Showing posts with label ஹாலிவுட். Show all posts
Showing posts with label ஹாலிவுட். Show all posts

Monday, February 17, 2020

Parasite (2020) - Strictly NO spoilers - கதை வெளிப்படுத்தப் படவில்லை!

Parasite (ஒட்டுண்ணி) எனும் பதத்தின் அகராதி அர்த்தம்:

parasite
/ˈparəsʌɪt/
noun
  1. 1.
    an organism that lives in or on an organism of another species (its host) and benefits by deriving nutrients at the other's expense.


பெரிய உயிரினங்களின் உடல்களுக்கு உள்ளே குடியிருந்தோ அல்லது வெளிப்புறமாக உடலின்மீது ஒட்டிக்கொண்டு வாழ்ந்தோ, தன் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வளங்களையும் அந்தப் பெரிய உயிரனத்திடமிருந்தே பெற்றுவாழும் அற்ப உயிரினங்களே ஒட்டுண்ணிகள்!





மனிதத் தலைமுடியில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சி வாழும் பேன்களும் ஒட்டுண்ணிகள்தான்... அதேபோல் குடிலுக்குள் குடியிருக்கும் குடற்புழுக்களும் ஒட்டுண்ணிகள்தான்....  (படம் பார்த்தவர்களுக்கு இதுவரையிலான வார்த்தகளின் அர்த்தம் தெளிவாகப் புரியும்!)

இந்த ஒட்டுண்ணி தத்துவம் சில மனித மனநிலைகளுக்கும் பொருந்தும் என்பதைச் சொல்ல கொரியன் மொழிக்கு சப்-டைட்டில் தேவையில்லை! சமுதாயத்தின் பணம் மற்றும் அதிகாரம் படைத்த பெரிய மீன்கள் (big fishes) எல்லாரையுமே தெரிந்தோ தெரியாமலோ சிலபல ஒட்டுண்ணி மனிதர்கள் அவர்களைச் சுற்றியே தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்வதை சாதாரணமாக நாம் இன்றும் காணமுடியும்! சரி படத்துக்கு வருவோம்...

பொதுவாகத் திரைக்கதைகளில் பிரதான கதாபாத்திரங்கள் ஆள்மாறாட்டமோ அல்லது ஏதாவது ஓர் ஏமாற்றுவேலை செய்து சொகுசாக வாழ்வதுபோன்று கதையமைப்பு இருந்தாலே அந்தக் கதாபாத்திரம், தான் ஏமாற்றுபவர்களிட்ம் மாட்டிக்கொள்வதுதான் முக்கியத் திருப்பமாக இருக்கும்.... பார்வையாளர்களும் சரி திரைக்கதை ஆசிரியரும் சரி அந்த மாட்டிக்கொள்ளும் சம்பவத்தை எதிர்நோக்கி ஓர் அவசரத்திலேயேதான் இருப்பார்கள்..... அதேதான் இங்கும்..... ஆனால் அந்தப் புள்ளியில்  ஏற்படும் ஆச்சர்யமும் அதனால் விளையும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவமும்... கடைசியில் பார்வையாளர்களால் மட்டுமே யூகிக்கமுடிந்த, ஆனால் திரையில் கதாபாத்திரங்களால் கடைசிவரை கற்பனைசெய்ய முடியாத அந்த முடிவுப் பகுதியும்.... படம் முடிந்தும் தொடர்கின்ற தத்துவார்த்தமான பதில்களற்ற கேள்விகளும் ஆஸ்கரில் புதிய சரித்திரம் படைத்திருக்கும் இந்தக் கொரியப் படத்தின் தொடுவானம் நோக்கிய பயணத்தின் மைல்கற்கள்!

கதையை நான் சொல்லப் போவதில்லை காரணம் இதுபோன்ற படங்களை உணர்வுகளாக உள்வாங்குவது சிறந்த அனுபவமாக இருக்கும்.... இதனை வாசிக்கும் நண்பர்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் கொண்டால் மகிழ்வேன்!

காட்சிகளால் உணர்வை மட்டுமின்றி கதாபாத்திரன் இயல்புகளையும் துல்லியமாகக் கடத்த முடிந்திருக்கிறது பாங் ஜூன் - ஹோ வால்! முக்கியக் கதாபாத்திரங்கள் தொடர்ந்து தவறான விஷயங்கள் செய்தாலும் முதலாளிகளிடம் சிக்கிக்கொள்ளக் கூடாதே என்கிற சிறிய ஆர்வம் கூட நமக்கு லேசாக எழும் படத்தின் நடுவில்... இந்த வெளிப்புற ’ஒட்டுண்ணிகள்’ அடுத்தகட்டத்தில் என்ன செய்வார்களோ என்று பதற்றமும் இருந்துகொண்டிருக்கும் அந்த நேரத்தில்தான் படத்தின்  உடம்பிற்குள் வாழும் ஒரிஜினல் ஒட்டுண்ணி யாரென்று கட்டவிழும்.... அதன்பிறகு நடப்பதெல்லாம் சாதாரண மனித உணர்வுகளின் விபரீதப் பின்னல்கள்தான்...... 

மரியாதையும் ஊதியமும் அள்ளிக்கொடுத்தாலும்கூட ஒருவிதமான அருவருப்பு மனப்பான்மையை வறியவர்களின் அழகியலற்ற வாழ்க்கைமுறைமீது கொண்டிருப்பவர்கள், தங்களுடைய அவ்வாறான செயல்பாடுகள் மூலம் தனக்குக்கீழ் வாழும் அந்த எளிய மனிதர்களின் ஆழ்மனதில் எந்த அளவுக்குக் கடுமையான காழ்ப்பை விதைக்கிறோம் என்பதை சுயமதிப்பீடு செய்துகொள்ள பேரஸைட் எச்சரிக்கை மணி அடிக்கிறது! உதாரணத்துக்கு உடலிலிருந்து வரும் துர்நாற்றத்துக்கு முகம் சுளிக்கும்போது சம்பந்தப்பட்டவரின் துர்நாற்றத்துக்கான காரணம் முதுமையாகவோ அல்லது நோயாகவோ இல்லாமல் வறுமையாகவோ அல்லது தொழிலாகவோ இருந்தால் சுளிக்கின்ற முகங்களில் எத்தனை கருணையும் அன்பும் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறிய கடுமையான வெறுப்புதான் எதிர்முனை மூளையில் ஆழப்பதிகிறது என்பதை அந்த இறுதிக்காட்சி அதிர்ச்சி சம்பவம் உணர்த்திவிடும்!

கதையில் வெறும் பெயராக மட்டுமே வரும் ஒரு மிகப் பிரபலமான கட்டிடக்கலை நிபுணர் தன் சிக்னேச்சர் ஆர்க்கிடெக்சரில் செய்துவைத்த சிறு சிறு ரகசியக் கலைநயங்கள்தான் மொத்தக் கதையின் ஆச்சர்யம் + அதிர்ச்சிக்கு மூலக்கூறு என்பது ஒரு முக்கியமான சுவாரஸ்யம்!

ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருக்கும் சம்பவங்கள், காட்சியமைப்புகள் மற்றும் ஒன்றுடன் ஒன்றாகத் தொடர்புபடுத்தி நகரும் கதைமாந்தர்களின் மனஓட்டங்களையும் மொத்தமாக ஒரு நேர்க்கோட்டில் வடித்திருப்பது   திரைக்கதையை ஒரு விரிவான பதிவாக அழுத்திப் பதியவைத்துவிடுகிறது ஓர் அதிசியமாய் அற்புதமாய்........

எல்லாவற்றையும் தாண்டி... எத்தனை டெக்னாலஜி.... காலமாற்றம் பொருளாதார முன்னேற்றம் என அத்தனைக்கும் மேலும் இன்றும் புருவங்களை உயர்த்தும் உன்னதப் படைப்புகளாய் உலகையே திரும்பிப் பார்க்க வைப்பவை எல்லாம் இன்னமும் மனித உணர்வுகளைச் சரியாகப் பதிவு செய்யும் படைப்புகள் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை தீர்க்கமாகவும் நேர்த்தியாகவும் உணர்த்தியிருக்கிறது பேரஸைட்....

கடைசி காட்சியில் விழும் கடுமையான சுருக்கு முடிச்சுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கும் அது என்னவென்றால் புத்திசாலி பேரஸைட் இப்போது கம்பீரமான வெர்டபிரேட்டாக (vertebrate) சமூகத்தில் ஒரு கால அளவுக்குள் பிரம்மாண்டமாய் எழுந்து நின்றாக வேண்டும்.... அதுதொட்டு மனதில் எழும் எண்ணங்களே பார்வையாளனின் மூளைக்குள் ஒரு பேரஸைட்டாக ஓரிரு நாட்களுக்குக் குடிகொண்டு  நம் எண்ணங்களின் ஒரு பகுதியைத் தின்னும் ஸ்க்ரீன் மேஜிக்...

எண்ணற்ற குறும்புகளும் குறியீடுகளும் படத்தின் போக்கிலேயே இழையோடும் பார்ப்பவர்களின் மகிழ்வுக்காக.... அதனையெல்லாம் டீகோட் செய்து உரை எழுத விருப்பமில்லாத காரணத்தினால் இந்த இடத்தில் இந்தப் பதிவு முற்றுப்பெறுவதே நேர்மையானதாக இருக்க முடியும்!

Parasite - Redefined, most humanly!

குறிப்பு:

கதையை வெளிப்படுத்திவிடக்கூடாது என்று மிகக் கவனமாய் எழுதப்பட்டிருக்கும் பதிவு இது.... இந்தப் பாணியில் ஸ்பாய்லர்கள் இல்லாதவகையில் பாதுகாப்பானதாகத் தோன்றினாலும் வாசிக்கும் முனையில் சட்டென்று அலுப்பை வரவைத்துவிடக் கூடிய ஆபத்தும் கலந்தே உள்ளது... உங்கள் கருத்துரைகளை வைத்தெ இதனைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியும்!

அன்புடன்,

பிரபு எம்



Wednesday, October 11, 2017

The Butterfly Effect [18+] (2004) - ஹாலிவுட் திரைப்படம்

முன்குறிப்பு: தலைப்பில் [18+] என்று குறிப்பிட்டிருப்பது படத்திற்குத்தான்  இந்தப் பதிவுக்கு இல்லை :-))

The Butterfly Effect (2004)



Cast: Ashton Kutcher
          Amy Smart

Written & Directed by :  Eric Bress & J. Mackye Gruber


கிட்டத்தட்ட இந்தப் படம் வெளிவந்த வருடமான 2004ம் ஆண்டுதான் என்று நினைக்கிறேன்... அன்றைய "“ஆனந்த விகட”னில் அமரர் சுஜாதா Chaos Theory பற்றி எழுதியிருந்தார். “குழப்பம்” என்று பொருள் படும் “Chaos" தியரியைக் குழப்பமின்றிப் பின்வருமாறு எளிமையாக அறிமுகம் செய்திருந்தார்! 

”ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒரேயொரு சிறகடிப்பு காற்றுமண்டலத்தில் ஏற்படுத்தும் மிகச் சிறிய மாற்றமானது கால ஓட்டத்தில் சற்றுதூரத்தில் வீசப்போகும் ஒரு பெரும்புயலுக்குக் காரணமாகலாம்  (ஆகாமலும் போகலாம்!)” - கேயோஸ் தியரியை எளிதில் விளக்கப் பயன்படும் புகழ்பெற்றதொரு Metaphor இது!


அதாவது ஒரு பெரும் சம்பவம்/அவலம் நடந்தேறும்போது அதன் மூலகாரணங்களைத்தேடிக் காலவோட்டத்தில் பின்னோக்கிச் சென்று ஆராய்ந்தோம் என்றால் அது என்றோ நிகழ்ந்த ஏதோவொரு சர்வ சாதாரணமான (ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒற்றை சிறகடிப்பை ஒத்த) மிகச்சிறியதான ஒரு நிகழ்வைத் தொட்டுத் துவங்கியிருக்கலாம் என்பதுதான் விஷயம்!


”12 பி” திரைப்படத்தில் ஷாம் வாழ்க்கையில் நிகழும் முக்கிய சம்பவங்கள் அனைத்துமே படத்தின் 12-வது நிமிடத்தில் அவர் சிட்டிபஸ்ஸில் பயணிக்கும்/அல்லது தவறவிடும் ஒரு சர்வசாதாரணமான நிகழ்வை மையமாக வைத்து நடப்பதாக இருந்ததல்லவா இதையும் “கேயோஸ்” அடிப்படையில் மேற்கண்டவாறு வகைப்படுத்தலாம்!


”தசாவதாரம்” திரைப்படத்தில் 12ம் நூற்றாண்டில் கடலுக்குள் அமிழ்த்தப்படும் விக்ரஹம் காலவோட்டத்தில் 2004ஆம் ஆண்டு சென்னையில் மாபெரும் சுனாமிக்கு மூலகாரணமாக அமைவதாகக் காட்டப்பட்டது “கேயோஸ் தியரி”யின் படி!





சுஜாதாவும் ஷங்கரும் இணைந்து எழுதிய “அந்நியன்” திரைக்கதையில் ”கேயோஸ் தியரி”யைக் கதைக்கு ஏற்றவாறு மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்தியிருந்தார்கள்! இந்தியக் குடிமகன்களின் சமூக அலட்சியங்களை மையமாகக் கொண்ட திரைக்கதையில், அதிமுக்கியமானதொரு ஃப்ளாஷ்பேக் காட்சியை வைத்திருப்பார்கள்... பள்ளிக் குழந்தைகளை சுமந்து வரும் ஒரு சைக்கிள் ரிக்‌ஷா நோ-எண்ட்ரியில் நுழைகிறது அங்கே வரும் ஒரு வண்டியில் மோதி கட்டுப்பாடு இழந்து ரிக்‌ஷா தடுமாறும்போது உள்ளே இருக்கும் ஒரு குட்டிச் சிறுமி நிலைதடுமாறி ரிக்‌ஷாவிலிருந்து கீழே விழுகிறாள். மழை தண்ணீர் தேங்கி இருக்கும் அந்தத் தெருவில் ஏற்கெனவே ஒரு மின்கம்பி அறுந்து விழுந்திருக்க, தேங்கிக் கிடக்கும் அந்தத் தண்ணியில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கின்றது. ரிக்‌ஷாவிலிருந்து கீழே விழும் அந்தச் சிறுமி சரியாக அந்தத் தண்ணீர்த் தேக்கத்திலேயே விழ மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக அந்த இடத்திலேயே உயிரிழக்கிறாள்.... அழுத்தமான இந்தக் காட்சியில் ஷங்கர், அளவுக்கதிகமான சுமையேற்றும் ரிக்‌ஷா,  நோ-எண்ட்ரியில் செல்வது, மின்கம்பி அஜாக்கிரதை, மழைநீர் தெருவில் தேங்குவது என நிறைய சமூக அலட்சியங்களை நிரப்பி வைத்திருப்பார்.... காரணம் இந்த அலட்சியங்களில் ஏதாவது ஒன்று நிகழாமல் தவிர்க்கப்பட்டிருந்தால் கூட அந்தச் சிறுமி உயிரிழந்திருக்க மாட்டாள் என்னும் உண்மையைப் பார்வையாளர்களின் மனதில் உணர்ச்சிப்பூர்வமாக அழுத்தி ஒட்டவைப்பதற்காக!....  ஒரு பெரும் அவல விளைவு (சிறுமியின் மரணம்) சம்பவத்ததின் தொடக்கப் புள்ளி மின்கம்பிகளைப் பராமறிக்காமல் விட்டதோ அல்லது அந்த சிறு தெருவில் சரியானமுறையில் ரோடுபோடாததோ என ஒரு சாதாரன நிகழ்வுதான் அதற்குத் தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கமுடியும் - இதுதான் “ அந்நியன்” சொல்லும் கேயோஸ் தியரி!


சரி... இந்தப் படத்துக்கு வருவோம்!


ஹாலிவுட்டில் 2004-ஆம் ஆண்டு Eric Bress மற்றும் Mackye Gruber எழுதி இயக்கிய “தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட்” திரைப்படமும் முழுக்க முழுக்க கேயோஸ் தியரியின் அடிப்படையில் பின்னப்பட்ட படுசிக்கலான திரைக்கதையால் உருவானது! 


மேலே குறிப்பிடப்பட்ட இந்தியப் படைப்புகள் கேயோஸ் தியரியின் அறிவுப்பூர்வமான யதார்த்தப் பதிவுகள் என்றால் இந்த ஹாலிவுட் படமோ அதே தியரியின் அடிப்படையில் உணர்வுப்பூர்வமான ஒரு ஃபேண்டஸி! 


கதை நாயகனான எவான்(Evan)-ன் வாழ்வில், பிறக்கும்போதே ரெடிமேட் குழப்பங்கள் சூழ்ந்திருக்கின்றன...  அவனது தந்தை ஒரு மனநோய் காரணமாக மனநலக் காப்பகத்தில் இருப்பவர்.... இன்னும் சொல்லப்போனால் அவனது தாத்தாவும் (அப்பாவின் அப்பா) உயிர் நீத்தது ஒரு மனநலக் காப்பகத்தில்தான்! மேலும் எவானுக்கு முன்னதாக இரண்டு குழந்தைகள் அவன் அம்மாவின் வயிற்றிலேயே மரணித்து still babies-ஆகப் பிறந்த மெடிக்கல் ஹிஸ்ட்ரி வேறு!





