Tuesday, September 26, 2023

Dr. மன்மோகன் சிங் பிறந்தநாள் சிறப்புப் பதிவு


"History will be kinder to me than the contemporary media!"


- Dr. Manmohan Singh


2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்... பத்து ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றி முடித்திருந்த சமயத்தில் கடுமையான விமர்சன வெப்பத்தில் அரசானது உழன்று கொண்டிருந்த காலகட்டம் அது! அப்போது பிரதமர் மன்மோகன் சிங் ஒரு விரிவான ஊடக சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்! தனது இரண்டு  ஐந்தாண்டுகால ஆட்சிகளில் அவர் நடத்திய மூன்றாவது ப்ரெஸ் மீட் அது! இந்தியாவின் பிரதமர் ஒருவர் ஊடகங்களைச் சந்திப்பது அதுதான் கடைசி முறை என்பதை இந்த தேசம் அப்போது அறிந்திருக்கவில்லை!


அந்த ஊடக சந்திப்பில்தான் மேலே குறிப்பிட்டிருக்கும் அவரின் புகழ்பெற்ற வாசகத்தை உச்சரித்தார் Dr. சிங்!


'நிகழ்காலத்தில் ஊடகங்கள் பிடிவாதமாய் மறுக்கும் கருணைப் பார்வையைத் தனக்கு  வரலாறு வழங்கும்!' என்று தனக்கே உரித்தான மென்மொழியில் அழுத்தமாக அன்று பதிவு செய்தார்... அது எவ்வளவு நிஜம் என்பதை நாம் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறோம்!


Dr.மன்மோகன்சிங் அவர்கள் நிஜமாகவே இந்திய யூனியனுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்! பொருளாதாரத்தில் ஒரு முனைவராகத் திட்டக் கமிஷன் உட்பட பல உயரிய அரசுப் பணிகளில்  அமர்ந்தார்! பொருளாதார நிபுணராக 80-களில் அவர் உருவெடுத்திருந்த போது அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து இந்திய ரூபாய் நோட்டுகளில் கையொப்பமிட்டார்! பின்னர் 90-களில் பல பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து அதன் கோப்புகளில் ஒன்றிய நிதியமைச்சராக அவர் இட்ட கையொப்பங்கள் தான் பின்னாளில் அவரை ஒரு "பொருளாதார மேதை" என்று உலகளவில் நிறுவியது.


ஒரு விசித்திரமான அரசியல் சூழலில் 2004 ஆம் ஆண்டு டாக்டர். மன்மோகன்சிங் UPA கூட்டணி அரசின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது, அவர் இந்தியாவின் எந்தத் தொகுதியிலும் நின்று வெல்ல வாய்ப்பில்லாத ஓர் அரசியல்வாதி! தனக்கு முகவரி இல்லாத அஸ்ஸாம் மாநிலத்தின் ராஜ்யசபா உறுப்பினராகத்தான் நாடாளுமன்ற இருக்கையில் தக்கவைக்கப் பட்டிருந்தார்! காரணம்.... அரசியலின் அதிகபட்சப் பதிவிகளில் செயலாற்றியிருந்தாலும் டாக்டர். சிங் ஓர் அரசியல்வாதி அல்ல மாறாக ஒரு தலைசிறந்த ஆட்சியாளர்... ஓர் ஆளுமை!


அவர் பிரதமராக முடிசூடவில்லை மாறாகப் பொறுப்பேற்றார்!

அவர் பொறுப்பேற்றுக் கொண்டபோது யாரும் அரியாசனம் ஏறினார் என்று எழுதவில்லை மாறாக அப்போது அந்த இருக்கை ஒரு கூட்டணி அரசாங்கத்தின் "நாற்காலி" என்றே அறியப்பட்டது! அவர் கட்டளைகளைப் பிறப்பிக்கவில்லை ஆனால் வலுவான பல திட்டங்களில் கையெழுத்திட்டார்! பத்தாண்டு காலம் அதிகாரங்களை எல்லாம் அபகரித்து ஆட்சி செய்யவில்லை மாறாக ஒரு பிரதமராக அவர் பணியாற்றினார்! மாநிலத் தேர்தல்களின் பிரச்சார வாகனங்களில் அவர் வலம் வரவில்லை ஆனால் அந்தத் தேர்தல்களில் அவர்களின் கூட்டணி அடைந்த தோல்விகளுக்குப் பொறுமையாகப் பொறுப்பேற்று பதிலளித்தார்!


இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்த எளிமையை எல்லாம் மக்களாகிய நாம் ரசிக்கவில்லை என்பதுதான்! அரசை முழுவன்மையுடன் விமர்சிக்க அவர் காலத்தில் ஊடகங்களுக்குச் சுதந்திரம் இருந்தது, ஆனால் அந்த வன்மை எனும் சொல்லை ஊடகங்கள் வன்மம் என்று உருமாற்றிக்கொள்ளத்தான் அந்த சுதந்திரம் அப்போது பயன்பட்டது! 


ஒரு CAG அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு "2G ஊழல்" என்று எதிர்க்கட்சிகளுக்கு லக்கி நம்பராகிப் போன அந்த ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடியை அதன் பின் 3G, 4G, இப்போது 5G வரை அலைக்கற்றை ஏலங்கள் ஒருமுறை கூடத் தொடவில்லை ஆனால் 2G அலைக்கற்றை ஏலத்திலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்று அவ்வளவு பெரிய தொகை  கணக்கீடு செய்யப்பட்டிருந்தது! அதில் 175 எனத் தொடங்கி அத்தனை பூஜ்ஜியங்கள் அடுக்கப்பட்டிருந்தெல்லாம் குமாரசாமி கணக்கு என்று இப்போது கூட நாட்டுக்குத் தெரியாது! 2G மட்டுமல்ல, அரசை உலுக்கிய நிலக்கரி பேர ஊழல் குற்றச்சாட்டுக்கும் கூட ஜனநாயக அமைப்பில் எதிர்க்கட்சிகள் கோரிய அத்தனை விசாரணைக் குழுக்களுக்கும் இசைவு வழங்கினார், ஒத்துழைத்தார்,  தனது அமைச்சரவை சகாக்களை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கினார் அவர்கள் அந்த ஆட்சிக்காலத்தில்தான் சிறைக்கும் சென்றார்கள் ஆனால் அத்தகைய வெளிப்படைத் தன்மையையும் ஜனநாயக அடிப்படையை மீறாத செயலாற்றலையும் மீடியாக்கள் தூற்றியதும் கேலி செய்ததும்தான் விநோதம்!


மக்களுக்குத் தேவையெல்லாம் பளபளப்பான வாளுடனும், பரந்து விரிந்த மார்புடனும், மெட்டாலிக் உடைகள் மற்றும் உபகரணங்களுடனும் புழுதி பறக்க "டகடிக்.... டகடிக்.... டகடிக்" என்று குதிரையில் வேகமாகப் படை கிளப்பி வரும் ஒரு வீரன் வாள்முனையில் ஊழலை ஒழித்துப் பெட்ரோல் விலையைக் குறைத்து, சுவிட்சர்லாந்து வங்கிப் பணங்களை எல்லாம் வாரி எடுத்து வந்து அதைப் பங்கிட்டு குடிமக்கள் அக்கவுண்டில் போடுவான் என்பதாகத் தான் இருந்தது!  இதை இப்போது நினைத்துப் பார்க்கையில் அம்புலி மாமா கதைபோல நகைப்பாகத் தோன்றினாலும் ஊரை ஏமாற்றி உலக அளவில் ஏளனத்துக்கும் அவமானங்களுக்கும் நாட்டை ஆளாக்கி வரும் அம்புலி மாமாக்கள் ஆட்சியைப் பிடித்த கதையே இதுதான் என்பதே உண்மை!


அவலங்கள் அரங்கேறும் போது அம்பலங்களின் அறம் தேயும்! எல்லாம் எறிந்து அழிந்த பின் அந்த சாம்பல்களால் விரல் தொட்டு எழுதப்படுவதுதான், அடுத்த பேரழிவுக்கும் முன்கூட்டியே அறிகுறிகளைக் காட்டும், "வரலாறு" எனப்படுவது!


இதை அச்சு அசலாக அப்போதே உணர்ந்து தான் சமகால ஊடகப் பதிவுகளில் தான் எவ்வளவு கீழ்த்தரமாகப் பதியப்பட்டாலும், சாம்பலினால் எழுதப்படப் போகும் வரலாறு தன்னை வருங்காலத்துக்குச் சரியாகக் காட்சிப்படுத்தும் என்று கம்பீரமாக உரைத்திருக்கிறார் டாக்டர். மன்மோகன் சிங்! "வருங்காலம்" தன்னைக் கருணையுடன் அணுகும் என்று கூறாமல் "வரலாறு" என்று அவர் குறிப்பிட்டிருப்பதன் நுட்பமான அர்த்தம் இதுதான்!


அழிவுப் படலத்தின் முடிவுரையில் தான் அவர் சொன்ன "வரலாறு" எழுதப்படும் .... அழிவானது எப்போது ஒழியும் என்பதை அடுத்த ஆண்டு நம் விரல் நுனிகள்தான் தீர்மானிக்கும்! அதுவரை நம் விரல்களைப் பதற்றமாகப் பின்னிக்கொள்ள வைத்திருக்கும் 2023 நிகழ்காலத்தில் இன்று தனது 91 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் டாக்டர். மன்மோகன் சிங் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்!!!!


அன்புடன்

பிரபு எம்






 

Tuesday, September 19, 2023

"நம்பிக்கை நாயகன்" நம் உயிர்த்தோழன் பாபு!












பரிச்சயம் இல்லாதோர் கூட அவரை "என் உயிர்த் தோழன்" பாபு என்றுதான் சொல்ல வேண்டும்! "சூப்பர் ஸ்டார்", "மக்கள் செல்வன்", எட்சட்ராக்களை எல்லாம் விட ஓர் அணுக்கமான விளிப்பு ஒரு பட்டமாகவே தங்கிவிட்டது பாபுவுக்கு!
அவரே சம்பாதித்த பல உயிர்த்தோழர்களின் அன்பும் அணுசரணையும், வாழ்வின் கடைசி நாள் வரை அவரைத் தாங்கிப் பிடித்திருந்தது அந்தப் பட்டப் பெயரையும் காரணப் பெயராக்கி விட்டது! 

ஒரு பார்வையாளனாக பாபுவை நினைத்துப் பார்க்கும் போது, அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் போராட்ட குணம் இரண்டுமே அதீதத்துக்கும் அதிகமாக இருந்ததாகத்தான் உணர முடிகிறது.... அவை அவருக்கு அவரது வாழ்நாளின் வலிமிகுந்த வருடங்களை மட்டுமே பரிசளித்திருந்தாலும் சக மனிதர்களான நமக்கு மிகப்பெரிய பாடங்கள்! 

நடிப்புத் தொழிலில் நாயக வேடம் என்பது வெகுசிலருக்கு அதிர்ஷ்டம், உள்ளிருந்து போராடும் பலருக்கோ அது தவப்பயன்! சம்பந்தமே இல்லாமல் வெளியிலிருக்கும் பல கோடிப்பேருக்கும் கூட அது ஒரு கனவாக இருப்பதைப் புரிய முடிகிறபோது முயற்சி தவத்தின் கடுமை புலனாகிறது! பாபுவுக்குக் கடுந்தவப் பயனாகத்தான் நடிப்பு வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும்! அதைத் தக்கவைப்பதில்தான் மனிதர் தன் அர்ப்பணிப்பை அளவுகளை மீறி செலுத்திவிட்டார்.... விளைவு, ஒரு சண்டைக் காட்சி சாகசம் ஏற்படுத்திய விபரீதம் அவரைப் படுக்கையிலேயே பல வருடம் கிடத்தி, இன்றைய தினம் அவர் நீத்த இன்னுயிரின் இறுதி மூச்சைக் கூட அதே படுக்கைக்குள் முடக்கித்தான் விடைகொடுத்திருக்கிறது! 

 தண்டுவடம் தடம்புரண்டுவிட்ட போதும் தன்னம்பிக்கையைத் தவற விடவில்லை பாபு! அவ்வப்போது தன்னம்பிக்கை தரும் தலைப்புச் செய்திகளில் வலம் வந்து கொண்டுதான் இருந்தார்! 

விரல்கள் முற்றிலும் விரைத்துவிடும் முன்பாக நடிகர் விஜய்க்கு அவருடைய இளம் வயதில் இறந்து விட்ட அவருடைய தங்கையுடன் நிகழ்கால விஜய் இருப்பது போன்ற ஓர் ஓவியத்தை வரைந்து கொடுத்தார்! தொலைக்காட்சியில் கண்டு நெகிழ்த்த ஒரு தருணம் அது! 

 "ஆனந்த விகடனில் "மனமே மந்திரம் உடலே எந்திரம்" என்று ஒரு தொடர் 2000ங்களின் தொடக்கத்தில் இடம்பெற்றிருந்தது. ஃபிட்னஸ் வித்வான்களாக வலம் வரும் சில கலைஞர்களும், தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும் தங்கள் ஃபிட்னஸ் மந்திரங்களை வாசகர்களுக்கு வாரம் ஒருவராக வழங்கிவந்த ஒரு சுவையான தொடர் அது! அதில் ஒரு வாரம் இடம்பெற்று ஆச்சர்யப்படுத்தினார் பாபு! படுத்த படுக்கையாய்க் கிடக்கும் போதும் படுத்த வண்ணமே எடைப் பயிற்சி செய்துத் தன் தோள்பட்டை, மார்பு, மற்றும் கைத்தசைகளை உறுதிப் படுத்தி அவற்றைப் பதிவு செய்திருந்தார்! "மருதநாயகம்" படத்துக்குத் தன்னைக் கமல் தயாராகச் சொல்லிருப்பதாகத் தன்னம்பிக்கை துளிர்க்க பாபு அன்று பதிவு செய்த வரிகள் இப்போது கண்ணீர்த் துளிகளைத் துளிர்க்கச் செய்கின்றன! 

 கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஒற்றைக் கட்டிலில் முடங்கி இன்று தன் வாழ்க்கையை முடித்து விட்டார்.... இத்தனை ஆண்டு காலம் இப்படி உயிர்த்திருப்பது உள்ளும் புறமும் உற்சாகமின்றி நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்துதான் அதீதம் என்று நாம் அழைக்கும் அளவுகளைத் தாண்டிய போராட்ட குணம் கொண்டிருந்தார் என்று முதலில் குறிப்பிட்டிருக்கிறேன்! 

 சில கேள்விகளுக்குக் காலத்திடம் பதில் இருப்பதில்லை அப்படிப்பட்ட ஒரு கேள்விக்குறியாய்க் காலம் குறுக்கினாலும் ஒரு horizontal ஆச்சர்யக் குறியாய் வாழ்ந்து மறைந்திருக்கிறார் பாபு! 

 Rest in peace பாபு! 

 நம் வாழ்வின் நம்பிக்கை குன்றும் தருணங்களில் எல்லாம் நம் மனக்கண்ணில் உதித்து நம்பிக்கை நல்க என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் இந்த நம் உயிர்த் தோழன் பாபு! 

 வருத்தத்துடன், 
 பிரபு எம்


Sunday, August 27, 2023

புரட்சித் தவழர்!!!!!

நல்ல எண்ணத்துல தான் சொல்லுறேன்... ஒரு பட்டம் என்றால் அது தனித்துவமா இருக்கணும்அதாவது வேற யாருக்கும் அந்தப் பட்டம் ஏற்கனவே அடையாளமா இருக்கக்கூடாது! அதே மாதிரி, அந்தப் பட்டத்தின் பெயரைக் கேட்டவுடனே உங்க முகம் கடைக்கோடித் தமிழனுக்கும் சட்-னு ஞாபகம் வர்ற மாதிரி இருக்கணும்


"புரட்சித் தமிழன்" என்ற பட்டம் சத்யராஜோடது! ஸோ.... அதைக் கேட்டவுடனே கட்டப்பா ஞாபகம்தான் வருதே தவிர வேற எந்த எட்டப்பா ஞாபகமும் வர மாட்டேங்குது! (எதுகை மோனைக்கு மட்டுமே எட்டப்பனின் பெயர் இங்கு பயன் படுத்தப்பட்டுள்ளது என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்!) 


வெல்... ரேடியோ மிர்ச்சி மாதிரி நம்ம கட்சின்னாலே புர்ச்சிதான் ஸோ, "புரட்சி"யை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.... புரட்சியை first word fix பண்ணிட்டு இப்போ second word ஐத் தேடுவோம்.... புரட்சியோட சேர்த்துத் தலைவன்-னு சேர்த்தவுடனேயே மைண்டுல  ஒரு வொயிட்டான முகம் ஃபார்ம் ஆகி ரெண்டு கையையும் வீசி காத்துல காஃபி ஆத்துதா? யெஸ்ஸ் that is the புரட்சித் தலைவன்! தலைவி-னு add பண்ணா அடுத்த செகண்டே டெரராகி லைட்டா முதுகு பெண்டாகுதா?! அப்படிப் பிடிக்கணும் செகண்ட் word-! " தமிழர்" Word நல்லா இருந்தாலும் அதைக் கேட்ட செகண்ட்ல சேக்கிழார் மூஞ்சிதான் ஞாபகம் வருமே தவிர வேற எந்த ஜோக்... சரி வேண்டாம் விட்ருவோம்

 மம்ம்....புடுச்சிட்டேன் தலைவா புடுச்சிட்டேன்...  இந்த செகண்ட் word-ஐக் கேட்ட செகண்ட்ல உங்களத் தவிர வேற எவன் முகமும் ஞாபகம் வராது.... வர வாய்ப்பும் கிடையாது, in fact, இதுக்கு முன்னாடி இப்படி ஒரு வார்த்தையே தமிழ்ல யாருக்கும் use பண்ணதே இல்ல.... and that பட்டம் is "புரட்சித் தவழர்”!!!!!


தரையில் தவழ்ந்த தங்கத் தலைவா...

சிங்கிள் வோட்டுக் கட்சியோடு பக்காவா சிங்கான எங்கள் சிங்கத் தலைவா....

இன்று முதல் நீ "புரட்சி தவழர்" என்று அன்போடு அழைக்கப்படுவாய்!!!



May be an image of 2 people



அன்புடன்,

பிரபு எம் 😜