Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, May 15, 2011

சாபங்கள் பலிப்பதில்லை : சிறுகதை

இந்த சிறுகதை ஒரு மீள்பதிவு....

2009 செப்டம்பரில் "அன்றைய" சூழலில் அன்றாட வாழ்வில் சந்தித்த சில கசப்புணர்ச்சிகளால் எழுந்த வேகத்தில் எழுதிய சிறுகதை இது!

ஏனோ இப்பொழுது மீள்பதிவு செய்யவேண்டுமெனத் தோன்றியது!! ;-))





சாபங்கள் பலிப்பதில்லை : சிறுகதை

மழைக்கால மத்தியாணம்...எப்பவும் புழுதிவாரி இறைக்கும் வாகனங்கள் "ஸீசனல் ஆஃபராக" சகதி வாரிஇறைத்துச் சென்றுகொண்டிருந்தன.....அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாய், கிடைக்கிற‌ "சைடு கேப்" பில் எல்லாம் புகுந்து மும்முரமாகத் தங்கள் தலைவனுக்கு ஏதோ விழா எடுப்பதாக‌ ஸ்பீக்கர்கள், தோரணங்கள்,ட்யூப் லைட்டுகள் மற்றும் ஃப்ளக்ஸ் போர்டுகள் நட்டுவைக்கும் கலாச்சாரப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் செயல்வீரர்கள்....

ரோட்டின்மேல் இருக்கும் ராசய்யா_____ன் (ஏதாவது ஒரு ஜாதி பேரை வைத்து கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க) வீட்டு வாசல் கதவு முழுதுமாய்த் திறந்திருக்கிறது... வீட்டுக்குள் ஆள்நடமாட்டம் இருந்தவண்ணம் உள்ளது.... முன் அறையில் கொஞ்சம் பழசாகிவிட்ட‌ ஒரு மர சோபாவில் சற்று கண்ணயர்ந்தவனாய்த் தலைக்குக் கைவைத்து தூங்கிக் கொண்டிருக்கிறான் தருமராஜன்... உள் அறையில் உடைந்துபோய் அமர்ந்திருக்கிறார் சீதம்மாள்... அருகே சில பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.....

"யாரு....தருமனா இப்புடி சாய்ஞ்சு கிடக்குறான்... தேனி மாதிரி சுத்திட்டு இருப்பியேய்யா என் ராசாஆஆஆ...இப்புடி உடம்பு சோந்து கண்ணசந்து கிடக்குதியே.... உங்கப்பன் உன்ன‌ விட்டுட்டுப் போய்ட்டானேஏஏஏஏஏஏ......." என்று சவுண்டை ஸ்டார்ட்செய்து கை ரெண்டையும் விரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார் அந்தக் கிழவி,

"அடியே சீத.. எஞ் சீத...உன்னய தனியா விட்டுட்டு போக எப்புடிடீ மனசு வந்துச்சு அந்தப் பயலுக்கு??.... பாவிமக கண்ணுல கத்திய போட்டுப் படுக்க வெச்சுட்டாண்டீ அந்த பாழா போற டாக்டரு... பாவிமவன்.... மூஞ்சிபாக்க குடுத்துவெக்கலியே இந்த பாழாப்போற கண்ணுக்கு...." ஐயோ ஐயோ ஐயோ.......!! என்று நடுநடுவே மூக்கைச் சிந்திக்கொண்டு நெஞ்சில் அடித்து அழத்தொடங்கினாள் "கிழவி" என்று அழைக்கப்படும் தருமனின் பாட்டி... ராசய்யா_____க்கு பெரியம்மா முறைவேண்டும்.... கண் ஆபரேஷன் செய்து படுத்துக் கிடந்தமையால் ராசய்யா____ன் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரால் முடியாமல் போய்விட்டது (ஓ! அதைக் கிழவியே சொல்லிடுச்சோ!!) "கிழவி"யின் அலறலிலும் தருமனின் அயர்வு அகலவில்லை.... உடலும் மனதும் உளைந்துபோயிருக்க‌ அவனையுமறியாமல் தூங்கிக் கிடக்கிறான்.....

வீட்டிற்கு வெளியே.... செயல்வீரர்கள் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் விழா துவங்குகிற வண்ணமாய், இரண்டடி இடைவெளியில் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் எல்லாம் உயிர்பெற்றுப் பிளிரத் துவங்கின.... தெறித்துக் கண்விழித்தான் தருமன்.... சீதாம்மாளிடம் இருந்த கிழவி விழித்துவிட்ட தருமனை நோக்கி அழுதவண்ணம் எழுந்துவர... துக்கம் தீர்ந்தவனாய்க் கிழவியின் துஷ்டியைக் ஏற்று அமரவைத்தான் தருமன்.... இழவில் பங்கேற்று, சம்பிரதாயப்படி சொல்லாமல் சென்றுவிட்டு, இப்போது "கிழவி"யை அழைத்துக்கொண்டு வெள்ளையுஞ் சொள்ளையுமாய் வந்திருந்தார்கள் மாமன் மச்சான்கள்....

"சரி... நடந்தது நடந்துபோச்சு...."என்று ஒருவர் பேச்சை ஆரம்பித்தாக‌ வேண்டுமே....!!

தருமனின் தோள்மேல் கைவைத்து மாமன் ஒருவர் பேச்சை ஆரம்பிக்க "இனி ஆகவேண்டியத பாக்கணும் இல்லையா..." என்று அடுத்தவர் தொடர்ந்தார்.... குடியிருக்கும் பங்காளிகள் ஆட்கொண்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் ராசய்யா________க்கு சொந்தமான‌ பிரச்னைக்குரிய சில வீடுகளின் பத்திரங்கள் கிடைத்ததா?? என்று அக்கறையாகக் கேட்டு விசாரித்தார்கள்....

"ஒருவாரமா வீடு முழுசும் அலசியாச்சு...
எங்க வெச்சுட்டுப் போனாருன்னே தெரியல...."

"சொந்தக்காரப் பயபுள்ளகளா போயிட்டானுங்க.. இல்லைன்னா... போய் அவனுகள‌..." என்று ஒரு மச்சான் செண்டிமென்டலாக‌ சீற.....

"என்னய்யா சொந்தம்?? செத்த வூட்டுக்குக் கூட வராத பயலுகள போய் சொந்தம் கிந்தம்னு சொல்லிக்கிட்டு.." என இன்னொரு மச்சான் டென்ஷனானார்...

ஓர் ஆக்ஷன் சீக்வன்ஸ் மெல்ல உருவெடுக்கத் துவங்க "அமைதியா இருங்கப்பா.... ஆகுறதப் பேசுங்க.... " என்று 'கட்' கொடுத்தார் பெரியப்பா ஒருவர்...அவரே தொடர்ந்து "குருஜி கிட்ட கேக்குறதுதானே... பத்திரம், சாவியெல்லாம் எங்க வெச்சுருப்பாருன்னு.... மை வெச்சு கண்டுபிடிச்சுச் சொல்லிடுவாறே...." என்று ஓர் அறிவுப் பூர்வமான (!) ஐடியாவை எடுத்து விட்டார்....

"குருஜி வீட்டுக்கு வந்து பாத்துட்டு, ஐயாவோட ஃபோட்டோ முன்னாடி உக்காந்து நம்பிக்கையா கேளுங்க... யார் கனவுலயாவது வந்து பத்திரம் இருக்குற எடத்த சொல்லுவாறு"ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு...." என்றான் இளைய மகன் வேலுராஜன்

" யய்யா... அப்பா கனவுல வந்தாராய்யாஆஆ..." என்று கிழவி கூவினாள்....

"தூங்குற முன்னாலயே இந்தப் பாட்டுச் சத்தத்துல முழிச்சிட்டேனே ஆத்தா...." என்று தருமன் கண்கலங்கினான்.....!!! :-))

அப்போதும் கடும்சத்தமாய் வெளியே விழாக்கோலம் அலறிக்கொண்டுதான் இருந்தது.... "நாசமாப் போறவனுக......" என்று ஆரம்பித்து விழா அமைப்பினரையும்... விழா நாயகர்களையும் ஒட்டுமொத்தமாய் சபித்துத் தள்ளினாள் கிழவி.....

ரெண்டு நொடி அமைதியாய் ஏதோ நினைத்த தருமன்... வெகுண்டெழுந்தான்....

"ஒருபயலும் வேணாம்... நானே போறேன்.... எண்ணி ரெண்டே நாளு... அதுக்குள்ள பத்திரத்தக் கிரயம் பண்ணுறோம்.... அதுக்குள்ள அந்த வீட்டுல இருக்குறவனெல்லாம் தலதெறிக்க ஓட விடுறேன்.... யாருகிட்ட சொல்லி, எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு எனக்குந் தெரியும்...." என்று தருமன் வெடித்துக் கிளம்பினான்....

அவன் கிளம்பும் முன்னமே.... உள் அறையிலிருந்து ஈனஸ்ருதியில் ஓர் ஒலி வந்தது... "வேணாம் தருமா... வேணாம் ராசா....பழியெல்லாம் உங்கப்பாவோட போவ‌ட்டும்... வீட்டுல இருக்குறவுகள‌ அடிச்சு விரட்டித் தெருவுல நிக்கவெச்சு அவங்க வாயில வுழ வேணாம்யா....யாரு வாயிலும் வுழ வேணாம்யா... இனிமேலும் வேணாம்யா ஏச்சும் பேச்சும்..." திடீரென்று அழத்துவங்கினாள் தருமனின் தாய் சீதம்மா....

வெடித்துக் கிளம்பிய‌ தருமனின் காதில்வந்து விழுந்து சற்று நேரம் நிறுத்திவைத்தது தாயின் விம்மல்.....

