Wednesday, October 01, 2025

"உண்மை அறியும் குழுத் தலைவி" ஹேமமாலினியின் உண்மையான ஒரு ஃப்ளாஷ்பேக் சம்பவம்!

நடிகையும் அரசியல்வாதியுமான திருமதி. ஹேமமாலினி அவர்கள் தலைமையில் கரூருக்கு வந்த குழுவிற்குப் பெயர் "உண்மை அறியும் குழு"வாம்! அதுசரி உண்மை என்னன்னு துல்லியமா தெரிஞ்சா தானே பொய்யைச் சரியா சொல்ல முடியும்! சரி... விடுவோம் விஷயம் அந்தக் குழுவைப் பற்றியது அல்ல... அவரவர் ஜனநாயக உரிமை! இந்தப் பதிவு அந்தக் குழுத் தலைவியைப் பற்றியது! ஆமாம்... நம்ம ஶ்ரீரங்கத்தில் பிறந்து நம் பழம்பெரும் இயக்குனர் ஶ்ரீதரால் நிராகரிக்கப்பட்டுப் பின் ஹிந்திப் பட உலகில்.... அதுக்குமேலதான் தெரியுமே!




கரூர் சம்பவத்தை, உண்மைக்குழுவின் தலைவி ஹேமாமாலினி, "கொடூரமான சம்பவம்" என்று வர்ணிக்கிறார்! மேலும் "இந்த நிகழ்வுக்கா இப்படி ஓர் இடத்தைக் காவல்துறை கொடுத்தது?" என்று கேள்வியெழுப்புகிறார்! இறந்தவர்க் குடும்பத்துக்கெல்லாம் சென்று ஆறுதலாகப் பேசுகிறார் விசாரணை செய்கிறார்.. பிறகு "இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது" என்று ஒரு சினிமா ஓடும் நேரத்திற்குள் வந்து கண்டுபிடித்துத் தீர்ப்பும் வழங்கிவிட்டு சென்றுவிட்டார்... போகட்டும் பிரச்சனையில்லை...ஆக இது 2025ஆம் வருடம் செப்டம்பர் மாத செய்தி....அப்படியே ஒரு பத்து வருடங்கள் ஃப்ளாஷ்பேக்கில் போனோம் என்றால் 2015ம் ஆண்டு வரும்....  அந்த வருடத்தில் ஒரு ஜூலை மாதம் வரும் அதில் இரண்டாம் தேதியும் வரும்.... அன்று வந்த செய்திகளை எடுத்துப்பார்த்தால் அம்மையார் ஹேமமாலினி பற்றிய ஒரு செய்தி அதில் நிச்சியமாக வரும் அதைப் படித்தால் அம்மையாரின் மனிதாபிமானம் மட்டுமின்றி இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்க அம்மையார் எத்தனை பொருத்தமானவர் என்கிற தெளிவும் நமக்கு வரும்!

அதாகப்பட்டது ஜூலை 2, 2015 ஆம் நாள் அதிகாலையில் ஆக்ராவிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 11ல் ஹேமமாலினியின் மெர்செடிஸ் பென்ஸும் ஒரு மாருதி ஆல்டோவும் மோதி விபத்து ஏற்பட்டது. முன்னதாக 2004 பொதுத் தேர்தலில் பிஜேபி சார்பாக இவர் கணவர் (தர்மேந்திரா தியோல்) ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் போட்டியிட்டபோது, பிரச்சாரத்துக்கு சென்று, 'என் கணவரை வெற்றிபெறச் செய்தால் என் கன்னங்களைப் போன்ற பளபளப்பான சாலைகள் உங்கள் தொகுதிக்குக் கிடைக்கும்' என்று தனக்குத்தானே பெருமையாகப் பேசப்பட்ட ஹேமமாலினியின் முகத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டது.... உடனடியாக பரபரவென்று தகவல்களைப் பரப்பித் தன் முகத்தையும் தன்னையும் காத்துக்கொள்ள வேறு வாகனங்களை வரவழைத்து வெகுவிரைவாகப் பாதுகாப்பாக சம்பவ இடத்தைவிட்டு சென்றுவிட்டார் நம் உண்மைக்குழுத் தலைவி! ஆனால் அடுத்த நாள் செய்திகளில்தான் தெரிய வந்தது, சம்பவம் நடந்த தவுசா (ராஜஸ்தான் மாநிலம்) என்ற அந்த இடத்தில் ஹேமமாலினியின் காரில் மோதிய மாருதி ஆல்டோவில் பயணம் செய்த ஐந்து வயதுக்கும் குறைவான ஒரு பச்சிளம் பெண்குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறது! அந்த சமயத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து உடனடி உதவிகளைத் தேடிப் பாதுகாப்பாகத் தன்னைக் காத்துக்கொண்டு வேறு வாகனத்தில் அங்கிருந்து சென்றுவிட்ட நடிகையும் அப்போதைய நாடாளுமன்ற எம்.பியுமான ஹேமமாலினி அதே விபத்தில் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கும் உயிரிழந்த குழந்தைக்கும் எந்தவித உதவியும் செய்ய முயலாததையும், எதையுமே கவனிக்காது அங்கிருந்து சென்றுவிட்டதற்காகவும் கடுமையான சாடல்களை அப்போதே சமூக வலைதளங்களில் சந்தித்தார். பிறகு தன் பங்கிற்கு "அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" என்று வருத்தம் தெரிவித்தார்! 

(விபத்து பற்றிய வீடியோ செய்திக் குறிப்பு: https://www.ndtv.com/video/hema-malini-criticised-for-leaving-accident-site-without-reaching-out-to-victims-373717?utm_source=chatgpt.com)

back to 2025, இப்போது பிரச்சார வாகனத்தில் தன் முகத்தை லைட் ஆஃப் செய்தும் ஆன் செய்தும் காட்டிய ஒரு தலைவன் ஏற்படுத்திய கொடூர சம்பவத்தை ஆய்வு செய்யக் கிட்டத்தட்ட தகுதியான ஒரு தலைவியைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி!