Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, September 28, 2025

⚠️☠️அபாயம்: அரசியல்படுத்தப்படாத அறிவிலிக் கூட்டம்!☠️⚠️


"அரசியல்படுத்தப்படாத கூட்டம்" என்பது மண்டை ஓட்டுக் குறியுடன் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டியதோர் அபாய வாசகம்!
ஆனால் அது ஏதோ சாதாரணமான அரசியல் விமர்சனமாக முன்வைக்கப்பட்டுத் தற்குறித்தனமான வாதப் பிரதிவாதங்களைத்தான் கடந்தசில வாரங்களாக ஊடகங்களில் கிளப்பி வந்தது. கரூரில் இன்று நடந்துவிட்ட இந்தக் கொடூரம் இந்திய அரசியலே கண்டிராதது! இதற்கு ஒரே காரணம் அரசியலின் அரிச்சுவடி தெரியாத பணத்திமிர் பிடித்த ஒரு கிறுக்கன் அபாயகரமானதோர் "அரசியல் படுத்தப்படாத கூட்டத்தை"த் தெருவில் திரட்டியதுதான்!


இதே கரூரில் சில தினங்களுக்குமுன் அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஊர்வலம் நடைபெற்றது.... காவல்துறை விதித்த கட்டுப்பாட்டுச் சட்டகங்களை அதில் கலந்துகொண்ட அதிமுக எனும் கட்சியின் கூட்டத்தினர் எவரும் தாண்ட முயற்சிக்கவில்லை.... தடுப்புகளின்மீது ஏறவில்லை... அவர்கள் தலைவரைக் காண எவரும் வீட்டிலிருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் கூட்டிச்செல்லவில்லை! ஏனெனில் அது ஓர் அரசியல் கூட்டம்!


தான் கூட்டும் இந்த மதிகெட்டக் கூட்டத்தின் அபாயத்தைத் தெள்ளத் தெளிவாக முன்கூட்டியே முன்னறிந்து வைத்திருந்தது விஜய்தான்! அதனால்தானே இந்தக் கூட்டத்தினரிடமிருந்துத் தன்னையும் தன்னுயிரையும் காத்துக்கொள்ள பவுன்சர்கள் புடைசூழ எங்கும் செல்கிறார்! அவரைப் பார்க்க முண்டியடித்துக்கொண்டு அவருடைய உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய அளவில்தானே அவர் கூட்டிய கூட்டமும் அவருடைய வாகனத்தின் மீதும், மின்சாரக் கம்பிகளில் தலையுரசும் மரங்களின் மீதும் கூரைகளின் மீதும் ஏறியது! விஜய்யின் நடைமேடையில் ஆபத்தான முறையில் தொங்கியெழுந்து ஏறிய ஒரு மூடனை பவுன்சர்கள் குண்டுகட்டாகத் தூக்கிக் கூட்டத்தில் வீசியெறிந்தார்களே இத்தகைய காட்சியை இதற்குமுன்பாக இந்திய அரசியல் கண்டதுண்டா? 

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு."
 (சிற்றினம் சேராமை குறள் எண்: 452)

"சிற்றினம் சேராமை" என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர், மேற்கண்ட இந்த குறளில்...  நீரானது நிலத்தைச் சேரும்போது தன்னுடைய இயல்பை விடுத்து அந்த நிலத்தின் இயல்பையே தன்னியல்பாக்கிக் கொண்டுவிடும் என்று சொல்லி அதேபோல்தான் மனிதரின் அறிவும் அவரவர் சாரும் கூட்டத்தின் (இனத்தின்) இயல்பாகவே மாறிவிடும் என்கிறார்! 