மிகமிக மோசமான இளம்பருவத்தைக் கடக்கிறான் சிறுவன் எவான். ஆறு வயதிலிருந்தே எவானின் அன்புக்குரிய தோழியான கேய்லீ (Kay Leigh), கேய்லீயின் மூர்க்கத்தனமான அண்ணன் டாமி (Tommy) மற்றும் இவர்களின் அப்பாவி obese  நண்பன் லெனி (Lenny) மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பவர்கள்..... எவானுக்கு கேய்லீயின் மீது சிறுவயதுமுதலே நட்பைத் தாண்டிய  நெருக்கமான உறவு உண்டு... அவளுடைய அண்னன் டாமி சிறுவயதிலேயே  கொடூரமான இயல்புடையவன். டாமி மற்றும் கேய்லீயின் தந்தை மில்லர், சிறுவர்களை வைத்து தகாத வீடியோக்கள் எடுக்கும் ஓர் ஈனத்தனமான பாத்திரம்.  தன் ஆறு வயது மகள் கேய்லீயையும், சிறுவன் எவானையும் வைத்தே அப்படியானதொரு வீடியோவை மில்லர் எடுக்க முயல்வதாக ஒரு horrible காட்சி ஒன்று இருக்கிறது படத்தில். தனது தங்கையுடன் எவான் நெருங்கிப் பழகுவது சிறுவயது முதலே டாமிக்குப் பிடிக்காது..... ஒருமுறை தன் தந்தையால் காயப்படுத்தப் பட்டிருக்கும் கேய்லீக்கு எவான் முத்தம் கொடுக்கும்போது (மருத்துவ முத்தம் அல்ல!) டாமி பார்த்துவிட அந்தக் கோபத்தில் எவானின் வீட்டிற்கு சென்று அவனையும் லெனியையும் மூர்க்கமாகத் தாக்கி எவானின் நாய்க்குட்டியை உயிருடன் ஒரு சாக்குப் பைக்குள் போட்டு எரித்துக் கொன்றுவிடுகிறான். அதே பதின்மப் பருவத் தொடக்கத்தில் விபரீதமான ஒரு விளையாட்டாக டாமியின் வீட்டிலிருக்கும் ஒரு டைனமைட்டைப் பற்ற வைத்து அருகிலிருக்கும் ஒரு வீட்டின் தபால்பெட்டியில் லெனியை வற்புறுத்தி டாமி போடவைப்பான் அது வெடித்துவிட எதிர்பாராதவிதமாக அந்த வீட்டில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தை மரணிக்கின்றது அந்தக் காட்சி அழியாத குற்ற உணர்வாக லெனி, எவான் மற்றும் கேய்லீயின் கண்கள் முன்பே நிகழ்கிறது.... இதனையொட்டி டாமி சிறுவர் ஜெயிலுக்கு செல்ல, எவானை அவன் அம்மா அந்த ஏரியாவை விட்டு வேறு இடத்துக்குப் பெயர்ந்து சென்றுவிடுவார்.... கேய்லீ தனிமையடைகிறாள் லெனி மன நலம் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறான்.....





எவான் வாழ்க்கையில் இந்த சம்பவங்கள் நடக்கும் பருவத்தில், அவனுக்குக் கிட்டத்தட்ட ஆறு வயதிலிருந்தே அவ்வப்போது “Black-out" ஆகிவிடும் பிரச்னை உண்டு.... அதாவது திடீரென்று அவன் மனம் ஒருவிதமான வெறுமை நிலையை அடைந்துவிட அவன் நினைவுகளில் ஒரு புள்ளிக்கு மேல் அந்த சூழ்நிலைகளில் என்ன நடந்தது என்று சுத்தமாக நினைவிருக்காது! மேலே சொன்ன ஒவ்வொரு மோசமான நிகழ்ச்சியிலும் ஒரு கட்டம்வரைதான் எவானுக்கு நினைவிருக்கும். சம்பந்தப்பட்ட அந்த காட்சிகளும் பாதியில் “கட்”டாகிப் பிறகு எவான் நினைவுக்குத் திரும்பிய பிறகுதான் தொடர்வதாய் திரைக்கதை அமைத்திருப்பார்கள்..... பாட்டன், தகப்பன் வழியில் எவானுக்கும் எந்த மனநோய் வந்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையுடன் முதன்முறை ப்ளாக்-அவுட் ஆனபோதே மன நல மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவார் எவானின் அம்மா.... ஆனால் தெளிவாக எவ்விதக் குறைபாடும் கண்டுபிடிக்க முடியாமல் எவானை ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை சிறு குறிப்பேடுகளில் தவறாது Journal எழுதிவருமாறு அறிவுறுத்துகிறார் மருத்துவர்..... எவானும் அவனுக்கு நினைவிழப்பு நேரும்வரையிலான சம்பவங்களைத் தொடர்ந்து Journal-லாக எழுதிவருகிறான்!

கேய்லீ, டாமி, லெனி ஆகியோரது வாழ்க்கை ஒவ்வொரு திசையில் பிரச்னைகளில் தேங்கிவிட கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றுவிடும் அளவு வளர்ந்துவிடுகிறான் எவான். அப்படியானதொரு வெற்றிகரமான சூழலில் எவானின் அம்மா எவானின் கையை ஒரு கைரேகை பார்க்கும் பெண்ணிடம் காட்டுவார்.... அதிர்ச்சியடையும் அந்தப் பெண்ணோ, எவானுக்குக் கையில் ஆயுள் ரேகையே இல்லை என்றும் அவனுக்கென்று ஓர் ஆன்மா (soul) இருக்கவே இருக்காது என்று சொல்கிறார்.... எவான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லையென்றாலும் அவனது அம்மா கோபப்பட்டு அந்த இடத்திலிருந்து தன் மகனுடன் வெளியேறிவிடுவார்......





கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலே சொன்ன காட்சிகள்தான் சற்றே குழப்பித் தெளிவான கோர்வையின்றி நான் - லீனியராகத் திரையில் விரியும். அதன்பின்பு, கல்லூரி விடுதியிலிருக்கும் எவான் தன்னுடைய சிறுவயது நண்பர்களின் நினைவு வந்து தன்னுடைய சிறுவயது ஜர்னல்களை வாசிப்பான்...... அவ்வப்போது black-out ஆகிவிடும் பிரச்னை காரணமாக ஒவ்வொரு மோசமான சம்பவமும் பாதிவரைதான் பதியப்பட்டிருக்கும் எவானின் டைரிகளில்... அச்சம்பவங்களை அவன் வாசிக்கும்போது திடீரென்று எழுத்துக்கள் ஆடத்துவங்கி அவனுக்கு மட்டும் ஏதோ நில நடுக்கம் வந்ததுபோல் உடல்ரீதியாகக் கஷ்டப்பட்டு மூக்கிலிருந்து ரத்தம் வழியத் துவங்கும் எவானுக்கு! அப்போதுதான் ஒருவழியாகத் தெரியவரும் நமக்கு..... அதாவது, எவானுடைய பழைய டைரிகளை அவன் படிக்கும்போது அந்த எழுத்துகள் அல்லது அந்த நினைவுகள் வழியே அவன் அந்தச் சம்பவம் நடக்கும் காலத்துக்கு சென்றுவிடுகிறான் என்று! (தன் டைரிக் குறிப்பு நினைவுகளின் வழியே கிட்டத்தட்ட ஒரு டைம்-டிராவல்).


 நிகழ்காலத்தில் தான் நல்லவிதமாக வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டாலும் தன்னுடன் வளர்ந்த நண்பர்கள் யாருமே நன்றாக வாழவில்லை என்னும் நிஜம் எவானை மிகவும் மனரீதியாகத் துன்புறுத்துகிறது.... அவர்களின் இந்த நிலைக்குத் தானும் ஒரு காரணம் என்னும் எண்ணம் அவனை மேலும் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது! தன் நண்பர்களின் வாழ்க்கையைக் காவு வாங்கிவிட்ட அப்படியான மூலகாரணமான சம்பவங்களை எல்லாம் தன்னுடைய டைரிக்குறிப்புகள் மூலம் கடந்த காலத்துக்கு சென்று மாற்றியமைக்க முனைகிறான்! (கேயோஸ் தியரியின் படி!).... 






டாமி, எவானின் வீட்டில் லெனியைத் தாக்கி எவானின் நாய்க்குட்டியை எரித்துக் கொல்லும் காட்சிக்குச் சென்று அந்த சம்பவத்தை மாற்றுகிறான் அதன்படி அப்போதே டாமி போலீஸிடம் பிடிபட்டு கேய்லீ மற்றும் லெனி சற்று சந்தோஷமாய் எவானுடன் கல்லூரிப் படிப்பிலும் உடன் வருகிறார்கள்... எல்லாம் நன்றாகப் போனாலும் டாமியின் வாழ்க்கை வீணானதை கேய்லீயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை... அதனை சரிசெய்ய மீண்டும் ஒரு கடந்தகால சம்பவத்துக்குள் சென்று இம்முறை இவர்களின் விபரீத விளையாட்டால் மரணிக்கும் கைக்குழந்தையைக் காப்பாற்றுகிறான்,.... அந்த முயற்சியில் எவான் தன்னுடைய கை, கால்களை இழந்து சக்கர நாற்காலியில் கல்லூரி பயில்கிறான்..... லெனியும் கேய்லீயும் தன்னை நட்புடன் கவனித்துக் கொள்கிறார்கள், டாமியும் மிகவும் பண்பட்ட இளைஞனாக ஏதோ வேலை செய்கிறான்.... லெனியும் கேய்லீயும் காதலிக்கிறார்கள்! எவானுக்கு அந்த ஏமாற்றம் வலித்தாலும் ஒருவகையில் இந்த முடிவு அவனுக்குப் பிடித்திருக்கிறது.... ஆனால் அதிலும் ஒரு பிரச்னை இருக்கின்றது..... எவானின் விபத்திற்குப் பிறகு அதிகமாகப் புகை பிடித்து நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகி மரணப்படுக்கையில் இருக்கிறார் எவானின் அம்மா...... ! 


இப்படி ஒருவர் பிரச்னையை சரிசெய்யக் கடந்தகாலத்துக்கு சென்று மோசமான சம்பவங்களை எல்லாம் எவான் மாற்றியமைத்தால், அது இன்னொருவரின் வாழ்க்கையை முற்றிலும் காவு வாங்குவதாகவே அமைகிறது! இதனால் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டவனாய் ஒரு கட்டத்தில் எவான் பிறந்த மருத்துவமனையில் தன் தாயின் மருத்துவக் குறிப்புகளை வாசித்து தன் பிறந்த நாளுக்குப் பயணமாகிக் கருவிலேயே எவான் தன்னை மாய்த்துக்கொள்வான்! (தனது தாயின் மெடிக்கல் ஹிஸ்ட்ரி படியே மூன்றாவது கருவில் மாய்ந்த குழந்தையாகித் தன் வாழ்வே இல்லாமல் செய்துகொள்கிறான்!)





எவான் கருவிலேயே இறந்து பிறக்க, எவானின் தந்தை முழு மன நலமுடன் தன் மனைவியுடனே வாழ்கிறார்.... கேய்லீ, லெனி மற்றும் டாமி எவானின் பெற்றோரின் அரவணைப்பில் நல்லவிதமாக வளர்வார்கள்.... நன்றாகப் படித்து ஆளாளுக்கு சந்தோஷமாகத் திருமணம் நடைபெற்று எல்லாரும் இன்புற்றிருக்கப் படம் முடிவடையும்.... எவான் என்று ஒருவன் உலகத்திலேயே இல்லாதவனாகிப் போகிறான்.... அப்போது அந்த கைரேகை பார்க்கும் பெண் சொன்னதை ஒருமுறை ரீகால் செய்து முடிகின்றது படம்!


படுகுழப்பமான திரைக்கதை..... மிகமிக சிக்கலான கதையமைப்பு..... முக்கியப் பாத்திரங்களான எவான், கேய்லீ, டாமி மற்றும் லெனி என நான்கு பேருக்கும் ஆறு வயதும் பதின்மூன்று வயது பிறகு இருபதுகளில் என்று ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உருவ ஒற்றுமையுடன் கூடிய மூன்று நடிகர்களை நடிக்கவைத்திருப்பது என அளவுக்கும் அதிகமாகக் கடினமாக உழைத்துத்தான் இந்தப் படத்தைத் திரையில் பதிந்திருக்கிறார்கள்....... வித்தியாசமான திரைக்கதை வடிவங்களை விரும்பும் பார்வையாளர்கள் நிச்சியம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்! 


 பதிவின் அதிக நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்! உங்கள் கருத்துக்களை மறுமொழியில் தெரிவியுங்கள்....... பேசுவோம்! :-)


அன்புடன்,

பிரபு எம்























Sunday, October 01, 2017

Eternal Sunshine of the spotless mind (2004) - ஹாலிவுட் திரைப்படம்

Starring:       Jim Carrey, Kate Winslet, Kristen Dunst
Written by:   Charlie Kaufman
Directed by: Michael Gondry


”நினைக்கத் தெரிந்த மனமே... உனக்கு மறக்கத் தெரியாதா?!
 பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?”

”ஆனந்த ஜோதி”(1963) திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் - தேவிகா காதலுக்காகக்  கண்ணதாசன் எழுதிய எவர்கிரீன் “ப்ரேக்-அப்” சாங் இது! "Eternal sunshine of the spotless mind" ஜிம்கேரி-கேட்வின்ஸ்லெட் நடிச்ச படமாச்சே... என்று குழம்ப வேண்டாம்! (கொஞ்சம் லேட்டாக) மேட்டருக்கு வந்துவிடுகிறேன்...



மனித உறவுகளில் தாய், தந்தையில் தொடங்கி நண்பர்கள் வரைக்கும் இருக்கும் எல்லா உறவுகளாலும் வாழ்வில் சிலருக்கு  “ஏமாற்றங்கள்”   நிகழத்தான் செய்கின்றன..... சிலவற்றை மன்னிக்கிறோம் பலவற்றை மறந்து உறவுகளில் கலந்தும்விடுகிறோம்... ஆனால் “ஏமாற்றம்” ஏற்பட்ட உடனேயே  சம்பந்தப் பட்டவர்களை நினைவுகளைவிட்டே நாம் அழித்துவிடத் துடிப்பது உடைந்துபோன காதல் உறவுகளில் மட்டும்தான்!

 மற்ற உறவுகளால் எப்பேர்ப்பட்ட துரோகத்தை சந்தித்தாலும், பரம விரோதிகளாகிப் போனாலும் கூட அவர்களுடனான நினைவுகள் மூளையின் ஏதோ ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போவதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.... ஆனால் பெரும்பாலும் காதலர்கள் மட்டும் ஏனோ தெரியவில்லை “ப்ரேக்-அப்” ஆகிவிட்டால் அதுவரை அவர்கள்  நேசித்தவர்களின் நினைவுகளை, ஸ்பரிஸங்களை, மனதில் தங்கிவிட்ட அவர்களின் உருவங்களை ஏன் நெருங்கி முகர்ந்த மணங்களைக் கூட மனதைவிட்டு மொத்தமாக அழித்துவிடத் துடிப்பார்கள்! என்னதான் முனைந்தாலும் எவ்வளவுதான் முயன்றாலும் மனித மனதில் "Backspace" பட்டன் இல்லாததை நினைத்து வருந்தித் தவிப்பார்கள்! அவர்களுக்காகத்தான் நினைவுகளைச் சேகரிக்கத் தெரிந்த மனதிற்கு அவற்றை மறக்கும் மெக்கானிஸம் தெரியவில்லையே என்று காதலின் வலியைக் கம்ப்யூட்டர் காலத்துக்கு முன்பாகவே நுணுக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன், ரியல் ஜீனியஸ்!

இங்கே, 2004-ஆம் ஆண்டு Michael Gondry இயக்கத்தில்,  வெளியான Eternal Sunshine of the Spotless Mind படத்திலும் கிட்டத்தட்ட அதே பிரச்னைதான் காதலர்களான ஜிம்கேரிக்கும் - கேட் வின்ஸ்லெட்டுக்கும்!

இந்தப் படத்தின் திரைக்கதை நகர்வதும், காட்சிகள் இடம்பெறுவதுமான கதைக்களமே நாயகனின் மனம்தான்! அதுதான் படமாக்கலின் மிகப்பெரிய  ஹைலைட்டான அம்சம்! திரைக்கதையில் இடம்பெறும் இடங்கள், மாந்தர்கள், பொருட்கள் உட்பட எல்லாமே கதை நாயகனின் மனதில் அவை பதிந்திருக்கும் விஷுவல் பதிவுகளாகத்தான் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்! உருவமில்லாத மனித மனத்தை வண்ணங்களின் துணைகொண்டு மாடர்ன் ஓவியங்களாக ஓவியர்கள் வடித்தெடுத்திருக்கிறார்கள், இங்கே திரைக் கலைஞர்கள் அகக் கண்ணுக்கு  மட்டுமே புலப்படும் மனதின் ரூபங்களை ஆடியன்ஸின் கண்களுக்குத் திரை விருந்தாக்கியிருப்பதுதான், மேலுக்குச் சாதாரணமாய்த் தோன்றும், இந்தக் காதல் கதைக்கு "Cult" அந்தஸ்துக் கிடைத்திருப்பதன் காரணம்!

ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் போலவே காட்சியமைப்புகள் மிரட்டினாலும், இது ஓர்அக்மார்க் காதல்கதை என்பதுதான் க்ளைமேக்ஸ் வைத்திருக்கும் சர்ப்ரைஸ் ட்விஸ்ட்!

