Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Friday, September 19, 2025

ரோபோ சங்கர் - கனவுகளைக் கைப்பற்றிக் காற்றில் கரைந்த கலைஞன்!

 இன்னிக்குக் காலைல ஆறு மணி இருக்கும்....

கோழியும் கொக்கரக்கோ என்றுதான் கூவியது....

ஆனால் கேள்விப்பட்ட செய்தியோ அதிர்ச்சி நிறைந்ததாய் இருந்தது!

ரோபோ சங்கர் அவர்களின் இறப்பு செய்தியுடன் தான் விடிந்தது இந்தக் காலை!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!


"கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியின் முதன்முதல் சீசனில் மிகவும் கவர்ந்தவர்களுள் முக்கியமானவர் ரோபோ சங்கர்!

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் பலவிதமான கலைஞர்கள் வந்து நகைச்சுவையில் கலக்கினாலும், சிரிக்க வைப்பதில் consistency மற்றும் vareity யைத் தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் விடாமல் காட்டுவது சாதாரண விஷயம் கிடையாது. அந்த சவாலை அனாயசமாகக் கையாண்ட நான்கு பேர் அதன் இறுதிச்சுற்றுக்குத் தேர்வானார்கள் அவர்கள்: கோவை குணா, மதுரை முத்து, வடிவேலு டேவிட் மற்றும் ரோபோ சங்கர்! இவர்கள் நால்வருமே ஒவ்வோர் ஏரியாவில் ரொம்பவே ஸ்பெஷலானவர்கள்!

இறுதிச் சுற்றில் போட்டியிடப் போவது இவர்கள்தான் என்று தெரிந்ததுமே அந்த வார ஆனந்த விகடனில் இந்த நால்வருடைய பேட்டியுடன் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ரோபோ சங்கரின் பேட்டி இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மதுரையில் ஒரு காமெடி மற்றும் நடனக் குழுவில் இடம்பெற்றிருப்பதாகச் சொன்னவர் அந்தக் குழுவில் அவருடைய தனித்துவமான திறமை என்பது உடல் முழுதும் சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு உடலின் ஒவ்வொரு தசையையும் தனித்தனியாக டெக்னோ இசைக்கு ஏற்றவாறு அவர் அசைத்துக்காட்டி நடனமாடும் "ரோபோ டான்ஸ்"தான் என்றும் அதனை அவர் KPYயின் இறுதிச்சுற்றுக்கான  அஸ்திரமாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இறுதிப்போட்டியில் முதலில் ஒரு வார்ம்-அப் ரவுண்ட் வைத்திருந்தார்கள்... வெற்றிக்குத் தேவையான மதிப்பெண்கள் கணக்கில் சேராத அந்த ஆயத்தச் சுற்றில் மற்ற மூன்று போட்டியாளர்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ஆனால் ரோபோ சங்கர், அதிலும் அலப்பறையாக மிமிக்ரி செய்தார்... முக்கியமாக 80களின் கமல்ஹாசன் பேசுவதைப் போல அவர் பேசியது அதில் அந்தக் காலத்துக் கமலுக்கே உரித்தான வினோதமான ஓர் ஆங்கில உச்சரிப்பு இருக்குமே, அதை அவ்வளவு நுணுக்கமாக அதே மாடுலேஷனில் ஆனால் கிண்டலாக அவர் பேச விழுந்து விழுந்து சிரித்தது இன்றும் நினைவுகளில் பசுமையாக இருக்கின்றது! அடுத்தச் சுற்றிலும் சங்கர் கலக்கத்தான் செய்தார்.... 80களின் சினிமா நடனங்களை அப்படியே ஆடிக்காட்டித் தன் முழுத் திறமையையும் காட்டுத்தனமானதொரு எனர்ஜியில் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்.... மீண்டும் 80களின் கமல்ஹாசனின் டிஸ்கோ நடன அசைவுகளை தத்ரூபமாக அதே நேரத்தில் காமெடியாகவும் ஆடிக்காட்டியதை யூடியூபிலோ ஹாட்ஸ்டாரிலோ காண வாய்ப்பிருந்தால் நிச்சியமாக இப்போதுகூட பார்த்து வியக்கலாம்.... கமல் தவிர நடனமாட அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களும் அதற்கேற்ற அவரது அசைவுகளிலும் மனிதர் தன்னுடைய முழு ஆற்றலையும் கொட்டியிருந்தார்.. முத்தாய்ப்பாகக் கடைசியில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது சில்க் ஸ்மிதாவை! ஆஜானுபாகுவான அந்த உடலில் சில்க் ஸ்மிதாவின் நடன அசைவுகளையும் காமப்பார்வையையும் செட்யூஸிங் உடல்மொழியையும் நகைச்சுவையாக அவர் அரங்கேற்ற அரங்கமே அதிர்ந்தது சிரிப்பில்! ஆனால் அடுத்த சுற்றில்தான் பாவம் அவருடைய தனி அடையாளமான ரோபோ டான்ஸை உடல் முழுவதும் சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு ஆடினார் ஆனால் நகைச்சுவைக்கான மேடையில் அவரது அந்த நடனும் முற்றிலும் பொருத்தமில்லாததாகப் போக எதை அவர் பிரதான அஸ்திரமாக அரங்கேற்றினாரோ அந்த நடனமே அவரைப் போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டது! ஃபைனலில் அசாதாரணமாகக் கலக்கிய கோவை குணா வெற்றி பெற்றார்... நகைச்சுவைப் பேச்சாற்றலில் தன் முழுவீச்சைக் காட்டி அசரடித்த மதுரை முத்து இரண்டாமிடம் பிடித்தார்!