வேறுசில தொழில்களும் செய்திருந்தாலும் சாதாரண ராசய்யாவாக இருந்தவர் ஊர் போற்றும் ராசய்யா_______ஆக மாறியது என்னவோ வட்டிக் கொடுத்து பிழைக்க ஆரம்பித்த பின்புதான்... நிலத்தின்பேரில் கொடுக்கப்பட்ட சில வட்டிக் கடன்கள் அசலைப் பணமாய் அன்றி நிலமாகவே திருப்பிப் பெற்றுத்தந்தன‌.... வராக் கடன்களை வசூலிக்க அவர் மேற்கொண்ட சில காரியங்கள் கல்லடிபடாத ராசய்யாவுக்கு சொல்லடிகள் வாங்கிக்கொடுத்தன... கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்க சுனாமிபோல் வந்து சூழ்ந்த‌ சுற்றமும் நட்பும், உச்சவரம்பை மீறிய சொத்துகளுக்கு பினாமிகளாய் மாறின‌.... வளர்பிறையெல்லாம் முடிந்து கோர்ட்டு கேஸ் என்று தேய்பிறை துவங்க "பாவம்....ந‌ல்லா வாழ்ந்த குடும்பம்" என்று ராசய்யாவின் இறந்தவீட்டில் வந்தவர்கள் சிலர் 'உச்' கொட்டும் அளவுக்கு ராசய்யா_____ன்  தலைவிழும் முன்னேயே செழித்துக் கொழித்த காலமெல்லாம் இறந்தகாலாமாகிப் போனது...... பத்திரங்களைக் கைப்பற்றி பிரச்னைக்குரிய வீடுகளையெல்லாம் விற்றே தீர வேண்டிய பொருளாதார நிர்பந்தத்தில் இப்போது மூத்தவன் தருமன்....

பலபேர் வாயில் விழுந்து சாபங்களைக் கட்டிக் கொண்டதன் பலன்தான் இப்படி ஊர்போற்ற வாழ்ந்த வீடு தூண் விழுந்து கிடப்பதாகப் பலரும் காதுபடவே பேசினார்கள் இறந்த வீட்டில்.... சீதாம்மாளின் நம்பிக்கையும் இதுதான்.... நல்ல பணம், கெட்ட பணம், பாவப்பட்ட பணம் என்றெல்லாம் பணத்தில் வகைகள் உண்டு என்று இன்றும் ஸ்திரமாக நம்பும் பழி பாவத்துக்கு அஞ்சும் குடும்பத்தலைவி சீதாம்மாள்....

சீதாம்மாளின் அழுகை மற்றும் மூணாம் கிளாஸ், நாலாம் கிளாஸில் எப்போதோ வாத்தியார்கள் சொல்லக் கேள்விப் பட்டிருந்த‌ நியாயம், தர்மம் போன்றவை சார்ந்த உணர்வுகள் எல்லாம் சின்ன வேகத்தடை போட்டாலும் பொங்கிவந்த வேகமும் கோபமும் குறையுமுன்னமே சீற்றத்தோடு கிளம்பினான் தருமன்..... செல்ஃபோனில் யாரையோ அழைத்து காட்டமான சில காரியங்களை செய்துமுடிக்கும் வியூகங்களோடு உத்தரவுகளைப் பிறப்பித்தான்.... சீதம்மாளுடன் சேர்ந்து "வேணாம் ராசா...." என்று கோரஸ் போட்ட அவன் வீட்டுப் பெண்களின் ஓலம் வண்டியைக் கிளப்பிச் செல்லும்வரை அவன் காதில் விழந்துகொண்டுதான் இருந்தது.....

தூக்கம் விழித்த குழந்தைபோல விசும்பிக்கொண்டிருந்தது வானம்..... முந்தைய நாள் பெய்த மழையால் தேங்கிக்கிடந்த தண்ணீரும் சுற்றிச் சூழுந்துள்ள சகதிக்கும் நடுவே விடாது ஹார்ன் அடித்து.... கிடைக்கும் சந்தடியில் நுழைந்து செல்ல‌ வாகனங்கள் போராடிக்கொண்டிருந்த‌ சூழல் அதே சாலையில் வண்டிக்குள் சூடாய் அமர்ந்திருக்கும் தருமனுக்கு இன்னும் கொஞ்சம் வெறியேற்றுவதாய் இருந்தது...... வழிநெடுக ஸ்பீக்கர்கள் அலறவிடப் பட்டிருக்கின்றன‌... மழைமேகம் சூழ்ந்து வானம் கொஞ்சம் கறுத்துவிட்டதாம், ஸோ மதியம் மூணு மணிக்கே ரோட்டின் ஓரங்களில் நட்டுவைத்திருக்கும் ட்யூப் லைட்டுகளை ஒளிர வைத்துவிட்டார்கள்..... மழைபெய்யும் நேரம் ஓபன் லைனில் கரண்ட் எடுத்து லைட்டு களை எறிய வைத்திருந்தார்கள்..... ஷாக் அடித்து செத்தால் அவர்கள் தலைவனுக்கா நஷ்டம் என்று வழிநெடுக மக்கள் கூட்டம் மண்டையிலடித்துக் கொண்டு சென்றது...... அதே தலைவர் தன் காதில் செல்ஃபோனை வைத்துக்கொண்டு "ஙே" என்று பல்லைக்காட்டி சிரித்தவாறு போஸ் கொடுத்திருந்த ஒரு பிரம்மாண்ட க்ளோஸ் அப் ஷாட் ஃபோட்டோவை கிட்டத்தட்ட இருபதடி உயரத்தில் ஃப்ளக்ஸ் போர்டாகக் கட்டிக்கொண்டிருந்ததில் போக்குவரத்து தடைபட்டுப் பேருந்து ஒன்று செல்ல முடியாமல் நடுரோட்டில் நிற்க.... சாலையெங்கும் டிராஃபிக் ஜாம்....

டிராஃபிக்கில் மாட்டிக்கொண்ட தருமனின் மனதில் வெவ்வேறு விதமான சிந்தனைகளும் நினைவுகளும் அலையடித்த வண்ணமிருந்தன ... உடனிருந்த மச்சான்கள் இறுக்கமாய் அமர்ந்திருக்க.... தருமனின் காதில் இன்னும் "வேணாம் தருமா..." என்று சாபத்துக்கு அஞ்சும்‌ சீதம்மாளின் அழுகுரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. தன் தந்தை வாங்கிக்கட்டிக் கொண்ட சாபங்களும் அடுத்தடுத்து காட்சிமாறிய வாழ்க்கையும்கூட மனதில் வேகமாய் ஓடியது......அதேநேரம் அந்த வீட்டில் குடியிருப்பவர்களை இன்றே அடித்துத் துரத்தும் வெறியும் குறைவின்றி எக்காளமிட்டது....

விழா நாயகர் தலைவருக்கு ஒருபுறம் சிங்கிள் போஸ்... மறுபுறம் அவர் ஃபேமிலி ஃபோட்டோ...இன்னொருபுறம் ஒரு சிங்கத்தின் உடலில் அதன் தலைக்குப் பதிலாக தலைவரின் தலையை மார்ஃபிங் செய்து ஒன்று என்று ஃப்ளக்ஸ்களாக அடுக்கி வைத்திருந்தார்கள் உயிரினும் மேலான தொண்டர்கள்... வைப்பரை இயக்குமளவு இப்பொழுது மழை பெய்தது.... இந்த அரசியல் அலப்பறைகளால் இடர்பட்டுக் கிடக்கும் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டு நனையத் துவங்கிய மக்கள் எல்லாரும் கடுப்பில் நெழியத்துவங்கினார்கள்....

வெறுப்பின் உச்சத்தில் வேக ஆரம்பித்த தருமன் தனது காரின் ஜன்னலைக் கீழே இறக்கினான்.... காதைப் பிளக்கும் ஸ்பீக்கர் சத்தத்தையும் தாண்டித் திட்டித் தீர்த்துச் சபித்துக் கொண்டிருந்தது பொதுஜனம்... டிராஃபிக் போலீஸ் படாதபாடுபட்டு அந்த பஸ்ஸை ஒருவழியாக நகர்த்த... டிராஃபிக் ஜாம் மெல்லக் கலையத் துவங்கியது..... இங்கு கலவரமே நடந்து ஓய்ந்தாலும் கொஞ்சமும் கவலை இல்லாமல் ரோட்டு ஓரங்களில் தலைவரின் மனைவியின் ஆளுயரப் போஸ்டர் ஒன்றில் கோந்து தடவி அவர் படத்தைச் சுவரில் நிறக வைத்து ஆறுபேர் சேர்ந்து தேய் தேய் என்று தேய்த்து ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள்..... கூட்டம் கலைந்து, போவோர் வருவோர் எல்லாருமே தலைவர் "ஙே" என்று சிரிக்கும் அந்த பிரம்மாண்ட கட்‍‍‍-அவுட்டைப் பார்த்து மண்ணை வாறி தூற்றாத குறையாய்க் கொடூரமான சாபங்களைச் சொல்லி வயிறெறிந்து சபித்துச் சென்றனர்.....

ட்ராஃபிப்க் க்ளியராகி வண்டி நகர ஆரம்பித்தவுடனே ஜன்னலை மூடிய தருமன் மெலிதாக சிரித்தான்.....

 "ஏன்டா...இவனுகள எல்லாம் ஊரே சபிக்குது...ஆனா எவனுக்கு என்ன ஆகியிருக்கு?? யாரோ ரெண்டு பேர் சாபத்துல நான் அழியப்போறேன்னு பயப்படுறாளே என் ஆத்தா!!!.."

என்று சொல்லி "வேகமா விடுறா வண்டிய..." என்று ஓங்கி முழங்கினான் தருமன்.... சீதம்மாளின் அழுகுரல் இப்பொழுது அவன் காதில் ஒலிக்கவில்லை.....

சாபங்கள் பலிப்பதில்லை???!!!! :-)

முற்றும்.

இன்று.....

சாபங்கள் கொஞ்சம் லேட்டாக‌, இனிமேல் பலிக்குமோ??!! ஹிஹிஹி!!!


அன்புடன்,
பிரபு எம் 

.

Tuesday, November 30, 2010

தப்பு : சிறுகதை

"ஏங்க‌ இப்படி ஒரு காரியத்த‌ செஞ்சீங்க??..."

"அவளுக்காகத்தான்...."

"இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு... இதெப்படி உங்க மனைவிக்காகன்னு அர்த்தம் ஆகும்....! உண்மைய சொல்லுங்க இப்படி ஒரு காரியத்தை செய்ய எப்படி தோணிச்சு உங்களுக்கு??? என்னதான் காரணம்??"

"அவள பத்தி எனக்குத்தான் தெரியும்... அவ மனசு தாங்கியிருக்கமாட்டா..."