ரொம்பவே சாதாரணனாகக் காட்சியளிக்கும் ஜிம்கேரி ஒரு சாதாரண நாளில் தனது ஆஃபிஸுக்குக் கட் அடித்துவிட்டு சம்பந்தமேயில்லாமல் Montauk என்னும் இடத்துக்கு செல்லும் ட்ரெயினில் ஏறிப் பயணிப்பார்.... அதே ட்ரெயினில் கேட் வின்ஸ்லெட்டைப் பார்ப்பார். பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்குமிடையே பரிச்சியம் ஏற்பட்டுவிடும். இயல்பாக ஒட்டிக்கொள்ளும் ஒரு நல்ல ஜோடியாகப் பளிச்செனப் பதிந்துவிடுவதாகத்தான் காட்சிகள் நகரும்..... ஆனால் சில நிமிடங்கள் கழித்துதான், ஜிம்கேரியும் - கேட் வின்ஸ்லெட்டும் ஏற்கெனவே காதலித்து இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து காதல் வாழ்க்கை கசந்துப் பிரிந்தவர்கள், என்று குழப்பமான Non-Linear காட்சிக்கோர்வையின் மூலம் திரைக்கதை நமக்கு உணர்த்தும்! அதனை அடுத்த ஒரு காட்சியில், ப்ரேக்-அப் ஆன வலியில் ஜிம்கேரி முழுமையாக மீண்டுவிடாத வேளையில் கேட்வின்ஸ்லெட்டை அவுட்டோரில் சந்திப்பார் அப்போது கேட் வின்ஸ்லெட் ஜிம்கேரியிடம் அவரை முற்றிலும் யாரென்றே தெரியாததுபோல் நடந்துகொள்வார்..... அப்போதுதான் தெரியவரும்  கேட் வின்ஸ்லெட் Lacuna, INC என்னும் (கற்பனை)கம்பெனியின் உதவியுடன் தன்னை மிகவும் தொல்லை செய்யும் தன் பழைய காதலன் ஜிம்கேரியின் நினைவுகளை மொத்தமாகத் தன்னுடைய மூளையிலிருந்து டெக்னாலஜிக்கலாக அழித்துவிட்டார் என்று! இதனால் மேலும் மனமுடைந்து போகும் ஜிம்கேரி, தன்னுடைய  நினைவுகளில் இன்னும் பழைய காதலியாக வாழும் கேட் வின்ஸ்லெட்டின் தடங்களைத் தானும் அழித்துவிட அதே கம்பெனியின் உதவியை நாடுகிறார்!

Lacuna-வில் ஜிம்கேரியின் மனதிலிருந்து கேட்வின்ஸ்லெட்டின் நினைவுகளை அழிக்கும் procedure-ன் போது அங்கு அரங்கேறும் வித்தியாசமான சம்பவங்களும், ஜிம்கேரியின் மனதின் நினைவுகளின் காட்சிப்பதிவுகளும்தான் கிட்டத்தட்ட எண்பது சதவீத திரைக்கதை! அழிக்கப்படும் மனதின் பதிவுகளை விஷுவலாகக் காட்டுவதில் நிகரற்ற கற்பனைவளமும் க்ரியேட்டிவிட்டியும் நம்மை பிரமிக்கவைக்கும்... (என்ன நடக்குது... என்ன சொல்லவர்றாய்ங்கன்னு மூளையையும் பிஸியாக வைத்திருக்கும்!)

கேட்வின்ஸ்லெட்டின் நினைவுகளை மொத்தமாக அழிக்கும் ப்ராசஸ்ஸுக்காக (process) சக்திவாய்ந்த sedation கொடுக்கப்பட்டு ஜிம்கேரி ஆழ்நிலைத் தூக்கத்தில் இருக்க, ஜிம்கேரியின் மூளை நரம்புகளுடன் இணைக்கப்பட்ட கணினியின் துணையோடு அவர் காதலியின் தடங்கள் பதிந்திருக்கும் நினைவுகளைப் பிரித்து அவற்றை முற்றிலுமாக  அழிக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கும்.... அந்த நேரம் பார்த்து, ஜிம்கேரிக்கு தன்னுடைய காதலியின் நினைவுகளை முழுமையாக அழித்துவிட மனம் ஒப்புக்கொள்ள மறுக்கப் பிரச்னை ஆரம்பிக்கிறது. பாதிக்குப் பாதி அழிந்துவிட்ட நிலையில் அவரது மூளை, ஆழ்நிலை மயக்கத்தில், இவர்களின் மறக்கவைக்கும் மெக்கானிஸத்துக்கு எதிர்ப்பு காட்ட ஆரம்பிக்கிறது! இன்னொரு பிரச்னை என்னவென்றால் அதே நேரத்தில் Lacuna கம்பெனிக்குள்ளும் பல உள்ளடிப் பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வருவதுதான்!

 ஜிம்கேரியின் நினைவுகளை அழிக்கும் பணியிலிருக்கும் நிபுணர்களான ஸ்டேனுக்கும் மேரிக்கும் இடையே காதல் என்கிற பெயரில் காமப் பகிர்வுகள், ஜிம்கேரி உறங்கவைக்கப்பட்டிருக்கும் அதே அறையிலேயே, அரங்கேறிக்கொண்டிருக்கும்.... ஒருகட்டத்தில்  அன்-கான்ஷியஸில் வைத்து காதலியின் நினைவுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஜிம்கேரியின் மூளை (conscious brain) தன் காதலியின் நினைவுகளை மறக்க மறுத்து எதிர்வினை ஆற்ற ஆரம்பிக்க க்ளினிக்கலாக   ஜிம்கேரியின் நிலை மிகுந்த சிக்கலுக்குள்ளாகிவிடும். அப்போது ஒரு high risk situation-ல்  Lacunaவின் தலைவரான டாக்டர்.ஹாவோர்ட் அந்த நள்ளிரவு வேளையில் தானே நேரில்வந்து சிக்கலான இந்த கேஸில் troubleshoot செய்ய வருகிறார். அப்போது நேரும் மேலும் பல குழப்பங்களுக்கிடையே,  மேரியுடன் ஏற்கெனவே டாக்டர் ஹார்வோர்ட் தவறான உறவுகொண்டிருந்ததும் பின்பு அந்த நினைவுகளை மேரியின் மூளையிலிருந்து அவரே அழித்ததும் தெரியவருகிறது! தற்சமயம் அவள் காதல் வயப்பட்டிருக்கும் ஸ்டேனும் அதேரீதியில்தான் தன்னை ஜஸ்ட் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் மேரிக்கு புலப்படும்!  அங்கே பணிபுரியும் இன்னொரு இளைஞனான பேட்ரிக், ஜிம்கேரியின் நினைவுக் குறிப்புகளின் மூலம் கேட்வின்ஸ்லெட்டின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கேட்டை அடைவதற்காக  வலைவிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் இன்னொரு ட்ராக்கில் அம்பலமாகும்!

  டாக்டர். ஹார்வோர்ட் மற்றும் Lacuna கும்பலின் துரோகத்தைத் தாங்க முடியாத மேரி (Kristen Dunst),  Lacuna மூலம் தங்கள் பழைய நினைவுகளை அழித்துக்கொண்ட அத்தனை கஸ்டமர்களுக்கும் அவர்களின் அழிக்கப்பட்ட உறவுகளின் தகவல்களையும் அப்போது பதிவுசெய்யப்பட்ட டேப்களையும் ரகசியமாக மேரி தபால் மூலம் அவர்களுக்கே அனுப்பிவிடுகிறாள். கேட் வின்ஸ்லெட்டுக்கும் ஜிம்கேரியுடனான, தான் அழித்துவிட்ட நினைவுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் அந்த தபால் வந்தடைகிறது!

ஜிம்கேரி - கேட்வின்ஸ்லெட் தங்கள் வாழ்வில் முதன்முறையாக சந்தித்துக்கொண்டபோது கேட்வின்ஸ்லெட் சொல்லும் ஒற்றை வாக்கியமான "Meet me in Motauk" ,  இத்தனைக் கலவரத்திலும் அழியாத காதலின் சாட்சியாய், மறக்காத வாக்கியமாய் இருவர் மனதிலும் தங்கிவிடுவதுதான் ஒருவருக்கொருவர் முற்றிலுமாய் மறந்துவிட்ட பழைய காதலர்களான அவர்களை சம்பந்தமேயில்லாமல் நிகழ்காலத்தில் Montauk  நோக்கிப் பயணிக்கச் செய்கிறது! ஞாபகங்களுக்குள்ளே கண்ணாம்பொத்தியாடும் ஒரு ஹை-டெக் காதல் விளையாட்டு முடிச்சுகள் எல்லாம் தெளிவாய் அவிழ்ந்த ஒரு விருவிருப்பான கட்டத்தில் அழகாய் முடிகின்றது!

ஓர் ஆண் மனதின் பதிவுகளுக்குள் புகுந்து அதில் அவன் காதலியைப் பிரித்தெடுத்து அவற்றை  நினைவிலிருந்து அழிப்பதும், அதற்கு தூக்கத்திலிருக்கும் காதலன் மனம் மறக்க மனமில்லாமல் அழிந்து கொண்டிருக்கும் நினைவுகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்கப் போராடுவதையும் ஓர் அரைத்தூக்கக் கனவாக, விஷுவலாக, உயிர்கொடுக்கும் காட்சியமைப்புக்காகவும்,  இத்தனைக் குழப்பமான கதைக்கு நேர்த்தியான திரைக்கதையமைத்து கடைசியில் குழப்பமுமின்றி நிறைவானதொரு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் திரைஎழுத்து வித்தைக்காகவும்தான் திரையுலகம் இந்தப் படத்தை இடைவிடாது கொண்டாடுகிறது!

Eternal Sunshine of the Spotless Mind! மனமும் மனம் சார்ந்ததுமான கருப்பொருள் படைப்பு - A poly-chromatic Dream in Technicolor!

எண்ணங்கள் வண்ணங்களாய் விரியும் திரைப்பட ஊடகத்தில் வண்ணங்கள் எண்ணங்களாய் திரைவிரியும் அதிசிய மேக்கிங்கை அவசியம் கண்டுகளியுங்கள்!

நினைத்தலும் மறத்தலும் என அழுத்தமான திரைப்படத்தைப் பார்த்துமுடித்தபின் மீண்டும், கண்ணதாசனே காதில் கவிதை வாசித்தார்.....

 நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? என்று!

டெயில் பீஸ்:

இந்தப் பதிவை எழுதிமுடித்திருந்த நேரத்தில் சமீபத்தில் இசை வெளியாகியிருக்கும், இன்னும் சில நாட்களில் ரிலீஸாகப் போகும் “மேயாத மான்” (தயாரிப்பு: கார்த்திக் சுப்புராஜ்) படத்தின்  பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.... அதில் ஒரு பாடலில் வரும் பின்வரும் வரிகளைப் பாருங்கள்.....

“உன் ஞாபகம் தீயிட, விறகாயிரம் வாங்கினேன்...
அறியாமலே நானதில் அரியாசனம் செய்கிறேன்...”

ஹாஹா... இந்த ஞாபகப் பிரச்னை ரொம்பப் பெரிய பிரச்னையாத்தான் இருக்கும்போலயே!

அன்புடன்,

பிரபு எம்



















Sunday, May 15, 2011

The Source Code [U/A] ( 2011) - விமர்சனம்



"அவதார்", "இன்செப்ஷன்" போன்ற படங்களைப் பார்த்து ரசித்து வரவேற்ற‌ நமக்கு அதே நம்முடைய‌ மெருகேறிய புரிதலுடன் கூடிய நேயர் பங்களிப்பை அடித்தளமாகக்கொண்டு அடுத்த தளத்தில் அதிநவீன யுக்திகளுடன் திரையில் களமிறங்கியிருக்கும் லேட்டஸ்ட் ஹாலிவுட் சூப்பர் டெக்னோ த்ரில்லர்... "The Source Code"!!!

"Source Code is not a TIME TRAVEL it's  just a TIME RE-ASSIGNMENT"  என்று படத்தில் சொல்லுவார் கதைப்படி "ஸோர்ஸ் கோட்"-ஐ உருவாக்கிய Dr. ருட்லெட்ஜ் ( நடிப்பு: ஜெஃப்ரி ரைட்) அது என்ன Time Re-assignment?? என்று கேட்டால் அதுதான் படத்தின் கான்செப்ட்!

அமெரிக்காவில் ஓடும் ரயிலில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படுகின்றது.... சக்திவாய்ந்த அந்த குண்டுவெடிப்பில் ரயிலில் பயணித்தவர்கள் யாருமே பிழைக்கவில்லை......   பிரச்னை என்னவென்றால் இது ஒரு Trial மட்டுமே, தொடர்ந்து எந்த நேரத்திலும் நகரத்தில் அடுத்த அதிபயங்கர நியூக்ளியர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம்.... இந்த சூழ்நிலையில் "ஸோர்ஸ் கோட்" என்னும் அறிவியல் அற்புதத்தின் துணைகொண்டு நாயகன் ஜேக் கில்லின்ஹாலை வெடித்துச் சிதறிய அந்த ரயிலில் கடந்தகாலத்தில் களமிறக்குகிறார்கள் தவணைமுறையில்!!!!

கேப்டன் ஸ்டீவன்ஸ் ஒரு ராணுவ வான்படை வீரன் ( நடிப்பு: ஜேக் கில்லின்ஹால்)  குண்டுவெடிப்பிற்கு இரையான‌ அந்த ரயிலில் பயணித்த ஷான் ஃபென்ட்ரஸ் என்னும் ஓர் பயணியின் உடலில் ஜேக்கின் உயிரை "ஸோர்ஸ் கோடி"ன்மூலம் களமிறக்குகிறார்கள்! வெடித்துச் சிதறிய அந்த ரயிலில் குண்டு வெடிப்பதற்கு முன்பான‌ கடைசி எட்டு நிமிடங்களை மட்டும் "ஸோர்ஸ் கோட்" ப்ரோக்ராமின்படி,  ஷானின் உடலில் மீண்டும் வாழ்ந்து ரயிலில் வெடிகுண்டு வைத்த வில்லனை ஜேக் கண்டுபிடிக்கவேண்டும் இதுதான் கதையின் கரு!

எட்டு நிமிடத்தில் வெடிக்கப்போகும் ரயிலில்..... கிறிஸ்டினா என்னும் இளம்பெண்ணின் ( நடிப்பு: மிஷெல் மொனாஹென்) பக்கத்து ஸீட்டில் ஷான் ஃபென்ட்ரஸ்ஸின் உடலுக்குள் திடுக்கிட்டு உயிர்பெற்று எழுவார் ஜேக்...... பக்கத்து ஸீட்டில் கிறிஸ்டினா சகஜமாக பேச்சுக் கொடுப்பாள்..... பயணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் பயணத்தை மேற்கொள்ள வில்லனைத் தேடும் பரபரப்பில் எந்தக் க்ளூவும் பெறாமலேயே எட்டு நிமிடங்கள் கடந்து ரயில் வெடித்து உயிரிழந்து "ஸோர்ஸ் கோடு"க்குள் மீண்டும் வந்து சேருவார் ஜேக்....... அங்கே குட்வின் என்னும் பெண் அதிகாரியும் , ஸோர்ஸ் கோடை உருவாக்கிய Dr. ருட்லெட்ஜும் அவரிடம் தகவல்களை சேகரிப்பார்கள் வில்லனைக் கண்டுபிடிக்க‌.....!

மீண்டும் இரண்டாவது முறையாக ரயிலின் கடைசி எட்டு நிமிடங்களை வாழ்ந்து உண்மையைக் கண்டறிய ரயிலுக்கு ஜேக் அனுப்பப்படுவார்....... சென்றமுறை குண்டுவெடித்த திசையைவைத்து கழிவறையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் செல்ஃபோன்மூலம் வெடிக்கவைக்கப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஜேக் கண்டுபிடிப்பார்.....

இப்படி மீண்டும் மீண்டும் ஜேக் அந்த ரயிலுக்குள் அனுப்பபட்டு அதே அந்த எட்டு நிமிட இடைவெளியில் கடும் போராட்டத்துக்குப்பின் குண்டு வைத்தவனைக் கண்டறிவதுதான் எட்டு எட்டு நிமிடமாக திரையில் செத்துச் செத்து விளையாடும் ஸூப்பர் த்ரில்லர்......!

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நம் இந்திய கிரிக்கெட் அணியின் வோர்ல்ட் கப் ஹீரோ யுவ்ராஜ் சிங் பின்வருமாறு "ட்வீட்" செய்திருந்தார் ட்விட்டரில்......

"Never seen a hero die so many times in a movie but source code was good fun!! " - Yuvi

ஹாஹா... இதைப் பார்த்துவிட்டுத்தான் நேற்று செகண்ட் ஷோவிற்கு புக் செய்தேன் (தூக்கம் வராமல் மும்பையின் தெருக்களில் சுற்றும் என் பூர்வஜென்மத்து சாபம் இன்னும் என்னுடனே தொடர்வதால்!!!! ) யுவ்ராஜிற்கு நன்றிகள்.... சிந்தையை உறங்கவிடாது வேலைகொடுத்த திரைக்கதையை மிகவும் ரசித்தேன்!!

ரயிலில் பயணிக்கும் அந்த எட்டு எட்டு நிமிடங்களில் வில்லனைக் கண்டுபிடிக்கும் ஆபரேஷனுக்கு இடையே, பக்கத்து ஸீட் இளவழகி கிறிஸ்டினாவுடன் ஜேக்கிற்கு ஏற்படும் பாந்தமான பரிச்சியம் படு அழகான திரைக்கதை முடிச்சு!! அந்த குண்டுவெடிப்பில் ஏற்கெனவே இறந்துவிட்ட கிறிஸ்டினாவைக் கடந்தகாலத்தில் காப்பாற்ற இயல்பாக உந்தப்படுவார் ஜேக்... ஆனால் "ஸோர்ஸ் கோட்" ஒரு டைம் ரீ-அசைன்மெண்ட் மட்டுமே... அதாவது முடிந்துபோன எட்டு நிமிடங்களை வாழ்ந்து அதன்மூலம் வருங்காலத்து நிகழ்வுகளை மாற்றியமைக்கலாமே தவிர அந்த ரயிலில் கடந்தகாலத்தில் முடிந்துபோன உயிர்களை மீட்கமுடியாது என்பதுதான் "டைம் ரீ-அசைன்மெண்ட்"ன் சோகமான ரியாலிட்டி‍‍‍!

