Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Tuesday, January 04, 2011

பாட்டி கதை (கடைசி பாகம்)

முந்தைய பாகங்களுக்கு இங்கே சொடுக்கவும்...

                                                            பாட்டி கதை (பாகம் 7)                                       

                                                                             23

"பாட்டியம்மா.... பாட்டியம்மா... டிக்கெட் எடுத்தாச்சா??? பாட்டீ.... பாட்டியம்மா!!"

பஸ் கண்டெக்டர் தொடர்ந்து அழைக்கத் திடுக்கிட்டுத் திரும்பினார் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்து வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி....!! கை நடுங்க சுருக்குப் பையிலிருந்து பணமெடுக்கத் தடுமாறியதைக் கவனித்த சுற்றியிருந்தவர்கள்...

"கூட யாரும் வரலியாம்ம்மா??"

என்று விசாரிக்கத் துவங்கினார்கள்.... கொஞ்சம் குடிக்கச்சொல்லிப் பாட்டிக்குத் தண்ணீர் கொடுத்தார்கள்...

தன் மஞ்சள்பையின் கைப்பிடியைத் கையில் பிடித்துத் திருகிக்கொண்டே வந்தார் பயணம் முடியுமட்டும் பதற்றத்தின் வெளிப்பாடாய்... நல்லவேளை அதிக தூரமில்லை..... மிகுந்த தயக்கத்துடன் தனியாக‌ இறக்கிவிட்டார்கள் பாட்டியம்மாவை அவர் கிராமத்தில்.... உச்சிவெயிலில் உடல்வியர்த்த‌ப் பாட்டிக்கு வீடுபோய் சேர்ந்துவிட்டால்போதுமென இருந்தது..... மளிகைக்கடைக்காரர் ச‌ண்முகம் தன் டிவிஎஸ்50 யில் எங்கோ சென்றுகொண்டிருந்தார் அந்த வழியாக‌.... மூச்சிரைக்க நகர்ந்து கொண்டிருந்த பாட்டி உதவிக்கு அழைப்பதை உணர்ந்தவர்.... அருகில் சென்றார்..... நிலையைப் புரிந்து வேகமானவரிடம் வேறெதுவும் வேண்டாம்... வீட்டுக்குச் செல்லமட்டும் தனக்கு உதவுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் பாட்டி... பாட்டி சொல்லை மீறமுடியாமல், பின்னால் அமர்ந்திருந்த கடைப்பையனை இறக்கிவிட்டு பாட்டியைத்தன் கடைக்கு அழைத்துச்சென்று ஒரு சோடா வாங்கிக்கொடுத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டுதான் வீட்டில் இறக்கிவிட்டுச்சென்றார் ச‌ண்முக‌ம்....
                          
                                                                                    24

பூட்டியிராத‌ வீடு சில‌ நாட்க‌ள் பூட்டிக்கிட‌ந்த‌தால் பாட்டிவீட்டுத் த‌ரையில் தூசித்திரைக் காலை ந‌ம‌ந‌ம‌த்த‌து பாட்டிக்கு.... வீடு வ‌ந்து சேர்ந்த‌தாகிவிட்ட‌து பாட்டிக்கு!! அதே சிரிப்புட‌ன் தாத்தா சுவ‌ரில் போட்டோவில் "வெல்க‌ம் பேக்" சொல்லி வ‌ர‌வேற்றார் பாட்டியை.... பாட்டியின் க‌ண்க‌ள் க‌ல‌ங்கிய்தால் பார்வை மேலும் ம‌ங்க‌லான‌து....

பெருமூச்செறிந்து வீட்டுமையத்தில் தரையில் அமர்ந்தார் பாட்டி.... கணவர் கட்டிய, தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த, வீட்டுத் தூணில் முதுகைச் சாய்த்து!!  புடவைத்தலைப்பால் முகத்தின் வியர்வையை ஒற்றி எடுத்தார்..... சுவரில் சாய்ந்து சிறிது நேரம் களைப்பாற முயற்சித்தார்..... "போகிற உயிர் இந்த அரவணைப்பில் போகவேண்டுமென்றுதானே இத்தனைக்காலம் அடம்பிடித்திருந்தேன்!!!"  என்று மனம் சொல்லியிருக்கும் போல வியர்த்துக் களைத்து ரொம்பவே அசௌகரியமாக உணர்ந்தார் தனிமையில்....

இன்னும்கூட காதுகளில் கார்களின் என்ஜின் சத்தம் இரைந்துகொண்டுதான் இருந்தது..... ஏதோவொரு படபடப்பு மார்புக்குள்..... தன் செய்கையைப் பேரன் இந்நேரம் அறிந்திருப்பானா???? என்ற எண்ணம் அதீதமான‌ அழுத்தத்துடன் இரத்ததை நரம்புகளுக்குள் செலுத்தியது...... தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று அறிந்துவிட்ட பாட்டியம்மா.... இளைப்பாறக் கொஞ்சம் கடுங்காப்பியில் சுக்கு தட்டி அருந்தலாம் என்று அடுப்பங்கரைக்குத் தட்டுத்தடுமாறி எழுந்து சென்றார்..... சட்டியில் நீரைவார்த்து சுக்கு தட்டிப்போட்டு அடுப்பில் வைத்தவருக்கு கிறுகிறுத்தது தலை.... தலைக்குமேலே விட்டத்தில் கரிபிடித்த சுவர் கார்ஷோரூமில் அண்ணார்ந்து பார்த்த ஒளிவிளக்குகளால் அடுக்கப்பட்ட மேல்சுவர் போல் தோற்றமளித்தது பாட்டியின் தலை சுற்றிய பார்வைக்கு..... சுவரில் சாய்ந்துகொண்ட பாட்டியம்மாவுக்கு சரியாக‌ இதயத்திலேயே கணமாக ரீங்கரித்து விழுந்தது வீட்டுவாசலில் அடித்த அந்த ஹைடெசிபல் கார் ஹார‌ன் சத்தம்.....கால்கள் நடுங்கத்துவங்கின பாட்டியம்மாவுக்கு.... வாசலிலேயே கார் நிறுத்தப்படுகிறது....

                                      
                                                                                     25

"பாட்டிம்ம்மா........."

அன்பான துடிப்போடு வீட்டிற்குள் பாட்டியைத் தேடும் ஜீவாவின் குரல்..... பாட்டியின் காதுகளைச் சென்றடைய..... வீட்டுக்குள் ச‌மைய‌ல‌றையில் ஜீவா திடீரென‌த் தோன்றி நிற்கிறான் கிருகிருத்துக்கொண்டிருக்கும் பாட்டியின் பார்வைக்கு எதிரே.....

சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்ட தன்னைத் தேடிவந்திருக்கும் பேரனைப் பார்த்துப் பெரும்பதற்றம் கொண்டார் பாட்டி..... கையிலிருந்த சட்டியைப் பொத்தென்றுத் தரையில் போட்டு பேரனைப் பார்த்து பயந்துபோன பாவனையில் வாய்க்குழறத் துவங்கினார்.....

செயலிழந்த ஜீவா, ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்றாலும்...... சற்றும் தாமதிக்காமல் வேகமாக முன்னேறி அப்படியே ஆதரவாய்த் தன் உடலோடு அரவணைத்துக்கொண்டான் பதறும் பாட்டியை!!!!

நிலைகுலைய‌த் துவ‌ங்கியிருந்த‌ த‌ன் க‌ம்பீர‌ப் பாட்டியைத் த‌ன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டு தலையை வருடிக் கொடுத்த ஜீவாவிடம்...

 "பாட்டிய மன்னிச்சுருப்பா... மன்னிச்சிடுப்பா"

என வாய்க் குழறிச் சொல்லிக்கொண்டேயிருந்தார் உஷ்ணம் தணியாமல்..... படுவேகமாய்ப் பட பட பட வெனக் கலவரமாய் அதிரும் பாட்டியின் இதயத்துடிப்பை அந்த அணைப்பிலேயே உணர்ந்தான் ஜீவா.... பாட்டியின் உடல்நிலையை மிகவிரைவில் புரிந்துகொண்டவன் செய்வதறியாத திகைப்பையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு தன் அரவணைப்பில் இருக்கும் பாட்டியின் காதுக்குள் ரகசியமாய்....

"பாட்டிம்மாவை நான் எதுக்கு மன்னிக்கனும்??? என் பாட்டிதான் எந்தத் தப்பும் செய்யலையே..... நான்தான் தப்பு செய்யப்போனேன்...... கோபம் இருந்தாதானே மன்னிக்கனும்.... எனக்குதான் கோபமே இல்லையே.... சத்தியமா எனக்குக் கோபமே இல்லையே.... "

என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே பேரன், அழுத்தமாய் சீரான இடைவெளியில் தலையை வருடிக்கொடுத்துக் கொண்டேயிருக்க..... நதியலைபோல் நிதானமாகத் துடித்திடும் பேரனின் இதயத்தை அதே அணைப்பிலேயே இப்போது பாட்டியம்மா உணர்ந்தார்.... நடுங்கிய கைகள் த‌ன் பேரனின் தோள்களை முடிந்தவரை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள.... அதிரடித்துத் துடித்துக்கொண்டிருந்த இதயம் சாந்தியடைத்துவங்கியது.......

மெதுவாக....மெதுவாக இதோ இப்போது இரண்டு இதயங்களும் ஒரே வேகத்தில் துடிக்கின்றன!!! இயல்பு நிலையை அடைவார் என்று பாட்டி நினைத்திருக்கவில்லை.... படபடப்பின்றிக் கண்கள் தெளிந்த நேரம், ஜீவாவுடன் வந்திருந்த‌ அஞ்சலி சுடசுடக் காஃபி கொடுத்தாள்.... பாட்டிய‌ம்மாவுக்கு!!

                                                                                  26

அஞ்சலியின் காஃபியை நிதானமாகப் பருகிய பாட்டியம்மாவுக்கு வாசலில் நின்றுகொண்டிருந்த புதுக்காரைக் காட்டினார்கள் ஜீவாவும் அஞ்சலியும்....!

"முதன்முதல்ல குலசாமி கோயிலுக்குத்தான் போகணும்னு கிளம்பி வந்திருச்சு பாத்தீங்களா உங்க‌ பேரனுக்கு நீங்க‌ வாங்கிக்கொடுத்த கார்!!!....."

 கண்சிமிட்டினான் ஜீவா.....

"நீயும் தாத்தாவும் தான் எங்களுக்குக் குலசாமி.... வேற யாரும் இல்ல எங்களுக்கு உலகத்துல‌...... உம்மேல போய் நான் கோபப் படுவேனா பாட்டிம்மா!!!!  எனக்கு பாட்டியும் வேணும்... பாட்டிவீடும் வேணும்.... பாட்டி நீங்க இங்க இருந்தாதானே எனக்கு பாட்டிவீடு னு ஓர் இடம் உலகத்துல இருக்கும்.... நானும் ஆசைஆசையா வந்துபோறதுக்கு!!.... நீங்க எனக்கு வேணும் பாட்டிம்மா... நீங்க ரொம்ப நாளைக்கு வேணும்...சந்தோஷமா வேணும்... எனக்கு அதுமட்டும்தான் வேணும்!!"

எப்ப‌டியோ கூறிமுடித்தான் அதிக‌ம் பேசிப் ப‌ழ‌கியிருக்காத‌ ஜீவா ம‌ன‌ம்விட்டுத் த‌ன் பாட்டியிட‌ம்....

மெல்ல‌ மெல்ல‌ மெல்ல‌ பாட்டி இப்போது Back to Form!!!! :-)

பேரனுக்கும் அஞ்சலிக்கும் காருக்கும் சுற்றிப்போட்டுத் திலகமிட்டுத் தாத்தா படத்துக்கும் தீபமேற்றி...

 "குலசாமி கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போங்கப்பா!!" என்று வெகுசிரத்தையாய் விடைகொடுத்தார் பாட்டிம்மா த‌ன் பேர‌னுக்கும் தனக்கும் பேத்தியாகிவிட்ட‌ அஞ்ச‌லிக்கும்....!

                                                                                   27

புதுக்காரில் ஜீவா பயணம் துவங்க... ரோடு முடியும்வரை பாட்டிக்குக் கையசைத்து விடைபெற்ற அஞ்சலி... திடீரென ஜீவாவிடம்,

 "எப்படி பாட்டி இவ்வளவு கரெக்டா நம்ம ரெண்டு பேருக்குமே பிடிச்ச காரை செலக்ட் பண்ணிக் கொடுத்தாங்க????"

என்று கேட்டாள்....

ஜீவா ஒருகணம் புன்னகைத்துவிட்டு.....

 "அதான் பெரியவங்க... அவங்களுக்கு எப்பவுமே தெரிஞ்சிருக்கும்போல நம்ம விருப்பு, வெறுப்பு, தேவை, ஆசை யெல்லாமே!!  நம்மளும் பாட்டி- தாத்தா ஆனப்புறம்தான் புரியும்னு நினைக்கிறேன் அந்தப் பாசம்!!!"

என்று கூறிச் சிரித்தான் காரை ஓட்டிக்கொண்டே......