இந்தத் திருக்குறள் முழுக்க முழுக்க மனிதர்களின் "கூட்ட மனநிலை" (Crowd mentality)க்குப் பொருந்தக் கூடியது! தனிப்பட்ட முறையில் ஒரு படித்தவனோ, பண்பாளனோ, நல்லவனோ, கெட்டவனோ அவன் ஏதோவொரு நோக்கத்துடன் கூடிய கூட்டத்தில் கலந்துவிட்டான் என்றால் அவனுடைய தனிப்பட்ட இயல்பானது அந்தக் கூட்டம் வெளிப்படுத்தும் இயல்பில் கரைந்து அந்த மொத்த இயல்பாகத்தான் பொதுவில் வெளிப்படும்! அப்படியிருக்கும்போது , ஓர் உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டியின் வெற்றியைக் கொண்டாடுகிறேன் என்று "கூடிய" கூட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை அண்டை மாநிலத்தில் அண்மையில் பார்த்துப் பதைபதைத்தோம். அந்தப் பதற்றம் தணிவதற்கு முன்பே தன்னைத்தான் தலைவனாக முன்னறிவித்துக்கொண்டு வலம் வரும் இந்த நடிகன் "கூட்டிய" இந்தக் கூட்டத்தில் இப்படி வரலாறு காணாத கோடூரம் அரங்கேறிவிட்டதே இதை எப்படிக் கடந்து செல்வது???


ஒரு பழுத்த தேசிய ஊடகவியலாளர் (சாம் டேனியல்) அரசியல் கூட்டத்தில் மட்டுமல்ல எத்தனையோ அவலமான கூட்டங்களில் நின்றுகூட செய்திகளை நேரலையில் அறிவித்திருக்கிறார். ஆனால் விஜய்யின் கடந்த கூட்டத்தில் அவர் எதிர்கொண்ட அருவருப்பான வினைகளை உலகமே பார்த்து உழிந்ததே, அப்போது கூட ஊடகங்கள் இதில் உள்ள ஆபத்தை உணரவில்லையா? இந்த நெறிகெட்டக் கூட்டத்தின் ஆபத்தை எந்த ஊடகமாவது முன்னறிவித்ததா? எச்சரிக்கை விடுத்ததா? இந்தக் கூட்டத்தைத் தடுக்கவேண்டி எந்த ஊடகமாவது அரசை நோக்கி உரைத்ததா? இப்படிப்பட்டத் தறிகெட்ட மூடர்கூட்டத்தின் நிகழ்வுகளை நேரம்காலம் பார்க்காது நேரலை செய்வதும்,  இந்தத் தரம்கெட்டத் தற்குறிகளிடையே தொடர்ந்து மைக்கை நீட்டுவதும் என்று நீண்ட ஊடக செயல்பாடுகள் மதிகெட்ட இந்தக் கீழ்மனிதர்களின் கூட்டத்தை எந்தவிதமாக மோடிவேட் செய்யும் என்று ஊடகக் கூடங்களுக்குத் தெரியாதா?


த.வெ.க கட்சியின் சார்பாக எழுத்துவடிவில் முறையாக விண்ணப்பிக்கப்பட்ட இடங்களுக்கே காவல்துறை நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதற்குமுன் இந்தக் கட்சி நடத்திய ஒவ்வொரு ஊர்வலத்திலும் விதிகளெல்லாம் கண்கூடாக மீறப்பட்டுள்ளது. திமிர்பிடித்த திருடனான விஜய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும் தான் கூட்டும் அபாயகரமான இந்தக் கூட்டத்தை நோக்கி, வழக்கமாகக் காவல்துறை வழங்கும் கட்டுப்பாடுகளைக்கூடத் தன்மீதான மாநில அரசின் பயமாகக் கட்டமைத்து, அவன் கட்சியினர் கோரிக்கை வைத்து வாங்கிய மின் தடை உட்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைக்கூட அரசின் வினையாக மடைமாற்றி விஷமத்தனமான அரசியல் செய்தான். மேற்கொண்டு அவனது ஊர்வலங்களை அரசு தடுத்தால் நிச்சயம் அதை வைத்தும் மலிவான அரசியலை அவனது மந்தப்புத்திக் கூட்டத்தை வைத்து மிகமோசமாகக் கட்டவிழ்த்துவிடுவான் என்பதும் தெருந்ததுதான். இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம் இன்று ஒரு கொலைகாரனாக உருவெடுத்துவிட்ட இந்த சமூக விரோதியின் முன்மதியற்ற திமிரை முன்னறிந்து அடக்கியிருக்க வேண்டாமா??? 


