Saturday, December 10, 2022

FIFA உலகக்கோப்பை கால்பந்து 2022 - History repeated itself but Brazil didn't!

 உலகக்கோப்பை 2022 ன் முதலாவது காலிறுதிப்போட்டியில் கால்பந்து ஜாம்பவான் பிரேசிலின் வலிமிகுந்த வெளியேற்றம் பிரேசில் ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்தது! நேற்றைய ஆட்டம், 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் காலிறுதிப்போட்டியில் ஸ்வீடனை பிரேசில் வீழ்த்திய அற்புதமான ஆட்டத்தின் ஆக்‌ஷன் ரீப்ளேவைப் போல் அமைந்திருந்தது வரலாறு மீண்டும் நிகழும் ஆச்சர்யம் என்றால் கடைசி மூன்று நிமிடங்களில் க்ரோஷியா அந்த வரலாற்றை மாற்றி எழுதியது அதிசியம்! History repeated itself but Brazil couldn't make it this time! :(

"தனி ஒருவன்" Dominic Livacovic

நெய்மரின் மாயாஜால கோல்!


முழு ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் பிரேசில் குரோஷியா இரு அணிகளுமே கோல் அடிக்காத 0-0 என்ற நிலையில் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது.... அதுவரை கோல் அடிக்கப் பலமுறை பலவிதமாக முயன்றும் அத்தனை முயற்சிகளையும் க்ரோஷியாவின் கோல்கீப்பர் டோமினிக் லிவாகோவிக் (Dominik Livakovic) தனிஆளாகத் தடுத்து நிறுத்த,  பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர், கடுமையாகப் போராடி, அதுவரையிலான பலன் தராத முயற்சிகளில் பாடம் கற்று, அதாவது அனைத்து தூரங்களிலிருந்தும் எவ்வளவு  வலிமையாகவும் நேர்த்தியாகவும் பந்தை கோல்போஸ்ட் நோக்கி செலுத்தினாலும் லிவாகொவிக்கால் துல்லியமாகத் தடுக்க முடிகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொண்ட நெய்மர் கண்டுபிடித்த ஒரே வழி, எப்படியாவது கோல்கீப்பரைத் தாண்டிப் பந்தைக் கடத்திச் சென்று கோல் அடிக்கும் வழிமுறை! அதை ஓர் அரை நொடி மாயாஜாலத்தில் லிவாகோவிக்கை ஏமாற்றி நடத்தியும் காட்டினார் நெய்மர்...! எக்ஸ்ட்ரா டைமில் இன்னொரு பகுதி (15 நிமிடங்கள்) மீதமிருக்கும் நிலையில் 1-0 முன்னிலை கிடைக்க, அதுவரை ஒருமுறை கூட உருப்படியாகப் பந்தை பிரேசில் கோல்கீப்பர் வரைகூட கொண்டுபோக முடியாத குரோஷியா வீரர்களால் என்ன செய்துவிட  முடியும் என்கிற நியாயமான ஆற்றாமையில் குரோஷியா ரசிகர்களே ஆரவாரம் ஓய்ந்து அமைதி நிலையடைந்தார்கள்!

நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார்!

க்ரோஷியா தந்த பேரதிர்ச்சி வைத்தியம்

அதிரடி கோலடித்த ப்ரூணோ பெட்கோவிக்

பிரேசில் ரசிகர்கள் உலகெங்கும் கொண்டாடி மகிழ்ந்தனர்! வான வேடிக்கைகள் இன்னும் 15 நிமிட ஆட்டம் மிச்சமிருப்பதற்காகக் காத்திருக்கவில்லை! இன்னும் இந்த ஆட்டமே முடிவுராமால் இருக்க அடுத்த ஆட்டத்தின் (அர்ஜெண்டினா vs நெதர்லாந்து) முடிவையும் சேர்த்துக் கணித்து பிரேசில் - அர்ஜெண்டினா அரையிறுதியைப் பற்றியெல்லாம் வர்ணணையாளர்கள் சிலாகிக்கத் துவங்க காத்திருந்தது அதிர்ச்சி! இரண்டாவது எக்ஸ்ட்ரா டைமில் ஆட்டம் முடிய இன்னும் 3 நிமிடங்கள் இருக்கும் தருவாயில் க்ரோஷியாவின் ப்ரூனோ பெட்க்கோவிக் (Bruno Petković) இழப்பதற்கு இனி எதுவுமில்லை எனும் தோரணையில் உதைத்த படு கான்ஃபிடண்ட் ஷாட் தடுப்புகளின் சிறு ஓட்டைகளினூடே கீறிக்கொண்டு கோல் போஸ்டுக்குள் புகுந்தது! மஞ்சள் சீருடைகள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க வெள்ளை சிவப்பு ஆரவாரம் அரங்கம் அதிர உயிர்த்தெழுந்தது! காரணம் பெனால்டி டை-பிரேக்கர் சென்றுவிட்டால் க்ரோஷிய கோல் போஸ்டின் காவல் தெய்வத்தைக் கடந்து பந்தைப் புகுத்திவிடுவது சிம்ம சொப்பணம் என்று பிரேசில் வீரர்களே அறிந்திருந்தார்கள்! "இனி இழக்க எதுவுமில்லை" எனும் உரத்த உணர்வின் வலிமைதான் நேற்றைய உலகப் பாடம் என்னைப் பொறுத்தவரை!

History repeated!

இந்த நிலையில் கால்பந்து ரசிகர்கள் அனைவருக்குமே இதே போன்றதொரு உலகக்கோப்பை காலிறுதிப்போட்டி அச்சு அசலாக நினைவுக்கு வந்திருக்கலாம்.... அதுதான், 1994 உலகக்கோப்பையில் இதே போன்றதொரு காலிறுதிப்போட்டியில் இதே பிரேசில் அணி அன்று ஸ்வீடனுடன் மல்லுக்கட்டிய மறக்கமுடியாத கால்பந்து யுத்தம்!

Thomas Ravelli Vs Romario (1994 WC )

"The Evergreen Hero" Romario!


