"அலை" என்பது இந்திய அரசியலில், குறிப்பாக தேர்தல்களில், என்றுமே மிக மிக வலிமையானதாகத்தான் இதுவரை அறியப்பட்டுள்ளது.... அதுஆளுங்கட்சிகள் மீதான எதிர்ப்பு அலையாக இருந்தாலும் சரி, தலைவர்களின் அகால மரணங்களினாலான அனுதாப அலையானாலும் சரி.... இந்திய அரசியல் "அலைகள்" என்றுமே மொத்தத்தையும் வாரி சுருட்டித் தன்பக்கம் இழுத்துக்கொள்ளும் ராட்சச "சுனாமி"கள்தான்!
தற்போது நாட்டில் அதிகம் விவாதிக்கப்படும் "மோடி அலை"யையும், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான "செமி ஃபைனல்" என்று வர்ணிக்கப்பட்ட இந்த நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிடும் ஒரு சிறிய அலசல்தான் இந்தப் பதிவு!
நான்கு மாநிலத் தேர்தல் செமி ஃபைனலா???
இந்த நான்கு மாநிலத் தேர்தலை 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமிஃபைனல் என்று வர்ணிப்பது பிஜேபியின் பிரச்சாரம்தான்! காரணம் இதில் அவர்களது கட்சியின் வெற்றி வாய்ப்புகள் வெகுவாக ஓங்கியிருப்பதை அவர்கள் நன்று அறிந்திருந்தார்கள்! இந்த 4 -0 வெற்றியை நாடெங்கும் வீசும் மோடி அலையின் பிரதிபலிப்பாக அறிவிப்பதில் இன்று வெற்றிபெற்ற எந்த முதல்வரும் (வசுந்தரா ராஜே உட்பட) தயக்கம் காட்டாததை கவனிக்க வேண்டும்...... இந்த வெற்றியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயறிசியில் பிஜேபி ஒருமித்த முயற்சி காட்டுவது நல்ல அரசியல் என்றாலும் அந்தக் கட்சியைப் பொறுத்தவரை இத்தகைய ஒருமித்த நிலைப்பாடு ஓர் ஆச்சர்யமே! சரி... இந்த 4 மாநிலத் தேர்தலை நிஜமாகவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமாகக் காணலாமா? என்றால்..... முதலில் அந்த நான்கு மாநிலத் தேர்தலின் பின்னணியை உற்று நோக்க வேண்டும்......
ராஜஸ்தான் -
* கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கு நடந்துவந்த அஷோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, இந்தப்
பொதுத்தேர்தலோடு ஆட்சிக் கட்டிலை காலி செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவாகத் உணர்ந்துகொள்ள உளவுத்துறை ரிப்போர்ட் கூடத் தேவைப்படவில்லை அந்தளவுக்கு மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்தார்கள் ராஜஸ்தானில்!
* மறுபுறம் வசுந்தரா ராஜேவுக்கு ராஜஸ்தான் மக்கல் மற்றும் பிஜேபியின் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு பொதுவாகவே மிகவும் வலிமையானதுதான், அதிலும் இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் வசுந்தராவிடம் ஒப்படைக்க மக்கள் காத்திருந்தார்கள் என்பது தெளிவான உண்மை!
* இன்னுமொரு கவனிக்க வேண்டிய விஷயம்... கடந்த 1993 பொதுத் தேர்தலிலிருந்தே மக்களின் தீர்ப்பு ஒருமுறை பிஜேபி மறுமுறை காங்கிரஸ் என்னும் சுழற்சி அடிப்படையில்தான் அமைந்து வந்திருக்கின்றது! இது தமிழ்நாடு கேரள சட்டசபையுடன் நன்கு பொருந்திப்போகும் அணுகுமுறையாதலால் நம்மால் நன்கு புரிந்துகொள்ளமுடியும்!
மத்தியப் பிரதேசம்-
* கடந்த 2005ல் இருந்து ஷிவ்ராஜ்சிங் சௌகான் தலைமையிலான பாஜக அரசுதான் இங்கு ஆட்சியில் இருந்து வருகின்றது... பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மத்திய பிரதேச பாஜகவின் தலைவருமான ஷிவ்ராஜ்சிங் சௌகான்.... குஜராத்துக்கு எப்படி நரேந்திர மோடியோ அதேபோல மத்திய பிரதேசத்துக்கு பாஜகவின் ஆதர்ஷ நட்சத்திரம்!
