கமர்ஷியல் படங்களிலும் பரிசோதனைகளை சர்வசாதாரணமாய் முயற்சித்துப் பார்ப்பதில் மலையாளத் திரையுலகை வேறெந்த இந்திய மொழி சினிமாவும் நெருங்கக்கூட முடியாது என்னும் நிதர்சனத்தை நம்பி திரைக்கதையின் ஆதர்சக் கோட்பாடுகளை எல்லாம் தன் வசதிக்கு மாற்றி வளைத்துத் தன் முதல்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நிஷாந்த் சட்டு! இந்த வகைப்படுத்த முடியாத சைக்கலாஜிக்கல் த்ரில்லர், பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு நகர்த்தும் ரகமில்லை மாறாக ஆடியன்ஸுக்கு எந்த அசைவையும் ஏற்படுத்தாத கதையில், அமர்ந்திருக்கும் இருக்கையைக் கண்ட கோணத்திலும் சுற்றிவிட்டு ரங்கராட்டிண விளையாட்டுக்காட்டும் ஒரு less than perfect திரைக்கதை! ராட்டிணம் சுழன்று முடித்து நம் தலைசுற்றலும் நின்றபின் பக்குவமாகப் படத்தை முடித்து அனுப்பும் விதத்தில் கவனம் ஈர்க்கின்றது!
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆனால் பரபரவென நகரும் ஆரம்பக் காட்சிகளில் கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவருமே அறிமுகமாகிவிடுகிறார்கள்… சம்பந்தமே இல்லாத இந்த வேகமான காட்சிக் கோர்வைகளைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் கதாபாத்திரங்கள் மட்டுமின்றிக் கதையின் அனைத்துக் கூறுகளுக்கும் அடிப்படையான அத்தனை தகவல்களையும் நாசூக்காக இந்த ஆரம்பக் காட்சிகளில் தெளித்துவிட்டிருப்பது திரைக்கதையின் சாமர்த்தியம். மேலும் எடுத்த எடுப்பிலேயே மூக்குரசிக் கொள்ளும் முக்கியக் கதாபாத்திரங்கள் யாவுமே ஒருவருக்கொருவர் முற்றிலும் சம்பந்தமே இல்லாத அந்நியர்கள் சொல்லப்போனால் வழிப்போக்கர்கள்! உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புகள் இல்லாத கதாபாத்திரங்களை வைத்துக் கதைசொல்ல ஆரம்பிப்பது நம்மைப் புருவங்களை உயர்த்தி வரவேற்கத் தூண்டுவது உண்மை.
நாகரீக மற்றும் சமூக வரம்புகளை மீறி பொதுமக்களைச் சீண்டும் ஒரு வில்லங்கமான “prank show”வை ஒரு டிவி சேனலுக்காகப் படம்பிடித்துத் தரும் ஒரு குழுவின் முக்கிய pranksterஆன கதாநாயகன் ரஞ்சித் (அசிஃப் அலி) போலீஸ் வேடத்தில் தத்ரூபமாக அரங்கேற்றும் ஒரு விபரீதமான prank-ல் சிக்கி, அதனால் தன் வாழ்வின் மிக முக்கியமான வியாபார வாய்ப்பை இழக்கிறான் சன்னி (சைஜு குருப்). அதே சம்பவத்தை உண்மை என்று எண்ணி ரஞ்சித்தைத் தடுக்கப்போய் முகத்தில் அறைவாங்கும் க்ரிமினல் வழக்கறிஞரான ரெஞ்சி பனிக்கரின் கோபத்தையும், சன்னியின் ஆக்ரோஷத்தையும் ஒருசேர சம்பாதிக்கிறான் ரஞ்சித்! அதே போலீஸ் வேடத்தில் துணிகரமாகக் கதை நாயகி பௌர்ணமியை (நமீதா பரோட்) வில்லன்களிடமிருந்து காப்பாற்றி அவள் காதலையும் கிடைக்கப் பெறுகிறான்!