அப்போதைய ஸ்வீடன் அணி கிட்டத்தட்ட  நேற்றைய ஆட்டத்தின் க்ரோஷியாவின் நகல் எனலாம் காரணம் அன்றைய ஆட்டத்தின் 90% நடைபெற்றது என்னவோ ஸ்வீடனின் பெனால்டி ஏரியாவில்தான்! இருந்தாலும் பிரேசிலின் கடும் பிரயத்தனங்களையும் தாண்டி ஒரு கோல் கூட விழுந்திருக்கவில்லை 80 நிமிடங்கள் வரை! ஒரே காரணம் தாமஸ் ரேவிலி (Thomas Ravelli) எனும் மதில் மனிதனால்! படு சுமாரான ஸ்வீடன் அணியை மலையாய்த் தாங்கி எதிர் கோல்களை எல்லாம் தடுத்துக் காலிறுதிவரை கொண்டு சேர்த்தது அந்தத் தொடரில் அவர்களின் "பெருஞ்சுவர்" கோல்கீப்பர் தாமஸ் ரேவலிதான்... முக்கியமாக காலிறுதிக்கு முந்தைய முதலாவது நாக்-அவுட் போட்டியில் ரோமேனியாவை ஸ்வீடன் சந்தித்த போது டை-ப்ரேக்கரில் பெனால்டி வரை போட்டி சென்றது... அதுவரை ஆதிக்கம் செலுத்திய ரோமேனியா வீரர்களின் துல்லியமான ஸ்ட்ரைக்குகளைக் கண்கவரும் புலிப்பாய்ச்சலால்  ரேவிலி தடுத்து நிறுத்தித் தன் அணியை ஒன் மேன் ஆர்மியாகத்தான் பிரேசிலுக்கு எதிரான காலிறுத்திப் போட்டிக்கு அணி வகுக்கச் செய்திருந்தார்! 

"Swedish Legend" Raveli


 நேற்றைய ஆட்டத்தில் பிரேசிலின் நம்பிக்கை நாயகன் நெய்மார் என்றால் அப்போதைய பிரேசிலின் நேஷனல் ஹீரோ ரோமாரியோதான் அன்றைய ஆட்டத்தில் ரேவலியை வீழ்த்த அஸ்திரங்களை மாறி மாறி எய்துகொண்டிருந்தார்... ஏனென்றால் கோல்கள் இல்லாது போட்டி நேரம் முடிந்து பெனால்டிக்கு சென்றால் ரேவலியை மிஞ்சி வெற்றி பெற்றுவிட இயலாது என்பதை மிகத் தெளிவாகப் புர்ந்திருந்தார் ரொமேரியோ , நேற்று நெய்மார் செய்ததைப் போலவே படு தந்திரமானதொரு வியூகத்தில் கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பை ரேவிலிவைத் தாண்டி கோல் ஆக்கினார் ரோமாரியோ! அந்தத் தொடரையும் வென்று இறுதியில் அந்த ஆண்டுக்கான கோல்டன் பாலையும் தனதாக்கினார் எவர்கிரீன் ஹீரோ ரோமாரியோ!

ரோமாரியோவுக்கு எட்டியது நெய்மாருக்குக் கிட்டாத சோகம்!

ஆனால் நேற்றைய போட்டியைப் பொறுத்தவரை 1994ஆம் ஆண்டு காலிறுதியைப் போலவே சென்றிருந்தாலும், ரோமாரியோவைப் போலவே பிரேசிலுக்கு ஒரு நெய்மார் இருந்தபோதிலும், முதல் கோலுக்குப் பின்பாகத் தங்கள் கோல் போஸ்டை காத்திரமாகக் காப்பதில் கோட்டை விட்டார்கள் அதுவரையில் குரோஷியாவின் எந்தவொரு முயற்சியையும் தங்கள் பெனால்டி ஏரியாவில்  நுழையும்போதே விரட்டியடித்த பிரேசிலின் பேக்வார்ட் டிஃபெண்டர்கள்! ப்ரூணோ அடித்த அந்த அதிவேக அதிசியம் அதுவரையில் தன்னைத்தானே மறுமுறை பதித்துக்கொண்டிருந்த வரலாற்றை ஒட்டுமொத்தமாக மாற்றியெழுத வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க, அதனை ஆட்டத்தின் அசல் நாயகன், குரோஷியாவின் கோல்கீப்பர் லிவாகோவிக், பெனால்டி வாய்ப்புகளில் பிரேசிலின் முதல் இரண்டை அபாராமாகத் தடுத்துப் பொன்னெழுத்துக்களால் மாற்றிப் பொறித்தார்! வரலாற்று வெற்றியைத் தனதாக்கியது குரோஷியா!

அர்ஜெண்டினாவுடன் அரையிறுதியில் லிவாகோவிக்....

எங்கிருந்தோ சிலிர்த்தெழுந்து வந்து கடந்த 2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் வரை முன்னேறி பிரான்ஸ் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்த குரோஷியா தான் ஓர் "ஒன் சீஸன் வொண்டர்" அல்ல என்பதை நேற்று  நிரூபித்து ஆட்டத்தின் ஆகச்சிறந்த தென் அமெரிக்க நாடான பிரேசிலையே வீழ்த்து அரையிறுதியில் கால்பதித்து விட்டது! நேற்று இன்னுமொரு விருவிருப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை அர்ஜெண்டினா வீழ்த்த, அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை சந்திக்கிறது குரோஷியா... உண்மையில் குரோஷியா என்று சொல்வதைவிட அசராமல் அடிக்கும் அர்ஜெண்டினாவைப் பெனால்டி ஏரியாவில் தனியாகச் சந்திக்கப்போகிறார் தடுப்புச்சுவர் கோல்கீப்பர் லிவோகோவிக் என்றுதான் சொல்ல வேண்டும்!

இறுதிக்கட்டத்தில் இந்த உலகக்கோப்பையின் உஷ்ணம் கத்தாரின் உச்சபட்ச வெயிலுக்கெல்லாம் உயர்க்கொதிநிலை காட்டுகிறது...... அடுத்தடுத்த போட்டிகளைப் பற்றி எழுத வாய்ப்புக்கிடைத்தால் சந்திப்போம்!