முன்ன‌தாக‌ ஜீவா வேலைக்குப் போயிருந்த‌ நேர‌த்தில் பாட்டி அஞ்ச‌லியிட‌ம் சென்று.....

"அம்மாடி...நீயாவது புரிஞ்சுக்கோடா என் கண்ணு.... உலகம் தெரியாம இந்தக் கிழவி அவங்க தாத்தா வெச்சிருந்த அம்பாசிடர் காரையே வாங்கிடுப்பானு சொல்லிட்டேன்..... அதுக்காக நான் சொல்லுற காரைத்தான் வாங்குவேன்னு பிடிவாதமா இருக்கான்மா என் பேரன்.... நான் கிழவிம்மா... அந்தக்காலம்... கிராமம்... எனக்கு எதுவுமே தெரியாது.... இந்தப் பேப்பர் எல்லாம் படிச்சுப்பாத்து ஒண்ணுமே புரியலமா இந்தக்கிழவிக்கு..... சும்மா ஒண்ணு வாங்கிப்போட காரு ஒண்ணும் அஞ்சு பத்து விளையாட்டில்ல.... உன்னக் கெஞ்சிக்கேட்டுக்கிறேன் கண்ணு..... இதுல உனக்கும் ஜீவாவுக்கும் பிடிச்ச காரு எதுனு சொல்லு நான் அதையே ஜீவாகிட்ட சொல்லிடுறேன் எனக்குப் பிடிச்ச காரும் அதுதான்னு!!!"

 எவ்வளவோ மறுத்தும் வேறுவழியின்றி பாட்டிக்கு பணிந்து காரைத் தேர்வுசெய்து கொடுத்த‌ அஞ்சலி ஜீவாவிடம் இப்பொழுதும் சொல்லவில்லை இந்த ரகசியத்தை!!!

காரோட்டும் தன் வருங்கால‌ கணவனை ஒருமுறை தலைகோதிவிட்டு "ச்சோ ச்வீட்ட்ட்"  என்று அஞ்சலி சிரிக்க.... ஜீவாவும் சிரித்தான் திருப்தியாக!!!!


                                                                         முற்றும்!


தொட‌ர்ந்து வாசித்து பின்னூட்ட‌ம் கொடுத்த‌ அத்த‌னை அன்பு உள்ள‌ங்க‌ளுக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்!!
Thank you So..So....Soooo Much!!! :-)

பாட்டி கதை (பாகம் 6)

  பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5   


                                                   பாட்டி கதை (பாகம் 6)
                                                                                                                           

                                                                         19

தன் வீட்டிலேயே பாட்டியும்... கூப்பிடும் தூரத்தில் அஞ்ச‌லியும் இருக்க ஆன‌ந்த‌மாய் விடிந்தது அந்த‌ப் புதுப் பொழுது!!  திரும‌ண‌ப் ப‌ர‌ப‌ர‌ப்பும் இல்லாம‌ல் இல்லை ஜீவாவுக்கு! நாளை மறுநாள் நிச்சயதார்த்தம்.... மனமெங்கும் சந்தோஷ அலைகள் கரைநனைக்க...... அன்றைய தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்த‌ ஜீவாவிட‌ம் பாட்டி தான் தன் பேரனுக்காகத் தேர்வு செய்துவைத்திருக்கும் காரைக் கொடுத்தார்!!!

ஆச்சர்யமாக.... ஓர் இன்ப அதிர்ச்சியாக..... பாட்டி தேர்வுசெய்து கொடுத்த கார், பாட்டியிடம் பேசுவதற்குமுன்பாக‌ ஜீவா தான் வாங்கப்போவதாய் முடிவுசெய்திருந்த அதே காராகவே இருந்தது....!! அஞ்சலியின் மனதைப் பாட்டி எப்படித்தான் படித்தாரோ அவளுக்குப் பிடித்த அதே மெட்டாலிக் கரும்பச்சை நிறத்திலேயே காரைத் தேர்வுசெய்திருந்தார் பாட்டியம்மா!!

த‌ன் கையிலிருக்கும் அதிசிய‌த்தை ஜீவாவால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை.... அம்பாசிட‌ர் காரை வாங்க‌ச்சொன்ன‌ பாட்டியம்மாவுடன் முற்றிலும் மூளைக்க‌ல‌ப்பில்லாது முழுக்க‌ முழுக்க‌ உண‌ர்வுப்பூர்வ‌மான‌தொரு ப‌ரிசோத‌னை முய‌ற்சியில் ஈடுப‌ட்டு ஒரு பேர‌னாய் அபார‌வெற்றி க‌ண்டுவிட்ட‌து க‌ண்கூடாக‌க் கையில் ப‌ள‌ப‌ள‌க்கிற‌து த‌ன் க‌ன‌வுகாரின் கையேடாக‌!!!

இந்த‌முறை பேர‌னின் ச‌ந்தோஷ‌ ர‌ச‌வாத‌த்தை அவ‌ன்முக‌த்தில் சிறு அசைவையும் மிச்ச‌ம் வைக்காம‌ல் க‌ண்க‌ளால் அள்ளிய‌து க‌ண்ணாடி போட்ட‌ பாட்டிய‌ம்மா!! இன்ப‌ அதிர்ச்சியில் திக்குமுக்காடிய பேரன் அப்ப‌டியே பாட்டியின் கால்களைத் தொட்டு ஆசீர்வாத‌ம் வாங்கினான்...

"அப்போ அம்பாஸிட‌ர் கார் வேணாமா பாட்டிம்மா??!!"

என்று குறும்பாய்க் கேட்ட‌ பேர‌னின் க‌ன்ன‌த்தைக் கிள்ளிச் சிரித்து த‌ள‌ர்ந்த‌ ந‌டையாய் த‌ன் அறை நோக்கிச் சென்றார் பாட்டிய‌ம்மா.....

குதூக‌ல‌ம் க‌ண்ணை ம‌றைத்திருக்க‌ ச‌ந்தோஷ‌ப் பாட்டியின் ந‌டையின் கூடுத‌ல் த‌ள‌ர்ச்சியை ஜீவா க‌வ‌னிக்க‌வில்லை....   

                                                                           20

இந்த‌வொரு அதிசிய‌ம் எப்ப‌டிச் சாத்திய‌மான‌து என்று ஜீவாவின் ம‌ன‌ம் அதிக‌ம் யோசிக்க‌வில்லை.... குறுகிய‌ இடைவெளியில் அன்று சிறுவனாக இருந்த‌ த‌ன்னுடைய‌ குறிப்பை அறிந்து இனிப்பும் கார‌முமாய் மாறிமாறி ம‌கிழ்வித்த‌க் கொஞ்ச‌ம் இள‌மையான‌ பாட்டிய‌ம்மாவுட‌னான‌ ப‌ழைய‌ ஃப்ளாஷ்பேக் காட்சிக‌ளோடு இணைத்து இன்று கையில் இருக்கும் இந்த‌ அதிசிய‌த்தைக் கோர்த்துப் பார்த்த‌ ஜீவாவுக்கு ம‌ன‌ம் ச‌ந்தோஷ‌ம் என்னும் வார்த்தையைத் தாண்டி திருப்தியென்னும் உண‌ர்வைச் சுவைத்த‌து...!!
இரண்டொரு நாட்களில் கார் கைக்குக் கிடைத்திடம் வாய்ப்பும் அதிர்ஷ்டத்தை ஊர்ஜிதம் செய்திட....

த‌ட‌த‌ட‌வெனத் திட்ட‌ங்க‌ள் தீட்டினான் ச‌ந்தோஷ‌த்தைக் கொண்டாடித் தீர்க்க‌!! பாட்டியிட‌ம் சென்று, கார் வருப்போகும் தினம் மாலையில் குடும்ப‌த்தோடு தாத்தா க‌ட்டிய‌ குல‌தெய்வ‌க் கோவிலுக்கு புதுக்காரில் முத‌ல்ப‌ய‌ண‌ம் என‌க் கூறினான்.... ஆயிர‌ம் யோச‌னைக‌ள் தோன்றியிருந்தாலும் பாட்டியை மகிழ்விக்க‌ இதுதான் மிக‌ச்சிற‌ந்த‌தாய்த் தோன்றிய‌து!!! அஞ்ச‌லியிட‌ம் ம‌ட்டுமின்றித் த‌ன் த‌ந்தையிட‌மும் த‌ன் சந்தோஷ‌த்தையெல்லாம் முழுமையாய் சுத‌ந்திர‌மாய்ப் ப‌கிர்ந்துகொள்ளமுடிவது பல வருட மன இறுக்கங்கள் முற்றிலுமாய்த் தளர்ந்ததுபோனது போல் ஓர் உணர்வு.... இன்று(முதல்) அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது வீட்டில் பாட்டியிருப்பார்!!!


                                                                            21 

இரண்டு நாட்களும் வேகமெடுத்து ஓடிட இன்றுமாலை புதுக்காரில் முதல்பயணம்!!!

தன்பாட்டியின் நினைவினாலோ என்னவோ அஞ்சலி பாட்டியம்மாவுடனேயேதான் தனது பெரும்பாலானத் பொழுதுகளை செலவிட்டுக் கொண்டிருந்தாள்...

"பாட்டிம்மா... சந்தோஷமா இருக்கீங்களா?"

என்று அடிக்கடி அஞ்சலி கேட்டுக்கொண்டே இருந்ததற்குக் காரணங்கள் இருந்தன...!

ஜீவா இந்த இரண்டு நாட்களும் வீட்டுக்கு அடிக்கடி ஃபோன் செய்துகொண்டேயிருந்தான்.... பாட்டி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேட்கக் கேட்கத் தனியே இத்தனை வருடங்கள் அந்தக் கிராமத்துவீட்டில் இந்த நேரங்களில் என்ன செய்துகொண்டிருந்திருப்பார் தன் செல்லப் பாட்டி என்று கிரஹித்துப் பார்க்க முயற்சித்த‌வனாயிருந்தான்!!!

ஜீவாவால் நிச்சியம் அதை உணர முடியாது என்று பாட்டிம்மாவுக்குத் தெரியும்... பேரனுக்காக சிறைபட்டிருக்கிறார் இம்முறை..... தன் அறையைவிட்டுப் பாட்டி அதிகம் வெளியே வரவேயில்லை... அந்த மாடிவீட்டு அறையிலிருக்கும் ஜன்னல் வழியே அடிக்கடி வெளியே கீழே தரையைப் பார்த்தவண்ணமாகவே இருந்தார்.... தனக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட உயரத்தைக் கணக்கிடுவதாக இருந்தது அந்தப் பார்வை... அந்த உயரம் ஏன் பாட்டியைத் துன்புறுத்துகிறது என்று புரியவில்லை....

காலையில் எழுந்ததுமுதலே உடலில் ஏதோவொரு உஷ்ணத்தை உணர்ந்து கொண்டேயிருந்தார் பாட்டியம்மா..... கார் பயணம்... ஜன்னல்வழியே பார்த்த புது பரபரப்புகள்.... கார் ஷோரூம்கள்.... புதுஇடத்துக்குப் பழக்கமில்லாது போதிய தூக்கமின்றி இடைவிழித்த இமைகள்.... அமர்ந்திருக்கும்போது கூட நகர்வதுபோலவே உணர்ந்தார்.... ஏதேதோ படபடப்புகளை உணர்ந்தார்... என்னவென்றே தெரியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுப்போன பாட்டியம்மா தன் வீட்டில் சோர்வு போக்குவதுபோலச் சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்துபார்த்தார்.... தாத்தா பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த வீட்டுச் சுவர் தந்த ஆறுதல் ஸ்பரிசத்தை இந்த கான்க்ரீட் சுவர்களால் தர இயலவில்லை... அஞ்சலியிடம் சொல்லியிருந்தால் டாக்டரிடம் அழைத்துச் சென்றிருப்பார்கள்....... தன் உடலுக்குள் இதுவரைப் பழக்கப்பட்டிருக்காதப் புதுவகை அழுத்த்தை உணர்ந்த பாட்டியம்மாவுக்கு உடல் வியர்க்கத் துவங்கியது... தனக்கு ஏதோ நேரப்போவதை உண‌ர‌த் துவ‌ங்கிவிட்ட‌
பாட்டியம்மா கொஞ்சம் மங்கிய‌ தனது கண்களால் தன்னுடைய‌ பையைக் துழாவ ஆரம்பித்தார்......!

                                                                        22

ஜீவாவுக்கு வீட்டிலிருந்து அழைப்பு... மறுமுனையில் கோபமாய் ராஜகோபாலன்..... ஆசைஆசையாய் அன்புமகன் போட்ட திட்டங்கள் அனைத்தும் காரணமின்றி தவிடுபொடி ஆன ஆற்றாமை மகன்மீதே கோபமாய் வெடித்தது...... மீண்டும் அதே கதை.... பாட்டி வீட்டில் இல்லை..... கிளம்பிவிட்டார்...!

குழம்பிப்போன ஜீவா.... நிதானமாக அஞ்சலியை அழைத்தான்.... அஞ்சலியின் பேச்சின்மூலம் பாட்டியின் பதற்றமான நிலையை ஓரளவு உணரமுடிந்தது ஜீவாவுக்கு... அஞ்சலியிடமும் அம்மாவிடமும் சொல்லிவிட்டுதான் சென்றிருக்கிறார் தன் பையைத் தூக்கிக்கொண்டு...!