கோவை குணா 2023லேயே மரணமடைந்துவிட்டார்! மதுரை முத்துவும் ரோபோ சங்கரும் அதன்பிறகு அவரவர் திறமைக்கேற்ப அடுத்தடுத்து உச்சங்களைத் தொட்டுப் பேரறிந்த திறமையாளர்களாகக் கொண்டாடப்பட்டார்கள் என்பது கண்கூடு. நேற்றிரவோடு ரோபோ சங்கர் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டுவிட்டார்.

அவரது மரணச்செய்தி வந்தபின் எழுதப்படும் இந்தக் கட்டுரையில் அவரது புகழ்ப் பயணத்தின் தொடக்கப்புள்ளி சம்பவத்தை விவரித்து எழுதியதன் காரணம் புகழேணியில் அவர் அடுத்தடுத்து வைத்த அடிகள் அனைத்துமே ஆதித்யா சேனல் உள்ளிட்ட தமிழின் அனைத்து நகைச்சுவைத் தளங்களிலும்  அழுத்தமாக ஆவணம் செய்யப்பட்டிருக்கின்றது! மேலும் மதுரையில் பிறந்தவன் எனும் அடிப்படையில், ரோபோ சங்கர் அவர்களின் இளமைக்காலம் எப்படி இருந்திருக்கும், மேலும் தன்னுடைய துறையாகக் கலையைத் தேர்வு செய்த ஓர் இளைஞனின் முன்னிருக்கும் வாய்ப்புகளும் கனவுகளும் மற்றும் இவை இரண்டுக்கும் இடையேயான இடைவெளியும் எப்படியிருந்திருக்கும் என்று என்னால் தெளிவாக உணரமுடியும். எண்ணற்ற திறமைகளின் கனவுகளை ஈடேற்ற வாய்ப்புக் கதவுகள் திறக்காமலேயே போன ஏராளமான வரலாறுகள் மதுரையின் ஒவ்வொரு தெருவிலும் உண்டு! அப்படியிருக்க அன்றைய "கலக்கப் போவது யாரு?" ஒரு பறக்கும் ஜன்னலை போன்றதுதான்! அந்தச் சுழலும் சாளரம் தன் பக்கம் வரும் வேளையில் அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து அதற்குள் குதித்து அதன் அடுத்தடுத்த அடுக்குகளுக்குள் நுழைய வேண்டும். தன்னுடைய திறமையையும் உழைப்பையும் சரியாகப் பிரயோகித்துத் தன்னை நிரூபித்து, திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று அதிலும் தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துவிட்டு இப்போது பூவுலகில் தனக்குரிய இடத்தை விட்டகன்றிருக்கிறார் ரோபோ சங்கர்!