அன்புடன்,
பிரபு எம்









Sunday, December 04, 2022

உலகக்கோப்பை கால்பந்து 2022 : FRANCE 3 - 1 POLAND | போலாந்தைத் தன் முழுபலத்துடன் வீழ்த்திய ப்ரான்ஸ்!

FRANCE Vs POLAND

Full-Time Result:  FRANCE 3 - 1 POLAND


Watch France vs Poland online on Jiocinema


 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஓர் உலகக்கோப்பைத் தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் போலந்து வந்த வேகத்திலேயே வெளியேறியிருப்பதில் இன்றைய போட்டியைப் பார்த்த யாருக்குமே எந்த ஆச்சர்யமும் இருக்கப்போவதில்லை! பிரான்ஸ் அணிக்கு எந்தவிதமான நெருக்கடியையும் தர இயலாமல் கிட்டத்தட்ட 30 நிமிட ஆட்டம் மீதமிருக்கும்போதே ஒட்டுமொத்த அணியும் ஒரு சரணடைந்த உடல்மொழியை வெளிப்படுத்தியதைப் பார்க்கப் பாவமாகத் தான் இருந்தது!


Wojciech Szczesny Juventus Goalkeeper, Profile & Stats ...
Wojciech Szczęsny

                                      

போலந்தைப் பொறுத்தவரை 36 ஆண்டுகாலம் கழித்து இந்த உலகக்கோப்பையின் இரண்டாம் சுற்றுக்கு அவர்கள் தகுதிபெற்றதற்கே ஒற்றைக் காரணம் அவர்களது கோல் கீப்பரான ஸ்கென்சி (Szczęsny) தான்! கோல் கீப்பர்களுக்கான தர வரிசையில் 13 ஆம் இடத்தில் இருக்கும் ஸ்கென்ஸி இந்த உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் 24 கோல்களைத் தடுத்திருக்கிறார் இன்றைய போட்டியிலும் பிரான்ஸ் அணியின் அசாத்தியமான ஆட்டத்துக்கு சளைக்காமல் எதிர்வினை ஆற்றியது ஸ்கென்ஸி மட்டுமே! இறுதியில் மூன்று கோல்களைக் கொடுத்துவிட்டாலும் முதல் பாதியில் (44 நிமிடங்கள் வரை!) பிரான்ஸ் அணியின் அட்டாக்குகளை எல்லாம் தாண்டி கோல் போஸ்ட்டைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் ஸ்கென்ஸி வைத்திருந்தார் என்பது உண்மை!

France vs Poland Highlights FIFA World Cup 2022: Mbappe, Giroud shine as  France beat Poland 3-1, reach quarterfinals | Hindustan Times
Olivier Giroud

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை, விருவிருவென மைதானமெங்கும் பந்தை விரட்டிய வேகத்தில் போட்டியைக் காணும் கண்களுக்கு விருந்து வைக்கத் தவறவில்லை! முதல்பாதியின் 44 நிமிடத்தில் ப்ரான்ஸ் அணியின் கிரூட் (Olivier Giroud), கோல்போஸ்ட்டின் இடது முனையை நோக்கிக் கடத்தி வந்த பந்தை கோல் கீப்பர் தன் முழு உயரத்தையும் நீளவாக்கில் நீட்டித்தும் அவரைக் கடந்து வலது முனையில் தஞ்சம் புகுந்த அற்புதமான கோலை அடித்துத் தன் அணிக்கு நிம்மதி பெருமூச்சைப் பரிசளித்தார்! அற்புதமான கோல் அது.... அதற்குப் பின் இரண்டாம் பாதியில் எம்பெப்பே (Kylian Mbappé) அடித்த இரண்டு கோல்களுமே அசாத்தியமானவை...!

France vs. Poland: Mbappé Scores Twice to Send Poland on Its Way - The New  York Times
Kylian Mbappé
இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது முதலிடம் (5 கோல்கள்) பிடித்துள்ள எம்பெப்பே இன்று அடித்த மின்னல் வேக கோல்கள் இரண்டுமே அபாரம்!
நாக்-அவுட் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே ஆட்டங்கள் செம சூடுபிடிக்கத் துவங்கிவிட்டன.... நேற்றைய போட்டியில் அர்ஜெண்டினா மட்டும் சற்று அசமந்தமாக ஆடியது, ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதுபோதும் என்பது போன்ற ஆபத்தான அணுகுமுறையில்! ஆனால் அதே வேளையில் அமெரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து வெளிப்படுத்திய ஆட்டத்தில் முழு முனைப்பு தெறித்தது! இன்றைய போட்டியில் தனது முழுவேகத்தை வெளிப்படுத்திப் புயலாக விளையாடிய பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளப் போதுமான ஆட்டம் இல்லாத போலாந்துக்கு இரண்டாம் பாதியின் கூடுதல் நிமிடங்களில் கிடைத்த அந்த பெனால்டி கோல் மட்டுமே ஒரே ஆறுதல்!
இன்று நடக்கப்போகும் இன்னொரு போட்டியான இங்கிலாந்து v செனகல் போட்டியில் வெல்லப்போகும் அணி கால் இறுதியில் பிரான்ஸ் அணியைச் சந்திக்கும்!

அன்புடன்,
பிரபு எம்

Tuesday, November 29, 2022

காந்தாரா [U/A] (2022)

 Kantara is written and directed by Rishab Shetty.


"காந்தாரா" ஒரு சிறந்த "கன்னடத்" திரைப்படம்!