எங்கும் எதையும் அரசியலாக மக்களைப் பார்க்கப் பழக்கிவிட்ட ஊடகங்கள் மீதும் இன்று மரணித்த அப்பாவிக் குழந்தைகளின் இரத்தக்கறை படிந்திருக்கிறதுதான்! அரசியல் என்பது வெறும் கட்சிகளின் சூளுரையா?? பொய்களை மெய்களாக மக்களிடையே பேசுவதை அரசியல் மேடைகள் அனுமதிக்கலாம் ஆனால் அவை யார்யார்வாய்க் கேட்பினும் அதன்  மெய்ப்பொருள் கண்டு மக்களுக்கு அறிவிப்பதுதானே ஊடகத்தின் பணி. யார் என்ன சொன்னாலும் அது சொல்பவரின் கருத்து என்று தற்காப்பு வாக்கியத்தையும் தொழில் சார்ந்த மற்றும் அறம்சார்ந்த தங்கள் பொறுப்புகளுக்கு எல்லாம் துறப்புகளையும் முன்னறிவித்துத் தானே ஊடகங்கள் "உள்ளது உள்ளபடி" என்று சொல்லி உள்ளும் புறமும் ஆராயாமல் அப்படியே இருளையும் கூட ஒளிபரப்புகிறார்கள்! ஊடகங்களின் மறைமுகமான அச்சுருத்தலும் இந்த வெறிபிடித்த மடையனின் கூட்டத்தை அனுமதிப்பதில் அரசியல் முன்னெச்செரிக்கையுடன் செயல்பட அரசையும் காவல்துறையையும் மறைமுகமாக  நிர்பந்தித்திருக்கிறது! மாறாக, இந்த ஊடங்கங்கள் விஜய்யின் ஆபத்தான முன்னெடுப்பை வன்மையாகக் கண்டித்திருந்தால், இந்தக் கூட்டத்தினால் ஏற்பட வாய்ப்பிருந்த அவலங்களைக் குறித்து மக்களை எச்சரித்திருந்தால் நிச்சயமாக இந்தக் கொடூர சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். ஊடகங்களும் இன்றைய கொலையின் பங்குதாரர்களே!

இதையெல்லாம் தாண்டிய என் மனவேதனையாக நான் உணர்வது கல்வியால் மேம்பட்ட நம் தமிழ்ச்சமூகம் வெறும் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்துகளில் மட்டும் மேம்பட்டுவிட்டு அறிவுசார்ந்த அறம்சார்ந்த பண்புசார்ந்த மேம்பாடுகளிலெல்லாம் வருடம்தோறும் தேய்ந்துகொண்டே செல்வதைப் பார்த்துதான்! கல்வியறிவில் பின் தங்கியிருந்த  நம் முன்னோர்கள்தான் எம்ஜிஆர் என்ற நடிகனைத் திரையில் பார்க்க "சினிமாவுக்குப் போன சித்தாளு"கள். ஆனால் அவர்களுக்கு அப்போது இருந்த சமூக ஒழுக்கமும், தன்னறிவும், மனிதாபிமானமும் இப்போது கல்வியில் பலமடங்கு தேறிவிட்ட நிகழ்காலத் தலைமுறைக்குக் கிஞ்சிற்றும் இல்லையே! அல்லு அர்ஜுனுக்காகவும் விஜய்க்காகவும் முறையற்ற கூட்டமாய்க்கூடி உயிரையே மாய்த்துக்கொண்டவர்கள் படித்தவர்களும் பட்டங்கள் தரித்தவர்களுமாயிற்றே!

