ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்துவிட்டது அதன் முதல் ரிப்போர்ட் ஒரு செய்திச் சேனலில்.......
காக்க..காக்க படத்தின் டைட்டில் இசையைப் போன்றதொரு வேகமான இசையை பேக்ரவுண்டில் போட்டுக்கொள்க.... ஒரு ரெட் கலர் பேக்ரவுண்டில் சுமார் இருபது நிமிடங்களுக்கு..... ப்ரேக்கிங் நியூஸ் என்று கொட்டெழுத்தில் வந்து வந்து போகும்....
பிரேக்கிங் நியூஸ்:
ஜாலியன் வாலாபாக்கில் வன்முறை! போலீஸ் துப்பாக்கிச்சூடு......
சுதந்திரப் போராட்டக்காரர்கள் நடத்திய கூட்டத்தில் போலீஸ் தாக்குதல்.... துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாகத் தகவல்!
பக்கத்து சேனலில் ”திருடா... திருடா...” பட தீம் மியூஸிக் போல வேறொரு டெரர் மியூசிக்குடன்....
பிக் பிரேக்கிங்....
சேனல்-1 ல் செய்தியாளர்: ஜாலியன் வாலாபாக்கிலிருந்து முதல் காட்சிகள் வெளிவந்திருக்கின்றன அவை உங்கள் பார்வைக்கு.....
காட்சி: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்துக்கு அருகில் கேமரா வைக்கப்பட்டுள்ளது... தரையில் ரத்தக்கறைகளும் பத்துப் பதினைந்து தோட்டாக்களின் ஷெல்களும் தெரிகின்றன... அடுத்த ஃபுட்டேஜில் நான்கைந்து சடலங்கள் அப்புறப்படுத்தப் படுவது தூரத்தில் தெரிகிறது.... போலீஸ் இங்குமங்கும் ஓடுகிறார்கள்....
பத்திரிக்கையாளர்களைப் போலீஸ் விரட்டுகிறார்கள்......
இந்த ஐந்து ஃபுட்டேஜ்களை 24 முறை ஒளிபரப்புகிறார்கள்...
பேக்ரவுண்டில் செய்தியாளர்: காவல்துறை எச்சரிக்கையையும் மீறி இன்றும் ஜாலியன் வாலாபாக்கில் போராட்டக்காரர்கள் பெருமளவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது... அப்போது காவல்துறை அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியபோது அங்கு லேசான மோதல் நடைபெற்றதாகத் தெரிகிறது அதன்பிறகு ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது... உறுதியான தகவல்களைத் தெரிந்துகொள்ள எமது செய்தியாளர் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார் விரைவில் அவரிடம் நேரடியான விவரங்களை அறிந்துகொள்ளலாம்....
சேனல்-2ல் ஓர் அரங்கு அமைக்கப்பட்டுவிட்டது.......
மூத்த பத்திரிக்கையாளர்..
சுதந்திரப் போராட்டக்காரர்
காந்தியவாதி
பிரிட்டிஷ் ஆதரவாளர்
பிரிட்டிஷ் இண்டியாவின் ஓய்வு பெற்ற கலெக்டர்
அமர்ந்திருக்கிறார்கள்......
தொகுப்பாளர்: ஜாலியன் வாலாபாக் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 8 பேர் பலியாகியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது... இது மேலும் உயரக்கூடும் என்றும் தெரிகிறது.... நான் முதலில் சுதந்திரப் போராட்டக்காரரிடமிருந்து ஆரம்பிக்கிறேன்... (அவரை நோக்கி) வணக்கம்... நீங்க இந்த சம்பவத்தை எப்படிப் பாக்குறீங்க ?
சுதந்திரப்போராட்டக்காரர்: என்ன சார் வன்முறை, துப்பாக்கிச்சூடுனு சொல்லுறீங்க? போராட்டத்துல எங்கசார் வன்முறை நடந்துச்சு?? அமைதியா போராடுன மக்களைக் கொடூரமா சுட்டுக்கொன்னுருக்காங்க ஜாலியன் வாலாபாக் படுகொலைன்னு சொல்லாம ஜாலியன் வாலபாக் வன்முறை சம்பவம் - போலீஸ் துப்பாக்கிச்சூடுன்னு சொல்லிட்டு இருக்கீங்க...
பிரிட்டிஷ் ஆதரவாளர்: சார்... வன்முறை நடக்கலைன்னு எப்படி சொல்லுறீங்க? போனவாரம் போராட்டம் நடக்குறதுக்கு முன்னாடி மூணு பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தாக்கத் திட்டம் போட்டு வாட்ஸப்-ல பரப்பியிருக்காங்க... போராட அனுமதி மறுத்ததுக்கு அப்புறமும் இத்தனை பேர் ஓரிடத்தில் குவிஞ்சா எந்த நேரமும் வன்முறையாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்குது சார்... சட்ட ஒழுங்கை அப்புறம் யார் பாதுகாக்குறது??
நெறியாளர்: (சுதந்திரப் போராட்டக்காரர் மற்றும் காந்தியவாதியை அமைதி காக்க சொல்கிறார்) சரி இந்தப் போராட்டத்துக்கு முறைப்படி அனுமதி வாங்கலன்னு ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறார் நம்ம நண்பர்.... இதை நீங்க எப்படிப் பாக்குறீங்க சார்....