ஆனால்....கன்னடம் தாண்டிப் பிற மாநிலங்களிலும் படம் சக்கை போடு போட்டிருப்பது ஒரு "மேஜிக்" மட்டுமே!
படத்தின் மேக்கிங்கை மிகவும் ரசித்தேன்... படம் கவனம் ஈர்க்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில், ரிஷப் தெளிவாக சொல்லியிருந்தார் "காந்தாரா"வை pan-India படமாக எடுக்கவும் இல்லை அப்படி ரிலீஸ் செய்யும் திட்டமும் இல்லை என்று! படத்தைப் பார்த்தபோது அந்த வார்த்தைகளின் உண்மை மிகவும் எளிதாகப் புரிந்தது.
தன் மண்ணையும் மண் சார்ந்த படைப்புகளையும் மக்கள் நாடிப் போகும் மனநிலையின் உள்ளர்த்தமானது, விவரமின்றி இந்தப் படத்தை வலிய வந்துத் தூக்கிப் பிடிக்கும் வலதுசாரிகளுக்குத்தான் ஆபத்தானது! இந்த உண்மையை அவர்கள் அறிந்துகொள்ளுமளவு அறிவிருந்தால் வலதுசாரிகளாகவே ஆகியிருக்கமாட்டார்கள் என்பதனால் அதில் பெரிய வியப்பில்லை எனக்கு!
நாட்டார் தெய்வங்களைப் பெரும்பான்மை மக்கள் மறந்துபோனதின் அடிப்படைக் காரணம் என்ன? என்ற கேள்விக்கு வெளிப்படையான ஒற்றை பதில் விவாதப் பொருளாகியிருந்தால், அதே நேரத்தில் வெளிவந்த "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் மேல் வெற்றிமாறன் சுமத்திய குற்றச்சாட்டுடன் கூடிய சர்ச்சையுடன் கைகோர்த்திருக்கும்!
சர்ச்சைகளைத் தாண்டி....
எளிமையான கதை சொல்லலைச் சரியாகக் கையாண்டால் திரைக்கதை கடத்தும் உணர்வுகள் எவ்வித சிக்கலுமின்றி பார்வையாளனுடன் இயல்பான இணைப்பை ஏற்படுத்திவிடும் என்று மீண்டுமொருமுறை திரையில் நிரூபணமாகியிருக்கிறது....
திரைக்கதையை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறார் ரிஷப்... தன்னுடைய நடிப்பின் முழுவீச்சையும் வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கும் உச்சக்காட்சியைத் தன் நடிப்பாலேயே தாங்கியும் பிடித்திருக்கிறார்! கதை நிகழும் முல்லை நில அழகை அதன் இயல்புடனேயே ஒளிப்பதிவு செய்திருப்பதும், காட்சிக்குக் காட்சிப் புதுமையோ பெரும் திருப்பங்களோ இல்லாத திரைக்கதையைப், பார்வையாளனின் மனதுக்கு அருகாமையிலேயே கடைசிவரை அழகாக நகர்த்தும் படத்தொகுப்பும் தான் முழுக்க முழுக்க கன்னடத் திரையுலகிற்கான படமாகவே எடுக்கப் பட்டிருந்தும் பிறமொழி பேசும் நிலங்களிலும் படம் நிலைத்து நின்று திரைமொழி பேசியதன் பிரதான காரணம்!
இத்தனை விரிவான திரையிடலை இந்தப் படம் சென்றடையும் என்கிற முன்புரிதல் படக்குழுவுக்கு இருந்திருந்தால் இத்தனை அப்பட்டமாக இசை நகல் எடுத்திருக்க மாட்டார்கள்..!
இயற்கை மற்றும் வனம் சார்ந்து திரைப்படம் முன்வைக்கும் இறுதிக் கருத்து மிகவும் மேலோட்டமானது! ஒரு "திரைப்படமாக" வணிகரீதியில் எதிர்பாராத பெரும்வெற்றி அடைந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும் தவறான புரிதலுடன் "காந்தாரா"வையொட்டி நிறுவப்பட்ட அரசியல் முன்னெடுப்புகள் சமகாலத்தில் மக்கள் எந்தளவு ஆழமற்ற சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்றாகத் தான் தெரிகிறது......
"காந்தாரா" --> நினத்தது ஒன்று... நடப்பதோ வேறொன்று!

அன்புடன்,
பிரபு எம்

Sunday, March 13, 2022

கடைசி விவசாயி [U] (2022)

கடைசி விவசாயி [U] (2022) 



"அண்ணே.. அந்தாளு ரொம்ப பழைய ஆளா இருக்காப்ல....

இதுல 40 வருஷமா காது வேற கேக்கல....

அறிவு வளராததுனால அவரை எதச் சொல்லியும் ஏமாத்த முடியலண்ணே!" 

சில லட்சங்களில் பணத்தை மேலதிகமாகத் தருவதாக இனிக்கப் பேசி, இன்னும் கிணற்றில் கொஞ்சம் தண்ணீர் மிச்சமிருக்கும், அந்த ஊரில் இன்னமும் சோராமல் நடவு வேலை செய்யும் "கடைசி விவசாயி"யான மாயாண்டியின் நிலத்தையும் எழுதி வாங்கிவிடலாம் என்னும் முயற்சி பலிக்காத சோகத்தில் கதையின் நாயகரான மாயாண்டியைப் (தெய்வத்திரு. நல்லாண்டி அவர்கள்) பற்றிக் கிட்டத்தட்ட ஊரின் மற்றைய நிலங்களையெல்லாம் பணத்துக்கு வாங்கிவிட்ட பார்ட்டிக்கு எடுத்துச் சொல்லப்படும் வசனவரிகள் இவை! அந்தக் கடைசிவரியை மீண்டுமொருமுறை நிறுத்தி வாசிக்கவும்...

"அறிவு வளராததுனால அவரை எதச் சொல்லியும் ஏமாத்த முடியலண்ணே!" 😆

அந்த ஏமாறத் தேவையான "அறிவு வளாராத"ஆனால் விவசாயத்தில் பேரறிவாளரான மாயாண்டியின் பாத்திரப்படைப்பு காகிதத்தில் எழுதப்பட்டுத் திரைக்குக் கடத்தப்பட்டதா? அல்லது நிஜ மாயாண்டிகளின் ஒளிப்பிரதிகளாகத் திரைமொழியில் நேரடியாகவே பதியப்பட்டதா? மாயாண்டி எனும் பாத்திரத்தை நல்லாண்டியின் அகத்தில் விதைத்துத் திரையில் செய்யப்பட்ட நேர்த்தியான அறுவடையா? அல்லது நல்லாண்டிக்குள்ளிருந்த மாயாண்டியை மட்டும் அறுவை செய்தெடுத்ததில் நேர்ந்த பாத்திரப் பிரசவிப்பா? இதுபோன்ற எந்தக் கேள்விக்கும் பதில் தேடத் தடயங்களையே விட்டுவைக்காத, மிகைகளை மீதேற்றிக்கொள்ளாத படைப்புகளைத் தமிழ் சினிமா குறிக்கும் "எதார்த்தம்" எனும் சொல்லையே ஒளி வருடத் தூரத்தில் எதேச்சையாகத் தாண்டிப் பதிந்திருக்கும் நிஜமான வாழ்வியல் அதிசியம், ம. மணிகண்டனின் இந்த அரும்படைப்பு!