"ச‌ரி.... இப்போ இப்ப‌டி ந‌ட‌ந்திருச்சே இத‌ எதிர்பார்த்தீங்க‌ளா!"

"ச‌த்திய‌மா நின‌ச்சுப் பாக்க‌ல‌... நான் அவள நம்பினேன்..."

"சரி இந்த விஷ‌ய‌ம் உங்க‌ளைத் த‌விர‌ வேற‌ யாருக்காவ‌து தெரியுமா?"

"தெரியும்... எங்க‌ வீட்டுக்குத் தெரியும்..."

"வேற யாருக்குமே தெரியாதா??"

 "அவ வீட்டுக்கும் தெரியும்... சில நெருக்கமானவங்களுக்கும் தெரியும்..."

"ஏன் அவ‌ங்க வீட்டுல‌ சொன்னீங்க?"

"அவ‌ங்க‌ளுக்குத் தெரிஞ்சிருக்க‌ணும்..."

" அப்படின்னா...இப்போ ந‌ட‌ந்த‌த‌யும் அவ‌ங்க‌கிட்ட‌ சொல்லுவீங்க‌ளா....???"

".........."

"சொல்லுங்க‌... இதுவும் அவ‌ங்க‌ளுக்குத் தெரிஞ்சிருக்க‌ணும்தானே...."

"மாட்டேன் மேடம்..." கொஞ்ச‌ம் க‌ம்மிய‌ குரலில்.. அதுவ‌ரைக் க‌ல்லாகியிருந்த‌ உறுதி த‌ள‌ரத்துவ‌ங்கியது கண்ணீருடன் டாக்டரின் டேபிளில் முகம்புதைக்கிறான்...

                                                                    ***************************************

இண்டென்ஸிவ் கேரில் மெல்ல‌ ஆக்ஸிஜ‌ன் மாஸ்க்கை அவிழ்க்கிறார் சீனியர் டாக்டர்..... சுற்றிலும் பதற்றமாய் ஜுனியர் டாக்டரம்மாக்கள்... 

ஆக்ஸிஜன் அகன்றதும், துடிக்கும் தொண்டைக்குழியின் ஆழம்கூடி க‌ழுத்திலிருந்து சிவ‌ந்து புடைக்கும் ந‌ர‌ம்புவேர்க‌ள் நெற்றிவ‌ரை நீள்கிற‌து... சுவாச‌த்துக்குக் காற்றுகேட்டு ஈனமாய் க‌ணைக்கிறாள் க‌ண்க‌ள் விரிய‌....

"She couldn't breathe doctor..."

"ஷ்ஷ்ஷ்ஷ்....வெயிட் ப‌ண்ணுங்க‌...."

"............"

"............"

"பேஷ‌ண்ட் ஏஜ் என்ன‌ டாக்ட‌ர்..."

"32"

க‌ணைப்பின் ஸ்ருதி மாறுகிற‌து... மீண்டும் ஆக்ஸிஜ‌ன் மாஸ்க் பொருத்த‌ப்ப‌ட‌ இத‌ய‌த்துடிப்பு மீண்டும் ஓர‌ள‌வுக்கு இய‌ல்புநிலை மீளுகிற‌து....


                                                                     ***************************************

டாக்ட‌ரின் டேபிளில் முக‌ம்புதைத்து அழுது ஓய்ந்திருந்தான் வெங்க‌ட்...

"உங்க‌ளுக்கு என்ன‌ வ‌ய‌சு?"

"36"

"க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌ப்ப‌ உங்க‌ளுக்கும் உங்க ஒய்ஃப்க்கும் என்ன‌ வ‌ய‌சு?"

"... என‌க்கு 30 அவ‌ளுக்கு 26..."

" நீங்க‌ சொன்ன‌ அந்த‌ ஆக்ஸிடெண்ட் எப்போ நடந்திச்சு..?"

" நாலு வ‌ருஷம் முன்னாடி..."

"அந்த ஆக்ஸிடெண்டுக்கு முன்னாடி ரெண்டு வ‌ருஷ‌த்துல‌ குழந்தை எதுவும்..??"

" அப்போதைக்கு வேண்டாம்னு இருந்துட்டோம்"

"ஏன்...???!!......ச‌ரி விடுங்க‌... ஆர் யூ ஓகே ந‌வ்?? ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க... ட்ரை டு ரிலாக்ஸ் யுவர்செல்ஃப்"

"யெஸ் யெஸ்.. ஐம் ஃபைன்..." நிமிர்ந்து உட்கார்ந்து முக‌த்தைத் துடைத்துக்கொள்கிறான்....
"அந்த ஆக்ஸிடெண்ட்ல நீங்களும் இருந்திருக்கீங்க??"
"ஆமா.... ஆனா எனக்கு வெறும் ஃப்ராக்சர்ஸ்தான்... அவளுக்குத்தான்... ..."

கொஞ்சம் இடைவெளி....

"டாக்ட‌ர்..... அவ‌ பொழ‌ச்சுக்குவாளா??"

"அவ‌ங்க‌ பொழ‌ச்சுக்க‌ணும்னுதான் நெஜமாவே நென‌க்கிறீங்க‌ளா??"

"போதும் டாக்ட‌ர்... போதும்..... இவ்ளோ நேர‌ம் என்ன‌வோ நான் ஒரு குற்ற‌வாளி மாதிரி கேள்வியா கேட்டுத் துளைச்சுட்டு இருக்கீங்க‌.... நான் செஞ்ச‌ தியாக‌ம் உங்க‌ளுக்குப் புரிய‌வேயில்லயா?? ஒரு டாக்ட‌ரா யோசிக்காம‌ ஒரு சாதாரண‌ பொம்ப‌ள‌யா இருந்து  யோசிச்சுப் பாருங்க‌..... என்னோட தியாகமும் அதனால நான் தாங்கிக்கிட்ட வலியும் உங்களுக்குப் புரியும்..."

"ஒரு சாதார‌ண‌ பொண்ணாத்தான் கேக்குறேன்... இதுல "தியாகம்" எங்கயிருந்துங்க வந்திச்சு?? நீங்க‌ செஞ்ச‌து தியாக‌ம்னா இந்த‌ நால‌ரை வ‌ருஷமும் ஒரு குழ‌ந்தையும் இல்லாம "குறை"யுள்ள‌ உங்க‌ளையும் ஏத்துக்கிட்டு ம‌ற்ற‌ எல்லாவித‌த்துல‌யும் உங்க‌ளுக்கு ம‌னைவியா இருந்திருக்காளே... அவ‌ செஞ்ச‌தும் அப்போ தியாக‌ம்தானே...."

"ஏன்தான் ஆண்ட‌வ‌ன் உங்க‌கிட்ட‌போய் என்னை இப்ப‌டி ப‌தில்சொல்ல‌ வெச்சு வேடிக்கை பாக்குறானோ...?? என‌க்கு என்ன‌ டாக்ட‌ர்???? என‌க்கு எதுக்கு க‌வுன்சிலிங்??? என்ன‌ விட்டுடுங்க‌... அவ‌ள‌ த‌ய‌வுசெஞ்சு காப்பாத்திக் குடுங்க‌..... அவ‌ செஞ்ச‌ துரோக‌த்தையும் கூட‌ என்னால‌ தாங்கிக்க‌ முடியும்...."

"துரோகம்... ஹ்ம்ம்ம்...துரோகத்தைத் தாங்கிக்கிட்டு.... மறுபடி அவ‌ங்க‌ அப்பா அம்மாவையெல்லாம் கூட்டிவெச்சு ஊருக்கே அறிவிச்சு ஏற்கெனவே மனைவியுடைய குறையை தாங்கிக்கிட்ட புனிதரா இருக்குற‌ நீங்க... மனைவி செஞ்ச துரோகத்தையும் ஏத்துக்கிட்டு உங்க சுற்றுவட்டாரத்துக்கு தெய்வ‌மாக‌ப் போறீங்க‌ தானே???"

"..................."

" நீங்க‌ செஞ்ச‌து தியாக‌ம்னா.... உங்க‌ "குறை"யை ஒருத்த‌ர்கிட்ட‌யும் சொல்லாம‌ இத்த‌ன‌ நாள் குடும்ப‌ம் ந‌ட‌த்தியிருக்குற‌ அவ‌ செஞ்சது தியாகமில்லயா??..... அவ‌ செஞ்ச‌து துரோக‌ம்னா உங்களோட ஸோ‍‍-கால்டு தியாக‌ங்க‌ளையெல்லாம் ஊர்முழுக்க‌ச் சொல்லிவெச்சிருக்கீங்க‌ளே... அது துரோக‌மில்ல‌யா???.... ச‌ரி இதையும் ஒரு சாதார‌ண‌ பொம்பள‌யாத்தான் கேக்குறேன்.... "இந்த‌ நாலு வ‌ருஷ‌த்துல நீங்க‌ உங்க‌ ம‌னைவிக்கு உங்க‌ பாஷையில‌ "துரோக‌ம்" செஞ்ச‌தே இல்ல‌யா???" இந்த‌க் கேள்விக்கு என்கிட்ட‌ நீங்க‌ ப‌தில் சொல்ல‌ வேண்டாம்..... உங்க‌ள‌ நீங்க‌ளே கேட்டுக்கோங்க‌....


க‌த‌வைத் திறந்து விரு விரு வென‌ வெளியேறினான் வெங்க‌ட்.....


                                                                               ****************************************


ஆக்ஸிஜ‌ன் துணையோடு இத‌ய‌த்துடிப்பு மெல்ல‌ மெல்ல‌ சீராவ‌தாக‌ ஓர் உண‌ர்வு....

"இப்போ மாஸ்கை ரிமூவ் ப‌ண்ணிப் பார்க்க‌லாமா டாக்ட‌ர்?"

"ஹ்ம்ம்ம்... நோ.. லெட்ஸ் வெயிட்.. இப்போதான் கொஞ்ச‌ம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது...

வெல்... இவ‌ங்க‌ ஹ‌ஸ்பெண்ட் வெளிய‌தான் இருக்காரா?? ஃபார்மாலிடீஸ்ல‌ யெல்லாம் கையெழுத்து வாங்கிடுங்க‌...?? எனிடைம் ச‌ரிஜ‌ரிக்கு சான்ச‌ஸ் இருக்கு...."