பிரிட்டிஷ் இண்டியா முன்னாள் கலெக்டர்: ப்ரோட்டாக்கால் படி ஒரு போராட்டத்துல துப்பாக்கி சூடு நடந்திருக்குன்னாலே அங்க கலவரம் தூண்டப்பட்டிருக்குன்னு தான் அர்த்தம்.. சும்மா உணர்ச்சிவசப்பட்டுப் பேசுறதுல அர்த்தம் இல்ல... தன்னிச்சையா முடிவு பண்ணி இப்படி ஒரு துப்பாக்கிச்சூடு நடத்திட முடியாது.... கலவரத்தைத் தூண்டும்படியா அங்க சம்பவங்கள் நடந்திருக்கும் நிச்சியமா....
இப்படியாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்த ப்ரேக்கிங் நியூஸ்:
ஜாலியன் வாலாபாக் வன்முறையில் துப்பாக்கிச்சூடு: நாடு முழுவதும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் - அவசர நிலை பிரகடனம்...
போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்காமல் அறவழியில் போராடுமாறு ட்விட்டரில் காந்தி வேண்டுகோள்!
இதனையடுத்து ஃபேஸ்புக்கில் “ நாட்டாமை” பட மிக்சர் மீமில் காந்தியை வைத்து அதிக அளவில் மீம்கள் பகிரப்பட்டு வைரல் ஆகிறது...
பொறுத்தது போதும் பொங்கி எழு தீமிலும் பல்வேறு மீம்கள் வைரல் ஆகிறது.....
#மிக்சர் காந்தி என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்படுகிறது..
#I_stand_with_Gandhi என்று இன்னொரு ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிறது...
#கொலைகார_பிரிட்டிஷ்_அரசு என்று ஒரு ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆக பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகவும் சில ஹேஷ்டேக்குகள் இந்தியாவில் அரசு ஆதரவாளர்களால் ட்ரெண்டாக்கப் படுகிறது....(#கொலைகார_பிரிட்டிஷ்_அரசுஹேஷ்டேக் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலிருந்து உருவாக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் அரசு ஆதரவாளர்கள் பேட்டி கொடுக்கிறார்கள்!)
உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 100 ஐத் தாண்டிவிட்டது....
சமூக வலைதளங்களும் சேனல்களும் பயங்கர பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன....
நிற்க......
இதற்குமேல் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை சமகாலத்தில் மீடியாக்களோடும் சமூக வலைதளங்களிலும் தொடர்பில் இருப்பவர்களால் எளிதில் கிரஹித்துக் கொள்ள முடியும்!
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஏப்ரல் 13, 1919ம் ஆண்டு இருந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அந்த சம்பவம் பற்றிய செய்தி தமிழகம் வந்து சேர்வதற்கே ஒரு வாரம் கூட ஆகியிருக்கலாம்! ஆனாலும்கூட வரலாற்றில் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் ஜாலியன் வாலாபாக் படுகொலை (Jalian Wala Bhag Massacre) என்று தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது அந்த சம்பவம்! அன்றைய செய்திகள்தான் இன்றைய வரலாறுகளாக நமக்கு பதிந்து தரப்பட்டுள்ளது... ஆனால் இன்றைய செய்திகள் நாளைய தலைமுறைக்கு எப்படிப்பட்ட வரலாறுகளாக போய்ச் சேரும் என்று யோசித்துப் பார்த்தால் அவரவர் சார்ந்திருக்கும் கட்சி, சித்தாந்த, சாதி மற்றும் மத சார்பு நிலைகளுக்கு ஏற்றவாறு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும், தரவுகளைத் தரும் மீடியாக்களும் இணையதளப் பதிவுகளும் தாரளமாய்க் கிடைக்கின்ற சமகாலத்தில் வாழ்ந்துவரும் நமக்கு சிரிப்பதா அழுவதா என்று இனம் புரியாத உணர்வுதான் எழுகிறது!
ஒரு சாதாரண மனிதன்கூட நொடிக்கு நொடி நடக்கும் சம்பவங்களை லைவ் டெலிகாஸ்ட் செய்யும் அளவு வளர்ந்துவிட்ட மீடியா தொழில் நுட்பத்தினால் செய்திகளும் தகவல்களும் வேகமாகப் பரவுகிறதே தவிர துல்லியமாக சென்றடைகிறதா என்னும் கேள்விக்கு மோர்ஸ் கோடுகளிடம் , வாட்ஸப் ஃபார்வோர்டுகள் தலைகுனிந்துதான் நிற்க வேண்டும்!
வந்தந்திகள் பரப்பப் பயன்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் செய்திகளைப் பகிரப் பயன்படுத்துக்கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு ஆபத்தானது?
மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று இப்போது எல்லா வரலாறுகளிலும் (பிரிட்டிஷ் பதிவுகள் உட்பட) தெளிவாக இடம்பெற்றிருக்கும் அந்தக் கொடூர சம்பவம் இப்போது நடந்தால் ஒருசில மீடியாக்களின் ஆசீர்வாதத்தினால் ஜாலியன் வாலாபாக் வன்முறை சம்பவமாகவும் ஜாலியன் வாலாபாக் என்கவுண்டர் என வெவ்வேறு நாமகரணங்கள் பெற்றிருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது!
பதிவின் நீளம் கருதி இதோடு முடிக்கிறேன்.....
சமகால மீடியா சாதனங்களின் மீதான பொதுப்படையான விமர்சனமாகவே இந்தப் பதிவைப் பதிகிறேன் இது தொடர்பாக உங்களின் நேர்மறை/எதிர்மறைக் கருத்துக்களையும் தயவுசெய்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்....
அன்புடன்,
பிரபு எம்.