"கடைசி விவசாயி"யே தமிழ் சினிமாவின் கடைசி விவசாயப் படமாக இருந்துவிடட்டும் என்று தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சரான (!) அறுபடைவீடுகொண்டு திருமுருகனிடம் கோரிக்கை வைப்போமாக! ஒரு டப்பாவில் கைப்பிடி மண்ணை அள்ளிப்போட்டுத் தண்ணீர் விட்டுக் குழைத்து சூரியன் பார்க்க அதை வைத்துவிடச்சொல்லி அடுத்த நாள் அதில் துளிர் விட்டிருக்கும் ஒரு வேப்பந் தளிரைப் பார்த்து "விதை யார் போட்டது?" என்று அதிசயிக்கும் ஒருவனிடம், " நம்மளுக்கு ஆண்டவன் ஆயிரக்கணக்கான விதைங்களைப் போட்டுருக்கியான்...மழை பேய்ஞ்சு தண்ணி பட்டதும் அது மொளச்சிக்குடுது!.... உனக்கு ஒரு வேப்பங்கண்டைக் குடுத்துருக்கியான் பாரு!" என்று மாயாண்டி ஒரு டப்பாவுக்குள்  விவசாயத்துக்குக் காட்டும் லைவ் டெமோவைப் பார்த்தபோதும் "எனக்கு விவசாயம் தெரியாதுன்னு சொல்லுறவனுக்கும் விவசாயம் செய்யத் தெரியும்.. அவன் பழகிக்குவான்" என்று அந்தக் காட்சிக்கு சற்றுமுன்பாக அனாயசமாக உதிர்க்கப்படும் அந்த வாக்கியத்தைக் கேட்டபோதும் விதவிதமான கார்ப்பரேட் வில்லன்களுடன் ஹெலிகாப்டரில் வந்து சண்டை போட்டு விவசாயத்தைக் காப்பாற்றும் நம் ஸ்டார் ஹீரோக்களுக்கு சமகாலத்தில் மிகவும் பிடித்தமான விவசாய ஜானர் தமிழ்சினிமாக்கள் நினைவுக்கு வந்துபோனதுதான் முருகனிடம் வைத்த மேற்குறிப்பிட்ட கோரிக்கை எழக் காரணம்!

திரைப்படம் பற்றிய இந்தப் பதிவில் இன்னும் படத்தின் கதையைப் பற்றி எதுவும் சொல்லாததில் படம் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம் இருக்கப்போவதில்லை! காரணம்... இதுதான் "கடைசி விவசாயி" படத்தின் கதை என்று அடைத்துக் காட்டிவிடமுடியாது.... சமகால சந்தர்ப்பங்களைத் தொட்டுத் திரையில் விரியும் சம்பவங்கள் கோர்வையாக நிகழ்ந்துகொண்டிருக்க, அந்த ஊரின் வறண்ட நிலப் பிளவுகளும் திருவிழாவுக்குக் காத்திருக்கும் குலதெய்வக் கோவில் கற்சிற்பங்களுமாகக் கதைச்சூழலின் நிலப்பரப்புடைய வரலாறு புவியியல்களை, மாயாண்டிக் கிழவர் கைது செய்யப்படும் காட்சிப் பின்னணிகள் பார்வையாள மனங்களை உழுதுகொண்டிருக்கையிலேயே, விதைகளாகத் தூவி அழுந்த விதைத்துவிடுகிறது திரைக்கதை! 

நிஜத்துக்கு நெருக்கமாய் நெய்யப்பட்ட சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் அரசியல், தற்செயல், வியாபாரம், மனச்சிக்கல், பழம்பகை என்று பலகோணங்களில் காரணங்கள் இருக்கும் அவை ஒவ்வொன்றையும் தொட்டுப் பாடம் எடுக்காமல் பார்வையாளனின் பார்வையில் வைத்துவிட்ட அத்தனைப் புள்ளிகளுக்கும் இடையே லாவகமாக வளைந்து கொடுத்து குறுக்குகளோ வெட்டுகளோ இல்லாத சீரான மாக்கோலமாய் மையப்புள்ளியை சுற்றிச்சுற்றி அழகாகத் தன்னையே பார்வையாளனின் மனதில் வரைந்துகொள்ளும் படத்தின் கதையோட்டம்! உதாரணத்துக்கு மாயாண்டி மயில்களைப் புதைத்த வழக்கில் கைதாவதற்குப் பின்னணியில் அவருடைய நிலத்தை வளைக்க நினைக்கும் வியாபாரமோ அல்லது அதன் பின்னணியில் இயங்கும் அரசியலோ காரணமாக இருக்கலாம் அதே நேரத்தில்... காவல்துறைக்கு ஊர் இளைஞர்கள் மீதான பழைய பகை கூடவும் ஒரு காரணமாக இருக்கலாம்.... திருவிழா நடத்துவதற்கு ஜாதிப் பிரச்னைதான் தடையென்றால் திருவிழாவோடு ஊரின் வறட்சிக்கும் தெய்வம் வகுத்துவைத்திருக்கும் விதியென்று மறுபக்கம் இன்னொரு மடிப்பும் இருக்கும்! இவற்றுக்கு இடையே மிகச்சில காட்சிகளில் தோன்றும் நம் கண்களுக்குத் தென்படாத தன் காதலியுடன் நடந்தே  நெடுந்தூரம் பயணிக்கும்  விஜய்சேதுபதி கதாபாத்திரம்! பக்தியில் கண்கள் சொருகக் கரைந்துருகுவதிலும், ஒரு மர்மமான மாயவனாக சில நிமித்தங்களைப் பேசும்போது கண்கள் காட்டும் தெளிவிலும், சுயமும் இறையும் தன்னைச் சுழற்றியடிக்கும் வேளைகளில் அதே கண்கள் காட்டும் தெளிவற்ற தேடல் தவிப்பும் என வித்தியாச "ராமையா"வாக அசுர நடிப்பை அஸால்ட்டாக வழங்கியிருக்கிறார் சிலகாலம் காணமல் போயிருந்த மக்கள் செல்வன்! திரையில் காற்றில் கரைவதற்கு முன்பாகவே காண்போரின் சிந்தையில் தனியாகக் கலந்துவிடுகிறது அவரது பாத்திரம்! 