* மோடியின் ஏக பலமான "ப்ராண்ட் குஜராத்" பிரச்சாரம் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்குட்பட்டது.... ஆனால் ஷிவ்ராஜ்சிங்கின் மத்தியப்பிரதேச நீண்ட ஆட்சியோ மக்களின் நிதர்சன ஆதரவுடன் கூடியது! இருப்பினும் ஷிவ்ராஜ்சிங்கின் "ப்ராண்ட்" தேசியப் பிரபலம் ஆகாததற்குக் காரணம் அவரைப் பிரபலப்படுத்துவதற்கான சர்ச்சைகள் எதுவும் பெரிய அளவில் இல்லாததுதான்!!..... இதையொட்டித்தான் சமீபத்தில் மோடியின் குஜராத்தை விட ஷிவ்ராஜ்சிங்கின் மத்தியப்பிரதேசத்தின் வளர்ச்சி முக்கியமானது என்கிற ரீதியில் அத்வானி குறிப்பிட்டிருந்தார் (அது மோடியின் தலைமை அவருக்கு ஏற்படுத்திய கசப்பினால் வந்த வாசகம் என்று விமர்சனத்துக்குள்ளானது வேறு விஷயம்!)
டில்லி மற்றும் சட்டீஸ்கர் -
ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் பாஜக வென்றிருப்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை என்பதற்கு மேற்கூறிய புள்ளிகளே சான்று .... ஆனால் டில்லி மற்றும் சட்டீஸ்கரில் பாஜக வென்றிருப்பது அவர்களுக்கு தெம்பளிக்கக்கூடியதே..... இருப்பினும்...... இந்த 4-0 வெற்றி மேலே சொன்ன "மோடியின் அலை" என்று பாஜகவினர் சொல்லுவார்களேயானால்...... வெற்றி வித்தியாசங்களைப் பார்க்கும்போது டெல்லி மற்றும் சட்டீஸ்கரின் "இழுபறி வெற்றி" அந்த ஏரியாக்களில் எந்த ஓர் அலையும் வீசியதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றே உணர்த்துகின்றன!
இது காங்கிரஸ் மீதான கடும் வெறுப்பினால் இந்திய மக்களுக்கு வழக்கம்போல், இருக்கவே இருக்கும் ஒரே மாற்றான, பாஜக பக்கம் ஆதரவை அளித்துள்ளார்களே தவிர.... இதில் நரேந்திர மோடியின் "ப்ராண்ட்" எதிர்பார்த்ததைப்போல அபாரமாகவெல்லாம் வொர்க்-அவுட் ஆனதைப்போல் தெரியவில்லை.....
ஆம் ஆத்மியின் எழுச்சி:
இந்த நான்கு மாநிலத் தேர்தலில் தேசிய அளவில் நம்பிக்கை துளிர்க்கும் ஒரே விஷயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் "ஆம் ஆத்மி" கட்சியின் எழுச்சியே ஆகும்!
காங்கிரஸ் இல்லாவிட்டால் பிஜேபி என்கிற மாற்று வெறும் Substitutional தான்!
ஆனால் காங்கிரஸ் மீதான வெறுப்பில் பிஜேபி வாங்கிய 32 இடங்களைவிட ஒரு மாற்று அரசியல் வேண்டி ஜனங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 29 இடங்கல் கொடுத்து ஆதரவு அலை எழுப்பியிருப்பதுதான் Real Alternative!
காங்கிரஸை ஊழலின் அடையாளமாகக் கைநீட்ட பாஜகவின் கைகள் ஒன்றும் கரைபடியாத கரங்கள் அல்ல! அதேபோல இந்த இரண்டு கட்சிகளையும் மீறி எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்ட எத்தனையோ பேருக்கும் மக்கள் உடனே ஆதரவு கொடுத்ததும் இல்லை! மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலின் "துடைப்பத்"தை நம்புகிறார்கள்....அந்த நம்பகத்தன்மை மகத்தானது! அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நடிகரோ அல்லது பணபலம் படைத்த வித்தகரோ அல்ல என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டிய விஷயம்!
நிருபர் ஒருவர் ஆம் ஆத்மி பிரமுகரிடம் கேட்கிறார்... "தற்போது 29 சீட்டுகளில் முன்னணியில் இருக்கும் உங்களுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்தால் ஆட்சியமைக்கலாம்..... ஏற்பீர்களா?!" சற்றும் யோசிக்காமல் மறுமுனையிலிருந்து பதில் வருகிறது.. "இதே கேள்வியை பிஜேபியிடம் நீங்கள் கேட்பீர்களா?!!!" என்று!
