‌னுக்கு சினிமாதான் வேணுமா?? அம‌ர‌ர் ஊர்திக‌ளிலும் ஆம்புல‌ன்சிலும் நான் ப‌ய‌ணித்த‌து இல்லை.. அதில் கூட‌ திரைப்ப‌ட‌ம் போடுகிறார்க‌ளா?? தெரிந்த‌வ‌ர்க‌ள் சொல்லுங்க‌ள்...

பிர‌பு. எம்