மனதுக்கு நெருக்கமான அந்த "பெண் நீதிபதி மங்கையர்க்கரசி" பாத்திரத்தை ரேய்ச்சல் ரெபெக்கா தாங்கிச் சுமந்த விதத்தில் பார்ப்போர் அனைவருக்கும் பெருநிறைவைக் கொடுத்திருக்கிறார்... இயல்பான வசனங்களை நேர்த்தியாகப் பேசியதில் மட்டுமன்றிக் காவல்துறைக்குக் கடுமைகாட்டும் விழி அசையாத ஆளுமைப் பார்வையையும் மாயாண்டிக்குக் கருணையையும் ஒருசேரக் கண்களில் கலக்கவிட்டு பார்வைகளால் தெளித்த விதத்தில் மிகவும் ஈர்த்துவிடுகிறார்..... கிராமத்து நிஜ மனிதர்களாக முனீஸ்வரன், காளிமுத்து, சாப்ளின் சுந்தர், மற்றும் அந்த ஊர்ப் போலீஸ்காரர்களும் கிழவர் கிழவிகளும் என்று கதாபாத்திரங்கள் யாருமே தேர்ந்த திரை நடிகர்கள் அல்ல ஆனால் திரையில் காணும் காட்சிகளைப் புனைவு என்றே நம்பமுடியாத அளவில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பை ம. மணிகண்டன் தன் இயக்கத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கும் ஒரு பேரதிசயமாகத்தான் பார்க்கமுடிகிறது! 

ம. மணிகண்டனின் எழுத்தில் தெறிக்கும் குறும்பான நையாண்டிகள் கூரானவையும் கூட! பேசும் வசனங்கள் பேசாமல் பேசும் பின்புலப் பொருள்களை ரசனையான புன்முருவலுடன் படம் நெடுக இனிமையாய்க் கடந்துகொண்டேயிருக்கிறோம்! ஒளிப்பதிவில் நிலங்களையும் ஒளியையும் காட்சியின் உணர்வுக்கேற்றவாறு துல்லியமாகக் கைப்பற்றியிருக்கிறார். நிலப்பரப்பின் வறட்சியை நெருக்கத்திலும் சூழலின் மிரட்சியை ஒருசில விரிவான வைட் ஆங்கிள் ஷாட்களிலும் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார்.... கதாபாத்திர உணர்வுகளையெல்லாம் நெற்றிக்கோடுகளும் தோல்சுருக்கங்களும் தெள்ளத்தெளிவாய்த் தெரியும் நெருக்கத்தில் கேமராவை வைத்து அசாத்தியமான நிஜக்கலைஞர்களின் முகங்களின் மூலமே ஆழப்பதிந்திருக்கிறார்! மணிகண்டனின் கேமரா மெய்ப்பொருளாய்க் காட்சிப்படுத்திய வயல்களிலும் வரப்புகளிலும் குளம் குட்டை கண்மாய்களிலும், மண்தரை ஓட்டுக்கூரை வீடுகளிலும் கலை இயக்குனர் தோட்டாதரணியின் பொய்ப்பொருட்கள் கண்களுக்குத் தெரியாமல் விரவியிருந்திருக்கக்கூடும்! மலையாளப் படங்களின் அனுபவசாலி எடிட்டரான பி.அஜித்குமாரின் படத்தொகுப்பில் படம் கடத்தும் மெல்லிய உணர்வுகளுக்கு எந்த சேதாரமும் ஏற்படாததே மாபெரும் காரியம் மற்றபடி அஜித்குமாரின் எடிட்டிங்கா மணிகண்டனின் எழுத்தா என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவு காட்சிகள் கருச்சுருக்கமாய் "கட்" கொடுக்கின்றன! சந்தோஷ் நாராயணின் இசையைப் பொறுத்தவரை அவர் பிண்ணனியில் இசைத்த காட்சிகளில் சற்று அந்நியமாகவும் இசைதவிர்த்து மௌனத்தைப் பிரயோகித்த அடர்த்தியான காட்சிகளில் மிகவும் நெருக்கமாகவும் உணர்வதாக இருந்தது அந்த வகையில் சந்தோஷ் நாராயணனின் தீம்கள் எதுவுமே கதைக்கும் களத்துக்கும் பொருந்துவதாக உணரமுடியவில்லை!

எதற்கும் அலட்டிக்கொள்ளாத தெளிவும் தீர்க்கமுமான மாயாண்டி பாத்திரம் தன்னைச் சுற்றி நிகழும் ஆழம் நீளம் அறியா சட்டப் பிரச்னைகளுக்கு எவ்வித வினையும் ஆற்றாமல் பசித்துக்கிடக்கும் பல்லாயிரம் உயிர்களாகத் தான் குலதெய்வத்துக்குப் படைப்பதற்காக விதைத்துவைத்திருக்கும் நெற்பயிர்களை, அவர் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மட்டுமின்றி விவசாயத்துக்குப் பலமைல் தூரத்தில் வாழ்வியல் கொண்டிருக்கும் சமகாலப் பார்வையாளர்களையும் உணரவைத்ததில்தான் "கடைசி விவசாயி" அபார வெற்றிகாண்கிறார்..... பயிர்களை ஆயிரம் உயிர்களாக உணர ஆரம்பத்தலிலிருந்து அந்த ஊர் மக்களான கதை மாந்தர்களின் (போலீஸ் உட்பட) மனதின் இயல்பான நேர்மறை மாற்றங்கள்தான் "கடைசி விவசாயி" விதைத்து அறுக்கும் வசந்தம்! 

