"எனக்கு சனா வேணும் ப்ளீஸ் என்னைக் கொன்னுடாதீங்க... எனக்கு சனா வேணும் ப்ளீஸ்ஸ்ஸ்..."
பேட்டரியில் மீதமிருக்கும் உயிர்கொண்டு இப்படி முணங்கினது ஓர் இயந்திரம்!!
ஒரு கோடரியை எடுத்து உடலின் கையையும் காலையும் உயிரோடு வெட்டியெறிந்தபோது வலித்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் அவன் எந்திரன்.... எனினும் "எனக்கு சனா வேணும்" என்று உயிர் நோக சிட்டி உருகியபோது எங்கே எந்தப் புலண் வலித்திருக்கும் அந்த ரோபோவுக்கு???!!!.... மெஷினுக்குள் காதலை ஊற்றி ஷங்கர் செய்து பார்த்திருக்கும் அடாவடி ரோலர்கோஸ்டர் டெஸ்ட் டிரைவ்.... அவரின் கனவுப்படம்.... எந்திரன்!!!!
ஒரு படத்துக்குக் கமல்ஹாசன், ஷாருக் போன்ற பெயர்கள் அடிபட்டதே... அந்தப் படம்தான் இந்தப் படமா!!! :)))
ஒருபுறம் மறந்துவிடவே கூடாது இது ஷங்கர் படம்.... கிடைத்த கால்ஷீட்டுக்குப் படம் பண்ணுகிற சராசரி இயக்குனராக என்றுமே அவர் இருந்ததில்லை.... "ஜென்டில்மேன்"ல் முதலில் கமிட் ஆனது சரத்குமார் என்றும் பின்பு அர்ஜுன் என்று முடிவானதும் அர்ஜுனுக்கு ஏற்றவாறு கதையை மாற்றியமைத்தபின்புதான் களமிறங்கியதாக "எந்திரன்" பற்றிய ஒரு முன்னோட்ட பேட்டியில் "குமுதத்தில்" சொல்லியிருந்தார்.... ஆக ரஜினிக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து பேனாவை மூடிவிட்டுதான் கேமராவைத் தூக்கியிருப்பார்....
இருந்தாலும்.... சராசரி வசீகரன், கள்ளமில்லா குழந்தை ஃபர்ஸ்ட் ஹாஃப் சிட்டி, காதல் வந்த செகண்ட் ஹாஃப் சிட்டி, காமுற்ற கணிணி வில்லன் சிட்டி என்று ரஜினி காட்டியிருக்கும் மல்டிப்பிள் பர்ஸனாலிட்டிகளைப் பார்க்கும்போது..... கமலோ ஷாருக்கோ அஜித்தோ யாராக இருந்தாலும் யாருக்கேற்ற மாதிரி ஷங்கர் செதுக்கியிருந்தாலும் ரஜினி... ரஜினி... ரஜினிமட்டும்தான் எந்திரன்!!! :)
"என்னை யாராலும் அழிக்க முடியாது" என்று குலுங்கிச் சிரிக்கும் வில்லச் சிரிப்பை நினைத்துப் பாருங்கள்!!! எத்தன நாளாச்சு இந்த வில்லத்தனம் விழித்தெழுந்த விழிகளைப் பார்த்து!! "அவர்கள்" ராமநாதனை மறக்க முடியுமா!! இல்லை
"ம்ம்ம்மேமே" என்று இந்த எந்திரன் கத்தியதைத்தான் மறக்கப் போகிறோமா!! ;)
ரஜினி என்னும் அசுரனுக்கு ஷங்கர்தான் சரியான தீனி கொடுத்திருக்கிறார்.... ரஜினியின் வயதை அவரிடம் முதுமையாகப் பார்க்கமுடியவில்லை ஒரு நடிகனின் நீண்டநெடுங்காலப் பசியாகத்தான் பார்க்கமுடிகிறது....
சனா.... ஓர் எந்திரம் காதல் கொள்ள வேண்டும் இந்தப் பெண்ணைப்பார்த்து.... ஸோ ஐஸ்வர்யாதான் சனாவாக இருக்க முடியும்!! முப்பது வயதின் முதிர்ந்த அழகு ரஜினிக்கு எக்கச்சக்கமாக பொருந்திப்போயிருக்கிறது ஆன் ஸ்க்ரீன் மேஜிக்கில்!!
இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மானைத் தவிர வேறு யார் இசையமைக்க முடியும்!! காமென்வெல்த் கேம்ஸ் பாடலின் தோல்வியைக் கருத்தில் எடுத்து எந்திரனையும் அதனுடன் சேர்த்து விமர்சிப்பது விஷமத்தனம்.... பாடல்களும் பின்னணி இசையும் ஒன் ஸ்டெப் அஹெட் என்றுதான் சொல்ல முடியும்...... பாடல் வரிகள்... ஒவ்வொரு வார்த்தைக்கும் உழைத்திருக்கிறார்கள் கவிஞர்கள்.... வைரமுத்துவின் "அரிமா அரிமா" ரஜினிக்கும் பொருந்தும் சிட்டிக்கும் பொருந்தும்படியான லாவகமான பவர்ஃபுல் ஹீரோ ஒர்ஷிப் வரிகள்!! "கிளிமாஞ்சரோ"வில் மெட்டோடு கரைந்து காதை நனைக்கிறது பா.விஜய்யின் சந்த நயம்!! என்னைப் பொறுத்தவரை ஃபைவ் ஸ்டார் மதன் கார்க்கிக்குத்தான்...... ஒரு ரோபோவின் காதலையே கிட்டத்தட்டக் கவிதையாக்கி முடித்திருக்கிறார்... "என் நீலப் பல்லாலே உன்னோடு சிரிப்பேன்!!" ப்ளூ டூத்தின் பர்சனல் ஏரியா நெட்வொர்க்கில் காதலிக்கு புன்னகையை ட்ரான்ஸ்ஃபர் செய்ய ரோபோவால் மட்டுமே முடியும்தான் !!! எச்சில் இல்லா முத்தம்..... பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் என்று கணிணித்துறையின் கலைச்சொற்களாலே காதல் கவியரங்கம் நடத்தியிருக்கும் கார்க்கிக்கு இப்போதே கொடுத்துவிடுங்கள் சிறந்த பாடலாசிரியர் விருது ஒன்றை!! :)
ரஹ்மானும் வைரமுத்துவும் இருந்தாலும் Crew வில் தங்க வெள்ளிப் பதக்கங்கள் ரத்னவேலுவுக்கும் சாபுசிரிலுக்கும்தான்!! கண்களை விஞ்சும் வேகத்தில் கேமரா சுழன்றிருக்கிறது ரத்னவேலுவின் கைவண்ணத்தில்...... கலர் காம்பினேஷன்கள் சொக்கவைக்கும் குளுமை..... சாபுவின் உழைப்பு முற்றிலும் இன்விஸிபிள்!! அவரின் கலை இயக்கம் படம் நெடுக ஆக்கிரமித்திருக்கிறது இனிமையாக எனினும் இயற்கையாக.... :)
திரைக்கதை ஷங்கரின் டெம்ப்ளேட்டுக்குள் பொருந்திப்போவதுதான் எனினும் கான்செப்ட் புதுமை.... அமரர் சுஜாதா தன்னுடைய கடைசி படத்தில் வரிக்கு வரி வாழ்ந்திருக்கிறார்...... சுஜாதாவின் வாசகர்களுக்கு மட்டுமல்ல திரைவசனத்தில் அவரின் டச்சை சாதாரண ரசிகனாலும் "இது சுஜாதா தான்" என்று ஸ்பரிஸத்தோடு உணரமுடிகிறது..... ஆனால் இவ்ளோ கொண்டாட்டத்திலும் சுஜாதா என்கிற பெயரையே காணாதது ஏமாற்றம் ஷங்கர் சார்.... :-(
சந்தானம், கருணாஸ் ரோபோவிடம் செய்யும் தச்சுப்பிச்சு காமெடிகள் படத்துக்கு ஸ்பீட் ப்ரேக்கர்கள்தான்... இவ்வளவு அசாதாரண கிரியேட்டிவ் டீமுக்கு இந்த ஸீன்களை சுவாரஸ்யமாக செதுக்க முடியாமல் போனது அதிர்ச்சித் தோல்வி..... படத்தின் முக்கிய ட்விஸ்ட்டுக்கு சந்தானம் கருணாஸ் முக்கியக் காரணமாக இருப்பதால் சிறப்பு கவனம் கொடுத்திருக்கப் படவேண்டும்...... எல்லாரும் சொல்வதுபோல் இரண்டாம் பாதி நீளம்தான்..... அந்தக் கடைசி இருபது நிமிடங்கள் ரஜினிக்கு எப்போதுமே ராசியான ஆடியன்ஸ்ஸான குழந்தைகள் மட்டும் குடும்பத்தோடு வருபவர்களுக்கான ஏரியா...... ஸோ நமக்கெல்லாம் நோ பார்க்கிங்!!
தொழில் நுட்பத்தால் வென்றுவிட முடியாது, ஹாலிவுட் படங்கள் பட்டித்தொட்டிகளுக்கும் சென்று தமிழ் பேசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்...... இருப்பினும் தன்னுடைய கற்பனையின் வீச்சு எவ்வளவு நீளமாகப் பாய்ந்தாலும் அதை வெள்ளித்திரையில் நம் கண்களுக்கு அடக்கமாக படம்பிடித்துக் காட்டிவிடுகிற ஷங்கரின் சினிமா ஞானம், இமயத்தில் பறந்த சேரனின் கொடி போன்றது!!! ஏ ஆர் ரஹ்மான் கையில் ஆஸ்கார் போன்றது!!!
இது ஒரு சன் பிக்சர்ஸின் தயாரிப்பு... வழக்கம்போல் படத்தின் மார்க்கெட்டிங் பல சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது..... "பழைய" விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டுத்தான் எப்போதுமே இந்த நிறுவனங்கள் இயங்குகின்றன..... வியாபாரம் என்பது லாபத்தை மட்டுமே குறிவைப்பது..... பிஸினஸ்ஸில் யானைகளும் குதிரைகளும் படையெடுத்து நிற்கும் நமது நாட்டில் அதற்கு அங்குஸமாகவும் கடிவாளமாகவும் இருக்க வேண்டிய அரசாங்கம் சவாரிக்கு அவர்களிடம் லிஃப்ட் கேட்டு நிற்பதால் தேவையில்லாமல் நாம் பொங்கிவழிவதில் எந்த லாபமும் இருக்கப்போவதில்லை.....ஏன்னா நம்ம நாட்டில் அரசியலும் லாபத்தை மட்டுமே குறிவைக்கிறது!!! ஸோ ஜாலியா தியேட்டருக்குக் குடும்பத்தோட போய் எஞ்ஜாய் பண்ணிட்டு வாங்க..... இந்த வேலையை இந்தியா டுடேவும் ஜுனியர் விகடனும் தினமணியும் பாத்துக்குவாங்க அவங்களோட லாபத்தைக் குறிவைத்து!!! :)
எந்திரன் ஒரு தீம் பார்க்!!! ஒன்ஸ் மோர் போலாமா Daddyyyy ;-)))))
அன்புடன்,
பிரபு எம்