"யெஸ் டாக்ட‌ர்... மேட‌ம்கிட்ட‌ க‌வுன்சிலிங் செஷ‌ன்ல‌ இருக்காரு... ஹி சீம்ஸ் டீப்லி டிப்ரெஸ்ட்"

"த‌ன்னால‌ தாம்பத்யத்தில் ஈடுப‌ட‌ முடியாது... தன்னோட உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சிருந்தும் இந்த‌ப் பொண்ணு...ச்சே... இட்ஸ் பாதெடிக் டாக்டர்.."

"இல்ல‌ம்மா த‌ட்ஸ் ரிய‌லி வெரி எம்பராஸ்ஸிங்.... அந்த‌ப் பொண்ணுக்குத் த‌ன‌க்கு அப்ப‌டியொரு குறையிருக்குன்னு தெரியாது.... என்ன காரணமோ தெரியல அவ பாதிக்கப்பட்ட அதே ஆக்ஸிடெண்டுக்கு அப்புற‌ம் த‌ன‌க்குத்தான் அப்படியொரு 'குறை' வந்துட்டதா மாத்தி சொல்லியிருக்கான் அவ‌ ஹ‌ஸ்பெண்ட்..... தெரியாம‌ இந்த‌ப் பொண்ணு த‌ப்புப் ப‌ண்ணிட்டா....."


                                                                                             *********************************************
பிரபு எம்

Monday, April 26, 2010

கால்ஷீட் : சிறுகதை

ஏற்கெனவே எழுதி யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த‌ கதை... இங்கு சில மாற்றங்களுடன்......


கால்ஷீட் 




"கருப்பு.....

......வெள்ளை


கருப்பு........

......மீண்டும் வெள்ளை...


லைட்ஸ் ஆன்.......

........லைட்ஸ் ஆஃப்


லைட்ஸ் ஆன்.......

.......லைட்ஸ் ஆஃப்"


கண்களை ஒரு சீரான இடைவெளியில் அகலத் திறந்து திறந்து மூடுவதால் நம்மாழ்வாருக்கு இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி வரும் உணர்வைத் தந்தது!


"ஏன் மருத்துவமனைகள் எல்லாமே மொத்தமாகவே வெள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன???"

என்று மனதில் கேள்வி தோன்றுகிறது.. அதற்கு பதில் தேடாமல்நம்மாழ்வார் மீண்டும் மல்லாந்து படுத்தவாறு விட்டச் சுவரின் வெள்ளையோடு தன் 'கண்மூடி' விளையாட்டைத் தொடர்கிறார்......

இதுபோன்று சுவாரஸ்யமில்லாத பொழுதுகளை அவர்தனது கடந்தகாலங்களில் அனுமதித்ததேயில்லை. ஆனால் இன்று..... இத்தகைய பொழுதுகளையும் தன்னால் கடக்க முடிவதைக் காணும்போது, இலக்கு ஒன்றை அடையும் பொருட்டுத் தனக்கு இதுவும் சாத்தியமே என்று புரிந்துகொள்கிறார்... மீண்டும் அதே கண் சிமிட்டல்....

"ஏன் மாமா கண்ணை இப்படி அலட்டிக்கிறீங்க? கண் கூசுதா?? ஜன்னலை அடைச்சிடலாமா??"

இன்ஞ்சினியரான தங்கைப் பையன் சுந்தர் கேட்க, அலுங்காமல் கழுத்தைமட்டும் அவன்புறம் அசைத்து மெலிதாகச் சிரித்துக் கண்ணடிக்கிறார்... "பேச முடியலையா மாமா??".. அதற்கும் சிரிப்புதான் பதில்... உண்மையில் அவர் தன் குரலை சேமித்துக் கொண்டிருக்கிறார்.. கடந்தமுறை வாழ்வில் முதன்முறையாக இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த‌போதும் இப்படித்தான் வைராக்கியமாகத் தன் உடலில் மிச்சமிருந்த சக்திகளையெல்லாம் சேமித்துக்கொண்டுத் திரும்பினார்... இம்முறையும் அதையே செய்யப்போவதுதான் தனது சவால் என்பது நம்மாழ்வாரின் கணக்கு!! எல்லாம் காதலுக்காக!! தான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலான நடிப்பின்மீது கொண்ட வெறித்தனமான காதலுக்காக....!!


தொடர்ந்து ஒரேயிடத்தில் பார்வைப் பதித்துப் படுத்திருக்கும் தன் மாமாவிடம் அன்றைய செய்தித்தாளில் அவரைப் பற்றி வெளிவந்துள்ள செய்தி ஒன்றை மெதுவாகக் காட்டினான் சுந்தர்...

 "மருத்துவமனையில் தேறிவருகிறார் நடிகர் நம்மாழ்வார்" என்று கூறியது அந்தப் பெட்டிச் செய்தி....

நம்மாழ்வார் முகத்தில் திடீர் பிரகாசம்... பிரபலமான நடிகருடன் நம்மாழ்வார் இணைந்து நடிக்கும், அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படம், நம்மாழ்வார் உடல் நலம் தேறிவருவதற்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறது அந்தச் செய்தி.. நம்மாழ்வாரை வைத்து மிக அண்மையில் மிகப்பெரியதொரு வெற்றிப்படம் கொடுத்த இளம் இயக்குனர் சுரேஷின் அடுத்தப்படம் அது... தனது முந்தைய படத்தைப் போன்றே இந்தப் படத்திலும் நம்மாழ்வாரின் பாத்திரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என்றும் அவருக்காகக் கதையை வேண்டுமானாலும் மாற்றுவோமே தவிர வேறுயாரையும் ந‌டிக்க‌வைக்கும் எண்ண‌மில்லை என்று இய‌க்குன‌ர் சுரேஷ் திட்ட‌வ‌ட்ட‌மாக‌க் கூறியிருப்பதாகவும், மேலும் இது மிக‌ப்பிர‌ப‌லமான‌ தயாரிப்பாள‌ரான‌ ர‌ம‌ண‌ராஜனின் படம் என்றும் செய்தியில் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து...செய்தியைப்பார்த்த‌வுட‌ன் ஏதேதோ ர‌சாய‌ண‌ மாற்ற‌ங்க‌ள் ந‌ம்மாழ்வாரிட‌ம்... சுந்த‌ரைப்பார்த்து பெருமித‌மாக‌ப் புன்ன‌கைக்கிறார்....

இந்த முறை மனதின் ஒருநிலையைத் தொடர முடியவில்லை அவரால்!!

"கருப்பு..வெள்ளை...லைட்ஸ் ஆன்...சுரேஷ்....அந்த சந்திப்பு...லைட்ஸ் ஆஃப்....ரமணராஜன்.....அந்த அறிவிப்பு...கருப்பு..வெள்ளை..."

மனம் இடையில் வேறொரு அலைவரிசையில் பயணித்தது....,சில பழைய உரையாடல்கள் மறுஒலிபரப்பாக எதிரொலித்தது அவருக்கு மட்டும்!!!

"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார்!!!!..."

கருப்பு....வெள்ளை.... கருப்பு....வெள்ளை....

"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

லைட்ஸ் ஆன்....லைட்ஸ் ஆஃப்......"

எழ‌ வேண்டும் என்று தோன்றியிருக்கும் போலும்....ம‌னித‌ர் இப்போதுதான் உண‌ர்கிறார் த‌ன்னுடைய‌ கால்க‌ள் முற்றிலுமாக‌ செய‌லிழ‌ந்து போயிருப்ப‌தை......சில நிமிடப் போராட்ட‌ம் ப‌லன‌ளிக்க‌வில்லை... அவ‌ரால் த‌ன் உட‌லை அசைக்க‌ இய‌ல‌வில்லை.....அதுவரை அவர் உணராத வேதனை அவரை ஆட்கொண்டு உடல் முழுதும் பரவுகிறது..... எழுந்து மீண்டும் தொழிலுக்குத் திரும்பும் தனது மனக்கணக்கு எங்கே பொய்த்துவிடுமோ?? என்று சதி செய்யும் தன் உடல்நிலையை நினைத்தவாறு சுந்தரை நோக்கி மீண்டும் த‌லை ச‌ரித்து சிரித்த‌முக‌மாய்ப் பார்க்கிறார்... அந்த அழுத்தமான பார்வையில் பல அர்த்தங்கள்.... இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் இறங்கிப் போகிறது....அதே புன்னகையோடு சுந்தரையே பார்த்தவண்ணமாய் இருக்கிறார் இமைக்காமல்......

சுந்த‌ர் பிற‌ந்த‌ போதே ந‌ம்மாழ்வார் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ ந‌டிகர்தான். அவரைக் கையாள்வது மிகக் கடினம் என்று அவர் குடும்பத்திலேயே ஓர் உணர்வு இருந்தது. க‌தாநாய‌கனாக‌ சில‌ப‌ட‌ங்க‌ளிலும், வில்லனாக‌வும், குண‌ச்சித்திர‌ ந‌டிகராக‌வும் ப‌ல்வேறு ப‌ட‌ங்க‌ளிலும் நடித்துத் த‌ன‌து தனித்துவ‌மான‌ ந‌டிப்பாற்ற‌லால் எப்பொழுதுமே உச்ச‌த்திலிருந்தார்.

 "சாதாரண‌ வாழ்க்கை வாழும் சராசரி ம‌னித‌ன் மிக‌க் கொடுத்துவைத்த‌வன், ஏனென்றால் அவ‌ன் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள‌ப்பட்டுவிடுகிறான்!"

 என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஒரு பக்குவப்பட்ட மனிதனாய்........