வான் பொய்த்து வறண்டுபோன பூமியில் மனித மனங்களின் ஈரம் தெளித்து வளமான கதிர்களை விளைவித்து விவசாயம் செய்த விதத்தில் சோகப்பாடலுக்கு இன்ப மெட்டமைத்து மனங்குளிரச் செய்திருக்கிறார் மணிகண்டன்!

இத்தனை நிறைவான தமிழ்த்திரைப்படத்தைப் பார்த்ததேயில்லையோ என்று மனம் நேர்மையாக யோசித்தது படம் முடிந்து இடியுடன் கூடிய மழைச்சத்ததில் end credits ஓடிய போது!

கடைசி விவசாயி - முதல் போகம்!


அன்புடன்,

பிரபு எம்






Tuesday, January 04, 2022

You're too great பெரியப்பா...!

                                             

Mr. C T Velayutham (21/07/1944 - 01/01/2022)


"பெரியப்பா" என்றுதான் எப்போதுமே என் மொபைலில் அவருடைய எண்ணை சேமித்து வைத்திருக்கிறேன்... ஏனெனில், "பெரியப்பா என்றால் எந்தப் பெரியப்பா?" என்கிற கேள்வி என்றுமே வந்ததில்லை!

என் அப்பா - அம்மாவின் திருமணம் நடந்த கதையைப் பெரியப்பா சுவாரஸ்யமாகப் பலமுறை கூறக்கேட்டு ரசித்திருக்கிறேன்...... அந்தத் திருமணத்தில் பெரியப்பாவின் பங்கு அத்தனை அலாதியானது...! பெரியப்பா இப்போது இல்லை என்று அலைபேசியில் நான் கேட்ட வலிமிகுந்த அந்தக் கணத்தில் நான் என்னை மிகவும் முதியவனாக உணர்ந்தேன் காரணம் கடைசியாக அவருடன் பேசியபோது கூட என்னை ஒரு குழந்தையாகத்தான் அணுகினார் பெரியப்பா! என் பார்வையில் பெரியப்பா என்றுமே ஒரு சாதாரண மனிதர் அல்ல.... உள்ளும் புறமும் வசீகரமான ஒரு மேக்னடிக் பெர்சனாலிடிக்கு சொந்தக்காரர் அவர்! 

வாழ்க்கையைப் பெரியப்பா அணுகும்விதம், மூன்றே மூவ்களில் செக் வைத்துவிடும் ஒரு செஸ் க்ராண்ட் மாஸ்டரைப் போன்றுதான் தெரிந்திருக்கிறது எனக்கு! காரணம் தேவையற்ற எண்ணங்களால் தேங்கி நின்றுவிடும் ஒரு சராசரி ஃபேமிலிமேனாக அவர் தன்னை சுருக்கிக்கொள்ளவில்லை.... The most practical thinker என்றுதான் பெரியப்பாவைப் பார்த்திருக்கிறேன்.. எனக்குத் தெரிந்தவரை, பெரியப்பா "NO" சொல்லவேண்டிய இடங்களில் "YES" சொல்லியிருக்கவே மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்... அவர் தனது மனதைத்தான் பேசுவார்! அவரது சுயத்துக்கும் மனதிற்கும் அதிக இடைவெளி இருப்பதுபோல் யாருமே உணர்ந்திருக்க மாட்டார்கள் அதனாலேயே இயல்பாகவே அத்தனை பேரையும் தன் நட்பாலும் நேசத்தாலும் கவர்ந்திருந்தார்! மிகுதியான பேரன்பைவிட யதார்த்தனமான அன்பு அதி உன்னதமானது! அப்படியானதுதான் பெரியப்பாவின் அன்பு என்று பலமுறை உணர்ந்திருக்கிறேன். 

வயதால் அவரை அடக்கிவிட முடியவில்லை! மகன்களுடன் தோழமையாக உறவாடும் தந்தைகள் நம்மிடையே உண்டு ஆனால் மகன்களின் நண்பர்களும் இவருக்குத் தனிப்பட்ட முறையில் நண்பர்கள்! அவர்களது காதல், திருமணம், வேலை உட்படப் பல அணுக்கமான வாழ்வியல் முடிவுகளை எடுக்க அக்கறையுடன் நுணுக்கமான யோசனைகளை ஒரு நண்பனாகப் பெரியப்பா பகிர்ந்த பல தருணங்களை அறியக் கேட்டிருக்கிறேன்! பேரன்களின் தோழர்களுடனும் கூட அவர் தெளிவான தோழமை பாராட்டியிருக்கக்கூடும் என்றுதான் நினைக்கிறேன்! அதற்கு நான் கிரஹிக்கும் காரணம் பெரியப்பா ஒரு preacher அல்ல a great listener! அதையும் தாண்டி மிகவும் விரிவான reader! காலம் மிகவும் கஷ்டப்பட்டுக் கள்ள ஆட்டம் ஆடித்தான் பெரியப்பாவைக் கட்டுப்படுத்த முனைந்தது! அவரது இளமையை அவர் வயதால் உணரவில்லை மனதால் உணர்ந்திருந்தார்... ரிட்டையர்டு ஆனப் பிறகுகூட பெரியப்பாவின் ட்ரெஸ்ஸிங்கும் அவருக்கு மிகவும் பிடித்தமான கூலர் க்ளாஸ்கள் அணியும் ஸ்டைலிலும் எந்த மாற்றமும்  நிகழவில்லை! யமஹாவுடனான பெரியப்பாவின் நட்புக்குக் கடிவாளங்கள் இருந்ததில்லை! மதுரையின் எந்த பிஸியான சாலையிலும் இயல்பாகத் தன் பைக்கில் பெரியப்பா என்னைக் கடந்து சென்ற தருணங்கள் பலநூறு முறைகள் இருக்கும்... நான் சைக்கிள் ஓட்டிய காலத்திலிருந்து கார் பார்க்கிங் செய்யத் தடுமாறிய காலங்கள் வரை இது சாதாரணமாக நிகழும்! ஒரு கட்டத்திற்குமேல் அதிகம் சந்திக்கவில்லை ஆனால் இப்படியாக ரோட்டிலும் அவர் நெடுநாட்கள் நடைப்பயிற்சி மேற்கொண்ட அரசரடி க்ரவுண்டிலும் பெரியப்பாவைத் தூரத்தில் பார்த்த கணங்கள் எவ்வளவோ உண்டு! He always radiated his positivity!