"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். "  
("கல்வி" குறள் எண்- 393)

கற்றோரே கண்ணுடையவர்கள் கல்லாதோரோ முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் என்ற வள்ளுவர் வாக்கையே நம் நிகழ்காலக் கல்வி கற்ற தமிழ்ச்சமூகம் பொய்யாக்கிவிட்டோமே! இன்று கூட்டத்தில் சிக்கிக் கொடூரமாக உயிர்விட்ட உடல்களில் உள்ள ஆறாத புண்களாக அல்லவா ஆகிவிட்டது நம் கல்வி!

இன்னும் இன்னும் என்ன சொல்லி என்ன பயன் என்று மனம் நொந்து இதுபோன்ற இன்னொரு நிகழ்வு என்னாளும் நடந்துவிடக்கூடாது என்ற பிரார்த்தனையுடன், கடுங்கோபத்துடனும் பெரும் வேதனையுடனும் எழுதியிருக்கும் இந்தப் பதிவை முடிக்கிறேன்.

பெருவலியுடன்,

பிரபு எம்

Monday, September 22, 2025

"பொய்"யெனப் பெய்யும் மழை! - பகுதி -1

சிலந்திகளின் உமிழ்நீரைப் போன்றவை மனிதனின் பொய்கள்!

சில பொய்கள் சிலருக்கு நிஜ உலகின் தோல்விகளிலிருந்துத் தப்பித்து ஒளிந்துகொள்ளத் தனக்குத்தானே சுயசொர்க்கங்களாக செயலாற்றும்..... அடுத்தவருக்கு நேரடியாக தீங்குவிளைவிக்காத பொய்கள் இவை!

சில பொய்கள் ஆசைவலையை சிலந்தி வலையாய் விரித்து அதில் சிக்கும் சிறுபூச்சிகளை விழுங்கி உண்டு உடல்வளர்க்கும்! கவர்ச்சிகரமான இந்தப் பொய்கள்தான் இருப்பதிலேயே கேவலமானவை!

பொய்களில் இப்படிப் பலவகைகள் இருக்கலாம் ஆனால் அவற்றில் அற்பமாக வீழாமலிருக்க சற்றே விழிப்புடன் அறிவைச் சரியாகப் பயன்படுத்தினாலே போதும் அன்றாடம்  தனிப்பட்ட வாழ்வில் நாம் சந்திக்கும் பொய்களை எளிதில் கண்டறிந்தோ அல்லது வெறுமனே கடந்தோ சென்றுவிடலாம். ஆனால்..... ஒரு குழுவாய், இனமாய், குடிமக்களாய் நாம் பங்குபெறும் பொதுவாழ்வில் பரவும் அதாவது அனுதினமும் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களை இப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் கசப்பான நிஜம் ஏனெனில் அவை மிகவும் ஆபத்தானவை! பெருகிவரும் பேராபத்தாகப் பொதுவெளியில் பகிரங்கமாய்ப் பகிரப்படும் சமகால சமூகப் பொய்கள் மற்றும் அரசியல் பொய்களின் அபாயங்களைப் பற்றி ஆழமாக எச்சரிக்கவே இந்தப் பதிவு தொடங்கப்படுகிறது!




ஆட்சியை அபகரிக்க எவ்வளவு அசிங்கமான பொய்களையும் அனாயாசமாக அள்ளிவீசும் தலைவர்கள் அன்றும் கூட அரசியலில் இருக்கத்தான் செய்தார்கள், ஆனால் அவர்களின் பொய்கள் எல்லாம் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு மெய்யியலின் (reality) அடிப்படையிலாவது இருக்கும். அதாவது சந்தேகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆளுமைகளாகத் தங்களை அறிவித்துக்கொண்ட அந்தக்காலத் தலைவர்கள் தங்கள் மீதான வசீகரம் மற்றும் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கடுகளவும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளத் தெரிந்து வைத்திருந்தார்கள், அதன் காரணமாக மக்கள் அவர்களின் பொய்களை மெய்யென்று "நம்பித்தான்" மோசம் போய்க்கொண்டிருந்தார்கள்! ஆனால் இப்போதோ, ஒருவன் தன் அபிமானத் தலைவர் கூறுவது எல்லாம் அப்பட்டமான பொய்கள் என்று அவன் அறிவாலேயே தெளிவாக உணர்ந்தாலும், அதைப் பொய்யாகவே உள்வாங்கி அந்தப் பொய்யைக் காப்பாற்றத் தானும் அதில் பங்குகொண்டு மேலும் அதில் பல பொய்களைச் சேர்த்து, வெறும் தன் அபிமானத்தைக் கவர்ந்த கூட்டத்திடம் அதிகாரம் இருப்பதற்காகத் தன் வருங்கால அபிவிருத்திகளை எல்லாம் கூட அசராமல் அடகுவைக்கத் தயாராக இருக்கும் இந்த மனநிலைதான் இன்று நாம் பொதுவெளியில் சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிற பெரும் அவலம்! மேலுக்கு விசித்திரமாய்த் தோன்றும் இந்த ஆபத்தான போக்குதான் பல்வேறு நாடுகளிலும் பரவி, உலகையே தற்போது பேரழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது என்பது ஆழமான உண்மை! காரணம் மேலே குறிப்பிட்ட, சமகாலத்தின் அந்தவொரு வெறித்தனமான அபிமானமானது மக்கள் கூட்டத்தைப் பிரிவினைகளால் பிளவுபடுத்தி அதை ஒன்றுக்கு எதிராக மற்றொன்றைக் கட்டமைக்க விஷம் எனத்தெரிந்தும் தூவப்பட்ட பொய்விதைகளால் விளைவிக்கப் பெற்றது என்பதுதான் நஞ்சேறிய நிஜம்!

சிலந்திகளின் உமிழ்நீரைப் போன்றவைதான் மனிதனின் பொய்கள் என்று மேலே சொன்ன வாசகம் கூட அறிவியல்ரீதியாக ஒரு பொய்தான்! பெரும்பாலோனோர் நினைப்பது போல சிலந்தி தன் உமிழ்நீரால் கூடு கட்டுவதில்லை... அதன் அடிவயிற்றுப்பகுதியிலிருக்கும் ஒரு பிரத்யேக சுரப்பி (spinnerets) யில் சுரக்கும் "சிலந்திப் பட்டு" என்றழைக்கப்படும் ஒரு விதமான நூலால்தான் தன் கூட்டைக் கட்டுகின்றது! 
இப்படிச் சாதாரணமாக நாம் உண்மையென்று நம்பும் விஷயங்களே கூட ஆய்ந்து பார்த்தால் பொய்யெனத் தெரியும் சமகாலத்தில், நம் வாழ்க்கையையே நிர்மூலமாக்கும் வல்லமைபெற்ற பெரும் பொய்களைத் தயக்கமின்றி நுகரவும் அவற்றை மேலும் அலங்கரித்துப் பகிரவும் ஒரு பெருங்கூட்டம் தயாராக இருக்க, ஐடி செல்களும் மற்றும் வாட்ஸப் பல்கலைக்கழகங்களும் "பெய்" என்றால் பெய்யும் பெருமழையாகப் பொய்மழை விடாது பொழிந்து சமூகத்தின் குண்டு குழிகளிலெல்லாம் தேங்கி ஊரை, நாட்டை ,ஏன் உலகையே நாசப்படுத்தி வருகிறது! இந்தப் பொய்களின் அடிப்படையில் தொடங்கி ஆபத்து வரை தோண்டிப்பார்த்து அதைப் பதியவேண்டும் என்பதே எண்ணம்... இதில் எந்தவொரு அரசியல் கட்சியையோ, தலைவரையோ அல்லது நாடுகளையோ பெயரைக் குறிப்பிடாமல் எழுதுவதே நேர்மையாக இருக்கும்....

"பொய்"யெனப் பெய்யும் மழை... தொடரும்....!