ஸோர்ஸ் கோட் மூலம்  ஓடும் ரயிலில் செத்து செத்து விளையாடும் "ஜேக்"கிற்குத் தன்னைப்பற்றிய நிகழ்கால நினைவுகளும் அவ்வப்போது தோன்றி மறைந்து குழப்பிக்கொண்டே இருக்கும்..... அதாவது தன் நிகழ்காலத்து நிஜவாழ்வில் கடைசியாக நடந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்துவரைதான் அவருக்கு நினைவிருக்கும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகள் எங்கே என்கிற தேடலில் உழலும் ஜேக் ஒருகட்டத்தில், தான் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஏற்கெனவே  உயிரிழந்துவிட்டதை அறிந்துகொள்ளும் காட்சியில்  நமக்கு செம ஜெர்க் அடிக்கும்!

"ஸோர்ஸ் கோட்" சேம்பருக்குள் உறங்கும் ஜேக்கின் உடல், கடுமையான ஹெலிகாப்டர் விபத்தில் அடிபட்டு வெறும் 15% மட்டுமே உயிருடன் இருக்கும் " நிகழ்கால‌" ஜேக்கின் சிதைந்த உடல் என்று நாம் அறியும் நேரம் பரிதாபம்!

ரயிலில் குண்டைவைத்து செல்ஃபோன் மூலம் வெடிக்கச் செய்துவிட்டு, அடுத்த இதைவிட மிகப்பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குத் தயாராகும் வில்லன் டெரிக் ஃப்ராஸ்ட்டை ( நடிப்பு: மைக்கேல் ஆர்டென்) ஜேக் தொடர்ந்து பலமுறை எட்டு எட்டு நிமிடங்களாக ரயிலில் பயணித்துக் கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு ஜேக் துப்பு வழங்கிவிடுவார்.......அடுத்தகட்ட பேரழிவைத் தடுக்க டெரிக்கை மடக்க அமெரிக்கப் படைகள் ஒருபக்கம் விரைவார்கள்.....

மறுபக்கம்...... தான் ஏற்கெனவே மரணித்துவிட்ட ஒரு சிதைந்த உடல் மட்டுமே என்று புரிந்துகொண்டு மருகும் ஜேக்..... இந்த ஆபரேஷனில் தன்னை இயக்கும் அதிகாரி குட்வின்னிடம் மீண்டும் ஒருமுறை தன்னை அந்த ரயிலுக்குள் நிரந்தரமாக அனுப்பிவிடுமாறு கெஞ்சுவார்...... இதுவரை ரயிலில் எட்டு எட்டு நிமிடங்களாக சேகரித்த தகவல்களால் அந்த ரயில் குண்டுவெடிப்பைக் கடந்தகாலத்தில்  தடுக்கமுடியும் என்று நம்பும் ஜேக்கை ரயிலுக்குள் நிரந்தரமாக அனுப்பிவிட  ஒருகட்டத்தில் குட்வின் சம்மதிக்கத்  தன் விளம்பர இடைவேளைக் காதலி (!) கிறிஸ்டினாவைக் காப்பாற்ற நம்பிக்கையுடன் மீண்டும் அந்தக் கடைசி எட்டு நிமிட ரயில் வாழ்க்கையில் கால்பதிக்கும் ஜேக் ரயிலில் வைக்கப்பட்ட‌ அந்த  வெடிகுண்டை செயலிழக்கச்செய்து கடந்தகாலத்தில் அந்த ரயிலையும் தன் காதலி கிறிஸ்டினாவையும் காப்பாற்றிவிடுகிறார்......!!!!

நிகழ்காலத்தில் வில்லன் டெரிக் ஃப்ராஸ்ட் தடுக்கப்பட்டானா?? வெடித்துச்சிதறிவிட்ட ரயிலைக் கடந்தகாலத்தில் ஜேக்  காப்பாற்றியபிறகு என்ன நடந்தது?? ஜேக் - கிறிஸ்டினா என்ன ஆனார்கள்?? போன்ற கேள்விகளுக்கு நிறைவான பதில்தந்திருக்கிறார்கள் வெள்ளித்திரையில்!

குழப்பமான கதையென்றாலும் திரைக்கதையில் குழப்பம் எள்ளளவும் இல்லாதது அதிசியம்! அந்தளவில் பென் ரிப்ளீயின் பேனா ஒரு மந்திரக்கோலாகத்தான் திரைக்கதையைப் பதித்துள்ளது சமகால அதிநுட்ப சினிமா செல்லுலாய்டில்!

திரையில்  மாறி மாறி நிகழும் ஒரே "எட்டு நிமிடங்களை" அடுத்தடுத்துப் பார்த்து நாம் சலிப்படைந்துவிடாமல், அதே நேரத்தில் வெடிகுண்டு இன்வெஸ்டிகேஷன் பரபரப்புகள்,  குட்டிக் குட்டி "ட்வீட்"களால் இறந்தகாலத்தில் வளரும் ஜேக் - கிறிஸ்டினாவின் காதல், பயணிகளின் சகஜநிலை என்று சுவாரஸ்ய நிகழ்வுகளை   வெவ்வேறு டைம்லைன்களில் பிய்த்து அங்குமிங்கும் ஒட்டவைத்து பரபரப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் டங்கன் ஜோன்ஸ்!

"இன்செப்ஷன்" அளவுக்கும் ஒரு பிரம்மாண்டமான கல்வெட்டு இல்லைதான் இந்தப் படைப்பு.... இருந்தாலும்......

எக்ஸ், ஒய், இசட் ஆக்ஸிஸுகளைத்தாண்டிய நான்காவது பரிமாணத்தில் ஒரு நாலுகால் பாய்ச்சல் டங்கன் ஜோன்ஸ் வழங்கியிருக்கும் இந்த பரபர திரைப்படம்!!!


Source Code  -  Go For It!!!!




அன்புடன்,

பிரபு எம்

.

Saturday, November 13, 2010

The Social Network (2010)

உணவு..
உடை...
காற்று..
நீர்...
இருப்பிடம்...
இணையம்..
ஃபேஸ்புக்!!!

நிகழ்கால மனித இனத்தின் அத்தியாவசியத் தேவைகள் இவை! :-)

ஃபேஸ்புக்கின் க‌தைதான் "தி மூவி ஆஃப் தி இய‌ர்" என்று விம‌ர்ச‌க‌ர்க‌ள் ப‌ர‌வ‌லாக‌ப் ப‌றைசாற்றும் The Social Network (2010)

மேசையில் இருக்கும் கணிணியும்...கண்முன் இருக்கும் லேப்டாப்பும்... கையில் இருக்கும் பேனாவும்.. பேனாவை வைக்க‌ ச‌ட்டையில் பாக்கெட்டும்... ச‌ட்டையில் சொருக‌ பேனாமூடியில் ஒரு கொக்கியும்.... எல்லாமே ஐடியாக்க‌ள்தான்...!!

க‌ல்லூரி வாழ்க்கையில் க‌ற்ற‌ க‌ல்வியைவிட‌, க்ளாஸ்ரூமைவிட‌, லேப்பை விட‌, மெயின்ஹாலை விட‌ ஆடிட்டோரிய‌த்தைவிட‌ எல்லாத்தையும் விட‌ முக்கிய‌மான‌து அவ‌ர‌வ‌ர் டிபார்ட்மெண்டின் லாபிதான்!!
வ‌குப்பு துவ‌ங்குமுன்னும் பின்னும்... வாத்தியார் வ‌ராத‌ ஃப்ரீயான‌ பாட‌வேளைக‌ளிலும் உட்கார்ந்து அடித்தோமே அர‌ட்டைக‌ள்!!! உல‌க‌வ‌ரலாறிலிருந்து செம‌ஸ்ட‌ர் க்வெஸ்டின் பேப்ப‌ரிலிருந்து ப‌க்க‌த்து காலேஜ் மாண‌விக‌ளின் அப்டேட்க‌ளிலிருந்து கானா பாட‌ல்க‌ளும் ஹைக்கூ க‌விதைக‌ளும் சுவர்களின் கிசுகிசுக்களும் குட்டிச் சித்திரங்களும்... எல்லாமும் அர‌ங்கேறும் இல‌வ‌ச‌ கான‌ ச‌பாக்க‌ள் அவை!! க‌ல்லூரி வாழ்க்கை முடிந்த‌பின் எல்லா மனதும் தேடாம‌ல் தேடும் அந்த ஓர் அமைப்பை... அந்த‌ ஒரு ப்ளாட்ஃபார்மை இணைய‌ வெளியில் வாழ்நாள் முடியும்வ‌ரை நீட்டித்துக் கொடுக்கும் ஓர் ஐடியா நமது இந்தத் த‌லைமுறையே பித்துப்பிடித்துக் கிட‌க்கும் இந்த‌ "சோஷிய‌ல் நெட்வொர்க் வெப்சைட்டுக‌ள்".... அவைக‌ளில் ஒரு முடிசூடா ம‌ன்ன‌ன் "ஃபேஸ்புக்"!!

கிங்ஃபிஷ‌ர் ஏர்லைன்ஸ் விஜ‌ய் ம‌ல்லையாவுக்கு ஃப்ளைட் ஓட்ட‌த் தெரியுமா!!
ஏவி எம் சரவணனுக்குத் திரைக்க‌தை எழுத‌த்தெரியுமா!!
ந‌ம்ம‌ இஞ்சினிய‌ரிங் காலேஜ் க‌ல்வித்த‌ந்தைக‌ளுக்குக் க்ளாஸ் எடுக்க‌த்தான் தெரியுமா! (உல‌கம் அழிஞ்சிடும்!)

இப்ப‌டி யோசிப்ப‌தைவிட‌... ஃப்ளைட் ஓட்டும் பைல‌ட்டுக்கும், ப‌டமிய‌க்கும் இய‌க்குன‌ருக்கும், திய‌ரிக‌ள் எல்லாம் விர‌ல்நுனியில் வைத்திருக்கும் எத்த‌னையோ வாத்தியார்க‌ளுக்கும் த‌ங்க‌ள் திற‌மையை மார்க்கெட் செய்யத் தெரிய‌வில்லை என்பதுதான் ச‌ரியான‌ பார்வை!!

அதேபோல்தான் இங்கு "சோஷிய‌ல் நெட்வொர்கிங்" என்னும் கான்செப்டை சிந்திப்பது, அந்த‌ ஐடியாவை வெப்சைட் ஆக்க‌ க‌ம்ப்யூட்ட‌ரில் கோடிங் எழுத‌த்தெரியாத‌ சில‌ பிஸினஸ் மூளைக‌ள்தான்! ஆனாலும் வியாபாரிக்கு மூளையைவிட‌ வாய்தான் மூல‌த‌ன‌ம் என்ப‌தை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளாக‌ க‌ம்ப்யூட்ட‌ர் கில்லாடி மார்க்கிட‌ம் த‌ங்க‌ள் ஐடியாவைச் சொல்லி பிஸின‌ஸ் ப‌ண்ண அப்பாவித்தனமாக அழைக்கிறார்க‌ள்... அந்த அலட்சியமான‌ ஐன்ஸ்டீன் ம‌ண்டைய‌ன் அவர்களிடம் மொன‌மொன‌ வென்று எதையோ முணங்கிச்சென்றுவிட்டு அடுத்த‌நாளே த‌ன் ந‌ண்ப‌ன் எட்வார்டோவோடு இணைந்து "ஃபேஸ்புக்" வெப்சைட்டை அவ‌ர்க‌ளின் ஹார்வோர்டு ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் துவ‌ங்குகிறான்!!

அவ்வ‌ள‌வுதான் க‌தை.... அத‌ன்பின்னர்... பில்லிய‌ன்க‌ளைக் கொட்ட‌ப் போகும் ஐடியாவைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, க‌ம்ப்யூட்ட‌ர் "கோடிங்" எழுதுவ‌தில் த‌ன் விர‌ல்நுனி வித்தைக‌ளை எல்லாம் த‌ட்டித் தீர்த்து ஒரு பொட்ட‌ன்ஷிய‌ல் வெப்சைட்டாக‌ மார்க் ஃபேஸ்புக்கை உருவாக்க‌... ஒரு ல‌ட்ச‌ம் ஹிட்ஸ் எல்லாம் ஒரு ம‌ணி நேர‌த்துக்குள் அக்கௌண்டுக்குள் போட்டுக்கொள்ளும் வெப்ஸைட்டாக‌ நெஞ்சை நிமிர்த்துகிற‌து ஃபேஸ்புக் யுனிவ‌ர்சிட்டிக‌ளுக்குள்!! எட்வார்டோ தன் பங்குக்கு விளம்பரம் செய்யும் ஸ்பான்ஸர்களைத் தேடி அலைந்துகொண்டிருப்பான் அடுத்த பெரிய படிக்கட்டுகளைத் தாண்டி சிகரத்தில் ஏற!!

இந்த நிலையில் ஏற்கென‌வே மார்க்குக்கு ஒரு முன்னோடி போல‌ "நாப்ஸ்ட‌ர்.காம்" என்று காப்பிரைட் செல‌வில்லாம‌ல் மியூசிக் ஆல்ப‌ங்க‌ளை எம்பி3 யில் வ‌ழ‌ங்கிப் பெரும் லாப‌ம் பார்த்து வீழ்ந்திருக்கும்.. போதை, க்ள‌ப்பிங், பெண்க‌ள் என்றிருக்கும் ஒரு ‍Nasty young பிஸின‌ஸ்மேன் ஷான் "ஃபேஸ்புக்" டீமில் த‌ன்னை நுழைத்துக்கொள்ள‌.... ஷானை வெறுக்கும் எட்வார்டோவுக்கும்... அதே ஷானை அட்மைர் செய்யும் மார்க்குக்கும் மூக்கு உர‌சிக்கொள்ள‌ ஆர‌ம்பிக்கிற‌து...

கொழுத்த‌ பிஸினஸாக ஃபேஸ்புக் அடித்து வ‌ள‌ர்ந்த‌ பின்னர் அந்த இளம் முதலாளிகளுக்கிடையிலான "ந‌ட்பு" என்னும் பூவேலியையும் தாண்டி ஷானின் பிஸின‌ஸ் ப‌வுன்ச‌ர்க‌ள் எட்வார்டோவின் ஜ‌ன்ன‌ல்க‌ளைத் த‌க‌ர்க்க‌..... 600 மில்லிய‌ன் டால‌ர் ஈடு கேட்டு எட்வார்டோ கோர்ட்டுக்குப் போக‌.... முக்கிய‌ ஷேர்ஹோல்ட‌ரான‌ எட்வார்டோவை ச‌குனித்த‌ன‌மாக‌ வெறும் 0.03%க்கு சுருக்கும் ஷான் த‌ன்னுடைய‌ போதை ம‌ற்றும் மேற்ப‌டி ச‌மாசார‌ங்க‌ளால் தேவையில்லாம‌ல் மாட்டிக்கொள்ள‌.... இள‌ம் பில்லிய‌ன‌ர்க‌ளின் வ‌ட்ட‌ மேசை வ‌ழ‌க்கு மோத‌லில்தான் ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கிற‌து இடையிடையே விசார‌ணையின் சாட்சிக‌ளாக‌க் காட்சிக‌ள் விரிந்து க‌தை சொல்ல‌!!

திரைக்க‌தை கிட்ட‌த்த‌ட்ட‌ "காட்ஃபாத‌ர்" ரேஞ்சுக்குப் ப‌வ‌ர்ஃபுல்!!
மேக்கிங்கில் எந்த‌ அசாதார‌ண‌மும் தேவைப்ப‌ட்வில்லை இய‌க்குன‌ருக்கு...
சுழ‌ற்றிய‌டிக்கும் கேம‌ராவும், மிர‌ள‌வைக்கும் ஆர்கிடெக்ச‌ரும், சீன்களில் ட்விஸ்டும் ட‌ர்னுமாக‌ சீட் நுனிக்கு எல்லாம் வரவிடாம‌ல் முழு சீட்டிலும் ஆர‌ அம‌ர்ந்து பெப்ஸியை உறிஞ்சிக்கொண்டே பாப்கார்ன் ச‌வைத்துக் கொண்டே நிதான‌மாக விஷுவலாக ஒரு புத்தகம் வாசித்த‌ அனுப‌வ‌ம் த‌ரும் ஒரு Flawless screenplay...

ரொம்பக் க‌ஷ்ட‌ம் இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌தைக்குத் திரைக்க‌தை அமைப்ப‌து.... சீன்க‌ளின் சுவார‌ஸ்ய‌மும்... க‌ண‌க‌ச்சித‌க் கோர்வையும், நெக்ஸ்ட் ஜென்ரேஷ‌ன் ஷார்ப் வ‌ச‌ன‌ங்க‌ளும், அதுவும் அல‌ட்சியத்தின் உச்ச‌மாக‌ மார்க் ந‌ம்ம‌ ப‌ழைய‌ பாலிடிக்ஸ் மூப்ப‌னார் மாதிரி (!) வாய்க்குள்ளேயே முண‌குவ‌துபோன்று அடிக்கும் அல‌ட்சிய‌ ஜோக்குக‌ள் எல்லாம் அபார‌ம்!! 