 காலம் தன் "முதுமை" எனும் கொடிய ஆயுதத்தைப் பல கோணங்களில் வீசிப்பார்த்தும் அதை அலட்சியமாகத் தன் லெஃப்ட் ஹேண்டால் டீல் செய்தார் என்றுதான் சொல்வேன்... கருணையற்ற காலமோ தன் கள்ள ஆட்டத்தைப் பிரயோகித்தது சாலை விபத்து எனும் பெயரில்! அந்தக் கொடிய சாலை விபத்துகளும் அதன்பின்னான வலிமிகுந்த சிகிச்சைகளால் ஏற்பட்ட அசௌகரியங்களும்தான் பெரியப்பாவின் இயல்பான உற்சாகத்துக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்கத் துவங்கியது என்று நினைக்கிறேன்....! தொண்ணூறு வயதை எல்லாம் தொட்டுப்பார்த்து எப்படி ருசிக்கிறது என்று சொல்லியிருக் கூடிய எவர்கிரீன் இளைஞர் அவர்...! என்றும் சொல்வேன் சந்தேகமின்றி, வயதுடனான போரில் வென்றது நிச்சியம் அவர்தான் என்று!

ஒரு கிறிஸ்துமஸ் இரவில் பெரியம்மாவின் இறப்புச் செய்தி வந்தது.... கம்பீரமான பெரியம்மாவை இறுதியாகப் பார்க்கப் போயிருந்த அந்த இரவில்தான் தளர்வு எனும் உணர்வை முதன்முறை பெரியப்பாவிடம் பார்த்தேன்.... ஒரு பக்கத்துவீட்டுப் பொடியனாகப் பெரியப்பாவையும் பெரியம்மாவையும் நான் பார்த்தபோது அவர்கள் இருவரும் ஃப்ரெண்ட்லியாக எனக்குத் தெரியவில்லை ஆனால் எனக்கு ஓரளவுக்கு முதிர்ச்சி வந்தபின்புதான் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த புரிதல் ஒரு non-verbal கவிதையாகப் புலப்படத் துவங்கியது! இருவரும் அதிகம் பேசிக்கொள்வது போன்றே தெரியாது ஆனாலும் ஓர் அழகான கம்யூனிகேஷன் இருவருக்குமிடையே உயிர்ப்புடன் இருப்பது தெளிவாய்த் தெரியும்! பெரியப்பாவை care செய்துகொண்டே இருக்கும் பெரியம்மாவையும்... பெரியம்மாவுக்கு அவரது உள்ளுணர்வில் சின்னதொரு சங்கடம் வந்தாலும் அதை சென்ஸிடிவ்வாக உணர்ந்துகொள்ளும் பெரியப்பாவையும் பார்த்திருக்கிறேன்.... இப்போது இருவருமே இல்லாத அவர்களது வீட்டுக்குப் போக மனதைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது!

என் அப்பாவின் பணி ஓய்வு விழாவில் பெரியப்பா பேசியதும் அப்பாவுக்கு அணிவித்த பொன்னாடையை என்னுடைய அம்மாவுக்குப் பெரியப்பா பாசத்துடன் அணிவித்த அந்த ஆனந்தமான தருணமும் அதன் இன்பத்துடனேயே உறைந்திருக்கிறது ஒரு புகைப்படமாக! எத்தனை ஆண்டுகளானாலும் எத்தனையோ நினைவுகளை அதிர்வுகளாய் எண்ணங்களுக்குள் ஊடுறவச்செய்யும் வல்லமை பெற்றது அந்தப் புகைப்படம்! என்னுடைய வயது முப்பதைத் தொட்ட போது என் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கால் செய்த பெரியப்பா... "உனக்கு முப்பது வயசாகிடிச்சேடா.... சின்னப் பையனேடா  நீ!"என்று சொன்ன அந்த சொற்களும் என் அப்பாவை "ஃப்ரான்சிஸு.." என்று அவர் வாஞ்சையோடு அழைப்பதும் ஏனோ நேற்றிலிருந்து அவரது கணீர் குரலில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது அகத்துக்குள்!

குமார் அண்ணனுடனும் சிவா அண்ணனுடனும் பெரியப்பா பழகும் விதமும் அவர்கள் மூவரும் பகிர்ந்துகொள்ளும் நட்புமுறைகளும் அவ்வளவு practicalஆக இருக்கும்! நடைமுறை யதார்த்தங்களை சாதாரணமாகப் பகிர்ந்துகொள்ளப் பழகிய நல்ல நண்பர்கள் அவர்கள்!

ஒரு கட்டத்தில் பெரியப்பாவின் கேட்கும் திறன் மிகவும் குறைந்து சிரமப்பட்டார் என்று கேள்வியுற்றேன்.... இப்போது எல்லோருடைய மனக்குரல்களையும் கேட்கும் வல்லமை பெற்றுவிட்ட பெரியப்பாவுக்கு அவர் தனது இயல்பால் இடம்பிடித்திருந்த அத்தனை மனங்களின் குரல்களிலும் அவர்மீதான பாசமான பேச்சுக்களை எவ்விதக் கஷ்டமுமின்றிக் கேட்டுக்கொண்டிருப்பார்.... அந்தப் பாசமும் அன்பும் தோழமையும் முழுக்க முழுக்க அவர் சம்பாதித்தது! I have never seen you within the boundaries of an average person..... You're too great பெரியப்பா!

The bonding we share between our families is stronger than a blood relation!

Take care பெரியப்பா..... You'll live forever in our thoughts...

My love to Kumar Anna, Siva Anna, Vasuki Akka, Shanthi Akka and family....

அன்புடன்,

பிரபு எம்