"சாதிக்கவே பிறந்தேன்" என்று தன்னை இள‌மையிலிருந்தே ஆழ‌மாக‌ ந‌ம்பி வாழ்ந்து வந்த‌ ந‌ம்மாழ்வார், தனது சாதனைக் க‌ள‌மான‌ நடிப்பைத்தவிர‌ வேறு எதிலுமே பொறுப்பாக‌ இருந்த‌தில்லை! அறுவைசிகிச்சை முடிந்திருந்த தன் த‌ந்தையை ஒருநாள் பார்த்துக் கொள்ள‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு அனுப்பிவைத்த‌போது, நடிக்க‌ வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இளைஞனான நம்மாழ்வார், சாதிக்கக் காத்திருக்கும் த‌ன‌து நேர‌த்தைத் த‌ன் குடும்பத்தின‌ர் பாழ்ப‌டுத்துவதாகப் பயங்கரமாய்க் கொந்த‌ளித்ததையும் ச‌ரி, பிறகு பெரிய‌ ந‌டிக‌னாகித் தான் க‌ட்டிய‌ மிக‌ப்பெரிய‌ வீட்டில் ஆசையாய்த் த‌ன்னைப் பிர‌ம்மாண்ட‌மாய்ப் ப‌ட‌ம்பிடித்து வீட்டின் முக‌ப்பில் மாட்டிய‌ ப‌ட‌த்தில், மாட்டிய‌ அன்றே சிறுவ‌னான‌ த‌ங்கைப்பைய‌ன் சுந்த‌ர் மீசை வ‌ரைந்திட, அனைவ‌ரும் மிர‌ண்டுபோய்க் காத்திருந்த‌ போது வ‌ந்து பார்த்துவிட்டு "என‌க்கு மீசைவெச்சா ந‌ல்லாதானிருக்கும்போல‌...." என்றும‌ட்டும் கூறிவிட்டு அல‌ட்டிக் கொள்ளாம‌ல் சென்றது மட்டுமன்றி அந்தப் படத்தை இறுதிவரை மாற்றாமல் இருந்ததையும் ச‌ரி... உண்மையில் யாராலும் அவ‌ரைப் புரிந்துகொள்ள‌வே முடிய‌வில்லைதான்...!!

சுந்த‌ர் அறைக்கு வெளியே கொஞ்சம் பதற்றத்தோடு ம‌ருத்துவ‌ர்க‌ளோடு ஏதோ சீரிய‌ஸாக‌ப் பேசிக்கொண்டு இருக்கிறான்..... இர‌ண்டு ந‌ர்சுக‌ள் அறையைவிட்டு வெளியே வந்தபின்.....சுந்த‌ர் ந‌ம்மாழ்வாரின் மிக‌ அருகே சென்று அம‌ர்ந்து அவ‌ர் முக‌த்தைப் பார்க்க......ந‌ம்மாழ்வாரின் க‌ண்கள், சிரித்த முகமாய் இப்போதும் த‌ன் ம‌ரும‌க‌னின் க‌ண்க‌ளை ஆழ‌மாக‌ப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌......மௌன‌த்தில் ஏதோ பேசிக்கொள்கிறார்க‌ள் போல‌...

அன்று காலையில் ஒரு ப‌தினோரு ம‌ணிய‌ள‌வில் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜனின் அலுவ‌ல‌க‌த்திற்கு இய‌க்குன‌ர் சுரேஷ் வ‌ந்திருந்தார்..... அவ‌ர்க‌ள‌து கூட்டுமுய‌ற்சியில் உருவாகிக் கொணடிருக்கும் திரைப்ப‌ட‌ம் கிட்ட‌த்த‌ட்ட எண்ப‌து ச‌த‌வீத‌ம் முடிந்துவிட்ட‌ நேர‌த்தில், உண்மையிலேயே இப்போது ந‌ம்மாழ்வாருக்காக‌த்தான் ப‌ட‌ப்பிடிப்பு வேலைக‌ள் காத்திருக்கின்றன..... இத‌ர‌க் காட்சிக‌ளெல்லாம் ப‌ட‌மாகிவிட்ட‌ வேளையில் தயாரிப்பாள‌ரிட‌ம், ரிலீஸ் மற்றும் அடுத்த‌ ப‌ட‌ப்பிடிப்பு ஷெட்யூல் ப‌ற்றி விள‌க்கிக் கொண்டிருந்தார் சுரேஷ்....

. "அவரோடத் த‌ங்க‌ச்சிப் பைய‌ன்தான் ஹாஸ்பிட்ட‌ல்ல‌ அவ‌ரைப் பாத்துக்கிறாரு... எதுவும் தெளிவா சொல்ல‌மாட்டறாரு... டாக்ட‌ரை இன்னும் பார்க்க‌ முடிய‌லைனு சொல்றாங்க‌..எப்டினாலும் ச‌ரி ந‌ம்மாழ் சார் சொல்லிட்டுப் போனபடி இன்னும் ரெண்டு நாள்ல‌ வ‌ந்துடுவார்னு ந‌ம்புறோம் சார்..."

என்று சுரேஷ் சொல்ல‌... கருத்தாய்க் கேட்டுக்கொண்டிருக்கும் ரமணராஜன், "ஒண்ணும் பிர‌ச்னையில்ல‌... எவ்வ‌ள‌வு நாள் ஆனாலும் ச‌ரி.. அவ‌ர் முழுசா குண‌மாகிட்டு வ‌ர‌ட்டும்..." அழுத்தமாய் சொல்லிவிட்டுத் தன் உத‌வியாள‌ரிடம்,
 "அவ‌ர் என்ன‌தான் ம‌றுத்தாலும் எப்படியாவது ஹாஸ்பிட்ட‌ல் செல‌வு முழுசும் ந‌ம்ம‌ளே செட்டில் ப‌ண்ணுற‌ மாதிரி ஏற்பாடு செஞ்சிடுங்க‌.." என்று உத்த‌ர‌விடுகிறார்....

சுரேஷ் எவ்வித‌ உண‌ர்வையும் முக‌த்தில் காட்டாத‌ப‌டி ர‌ம‌ண‌ராஜ‌னையே பார்த்துக்கொண்டிருந்தார்..... ப‌ல‌வ‌ருட‌ ப‌ரிச்சிய‌மும் ந‌ட்பும் கொண்ட‌வ‌ரான‌ ந‌ம்மாழ்வாரைப் ப‌ற்றி ஏனோ சிலநாட்களாக அடிக்க‌டி நினைவ‌லைக‌ளில் சிக்கிக் கொள்கிறார் ர‌ம‌ண‌ராஜ‌ன்....

தொழிலில் என்றுமே ஒரு சிர‌த்தையான‌ காத‌ல் உண்டு ந‌ம்மாழ்வாருக்கு... சிறிய‌ ந‌டிக‌ராய் சில‌கால‌ம் ம‌ட்டுமே இருந்தார், அந்த‌க்கால‌ம்தொட்டு ஒருநாள்கூட‌ப் ப‌ட‌ப்பிடிப்பு அவ‌ரால் தட‌ங்க‌ல் ப‌ட்ட‌தே இல்லை...சினிமாமீது தான் கொண்டிருக்கும் அதிதீவிர‌ ஈடுபாட்டை அனைவ‌ரிட‌மும் எதிர்ப்பார்ப்பார்... மீறுகையில் கடும்கோப‌ம் கொள்வார்! உண‌ர்ச்சிம‌ய‌மான‌ ம‌னித‌ர்.....திருமண வாழ்வில் தோல்வி..... ஓய்வின்றி ந‌டிப்பார்..... க‌ளைப்பினால் தன் ந‌டிப்பின் த‌ர‌ம் பாதிக்க‌ப்ப‌ட்டுவிடுமோ என்று எப்போதுமே ஒருவித‌மான‌ ம‌னஅழுத்தம் அவ‌ர‌து ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்தை ரொம்ப‌வே பாதித்து வ‌ந்த‌து... அதிலிருந்து விடுப‌ட‌ எப்போதுமே அவ‌ர‌து விர‌ல்க‌ளுக்கிடையே சிக‌ரெட் ஒன்று அவ‌ரைப் போல‌வே ஓய்வின்றி புகைந்து கொண்டிருக்கும்! ந‌ள்ளிர‌வு முழுதும் தூக்க‌மில்லாத‌தால் அதிக‌மாக‌வே குடிப்பார்.....

நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்.....ஒரு தீபாவ‌ளி தின‌ம்..... ந‌ம்மாழ்வாரின் நான்கு ப‌ட‌ங்க‌ள் அன்று ரிலீஸ்! இர‌ண்டில் வில்ல‌னாக‌வும், ஒன்றில் மிக‌வும் சாந்த‌மான‌ ம‌னித‌ராக‌வும் இன்னொன்றில் நாயகனின் பெரிய‌ ப‌ண‌க்காரத் தந்தையாகவும் ந‌டித்திருந்தார்... பாராட்டுக‌ள் வ‌ந்து குவிந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌, இந்நிலையில் அவ‌ர் கடந்த‌ வ‌ருட‌ம் ந‌டித்திருந்த‌ ஒரு ந‌ல்ல‌ திரைப்ப‌ட‌த்திற்காக‌த் தேசிய‌ விருதுக்கு அவ‌ர் பெய‌ர் இறுதிச்சுற்றில் ப‌ரிசீலிக்க‌ப்ப‌டுவ‌தாகவும் செய்தி வெளியாகிய‌து... அதே நேர‌த்தில், மிகப்பெரிய‌ ந‌டிக‌ர் ஒருவ‌ரின் கால்ஷீட்டைப் பெற்றிருந்த‌ ந‌ம்ப‌ர் ஒன் தயாரிப்பாளரான‌ ர‌ம‌ண‌ராஜ‌ன் த‌ன்னுடைய‌ ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ வேண்டிக்கேட்டார்... முத‌லில் இய‌க்குன‌ர் வ‌ந்து க‌தை சொன்ன‌போது ந‌ம்மாழ்வார் த‌விர்க்க‌ எண்ணிய‌ க‌தை அது.... இருப்பினும் ர‌ம‌ண‌ராஜ‌னுக்காக‌ ச‌ம்ம‌தித்தார் சில நிப‌ந்த‌னைக‌ளோடு....


"தேசிய‌விருது அறிவிப்பு: ந‌ம்மாழ்வார் சிற‌ந்த‌ ந‌டிக‌ர்!!" என்று அறிவித்த‌து ஒரு மாலை நாளித‌ழ்..... திடீரென்று வாழ்த்தும‌ழை பெய்ய‌த்தொட‌ங்கிய‌து ந‌ம்மாழ்வாரின் தொலைபேசியில்..... இன்னும் அதிகார‌ப்பூர்வ‌மாகத் தான் தெரிவிக்க‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தால் கொஞ்ச‌ம் சுதாரிப்புண‌ர்வுட‌ன்தான் அனைத்து வாழ்த்துக்க‌ளையும் பெற்றுக்கொண்டிருந்தார் ந‌ம்மாழ்வார்... அடுத்த‌ நாள் காலையில் அதிகார‌ப்பூர்வ‌ அறிவிப்பில் மாபெரும் நாய‌க‌னான‌ ஒரு வ‌டநாட்டு ந‌டிக‌ர் சிற‌ந்த‌ ந‌டிக‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டார்....ப‌ல‌ ச‌ல‌ச‌ல‌ப்புக‌ள் எழுந்த‌ன‌... அர‌சிய‌ல் கார‌ண‌ங்க‌ளும் கூற‌ப்ப‌ட்ட‌ன‌...

