தலைமைத் தேர்தல் அதிகாரி அருண் கோயலின் திடீர் பதவி விலகல் எதிர்க்கட்சியினரைப் பதற்றமடைய வைப்பது ஆச்சர்யமாக இருக்கிறது! இன்னும் எத்தனை நாளுக்குத்தான் பாஜகவின் அதிர்ச்சி வைத்திய பில்டப்புகளைப் பார்த்து இவர்கள் பயந்துகொண்டே இருப்பார்கள் என்று சத்தியமாகப் புரியவில்லை. ஆர் எஸ் எஸ் & பாஜகவின் election machinery மிகவும் வலிமையானதுதான் அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை ஆனால் இது எல்லா கட்சிகளுக்குமே அவர்களுக்குச் சாதகமான அரசியல் சூழல்களில் வலுவாக இருந்திருக்கிற ஒரு காரணிதான் என்பதை எப்படி தேசத்தின் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒரே நேரத்தில் மறக்கிறார்கள் என்று புரியவில்லை….. மக்களாகிய நாமும் பாஜகவைப் பற்றி அசுரத்தனமான ஓர் இமேஜை வளர்த்துக்கொண்டே போய் எப்போதுமே ஒரு நம்பிக்கையற்ற அரசியல் மனநிலையோடேயே வலம்வருதால்தான் நம்மில் பலரும் சரியான நேரத்தில் பாஜகவின் தந்திரங்களுக்குப் பலியாகிவிடுகிறோம் என்று நான் முழுமையாக நம்புகிறேன்…. பாஜகவின் தேர்தல் இயந்திரத்தை (வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல!) அதாவது சர்வபலம் பொருந்திய ரஜ கஜ துரக பாதாதிகள் கொண்ட வீழ்த்த முடியாத சக்தியாகக் கருதப்படும் மெக்கானிசத்தைக் கட்டுடைத்துதான் பார்ப்போமே என்னும் எண்ணத்தில்தான் இதை எழுதுகிறேன்.
Decoding BJP’s Election Machinery - Part 1
1. பாஜக ஒரு வீழ்த்தவே முடியாத கட்சியா?
இந்தக் கேள்விக்கு இடையிடையே பாஜக தோல்வியடைந்த பல மாநிலத் தேர்தல்களே நேரடியாக உண்மையான பதிலைத் தந்துவிடும் இருந்தாலும் எந்தவொரு உண்மையையும் தேசத்தின் short time memory-யிலிருந்து அழித்துவிடும் கலையில் நரேந்திர மோடி மட்டுமல்ல உலகின் அனைத்து சர்வாதிகாரிகளுமே நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்தான். சமீபத்தில் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற அபார வெற்றியை அடுத்து வந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மொத்தமாகத் துடைத்துத் தூரப்போட்டுவிட்டது என்பது நிதர்சனம். ஆனால் இங்கு நான் நினைவுபடுத்த விரும்பும் மாநிலத்தேர்தலானது கர்நாடகா இல்லை, மாறாக, 2005-இலிருந்து இடைவிடாமல் 13 ஆண்டுகள் ஷிவ்ராஜ் சிங் சௌகான் முதலமைச்சராக இருந்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் 2018 பொதுத் தேர்தல் முடிவுகளைத்தான்! 2003 முதல் 2018 வரைத் தொடர்ந்து ஆண்டுவந்த பாஜகவின் ஆட்சியைக் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வீழ்த்திப் பெரும்பான்மை பலத்துடன் 2018 டிசம்பர் மாதம் ஆட்சி அமைத்தது!
மத்திய பிரதேச மாநிலத்தின் demographics பாஜகவின் பெரும்பான்மைவாத மத அரசியலுக்கு அளவெடுத்துத் தைத்ததுபோல் பொருந்தக்கூடியது! சிறுபான்மை மதத்தினருக்கு என்று, பரந்துவிரிந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் எந்தவொரு தொகுதியிலுமே, சொல்லிக்கொள்ளுமளவு வாக்கு பலம் கிடையாது! இந்துத்வா லேபாரட்டரி என்றழைக்கப்படும் குஜராத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பரிசோதனைக்கூடம் பாஜகவுக்கு மத்தியப் பிரதேசம்தான். தொண்ணூறுகளின் இறுதியிலேயே பாஜக நிரந்தர ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்ட ஒரு மாநிலம் அது. அப்பேர்ப்பட்ட மாநிலத்தில் 16 ஆண்டுகள் கழித்து தேசிய அளவில் அசுரபலத்தில் பாஜக இருந்தபோதே காங்கிரஸ் கட்சியால் அங்கு வெற்றிபெற முடிந்தது மிக மிக ஆர்கானிக்கான விஷயம்! அதாவது anti-incumbency! இயல்பாகவே ஷிவ்ராஜ்சிங் சவுகானின் ஆட்சி மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி மற்றும் பெரிய பூதமாக உருவெடுத்த “vyapam scam” போன்றவற்றின் காரணமாக நரேந்திர மோடியின் சூறாவளிச் சுற்றுப்பயணங்களையும் தேர்தல் விதிமுறைகளை மீறி அள்ளித் தெளித்த கடைசி நேர கவர்ச்சித் திட்டங்களை எல்லாம் தாண்டியும் பாஜக தேர்தலில் வீழ்த்தப்பட்டது!