"அக்கவுண்டில் முத‌லில் போட்ட‌ ஆயிர‌ம் டால‌ர்க‌ளும், பின்ன‌ர் போட்ட‌ ப‌தினெட்டாயிர‌ம் டால‌ர்க‌ளும் சேர்த்து மொத்த‌ம் ப‌த்தொன்ப‌தாயிர‌ம் டால‌ர்க‌ள் இனிஷிய‌ல் இன்வெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறேன்" என்று ப‌டு சீரிய‌ஸாக‌ எட்வார்டோ த‌ர‌ப்பு வாத‌ம் செய்துபோய்க்கொண்டிருக்க‌....

ஒரு பேப்ப‌ரில் ஏதோ கிறுக்கிக்கொண்டு, " திரும்ப‌ சொல்லுங்க‌ள்" என்று சொல்லி "ப‌தினெட்டாயிர‌ம் + ஆயிர‌ம் என‌ எழுதிக் கூட்டிப் பார்த்தேன் ஹி இஸ் க‌ரெக்ட் அவ‌ன் சொல்லும் அதே எண்க‌ள்தான் என‌க்கும் பேப்ப‌ரில் வ‌ருகிற‌து நீங்க‌ள் மேலே தொட‌ர‌லாம்... " என்று சிரிக்காம‌ல் சொல்லுவான் மார்க்... இவ‌ன் எப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆள் என்று புரிகிற‌தா!! இப்ப‌டியேதான் இருப்பான் ப‌ட‌ம் முழுக்க‌வும்!!! :)

இதுவும் ஓர் அடாப்டெட் ஸ்க்ரீன்ப்ளே தான்... ஆனால் திரைக்க‌தை த‌ழுவியிருப்ப‌து ஒரு நாவ‌லை அல்ல‌...
"தி ஆக்ஸிடென்ட‌ல் பில்லிய‌ன‌ர்ஸ்" என்னும் நான் ஃபிக்ஷ‌னை!!

 ஒரு புத்த‌க‌த்தை வாசிப்ப‌தைவிட‌ சில‌ சுவார‌ஸ்ய‌மான‌ ம‌னித‌ர்க‌ளிட‌ம் கொடுத்து வாசிக்க‌ச் சொல்லி விஷுவலைஸ் செய்வ‌து சுவார‌ஸ்ய‌மான‌து... அந்த‌ ஒரு திருப்தியைத்தான் கொடுத்திருக்கிறார் டேவிட் ஃபின்ச‌ர்....

நான் ர‌சித்துப் பார்த்தேன்.... வீகெண்ட் மூவியென்று வீட்டோடெல்லாம் கிள‌ம்பிவிட‌ வேண்டாம்... அப்புற‌ம் என்னைத் திட்ட‌க்கூடாது.... டிவிடியில் ச‌ப் டைட்டிலோடு ரிலாக்ஸ்டாக‌ப் பார்ப்ப‌த‌ற்கு ஏற்ற‌ ப‌ட‌ம்... திரைக்க‌தைப் பிரிய‌ர்க‌ள் த‌வ‌ற‌விட்டுவிடாதீர்க‌ள் தியேட்ட‌ரில் உங்க‌ளுக்கான‌ சீட்க‌ள் ம‌ட்டுமே நிறைகின்றன!

"Social Network" -  The Facebook Movie... இது க‌தைய‌ல்ல‌ நிஜ‌ம்!!  :-)


டெயில்பீஸ்:

நைட் ஷோ என்ப‌தால் உட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ர் தூங்கிவிட்டார்க‌ள்... மேலும் ப‌ட‌ம் பார்த்த‌ வ‌லையுல‌க‌ம் சாராத‌ என் ந‌ட்புவ‌ட்ட‌ம் மொத்த‌க்க‌தையையும் எழுத‌ச் சொல்லி வ‌ற்புறுத்திய‌த‌ற்கிண‌ங்கி மூச்சுத் திண‌ர‌த் திண‌ர‌ முழுக்க‌தையையும் இங்கு எழுதியிருக்கிறேன்.... த‌ப்புதான்... ம‌ன்னிச்சிக்கோங்க‌!!

அன்புட‌ன்,
பிர‌பு எம்

Tuesday, August 10, 2010

இன்செப்ஷன் (INCEPTION - 2010)

மனம்.....மனித உடலின் மந்திரப்புலண்!!

அண்டத்தில் புவி எவரின் படைப்போ?? ஆனால் புவியில் உலகம் மனிதப்படைப்பே..!!
மனிதனின் படைப்புகளுக்குப் பூமி ஒரு மேடை.... ஆனால் களம்?? அது உள்ளிருக்கும் மனம்தானே!! :)

மனமென்னும் இந்த மாயக்களத்தில் ஓர் உலகத்தையே கற்பனையால் கட்டுமானம் செய்யும் வல்லமையை நாமறிவோம்.... நம்முடைய திறமைகளும் ரசனைகளும் முழுச்செழுமையுடன் ஈடுபடும் இந்த நம்முடைய கனவுலகை மற்றவர்களுடன் பகிர்வது சாத்தியம் என்கிற ரீதியில் கதை துவங்கும்போதே திரையின் மையத்தில் கண்கள் குவிந்துவிடுகின்றன..... மூளையென்னும் வெறும் ஒன்றரைக் கிலோ தசை முடிச்சில் இருக்கும் மைக்ரோ அறைகளுக்குள் ஒளிந்திருக்கும் மெகா மகா சிந்தனைவெளியில் ஒரு நேவிகேஷன்தான், உலகெங்கும் விமர்சகர்கள் ஃபைவ் ஸ்டார்களை வாரி வழங்கியிருக்கும் இந்த இன்செப்ஷன்!!

"என்னிடம் ஒரு ரகசியம் இருக்கு... அதை என் மூளைக்குள் ஒரு ரூமுக்குள் போட்டு பூட்டிவிட்டேன்... செத்தாலும் வாய் திறந்து சொல்லமாட்டேன்... " என்று நீங்கள் சொன்னால் உங்கள் மனதுக்குள் நுழைந்து, உங்களைக் கனவுகளுக்குள் சிறைவைத்து அந்த ரகசியத்தைத் திருடிச்செல்லும் ஒரு வித்தை சொல்லியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலான்!!

"இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்" என்று "பாய்ஸி"ல் செந்தில் சொல்லுவாரே... அதே விஷயம்தான்... பலகோடி மதிப்புள்ள ஓர் இன்ஃபர்மேஷன் ஒருத்தன் மண்டைக்குள்ள மாட்டிக்குது, அதை அவன் மண்டைக்குள்ளயே புகுந்து திருடுவோம்ல! என்று ஹாலிவுட் ஆக்ஷனில் மேக்கிங்கில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டியிருக்கிறார்கள்...
டைட்டானிக்கின் இதயத்திருடன் லியார்னாடோ டிகாப்ரியோதான் இங்கு மனித மூளையின் அறைகளுக்குக் கள்ளச்சாவி வைத்திருக்கும் ஓர் அழகுத் திருடன்!! சேர்ந்து தூங்கும் (தனித்தனியாகத்தான்!!) நான்கு பேர் கனவுகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குட்டி மெக்கானிஸம்தான் கான்செப்ட்!!....

"செடேஷன்" எடுத்துக்கொண்டு கைகளை ஒரு வொயரால் இணைத்துக்கொண்டு சின்ன ஒரு சிஸ்டத்தின் துணையுடன் ஒரு டீமாக சேர்ந்து உறங்கி ஒரே கனவைப் பகிரும் சுவாரஸ்ய செடஅப்!! கனவுக்குக் களத்தை ஒருவர் உருவாக்குகிறார்... அது நாம் காணாத நிலமாக இருத்தல் நலம்... நிஜ வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத காடோ, மலையோ அல்லது ஏதோ ஒரு கனவு தேசத்தின் பிஸியான ரோடாகவோ இருக்கலாம்.... ஒரு கட்டத்தில் அந்த நிலப்பரப்பு தொடர்பின்றி முடிந்துவிடவேண்டும்... இப்படி ஒரு டிஸைனை உருவகம் செய்துகொண்டுவிட்டபின் உங்களூக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர் சப்கான்ஷியஸில் கனவெளியில் மிதந்துகொண்டிருப்பார் நீங்கள் உலவும் உங்கள் கனவுப் பிரதேசத்துக்கு அழைப்பை எதிர்பார்த்து....!! இப்படி நிஜத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் டீம் கனவில் நீங்கள் கட்டிவைத்திருக்கும் தேசத்தில் உயிரோடு வந்து உங்களுடன் கைகோர்க்கும்... இதில் யாருடைய மூளையில் இன்ஃபர்மேஷனை லவட்டவேண்டுமோ அவரையும் தந்திரமாகத் தூங்கவைத்துவிட்டு இந்த சிஸ்டத்தில் இணைத்துவிட்டால் அவரும் உங்கள் கனவுப் பிரதேசத்தில் உங்களோடு இருப்பார் சப்கான்ஷியஸில் உங்களிடம் திருட்டுக்கொடுக்க!!!

நிஜ வாழ்வில் ஒரு நொடிப்பொழுது கனவுலகில் மூன்று மடங்குகளுக்கும் மேலான பொழுதாக இருக்கும்.. பொதுவாகவே நம் கனவில் ஒரு நொடி நிகழ்வை ஒரு மணிநேரத்துக்கு உணர்வோமல்லவா அதே லாஜிக்தான்!! ஆக... இன்ஃபர்மேஷனை ஒளித்துவைத்திருப்பவரைக் கனவுலகத்தில் தூக்கத்துக்கும் கனவுக்கும் நடுவே(!) சிறைப்பிடித்துக் குறிப்பிட்ட ரகசியத்தை சொல்லிவிட்டால் நிஜஉலகு செல்ல நிச்சியமாக உதவுவதாக ரொம்ப ரொம்ப நல்லவன் போல ஸ்டைலாக லியானார்டோ மிரட்டுவது சேட்டையின் உச்சமாக இருக்கும்!!

கனவில் நீங்கள் வாழும்போது அங்கிருக்கும் மனிதர்களால் நீங்கள் தாக்கப்பட்டால் அந்த வலியை நிஜத்திலும் உணர்வீர்கள் (இதுவும் நம் கனவில் உணர்வதுதானே!!)... ஒருவேளை கனவில் உங்கள் டீமில் யாரேனும் கொல்லப்பட்டு விட்டால்.. அவர்கள் நிஜத்தில் கண்விழிக்கும்ப்போது அவர்களுக்கு எதுவுமே நினைவிருக்காது என்பதுதான் ரிஸ்க்!! :)

இந்த ஒரு செட்டப்பில், ஒரு மிகப்பெரிய மோனோபாலியாக உருவெடுக்கப்போகும் ஒரு பிஸினஸ் சாம்ராஜ்யத்தின் தலைவரின் மகனின் மனதுக்குள் நுழைந்து ரகசியத்தைத் திருட, அவர் போகும் ஃபிளைட்டில் பிஸினஸ் க்ளாஸில் இந்தத் திருட்டுட் டீமும் புகுந்து செடேஷன் மூலம் ஒரு பிரம்மாண்டக் கனவுலகில் அவரை இணைப்பார்கள்.... அந்தக் கனவுலகைப் புத்திசாலித்தனமாக உருவாக்கியிருப்பது கதாநாயகி எல்லின் பேஜ்.... கனவுலகில் ஒரு காருக்குள் மீண்டும் தூங்கிக் கனவின் அடுத்த அடுக்குக்கு நகரும் டீம்... மீண்டும் அங்கும் தூங்கி அடுத்தக் கனவில் ஒரு பனிமலையில் சங்கமிக்க க்ளைமாக்ஸ் அதகளம் திரையில் அத்துமீறி அரங்கேறும்...!! தூக்கத்தில் கனவு.. கனவில் தூக்கம்.. இப்படி நான்கு அடுக்குகள்!!!!... தூங்கும் உடல்களும் விழித்திருக்கும் கனவுருகளும் சேர்ந்து பங்குகொண்டிருக்கும் அசரடிக்கும் க்ளைமாக்ஸில்!!!

திரையில் த‌வ‌ற‌விட்ட‌வ‌ர்க‌ள் அடுத்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் க‌ண்டிப்பாக‌ப் பாருங்க‌ள் I do recommend :) .........(ரொம்ப‌நாள் க‌ழித்து ஒரு ப‌ட‌த்தை ரெக‌மெண்ட் செய்யும‌ள‌வு துணிந்திருக்கிறேன் பார்த்த‌வ‌ர்க‌ள் யாரும் இதுவ‌ரை திட்ட‌வில்லை!!)

சில‌ திய‌ரிக‌ளின் அடிப்ப‌டையில் அமைந்த‌ திரைக்க‌தைக‌ளை குழ‌ப்ப‌த்தின் உச்ச‌ம்தொட்டு ஃபாலோசெய்த‌ வ‌லிக‌ள் நினைவைவிட்டு அக‌லாதிருக்க, இங்கு க‌ற்ப‌னையில் ஒரு திய‌ரியையே உருவாக்கிப் புரிய‌வைத்து அந்த‌ப் புரித‌லைத் தொட்டே க‌தைக்குள் க‌தையாக‌ விரியும் க‌ஷ்ட‌மான‌ திரைக்க‌தையை இத்த‌னைத் தெளிவாக கையாண்டிருப்ப‌து ஆச்சர்ய‌த்தின் உச்ச‌ம்.....

மேக்கிங்?? சொல்ல‌வா வேண்டும்... படத்தை இயக்கியிருப்பது "டார்க் நைட்" இய‌க்குன‌ர் கிறிஸ்டோப‌ர் நோல‌ன், சும்மா மிர‌ட்டியிருக்கிறார் ம‌னித‌ர்... ஒரு காட்சியில் இருபுற‌மும் பிர‌ம்மாண்ட‌மான‌ க‌ண்ணாடிக‌ளுக்கு ந‌டுவே லியோனார்டோவும் எல்லினும் நிற்பார்க‌ள் க‌ண்ணாடியில் அவர்களின் ஆயிரம் பிம்ப‌ங்க‌ள் தோன்றி நிற்க‌.... அந்த‌க் காட்சியில் கேம‌ராவை எங்கே வைத்திருந்தாரோ ஆண்ட‌வ‌னுக்குத்தான் வெளிச்ச‌ம்...
ம‌ன‌தின் அறைக‌ளுக்குள் ரகசிய கேம‌ரா பொருத்திப் புதுசா ரொம்ப‌ப் புதுசா ஒரு க‌தை சொல்லியிருக்கிறார்க‌ள்....

அறிவும் ம‌ன‌மும் ஆளுக்குப்பாதியாக‌ ஆக்கிர‌மித்திருக்கும் மூளைவெளியில் ஒரு ஜாலித் திருட்டு....
இன்செப்ஷ‌ன் ஓர் அனுப‌வ‌ம்....!!


அன்புட‌ன்
பிர‌பு எம்

Wednesday, September 02, 2009

The Shawshank Redemption (1994)


The Shawshank Redemption

படம் வெளிவந்த ஆண்டு: 1994
இயக்கம்: Frank Darabont
க‌தை: Stephen King
ந‌டிப்பு: Tim Robbins, Morgan Freeman

இதோ இந்த நொடி, பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கிறது.... இன்றும் இரவும் பகலும் ஏற்பட்டதால் இதை நான் நம்புகிறேன்.... ஜன்னலுக்கு வெளியே இருக்கும் பெயர் தெரியாத பெரிய மரம் ஒன்று இன்றும் ஓர் அங்குலமாவது வளர்ந்திருக்கும்... பாத்ரூமில் வாழும் சிலந்தி இன்றும் தன் எச்சிலால் தனது கூட்டின் கட்டுமானத்தில் மேலும் ஒரு வரிசைப் பின்னியிருக்கும்.... சுற்றுவது தன் தொழில் என்று பூமிக்கும், வளர்வது தன் தொழில் என்று மரத்துக்கும், உறைவிடம் அமைப்பது தன் தொழில் என்று சிலந்திக்கும் தெளிவாகத் தெரியும்... சுற்றி என்ன நடந்தாலும்... எத்தனைத் தடங்கல்கள் வந்தாலும் தன் தொழிலை அவை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.... தங்கள் இலக்குகளை மறந்திடப் போவதில்லை....!! சுற்றிய பாதையையே மீண்டும் மீண்டும் பைத்தியக்காரத்தனமாகச் சுற்றிவரும் பூமிப் பந்தின் உருளைப் பயணத்துக்கு என்ன இலக்கு இருக்கப் போகிறது....?? நிச்சியம் ஒரு பிரம்மாண்ட இலக்கு இருக்கக்கூடும்.... அது சுற்றுகின்ற பூமிக்குத்தான் தெரியும்..... இலக்கு ஒன்று இன்றி எந்தவொரு பயணமோ அல்லது அசைவோ கூட சாத்தியமல்ல....!! இலக்கை அடைந்து வெற்றிகொண்டபின் செயல்களுக்குக் காரணங்கள் கிடைக்கலாம் பார்வையாளனுக்கு!!

"இலக்கு" எனும் முக்கியத்துவம் வாய்ந்த‌ வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை அறுதியிடும் இந்தப் படம் ஒரு வெற்றிப்படம் அல்ல.... தியேட்டரில் அரங்கு நிறைந்து ஓடாத இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் அரங்கிலிருந்த அனைவரும் எழுந்துநின்று ஆர்ப்பரித்திருக்க வாய்ப்பில்லை.... ஆனால் படம் பார்த்த அனைவருக்குமே அந்த உச்சக்காட்சியில் உடலில் இருக்கும் ஒவ்வொரு மயிரும் எழுந்துநின்று புல்லரித்துதான் அடங்கியிருக்கும்!!