ந‌ம்மாழ்வார் அதிகாலையில் அழைக்க‌ப்ப‌ட்டார்.... அன்றைக்கு ஷூட்டிங் கேன்ச‌ல் என்று புரொட‌க்ஷ‌ன் மேனேஜ‌ர் கூறினார்..தெளிவான‌ கார‌ணமேதும் இல்லை.... பின்பு மெதுவாக, அந்தப் ப‌ட‌த்தின் க‌தாநாய‌க‌ன் திரைக்க‌தையில் ந‌ம்மாழ்வாருக்கு அளிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ முக்கிய‌த்துவ‌த்தினால் க‌டும் அதிருப்தி அடைந்துள்ள‌தாக‌வும் அத‌ன் விளைவாக‌ திரைக்க‌தையில் மாற்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்து வ‌ருவ‌தாக‌வும், கார‌ண‌ங்க‌ள் க‌சிந்த‌ன‌......இதெல்லாம் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டுப் போயிருந்தாலும் இம்முறை இந்த சம்பவங்கள் அர‌ங்கேறிய‌ வேளையும் வித‌மும் ந‌ம்மாழ்வாரை ரொம்ப‌வே காய‌ப்ப‌டுத்திய‌து.....

தன்னைச் சுற்றி இப்ப‌டி மாறி மாறி ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌க்கும் வேளையில் ப‌ட‌ப்பிடிப்புத் த‌டைப‌ட்டிருப்ப‌தால் அவ‌ரின்மீது ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ தனிமை திணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து...... இந்த‌ சூழ்நிலையில் ர‌ம‌ண‌ராஜ‌னை ச‌ந்தித்தார் ந‌ம்மாழ்வார்... இருத‌ர‌ப்பிலும் வெவ்வேறு விதமான அழுத்த‌ங்க‌ள் ஒரே பட‌த்தினால்.... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ப் பேச்சுவார்த்தையில் வார்த்தைக‌ள் த‌டித்துப் போய்விட‌...... நீண்ட நேரம் சத்தமாக வாக்குவாதம் நடந்தது.....ஒரு நிர்பந்தமான க‌ட்ட‌த்தில்.... நீண்ட‌ மௌன‌த்துக்குப்பின்.... ந‌ம்மாழ்வார்......


"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

என்று சொல்லிவிட்டு அமைதியாக‌ வெளியேறினார்... ப‌ல‌ரும் அதிர்ச்சியில் பார்த்திருக்க‌... அவ‌ர் காரில் ஏறிச்செல்லும்வ‌ரை ப‌த‌ற்ற‌மாக‌ முறைத்திருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன். காரில் வீடு செல்லும் வ‌ழியில்.....தன் தொழில்வாழ்வில் ஏதோவொரு புய‌ல் வீசப்போவ‌தை உண‌ர்ந்திருந்தாலும்... ப‌ல‌ மைல்க‌ற்க‌ளைக் க‌ட‌ந்துவிட்ட‌ ப‌ய‌ண‌ம‌ல்ல‌வா... அதனால் அதிக‌ம் அச‌ர‌வில்லை... மேற்கொண்டு இவ்விஷ‌ய‌த்தில் ம‌வுன‌ம் காப்ப‌து என்று முடிவெடுத்திருந்தார்...


"ந‌ம்மாழ்வார் ப‌ட‌த்திலிருந்து அதிர‌டி நீக்க‌ம்" என பரபரப்பாக செய்தி வெளியானது..... ச‌ற்றும் எதிர்பாராதவித‌மாக‌ த‌யாரிப்பாள‌ர் த‌ர‌ப்பிலிருந்து பிர‌ப‌ல‌ ப‌த்திரிக்கையொன்றில் விள‌க்கமும் வெளியாகியிருந்த‌து!! நம்மாழ்வரை வீழ்த்த ர‌ம‌ண‌ராஜ‌ன் எடுத்திருந்த‌ அஸ்திர‌ம் வித்தியாச‌மான‌து...

 "எந்த‌ நேர‌த்திலும் உயிரிழ‌ந்துவிடும் நிலையிலிருக்கும் ந‌டிக‌ரை வைத்துப் ப‌ட‌ம் எடுப்ப‌து த‌ன‌க்கு சாத்திய‌மில்லை!!"
என்று கூறியிருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன்...

 "சிற‌ந்த‌ ந‌டிக‌ரான‌ ந‌ம்மாழ்வார் த‌ன‌து உட‌ல்ந‌‌ல‌னைப் ப‌ற்றிக் க‌ருத்தில் கொள்ள‌வில்லை, சொந்த‌ வாழ்க்கையில் க‌வ‌ன‌மின்றி ம‌ன‌ அழுத்த‌த்திற்கு ஆளான‌மையினால் போதைக்கு அடிமையாகி இப்போது க‌வ‌லைக்கிட‌மான‌ நிலையிலிருக்கிறார்... எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடும் நிலையிலிருக்கும் அவரை வைத்துப் ப‌ல‌கோடி ரூபாய் முத‌லீடு செய்யும் தயாரிப்பாள‌ர்க‌ள் இப்ப‌டி ரிஸ்க் எடுக்க‌ முடியாது... வ‌ளர்ந்துவ‌ரும் ந‌டிக‌ர்க‌ள் ந‌ம்மாழ்வாரின் க‌தையில் பாட‌ம் க‌ற்றுக் கொள்ள வேண்டும், நடிகர்கள் தயாரிப்பாளர்களின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று மொத்தமாகவே திரியைக் கொளுத்திப்போட்டிருந்தார்.....

சுந்த‌ரின் அலைபேசிக்குத் த‌ன் வீட்டிலிருந்த‌ப‌டி அழைப்புக்கொடுத்தார் இய‌க்குன‌ர் சுரேஷ் முத‌ல்முறை ம‌ணி முழுதாக‌ அடித்தும் ப‌தில் இல்லை அடுத்த‌முறை ஸ்விட்ச் ஆஃப் செய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌த் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து!!... ப‌ட‌ப்பிடிப்பு நிறுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌தால் த‌னிமை இம்முறை சுரேஷுக்கு..... இந்த‌ ஓய்வும் தேவையாக‌த்தானிருந்த‌து... .சுரேஷின் மனம் சில நினைவுகளை வட்டமிடத் துவங்கியது....."ந‌ம்மாழ் சார்..!!" ......ம‌ற‌க்க‌ முடியாத‌ அந்த‌ முத‌ல் சந்திப்பு...!!

ர‌ம‌ண‌ராஜ‌னின் அறிக்கை வெளிவ‌ந்த‌துதான் தாம‌த‌ம்... ந‌ம்மாழ்வாரின் உட‌ல்நிலையைப் பற்றி தின‌ம்தின‌ம் வ‌த‌ந்திக‌ள்!! ந‌டித்திருந்த‌ இர‌ண்டுப‌ட‌ங்க‌ள் ப‌டுதோல்விய‌டைந்த‌ன‌.....காட்சிக‌ள் முற்றிலுமாக‌ மாறிப்போய்..... ந‌டிப்பில் ஊறித்திளைத்த‌ க‌லைஞன் கொஞ்சம் இளைத்துப் போனமையால் சில‌ ஊறுகாய்ப் பாத்திர‌ங்க‌ளுக்கு அழைக்க‌ப்ப‌ட்டார்..... மொத்தமாகவே நடிப்பை நிராகரித்துத் தன் பொழுதுகளை ஏசி குளிரிலும், தியேட்ட‌ர் இருளிலும் க‌ழிக்க‌த் துவ‌ங்கினார்..... இர‌ண்டுவ‌ருட‌ங்க‌ள் உருண்டோடிப் போயின‌.... அதீதமான மன அழுத்ததால் இய‌ல்பான‌ முதுமையுடன் உட‌ல் ந‌ல‌ம் இன்னும் கெட்டுப்போயிருந்த‌து, எனினும் உயிருட‌ன்தானிருந்தார்!! அப்போது ந‌ம்மாழ்வாரைத் தேடி சுரேஷ் என்று ஓர் இள‌ம் இய‌க்குன‌ர் வ‌ந்திருந்தார் த‌ன் முத‌ல்ப‌ட‌த்திற்குக் க‌தையைத் தூக்கிக் கொண்டு!!!


"வேண்டாம்ப்பா...ஒருவேளை ப‌டம் பாதி போய்கிட்டிருக்கும்போது நான் செத்துப்போயிட்டா உங்களுக்கெல்லாம் ரொம்ப‌ ந‌ஷ்ட‌மாகிடும்... நீ வேற‌ ஏதாவ‌து ஆரோக்ய‌மான‌ ஆளை வெச்சு இந்த‌ப் ப‌ட‌த்தை எடுத்துக்கோ!!" கொஞ்ச‌மும் ஆர்வ‌மின்றி சொன்னார் ந‌ம்மாழ்....


"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார் !!!!..." என்றுவ‌ந்த‌து ப‌தில்!!!
க‌தையைக் கேட்ப‌தைத்த‌விர‌ வேறுவ‌ழியில்லை ந‌ம்மாழுக்கு!!