அடுத்த ஒண்ணேகால் ஆண்டுகளிலேயே 22 காங்கிரஸ் எம் எல் ஏக்கள் ஜியோதிராதித்ய சிந்தியாவின் தலைமையில் கட்சி மாற, கமல்நாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மீண்டும் ஷிவ்ராஜ் சிங் சவுகான் ஆட்சியில் அமர்ந்தது நமக்குத் தெரிந்த கதைதான் ஆனாலும் பொதுத் தேர்தலில் பாஜகவால் எந்த மந்திரத்தையும் பலிக்கவைக்க முடியவில்லை என்பதுதான் இங்கு முக்கியமான விஷயம். இது அப்படியே சென்ற ஆண்டு கர்நாடகா மாநிலப் பொதுத்தேர்தலுக்கும் பொருந்தும். கர்நாடகாவில் பாஜக முளைத்து மூன்று இலை விட்டக் கட்சிதான் என்பதால் அங்கு காங்கிரஸ்ஸின் இயல்பான எழுச்சி பிரம்மாண்டமாக இருந்தது மட்டுமில்லாமல் சித்தராமையா - டிகே சிவகுமாரின் காங்கிரஸ்ஸில் உள்ளடி வேலைகள் செய்ய வாய்ப்பும் கிடையாது. பாஜக தேர்தலில் வீழ்த்த முடியாத கட்சி என்பது எல்லாம் வெறும் பிம்பம் மட்டுமே….. அந்த வெற்றியால் என்ன பயன்?, இறுதியில் ஆட்சி அமைத்தது அவர்கள்தானே.. போன்ற விஷயங்களுக்கு அடுத்தடுத்த பகுதிகளில் பதில்கள் நிச்சியமாக இருக்கின்றன… !
2. மற்ற கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன?
“Party with difference” என்ற கவர்ச்சிகரமான taglineஐ வைத்துத்தான் ஆரம்ப நிலை பாரதிய ஜனதா கட்சியைத் துடுப்புப் போட்டு நீரோட்டத்தில் இணைத்தார் LK அத்வானி! அந்த வாஜ்பாயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி காலத்து பாஜகவைப் பற்றியெல்லாம் இப்போது நினைப்பதற்குக்கூட ஒன்றுமில்லை இப்போது இருப்பது முற்றிலும் மாறுபட்ட மாஃபியா கழகம்! நரேந்திர மோடியின் பாஜகவுக்கும் பாரம்பரியமாக இந்தியாவில் அரசியல் செய்துவரும் முக்கியக் கட்சிகளுக்கும் இருக்கும் மிக மிக மிக அடிப்படையான வித்தியாசம் ஒன்று உள்ளது அது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் அதை எதிர்க்கட்சிகள் தொடங்கி மக்கள் வரை அத்தனை பேரும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு நகர்வதுதான் ஒரே ஆச்சர்யம்! அது என்ன வித்தியாசம் என்றால்…. மற்ற அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் அரசியலை தேர்தல் சமயத்தில் மட்டுமே பிரயோகிப்பார்கள் மற்ற சூழல்களில் ஆட்சியிலோ அல்லது ஆட்சிக்கு எதிரான அரசியலிலோ மட்டுமே தீவிரமாக இயங்குவார்கள். பாஜகவைப் பொறுத்தவரை சதா சர்வகாலமும் அவர்கள் செய்வது தேர்தல் அரசியல் மட்டுமே! அவர்களுக்குத் தெரிந்ததும் தேர்தல் அரசியல் மட்டும்தான்…. அணுதினமும் தேர்தல் அரசியல் செய்யும் கட்சிகள் உலக வரலாற்றில் ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகள்… தீவிர வலதுசாரிகளின் classic political style! இதுபோன்ற அணுகுமுறை கொண்ட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்யும்போது வழக்கமான அரசியல் நடைமுறைகள் வேலைக்கே ஆகாது என்பதை (திமுக தவிர*) இந்தியாவின் எந்தக் கட்சியுமே இன்னும்கூட விளங்காததைப் போல் நடந்துகொள்வது மட்டும்தான் எப்போதுமே ஆச்சர்யமாக உள்ளது.
*இதைப்பற்றித் தனியாகப் பேசுவோம்...
3. தேர்தல் அரசியலுக்கும் vs ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி அரசியலுக்குமான வித்தியாசங்கள்:
தேர்தல் சமயத்தில் அனைத்து ஆளும்கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஆயுதங்களைத்தான் பிரயோகிப்பார்கள் அவற்றின் தொகுப்புதான் தேர்தல் அரசியல்…. அதன் முக்கியக் கூறுகள் 1. மீடியா மேனேஜ்மெண்ட் ( இதன் பழைய பெயர் headline management!), 2. மக்களிடம் நெருக்கமாக இல்லாமல் பலம் காட்டும் விதமாக பிரம்மாண்டமாக அடிக்கடி connect செய்துகொண்டே இருத்தல், 3. வெளிப்படையான சர்ச்சைகளை மறைத்தல் அல்லது திசை திருப்புதல், 4. உணர்வுப்பூர்வமான narrative களைக் கட்டமைத்தல் (அவை நிகழ்கால அரசியலுக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்!) 5. எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்துதல்… etc.,
தேர்தல் அரசியலின் அடிப்படைக் கூறுகளாக இந்த ஐந்து விஷயங்களை வகைப்படுத்தலாம். ஆனால் இதையே தேர்தல் சமயம் மட்டுமின்றி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னும், இடைவெளி விடாமல், ஆட்சி நடத்தாமல், மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுக்காமல், திட்டங்கள் எதுவும் தீட்டாமல், அப்படியே அடுத்த தேர்தல் வரைக்கும் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால்…….. ஜனநாயகத்தின் நட்ட நடுப் புள்ளியில் சுழித்து விளையாடும் ஒருவிதமான chaos theory இது! இதை பாஜக ஒன்றும் கண்டுபிடிக்கவெல்லாம் இல்லை…. இதுவும் ஒரு வரலாற்றின் சுழற்சியே!
இந்தப் பகுதியை விரிவாக அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
தொடரும்…..
அன்புடன்,
பிரபு எம்