உண்மையுடன்,
பிரபு எம்  


Sunday, March 10, 2024

பாஜகவின் தேர்தல் அரசியலைக் கட்டுடைப்போம் - பாகம் : 1 (Decoding the BJP's election machinery)

 தலைமைத் தேர்தல் அதிகாரி அருண் கோயலின் திடீர் பதவி விலகல் எதிர்க்கட்சியினரைப் பதற்றமடைய வைப்பது ஆச்சர்யமாக இருக்கிறது! இன்னும் எத்தனை நாளுக்குத்தான் பாஜகவின் அதிர்ச்சி வைத்திய பில்டப்புகளைப் பார்த்து இவர்கள் பயந்துகொண்டே இருப்பார்கள் என்று சத்தியமாகப் புரியவில்லை. ஆர் எஸ் எஸ் & பாஜகவின் election machinery மிகவும் வலிமையானதுதான் அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை ஆனால் இது எல்லா கட்சிகளுக்குமே அவர்களுக்குச் சாதகமான அரசியல் சூழல்களில் வலுவாக இருந்திருக்கிற ஒரு காரணிதான் என்பதை எப்படி தேசத்தின் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒரே நேரத்தில் மறக்கிறார்கள் என்று புரியவில்லை….. மக்களாகிய நாமும் பாஜகவைப் பற்றி அசுரத்தனமான ஓர் இமேஜை வளர்த்துக்கொண்டே போய் எப்போதுமே ஒரு நம்பிக்கையற்ற அரசியல் மனநிலையோடேயே வலம்வருதால்தான் நம்மில் பலரும் சரியான நேரத்தில் பாஜகவின் தந்திரங்களுக்குப் பலியாகிவிடுகிறோம் என்று நான் முழுமையாக நம்புகிறேன்…. பாஜகவின் தேர்தல் இயந்திரத்தை (வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல!) அதாவது சர்வபலம் பொருந்திய ரஜ கஜ துரக பாதாதிகள் கொண்ட வீழ்த்த முடியாத சக்தியாகக் கருதப்படும் மெக்கானிசத்தைக் கட்டுடைத்துதான் பார்ப்போமே என்னும் எண்ணத்தில்தான் இதை எழுதுகிறேன்


Decoding BJP’s Election Machinery - Part 1


1. பாஜக ஒரு வீழ்த்தவே முடியாத கட்சியா?


இந்தக் கேள்விக்கு இடையிடையே பாஜக தோல்வியடைந்த பல மாநிலத் தேர்தல்களே நேரடியாக உண்மையான பதிலைத் தந்துவிடும் இருந்தாலும் எந்தவொரு உண்மையையும் தேசத்தின் short time memory-யிலிருந்து அழித்துவிடும் கலையில் நரேந்திர மோடி மட்டுமல்ல உலகின் அனைத்து சர்வாதிகாரிகளுமே நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்தான். சமீபத்தில் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற அபார வெற்றியை அடுத்து வந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மொத்தமாகத் துடைத்துத் தூரப்போட்டுவிட்டது என்பது நிதர்சனம். ஆனால் இங்கு நான் நினைவுபடுத்த விரும்பும் மாநிலத்தேர்தலானது கர்நாடகா இல்லை, மாறாக, 2005-இலிருந்து இடைவிடாமல் 13 ஆண்டுகள் ஷிவ்ராஜ் சிங் சௌகான் முதலமைச்சராக இருந்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் 2018 பொதுத் தேர்தல் முடிவுகளைத்தான்!  2003 முதல் 2018 வரைத் தொடர்ந்து ஆண்டுவந்த பாஜகவின் ஆட்சியைக் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வீழ்த்திப் பெரும்பான்மை பலத்துடன் 2018 டிசம்பர் மாதம் ஆட்சி அமைத்தது