கதையைக்கேட்ட‌ மாத்திர‌த்தில் நீண்ட‌ நாட்களாக ஓய்ந்து கிடந்த‌ ப‌ட்டாம்பூச்சிக‌ள் ப‌றக்க ஆரம்பித்தன‌ ந‌டிக‌ருக்குள்!! ப‌ட‌ம் ஆர‌ம்பித்த‌து..... த‌ன‌க்கே த‌ன‌க்கான‌ க‌தையாக‌ உண‌ர்ந்தார்.... இடையே உண்மையிலேயே நோய்வாய்ப்ப‌ட்டுத் த‌ன் வாழ்நாளில் முத‌ன்முறையாக‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுத் தன் ச‌க்திக‌ளையெல்லாம் சேக‌ரித்துக்கொண்டுத் திரும்பி வ‌ந்து ந‌டித்துக் கொடுத்தார்...... ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற்ற‌து!!!! மீண்டும் உச்ச‌த்தில் ந‌ம்மாழ்.... சுரேஷ் பெரும் பெய‌ர்பெற்றுப்போனார்.... அத‌ற்கு உட‌ன‌டி அங்கீகார‌ம், சுரேஷின் அடுத்த‌ ப‌ட‌த்திற்குத் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜ‌ன்!!! முக்கிய‌ப் பாத்திரத்தில் ந‌ம்மாழ்வார்.....! துவ‌க்க‌விழாவில் ம‌ரியாதையாக‌ இருவ‌ரும் ஒருவ‌ருக் கொருவ‌ர் வ‌ண‌க்க‌ம் வைத்துக்கொண்டார்க‌ள்..... ப‌ர‌ஸ்ப‌ர‌ம் வாழ்த்திப் பேசிக்கொண்டார்க‌ள் மேடையில்!!!! பாதிப்ப‌ட‌ம் முடிந்துவிட்ட‌ வேளையில் மீண்டும் உட‌ல்ந‌ல‌ம் குன்றிய‌மையால் அதே ம‌ருத்துவ‌ம‌னையில் மீண்டும் இப்போது ந‌ம்மாழ்வார்..... அவ‌ரது த‌ங்கைப் பைய‌ன் சுந்த‌ர்தான் அவ‌ரை அருகிலிருந்து க‌வ‌னித்துக் கொள்கிறார்.... நேற்றிர‌வு ம‌ருத்துவ‌ர்க‌ள் சுந்த‌ரிட‌ம் சொன்ன‌தை சுந்த‌ர் யாரிட‌மும் ப‌கிர்ந்துகொள்ளவேயில்லை....

ம‌ருத்துவ‌ம‌னையில்.... இன்னும் அதே பார்வை....ஆழ‌மாக‌ இருவ‌ரின் க‌ண்க‌ளும் வெறித்துப் பார்த்த‌வ‌ண்ண‌மிருந்த‌ன‌.... போதும் என்று எண்ணி ஒருமுறை க‌ண்க‌ல‌ங்கிவிட்டு அந்த‌ உண‌ர்ச்சிமிகு க‌ண்க‌ளை ஒரேய‌டியாக‌த் த‌ன‌து கைக‌ளால் மூடினான் சுந்த‌ர் த‌ன் மாமாவின் த‌லையை ம‌டியில் தாங்கிக்கொண்டு....சிரித்த‌முக‌மாக‌வே விடைபெற்றிருந்தார் ந‌ம்மாழ்வார் மொத்த‌மாக‌.....

பேர‌திர்ச்சிய‌டைந்த‌து திரையுல‌க‌ம்... மிக‌வும் ம‌ரியாதையாக‌ ஒருபுற‌ம் எந்த‌வொரு த‌னிமனித‌னும் பெருமைப் பட்டுக்கொள்ளும‌ள‌வு இறுதிச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கையில்... சுரேஷ் இயக்கிய‌ ந‌ம்மாழ்வாரின் முந்தைய‌ ப‌ட‌த்தின் தயாரிப்பாள‌ர் தொட‌ர்புகொள்ள‌ப்ப‌ட்டார்.... அந்தப் படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த‌ ஒரு குறிப்பிட்ட‌ ஒரு காட்சி அவ‌ரிடமிருந்து வாங்க‌ப்ப‌ட்ட‌து.... சிறிது நாட்க‌ளில் சில‌ மாற்ற‌ங்க‌ளுட‌ன் ந‌ம்மாழ்வாரின் க‌டைசிப‌ட‌ம் திரைக்குவ‌ந்தது..... ப‌ட‌த்தினிடையே திடீரென்று ந‌ம்மாழ்வாரின் க‌தாபாத்திர‌ம் ம‌ர‌ண‌மெய்துவ‌தாக‌க் க‌தை மாற்ற‌ப்ப‌ட்டிருந்தது.. ஒரு க‌ட்டிலில் அசைவேயின்றி இற‌ந்த‌ ச‌ட‌ல‌மாக‌ உயிருட‌னிருந்த‌போது அற்புத‌மாய் ந‌டித்திருந்தார் ந‌ம்மாழ்வார் அந்த‌ மிக‌ நீள‌மான‌ டேக்கில்.......

அந்த‌ப் ப‌ட‌மும் மாபெரும் வெற்றிபெற்ற‌து.... பாராட்டும‌ழையில் ந‌னைந்திருந்த சுரேஷ் த‌ன் ப‌டுக்கையில் கண்கள் மூடித் தூக்கமின்றி ப‌டுத்திருந்தார்... தூக்க‌ம் வ‌ர‌ம‌றுத்த‌து....ஒரு பிண‌மாக‌ ந‌ம்மாழ்வார் நடித்திருந்த‌ அந்த‌ நெடிய‌ காட்சி அவ‌ரை ரொம்ப‌வே தொந்த‌ர‌வு செய்து கொண்டேயிருந்த‌து.......


"சுரேஷ், ஹாஸ்பிட‌ல்ல‌ என் உட‌ம்புல‌ மிச்ச‌மிருந்த‌ பேச்சு மூச்சு எல்லாத்தையும் த‌க்க‌வெச்சுக் கொண்டுவ‌ந்திருக்கேன், இன்னைக்கு அந்த‌ எமொஷ‌ன‌ல் சீனை எடுக்க‌ப்போறோமில்லையா நான் ரெடிப்பா...." ஒரு குழ‌ந்தையின் ஆர்வ‌த்துட‌ன் சிரித்துக்கொண்டே சொன்னார் ந‌ம்மாழ்வார்....

"இல்ல‌ சார் இன்னைக்கு அந்த‌ சீன் எடுக்க‌ முடியாது.... கொஞ்ச‌ம் சிக்க‌ல்...."

"என்ன‌ப்பா... ஏற்கென‌வே ஷெட்யூல் ப‌டிதானே போய்க்கிட்டிருக்கு... இன்னைக்கே எடுத்துட‌லாமே.." கெஞ்ச‌லாக‌வே கேட்டார்......

ஏதேதோ கார‌ண‌ங்க‌ளை அடுக்கினார் சுரேஷ்.... அன்று அந்த‌க் காட்சி எடுக்க‌ப்ப‌ட‌வில்லை...அவ‌ர் ஆழ்ந்து உற‌ங்குவ‌துபோல் சில‌ பேட்ச்- அப் காட்சிக‌ள் நீண்டநேரமாக எடுக்கப்பட்டன..... உண‌ர்ச்சிபொங்க‌ ந‌டிக்கும் ஆர்வ‌த்தில் தெம்புகூட்டி வ‌ந்திருந்த‌மையால் இப்ப‌டி அசைவின்றித் தூங்கும் காட்சியில் ந‌டிக்க‌ மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டார்.....மிக‌ மிக‌ நீண்ட‌ காட்சியாக‌ அது ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌து.....

க‌ட்டில் ஒன்றில் சாய்ந்தவாறு அவ‌ர் தூங்குவ‌தைச் சுற்றி சுற்றிப் ப்ட‌மெடுத்துக் கொண்டிருந்த‌ கேமிராமேன்..." சார் அசைவே இல்லாம‌ சார்... அப்டியே... ஜ‌ஸ்ட் ஒரு ஃபியூ செக‌ன்ட்ஸ்.....அசையாம..அசையாம..... சார்...யெஸ்..யெஸ்" என்று சொல்லிக் கோண்டே ப‌ட‌மெடுக்க‌.......

"யோவ்! தூங்க‌த்தான‌யா செய்யுறேன் என்ன‌மோ பிண‌மா ந‌டிக்கிற‌மாதிரி சொல்லிக்கிட்டே இருக்க‌....?? அசையாம‌....அசையாம‌னு....சீக்கிர‌ம் எடுங்க‌ய்யா..!!"

ந‌ம்மாழ்வார் குர‌ல் க‌ர‌க‌ர‌க்க‌....... திடுக்கிட்டு எழுந்தார் சுரேஷ். அத‌ற்குப்பின் தூக்க‌ம் வ‌ரவேயில்லை அவ‌ருக்கு அன்றிர‌வு முழுதும்.......



Friday, March 12, 2010

பிடித்த பத்துப் பெண்கள் - தொடர்பதிவு

தொடர்பதிவு.... ஒரு சுவாரஸ்யமான கான்செப்ட்.... "தொடர்பதிவு" என எழுதியிருக்கும் இடுகைகளை விரும்பிப் படிப்பது வழக்கம்.....

"ரசனை" எனும் ஒரு புள்ளியில்தானே இதயங்களே இணைகின்றன!!

அதிலும் "பிடித்தவை" ஒத்துப்போவதைவிட "பிடிக்காதவை" ஒத்துப்போவதில் இருக்கிற சுகம் இருக்கிறதே.. ஹாஹாஹா... அது மனித இயல்பு!! ;)

தொடர்பதிவில் பங்குபெறுவது இதுவே முதன்முறை... இன்றுகாலை தேனக்காவின் பதிவை வழக்கமான ஆர்வத்துடன் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுத ஸ்க்ரோல் செய்த போது இனிய ஆச்சர்யமாக என் பெயர் இருந்தது ரிலே ரேசில் :)

இதோ இந்த இடுகையின் இணைப்போடு அவருக்குப் பின்னூட்டம் தரலாம் என்று இங்கு வந்துவிட்டேன்!!