பொதுவாக ஓர் ஆரோக்கியமான திரைக்கதையில் தற்செயலாக நிகழும் சம்பவங்கள் அரிதாக அன்றி இடம்பெறுவது கிடையாது. இடம்பெறக் கூடாது என்று விதிகளே உள்ளன ஆனால் “a ranjith cinema”வின் முதல் நாற்பது நிமிடங்களில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களுமே தற்செயலாகவே நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை ஒரு கட்டத்தில் முற்றிலும் ஓர் அமெச்சூரான திரைப்படமாக நம்மைப் பொறுமையிழக்கவே வைத்துவிடுகிறது! தற்செயலாக ரஞ்சித் ஏறும் நகரப் பேருந்தில் அவன் அமரும் சீட்டிலேயே அவன் காப்பாற்றிய பௌர்ணமி அமர்ந்திருப்பதில் தொடங்கி… முப்பது நிமிடத்தில் குறைந்தது மூன்றுமுறையாவது சன்னியின் கண்களில் தற்செயலாகச் சிக்கும் ரஞ்சித்…. தற்செயலாக ரஞ்சித்துக்கே தெரியாமல் அவனுடைய கேமராவில் பதிவாகும் ஒரு கொலை… அந்த வீடியோவை அந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீலிடம் ஒப்படைக்கப் போனால் அவரும் தற்செயலாகக் கதாநாயகியின் தந்தையாக இருப்பார்… இப்படிக் கதையை நகர்த்தும் அத்தனை சம்பவங்களுமே தற்செயலாக நிகழ்வது பழைய தூர்தர்ஷன் நாடகங்களை நாம் கேலியாக விளிக்கும் “அடடே டாக்டரே வந்துட்டாரே!” ரேஞ்சுக்கு வெறுப்பேற்ற ஆரம்பித்துவிடுகின்றது. ஆனால் படத்தின் அடுத்த நாற்பது நிமிடங்களுக்கு, இந்தத் தன் வாழ்வில் நிகழ்ந்த ரகளையான சம்பவங்களையே தன் கற்பனையைக் கலந்து ஒரு திரைக்கதையாக உருவாக்கி ரஞ்சித் ஒரு தயாரிப்பாளரிடம் (ஹரிஸ்ரீ அஷோகன்) விவரிக்க, அந்தக் காட்சிகளில் ரஞ்சித்தின் பாத்திரத்தில் ஆன்ஸன் பாலும் பௌர்ணமியாக ஹன்னா ரெஜி கோஷியும் மற்றும் சில நடிகர்களும் மற்ற பாத்திரங்களை ஏற்க சன்னியாக மட்டும் சைஜு குருப்பே தோன்றுகிறார்! முதல் முக்கால் மணி நேரம் நாம் பார்த்த அதே காட்சிகள் வேறொரு செட்-அப்பில் கற்பனை சம்பவங்களால் பின்னப்பட்டு கதை சொல்ல ஆரம்பிக்கும்போது நமக்கு மெதுவாகத் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது. பிறகு, ரஞ்சித்தின் கற்பனை திரைக்கதை க்ளைமேக்ஸாக அவன் சஸ்பென்ஸ் வைத்துச் சொல்லும் அந்த பரபர ஹாஸ்பிட்டல் ட்ராஜெடி க்ளைமேக்ஸுடன் முடிந்து படம் நிஜக்கதைக்குத் திரும்ப, ரஞ்சித் தனக்கு நிஜத்தில் நிகழ்ந்த சம்பவங்களைக் கற்பனை கலந்து வடித்த கதையின் கற்பனை நிகழ்வுகள் அடுத்தடுத்து அச்சு அசலாகத் தன் சொந்த வாழ்க்கையில் நடக்கத் துவங்க, தனியொருவனாக அவன் வியர்த்து விருவிருக்கும்போதுதான் படம் உண்மையான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருப்பெறுகிறது! அதன்பிறகு படம் தடதடக்கும் வேகத்தில் சுறுசுறுப்பாக நம்மை ஈர்க்கும் விதமாக எழுதப்பட்டிருக்கும் காட்சிகள் அடுத்த நாற்பது நிமிடங்களை அதகளப்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்!