ஷாஷாங்க் சிறைச்சாலையில் சுமார் இருபத்தியிரண்டு ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஸ்மக்ளர், "ரெட்" என்று படத்தில் அழைக்கப்படும் மார்கன் ஃப்ரீமேனுக்கு "பரோலில்" வெளிவர அனுமதி தொடர்ந்து மறுக்கப் படுகிறது.... அதே வேளையில் (கள்ளக்)காத‌ல‌னுட‌ன் உல்லாச‌மாக‌ இருக்கும் ம‌னைவியையும் அவள் காதலனையும் போதையில் சுட்டுக்கொன்ற‌தாக‌ கௌர‌வ‌மான‌ "பேங்க‌ர்" (Banker) டிம் ராபின்ஸ் அதே சிறைச்சாலையில் இர‌ண்டு ஆயுள்த‌ண்ட‌னைக‌ளைத் தொட‌ர்ச்சியாக‌ அனுப‌விக்க‌ ச‌ட்ட‌த்தால் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டு குற்ற‌வாளிக‌ளுட‌ன் ஷாஷாங்க் சிறைச்சாலைக்குள் அடியெடுத்து வைக்கிறார்.....

இந்த‌ ஆர‌ம்ப‌க்காட்சிக‌ளிலேயே....ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்த‌ல‌ங்களான "சிறைச்சாலைகள்" எல்லாம் யாரோ குற்ற‌வாளிக‌ளுக்கு ம‌ட்டும்தான், என்று "ந‌ல்ல‌வ‌ர்"க‌ளாக‌ ஒதுங்கிக்கொள்ளும் நமக்கு, நம்மைப் போலவே ஒரு சாதாரணமான, கவுரவமான மனிதன்(டிம் ராபின்ஸ்) உணர்ச்சிவேகத்தில் செய்துவிட்ட குற்றத்துக்காக‌ அந்த‌ சாத்தான்க‌ளின் தேச‌த்துக்குள் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌ குடிம‌க‌னாய் ஒரு கைதி வேடம் தரிக்கும்போது, அந்தக் காட்சிக‌ளின் ரிய‌லிசம்.... சிறை ம‌ற்றும் வாழ்வின் அடிப்ப‌டை ச‌ட்ட‌ங்க‌ளை எச்ச‌ரிக்கை உண‌ர்வுட‌ன் ஒருமுறை நினைத்துப் பார்க்க‌ வைக்கிறது நம்மையும் ஒரு குற்றவாளியாய், அந்த வலியுடன்..!

மனிதக் கனவுகள் எல்லாம் நீர்த்துப்போகும் ஜெயில் ஒன்றில் சுமார் முப்ப‌தாண்டுகால‌ த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன் தன் வாழ்வின் எதிர்காலத்தைக் க‌ன‌வு காண்கிறான்...!!! அதுவும்... மெக்ஸிகோவின் எழில்வாய்ந்த‌ ப‌சிஃபிக் பெருங்க‌ட‌லோர‌ம் சென்று செழிப்பாய் இயற்கையோடு இணைந்து ம‌னித‌ர்க‌ள் அண்டாத ஓர் அழ‌கு வாழ்வு வாழ்வ‌து, என்று ஒரு கலர் கனவு....!!

"இல‌க்கு" மற்றும் "க‌ன‌வு" .... அடிக்க‌டி ஒன்றாக‌ ந‌ம்ப‌ப்ப‌டும் இந்த‌ இருவேறு வார்த்தைக‌ளின் அர்த்தரீதியிலான வித்தியாச‌ங்க‌ளை நான் விரும்பிப் படித்த‌ ஒரு ம‌ன‌வ‌ள‌ நூலில் பின்வருமாறு ப‌டித்திருக்கிறேன்.....


"இல‌க்கு" என்பது...... ச‌ரியான‌ திட்ட‌மிடுதல், அறிவாற்றல், மற்றும் உழைப்பின் ப‌ல‌னாய் ஒருவ‌ன் நியாய‌மாய்த் தன் வாழ்நாளில் அடைய‌க்கூடியதாய்க் கிரகிக்கும் தூர‌ம்..

"க‌ன‌வு"... தொடுவான‌ங்க‌ளையும் தாண்ட‌க்கூடிய‌... லாஜிக் தேவைப்ப‌டாத‌... காரிய‌மாற்றிக் காட்ட‌ வேண்டாத‌ சௌக‌ரிய‌ம்...!!! கனவுலகிலேயே வெற்றிகளையும் களிப்புகளையும் ஏன் சாதனைகளைக் கூட‌ அனுபவிப்பதும் சாத்தியம்!!

இங்கு இந்த சிறைக்கைதி தன் "கடலோற‌ ச‌ந்தோஷ வாழ்வு" என்னும் க‌னவையே ஓர் இல‌க்காக, அதாவ‌து நியாய‌மாக‌த் த‌ன் திட்ட‌மிட‌லாலும், அறிவாலும், கடின‌ உழைப்பாலும் அடைந்துவிட‌க் கூடிய‌ ல‌ட்சிய‌மாக‌க் கொண்டு யாரும் க‌ன‌விலும் நினைத்துப்பார்க்க‌த் துணியாத‌தை... விடாம‌ல் முய‌ன்று நிஜ‌த்தில் சாதித்துக்காட்டும் அதிசிய‌ம்தான் ப‌ட‌ம்!!!

சிறைவாழ்வின் ஆர‌ம்ப‌ இன்ன‌ல்க‌ள்.... ஜெயில் சிநேக‌ம்.... ஜெயிலுக்குள் இருந்துகொண்டே வெளிஉல‌கத் தொட‌ர்பால் உள்ளே "வியாபார‌ம்" ந‌ட‌த்தும் சுவார‌ஸ்ய‌ம்..... ஜெயில‌ர், வார்டன்க‌ளின் காட்டுவாசி ம‌னோபாவ‌ம்..... என்று உருளும் ப‌ட‌த்தில்....

சிறைக்குள்ளேயே, கைதிகள் கேட்கும் "அதிசியப் பொருள்"களை சிறைச்சுவர்களையும் தாண்டிய தன் செல்வாக்கின் (!) மூலம் வாங்கிக் கொடுத்து அமோக‌மாக‌ வியாபார‌ம் ந‌ட‌த்திவ‌ரும் மார்க‌ன்ஃபரீமேனிட‌ம் "Rock Hammer" என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஊசிபோன்ற கூரான‌ ஒரு சின்ன‌ உளி வேண்டுமென‌ உள்ளே வந்து சில நாட்களிலேயே கேட்டுவாங்குவார் டிம் ராபின்ஸ்..... க‌ற்க‌ளில் சின்ன‌ச் சின்ன‌ உருவ‌ங்க‌ள் செதுக்குவது தன் ஹாபி என்று சொல்லி....!! அடுத்த சில காட்சிகளில் சிறு சிறு கல்பொம்மைகள் அவ‌ர் செல்லின் ஜ‌ன்ன‌ல் க‌ம்பியிடுக்குகளில் அடுக்கப்பட்டிருக்கும்!!!!

ஒருக‌ட்ட‌த்தில், த‌ன் வ‌ருடாந்திர‌ வ‌ருமான‌ வ‌ரியைத் தாக்க‌ல் செய்ய‌க் குழ‌ம்பும் ஜெயில‌ருக்குத் த‌ன் அபார‌மான‌ Banking திற‌மையால் அந்த‌ வ‌ருட‌த்துக்கு "Tax Free" ப‌ண்ணித்த‌ருகிறார் டிம் ராபின்ஸ்.... அந்த‌ப் புக‌ழ் ஜெயிலெங்கும் ப‌ர‌வ‌.... ஜெயிலின் நூல‌க‌த்தில் லைப்ர‌ரிய‌ன் வேலை த‌ர‌ப்ப‌ட்டு அங்கேயிருந்த‌வாறு போலீஸ்கார‌ர்க‌ளுக்கு வ‌ருமான‌ வ‌ரி ஆலோச‌கராக‌க் கிள‌ப்புகிறார் டிம்.... தனி அறையும், ஜெயிலில் தன் அறைச்சுவரில் மார்லின் ம‌ன்றோ புகைப்ப‌ட‌ம் ஒட்டிக்கொள்ளும் ச‌லுகையும் இல‌வ‌ச‌ இணைப்பாகக் கிடைக்கிற‌து!!

கொம்பு முளைத்த‌ சாத்தானாய் ஜெயிலின் வார்ட‌ன்.... கைதிக‌ளின் உழைப்பைத் த‌ன் சொந்த‌ லாப‌த்துக்கான‌ ஒரு க‌ட்டுமான‌ வேலைக்குப் ப‌ய‌ன்ப‌டுத்தி அந்த‌ப் ப‌ண‌த்தை "வெள்ளைப் ப‌ண‌மாக‌" வெளியே சேர்க்க (Money Laundering) அடிமை டிம் ராபின்ஸின் மாஸ்டர் ப்ளானை உப‌யோகிக்க முன்வ‌ருகிறான்.... டிம் ராபின்ஸின் திட்ட‌ப்ப‌டி Randall Stephens எனும் இல்லாத ஒரு ம‌னிதன் பேரில் வெளுப்பான‌ ப‌ண‌ம் சேமிக்க‌ப் ப‌டுகிற‌து.....

டிம் ராபின்ஸின் தொட‌ர் முய‌ற்சியால் ஒரு க‌ட்ட‌த்தில் நாட்டின் சிறந்த‌ ஜெயில் நூல‌க‌மாக‌ டிம் ராபின்ஸால் ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட்ட‌ அந்த‌ நூல‌க‌ம் தேர்வாகிற‌து!!

கிட்ட‌த்த‌ட்ட‌ இருப‌து வ‌ருட‌ங்க‌ள் ஓடிப்போகிற‌து.....இப்போது டிம்மின் அறையில் ம‌ர்லினுக்குப் ப‌தில் அப்போதைய லேட்டஸ்ட் கவர்ச்சிக்கன்னி ரேச்சுல் வெல்க் கின் க‌வ‌ர்ச்சிப்ப‌ட‌ம் ஒட்டப்ப‌ட்டுள்ள‌து!!! அடிக்க‌டி ந‌ண்ப‌ன் மார்க‌ன் ஃப்ரீமேனிட‌ம் த‌ன்னுடைய‌ ப‌சிபிக் க‌ட‌லோர‌க் க‌ன‌வு வாழ்க்கையை ர‌சித்துக் கதைக்கிறார் டிம் ராபின்ஸ்..... Money Laundering வெற்றிக‌ர‌மாய்த் தொடர்ந்துகொண்டிருக்கத்.... திடீர் திருப்ப‌மாக‌... இன்னொரு கைதி ஒருவன் மூல‌ம் உண்மையில் த‌ன் ம‌னைவியை சுட்டுக்கொன்ற‌து டிம் இல்லை என்று போதையில் தான் கொன்ற‌தாக‌ ந‌ம்பும் டிம்முக்கு ஆதார‌ப் பூர்வ‌மாக‌த் தெரியவருகிறது...!!

வார்ட‌னிட‌ம் கெஞ்சுகிறார் தன் விடுத‌லைக்காக‌.... ஆனால் த‌வ‌றான வழியில், இர‌ட்டை ஆயுள் கைதி டிம்மின் உட‌ந்தையுட‌ன் பெரும்ப‌ண‌ம் பார்த்திருக்கும் வார்டனோ அவ்வ‌ள‌வு சுல‌ப‌மாக‌ மாட்டிக்கொள்ள‌ விரும்பாம‌ல் டிம்மை ஓர் இருட்ட‌றையில் அடைத்து மேலும் த‌ன‌க்கு ப‌ண‌ம் ஈட்ட‌ உத‌வுமாறு துன்புருத்துகிறான்... அதும‌ட்டுமின்றி.. டிம்முக்கு ஆத‌ர‌வாக‌ சாட்சி சொல்ல‌ முன்வ‌ந்த‌ அந்த‌ இள‌ம்கைதியை வார்ட‌ன் மற்றும் ஜெயில‌ர் இணைந்து கொன்றும் விடுகிறார்க‌ள்....

முடிந்துபோன‌ அத்தியாய‌மாய் மீண்டும் வார்டனுக்கு ஆதரவாய்த் த‌ன் க‌ருப்புப் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்ட‌ச் ச‌ம்ம‌திக்கும் டிம் ராபின்ஸ் திடீரென்று ஒருநாள் காலையில் அந்த‌ச் சிறையில் இருந்து காணாம‌ல் போகிறார்!!!

அவ‌ரின் அறையில் இர‌வு அடைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர் எப்ப‌டி மாய‌மாக‌ ம‌றைந்திருக்க‌க் கூடும்??? என்று பூட்டப்பட்ட அந்த செல்லுக்குள் நின்று வார்ட‌ன் குழம்பி...டிம்மின் அறையில் க‌வ‌ர்ச்சியாய் போஸ் கொடுக்கும் ரேச்சுல் வெஸ்க்கின் ப‌ட‌த்தில் ஒரு க‌ல்லை ஓங்கி எறிய, அந்தக் காகித‌ப் பட‌த்தின் பின்னே சுவ‌ர் இன்றி படத்தில் ஓட்டை விழுகிற‌து.... ப‌ட‌த்தை விலக்கிப்பார்த்தால் சுமார் முப்ப‌து மீட்டர் தூர‌த்துக்கு சுவ‌ர் குடைய‌ப் ப‌ட்டிருக்கிற‌து!!! க‌ற்க‌ளில் சிற்ப‌ம் செதுக்க‌ப் ப‌ய‌ன்ப‌டும் "உளி" கொண்டு குடைந்த‌ சுர‌ங்கப்பாதை அது!!

ஒரு குண்டூசியைவிடக் கொஞ்சமே வ‌லிமையான‌ கூர் ஆயுத‌ம் அந்த‌க் க‌ல்லுளி.. அதைவைத்து இத்த‌னை நீள‌மான‌ ஒரு சுர‌ங்க‌த்தை உருவாக்க‌க் குறைந்தது முந்நூறு ஆண்டுக‌ள் ஆகும் என்று கூறுவார் ப‌ட‌த்தின் "Story Narrotor"!!! ஆனால் டிம் ராபின்ஸ், வந்த நாள்தொட்டு, இர‌வெல்லாம் தூங்காம‌ல்..... சுமார் இருப‌து ஆண்டுகாலம் விடாம‌ல் தோண்டி அந்த சுர‌ங்க‌ப்பாதை அமைத்திருப்பார்......

அந்த‌ சுர‌ங்க‌த்தில் ஊர்ந்து ஊர்ந்தே கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு கிரிக்கெட் பிட்ச்சின் தூர‌த்திலான..... கைதிக‌ளின் ம‌ல‌ம் ம‌ற்றும் சிறுநீர் வெளியேறும் செப்டிக் டேங்க்கில் மூச்சு விட‌முடியாத‌ கொடூர‌ துர்நாற்ற‌த்தினிடையே த‌வ‌ழ்ந்து த‌வ‌ழ்ந்து வெளிஉல‌கை அடைவார் டிம்!!!

ஒரு ம‌ழையில் த‌ன்னைக் க‌ழுவிக்கொண்டு ஜெயில் வார்ட‌னின் ஊழ‌லுக்கு ஏதுவாய்த் தான் உருவாக்கி வைத்திருக்கும் நிழ‌ல் ம‌னித‌ன் Randall Stephensஆக‌ அவ‌தார‌ம் த‌ரித்து அவ‌ன்பேரில் போட‌ப்ப‌ட்டிருக்கும் ப‌ல‌ மில்லிய‌ன் டால‌ர்க‌ளைத் த‌ன‌தாக்கிக் கொண்டு மெக்ஸிகோ நாட்டின் ப‌சிஃபிக் கோஸ்ட்டை நோக்கிக் காரில் சென்றுகொண்டிருப்பார் டிம் ராபின்ஸ்........

ஊழல் வெளியாகிவிட அவமானத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தன்னையே இரையாக்கிக் கொள்கிறான் வார்டன்!!!

சிறு உளியின் கூர்முனையால் சுவ‌ற்றைச் சுர‌ண்டி மெல்ல‌ மெல்லத் தான் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ளையே சாத்திய‌மாக்கிவிட்ட‌ ஜெயில் ந‌ண்ப‌ன் டிம் ராபின்ஸிட‌மிருந்து ஒரு ம‌ட‌ல் வ‌ருகிற‌து மார்க‌ன் ஃப்ரீமேனுக்கு!!! த‌ன் க‌ன‌வுப் பிர‌தேச‌த்தை ந‌ண்ப‌ன் அடைந்துவிட்டான் என்று அறிந்துகொள்ளும் ஃப்ரீமேனுக்கு நாற்ப‌து ஆண்டுகால‌ம் சிறைக்குப் பிற‌கு தொட‌ர்ந்து ம‌றுக்க‌ப்ப‌டும் "ப‌ரோல்" கிடைக்க‌ மெக்ஸிகோவுக்குப் ப‌ய‌ண‌மாகிறார் ஜெயில் சிநேக‌ம் தேடி.....

ப‌சிஃபிக் க‌ட‌ற்க‌ரையில் இரு ந‌ண்ப‌ர்க‌ளும் க‌ட்டித் த‌ழுவிக்கொள்ள‌ ம‌யிர்க்கூச்சரிய‌ முடிகிற‌து The Shawshank Redemption!!!