"ஆனால் ஏன்???"  என‌க்கேள்வியெழுப்பும் மனதிற்குச் சொல்ல பதிலில்லை!

எந்தவோர் உண‌ர்வும் இல்லாமல் அப்படியே அமைதியானான் ஜீவா.....

அவ‌ன் செல்ஃபோன் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது.... ஆசையாக‌ வாங்கிய‌ புது கார் டெலிவ‌ரிக்கு ரெடியாக‌ இருப்ப‌தைச் சொல்ல‌க் கார் ஷோரூமிலிருந்து தொட‌ர்ந்தன‌ அழைப்புக‌ள்..!!!


                                                       (தொட‌ரும்..... அடுத்த பாகத்தில் முடியும்!!)

அடுத்த பாகம் இங்கே!

Tuesday, December 21, 2010

பாட்டி கதை (பாகம் - 5)

   முந்தைய பாகங்களுக்கு இங்கே சொடுக்கவும்.....                                                   
                                                        
                                                          பாட்டி கதை (பாகம் - 5) 

                                                                           15

அடுக்கடுக்காய் மின்னும் வண்ண விளக்குகளின் ஒளியை மெட்டாலிக் ரதங்கள் பிரதிபலிக்க, ரம்மியமாய் ஜொலிக்கும் அந்த கார் ஷோரூமுக்குள் பாட்டியும் ஜீவாவும் அவர்களை வரவேற்ற அந்த இளம் எக்ஸிகியூட்டிவ் சீதாராமனைப் பின்தொடர்ந்து சென்றனர்.....

அந்தப் புதிய உலகத்தின் பிரம்மாண்டத்தைப் பாட்டியின் கண்களும்.... புதிய பாட்டிலில் ஊற்றப்பட்ட பழைய ஒயினாக மினுமினுத்துத்  தளும்பும் பாட்டியை ஜீவாவின் கண்களும்.... விடாது உற்றுநோக்கிக்கொண்டிருந்தன!!

மார்க்கெட்டின் அதிரடி எண்ட்ரியான அந்த ஜெர்மன் டெக்னாலஜியில் உருவான அவர்களின் பெருமைக்குரிய காரின் அருகே பாட்டியையும் ஜீவாவையும் அழைத்துச்சென்ற சீதாராமன்.... மிகமிகத் தன்னம்பிக்கையாகத் தன் காரின் டெக்னிகல் ப்ளஸ்பாயிண்டுகளை "வெல் மிஸ்டர் ஜீவா.....யூ ஸீ...." என்று துவங்கியதுதான் தாமதம்.... ஜீவா அவரை உடனே இடைமறித்தான்......

"ஸாரி பாஸ்...... இங்கே என் பாட்டிதான் கஸ்டமர்.......!! நான் ஜஸ்ட் அவங்களுக்கு டிரைவர்தான்...... அவங்க பார்த்து ஓகே பண்ணப்போற காரைத்தான் வாங்கப்போறோம்.... ஸோ நீங்க டைரக்டா அவங்ககிட்ட பேசுறதுதான் கரெக்ட்....!!!" என்று நட்பாகச் செல்லிவிட்டு ஜீவா நகர.....

கிராமத்து நாணத்தால் சற்றுத் தள்ளி நிற்கும் பாட்டியம்மாவை எட்டி நோக்கிய சீதாராமனுக்கு அவர்களுக்கிடையே ஒரு தலைமுறையின் இடைவெளியே தெரிந்தது!!!!!

"இந்த‌க் காரைப் பார்க்க‌லாமா பாட்டிம்மா?!!" என பவ்வியமாய்த் தன் பாட்டியின் தோள்களைப் பற்றிக்கொண்டுப் பாட்டியைப் பாசமாய் முன்னிறுத்திவிட்டு ஜீவா சற்று ஓரமாகச் சென்று அமர்ந்துகொண்டான்...!!! :)

சற்றும் எதிர்பார்த்திராத அந்த அதிரடியான மண்வாசனை கமழும் புதுக் கஸ்டமரைப் (!) பார்த்துப் புன்னகைத்த சீதாராமன் ஒருமுறை த‌ன் ஷர்ட்டின் "டை"(Shirt tie)யை ச‌ரிசெய்துகொண்டார்!!
சிரித்த முகமாகத்  த‌ங்க‌ள் காரின் டெக்னிக்க‌ல் ப்ள‌ஸ்பாயிண்டுக‌ளைப் பாட்டிக்கு ஏற்ற‌ மொழியில் எடுத்துச்சொல்ல‌த் தன்னை தயார்செய்துகொண்டு......

 " ... நம்ம கார் ஸாலிட் பாடி பாட்டியம்மா...... அதுமட்டுமில்ல.....  ஹைட்ராலிக் ச‌ஸ்பென்ஷ‌ன்ஸ்.....  சென்ட்ரல் லாக்..... பவர் விண்டோ....ஏர் பேக்...ஜிபிஎஸ்...... " என்று தன்னுடைய வழக்கமான பாணியில் டெக்னிக்கலாக அடுக்க ஆரம்பித்த சீதாராமன்..... ஒருமுறை அழுத்தமாக எச்சில் விழிங்கிக்கொண்டு...." ஹ்ம்ம்ம்ம்.... எப்ப‌டிச் சொல்ற‌து!!" என்று த‌ன‌க்குள் மென‌க்கெடுவதையெல்லாம் எதுவுமே தெரியாதவன்போல அமைதியாகத் தூர நின்று ரசித்திருந்தான் ஜீவா....!!! அப்படியே அவன் தன் பாட்டியை நோக்கிப் பார்வையைத் திருப்ப‌.....

 சீதாராமன் தன் உயிர்நோக உச்சரித்தக் கார் சம்பந்தமான கலைச்சொற்களை யெல்லாம் புரிந்துகொள்ள‌ அதிக‌ம் முய‌ற்சிக்காத  பாட்டியம்மா.... அந்தக்  காரையே சுற்றிச் சுற்றிப் பார்த்து, நடையில் தளர்ச்சியும், விழியில் மிரட்சியுமாய் உற்றுநோக்கிக்கொண்டிருந்ததை கொஞ்ச‌ம் வில‌கியிருந்து க‌ண்டு ர‌சிக்கையில் ஜீவாவுக்குக் க‌விதைக‌ள் தோன்றிய‌து ம‌ன‌துக்குள்!!! மெல்ல மெல்ல அந்தக் காரின் அருகில் சென்று அதனை ஒருமுறைத் தன் மென்மையான விரல்களால் தொட்டுப்பார்த்தார் பாட்டி!!!

இறுதியில் சீதாராமன் "ஃபீல் ஃப்ரீ அம்மா...." என்று சிரித்துப் பாட்டியைக் காருக்குள் அம‌ர்ந்து பார்க்க‌ப் ப‌ணித்தான்........சீதார‌ம‌னுக்கு உத‌வ ஓர் அழகான, குட்டைப் பாவாடை இள‌ம்பெண்ணும் சேர்ந்துகொண்டாள்!! பாட்டிய‌ம்மாவைப் பாந்த‌மாய் அழைத்துக் காருக்குள் அம‌ர‌வைத்தார்க‌ள்... பாட்டிக்கு ஸீட்பெல்ட் பொருத்திக்காட்ட‌ அந்த‌ இள‌ம்பெண் உத‌வ, அவளின் மிக்ச் சிக்கனமான உடையை வித்தியாச‌மாக‌ப் பாட்டி பார்த்த‌ பார்வை தூர‌த்திலிருந்து பார்த்த‌ ஜீவாவுக்கு சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்த‌து!!!

பாட்டிய‌ம்மா இப்போது டிரைவ‌ர் ஸீட்டில்!!! ஓட்டுந‌ரின் வ‌ச‌திக்கேற‌ப‌ப் பொஸிஷ‌னிங் செய்துகொள்ளும் வ‌ச‌தியுள்ள‌ எல‌க்ட்ரானிக் ப‌வ‌ர்ஸ்டிய‌ரிங்கில் கைவைத்துக் கொண்டுக் க‌ண்ணாடி வ‌ழியே பேர‌னைத் தேட‌த் துவ‌ங்கினார்.... !! பாந்தமாய்க் கையசைத்த ஜீவாவைப் பார்த்துப் பாட்டி புன்னகைக்கக்...... க‌டைசியாக இந்தக் காரை ஒத்த‌ ம‌ற்ற  கம்பெனி கார்களுட‌னான‌ ஒப்பீடு ம‌ற்றும் ப‌ல‌ப்ப‌லத் த‌க‌வ‌ல்க‌ள் அட‌ங்கிய‌ ப‌ள‌ப‌ள‌ பாம்ப்ளெட்டுக‌ளைப் பாட்டியிட‌ம் கொடுத்து விடைபெற்றனர் அந்தக் கார் கம்பெனிகாரர்கள்..... பாச‌மாக!!!

                                                                           16

இரண்டொரு நாட்களில் ஜீவாவின் இல்லத்தில் அஞ்சலி - ஜீவாவுக்கு  நிச்சியதார்த்தம்..... இரண்டு குடும்பங்களும் ஏற்கெனவே நீண்டகால நட்பால் நெருங்கியவைதான் எனினும் சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டு பெண்வீடாக ஜீவா தங்கியிருக்கும் அபார்ட்மெண்டிலேயே அவர்கள் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு நண்பர் வீட்டை அமைத்திருக்க, இன்று இரவு பெண்வீட்டார் விஜயம்!! இந்த நேரத்தில் ஜீவா வீட்டில் இல்லாமல், பாசத்தைக் கொட்டிக்கொடுத்தாலும் தட்டிக்கழிக்கும் தன் அம்மாவுடன் (பாட்டியுடன்) ஊர்சுற்றிக்கொண்டிருப்பதை ராஜகோபாலன் ரசிக்கவில்லை....

இதேவீட்டில் தன்னுடைய அம்மாவைப் பலமுறை தன்னுடன் தங்கிவாழும்படி சகலபிரயத்தனங்களுடன் ராஜகோபாலன் முயற்சித்தும் தன் பாசத்தை உதாசீனப்படுத்திவிட்டதான குற்றச்சாட்டு ஆழமாகத் தேங்கிப்போயிருந்தது அவருக்குள்.....

தன் மனைவியிடம் கொதித்துத் தீர்த்துக்கொண்டிருந்தார் ராஜகோபாலன்.... தன் மகனின் பாசத்தையும் இந்தக் கிழவி உதாசீனப்படுத்தத்தான் போகிறாள் என்று கட்டியம் கூறினார் முழு நம்பிக்கையுடன்!!!

அஞ்சலி குடும்பத்தினர்...... வந்திறங்கினர்.... மருமகள் தன் வீட்டிற்குள் வலதுகால் வைக்கும் நேரம் வராததால் (!) சாஸ்த்தரலு.... சம்பிரதாயலு......பெண்வீடாக அமைத்திருந்த வீட்டில் அவர்களை வரவேற்கும் பணியில் ஜீவாவின் அம்மாவும் அப்பாவும் பிஸியாகினர்......

                                                                         17

கார் ஷோரூமைக் கலக்கிய தன் "முத‌லாளிய‌ம்மா"வை ம‌ரியாதைப் புன்ன‌கையுட‌ன் காரில் மீண்டும் அலுங்காம‌ல் அம‌ர‌வைத்து ஜீவா வ‌ண்டியை செலுத்தினான் அடுத்த‌ ஷோரூமுக்குள்!!!

அடுத்த‌டுத்து மூன்று கார் ஷோரூம்க‌ளுக்கு ர‌க‌ளையான‌ அதிர‌டி விஜ‌ய‌ம் கொடுத்துவிட்டப் பாட்டிய‌ம்மா க‌ளைப்படைந்து விடும்முன்பாக‌வே த‌ன‌க்கு மிக‌வும் பிடித்த‌மான‌வ‌ர்க‌ளை எப்போதும் அழைத்துச் செல்லும் ரெஸ்டாரெண்டில் ஏற்கென‌வே 'புக்' செய்து வைத்திருந்த‌ டேபிளில் பாட்டியை அம‌ர‌வைத்து ஆர்ட‌ர் செய்த‌ ஸ்பெஷ‌ல் உண‌வுக‌ளையெல்லாம் தானே பாட்டிக்குப் ப‌ரிமாறினான்!! பல‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு கிராமத்தில், பாட்டிக்குக் குட்டிப் பேரனாய்க் க‌ழித்த எவர்கிரீன் பொழுதுக‌ளுட‌ன் இன்றைய நாளின் அனுபவங்களும், ஒரு பேரனாக அவ‌ன் ம‌ன‌ம் அடைந்த‌ திருப்தியும் சேர்ந்துகொண்ட‌து.....