மத்திய பிரதேச மாநிலத்தின் demographics பாஜகவின் பெரும்பான்மைவாத மத அரசியலுக்கு அளவெடுத்துத் தைத்ததுபோல் பொருந்தக்கூடியது! சிறுபான்மை மதத்தினருக்கு என்று, பரந்துவிரிந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் எந்தவொரு தொகுதியிலுமே, சொல்லிக்கொள்ளுமளவு வாக்கு பலம் கிடையாது! இந்துத்வா லேபாரட்டரி என்றழைக்கப்படும் குஜராத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பரிசோதனைக்கூடம் பாஜகவுக்கு மத்தியப் பிரதேசம்தான். தொண்ணூறுகளின் இறுதியிலேயே பாஜக நிரந்தர ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்ட ஒரு மாநிலம் அது. அப்பேர்ப்பட்ட மாநிலத்தில் 16 ஆண்டுகள் கழித்து தேசிய அளவில் அசுரபலத்தில் பாஜக இருந்தபோதே காங்கிரஸ் கட்சியால் அங்கு வெற்றிபெற முடிந்தது மிக மிக ஆர்கானிக்கான விஷயம்! அதாவது anti-incumbency! இயல்பாகவே ஷிவ்ராஜ்சிங் சவுகானின் ஆட்சி மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி மற்றும் பெரிய பூதமாக உருவெடுத்த “vyapam scam” போன்றவற்றின் காரணமாக நரேந்திர மோடியின் சூறாவளிச் சுற்றுப்பயணங்களையும் தேர்தல் விதிமுறைகளை மீறி அள்ளித் தெளித்த கடைசி நேர கவர்ச்சித் திட்டங்களை எல்லாம் தாண்டியும் பாஜக தேர்தலில் வீழ்த்தப்பட்டது


அடுத்த ஒண்ணேகால் ஆண்டுகளிலேயே 22 காங்கிரஸ் எம் எல் ஏக்கள் ஜியோதிராதித்ய சிந்தியாவின் தலைமையில் கட்சி மாற, கமல்நாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மீண்டும் ஷிவ்ராஜ் சிங் சவுகான் ஆட்சியில் அமர்ந்தது நமக்குத் தெரிந்த கதைதான் ஆனாலும் பொதுத் தேர்தலில் பாஜகவால் எந்த மந்திரத்தையும் பலிக்கவைக்க முடியவில்லை என்பதுதான் இங்கு முக்கியமான விஷயம். இது அப்படியே சென்ற ஆண்டு கர்நாடகா மாநிலப் பொதுத்தேர்தலுக்கும் பொருந்தும். கர்நாடகாவில் பாஜக முளைத்து மூன்று இலை விட்டக் கட்சிதான் என்பதால் அங்கு காங்கிரஸ்ஸின் இயல்பான எழுச்சி பிரம்மாண்டமாக இருந்தது மட்டுமில்லாமல் சித்தராமையா - டிகே சிவகுமாரின் காங்கிரஸ்ஸில் உள்ளடி வேலைகள் செய்ய வாய்ப்பும் கிடையாது. பாஜக தேர்தலில் வீழ்த்த முடியாத கட்சி என்பது எல்லாம் வெறும் பிம்பம் மட்டுமே….. அந்த வெற்றியால் என்ன பயன்?, இறுதியில் ஆட்சி அமைத்தது அவர்கள்தானே.. போன்ற விஷயங்களுக்கு அடுத்தடுத்த பகுதிகளில் பதில்கள் நிச்சியமாக இருக்கின்றன… !


2. மற்ற கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன?