இன்று ப்ளாக்ஸ்பாட்டில் எழுத்துப் ப‌யிலும் என்போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ன‌தில் இன்னும் ப‌த்து அல்ல‌து இருப‌து முப்ப‌து ஆண்டுகளுக்கு மனதுக்குள் "மெகா கனவுகள்" வைத்திருக்கலாம்.... "கனவை" அதன் வாய்ப்புகளுடனும் சாத்தியங்களுடனும் தெளிவு ப‌டுத்திக்கொண்டால் இல‌க்கும் க‌ன‌வும் ச‌ங்க‌மிக்கும் வாழ்விய‌ல் அதிசிய‌ம் சாத்தியமாகும் என்று சாட்சி ப‌க‌ரும் பட‌ம் இது!!

ஏற்கெனவே எழுதியிருப்பது போல் வெறும் மேல்தோலின் மயிர்க்கால்களுடன் சாகசம் புரியும் வெகுஜனப் படங்களைவிட, இதைப்போல் அம் மயிர்க்கால்களினூடே உள்ளிறங்கி செல்களில் செய்தி பதித்திடும் படங்கள்தான் என்னை மேலும் மேலும் கவர்கிறது.... அந்த வகையில் மறக்க முடியாத திரைப்படம் எனக்கு!!



Sunday, June 28, 2009

டெர்மினேட்டர் (The Terminator Series)


"I am back" இயந்திரக் குரலில் அர்னால்ட் ஆண்மையுடன் கர்ஜித்த இந்த வசனத்தை மறக்க முடியுமா?!!

But he's not going to be back anymore!! :-))

அதான் தலைவர் அரசியலில் போய் செட்டில் ஆகிவிட்டாரே! இருக்கட்டும்.... அவர் வாழட்டும் வளமுடன்...!

அர்னால்ட் இல்லாததால் டெர்மினேட்டரின் கதைத்தொடர்ச்சிக்கு அதிகம் பாதிப்பில்லைதான், எனினும் படத்தின் மார்க்கெட்டிங்கிற்கு "அர்னால்ட் ஸ்வார்சினேக்கர்" என்ற பெயரும் ,பேராண்மையுடன் மிரட்டும் அவரது ஸ்டில்லும் இல்லாமல் போனது பேரிழப்பே!

அர்னால்டுக்குப் பதிலாக சாம் வொர்த்திங்டன், அதிக சக்திவாய்ந்த ஒரு மனித இதயம் பொருந்திய இயந்திரமாகப் பதவியேற்று, (வழக்கத்துக்கு சற்று மாறான) ஒரு டெர்மினேட்டர் படம் வெளிவந்து ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டது!

டெர்மினேட்டரின் கதைக்கு ஒரு சிறப்பம்சம் யாதெனில் முன்கதையோ, பின்கதையோ ஏதுமின்றி வெளிவந்துள்ள நான்கு பாகங்களில் எந்த ஒன்றை நாம் பார்த்தாலும் அந்த இரண்டரை மணி நேர சாகச மிரட்டல்களில் அதிக குழப்பமின்றிப் பங்குகொண்டு திளைக்க முடியும்! நான்கு பாகங்களுமே ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள்தான் என்றாலும் நான்கு படங்களின் திரைக்கதை அமைப்புமே, அந்தந்த பாகங்களில் முக்கியக் கதாபாத்திரங்களின் குறிக்கோள் என்ன, அதனை ஈடேற்றுவதற்கான‌ சவால்கள் என்ன என்று மிகத்தெளிவாக வரையறுத்துக் கூறுவதால், குழப்பமேயின்றி ஒரு ஹீரோ=வில்லன் சேஸிங் கதையாக, அதன் தனித்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான ஆக்ஷன் சாராம்சங்களில் மெய்மறந்து நாம் எந்தவொரு பாகத்தைப் பார்க்கையிலும் ரசிகனின் இரண்டரை மணிநேர த்ரில்லிற்குப் பஞ்சம் இருப்பதில்லை!

பாகம் 1, 2, 3.... என்று கதை சொல்லும் sequel திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்... அந்த வகையில் sequel களுக்கு ஏற்ற ஆழமும், போகிற போக்கில் சுவாரஸ்யம் குன்றிவிடாத‌ நீளமும் கச்சிதமாகக் கைவந்துள்ள‌ டெர்மினேட்டரின் கதையமைப்பு என்னை மிகவும் ஈர்த்த ஒன்று!

திரைப்படம் மற்றும் காட்சிகளின் பிரம்மாண்டத்தைத் தாண்டி டெர்மினேட்டரில் அடிநாதமாய் அமிழ்ந்து கிடக்கும் படத்தின் "கதைக் கரு" பிரம்மாண்ட‌மானது.... அந்த பிரம்மாண்டமான கற்பனையின் விஸ்தீரனத்தைதான் இங்கு பதிவிட விழைகிறேன்.... (கதை மற்றும் திரைக்கதைகளின் மீதுள்ள ஆர்வமிகுதியால்!)

T 1 = The Terminator (1984)

1984 ல் ஜான் கான்னர் எனும் ஒரு குழந்தை சாரா கான்னர் எனும் பெண்ணிடம் கருத்தரிக்கிறது கருவிலேயே அதை அழிக்க T- 600 எனும் மனித உருவிலான ஓர் இயந்திரம் ஏவப் படுகிறது எதிர்காலத்திலிருந்து!!

பிறக்கப் போகும் குழந்தையான ஜான் கான்னர் பின்னாட்களில் இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடக்கப் போகும் மாபெரும் போரில் மனிதகுலத்துக்குத் தலைமைதாங்கிப் போரை வழிநடத்தப் போகிறவன் என்பதால்தான் இயந்திரங்களின் இந்த ஏற்பாடு! ஜான் கான்னரைப் பிறக்குமுன்பே அழிக்க முதல் பாகத்தில், எதிர்காலத்திலிருந்து வருபவர் சாட்சாத் நம்ம‌ அர்னால்ட்தான்! அதனை முறியடித்து சாராவைக் காத்து ஜானைப் பிறக்க வைக்க அதே எதிர்காலத்திலிருந்து ஒரு "மனிதன்" ஏவப்படுகிறான் அவன் பெயர் கேய்ல் ரீஸ்.... ( திரையில் மைக்கேல் பெய்ன்)

முதல் பாகம் நடக்கும் 1984ஆம் வருடம், இயந்திரங்களை ஒன்றுகூட்டி மனிதர்களுக்கு எதிராக ஆட்டுவிக்கும் ஸ்கைநெட் தன் இயக்கத்தைத் தொடங்கியிருக்கவேயில்லை!! எதிர்கால உலகிலிருந்துதான் ஸ்கைநெட், ஜான் கான்னர்ஸை அழிக்க அர்னால்டை அனுப்பிவைத்திருக்கிறது...... கேய்ல் ரீஸை அனுப்பி வைப்பது "ரெஸிஸ்டன்ஸ்" என்று சொல்லப் படும் இயந்திரங்களுக்கெதிராக போர்செய்யும் மனிதவீரர்களின் அமைப்பு!! அதன் தலைவன் தான் பிறக்கப் போகும் ஜான் கான்னர்ஸ்!!! சாரா கான்னர் என்று பெயர் வைத்திருக்கும் அத்தனை பேரையும் "ஃபோன் புக்" மூலம் கண்டறிந்து வரிசையாகக் கொன்றுவரும் "ஃபோன் புக் கில்லராக" அர்னால்ட் மிரட்டிய முதல் பாகம் உலகம் முழுதும் வசூலை அள்ளியெடுத்தது...... இயந்திரம் அர்னால்டை முறியடித்து ஜான் கான்னர்ஸ் பூமியில் பிறக்கிறான்.....!!!! (தி டெர்மினேட்டர் வெளிவந்த ஆண்டு 1984!!)

T 2 -The Judgement Day (1991)

கொலைசெய்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட "கில்லர் மெஷின்" அர்னால்டைக் கைப்பற்றி "ரெஸிஸ்டன்ஸ்" அதன் ஆதார புரோக்ராமையே மாற்றியமைத்துவிட, பத்து வயது நிரம்பிவிட்ட சிறுவனான ஜான்கான்னர்ஸை இப்பொழுது ஸ்கைநெட்டிடமிருந்து காப்பாற்றும் இயந்திரமாக வருகிறார் அர்னால்ட்!!! சக்கைபோடு போட்ட இரண்டாம் பாகமான ஜட்ஜ்மெண்ட் டே தான் டெர்மினேட்டர் சீரிசிலேயே (Series) தி பெஸ்ட் என்று சொல்லலாம்!!

ஜட்ஜ்மெண்ட் டேயில் கதை நிகழும் வருடம் 1995 (படம் வெளிவந்த ஆண்டு 1991!) பின்னாளில் ஸ்கைநெட்டால் அரங்கேற்றப் படப் போகும் மனிதகுல அழிவு நாள்தான் "ஜட்ஜ்மெண்ட் டே!" பத்துவயது சிறுவனான ஜானைக் கொல்ல ஸ்கை நெட் அனுப்பும் கை தேர்ந்த நவீன இயந்திரம் டி 1000 (திரையில் ராபர்ட் பாட்ரிக்) இம்முறை இளம் ஜானைக் காப்பாற்ற எதிர்காலத்திலிருந்து "ரெஸிஸ்டன்ஸ்" அனுப்பிவைப்பது ஜானைக் காப்பாற்ற மாற்றி புரோக்ராம் செய்யப்பட்ட அர்னால்டை!!! இந்த படத்தின் சிறப்பம்சம் வில்லனாக வரும் T- 1000 இயந்திரம்தான்!! ஒரு திரவ உலோகத் தன்மைகொண்ட இந்த இயந்திரம் மனித உருவெடுத்து வந்து அர்னால்டைப் படுத்தியெடுக்கும் அதகளம் அதி சுறுசுறுப்பானது!! முதல் பாகத்தில் கூறியிருந்த ஜட்ஜ்மென்ட் டே 1997ல் அரங்கேறுவது தடுத்து நிறுத்தப் படுகிறது..... சாரா கான்னர் தன் மகன் ஜானை இளமையிலிருந்தே பிற்காலத்தில் இயந்திரங்களிடையான போரில் மனிதகுலத் தலைவனுக்குரிய தகுதிகளுடன் வளர்த்துவருவார்...... அர்னால்டுடன் இணைந்து சாராவும் சிறுவன் ஜானும் போராடுவது சுவாரஸ்யம் நிறைந்த திரைத்திருவிழா!!

T 3 - The Rise of Machines (2003)

1997ல் தடுத்து நிறுத்தப் பட்ட ஜட்ஜ்மென்ட் டே நிறைவேறுவது 2004ல்!!! இதுதான் மூன்றாம் பாகமான "தி ரைஸ் ஆஃப் மெஷின்ஸ்"ன் க்ளைமாக்ஸ்!!! சாரா கான்னர் ரத்தப் புற்று நோயால் மரணித்துவிட, தன்னுடைய எதிர்கால பொறுப்புகளின் பளு அறிந்த ஜான் கான்னர் இப்போது இளைஞன்!! ஒரு ஃபோன் நம்பரோ, இ மெயிலோ, ஃபேஸ் புக் அக்கௌண்ட்டோ இல்லாத தலைமறைவு இளைஞனாக மறைந்து வாழும் ஜான் கான்னரைக் கொல்ல ஸ்கைநெட் அனுப்பி வைப்பது ஒரு சூப்பர் ஃபிகரை!! T-X என்று அழைக்கப்படும் மிகப் புதுமையான ஒரு இயந்திரமாக வரும் பெண் கிறிஸ்டினா லோக்கென்!! அவளை எதிர்க்கும் டெர்மினேட்டர் அர்னால்டோ பழமையான இயந்திரம்!! ஜான் கான்னரை இரண்டு இயந்திரங்களும் கண்டுகொண்டவுடனேயே தொடங்குகிறது ஆட்டம் (படம் ஆரம்பித்த முதல் கால்மணி நேரத்திலேயே ஆரம்பித்துவிடுவதுதான் திரைக்கதை மந்திரம்!!) ஜான் கான்னர் தன் துணைவியான கேட் (kate) டை சந்திப்பான்..... இவள்தான் உன் வருங்கால மனைவி என்று அசால்ட்டாக அர்னால்ட் சொல்வது ருசிகரமான கட்டம்....... வருங்காலத்திலிருந்து அர்னால்டை, இம்முறை ஜானைக் காப்பாற்ற அனுப்பிவைப்பதே கேட் தான் என்று அர்னால்ட் கூறுவார்..... அதுமட்டுமின்றி அப்பொழுது ஜான் கான்னர் உயிரோடு இல்லை என்பது ஷாக்!! ஒரு நவீன இயந்திரத்துடன் போராடும் பழைய இயந்திரமாக அர்னால்ட் செம அடி வாங்குவார்...... இறுதியில் ஜான் கான்னரையும் கேட்டையும் காக்கும் தன் கடமையில் அர்னால்ட் வெற்றிபெற்றாலும் உலகத்தின் அழிவை ஜானால் தடுக்க முடியாது!! இந்தப் பாகத்தில் ஜட்ஜ்மென்ட் டே நிறைவேறிவிடும்.......... அர்னால்ட் மிகவும் கஷ்டப்பட்டு அந்த அழகான வில்லியுடன் மோதுவது படுவேகத்தில் படத்தை நகர்த்திச் சென்றுவிடும் ஓர் எக்ஸ்பிரஸ் ஆக்ஷன் ட்ரீட்!!!

T 4 - The Salvation (2009)

டெர்மினேட்டர் வரிசையில் T 4 கொஞ்சம் சுமார் தான்!! அர்னால்ட் இடத்தை பூர்த்தி செய்வதன் இயலாமையைப் படம் தெளிவாக எதிரொலித்தது டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு... எனினும் திரையில் சில ஜாலங்கள் தெளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் McG!! கதை நடக்கும் ஆண்டு 2018.... இம்முறை கதை நிகழ்வதே எதிர்காலத்தில்தான்!! ஜான் கான்னர் ரெஸிஸ்டன்ஸில் ஒரு நட்சத்திரமாக இயங்கி இம்முறை ஸ்கை நெட்டுடன் ஒரு போரை அரங்கேற்றி வெற்றிபெறுகிறார்!! கதை சமகாலத்திலேயே நிகழும் ஒரு நேரடிப் போர்தான் என்றாலும் வழக்கமான டெர்மினேட்டர் கதை என்று "பிராண்ட்" பண்ணிக் காட்டுவதற்கோ என்னவோ இம்முறை ஸ்கைநெட் அழிக்கப் போகும் ஹிட்லிஸ்டில் ஜானுக்கு இரண்டாம் இடம் என்று ஒரு ட்வ்ஸ்ட் வைத்து முதலிடம் பெறுபவராக, முதல் பாகத்தில் 2030களிலிருந்து அனுப்பிவைக்கப் பட்ட, கெய்ல் ரீஸை அறிவிக்கிறார்கள்..... முதல் பாகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து வந்து ஜானின் தந்தை ஸ்தானம் எடுக்கும் கேய்ல் ரீஸை 2018ஆம் ஆண்டு காக்கத் துடிக்கிறார் ஜான் கான்னர்ஸ்!! (ரொம்பக் குழப்பம்தான்!!) மசாலா சேர்ப்பதற்காக இம்முறை இயந்திரமாக ஸ்கைநெட் தத்தெடுக்கும் சாம் வொர்த்திங்டன் தன்னை ஒரு மனிதன் என்று நம்பிக்கொண்டு ரெஸிஸ்டன்ஸ் , ஸ்கைநெட்டுடன் தொடுக்கும் போரில் ஜானுடன் இணைந்து மனிதர்களுக்காகப் போராடுகிறார்..... இறுதியில் போரில் மனிதர்கள் வெற்றிபெறுவது மட்டுமின்றி கேய்ல் ரீஸையும் ஜான் காப்பாற்றுகிறார்!!.... கடைசி சண்டையில் படுகாயம் அடையும் ஜான் கான்னர்ஸைக் காப்பாற்ற இயலாது என்று டாக்டரான மனைவி கேட் தவிக்க இயந்திர மனிதன் சாம் வொர்த்திங்டன் தன் மனித இதயத்தை ஜானுக்கு வழங்கும் செண்டிமெண்ட்டோடு முடிகிறது சால்வேஷன்........ அடுத்த பாகத்தை இயக்கப் போவதும் McG தான்... 2011ல் படப்பிடிப்பு துவங்கும் என்று இப்போதைக்கு எதிர்பார்க்கப் படுகிறது!!


இவ்வளவு பெரியதொரு பயணத்தைத் தொடர்ந்து இருபத்தைந்து வருடங்களாக கற்பனைக் குதிரைகளைத் தேரில் பூட்டி மிடுக்கு குறையாமல் இன்றும் வலம் வருவது டெர்மினேட்டரின் கிரியேட்டர்களை பிரமிப்புடன் கவனிக்க வைக்கிறதென்றால்..... அதன் வணிகம் அதையும் தாண்டி நம்மை மயக்கத்தில் ஆழ்த்துமளவு விசாலமானது!!! 80களில் யாரோ சில எழுத்தாளர்களுக்கு மற்றும் சில கிரியேட்டர்களின் மனதில் எங்கோ தோன்றிய ஒரு கற்பனை விதை நான்கு வெற்றித் திரைப்படங்களாக, இன்னும் சில தொலைக்காட்சித் தொடர்களாக (தொலைக்காட்சித் தொடரில் சாரா கான்னர் நாயகியாக வருவார்!!), ஹாட் வீடியோகேம்களாக, காமிக்ஸ்களாக பணத்தைக் கிடைக்கிற கேப்பில் எல்லாம் புகுந்து அள்ளி வருகிறது வேரூன்றி உலகெங்கும் விழுதுகள் பரப்பி!!!