தன்னுடைய  மென்மையான விரல்களால் இலையை வ‌ருடி வ‌ருடி பாட்டி சாப்பிடுவதைப்  பாட்டியம்மா கவ‌னிக்காத‌ பொழுதெல்லாம் க‌ண்கொட்டாம‌ல் பார்த்துக்கொண்டே இருந்தான்!!! அத்தனை திருத்தமாக..... அந்த வலிமை குறைந்த கரங்களால் இலைச்சோறைக் கையால் உருண்டை பிடித்து மீதமிருந்த பற்களால் பாட்டி  சவைத்து சாப்பிடுவதைப் போலவே ஜீவாவும் சாப்பிட முயற்சித்துத் தோல்வியடைந்தான்!!! :)

ம‌ண‌ம‌க‌ள் தான் விள‌க்கேற்றப்போகும்  வீட்டுக்கு வ‌ந்து சேர்ந்துவிட்ட‌தாக‌க் குறுந்த‌க‌வ‌ல் வந்தது அஞ்ச‌லியிட‌மிருந்து!!!

வீடுநோக்கி ப‌ற‌ந்தார்க‌ள் பாட்டியும் பேர‌னும்... கார்ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ க‌ண‌க்க‌ற்ற‌ ப‌ள‌பள‌ ஃபாம்ப்ளெட்டுகள், நோட்டீசுக‌ளையெல்லாம் ப‌த்திர‌ப்ப‌டுத்தி சிர‌த்தையாய்த் த‌ன் பையில் வைத்துக்கொண்டார் பாட்டி!!

                                                                            18

பார்த்த மாத்திர‌த்திலேயே அஞ்ச‌லியைப் பிடித்துப்போன‌து பாட்டிக்கு!! அஞ்சலியும்  த‌ன் சொந்த‌ப் பாட்டியைப் போன்றேதான் ந‌ம் பாட்டிய‌ம்மாவையும் ஏற்கெனவே உணர்ந்திருந்தாள் ஜீவாவின் "பாட்டி கதை"களை நாளும் அலைபேசியில் கேட்டுக் கேட்டு!!!!

அஞ்ச‌லியின் த‌ந்தையும் ஜீவாவின் அப்பா ராஜ‌கோபால‌னும் முன்பே ந‌ண்ப‌ர்களாதலால் சிர‌ம‌மின்றி எளிதில் ஒட்டிக்கொள்ள‌ முடிகிற‌து அஞ்ச‌லிக்கு!! அதிக‌ம் ப‌ரிச்சிய‌மில்லாத‌ ஜீவாவுட‌னும் இப்போது "ஃபோன் ஃபிரெண்ட்" ஆகிவிட்டாள் அல்ல‌வா!!!  சிறிது நேரம் பெண்வீட்டாருடன் பேசிவிட்டு , ஜீவாவின் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குத் திரும்பினர்........ பாட்டியுடன்  ராஜகோபாலன் பேசிக்கொள்ளவில்லை!!!  ஜீவாவின் அம்மா புன்னகைத்து வரவேற்றார் பல நாள் கழித்துத் தன் அத்தையை......கிராமத்து ஸ்டைலில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் யதார்த்தமாய்!!!

 நேரம் அதிக‌மாகிப் போய்விட‌ பாட்டிக்கென்று ஏற்கெனவே ஜீவா த‌ன் வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்த‌ அறையில் மெத்தையில் ப‌டுக்க‌வைத்துக் க‌ம்ப‌ளியால் பொதிந்து விட்டான்..... நிம்ம‌தியாக‌ப் ப‌டுத்துத் தூங்குமாறு ப‌ணித்த ஜீவா ஏற்கென‌வே பாட்டியிடம் திட்டவட்டமாக  சொல்லிவிட்டான்....... இப்போது பார்த்த கார்களானாலும் சரி... தாத்தாவின் அம்பாஸிடர் காரானாலும் சரி...... பாட்டி சொல்லும் காரைத்தான் தான் வாங்கப் போவதாக!!!!!!

பாட்டிக்கான அறையைப்  பார்த்துப் பார்த்து ஜீவா தயார் செய்ததை அறிந்திருந்த ராஜகோபாலன் த‌ன் ம‌னைவியுடன், ஜீவா சென்றபின்,  பாட்டியின்  அறைக்கு அருகே சென்றார்........த‌ன் தாயின் வறட்டு குண‌த்தைப் ப‌ற்றித் த‌ன‌க்கு ந‌ன்கு தெரியும் என்று த‌ன் ம‌னைவியிட‌ம்  சொன்னவர்.... ஜீவா சிர‌த்தையோடு ப‌ஞ்ச‌னையும் க‌ம்ப‌ளியும் கொடுத்துப் பாச‌மாய்ப் ப‌டுக்க‌வைத்த‌தை உதாசின‌ப்ப‌டுத்திவிட்டு நிச்சிய‌ம் இந்நேர‌ம்‌ த‌ன் தாய் த‌ரையில் ஒரு  பாயை விரித்துதான்  ப‌டுத்திருப்பார் என்று ம‌னைவியிட‌ம் "பெட்"(bet) வைத்துக்கொள்ளாத‌ குறையாய்ச் சொல்லி  பாட்டியை மெதுவாக‌ப் பார்த்தார்க‌ள்....

 ச‌ரியாக‌வே க‌ணித்திருந்தார் ம‌க‌ன் த‌ன் தாயை!!  ப‌டுக்கையில் பாட்டியைக் காண‌வில்லை!!

கீழே தரையில் ஒரு மெல்லிய‌ விரிப்பில்தான் போர்த்திப் ப‌டுத்திருந்தார் பாட்டிய‌ம்மா.....

ஆனால் அவ‌ர் தூங்கியிருக்க‌வில்லை......  த‌ன் க‌ணிப்பு பொய்க்காத‌ப் பெருமித‌த்துட‌ன் ராஜ‌கோபால‌ன் இன்னும் கொஞ்ச‌ம் எட்டிப்போக....... பாட்டி த‌ன் க‌ண்ணாடியைப் போட்டுக்கொண்டு கார் ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ ஏடுகள் மற்றும் பள ப்ள பாம்ப்ளேட்டுகளை யெல்லாம் தரையில் விரித்துவைத்துக் கொண்டு மிகுந்த  சிர‌த்தையாய்த் தன் பேர‌னுக்குக் காரைத் தேர்வு செய்ய‌ மென‌க்கிட்டுக் கொண்டிருந்தார் ஏசி குளிருக்க்காகத் தன் உடலை இடுங்கிக் கொண்டு........!!!

பேச வார்த்தைகளின்றி மௌன‌மாக‌த் த‌ன் அறைக்குச் சென்றார் ராஜகோபாலன்..... இயல்பாய்க் கலங்கிய கண்களுடன்!

                                                                                                                                   (தொடரும்..... )    
அடுத்த பாகம் இங்கே!                                                          

Thursday, December 16, 2010

பாட்டி கதை (பாகம் - 4)

பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
                                                      
                                                  பாட்டி கதை (பாகம் - 4)                                     

                                                                          12

வேக‌வேக‌மாகத் திரும‌ண‌ வீடாக‌க் க‌ளைக‌ட்ட‌த் துவ‌ங்கியிருந்தது ஜீவாவின் வீடு!!... வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வ‌ந்த‌ கையோடு அப்பா திருமண ஏற்பாடுகளில் பரபரப்பாகிறார்.... அம்மா அழைப்பித‌ழ்க‌ளின் ஓர‌ங்களுக்கு மஞ்சள் இட்டுக் கொண்டிருக்கிறார்... இதோ அடுத்த‌ வார‌ம் அவ‌ர்க‌ள் வீட்டிலேயே நிச்சிய‌தார்த்த‌ விழா.... தொட‌ர்ந்த‌ இர‌ண்டாவ‌து வார‌ம் திரும‌ணம்!!!.... பரீட்சை முடிந்து நாளைக்கே அஞ்சலி வ‌ந்துவிடுவாள் அவர்கள் வீட்டுக்கு!! அடுத்த இரண்டு நாட்க‌ளில் அஞ்ச‌லியின் பெற்றோரும் வ‌ந்துவிட‌ நிச்சிய‌தார்த்த‌ம் இனிதே ந‌ட‌க்க‌ப்போகிற‌து.... ஜீவாவுக்கோ, வீட்டில் இல்லையென‌த் தெரிந்தும் அந்த வெறுமையில் பாட்டியைத் தேடுகின்ற‌ன‌ க‌ண்க‌ள்.... தன் வீட்டில் பாட்டிக்கு இடம்தேட ஆரம்பித்துவிட்ட ஜீவாவின் மனது "பாட்டி வீடு" என்று தன்னைவிட்டுத் தனியாக ஓர் இடம் இந்த உலகில் இருப்பதை இனியும் ஏற்றுக்கொள்ளும் பொறுமையை இழக்கத் துவங்கியிருந்தது... காரணம்... பாட்டியைத் தேடும் பாசம் மட்டுமே....

ஒரு கார் ஷோரூமிலிருந்து அழைப்பு வ‌ருகிற‌து ஜீவாவின் அலைபேசிக்கு...அவர்களின் லேட்டஸ்ட் மாடல் காரை "டெஸ்ட் டிரைவ்" செய்துபார்ப்ப‌த‌ற்கு இன்று மாலை ஷோரூமிற்கு வ‌ர‌லாம் என்று க‌ண்ணியமாக‌ அழைப்பு விடுக்கிறார்க‌ள்!!

"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!"

ஓட்டுந‌ர் இன்றித் தன் கம்பெனி காரை இம்முறை தானே பாட்டிவீடு நோக்கி ஓட்டிச்சொல்லும் ஜீவா சிரித்துக் கொள்கிறான் தன் பாட்டியை நினைத்து!!

"இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!"

அஞ்ச‌லியிடம் ஆரோக்ய‌மாய் சவாலை ஏற்றுக்கொண்ட‌ ஜீவா தீர்க்கமாக உள்செல்கிறான் தன் பிரியமான பாட்டி வீட்டுக்குள்!!

இந்த முறை எல்லாமே முன்பே திட்ட‌மிட‌ப் ப‌ட்டிருந்த‌து... சொல்லியிருந்த நேரத்துக்கு முன்னதாகவே கிளம்பித் தயாரா இருந்த பாட்டி பதற்றமே இல்லாம முதன்முறை தன் வீட்டிற்கு சொல்லிட்டு வரும் பேரனுக்காகக் காத்துக்கொண்டு இருந்தார்.... ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களைப் பாட்டிக்குத் தரத் திட்டம் போட்டிருந்த ஜீவாவுக்கு பாட்டி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.... "ரெடியா இருங்க பாட்டிம்மா!" என்று சொல்லி ஃபோனை வைத்துக் காரை ஜீவா ஸ்டார்ட் செய்யும் கால அவகாசத்தில் சலித்தக் கடலைமாவில் கல்கண்டு சேர்த்துக் கிண்டி சூடுபறக்க உருண்டை பிடித்து சுடச்சுட மூன்று லட்டுகளை ஜீவாவுக்கு ஊட்டிவிட்டு அசத்தியது!!!

தயாராக‌ இருந்த‌ பாட்டியை மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌க் காரின் முன்னிருக்கையில் அம‌ர‌ வைத்துப் பாசமாய் ஸீட் பெல்ட் பொருத்திவிடுகிறான் பேர‌ன்.... ச‌ரியான‌ அள‌வில் குளிரூட்ட‌ப்ப‌ட்ட‌ காரில் பாட்டியின் முகபாவங்களைக் க‌வ‌னித்த‌வாறே காரை அலுங்காமல் செலுத்தினான்!!! அமைதியாய்.. வசதியான இருக்கையில் "ஜம்" மென்று கம்பீரமாய் அம‌ர்ந்து வ‌ரும் பாட்டி அந்த‌ காரின் சொகுசான‌ வ‌ச‌திக‌ளைப் புதிதாக‌ப் பார்க்கிறார்...!!

தென்ற‌ல்போல‌ மெலிதான‌ குளிர்ச்சியை இத‌மாய்த் தெளிக்கும் ஏசி... சுவாச‌த்துக்குச் சுக‌மாய் கார் ஃப்ரெஷ்ன‌ரின் வாச‌ம்..... பூப்போல‌ இய‌ங்கும் கிய‌ரும், ப‌வர் ஸ்டியரிங்கும்..... கொஞ்ச‌மும் இரைச்சலின்றி ப‌ள்ள‌ம் மேடுக‌ளில் அமுங்கிக் கொடுத்து அமைதியாய் ஊர்ந்து செல்லும் அந்த ஊர்தியின் உள்புற‌ அழ‌கை அதிகம் அசையாமல் க‌ண்க‌ளை மட்டும் உருட்டிப் புதிதாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.... அப்போது "இளைய நிலா.... பொழிகிறதே...!!" எனக் காருக்குள் இளையராஜா தாலாட்ட ஆரம்பித்தார்.... வ‌ண்டியை ஓட்டிக்கொண்டே ஓர‌க்கண்ணால் தன் பாட்டியை ஒரு குழந்தையாய்ப் பார்த்துப் புன்னகைக்கிறான் ஜீவா!!... ஊரைவிட்டு வெளியேறிய‌து வாக‌ன‌ம்..... ஜீவா வேக‌மெடுக்க‌ ... இய‌ல்பாய் க‌ண்க‌ள் சொருகித் தூங்கிப்போனார் பாட்டிய‌ம்மா!! ராஜ‌ச‌ய‌ண‌ம்!! :-)


                                                                    13


முன்ன‌தாக முந்தைய நாளில்.... ஜீவா பாட்டியிட‌ம் தான் ஏதோவொரு காரை வாங்கி ஏமாற‌த் தெரிந்த‌தாக‌வும் இப்போது பாட்டியின் அறிவுரைக் கேட்டுதான் (!) தெளிவ‌டைந்து விட்ட‌தாக‌வும் கூறினான்.... பாட்டியின் ம‌கிழ்ச்சி குறையுமுன்பே.... ஜீவா,
" எல்லா க‌ம்பெனிகாரர்களூம் எங்க‌ காரை வாங்குங்கனு ஒரே தொந்த‌ர‌வு பாட்டிம்மா..... உங்க‌ பேர‌ன் ஏமாறுவானா!! தெளிவா சொல்லிட்டேன் என் பாட்டி ச‌ம்ம‌த‌ம் சொல்லுற‌ காரைத்தான் நான் வாங்க‌ப்போறேன்னு!!"
...
கொஞ்ச‌ம் இடைவெளிவிட்டு மெதுவாக....