யதார்த்த நடிகரான அசிஃப் அலியின் இயல்பான முகபாவங்கள் ரஞ்சித்தின் மனவோட்டத்தைத் தங்குதடையின்றி ஆடியன்ஸுடன் இணைப்பிலேயே வைத்திருக்கின்றது! சன்னியாக வரும் சைஜு குருப்புக்கு அவரது வழக்கமான திரைத் தோன்றல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட பாத்திர வடிவமைப்பு. உடல் எடைக் குறைத்த தேகமும் கோபம் திணித்த தாடியுமாக பக்காவாக பொருந்தியிருக்கிறார். ரஞ்சித்தின் அம்மாவாக வரும் சபீதா ஆனந்தின் அலட்டலில்லாத பாந்தமான நடிப்பு கவர்கிறது. பவுர்ணமியாக வரும் நமீதா பரோட்டுக்கு முதல் பாதி தவிர்த்து படத்தில் பெரிய வேலையில்லை இருப்பினும் தன் அழகிய புன்னகையால் கண்களுக்குக் குளிச்சி தருகிறார். ரஞ்சித் சினிமாவுக்குள் விரியும் சினிமாவின் முக்கிய பாத்திரங்களான ஆன்சன் பால் மற்றும் ஹன்னா ரெஜி கோஷி ஏற்கெனவே பார்த்த காட்சிகளின் மறுஉருவாக்கக் காட்சிகளில் தங்கள் இயல்பில் நடித்து வேறுபாடு காட்டுவது சிறப்பு! ரெஞ்சி பனிக்கர், ஜுவல் மேரி, ஹரிஸ்ரீ அஷோகன் மற்றும் ஜெயபிரகாஷ் அவரவர் பாத்திரங்களைச் சரியாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் டெக்னிக்கல் கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத வண்ணம் கேமராவும், இசையும், கத்திரியும் நிஷாந்த் சட்டுவின் எழுத்து மற்றும் இயக்கத்தை இறுகப்பற்றி அப்படியே திரையில் பதித்திருக்கிறது. மிதுன் அசோகனின் பின்னணி இசையில் தனித்துவம் இல்லாவிட்டாலும் படத்தின் பரபரப்புக்குத் தேவையான சப்தங்களை வழங்குகிறது. சுனோஜ் வேலாயுதன் மற்றும் குஞ்சுண்ணி எஸ். குமாரின் ஒளிப்பதிவு திரைக்கதையின் குழப்பமான தன்மையை உணர்ந்து சிக்கலில்லாத கோணங்களுடன் காட்சிகளின் உணர்ச்சிகளைக் கடத்தியிருக்கின்றது. மனோஜின் எடிட்டிங் சற்றே சிரமமான பணியைச் சரியாகச் செய்துகொடுத்திருக்கின்றது.
இப்படிப்பட்ட பரிசோதனை சினிமாவை (திட்டமிட்ட?) சில நேர்த்திக் குறைபாடுகளுடன் எழுதி இயக்கித் தன் இயக்குனர் பயணத்தைத் துவங்கியிருக்கும் நிஷாந்த் சட்டு நிச்சியமாக கவனம் ஈர்க்கிறார்!
படத்தின் முடிவு சினிமாட்டிக்காக “சுபம்” சொல்வதாய் இருந்தாலும் குழப்பமின்றிப் படத்தை முடித்து வைத்திருப்பது நலம். ஒரு கதையாகக் கருத்தரித்துத் திரைக்கதையாக வடிவமைக்கப் பட்டிருக்கும் சினிமாவாக “a ranjith cinema”வைப் பார்க்க முடியாது… திரைக்கதையின் சாகசங்களையே குறிவைத்து நேரடியாகப் பிரசவித்த படைப்பாகத் தான் இது இருக்க முடியும். மொத்ததில் ஒரு பரிசோதனை சினிமாவாகப் படம் தேர்ச்சி பெறுகிறது!
அன்புடன்,
பிரபு எம்