கற்பனையில் இன்னொரு உலகையே படைத்து அதில் உயிர்களை உலவவிட்டு நிஜ உலகில் நட்சத்திரங்களாக, மில்லியனர்களாக‌ வெற்றி நடைபோடும் கலைஞர்களுக்கு வணக்கம்!! ஒரு கற்பனைக்கும் ஜீவனுள்ள ஒரு கதாபாத்திரப் படைப்புக்கும் எவ்வளவு வணிகமதிப்பு இருப்பதை நம் கலைஞர்களும் உணரவேண்டிய தருணமிது...... கேட்டால் அந்தளவு "பட்ஜெட்" இல்லை என்றுமட்டும்தான் சொல்வார்கள் படத்துக்கு பத்துகோடி சம்பளம் கொடுக்கும் நம் ஃபிலிம் மேக்கர்கள்!!!

- பிரபு .எம்

Tuesday, March 03, 2009

ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்


இந்திய ஆங்கிலம் பேசும் இந்தத் திரைப்படம்தான் சென்ற வருடத்தின் சிறந்த ஹாலிவுட் படம்!! 1927 லிருந்து வழங்கப்படும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுப் பட்டியலில் இறுதியில் 2008ல் ஏ ஆர் ரஹ்மான் என்ற பெயரும் நிலைத்து இடம்பிடித்து விட்டது.... ஓர் அற்புத வரலாறு நாம் வாழும் நாளில் அரங்கேறிய ஒரு திருப்தி.... "எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே!!"

"கவுன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சி இரண்டாம் பாகம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமிதாப் பச்சனை விகடன் பேட்டி கண்டது நினைவிருக்கிறது.... அதில் ஒரு கேள்வி அமிதாப்பிடம் கேட்கப்பட்டது... "இந்நிகழ்ச்சியில் கேள்விகளைத் தேர்ந்தெடுப்பவர் "யூனிவர்சிடி சேலஞ்ச்" போன்ற நிகழ்ச்சிகளைக் கொடுத்து அசத்திய சித்தார்த்தபாசு, இருப்பினும் தீயணைப்பு வண்டி என்ன நிறம்?? போன்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டு அதற்குப் பச்சை, மஞ்சள் என்று சாய்ஸும் கொடுக்கப் படுகிறதே??"

அதற்கு அமிதாப்பின் பதில்: "க்ரோர்பதி நிகழ்ச்சி ஒரு க்விஸ் ஷோ இல்லை..கேம் ஷோ!! எல்லாத் தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும்படி கேள்விகள் இதில் இருக்கும். இருக்க வேண்டும்! ஏதோ அறிவாளிகளுக்கான நிகழ்ச்சியென்று தோன்றிவிட்டால், அதன் சுவாரஸ்யமே போய்விடும். ஓரளவு பொதுவிஷயங்களில் ஆர்வமிருந்தாலே போதும் ஹாட்சீட்டில் அமரலாம், அப்படி அமர்பவர்களுக்குக் கொஞ்சம் "மசாலா" இருந்தால் க்ரோர்பதியும் ஆகலாம்.. அதுதான் ஃபார்முலா!!"

ஸ்லம்டாக் பார்த்து முடித்த கணமே மனதில் தோன்றியது அமிதாப்பின் இந்த பதில்தான்! சேரியில் பிறந்த ஜமால் போன்ற ஓர் இளைஞன் இத்தகைய ஒரு மெகா ஷோவில் அறிவுஜீவிகள் யாவரும் நெருங்கவியலாத கடைசி கட்டம் வரை வந்து வெற்றியும் பெற்றதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியுடன் படத்தைத் துவக்கி முடிவில் D) It's Written என்று முடிக்கும்போது ஒரு நிறைவை உணரமுடிகிறது அதற்கே ஒரு ஸ்பெஷல் விருது தரலாம்.....

மில்லியனராவதற்குப் பதினான்கு கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும்... அந்தப் பதினான்கு கேள்விகளுக்குப் பதில் தெரிவதற்கு?? பதினான்காயிரம் புத்தகங்கள் படித்திருந்தாலும் சரிதான் அல்லது விதிவசத்தாலோ எதனாலோ கேட்கப்படுகிற அந்த அசல் பதினான்கு கேள்விகளுக்கும் பதில்தெரிந்திருந்தாலும் சரிதானே!! வாழ்க்கைத் தன் மீது கிறுக்கிப் போட்டப் பாடங்களைத் தவிர வேறெதையுமே படித்திராத ஓர் இளம் காதலனுக்கு அந்த வாழ்க்கையே தந்த பரிசு, மில்லிய‌ன் டால‌ர் ம‌திப்புள்ள‌ சில‌ ப‌தில்க‌ளை அவ‌ன் ம‌ன‌தில் போகிற‌ போக்கில் வ‌லியுட‌ன் ப‌ச்சைக் குத்திவைத்த‌து!!
எல்லா குழ‌ந்தைக‌ளுக்குமே பிடித்த‌து த‌ண்ணீரில் முங்கி விளையாடுவ‌து... க‌ள்ள‌மின்றி க‌ப‌ட‌மின்றித் த‌ண்ணீரில் முங்கி விளையாடிக்கொண்டிருகும் வேளையில் சிறுவ‌ர்கள் ச‌லீமும் ஜ‌மாலும் நிச்சய‌மாக‌ உண‌ர்ந்திருக்க‌ மாட்டார்க‌ள் இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் அர்த்த‌மில்லாத‌ கேவ‌ல‌மான‌ ஒரு ம‌த‌ச்ச‌ண்டையில் த‌ங்க‌ள் தாய் பலியாக‌ப்போகிறாள் என்று.... பார்வையாள‌ர்க‌ளாகிய‌ நாமும்தான்!! உயிர்க்கொல்ல‌ வ‌ல்ல‌ கொடூர‌ ஆயுத‌ங்க‌ளைத் தாங்கிய‌ தாடிவைத்த‌ த‌டிய‌ர்க‌ள் பெருங்குரலெடுத்து ர‌த்த‌வெறியோடு ம‌க்க‌ளை நோக்கி ஓடிவ‌ந்தால் இந்தியாவில் 'க‌ல‌வ‌ர‌ம்' என்பார்க‌ள், என்ப‌தை முற்றிலும் அய‌ல்நாட்டு இய‌க்குன‌ர் டேனியேல் கூட‌ அறிந்துகொண்டுள்ளார்!! அவ‌ர் வாயிலாக‌ இன்று உலக‌மே அறிந்துகொண்டிருக்கும் ஆளுக்கொருவித‌மாக‌! அந்த‌ இள‌ம்தாயின் முக‌த்திலேயே அறைகிற‌து வ‌லிய‌தொரு உருட்டுக்க‌ட்டை அவ‌ளின் உயிரை அங்கேயே வாங்கிக்கொண்டு... அவ‌ள் பிஞ்சு ம‌க‌ன்க‌ளின் பூவிழிக‌ளின் வாச‌லிலேயே சுருண்டு விழுந்து உயிர்துற‌க்கிறாள் அந்த‌ப் பெண்.... தொட‌ரும் அந்த‌க் க‌ல‌வ‌ர‌த்தின் அத‌க‌ள‌த்தில் நிதான‌மிழ‌க்கும் ஒரு சாமானிய‌னின் க‌ண்க‌ளாக‌வே மாறி சுழ‌ன்ற‌டித்து ஒளிப்ப‌திவு செய்திருக்கும் ஆஸ்க‌ர் வென்ற‌ கேமரா நிலைகுத்தி நிற்ப‌து த‌ன‌து வ‌ல‌துகையில் வில்லொன்றை வைத்துக்கொண்டு திறுதிறு வென்று விழித்துக்கொண்டிருக்கும் ஒரு குட்டி "இராம‌ன்" மீது!! (இராம‌வேஷ‌ம் போட்டு அந்த‌ சிறுவ‌ன் உங்க‌ள் தெருக்க‌ளில் என்ன‌ செய்து கொண்டிருக்கிறான்?? என்று கேட்டார் த‌மிழ் தெரிந்த‌ வெளிநாட்ட‌வ‌ர் ஒருவ‌ர்... அவ‌ன் 'யாச‌க‌ம்' செய்கிறான் என்று சொல்லிவிட்டுப் படத்தைத் தொடர்ந்தேன் அவ‌ருக்கு அந்த‌ வார்த்தைக்கு நிச்சிய‌ம் அர்த்தம் தெரியாது என்று ம‌ன‌துக்குள் உறுதிப் ப‌டுத்திக்கொண்டு!!) அதுவே மில்லிய‌ன‌ர் விளையாட்டில் ஜமாலுக்கு ஒரு கேள்வியின் ப‌திலாகிற‌து..!! இவ்வாறு அநாதையாகிப் போகிற‌ ஜ‌மாலைத் த‌த்தெடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம்போல‌க் குப்பைத்தொட்டிக‌ள்தான்.... குப்பைத்தொட்டியின் பராம‌றிப்பில் வ‌ள‌ர்கிற‌ சிறுவ‌ர் சிறுமிக‌ளைக் க‌ண்டெடுத்துப் பிச்சைக்கார‌ர்க‌ளாக‌ ந‌வீன‌ப்ப‌டுத்துகிறான் (!) ஒரு கிராத‌க‌ன். ந‌ன்றாக‌ப் பாட‌த்தெரிந்த‌ ஒரு சிறுவ‌னின் கண்க‌ளில்.... அந்த‌க் காட்சியின் கொடூர‌த்தை விவ‌ரிக்க‌ ம‌ன‌மில்லை... குருட‌னாக்க‌ப்ப‌டும் அந்த‌க் குழ‌ந்தைபாடும் பாட‌ல் அங்கிருந்து த‌ப்பித்து செல்லும் ஜ‌மாலுக்கு இன்னொரு மில்லிய‌ன‌ர் கேள்விக்கு ப‌திலாகிற‌து!! குருட்டுப் பிச்சைக்கார‌னாக‌ upgrade செய்ய‌ப்ப‌ட்ட அதே சிறுவ‌ன் பின்னாளில் ஓர் அமெரிக்க‌ டால‌ரை முக‌ர்ந்து பார்த்து அதிலிருக்கும் பெஞ்ச‌மின் ஃப்ராங்க்ளினை ஜ‌மாலுக்கு அறிமுக‌ம் செய்து வைக்கிறான் அடுத்த‌ கேள்விக்கு அவன் சரியான‌ ப‌தில்சொல்ல‌!!

ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ கேள்விக‌ளுக்கான‌ பொக்கிஷ‌ ப‌தில்க‌ளை எழுதிவைத்துவிட்டால் அழிந்துவிடுமோ என்று.... ஒவ்வொன்றையும் வ‌லிக்க‌ வ‌லிக்க‌ இள‌ம் நெஞ்சில் நெருப்பால் ப‌திக்கிற‌து ஜமாலின் வாழ்க்கை!! ஒவ்வொரு கேள்வியின்போதும் அது தொட‌ர்பான‌ அழுத்த‌மான‌ நிக‌ழ்வுக‌ள் காட்சிகளாய் விரிய, தொய்வின்றி ந‌க‌ர்ந்துகொண்டே செல்கிற‌து ப‌ட‌ம்..... வ‌லுவான‌ க‌ற்பனையை ஆதார‌மாக‌க் கொண்டு அழுத்தம் திருத்த‌மான‌ திரைக்கதையால் படத்தை அத‌ன் வ‌லியோடும் வேக‌த்தோடும் ப‌ட‌ம்பிடித்துத் த‌ந்திருக்கிறார்க‌ள்... க‌டைசி கேள்விக்குப் ப‌தில் தெரிவ‌த‌ற்கு முன்பே வெற்றியாள‌னாகி விடுகிறான் ஜமால்... ஏனெனில் அவ‌ன‌து இல‌க்கு அந்த‌ப் ப‌ண‌மில்லை... காத‌ல்! த‌ன் காத‌லி ல‌த்திக்கா நிச்சிய‌ம் அந்த‌ நிக‌ழ்ச்சியைக் காண்பாள் என்ப‌தால்தானே அவ‌ன் அந்த‌ நிக‌ழ்ச்சியில் க‌லந்துகொள்ள‌வே த‌ன்னை நிர்ப‌ந்தித்துக் கொள்கிறான்...!! இவ்வாறு க‌தையில் க‌டைசிவரை சிலிர்க்க‌ வைக்கும் சுவார‌ஸ்ய‌ங்க‌ள் உண்டென்றால் திரைக்கதையில் அவ்வ‌ப்போது உண‌ர்வுக‌ளில் தீ ப‌ற்றவைக்கும் ர‌சாய‌ண‌ங்க‌ளும் ஏராள‌ம்!! இல்லாம‌லா ஆஸ்கார் வ‌ரை வென்றிருக்கும்!!

அமிதாப் ப‌ச்ச‌ன் மீதுள்ள‌ அள‌வில்லாத‌ அபிமான‌ம் குட்டிப்பைய‌ன் ஜ‌மாலை ம‌ல‌க்குழியில் குதித்து மேனிமுழுவ‌தும் ம‌ல‌ம்பூசி ஓட‌வைப்ப‌து எல்லாம் ரொம்ப‌வே மிகையான‌ க‌ற்ப‌னை... சிறுவ‌ன் ஒருவ‌ன் குருட‌னாக்க‌ப் ப‌டுவ‌து குரூர‌மான‌ ஒரு ப‌திவு... மேலும் இன்னும் இர‌ண்டே கேள்விக‌ளுக்குப் ப‌தில் சொல்லிடும் வேளையில் மில்லிய‌ன‌ராக‌ப் போகும் "ஸ்ல‌ம்டாக்" ஜ‌மாலைப் போட்டி ந‌ட‌த்தும் அணில்க‌பூரின் ச‌ந்தேக‌த்தின் அடிப்ப‌டையில் போலீஸ் கைது செய்வ‌துகூட‌ப் ப‌ரவாயில்லை... ஆனால் அங்கு அவ‌னுக்குக் கொடுக்க‌ப்ப‌டும் தேர்ட் (3rd) டிகிரி ட்ரீட்மெண்ட் எல்லாம் ரொம்ப‌ ஓவ‌ராக‌த் தோன்றிய‌து... ஒரு கேம் ஷோவில் க‌ள்ள‌ ஆட்ட‌மே ஆடினாலும் கூட‌ போட்டி முடியும் முன்ன‌மே போலீஸ் த‌லையிட்டு உண்மையைக் கொண்டுவர ஜமாலை இரவுமுழுதும் அடித்துத் துன்புறுத்துவார்களாம்.... ஒருவேளை அமெரிக்காவில் இப்ப‌டியெல்லாம் அப‌த்த‌ங்க‌ள் சாத்திய‌ம் போல‌!!

தன் இசையால் இரண்டு ஆஸ்கார்கள் வென்று ந‌ம்மை ம‌கிழ்ச்சிக் க‌ட‌லில் ஆழ்த்தியிருக்கும் ந‌ம் இசைப்புய‌ல்தான் இந்த‌ப் ப‌ட‌த்துக்குப் பின்னாலிருந்து முழுக்க இசை வழங்கியிருக்கிறார் என்று எளிதில் கிரகித்துவிட இயலாத அளவுக்குப் பிலிம்சுருளின் இருபுற‌மும் ஒட்டியிருக்கும் ஒலியாக, காட்சிக‌ள் சொல்லும் கதையை இசையால் ஒருபுற‌ம் அதன் உணர்வோடு மொழிபெய‌ர்த்திருக்கிறார் ரஹ்மான் த‌ன் அடையாள‌த்தை முற்றிலும் மறைத்துக்கொண்டு!! ஆனால் "ஜெய் ஹோ!" பாட‌லுக்கு இத்த‌னை அங்கீகார‌த்தை ச‌ர்வ‌தேச‌ சினிமா உல‌க‌ம் கொடுத்திருக்கிற‌து என்றால் ந‌ம்ம‌ ப‌ட‌ங்க‌ளுக்கு ர‌ஹ்மான் கொடுத்திருக்கும் ஏராள‌மான‌ அபூர்வ‌ராக‌ங்க‌ளுக்கு ஹாலிவுட் என்னென்ன‌ த‌ந்திருக்க‌ வேண்டியிருக்கும்!!

க‌டைசியாக‌..... இந்த‌ப்ப‌ட‌ம் இந்திய‌ர்க‌ள் இருவ‌ருக்கு ஆஸ்கார் வாங்கிக்கொடுத்திருந்தாலும்... இந்தியாவை ச‌ர்வ‌தேச‌ அர‌ங்கில் கொஞ்ச‌ம் அசிங்க‌ப் ப‌டுத்திவிட்ட‌தாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ர் கொதிக்கிறார்க‌ள்... உண்மைதான்... சேரிக‌ளின் ந‌டுவே குப்பை மேடுக‌ளிலும் விபச்சார‌ விடுதிக‌ளிலும்தான் கேம‌ரா இந்தியா எனும் அடையாள‌த்தை பெரும்பாலும் ப‌திவாக்கியிருக்கிற‌து.... "ஸ்ல‌ம்டாக்" என்ற‌ சொல்லுக்கு மும்பையின் உண்மையான‌ ஸ்ல‌ம்களிலிருந்து எதிர்ப்புக் குர‌ல் வ‌ந்த‌தும் இய‌ல்புதான்...

நான் நினைத்த‌து என்ன‌வென்றால்.... சேரியில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ச‌த்திய‌மாக‌ நாய்க‌ள் அல்ல‌.... இந்த‌ மிக‌ப்பெரிய‌ வ‌ள‌ர்ந்த தேசத்தில் இன்றும் சேரிக‌ள் இருக்க‌க் கார‌ண‌மான‌வ‌ர்க‌ளே நாய்க‌ளினும் கேவ‌ல‌மான‌வ‌ர்க‌ள்.... ஆனால் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் நம்நாட்டில் மில்லிய‌ன‌ர்க‌ளாச்சே!!!


பிர‌பு. எம்