"அத‌னால‌ நாளைக்கு ந‌ம்ம‌ ரெண்டுபேரும் சிட்டில‌ இருக்குற‌ எல்லா கார் ஷோரூமுக்கும் போறோம்!! எல்லா காரையும் பாத்துட்டுக் கடைசியா பாட்டிம்மாக்குப் பிடிச்ச காரா பாத்து வாங்குறோம்!!
!" 
என்று நைஸாக சொருகினான்.....எந்த‌வொரு ப‌திலுக்கும் பாட்டி த‌யாராகும் முன்பே....
"நாளைக்கே பாட்டிம்மா ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்திட‌ணும்.... உங்க‌ ஒரே பேர‌னுக்கு ந‌ட‌க்க‌ப்போற‌ ஒரே க‌ல்யாணம் இது.."
என்று எப்ப‌டியோ சிரிக்க‌ வைத்துப் பேசிப்பேசியே பாட்டியைத் த‌ன் ப‌க்கம் தன் வீடு நோக்கித் தன் வாழ்க்கைக்கு செல்லப்பேரமொழிபேசி மெல்ல‌ மெல்ல‌ ந‌க‌ர்த்தியிருந்தான்!!!
இன்று.... ஜீவா தன் காரில் சிட்டிக்குள் நுழைந்தபின்னும் அகலவில்லைப் பாட்டிம்மாவின் அனந்த சயனம்... தூங்கும் பாட்டியை பார்த்துப் பார்த்தே அலுங்காமல் ஓட்டி வந்தான் தன் ஊருக்குள்!!

                                                                     14


சுகமான பயணத்தில் தூங்கிப்போன‌ பாட்டி ஒரு ஹாரன் சத்தத்தில் திடீரெனக் க‌ண்விழித்த‌போது கண்முன்னே முற்றிலும் ஒரு புதிய‌ உல‌க‌ம் ப‌ர‌ப‌ர‌வென‌ இய‌ங்கிக் கொண்டிருந்த‌து....
கிழ‌க்கு நோக்கி மேலேறித் திடுமென‌ வ‌ட‌கிழ‌க்கில் வ‌ளையும் ஒரு ஃப்ளைஓவ‌ரில் அனாய‌ச‌மாக‌ காரை வளைத்துக் கொண்டிருந்தான் ஜீவா.....இப்போது பாட்டிக்கு வண்டியின் வேக‌ம் புல‌ப்ப‌டுகிற‌து.... ப்ளைஓவ‌ரின் மேலேயிருந்து ஜ‌ன்ன‌லில் த‌லைக்குக்கீழே ரோட்டின் இருபுற‌மும் நகர இட‌மின்றி அடைத்துக்கொண்டு முன்னேறும் நூற்றுக்க‌ண‌க்கான‌ கார்க‌ளும் ப‌ஸ்க‌ளும் அரற்ற.... அந்த‌ இடைவெளிக‌ளிலும் க‌ப‌டியாடும் வித்தியாச‌மான‌ பைக்குக‌ளையும் பார்க்க‌த் த‌லைசுற்றிய‌து பாட்டிக்கு....

நான்கு ரோடுக‌ள் ச‌ந்திக்கும் ஒரு பிர‌ம்மாண்ட‌ சிக்ன‌லில் முத‌ல்வ‌ரிசையில் அவ‌ர்க‌ள் கார் நிற்கிற‌து..... சுற்றிமுற்றி நாற்புற‌மும் ஆக்ஸ‌லேட்ட‌ர்க‌ளை முறுக்கிக் கொண்டுக் காத்திருக்கும் அவ‌ச‌ர‌ம் ஒரு போர்க்க‌ள‌த் தோற்ற‌த்தைக் கொடுத்த‌து பாட்டிய‌ம்மாவுக்கு!!

குழ‌ப்ப‌மான‌ சிக‌ப்பு ப‌ச்சை ஒளிவிளையாட்டில் பதற்றமாய்ப் ப‌ங்குபெறும் பாத‌சாரிகளையும்... அஸ்த‌ம‌ன‌ வேளையின் கோப‌மான‌ ஹாரன்க‌ளிலும் உண்மையிலேயே கொஞ்ச‌ம் கிறுகிறுத்துப் போன‌ பாட்டிய‌ம்மா.... இந்த‌த் திடீர் ப‌ர‌ப‌ர‌ப்புக‌ள் ஒவ்வாம‌ல் கொஞ்ச‌ம் உட‌ல்குறுக்கிக் க‌ஷ்ட‌மாய்த் த‌ன் கைகளால் காதுக‌ளை மூடிக்கொள்ள‌ப் போனார்.... அப்போது அருகிலிருந்த‌ கிய‌ர் மாற்றும் கரம் பாட்டியின் கையைப் பாச‌மாய்ப் ப‌ற்றிக்கொண்டது.....!!!

முற்றிலும் புதிய‌ சூழ‌லில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ப் பாச‌மான‌ அந்த‌ ஸ்ப‌ரிச‌ம் தான் தூக்கிவ‌ள‌ர்த்த‌ பேர‌னுடைய‌து என்று ம‌ன‌ம் அறிந்த‌ க‌ண‌ம் சில்லிடும் ஓர் அற்புத‌மான‌ உண‌ர்வை அனுபவித்தார் பாட்டிய‌ம்மா.... !!! அதுமுதல்....  ப‌ட்ட‌ண‌த்து மிர‌ட்ட‌லைச் ச‌ந்திக்கும் புதுத்தெம்போடு இப்போது, ர‌க‌ர‌க‌மாய் மின் விள‌க்குக‌ள் க‌லர்க்கோல‌ம் போட்டிருக்கும் பட்டணத்து மாலை அழ‌கை  ஜ‌ன்ன‌ல் வ‌ழியே ர‌சிக்க‌த் துவ‌ங்கினார் கிராமத்துப் பாட்டிம்மா!!!

த‌ரையிலிருந்து பிர‌ம்மாண்ட‌மாய் எழுந்து நின்ற‌ ஒரு கார் ஷோ‍ரூமில் கால்ப‌தித்து இற‌ங்கினார்க‌ள் பாட்டியும் பேர‌னும்...

முத‌ல்நாள் ஸ்கூல்செல்லும் பிள்ளைபோல் புதிதான‌ அந்த‌ சூழ‌லில் பாட்டிம்மா முற்றிலும் சர‌ண‌டைந்துவிட்டதோர் உட‌ல்மொழியை வெளிப்ப‌டுத்தித் த‌ய‌ங்கி ஒடுங்கி நின்றார்... பாட்டியின் சின்னச் சின்ன‌ அசைவுக‌ளைக் கூட‌ இப்போது மொழிபெய‌ர்க்க‌த் தெரிந்துகொண்ட‌ ஜீவா... காரிலிருந்து இற‌ங்கிக் கொஞ்ச‌ம் குறுகி நின்ற‌ பாட்டியின் தோள்பிடித்து உள் அழைத்துச் சென்றான்.....

 "ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்" என்று அல‌ட்டிக்கொள்ளும் மாபெரும் பிரம்மாண்ட கார் ஷோரூம் அது!! ஸ்டுடியோ எஃபெக்டில் மிர‌ட்ட‌லாய் அழ‌க‌ழ‌கு கார்க‌ள் பேராண்மையுடன் கம்பீரமாய் மின்னொளியில் ஜொலித்துக்கொண்டு ட‌ய‌ரூன்றி(!) நின்றுகொண்டிருக்கின்றன..
...
"ஹலோ ஐம் சீதாராமன்"

என்று தானாக‌வே ஜீவாவிடம் அறிமுக‌மாகிக்கொண்டார் ஓர் எக்ஸிகியூட்டிவ்!! ப‌டுஸ்மார்ட்டான‌ ஓப‌னிங்.... கொடுத்துக் கை குலுக்கிக் கொண்ட‌ அந்த இளம் எக்ஸிகியூட்டிவ் தன் கார் மார்க்கெட்டிங் தொழில்வாழ்வின் மிக‌ வித்தியாச‌மான‌தொரு சத்திய‌சோத‌னையை இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்க‌ப்போவ‌தை அப்போது உண‌ர்ந்திருக்கவில்லை....!!


                                                                                                                      தொடரும்.......
அடுத்த பாகம் இங்கே!

Wednesday, December 15, 2010

பாட்டி க‌தை (பாக‌ம் 3)

பாகம்- 1
பாகம்- 2     

                                                          பாட்டி க‌தை (பாக‌ம் 3)                                            

                                                                             9

நெஞ்சம் நிறைய சந்தோஷம் நிறந்திருந்தாலும் தூக்கம் வரத் தாமதம் ஆனது ஜீவாவுக்கு...

"பாட்டி வீடு" என்று தனக்கொரு இடம் பூமியில் இன்னும் எத்தனை நாள் இருக்கும்?? இன்று நாள்முழுதும் கேட்ட‌ அந்த‌க் கணிந்த‌ குர‌ல் இன்னும் எவ்வ‌ள‌வு நாள் ஒலிக்கும்...??? தொடர்ந்த கேள்விகளால் இன்று உற‌ங்கிவிடுவ‌து அவ்வ‌ள‌வு எளித‌ல்ல‌ என்று புரிந்த‌து!

பாட்டிவீட்டுச் சுவ‌ரில் க‌ம்பீர‌மாய் சிரித்துக் கொண்டிருக்கும் தாத்தாவின் புகைப்ப‌ட‌ம் ம‌னதைக் காரணமின்றி வ‌ட்ட‌ம‌டித்துக் கொண்டேயிருந்தது... தான் புகைப்ப‌ட‌த்தில் ம‌ட்டுமே க‌ண்டிருக்கும் தன் தாத்தா, மிக‌க் க‌ம்பீர‌மாக‌த் த‌ன்னுடைய‌ பெருமித‌ அடையாள‌மான, அவருடைய‌ கார் அருகில் வைத்து எடுத்துக்கொண்ட அதே படம்தான்!!

அந்த‌க் கிராம‌த்து ம‌ண‌ல்வெளியில் முத‌ன்முத‌லில் கார் ட‌யரின் அச்சுப்ப‌தித்த‌ பெருமைக்குரிய‌வ‌ர் ஜீவாவின் தாத்தாதான்! அந்த‌ப் பெருமையை ஊருக்குள் இன்றும் ச‌ந்தோஷ‌மாய்ச் சும‌ந்துவ‌ருகிறார் பாட்டி! இன்றைய உலகில் சாதார‌ண‌மாகிப் போய்விட்டாலும்... டிராஃபிக், பார்க்கிங்.. என‌ ஆயிர‌ம் இன்ன‌ல்க‌ள் இருந்தாலும்... "கார்"... தேவையும் ஆசையும் ஒருங்கே ஈடேறும் ஓர் அழ‌கிய‌ முத‌லீடு!!

புகைப்ப‌ட‌த்தில் பார்த்த‌ அந்தப் ப‌ழைய‌ மெட்டாலிக் ர‌தம், தாத்தா முக‌த்தின் பெருமித‌ப் புன்னகையோடு, இன்றுவரைப் பாட்டியை அக‌ம‌கிழ‌ச்செய்கிறது!!

கம்பெனி காரில் சென்றதைவிட ஒருவேளை பாட்டிவீட்டு வாசலில் தன் சொந்தக் காரில் சென்றிருந்தால்....???  சொந்தமா ஒரு கார் வாங்கி தாத்தாவுக்குப் பேரனா அந்த ஊர் மண்ணுல பாட்டிவீட்டு வாசலில் போய் நின்றால்...??

பாட்டிக்காகவே ஒரு கார் வாங்கினால் என்ன என்று சின்னதொரு சிந்தனை மின்னல் அவன் மனதைப் பிரகாசமாக்கியது!!


வேக‌மாய் விடிந்துவிட்ட‌து பொழுது..... முதுகைத் த‌ட்டிக்கொடுத்து ஆமோதித்தார் ராஜ‌கோபால‌ன் தன் ம‌க‌னின் கார் வாங்கும் திட்டத்தை.... வங்கிகள் இந்த மிட்டாய்க்கடை மேனேஜருக்கு (!) எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் லோன் த‌ர‌க்காத்திருப்ப‌தால் திரும‌ணச் செல‌வுக‌ளில் கார் குறுக்கிட‌ப் போவ‌தில்லை!


