"புஷ்பா" படத்துக்காக அல்லு அர்ஜுனுக்குப்போய் அவார்டு தரலாமா?? ன்னு" ஒரு நண்பன் நேற்று திடீரென்று அறச்சீற்றமடைந்தான்!
"ஏன் கமர்ஷியல் படத்தில் நடித்தால் விருது தரக்கூடாதா?" என்று இன்னொரு நண்பன் பல லாஜிக்குகளைப் பொட்டலம் கட்டிக் கொண்டுவந்தான்... "அப்போ அழுகாச்சியா நடிச்சாதான் அவார்டா?" என்று கொதிக்க ஆரம்பித்த அந்த லாஜிக்கல் இண்டியன், "subtle-ஆ நடிக்குறதும் நடிப்புதான் நீங்கல்லாம் (யாரந்த நீங்கன்னு அவன் சொல்லவேயில்ல!) புரிஞ்சிக்கிட்டாதான்....." என்று லெங்தாக நீட்டினான்!
"அப்போ கமல்ஹாசன், மம்மூட்டி,
ஓம் பூரி, நஸ்ருதீன் ஷா எல்லாம் கஷ்டப்பட்டு இந்த அவார்டை வாங்கியிருக்காங்களே அவங்கள்லாம் தக்காளித் தொக்கா??" என்று கடுப்பேறினான் Mr. அறச்சீற்றம்!
"அப்போ, சிவாஜி கணேசன் மட்டும் என்ன பொடேட்டா சிப்ஸா???" என்பதுதான் அப்போது என் மனதில் தோன்றிய கேள்வியாக இருந்தது!
யெஸ்ஸ்ஸ்ஸ் சிவாஜி கணேசன், எம் ஆர் ராதா, எஸ் வி ரங்காராவ், திலகன் உட்பட ஆகச்சிறந்த மெகா மகா நடிகர்கள் யாருக்குமே ஒருமுறைகூட வழங்கப்படாத ஒரு விருதுக்குப் பெயர்தான் "சிறந்த நடிகருக்கான தேசிய விருது" இந்தியாவில்!
எம்ஜிஆர், எண்டிஆர், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஷிவ்ராஜ்குமார், அல்லு அர்ஜுன், சைஃப் அலிகான் என அனைவருமே அருமையான நடிகர்கள்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.... ஆனால் இங்கே போங்கு எனப்படுவது யாதெனில் அரசியலால் நிர்மாணிக்கப்படும் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு விருது இந்தியாவில் சினிமாவுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக இருப்பதுதான்!
இங்கே யூனியன் அரசு வலதுபுறமாக சரிந்தால் விருதுக் குழுவில் நசுருதீன் ஷா இடம்பெற முடியாது அதுவே இடதுபுறம் பேலன்ஸ் ஆனால் அந்த ஏரியா பக்கம் அனுபம் கெர் தானாகவே ஒதுங்க மாட்டார் என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும்!
சைஃப் அலி கானுக்கு 2004ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது... "ஸ்வதேஸ்" ஷாருக் கான் , "காக்கி" அமிதாப் பச்சன், "கழ்ச்சா" மம்மூட்டி போன்ற போட்டிகளுக்கு மத்தியில் "ஹம் தும்" படத்தில் சற்று வித்தியாசமானதொரு கார்ட்டூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சைஃப் அலி கானை சிறந்த நடிகராக, சீனியர் நடிகை ஷர்மிளா தாகூர் அவர்களது தலைமையிலான தேர்வுக்குழு தேர்ந்தெடுத்தது. அது ஒரு M. குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி மொமண்ட் என்று இன்றுவரை நாம் சிலாகிக்கக் காரணம் சைஃப் அலிகான் இஸ் தி சன் ஆஃப் ஷர்மிளா தாகூர் என்பது ஊருக்கே தெரியும்!
மலையாளத்தின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் திலகன்... அவருக்கு 1990ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது "பெரும்தச்சன்" (அந்த வருடத்துக்கான சிறந்த படம் விருது பெற்றது) எனும் அற்புதமான திரைப்படத்தில் அவரது தத்ரூப நடிப்புக்காக கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டது. அவருக்குச் சில அதிகாரப்பூர்வமற்ற செய்திகளின் அடிப்படையில் வாழ்த்துக்கள் கூட தெரிவிக்கப்பட ஆரம்பத்திருந்த வேளையில் கடைசி நிமிடத்தில் "அக்னிபாத்" எனும் காவியப் படைப்புக்காக பாலிவுட்டின் உயர்ந்த மனிதர் தனது முதல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுவதாக அறிவிப்பு வந்தது! அதையொட்டிய அரசியலை கூகுளில் தட்டினாலே தெரியும்!
எல்லாத்துக்கும் மேல....
"காஷ்மீர் ஃபைல்ஸ்" என்ற கழிசடை படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கும் இந்த 69 ஆவது தேசிய விருதுகளில் விருது கிடைக்காத அனைவருக்கும் ஒரு பெரும் அவமானத்தில் இருந்து தப்பித்ததற்காக என் மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.
மீண்டுமொருமுறை சொல்லுகிறேன் "புஷ்பா" படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும் சரி விருதுபெற்ற "கடைசி விவசாயி" ம. மணிகண்டன், நல்லாண்டி அவர்கள் உட்பட அனைவரும் விருதுபெறத் தகுதியானவர்களே அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை ஆனால் அந்த விருது தகுதியானதா?? என்பது மட்டுமே இங்கு கேள்வி
!
கடைசியாக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் ஒருவரின், அவர் விருதுபெற்ற திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்களைப் பகிர்ந்து இந்தப் பதிவை முடித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்!