"கலக்கப் போவது யாரு?" இறுதிச் சுற்றில் அவர் எய்து அவரையே தாக்கி வெளியேற்றிய அவருடைய அஸ்திரமான அதே "ரோபோ டான்ஸ்", அதற்காக எண்ணற்ற முறை அவர் தன் தோலில் பூசிக்கொண்ட சில்வர் பெயிண்ட், அதனால் ஏற்பட்ட உடல் பாதிப்புகள்தான் இந்த நாற்பத்து ஆறாம் அகவையில் இந்த உலகை விட்டு அவர் வெளியேறுவதற்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கிறது என்பது வேதனை! அதுபோக அவரே தன் வாழ்க்கை அனுபவமாக உடல் நலத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தைச் சமீபத்தில் ஒரு காணொளியில் பதிந்திருக்கிறார். அப்படிப் பேசுவதற்கு ஓர் ஆரோக்கியமான சமூகம் நன்றிகளைத்தான் சொல்ல வேண்டும் ஆனால் பிளாஸ்டிக் குப்பைகளுக்கும் அதுபோலவே மடிந்தாலும் மக்காத போலித்தனங்களுக்குள்ளும் சிக்குண்டு மூச்சுத்திணரும் நிகழ்கால நம் சமூகமோ அவர் மரணத்துக்குக் காரணம் என்று ஆளுக்கொரு பட்டியல் போட்டு சுய விளம்பரம் மற்றும் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது! ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையின் இடறல்களைத் தேடுவதை விடுத்து ஒரு கலைஞனாகத் தொடங்கிச் சில கல்வெட்டுகளில் தன் பெயரைத்தானே பொறித்துக்கொண்டு சீக்கிரமே போய்விட்ட ரோபோ சங்கரின் திறமைகளுக்கு என் இறுதி வணக்கங்கள்!

அன்னிக்குக் காலைல ஆறுமணியிருக்கும்... என்ற அவரின் புகழ்பெற்ற காமெடியைப் போலவே மரணம் எனும் இந்த இடர்ப்பாட்டைத் தொடர்ந்து மீண்டும் முதலிலிருந்து தொடங்க வாய்ப்பிருந்தால் திரும்பி வாருங்கள் மிஸ்டர். சங்கர்! எங்களை சிரிக்கவைத்த உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

வருத்தத்துடன்,
பிரபு எம்.







Wednesday, January 10, 2024

a ranjith cinema [U/A] (2023) (மலையாளம்)

கமர்ஷியல் படங்களிலும் பரிசோதனைகளை சர்வசாதாரணமாய் முயற்சித்துப் பார்ப்பதில் மலையாளத் திரையுலகை வேறெந்த இந்திய மொழி சினிமாவும் நெருங்கக்கூட முடியாது என்னும் நிதர்சனத்தை நம்பி திரைக்கதையின் ஆதர்சக் கோட்பாடுகளை எல்லாம் தன் வசதிக்கு மாற்றி வளைத்துத் தன் முதல்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நிஷாந்த் சட்டு! இந்த வகைப்படுத்த முடியாத சைக்கலாஜிக்கல் த்ரில்லர், பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு நகர்த்தும் ரகமில்லை மாறாக ஆடியன்ஸுக்கு எந்த அசைவையும் ஏற்படுத்தாத கதையில், அமர்ந்திருக்கும் இருக்கையைக் கண்ட கோணத்திலும் சுற்றிவிட்டு ரங்கராட்டிண விளையாட்டுக்காட்டும் ஒரு less than perfect திரைக்கதை! ராட்டிணம் சுழன்று முடித்து நம் தலைசுற்றலும் நின்றபின் பக்குவமாகப் படத்தை முடித்து அனுப்பும் விதத்தில் கவனம் ஈர்க்கின்றது


ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆனால் பரபரவென நகரும் ஆரம்பக் காட்சிகளில் கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவருமே அறிமுகமாகிவிடுகிறார்கள்சம்பந்தமே இல்லாத இந்த வேகமான காட்சிக் கோர்வைகளைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் கதாபாத்திரங்கள் மட்டுமின்றிக் கதையின் அனைத்துக் கூறுகளுக்கும் அடிப்படையான அத்தனை தகவல்களையும் நாசூக்காக இந்த ஆரம்பக் காட்சிகளில் தெளித்துவிட்டிருப்பது திரைக்கதையின் சாமர்த்தியம். மேலும் எடுத்த எடுப்பிலேயே மூக்குரசிக் கொள்ளும் முக்கியக் கதாபாத்திரங்கள் யாவுமே ஒருவருக்கொருவர் முற்றிலும் சம்பந்தமே இல்லாத அந்நியர்கள் சொல்லப்போனால் வழிப்போக்கர்கள்! உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புகள் இல்லாத கதாபாத்திரங்களை வைத்துக் கதைசொல்ல ஆரம்பிப்பது நம்மைப் புருவங்களை உயர்த்தி வரவேற்கத் தூண்டுவது உண்மை.


நாகரீக மற்றும் சமூக வரம்புகளை மீறி பொதுமக்களைச் சீண்டும் ஒரு வில்லங்கமான “prank show”வை ஒரு டிவி சேனலுக்காகப் படம்பிடித்துத் தரும் ஒரு குழுவின் முக்கிய pranksterஆன கதாநாயகன் ரஞ்சித் (அசிஃப் அலி) போலீஸ் வேடத்தில் தத்ரூபமாக அரங்கேற்றும் ஒரு விபரீதமான prank-ல் சிக்கி, அதனால் தன் வாழ்வின் மிக முக்கியமான வியாபார வாய்ப்பை இழக்கிறான் சன்னி (சைஜு குருப்). அதே சம்பவத்தை உண்மை என்று எண்ணி ரஞ்சித்தைத் தடுக்கப்போய் முகத்தில் அறைவாங்கும் க்ரிமினல் வழக்கறிஞரான ரெஞ்சி பனிக்கரின் கோபத்தையும், சன்னியின் ஆக்ரோஷத்தையும் ஒருசேர சம்பாதிக்கிறான் ரஞ்சித்! அதே போலீஸ் வேடத்தில் துணிகரமாகக் கதை நாயகி பௌர்ணமியை (நமீதா பரோட்) வில்லன்களிடமிருந்து காப்பாற்றி அவள் காதலையும் கிடைக்கப் பெறுகிறான்

 

பொதுவாக ஓர் ஆரோக்கியமான திரைக்கதையில் தற்செயலாக நிகழும் சம்பவங்கள் அரிதாக அன்றி இடம்பெறுவது கிடையாது. இடம்பெறக் கூடாது என்று விதிகளே உள்ளன ஆனால் “a ranjith cinema”வின் முதல் நாற்பது நிமிடங்களில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களுமே தற்செயலாகவே நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை ஒரு கட்டத்தில் முற்றிலும் ஓர் அமெச்சூரான திரைப்படமாக நம்மைப் பொறுமையிழக்கவே வைத்துவிடுகிறது! தற்செயலாக ரஞ்சித் ஏறும் நகரப் பேருந்தில் அவன் அமரும் சீட்டிலேயே அவன் காப்பாற்றிய பௌர்ணமி அமர்ந்திருப்பதில் தொடங்கிமுப்பது நிமிடத்தில் குறைந்தது மூன்றுமுறையாவது சன்னியின் கண்களில் தற்செயலாகச் சிக்கும் ரஞ்சித்…. தற்செயலாக ரஞ்சித்துக்கே தெரியாமல் அவனுடைய கேமராவில் பதிவாகும் ஒரு கொலைஅந்த வீடியோவை அந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீலிடம் ஒப்படைக்கப் போனால் அவரும் தற்செயலாகக் கதாநாயகியின் தந்தையாக இருப்பார்இப்படிக் கதையை நகர்த்தும் அத்தனை சம்பவங்களுமே தற்செயலாக நிகழ்வது பழைய தூர்தர்ஷன் நாடகங்களை நாம் கேலியாக விளிக்கும்அடடே டாக்டரே வந்துட்டாரே!” ரேஞ்சுக்கு  வெறுப்பேற்ற ஆரம்பித்துவிடுகின்றது. ஆனால் படத்தின் அடுத்த நாற்பது நிமிடங்களுக்கு, இந்தத் தன் வாழ்வில் நிகழ்ந்த ரகளையான சம்பவங்களையே தன் கற்பனையைக் கலந்து ஒரு திரைக்கதையாக உருவாக்கி ரஞ்சித் ஒரு தயாரிப்பாளரிடம் (ஹரிஸ்ரீ அஷோகன்) விவரிக்க, அந்தக் காட்சிகளில் ரஞ்சித்தின் பாத்திரத்தில் ஆன்ஸன் பாலும் பௌர்ணமியாக ஹன்னா ரெஜி கோஷியும் மற்றும் சில நடிகர்களும் மற்ற பாத்திரங்களை ஏற்க சன்னியாக மட்டும் சைஜு குருப்பே தோன்றுகிறார்! முதல் முக்கால் மணி நேரம் நாம் பார்த்த அதே காட்சிகள் வேறொரு செட்-அப்பில் கற்பனை சம்பவங்களால் பின்னப்பட்டு கதை சொல்ல ஆரம்பிக்கும்போது நமக்கு மெதுவாகத் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது. பிறகு, ரஞ்சித்தின் கற்பனை திரைக்கதை க்ளைமேக்ஸாக அவன் சஸ்பென்ஸ் வைத்துச் சொல்லும் அந்த பரபர ஹாஸ்பிட்டல் ட்ராஜெடி க்ளைமேக்ஸுடன் முடிந்து படம் நிஜக்கதைக்குத் திரும்ப, ரஞ்சித் தனக்கு நிஜத்தில் நிகழ்ந்த சம்பவங்களைக் கற்பனை கலந்து வடித்த கதையின் கற்பனை நிகழ்வுகள் அடுத்தடுத்து அச்சு அசலாகத் தன் சொந்த வாழ்க்கையில் நடக்கத் துவங்க, தனியொருவனாக அவன் வியர்த்து விருவிருக்கும்போதுதான் படம் உண்மையான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருப்பெறுகிறது! அதன்பிறகு படம் தடதடக்கும் வேகத்தில் சுறுசுறுப்பாக நம்மை ஈர்க்கும் விதமாக எழுதப்பட்டிருக்கும் காட்சிகள் அடுத்த நாற்பது நிமிடங்களை அதகளப்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்!