 அடுத்தக்க‌ண‌மே ஃபோன் கால் ப‌ற‌ந்த‌து அஞ்ச‌லிக்கு.... அம்முனையும் ஆன‌ந்த‌ம‌ழை!!


"என்ன‌ கார் வாங்க‌லாம்??" என்ற‌ மில்லிய‌ன் டால‌ர் கேள்வியை அஞ்ச‌லியின் இஷ்ட‌த்துக்கு விட்டுவிட்டான் ஜீவா... ஆனால் த‌ன‌க்கு luxury கார் ப‌ற்றியெல்லாம் ஞான‌ம் அதிகம் கிடையாது என்று சொல்லிக் க‌ழன்றுகொண்ட‌ அஞ்ச‌லி த‌ன‌க்குப் பிடித்த‌ மெட்டாலிக் க‌ரும்ப‌ச்சை நிற‌ம் அமைந்தால் ம‌கிழ்ச்சி என்று ம‌ட்டும் கோரிக்கை வைத்தாள்!!!


"பாட்டிகிட்ட‌ சொல்லியாச்சா....??"


ஆர்வமாய்க் கேட்ட அஞ்சலியிடம்...


"நேர்ல‌ போறேன்.. என் பாட்டியோட‌ப் ப‌ல்விழுந்த‌ சிரிப்பு பார்க்க‌..!!"


சொல்லிக் கிள‌ம்பினான் ஜீவா!!!


                                                                            10


முன்கூட்டி சொல்லாம‌ல்தான் இம்முறையும் பாட்டியின் முன்னால் போய் நின்றான் ஜீவா....!  மீண்டும் பேரனைக் கண்ட அதிர்ச்சி வில‌காத‌ பாட்டியை அப்ப‌டியே தாத்தாவின் ஃபோட்டோவுக்கு அருகில் அழைத்துச் சென்று...

"உன் பேர‌னும் கார் வாங்க‌ப் போறான் பாட்டி!!!"

 என்று போட்டுடைத்தான்.....

என்னவொரு ஆனந்தமான‌ த‌ருண‌மது!! "ஏழைப்பேர‌ன்" லாட்ட‌ரி அடித்தது போல் திடீரென பாட்டியின் ம‌ன‌தில் உச்ச‌த்துக்குப்போய் வெற்றிக்கொடி நாட்டினான்!!! இந்த‌ ம‌கிழ்ச்சிப் பேர‌லைக‌ளை அந்த முதிய‌ இத‌யத்தால் தாங்கமுடியுமா?? என்று ச‌ந்தேகமே வ‌ந்துவிட்ட‌து ஜீவாவுக்கு.
...
ஆன‌ந்த‌மாய்த் தாத்தா ஃபோட்டோ ப‌க்க‌ம் திரும்பி கைகூப்பி ஏதோ முணுமுணுத்துப் பேர‌னின் நெற்றியில் ப‌க்தியுட‌ன் தில‌க‌மிட்டார் பாட்டி...

குழந்தையாய் சிரிக்கும் சந்தோஷப் பாட்டியிடம்.... என்ன கார் வாங்கலாம் என்று தேர்வு செய்வ‌த‌ற்காக‌ வைத்திருக்கும் மிக‌வும் விலையுய‌ர்ந்த‌ லேட்ட‌ஸ்ட் ஆட‌ம்ப‌ர‌ ம‌கிழ்வுந்துக‌ளின் ப‌ட‌ங்களையெல்லாம் தாங்கிய சில மோட்டார் இத‌ழ்களைக் காட்டிப் பாட்டியை மேலும் சந்தோஷப் பட வைக்க‌ ஜீவா வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்..... அப்போது திடீரென்று பாட்டி ச‌ற்று சீரிய‌ஸாக‌ ஜீவாவின் அருகில் வ‌ந்து....


"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!"

என்று பாட்டி சொல்ல‌ ஒரு நொடி திகைத்து நின்ற‌ ஜீவாவுக்கு கார் மீது லாரி மோதிய‌துபோல் இருந்த‌து!!

அப்ப‌டியே நின்றுவிட்ட‌ ஜீவாவிட‌ம் பாட்டி, இப்போது வ‌ந்திருக்கும் ப‌ல‌ கார்க‌ளைத் தான் பார்த்திருப்ப‌தாக‌வும்.. எல்லாம் "சோப்பு டப்பா" மாதிரி இருப்பதாகவும் (!) அந்த‌க் கால‌க் கார்க‌ளின் வ‌லுவான‌ உறுதி எதிலும் இல்லையென்றும்... காசுபோட்டுக் காரை வாங்கிக் காலை ம‌டக்கிக் குனிந்து அம‌ர்வ‌து அசௌக‌ரிய‌ம் என்றும் அடுக்கிக்கொண்டே போனார்!!! க‌வ‌ன‌மாக‌ ந‌ல்ல‌ அம்பாசிட‌ர் காராக‌ப் பார்த்துவாங்குமாறு பேரனுக்கு சீரிய‌ஸாக‌ அறிவுரை சொன்ன‌ பாட்டி ஜீவா சொல்ல‌ வ‌ந்த‌ எதையும் ஏற்ப‌தாக‌ இல்லை!!

                                                            
                                                                                11


வெள்ளையாக‌ விழுந்து விழுந்து ஃபோனில் சிரிக்கிறாள் அஞ்ச‌லி....!!!

ஜீவா ஃபோனைக் காதில் வைத்திகொண்டு அப்பாவியாய் பாட்டி சொன்ன‌தையெல்லாம் சொல்ல‌ச் சொல்ல‌ சிரித்து ர‌சித்த‌ அஞ்ச‌லி,

 "இப்போ என்ன‌ செய்ய‌ப் போறீங்க‌?? அம்பாசிட‌ர் கார் லேட்ட‌ஸ்ட் மாட‌ல் புக் ப‌ண்ணிடுவோமா!!"

என‌க் குறும்பாய்க் கேட்க‌ ஜீவாவும் த‌ன் பாட்டியின் உல‌க‌ம‌றியா குழந்தைத்த‌ன‌த்தை நினைத்து வாய்விட்டுச் சிரித்தான்.....!!

"பாட்டிக்காக‌த்தான் கார் வாங்குற கான்செப்டே ம‌ன‌சுல‌ வ‌ந்திச்சு அதுல இப்பவும் எந்த‌ மாற்ற‌மும் இல்ல‌... பாட்டியோட விருப்பப் படி வாங்கினால்தான் அதுல அர்த்தமே இருக்கு.... சின்ன வயசுல மிஸ் பண்ண ஒரு பெரிய விஷயம் இப்போ திரும்ப கிடைச்சிருக்கு... என்னோட அப்பாவி பாட்டிகூட சுவாரஸ்யமா ஒரு கார் விளையாட்டு விளையாட கொஞ்சம் லேட்டா ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு அவ்ளோதான்... இதை நான் மிஸ் பண்ணுறதா இல்ல.. !!.." ........

பாட்டியைத் த‌ன் தொழில்சார்ந்த‌ எம் பி ஏ பேச்சுத்திற‌னால்,  தான் வாங்க‌ எண்ணியிருக்கும் காரையே வாங்க‌ச் சொல்ல‌வைக்க தன்னால் மிக‌ எளிதில் முடியும் ... ஆனால் தான் அவ்வாறு செய்ய‌ப் போவ‌தில்லையென்று உறுதியாக‌ இருந்த‌ ஜீவாவிட‌ம் ..

"இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!"

என்று அஞ்சலி ஃபோனில்  க‌லாய்க்க‌ ஆரோக்ய‌மான‌ இந்த‌ ச‌வாலை  ஏற்றுக்கொண்டான் ஜீவா!!


                                                                                                                     தொடரும்.......

அடுத்த பாகம் இங்கே!

பாட்டி கதை (பாகம் 2)

பாகம்-1 இங்கே  
                                                     
                                                   பாட்டி க‌தை (பாக‌ம் 2)

                                                                            5

ஒன்ப‌தாம் வ‌குப்புப் ப‌டித்த‌போது வ‌ந்த‌ கொடுமையான‌ ம‌ஞ்ச‌ட் காமாலையால் க‌டும் அவ‌தியுற்ற‌ ஜீவாவை நாட்டுவைத்திய‌த்துக்காக‌ கிராம‌த்துக்கு அழைத்துச்சென்று காப்பாற்றிய‌து அவன் பாட்டிதான்...

உட‌ல் நோவு வாட்டியெடுத்த‌போது ம‌டியில்போட்டுத் த‌லைவ‌ருடிக்கொடுத்த‌ பாட்டியின் பாச‌ம்.... இப்போது ஜீவாவின் த‌லைய‌ணையை ந‌னைக்கிற‌து க‌ண்ணீர்த்துளியாய்... குண‌மாகிப் ப‌த்து நாள் பாட்டியின் ஊட்ட‌த்தால் தேறியதும்... அந்த‌ப் ப‌த்து நாளும் பூர்வீக‌ நில‌புல‌ன்க‌ளில் சின்ன‌ மைன‌ராக‌ வ‌ல‌ம் வ‌ந்ததும்... குள‌த்தில் நேர‌ம்தெரியாம‌ல் குளித்துக் கிட‌ந்த‌வ‌னுக்காக‌க் க‌ரையிலேயே காத்துக் கிட‌ந்துப் பாட்டித் தலை துவ‌ட்டிவிட்டதும்...பாட்டியின் கைப்பக்குவத்தில் தேன்குழ‌ல் முருக்கு, அதிர‌ச‌ம், கேச‌ரி,ரொம்ப‌ப் பிடித்த‌ பால்ப‌னியாரம் ருசித்தது...!!! ப‌த்துநாளும் ப‌ல‌வித‌மாய்க‌ க‌ழிந்தன‌....

"பாட்டிய‌ விட்டுட்டு ம‌றுப‌டி போக‌ப்போறியா??"

"இதோ இப்ப‌வே ஜ‌ன‌வ‌ரி முடிஞ்சிருச்சு... பிப்ர‌வ‌ரி, மார்ச்..அவ்ளோதான்... ஏப்ர‌ல் மாச‌ம் லீவு.. நான் திரும்ப‌ வ‌ந்திடுவேன்!!!"

க‌ன்ன‌மிர‌ண்டிலும் முத்த‌ம் கொடுத்து நெற்றியில் முத்த‌ம் வாங்கித் தெரு முடியும்வ‌ரை திரும்பிப்பார்த்து கை காட்டிக்கொண்டே சென்றான்.... த‌ன் அம்மாவிட‌ம் அதிக‌ம் பேசிக்கொள்ளாத‌ ராஜ‌கோபால‌ன் சிரித்துக்கொண்டே எதுவும் பேசாம‌ல் ம‌க‌னை அழைத்துக்கொண்டு போனார்....

ஏப்ர‌ல் வ‌ந்தது.... ப‌த்தாம் வ‌குப்புப் பாட‌ங்க‌ளை லீவிலேயே துவ‌க்க‌ ஏற்பாடுக‌ளை செய்திருந்தார் அப்பா!! பாட்டியை ம‌ற‌ந்து ப‌டிப்பில் தீவிர‌மானான் ஜீவா...முடிவில் ம‌திப்பெண்க‌ளோடு மெட‌ல்களும் குவிந்த‌ன‌...

"ப‌ப்ளிக் எக்ஸாம் டென்ஷ‌ன் எல்லாம் முடிஞ்சிபோச்சு பாட்டி.... அடுத்த‌ ரெண்டு மாச‌ம் நான் உங்க‌ கூட‌வேதான் இருப்பேன்!!!" ....  அன்புள்ள‌ பாட்டிக்கு என்று ஓர் இன்லேண்ட் லெட்ட‌ரில் சேதி போன‌து...

ஆனால் அந்த‌ இர‌ண்டுமாதங்களுக்கும் "ஸ்விம்மிங், க‌ராத்தே, ப்ரென்ச் க்ளாஸ், கிள‌ப் கிரிக்கெட்.. என்று குறுகிய‌ கால‌ க‌டமைக‌ளை அடுக்கிவைத்திருந்தார் ராஜ‌கோபால‌ன்... சார்ல‌ஸ் டிக்கின்ஸ், அக‌தா கிறிஸ்டி ப‌டிக்க‌ணும்... உல‌க‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌த்துக்கிற‌ வ‌ய‌தில் அந்த‌க் கிராம‌த்துக்குப் போவதாவது... விடாது சிவ‌ப்புக்கொடி ப‌ற‌க்க‌விட்டார்!!

ப்ள‌ஸ் ஒன் முடிந்து ப்ள‌ஸ் டூ கூட‌ முடிந்துபோன‌து.... "பாட்டீ நான் ப்ள‌ஸ் டூ பாஸாகிட்டேன்.." என்று "ப‌தினாறு வ‌ய‌தினிலே" ஸ்டைலில் ஆண்"ம‌யிலா"க‌ வ‌ய‌ல்வ‌ர‌ப்பில் அகவுகிற‌ ஜீவாவின் கனவுக்கு எம‌னாக‌ வ‌ந்த‌து எண்ட்ரென்ஸ் எக்ஸாம்.....சரி காலேஜ் போன‌ப்புறமாவது... ஸாரி நோ சான்ஸ்.. அவ‌ன் ப‌டித்த‌து அல‌காபாத்தில் உள்ள‌ ஆர்.ஈ.சி யில்!! பெங்க‌ளூரில் சாஃட்வேரில் இரண்டுவ‌ருட‌ம் வேலை...அத‌ன்பின் மீண்டும் எம்.பி.ஏ... அதுவும் மும்பையில்....