மேலும் அவர் , " எப்படி காங்கிரஸ் பிஜேபியை ஆதரிப்பது அபத்தமானதோ அதேபோல்தான் நாங்கள் காங்கிரஸ் ஆதரவைக் கோருவதும்!" எனத் தெள்ளத்தெளிவான பதிலைக் கேட்டபோது கிள்ளிப்பார்த்துக்கொண்டேன் அப்போதும் நான் இந்தியாவில்தான் இருந்தேன்.... ஆச்சர்யம்!!
ஆம் ஆத்மி கட்சியின் இந்தத் தேர்தல் எழுச்சியைவைத்துத் தனிப்பதிவு ஒன்று எழுதப் போவதால் இந்தப் பதிவில் இந்தப் பகுதியை இத்துடன் முடித்து முதன்மைப் பகுதிக்கு செல்கிறேன்............
இது மோடியின் அலையா?!
ஆக.....
* இந்த சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் மீதான முழுமையான வெறுப்பை மக்கள் உமிழ்ந்திருக்கிறார்கள் என்பது 100% ஊர்ஜிதமாகிறது!
* காங்கிரஸ்ஸுக்கு எதிரான ஓட்டுக்கள் வழக்கம்போல் பிஜேபிக்கு விழுந்திருக்கின்றன காரணம் டெல்லியில் இருந்ததுபோல மாற்று அரசியலுக்கு (ஆம் ஆத்மி) மற்ற மாநிலங்களில் வாய்ப்பு இல்லை!
* ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத் தேர்தல் முடிவுகளிலும் வசுந்தரா மற்றும் ஷிவ்ராஜ்சிங்கின் அபிமானமே பிரதான காரணிகளே தவிர நரேந்திர மோடியின் அஸ்திரம் அங்கு எவ்வளவு எடுபட்டது என்று யோசிக்கமுடியவில்லை.... என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு மாநிலங்களுக்கும் மக்களை பிஜேபியின் பக்கம் கவர ஒரு நரேந்திர மோடி தேவைப்படவில்லை என்றுதான் உணரமுடிகிறது!
* இந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் சட்டசபைக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்..... நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி அவர்கள் பெரிதும் அலட்டிக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை! ஆக இது "செமி ஃபைனல்" என்பதெல்லாம் அரசியல் கிச்சு கிச்சுதான்!
* மோடியின் மீது இருப்பது அபிமானம்தானன்றி இன்னும் அது ஓர் "அலை"யாக அடிக்கத்துவங்கவில்லை என்பதுதான் நிதர்சனம்!
இதனை பிஜேபி உணர்ந்து.... மக்கள் மனதில் மையம் கொண்டிருக்கும் இந்த அபிமானத்தையெல்லாம் வாக்குகளாக மாற்றக் கடுமையாக உழைத்தால் மட்டுமே பெரும்பான்மையான வெற்றி மோடிக்குக் கிடைக்குமே தவிர, மோடியின் முகத்தைக் காட்டியே வாக்குகளைக் கரந்துவிடலாம் என்று அவர்கள் நம்பினால் அதற்குச் சம அளவிலான ஏமாற்றமும் கிடைக்க வாய்ப்பிருப்பதையே இந்த நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் பறைசாற்றியிருக்கின்றன!
எனவே.......இது காங்கிரஸ் மீதான எதிர்ப்பு அலை...... இந்த அலையில் பிஜேபி கரைசேர்வது சுலபமாகத் தோன்றலாம்.... ஆனால் நிலைத்து நிற்கக் கடுமையான உழைப்பும் மக்களின் நம்பகத்தன்மையை இன்னும் பலமடங்கு அதிகப்படுத்துவதற்கான உத்வேகமும் கட்டாயம் வேண்டும் என்பதே நிஜமான நிலவரம்!
டெயில்பீஸ்:
நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றிபெற்றுவிட்டாலும்...... நல்ல ஆட்சி வழங்கி சொந்தமாகத் தனது அலையைக் கிளப்பினாலன்றி அடுத்த தேர்தல்களில் நிலைத்து நிற்க முடியாது..... காரணம்
ஆம் ஆத்மியைப் போன்று ஆக்கப்பூர்வமான மாற்றுக் காரணிகள் படைதிரண்டு நிற்கலாம் அவரது எதிர் அணியில்!
அப்போ காங்கிரஸ்???
நல்லது நடக்கட்டும்!
அன்புடன்,
பிரபு எம்













