எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Friday, April 10, 2015
ஓர் இலக்கியவாதியின் பயணம்
இலக்கியம் என்றால் என்ன? என்று ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் ஒரு கேள்வி இருந்தது! இலக்கியம் என்பது ஒரு மொழியின் கலாச்சாரத்தின் காலக்கண்ணாடியாகும் என்கிற ரீதியில் மனப்பாடம் செய்திருந்த பதிலை எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! கேள்விக்கு பதில் எழுதியபின்பு மனதில் இரண்டு கேள்விகள் முளைத்திருந்தன! ஒன்று ஏற்கெனவே அர்த்தம் புரியாத இலக்கியம் என்றால் என்ன? என்ற கேள்வி மேலும் புதிதாக “காலக்கண்ணாடி” என்றால் என்னவென்றும் புரிந்திருக்கவில்லை அப்போது!
இந்த இரண்டு வார்த்தைகள் எனக்கு அறிமுகம் ஆகுமுன்பே “ஜெயகாந்தன்” என்ற வார்த்தை எனக்கு அர்த்தம் புரியாமலேயே அறிமுகமாகியிருந்த ஒரு பெயராகும்...! எழுத்துக்களைப் பயின்ற மாத்திரத்தில் ஒரு குழந்தையின் கண்கள் காண்கின்ற எழுத்துக்களையெல்லாம் ஒவ்வொன்றாக வாசித்து வாக்கியங்களை உச்சரிக்கத் துடித்திடும் அல்லவா? அந்தவகையில் எங்கள் வீட்டு புத்தக அலமாரியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களிலுமே செங்குத்தாக எழுதப்பட்டிருந்த “ஜெயகாந்தன்” என்ற பெயரை எழுத்துக்கூட்டி வாசித்து வாசித்து யாரென்றே தெரியாவிட்டாலும் மழலை மாறுமுன்பே மனப்பாடமாகிப்போன பெயர் அது!
இந்த பாக்கியத்திற்கு என் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்! ஜெயகாந்தனின் தீவிர வாசகர் என் அப்பா.....!
இலக்கியம் என்றால் என்ன? மீண்டும் இந்தக் கேள்வி மனதில் முளைத்தபோது “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”-ஐயும் “யாருக்காக அழுதான்”-ஐயும் வாசித்திருந்தேன்..... அந்த ஹென்றியையும் ஜோசஃபையும் போன்ற மனிதர்களை நான் பைபிளில்கூட இன்றளவும் தரிசித்ததில்லை! அன்று முதல் இன்றுவரை இலக்கியம், காலக்கண்ணாடி, கம்பீரம், வீரம், ஆண்மை, ஆளுமை போன்ற வார்த்தைகளுக்கு எல்லாம் எனக்குத் தெரிந்த ஒரே அர்த்தம் “ஜெயகாந்தன்”தான்!
நேற்றிரவு ”ஜெயகாந்தன் காலமானார்” என்ற ஃப்ளாஷ் நியூஸை சேனல் மாற்றும்போது பார்த்துபோது அதிர்ச்சியாகயிருந்தது.... எண்பது வயதெல்லாம் ஒரு வயதா என்று மனம் ஒரு கணம் பதைபதைத்தது. மறுகணமே அவரின் உடலுக்குத்தான் வயது எண்பதாக இருக்கமுடியும் ஆனால் அவருள் இயங்கிய அந்த மனதும் அதில் பொதிந்திருந்த அனுபவங்களும் வெறும் எண்பது வருட ஒற்றை ஜென்மத்தின் பயனாக இருந்துவிட சாத்தியமில்லை என்றே மனதில் தோன்றியது இந்த முன்ஜென்ம ஃபாண்டஸிகளிலெல்லாம் சிறிதும் நம்பிக்கையில்லாவிட்டாலும்!
”ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” , “ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” , ஆன்மீக அனுபவங்கள் , பத்திரிக்கை அனுபவங்கள் என்று ஒவ்வொரு துறையிலும் தனது அனுபவங்களை ஓர் ”இலக்கியவாதி” என்னும் அழுத்தமான அடையாளத்துடனேதான் பதிந்திருக்கிறார்....! சினிமா, அரசியல், பத்திரிக்கை, ஆன்மீகம் போன்ற கவர்ச்சிக் கடல்களில் வாழும் நாளெல்லாம் அடையாளம் தேடுபவர்களை மட்டுமே பார்த்திருக்கும் கண்களுக்கெல்லாம் இந்தத் துறைகளிலும் இவர் தனது இலக்கியவாதி என்னும் அடையாளத்துடன் அழுத்தமாகத் தன்னை மட்டுமே பதித்துவிட்டு ஒட்டுறவின்றி வெளிவந்ததை ஆச்சர்யமாகக் காணக்கூடும்....
உடல்கள் உயிருடன் இருக்கும்போதே எழுத்தாளர்கள் சிலரின் “மரணத்”தை மிகச்சமீபத்தில் கண்ணால் கண்ட சாட்சிகளாகியிருக்கிறோம் நாம்....முதுகுகளைக் குறிவைக்கும் முகம் தெரியாத எதிரிகளின் கூடாரம் தானே தமிழ்ச்சமுதாயம் அன்றும் இன்றும்.....! இப்படிப்பட்ட இதே தமிழ்ச்சமூகத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கின்றது சென்ற தலைமுறையில்..... ஜெயகாந்தனின் எழுத்தில் உருவான ஒரு திரைப்படம் (உன்னைப்போல் ஒருவன் என்று நினைக்கிறேன்) திரையிடப்பட்ட திரையரங்கத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக நம் தமிழ்நாட்டுக்கே உரித்தான முகம்தெரியா வீரர்கள் அறிவித்திருக்க, படம் வெளியாகியிருக்கிறது அவரது வாசகர்களும் அந்தப் படத்துக்கு சென்று பார்த்திருக்கிறார்கள்.... அப்போது தனது படைப்பைக் காண வரும் தனது வாசகர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதைத் தனது கடமையாக நினைத்து தியேட்டரில் படம் ஓடும் நேரத்தில் திரையரங்க வாசலில் கையில் ஒரு கட்டையுடன் காவல் நின்றிருக்கிறார் ஜெயகாந்தன்! நம்மை நாம் some one different என்று காட்டிக்கொள்ள சேகுவாரா டி-ஷர்ட்டைத் தேடிச்சென்று அணிகிறோமே நம்முடனேயே வாழ்ந்த இந்த வீரத்தைப் பற்றி அறியாமலேயே வாழ்ந்திருக்கிறோமே என்று என்னை நானே நொந்துகொண்டேன் அவரது திரையுலக அனுபவத்திலிருந்து இந்தச் சம்பவத்தை அறிந்தபோது!
”சினிமாவுக்குப் போன சித்தாளு” என்னும் கதை பதிவுசெய்த விஷயம் தமிழ்நாட்டில் நடந்ததை நாமனைவரும் அறிவோம்! கசக்கும் சில உண்மைகளை மூக்கைப் பிடித்துக்கொண்டுப் பருகுவதற்குப் பழகிப்போனவர்களான நம்மிடையே உள்ளதை உள்ளபடியே பதிவுசெய்தவிதத்தில்தான் அர்த்தத்துடன் உணர்ந்தேன் இலக்கியம் என்பது “காலக்கண்ணாடி” என்று ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் மனப்பாடம் செய்திருந்ததை!
பள்ளித் தேர்வுகளில் கட்டுரைகளுக்கு முன்னுரை என்று ஒன்று எழுதவேண்டும்.... பிறகு நூல்களிலெல்லாம் முன்னுரை யென்று ஒன்றை அந்த நூலை எழுதியவருக்கு வேண்டியவரான யாரோவொருவர் எழுதியிருப்பார்....! ”ஜெயகாந்தனின் முன்னுரைகள்” என்றே ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தபோது தன்னுடைய ஒவ்வொரு கதைக்கும் தானே தீட்டிய முன்னுரைகளில் தன் வாசகர்களுடன் ஒரு தோழனைப்போல உரையாடித் தான் சமைத்த படைப்பை வாஞ்சையுடனும் தோழமையுடனும் தான் புரிந்தத் தன்னை உணர்ந்த வாசகர்களுக்குத் தேர்ந்த தயாரிப்புடன் அவர் பரிமாறும் விதம் ஆச்சர்யமான அற்புதமாக இருந்தது!