இரண்டொருமுறை கட்டாயப்படுத்திப் பாட்டியை நகரத்திலிருக்கும் தன்வீட்டுக்கு அழைத்துவந்து தங்கவைத்தார் ராஜகோபாலன்... ஒரே வாரத்தில் அவர் வேலைக்குப் போயிருந்த நேரத்தில் ஏனோதெரியவில்லை பாட்டி சொல்லிக்கொள்ளாமல் பழையபடி கிராமத்துக்கு சென்றுவிட்டார்...!!

பாட்டிக்கு ஞான‌ப்ப‌ழ‌ம் வேண்டுமென்றால் தாத்தாவை ஒருமுறை சுற்றி வ‌ந்து வாங்கிக் கொண்டுவிடலாம்!!! அந்த‌க் கால‌த்திலேயே கார் வைத்திருந்த‌வ‌ர் ஜீவாவின் தாத்தா!!  வீடு, வ‌ய‌ல் ம‌ற்றும் தோப்பெல்லாம் வைத்திருந்தும் அந்த‌க் கால‌த்தில் கார் வைத்திருந்த‌துதான் இந்த‌க்காலத்திலும் அவரது பெருமித‌ அடையாள‌மாக‌ இருந்துவ‌ருகிற‌து... குறிப்பாக‌ப் பாட்டியின் ம‌ன‌தில்!!..... த‌ன்னைவிட‌ப் ப‌ல‌வ‌ய‌து மூத்த‌வ‌ரான‌ த‌ன் க‌ண‌வ‌ருக்கு இறுதிவ‌ரை ஒரு குழ‌ந்தையாக‌த்தானிருந்தார் பாட்டிய‌ம்மா!! சொந்த‌ நில‌த்தைக் குல‌தெய்வ‌க் கோயிலுக்குக் கொடுத்துவிட்ட‌ திருப்தியுட‌ன் திடீரென்று தாத்தா மாண்டுபோவார் என்று யாருமே நினைத்திருக்க‌வில்லை.... சிறுவ‌ய‌திலிருந்தே த‌ன‌க்குத்தானே கோடுபோட்டு வாழ‌ப் ப‌ழ‌கிக்கொண்ட‌, அவ‌ர்க‌ளின் ஒரேம‌க‌ன் ராஜ‌கோபால‌ன், தன் த‌ந்தை ம‌ரணிக்கும்போதே ப‌ட்ட‌ண‌த்தில் அர‌சாங்க‌வேலையில் சேர்ந்திருந்தார்.... த‌ன‌க்கு உல‌க‌மாயிருந்த‌ க‌ண‌வ‌ன் திடீரென‌ ம‌றைந்துபோக‌ உயிராய் வ‌ள‌ர்த்த‌ ம‌க‌னிட‌ம் த‌ஞ்ச‌ம‌டைவார் என‌ அனைவ‌ரும் நினைத்திருக்க‌, த‌ங்க‌ள் பெரிய‌ வீட்டை அந்த ஊர்ப் ப‌ள்ளிக்கூட‌த்துக்குக் கொடுத்துவிட்டு ஆர‌ம்ப‌கால‌த்தில் த‌ன் க‌ண‌வ‌ன் க‌ட்டிய‌ சின்ன‌வீட்டில் த‌னியாக‌ப் பாட்டிய‌ம்மா வாழ‌த்துவ‌ங்கியது ஏனென்பது இன்றுவ‌ரை யாரும் அவிழ்க்க‌விய‌லாத‌‌ ஒரு ம‌ர்ம‌ முடிச்சு!! பேரன் ஜீவாவுக்கு ம‌ஞ்ச‌ள்காமாலை தாக்கியிருந்த‌போது பாட்டி போராடிக் காப்பாற்றிய‌ இதேவீட்டில்தான் இன்று அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குழ‌ந்தைக்கு சோறூட்டிவிடுகிறார்!!

 ந‌டு இர‌வில் பாட்டி நினைவுகள் தாலாட்ட ஒருவழியாய் ஜீவா தூங்கிவிட‌..... தொண்டை விக்க‌ல் அட‌ங்கிப்போய்... மறுநாள் காலை, தின‌ம் தின‌ம் வாச‌ல்தெளித்து சுத்த‌ம் செய்த‌ முறைவாசலில் சொந்தப் பேரனின் பாதம் ப‌ட‌ப்போவ‌தை ய‌றியாம‌லேயே தூங்கிவிட்டார் பாட்டிய‌ம்மா!!!


                                                                 6

வ‌ழ‌க்க‌ம்போல் அன்றும் வாச‌ல்தெளித்து மிக‌ச்சுத்த‌மாக‌ மொழுக‌ப்ப‌ட்டிருந்த‌து  பாட்டி வீட்டின் முக‌ப்பு...

கார் க‌தவு திற‌ந்து..... அரிசிமாவில் வ‌ரைந்த‌ எட்டு புள்ளிக் கோல‌த்தில் பட்டுவிடாத‌வாறு எச்ச‌ரிக்கையாய்த் த‌ரையில்தன் கால்ப‌தித்தான் ஜீவா.... வாச‌ல்க‌தைவை மூடும் வ‌ழ‌க்க‌ம்தான் அந்த‌க் கிராம‌த்துக்கே கிடையாதே!! காரிலிருந்து இற‌ங்கி ஒன்றுமே பேசாம‌ல் வீட்டுக்கு உள்ள்ள்ளே... வாச‌லிலிருந்து நேரே தூர‌மாய் அம‌ர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த, இன்னும் கொஞ்ச‌ம் முதுமைய‌டைந்துவிட்ட த‌ன் பாட்டியைத் த‌லையை ஒருபுற‌ம் ச‌ரித்த‌வ‌னாய்ப் பார்த்த‌வாறே நின்றிருந்தான் ஜீவா!!!!

தூர‌த்தில் நிற்கும், நிழ‌லாய்த் தெரியும் அந்த‌ ம‌ங்க‌லான‌ உருவ‌ம் பாட்டியின் ம‌ன‌தில் மெதுவாகச் சின்ன‌ச் சின்ன‌ ம‌த்தாப்பூக்க‌ளைக் கொளுத்திப் போடத் துவங்கியது... முக‌ச்சுருக்க‌ங்க‌ள் கேள்விக்குறிக‌ளாய் மேலும் சுருங்கி... கையிலிருந்த‌தை அப்ப‌டியே போட்டு விட்டுத் திடீரென‌த் த‌ட‌புட‌லாய் எழுகிறார் பாட்டிய‌ம்மா!!! 

"பேரன்!!!!!"

ஜீவாவின் இமைக்காத‌ பார்வைக்குப் பாட்டியின் சிறு அசைவுகூட‌த் த‌ப்ப‌வில்லை... வேக‌ம்காட்டும் பொருட்டு இருகைக‌ளையும் த‌ரையில் ஊன்றிப் ப‌ல‌ம் திர‌ட்டி எழுந்து அந்த‌ வ‌ய‌திற்கு அதிவேக‌மாய் த‌ன்னை நோக்கி நெருங்கிவ‌ரும் பாட்டி.... உருவ‌ம் தெளிவாக‌த் தெரிந்திடும் தூர‌ம் நெருங்கிய‌தும் கைக‌ளிர‌ண்டையும் உத‌ற‌த் துவ‌ங்கினார் ப‌த‌ற்ற‌மாய்!!

வேக‌ந‌டை ஓட்ட‌மாகி உத‌றிய‌ கைக‌ள் நேரே ஜீவாவின் க‌ன்ன‌ங்க‌ளில் ப‌திந்த‌த‌ன‌!! இய‌ல்பாக‌வே க‌ல‌ங்கியிருந்த‌ க‌ண்க‌ளால் மங்கலாய்த் தெரியும்  காட்சியை முழுதாக‌ ந‌ம்ப‌ இய‌லாத‌து தெளிவாக‌வே தெரிந்த‌து....!

"சொல்லிட்டுப் போன‌ மாதிரியே ஏப்ர‌ல் மாசம் வந்துட்டேனா!!"

ஜீவா சிரிக்க‌....

 " கண்ணீர்மல்க‌ த‌ன் பேர‌னை உச்சிமுக‌ர்ந்தார் பாட்டி பல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து......!!

                                                                       7

மஞ்சள் நிற மாலை வெயிலில் கூட வெப்பத்தின் தடயங்கள் தோய்ந்திருக்கின்றன அந்தக் கிராமத்தில்... கரடுமுரடான பாதையில் கவனமாகக் காரை செலுத்துகிறார் ஓட்டுநர்... குளிரூட்டப்பட்ட பின்னிருக்கையில் ஜீவா!! அதே பாதை... ஆனால் இம்முறைப் பயணமோ பாட்டியை விட்டுத் தன் அணுதின வாழ்வை நோக்கி... அந்தக் காரிலும் சரி அவன் வீட்டிலும் சரி இன்னும் இடம் நிறையவே உள்ளது எனினும் பாட்டியின் நினைவுகளை மட்டும் முடிந்தவரை அந்தக் காரில் நிரப்பிக்கொண்டுப் பாட்டியை அந்த‌ச் சிறிய‌ வீட்டிலேயே விட்டுவிட்டுதான் சென்றுகொண்டிருக்கிறான்.... தன்னுடன் வந்துவிடுமாறு பாட்டியிடம் ஜீவா இறுதிவரை ஒருவார்த்தை கூட சொல்லவேயில்லை!!

 "எப்படித் திடீரென்று என்னைத்தேடி வந்தான் என் பேரன்??"

என்று இந்நேரம் பாட்டி நினைத்துக்கொண்டிருக்கலாம் ஆனால் அந்த அழகிய கிராமத்துக் குடில் இன்று சந்தோஷத்தால் நிரம்பிப்போனது மட்டும் நிதர்சனம்.. இயல்பாகப் பனித்திருந்த கண்களைத் தன் கையால் துடைக்கையில் வலதுகையில் பருப்புருண்டைக் குழம்பு வாசம்!!!

சமையலறையில் பாட்டி சமைத்துக் கொண்டிருந்த‌ போது ஜீவா ஓர் அண்டாவைக் கவுத்திப்போட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டு பாட்டியின் ஒவ்வோர் அசைவையும் அதிசியத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்... விடாது பல கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள் பாட்டியும் பேரனும்!....

 சட்டியில் குழம்பு கொதிக்கத் துவங்கிவிட்டது.... பாட்டியோ, வீட்டின் பின்புறம், கொள்ளைப்புற வாழைமரத்தில் இலைவெட்டிக்கொண்டிருந்தார்.... வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழம்பைச் சட்டியிலிருந்து இறக்கிவைத்து... ஒருமுறை ருசிபார்த்தபின்புதான் சந்தோஷமாய்ப் பரிமாறினார் தன் கைமணத்தை!!!.... மீண்டும் தனது கையை முகர்ந்து பார்க்கிறான் ஜீவா... பாட்டி வாசம்!!! .....செல்போன் அழைத்தது.... மறுமுனையில் அஞ்சலி!!

"சொல்லுங்க....சொல்லுங்க.... என்ன ஆச்சு?? பாட்டி ஹேப்பியா??"

ஜீவாவுக்கு இணையான ஆர்வமிகுதியில் அஞ்சலி துவங்க மீதமுள்ள பயணம் இனிமையாய் நகர்ந்தது....

"இனிமேலும் என் பாட்டியைத் த‌னிமையில் த‌விக்க‌விட‌ மாட்டேன்" என்று சூளுரைத்துக் கிள‌ம்பிய‌வ‌ன் பாட்டியைத் த‌ன்னுட‌ன் வந்துவிடுமாறு சொல்ல‌க்கூட‌ இல்லை என்ப‌து புதிராக இருந்தது அஞ்ச‌லிக்கு!

"இங்கே கிராமத்துல ராஜா மாதிரி இருக்க வேண்டிய பேரன் வாழ இடமில்லாத நகரத்துல மாட்டிக்கிட்டுத் தவிக்கிறானே!!!" என்று தனக்காகப் பாட்டி பரிதாபப்படுவதை (!)  எப்படி இவளுக்குப் புரியவைப்பதென்று குழம்பிக்கொண்டிருந்தான்....!!!


                                                                      8

த‌ன்னையும் த‌ன் வ‌ள‌ர்ச்சியையும் க‌ண்டுப் பெருமித‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும்தான் க‌ட‌ந்த‌ சில ஆண்டுகளாகவே பார்த்திருக்கிறான் ஜீவா....ஆனால் த‌ன்மீது பேர‌ன்பு கொண்ட தன் பாட்டியோ தன் வாழ்வை நினைத்துத் தனக்காகப் பரிதாபப் பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அதிர்ந்துதான் போனான் ஜீவா!

 அஞ்சலியும் மௌனமாகிப் போனாள்!!!