யதார்த்த நடிகரான அசிஃப் அலியின் இயல்பான முகபாவங்கள் ரஞ்சித்தின் மனவோட்டத்தைத் தங்குதடையின்றி ஆடியன்ஸுடன் இணைப்பிலேயே வைத்திருக்கின்றது! சன்னியாக வரும் சைஜு குருப்புக்கு அவரது வழக்கமான திரைத் தோன்றல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட பாத்திர வடிவமைப்பு. உடல் எடைக் குறைத்த தேகமும் கோபம் திணித்த தாடியுமாக பக்காவாக பொருந்தியிருக்கிறார். ரஞ்சித்தின் அம்மாவாக வரும் சபீதா ஆனந்தின் அலட்டலில்லாத பாந்தமான நடிப்பு கவர்கிறது. பவுர்ணமியாக வரும் நமீதா பரோட்டுக்கு முதல் பாதி தவிர்த்து படத்தில் பெரிய வேலையில்லை இருப்பினும் தன் அழகிய புன்னகையால் கண்களுக்குக் குளிச்சி தருகிறார். ரஞ்சித் சினிமாவுக்குள் விரியும் சினிமாவின் முக்கிய பாத்திரங்களான ஆன்சன் பால் மற்றும் ஹன்னா ரெஜி கோஷி ஏற்கெனவே பார்த்த காட்சிகளின் மறுஉருவாக்கக் காட்சிகளில் தங்கள் இயல்பில் நடித்து வேறுபாடு காட்டுவது சிறப்பு! ரெஞ்சி பனிக்கர், ஜுவல் மேரி, ஹரிஸ்ரீ அஷோகன் மற்றும் ஜெயபிரகாஷ் அவரவர் பாத்திரங்களைச் சரியாக செய்திருக்கிறார்கள்.


படத்தின் டெக்னிக்கல் கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத வண்ணம் கேமராவும், இசையும், கத்திரியும் நிஷாந்த் சட்டுவின் எழுத்து மற்றும் இயக்கத்தை இறுகப்பற்றி அப்படியே திரையில் பதித்திருக்கிறது. மிதுன் அசோகனின் பின்னணி இசையில் தனித்துவம் இல்லாவிட்டாலும் படத்தின் பரபரப்புக்குத் தேவையான சப்தங்களை வழங்குகிறது. சுனோஜ் வேலாயுதன் மற்றும் குஞ்சுண்ணி எஸ். குமாரின் ஒளிப்பதிவு திரைக்கதையின் குழப்பமான தன்மையை உணர்ந்து சிக்கலில்லாத கோணங்களுடன் காட்சிகளின் உணர்ச்சிகளைக் கடத்தியிருக்கின்றது. மனோஜின் எடிட்டிங் சற்றே சிரமமான பணியைச் சரியாகச் செய்துகொடுத்திருக்கின்றது.


இப்படிப்பட்ட பரிசோதனை சினிமாவை (திட்டமிட்ட?) சில நேர்த்திக் குறைபாடுகளுடன் எழுதி இயக்கித் தன் இயக்குனர் பயணத்தைத் துவங்கியிருக்கும் நிஷாந்த் சட்டு நிச்சியமாக கவனம் ஈர்க்கிறார்!

படத்தின் முடிவு சினிமாட்டிக்காகசுபம்சொல்வதாய் இருந்தாலும் குழப்பமின்றிப் படத்தை முடித்து வைத்திருப்பது நலம். ஒரு கதையாகக் கருத்தரித்துத் திரைக்கதையாக வடிவமைக்கப் பட்டிருக்கும் சினிமாவாக “a ranjith cinema”வைப் பார்க்க முடியாதுதிரைக்கதையின் சாகசங்களையே குறிவைத்து நேரடியாகப் பிரசவித்த படைப்பாகத் தான் இது இருக்க முடியும். மொத்ததில் ஒரு பரிசோதனை சினிமாவாகப் படம் தேர்ச்சி பெறுகிறது!


அன்புடன்,


பிரபு எம்