நேற்றிலிருந்து அவரது மரணம்தொட்டுப் பத்திரிக்கைகளில் வெளியான அனைத்துக் கட்டுரைகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன்.... ஒவ்வொரு கட்டுரையும் அவரது ஒவ்வொரு தனித்துவத்தைத் தாங்கியதாய் இருந்தது.... ஒரு வேற்றுக்கிரஹவாசியோ இவர் என்றுதான் ஒவ்வொருமுறையும் உணர்ந்திருக்கிறேன் அவரை.... பாரதியாரை வியந்ததுபோலவே! தமிழ் இலக்கியவாதிகள் என்று ஒரு பட்டியல் இருக்குமானால் அதிலிருக்கும் பெயர்களுடன் ஒருபோதும் ஜெயகாந்தன் என்னும் ஆளுமையை எழுதிப்பார்க்க மனம் ஒவ்வாது இலக்கியம், மொழி, நாடு போன்ற வரையறைகளுக்கெல்லாம் அப்பார்ப்பட்ட ஓர் இடத்தில் தானே தன்னைப் பொறித்துக்கொண்ட பெயர் அது!
தற்போது படித்த கட்டுரைகளில் பெரும்பாலும் இடம்பிடித்திருந்த ஒரு விஷயம்- அதாவது எழுதுவதைத் தானே அறிவித்து நிறுத்திக்கொண்டார்... அப்படி நிறுத்தியும் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகாலம் வாழ்ந்திருக்கிறார்... ஒருகட்டத்தில் அவர் அதிகம் பேசக்கூடவில்லை என்று கேள்வியுற்றிருக்கிறேன்.... எழுதுவதை நிறுத்திக்கொண்டபின்னும் அவருக்கான இடத்தில் அவர்மட்டுமே இருந்திருக்கிறார் இறக்கும்போதும்.... இறந்தபின்னும் அவர்மட்டுமே இருப்பார் அந்த அரியணையில்.....
”அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்ற சொற்றொடர் இவருக்குப் பொருந்தாது உடலுக்குள் உயிர் இருந்தபோதே சாந்தியடைந்துவிட்ட ஆன்மா இது!
ஜெயகாந்தனைப் படிப்பவர்கள் ஜெயகாந்தனை மட்டுமே படிப்பவர்கள் ஆகிறார்கள் என்று உணர்ந்திருக்கிறேன்..... ஜெயகாந்தனை மட்டுமே படிப்பவன் நான்... இன்னும் நான் வாழுமட்டும் படிக்க எவ்வளவோ எழுதியிருக்கிறார் திரும்பத் திரும்ப அதைப் படிக்கும் என் அப்பாவும் அத்தனையையும் வாங்கி எனக்கு சொத்தாக சேர்த்துவைத்திருக்கிறார்... குளிரும் ஐரோப்பிய வானங்களில் சூரியனை மிகவும் பலவீனமாகப் பார்த்து வியந்ததைப் போலவே எப்போதும் பயந்து நடுங்கும் மரண தேவனை நேற்று மிகமிகப் பலவீனத் தோற்றத்தில் பார்த்தேன், ஆழ்ந்து அவிந்து அடங்கிய ஓர் உயிரைக் காத்திருந்து மரியாதையுடன் தன்னுடன் அழைத்துச்சென்ற பவ்வியத்தைப் பார்த்தபோது! அவதாரங்களுக்கு மரணம் ஒரு க்ளிஷே முடிவுதான்! முற்றற்ற பயணமிது...!
இந்தக் கட்டுரையை எழுதும் தகுதி எனக்கு சத்தியமாகக் கிடையாது இருந்தாலும் ஓர் உணர்வில் பதிகிறேன் அவ்வளவே......
பிரபு .எம்
Subscribe to:
Posts (Atom)