"சிட்டியிலேயே ரொம்ப‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் சொந்த‌வீடு, இவ்வ‌ள‌வு சின்ன‌ வ‌ய‌சிலேயே வாங்கியிருப்பதுதான் ப‌ரிதாப‌நிலையா???'"

என்று இப்போது கேட்கும் அஞ்ச‌லியைப் போலத்தான் ஜீவாவும் எண்ணினான்.... ஆனால் பாட்டி....

"ஒரே க‌ட்ட‌ட‌த்துக்குள்ள மூச்சப் பிடிச்சுக்கிட்டு நாப்ப‌த்துயேழு வீட்டக் கட்டிவெச்சிருக்கான் ....வாசக்க‌த‌வ‌க்கூட‌ திற‌ந்து வெச்சுக்க‌ முடிய‌ல‌... ஆசையா ஓர் ஆட்டுக்குட்டி வ‌ள‌ர்க்க வழியிருக்குமா??"

என்று கேட்டால் பாவம் என்னதான் பதில் சொல்லுவான் ஜீவா!!!

பூமியைத் தொழுது நிலத்தை உழுது வாழும் ம‌ண்வாச‌னை ம‌னித‌ர்க‌ளுக்கு சொந்த‌ பூமியில் வேய்ந்த குடிசை பெருமித‌மாக‌வும், அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆட‌ம்ப‌ர‌வீடுக‌ள் அந்த‌ர‌த்தில் அம்மாஞ்சிகள் வாங்கிப்போடும் அசையா சொத்தாக‌வும்தான் தெரிகிறது போலும்!!

அடுக்குமாடிக‌ளின் இன்றிய‌மையா தேவையான‌ லிஃப்டுக‌ளை ம‌னித‌ர்களின் வெளிஉல‌க‌த்தொட‌ர்பைத் துண்டிக்கும் வில்லனாக‌ விம‌ர்சிக்கிறார் பாட்டி!! (பாட்டிக்கு லிஃப்டை இயக்க‌த்தெரியாது.... ப‌தினோருமாடிக்கு ப‌டிக்க‌ட்டில் போவ‌தும் முடியாத‌ காரிய‌ம்.. அந்த‌ ஆற்றாமைதான்!!)

இதையெல்லாம் கூட‌ப் பொறுத்துக் கொண்டான் ஜீவா... மிக‌ப்பெரிய சாக்லேட் க‌ம்பெனியின் ரீஜின‌ல் ஹெட் என்ற தன்னுடைய அல‌ங்கார‌ப் பத‌வியைப் பாட்டி, த‌ன் பேர‌ன் ஒரு "மிட்டாய் க‌ம்பெனி"யில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் கணித்திருக்கிறார் என அறிந்த கணத்தில் பாட்டியின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் "ஜீவா"வின் வறுமை (!) நிலையைப் புரிந்துகொண்டுப் பேச வார்த்தையின்றி அமைதியானான்!!!

அத்தோடும் விடவில்லை பாட்டி...... ப‌க்க‌த்து வீட்டு அல‌மேலுவின் ம‌க‌ன் அந்த‌ கிராம‌த்தில் ப‌டித்த‌வ‌ன்தான் என்றாலும் ஒரு பெரிய்ய்ய்ய‌ மோட்டார் க‌ம்பெனியில் வேலைபார்ப்ப‌தாக‌ப் பெருமையாய்க் கூறினார்!!

"என் பேர‌ன் பாவ‌ம்ப்பா உன்னைவிட‌ அதிக‌மாப் ப‌டிச்சிட்டு ஏதோவொரு மிட்டாய் க‌ம்பெனியில‌ வேலை பாத்துட்டு இருக்கான்... உன்ன‌ப்போல‌ ந‌ல்ல‌ பெரிய‌ க‌ம்பெனில‌ உத்தியோக‌ம் எதுவும் கிடைச்சா அவ‌னுக்கும் சொல்லுப்பா!!"

என்று அவ‌னிட‌ம் பாட்டி சொல்லி வைத்திருந்ததை நல்லவேளை ஜீவாவிடம் பாட்டி சொல்லவில்லை!!

எக்க‌ச்ச‌க்க‌ ஆசையோடு பெருமையாய்ப் போனவன் இப்படி எக்குத்தப்பாய் 'டேமேஜ்' ஆகிப்போயிருக்கும் த‌ன் வருங்காலக் கணவனுக்கு ஆறுத‌ல் சொல்ல‌வா?... என்ன‌ சொல்லவோ? என்று மௌன‌மாகவே இருந்தாள் அஞ்சலி.... இன்னொருபுற‌ம் அவனது பேச்சைவைத்து இந்த‌க் கணம் அவ‌ன் முக‌த்தைக் கணித்துப் பார்க்கையில் அவளுக்குக் கொஞ்ச‌ம் சிரிப்பும் வ‌ந்த‌து...!!

இவற்றையெல்லாம் தாண்டி.. அந்த‌ச் சிறிய‌ கிராம‌த்து வீட்டில் வ‌சிப்ப‌தில் பாட்டியிட‌ம் ஒரு க‌ம்பீர‌த்தைக் கவனித்தான் ஜீவா..... தாத்தாவுடைய‌ ப‌டைபுலன்க‌ளுட‌ன் தான் வாழ்ந்த‌ பெரிய‌ வீட்டைப் புற‌க்க‌ணித்துவிட்டு, க‌ண‌வ‌ன் ம‌னைவியாய் ஆர‌ம்ப‌கால‌த்தில் அவர்கள் வாழ்க்கையைத் துவ‌க்கிய, வ‌ச‌திக‌ள‌ற்ற இந்தச் சிறிய‌ வீட்டில் பாட்டி தனியாக வாழ்ந்துவருவதில் ஏதோவொரு ஜீவனுள்ள அர்த்தமுள்ளது என்றும் ,பிடிவாதமாய்த் தனக்குத்தானே பாட்டி  ஏற்படுத்திக்கொண்ட இந்தத் த‌ன் த‌ந்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் எண்ணுவ‌தைப்போல வெறும் "வ‌ற‌ட்டுப் பிடிவாத‌ம்" கண்டிப்பாக இல்லை என்றும் ஜீவாவால் தெளிவாக‌ உண‌ர‌முடிந்த‌து......


                                                                                                                        தொடரும்.......

Sunday, November 07, 2010

டீஜெண்டு : தொடர்கதை (பாகம் 1)

மத்தியில் நின்று சூரியன் சுட்டெரிக்கும் மத்தியாண வெயிலில் பழுப்பேறித் தகித்துக்கிடக்கிறது அந்த கரும்புக்காடு....

உச்சிவெய்யிலில் சோளக்காட்டு பொம்மைகள் மட்டுமே ஆடு மாடுகளுக்குக் காவல் காக்கும் ஆளரவமற்ற ஊரின் வெளிப்புறப்பாதை....

நேற்றுதான் ப‌த்தாம் வ‌குப்புப் ப‌ரிட்சையோடு சேர்ந்து படிப்பும் முடிந்திபோயிருந்த‌து முருக‌னுக்கு.....  

 "உயிர் ந‌ண்பா".... "என்று சந்திப்போம் இன்று பிரியும் நாம்"... என்றெல்லாம் ஆட்டோகிராஃப் எழுதி ந‌ண்ப‌ர்க‌ள் பிரிந்த‌ ப‌ள்ளிவாழ்க்கை... அம்மாவும் வாத்தியாரும் அடிஅடியென்று அடித்தும், சோறு கிடையாதென்று மிர‌ட்டியும் ப‌ள்ளிக்கூட‌ம் போக‌வைத்த‌ ப‌ள்ளிவாழ்க்கை முடிந்துவிட்டது...

ஏதேதோ புரிகிறது குத்தவைத்துப் பதுங்கியிருக்கும் இந்த நேரத்தில்... விய‌ர்வை விர‌விய‌ கருத்த‌ தேகத்தில் க‌ரும்பு உரசித் தோல் எரிகிறது .... கையில் ஒரு சைக்கிள் ம‌ணி... கூப்பிடு தூர‌த்தில் த‌ன்னைப்போல‌வே ப‌துங்கிக் காத்திருக்கும் சிநேகிதம்.... கொஞ்ச‌ம் பின்னால் அசிங்க‌மாக‌ உட‌லிடுக்கி அம‌ர்ந்திருக்கிறான் முருக‌னையும் செந்தில்,ம‌ணியையும் இங்கு கூட்டிவ‌ந்த கருவாயன்...கையில் அதே சைக்கிள் ம‌ணியுட‌ன்...


கிட்டத்தட்ட சரியான நேரத்தில் தூரத்தில் தடதடக்கத் துவங்கிவிட்டது புல்லட் சத்தம்.....

புல்லட் சத்தம் கேட்டவுடன் கரும்புவயலில் அசைவுகள் தொற்றுவது காற்றினாலல்ல....

ராய‌ல் என்ஃபீல்டின் பெட்ரோல் இஞ்சின் எழுப்பும் த‌ட‌ த‌ட‌ ச‌த்த‌த்துக்கு இன்றுக் க‌ரும்புக்காட்டிலிருந்து ஒரு ப‌ற‌வைகூட‌ ப‌றந்தோட‌வில்லை....
"கிணிங்... கிணிங்..." சைக்கிளின் முத‌ல் ம‌ணி அடித்துவிட்ட‌து.... புல்ல‌ட் வேக‌ம் குறைய‌வில்லை....

முருக‌னுக்குப் புல்ல‌ட் ச‌த்த‌ம் கொஞ்ச‌ம் க‌ண‌மாக‌க் கேட்கிற‌து..... செந்தில் த‌ன்னுடைய‌ சைக்கிள் ம‌ணியில் இர‌ண்டாவ‌து ம‌ணியை அடித்துவிட்டான்.... முருக‌னின் கையில் லேசான‌ ந‌டுக்க‌ம்.... புல்ல‌ட்டின் த‌ட‌ த‌ட‌ த‌ட‌ அதிர்வு இன்னும் நெருக்கமாய்க் காதில் விழ "கிணிங் கிணிங் கிணிங் கிணிங்" என்று ப‌த‌ற்ற‌ம் தொற்றிய‌வ‌னாய் ரெண்டு முறை கூட‌ அடித்துவிட்டான்...... புல்ல‌ட் ச‌த்த‌ம் க‌ட‌ந்து சென்றும் நான்காவ‌து ம‌ணி அடிக்க‌வில்லை....

"வாடா முருகா.... அப்ப‌டியே த‌வ‌ண்டு இங்க‌ இருந்து ஓடிட‌லாம்.... சீக்கிர‌ம் வாடா முருகா... ந‌ம்ப‌ வேல‌ முடிஞ்ச‌துடா.... வாடா சீக்கிர‌ம்..... "

நான்காவ‌து ம‌ணி இன்னும் அடிக்க‌வில்லை......

திரும்பிப் பார்த்த‌ முருக‌னுக்கு தூர‌த்தில் க‌ருவாய‌ன் சைக்கிள் ம‌ணியைத் தூர‌ எறிந்துவிட்டு க‌ண்மாய் இருக்கும் திசைநோக்கி  மூச்சிரைக்க‌ ஓடுவ‌து தெரிகிற‌து.....

செந்திலுக்கும், ம‌ணிக்கும் ஒன்றும் புரியாம‌ல் திகைத்து நிற்க‌.... க‌ண்மாயில் தொப் பென்று விழுகிறது க‌ண‌த்த‌ ச‌த்த‌ம்...

புல்ல‌ட்கார‌ன் வேக‌ம் குறைக்காமலேயே க‌ண்மாய் ப‌க்க‌ம் திரும்பிப் பார்க்க‌.... முக‌ம் ம‌றைக்க‌ ம‌ற‌ந்த‌ முருக‌ன் த‌லைதெரிய‌ க‌ரும்புக் காட்டிலிருந்து வெளிவ‌ந்து... கையிலிருக்கும் சைக்கிள் ம‌ணியைத் தொட‌ர்ந்து அடித்த‌வ‌னாய் மோட்டார் ரூமை நெருங்குவ‌த‌ற்கும்... அங்கு நில‌வும் சூழ‌லின் அசாதார‌ண‌த்தை புல்ல‌ட்கார‌ன் உண‌ர்ந்து சுதாரிக்குமுன்பே, மோட்டார் ரூமிலிருந்து பெருங்குர‌லெடுத்துக் கையில் அரிவாளுடன் வ‌ந்து வ‌ளைப்ப‌த‌ற்கும் ச‌ரியாக‌ இருந்த‌து....

க‌ழுத்த‌றுந்து வெளிப்படும் ஈன‌மான‌ குர‌ல் அந்தக் க‌ரும்புக்காட்டின் அமைதியைக் கிழித்த‌து...

"டேய் முருகா... ஓடிட‌லாம்டா..... நிக்காம ஓடிடுடா... ஓடிடுடா..."

ஏதேதோ ப‌த‌ற்ற‌க் குர‌ல்க‌ளின் முடிவில் க‌ண்மாயில் தொப் தொப் பென்று க‌ண‌மான‌ ச‌த்த‌ம் தொட‌ர்ந்து கேட்கிற‌து...


                                                                                                                                          தொட‌ரும்....