“Party with difference” என்ற கவர்ச்சிகரமான tagline வைத்துத்தான் ஆரம்ப நிலை பாரதிய ஜனதா கட்சியைத் துடுப்புப் போட்டு நீரோட்டத்தில் இணைத்தார் LK அத்வானி! அந்த வாஜ்பாயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி காலத்து பாஜகவைப் பற்றியெல்லாம் இப்போது நினைப்பதற்குக்கூட ஒன்றுமில்லை இப்போது இருப்பது முற்றிலும் மாறுபட்ட மாஃபியா கழகம்! நரேந்திர மோடியின் பாஜகவுக்கும் பாரம்பரியமாக இந்தியாவில் அரசியல் செய்துவரும் முக்கியக் கட்சிகளுக்கும் இருக்கும் மிக மிக மிக அடிப்படையான வித்தியாசம் ஒன்று உள்ளது அது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் அதை எதிர்க்கட்சிகள் தொடங்கி மக்கள் வரை அத்தனை பேரும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு நகர்வதுதான் ஒரே ஆச்சர்யம்! அது என்ன வித்தியாசம் என்றால்…. மற்ற அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் அரசியலை தேர்தல் சமயத்தில் மட்டுமே பிரயோகிப்பார்கள் மற்ற சூழல்களில் ஆட்சியிலோ அல்லது ஆட்சிக்கு எதிரான அரசியலிலோ மட்டுமே தீவிரமாக இயங்குவார்கள். பாஜகவைப் பொறுத்தவரை சதா சர்வகாலமும் அவர்கள் செய்வது தேர்தல் அரசியல் மட்டுமே! அவர்களுக்குத் தெரிந்ததும் தேர்தல் அரசியல் மட்டும்தான்…. அணுதினமும் தேர்தல் அரசியல் செய்யும் கட்சிகள் உலக வரலாற்றில் ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகள்தீவிர வலதுசாரிகளின் classic political style! இதுபோன்ற அணுகுமுறை கொண்ட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்யும்போது வழக்கமான அரசியல் நடைமுறைகள் வேலைக்கே ஆகாது என்பதை (திமுக தவிர*) இந்தியாவின் எந்தக் கட்சியுமே இன்னும்கூட விளங்காததைப் போல் நடந்துகொள்வது மட்டும்தான் எப்போதுமே ஆச்சர்யமாக உள்ளது.


*இதைப்பற்றித் தனியாகப் பேசுவோம்...


3. தேர்தல் அரசியலுக்கும் vs ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி அரசியலுக்குமான வித்தியாசங்கள்:


தேர்தல் சமயத்தில் அனைத்து ஆளும்கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஆயுதங்களைத்தான் பிரயோகிப்பார்கள் அவற்றின் தொகுப்புதான் தேர்தல் அரசியல்…. அதன் முக்கியக் கூறுகள் 1. மீடியா மேனேஜ்மெண்ட் ( இதன் பழைய பெயர் headline management!), 2. மக்களிடம் நெருக்கமாக இல்லாமல் பலம் காட்டும் விதமாக பிரம்மாண்டமாக அடிக்கடி connect செய்துகொண்டே இருத்தல், 3. வெளிப்படையான சர்ச்சைகளை மறைத்தல் அல்லது திசை திருப்புதல், 4. உணர்வுப்பூர்வமான narrative களைக் கட்டமைத்தல் (அவை நிகழ்கால அரசியலுக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்!) 5. எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்துதல்… etc.,


தேர்தல் அரசியலின் அடிப்படைக் கூறுகளாக இந்த ஐந்து விஷயங்களை வகைப்படுத்தலாம். ஆனால் இதையே தேர்தல் சமயம் மட்டுமின்றி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னும், இடைவெளி விடாமல், ஆட்சி நடத்தாமல், மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுக்காமல், திட்டங்கள் எதுவும் தீட்டாமல், அப்படியே அடுத்த தேர்தல் வரைக்கும் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால்…….. ஜனநாயகத்தின் நட்ட நடுப் புள்ளியில் சுழித்து விளையாடும் ஒருவிதமான chaos theory இது! இதை பாஜக ஒன்றும் கண்டுபிடிக்கவெல்லாம் இல்லை…. இதுவும் ஒரு வரலாற்றின் சுழற்சியே


இந்தப் பகுதியை விரிவாக அடுத்த பாகத்தில் பார்ப்போம்.  


தொடரும்…..


அன்புடன்,

பிரபு எம்