பிடித்த பத்துப் பெண்கள்:




குறிப்பு:

நான் வரிசைப்படி எல்லாம் எழுதவில்லை.... மனதில் தோன்ற தோன்ற ஒருவாறாகத் தொகுத்து எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான்... என்னடா ஸ்டெஃபி கிராஃபுக்குப் பிறகு அன்னை தெரஸாவை எழுதியிருக்கிறானே என்று கோபித்துக்கொள்ளவேண்டாம்


நிர்மலா டீச்சர்: 

இவுங்க என்னுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியை!! நான் அவர்களிடம் படித்தபோது அவருக்கு வயது இருபதுகளின் தொடக்கத்தில்தான் இருந்திருக்கும்.... ஓர் இருபது வயது இளம்பெண், ஆறேழு வயது சிறுவர்களுக்கு வகுப்பாசிரியையாக இருந்து நாளும் கட்டிமேய்ப்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதை நான் இருபதுகளில் நுழைந்தபின்தான் வணக்கத்துடன் உணர்ந்தேன்..... அதுவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போல ப்ரைமரி ஸ்கூல்களிலேயே ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியை என்று கிடையாது... காலை முதல் மாலை வரை ஒரே ஆசிரியர்தான் எல்லா பாடவேளைகளுக்கும்....!!
 இறக்கைகள் இல்லாத ஒரு தேவதையாகத்தான் அவரை நினைவுகூற முடிகிறது என்னால்.... கண்களில் அன்பைத் தேக்கிவைத்திருக்கும் நிர்மலா டீச்சரின் முகம் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக இருக்கிறது.... ஒரு குறுகிய கட்டத்துக்குள் அவரின் பங்களிப்பை என்னால் இங்கு எழுதிவிடமுடியாது.... அதிர்ந்துகூட பேசாத மென்மையான குணம்கொண்டவர் என்னுடைய டீச்சர், இருப்பினும் கையில் ஒரு ஸ்கேலை வைத்துக்கொண்டு ஸ்ட்ரிக்டாக மிரட்டுவார்....அதையெல்லாம் அப்போது நினைவில் தேக்கிவைத்துக்கொண்டு இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...... இப்போ எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..... என் அன்பு ஆசிரியைக்கு என்றுமே என் டாப் 10ல் நீங்காத இடமுண்டு :)

ஸ்டெஃபி கிராஃப்:

நான் ஸ்டெஃபியின் ரசிகன்... 1987 விம்பிள்டன் ஃபைனல்ஸ் நடந்துகொண்டிருந்தது.... எனக்கு மூன்றுவயது.... அக்ரெஸிவாக எதிர்த்து ஆடும் "டென்னிஸ் ரவுடி" மார்ட்டினா நவரத்திலோவாவைப் பிடிக்கவில்லை எனக்கு.... "அவ ஆம்பள மாதிரி இருக்கா..." என்று மனது சொன்னது....!! மறுபுறம் ஒரு சின்னப் பெண்ணாக, மென்மையாக துள்ளித்துள்ளி ஆடிச் சோர்ந்து தோற்றுப் போன ஸ்டெஃபி தோல்வி தாங்காது அழுதாள்.... அம்மா மடியில் தலைவைத்து டென்னிஸ் பார்த்துக் கொண்டிருந்த நானும் 'ஓ' வென்று அழுதுவிட்டேன்!!! :))))
அடுத்த ஆண்டிலிருந்து ஸ்டெஃபியின் ரசிகர்களுக்கு பொற்காலமாய் இருந்தது.... வெற்றிமேல் வெற்றிபெற்று வரலாறு படைத்தார் என் பாசத்துக்குரிய ஜெரிமனி அக்கா!! ஹாஹாஹா.....
மற்ற வீராங்கனைகளைவிட ஸ்டெஃபியிடம் என்னைக் கவர்ந்தது ஸ்டெஃபியின் மாறாத பெண்மைதான்!!! எதிர்முனையில் உடல் இறுகி, ஆஜானபாகுவாய் மிரட்டும் முரட்டுப் பெண்கள், மெல்லினங்களின் இடத்திலெல்லாம் வல்லினங்களால் நிரம்பிய‌ எழுத்துப்பிழைகளாய் எழுந்து நிற்க.... மெல்லினக் கவிதையாய், குதிரைவால் காற்றில் குதிக்க நளிணமாக விளையாடி வெற்றிபெறும் ஸ்டெஃபி கிராஃபை இன்னும் மறக்கவில்லை :)

இந்திராகாந்தி:

நான் பிறந்து மூன்றே மாதத்தில் கொன்றுவிட்டார்கள் இந்த இரும்புப் பெண்ணை....
இவரைப் பார்த்தறியவில்லை, கேட்டும் படித்தும்தான் அறிந்திருக்கிறேன்....
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத தன்மையும்தான் "ஆண்மை" என்றுசொன்னால்.... இதுவரை இந்தியாவை ஆண்ட ஒரே "ஆண்" இந்திரா காந்தி அவர்கள் என்றுதான் சொல்வேன்....!!
"விளைவுகளை எண்ணி பயப்படாததுதான் சுத்தமான வீரம்" என்பதையும் இவர்களைப் படித்துதான் கற்றுக்கொண்டேன்.... அரசியல் அபிமானம் கடந்துதான் வியக்கிறேன் இந்த அயர்ன் லேடியை :)

அன்னை தெரஸா:

என்னது அன்னையின் பெயரில்லாமல் பிடித்த பெண்களின் பட்டியலா??
பெண்மையின் தனிச்சிறப்பு தாய்மை.. அந்த தாய்மையே பெண்மையை முற்றிலுமாய் ஆட்கொண்ட அதிசிய படைப்பு இந்த அன்னை!! என்னவென்று சொல்வது இந்தக் கிழவியை!! வாழ்த்தவா??? வணங்கக்கூடத் தகுதி வேண்டும்... வேண்டுமானால் வழிபடலாம் இந்த தெய்வத்தை...

"மனதில் உறுதி வேண்டும்" நந்தினி(!) :

இவள் ஒரு கற்பனைப் பெண்!! "மனதில் உறுதிவேண்டும்" படத்தில் சுகாசினியின் பாத்திரத்தைத் தான் சொல்கிறேன்!!
செவிலிகள் வணக்கத்துக்குரியவர்கள்... இந்தப் பாத்திரப் படைப்பு என்னைச் சின்ன வயதிலேயே பாதித்தது.....
ஒரு தொழிலின் மேன்மை முதன்முதலில் எனக்குப் பிடிபட்டது இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் நந்தினி பேசும் வசனத்தில்தான்.... குடும்ப பாரத்தைப் போராடித் தாங்கும் பெண்கள், தினசரி போராட்டங்களில் ஈடுகொடுத்து முன்னேறும் பெண்கள், எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் தொழில் வாழ்வில் இன்முகம் காட்டும் பெண்கள் என அன்றாட வாழ்வில் காணும் எண்ணற்ற "கிரேட்" பெண்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாய் எனக்கு நந்தினியை ரொம்பப் பிடிக்கும்!!

டாக்டர் ஷாலிணி:

மதுரைப் பதிவர்கள் ஏற்பாடுசெய்த "குழந்தைகள் மனநலம்: கருத்தரங்க"த்தில் கலந்துகொண்டதிலிருந்தே டாக்டர் ஷாலிணியின் மீது அளவற்றதொரு மரியாதை ஏற்பட்டது... ரொம்ப நல்லா பேசினாங்க‌... அதுபற்றிதான் ஏற்கெனவே எழுதிவிட்டேனே!! அதன்பின் "பெண்ணின் மறுபக்கம்" உள்ளிட்ட இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்கத் துவங்கினேன்....
'பெண்ணியப்' போர்வைகளால் தன்னைப் பொதிந்து கொள்ளாமல், "மனிதப் பெண்"ணின் போராட்டங்களை இயற்கை மற்றும் பரிணாமக் கூறுகளால் அணுகி ரொம்பவே யதார்த்தமாகத் தோழமையுடன் எடுத்துச் சொல்லும் பாங்கிற்கு சல்யூட்!

(அய்யோ இன்னும் நாலு இருக்கா!! வெரி ஸாரி எனக்கு சுருக்கமா எழுத்து வரல!!)

கிரண்பேடி:

இவரைப் பற்றி நான் சொல்லத் தனியாக எதுவும் இல்லை... நீங்கள் படித்தறிந்து வியந்து போற்றிய அதே கட்டுரைகளைப் படித்து என்னுடைய டாப் டென்னிலும் நீங்காத இடம் கொடுத்து வைத்திருப்பவன்தான் நானும்!!
வாழ்வற்ற கல்லறைத் தடமான, அதுவும் ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலையான திகார் ஜெயிலின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவியேற்று ஆறே மாதத்தில் அந்த அவலபூமியை ஒரு பயிலரங்கம்போல் மாற்றிக் காட்டி, அதற்காகவே பிரத்யேகமாய் ராமன் மகஸேஸே விருதுவாங்கினார் கிரண்பேடி... ஓர் அதிரடி வீரமங்கை என்றபோதிலும் மங்காத தாயுள்ளம் இருந்ததால்தான் இந்த சாதனை சாத்தியமானது... ஓர் ஆண் அதிகாரிக்கு இது அவ்வளவு எளிதில் தோன்றாது என்பது என் தாழ்மையான கருத்து.....

மேதா பட்கர்:

இந்த அம்மா பற்றி என் நண்பன் கார்த்திகேயன் சொல்லி அறிந்தேன்...
அதன்பின் இவரைப் பற்றிப் படித்து வியந்தேன்.... ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் மகள்.. சுதந்திர இந்தியாவில் இன்னும் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் சுதந்திரமாக..... நர்மதா நதி என்று கூகுளில் தேடினால் முதல் லிங்கில் இருந்தே மெதா பட்கரின் பெயர் கூறும்!! அந்த ஆற்றுப் படுகை மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு தந்து, இன்னும்கூட போராடிவரும் மேதாபட்கர் தன்னலமற்ற ஒரு அறிவார்ந்த போராளி....

பி.சுசீலா

பெண்குரல் இனிமையானது என்பது தெரியும்... எவ்வளவு இனிமையானது என்று கேட்டால் பி.சுசிலாவின் குரலைத்தான் சொல்வேன்!! குழலோசையினும் மெல்லிதானது இந்தக் குயிலோசை!!
இவரின் குரலையும் தாண்டி, இந்தத் தலைமுறையின் இசை நிகழ்ச்சிகளிலும், பாராட்டு விழாக்களிலும் ஒரு தாய் போல இவர் காட்டும் ஏற்புடன் கூடிய‌ Gesture நெகிழவைக்கும்!!..... எனக்கு இவங்களை ரொம்பப் பிடிக்கும்... சின்ன வயசுல இவங்க பாட்டைப் பாடிதான் எங்க அம்மா என்னைத் தூங்கவைப்பாங்க.......

மேடம் க்யூரி:

"ரேடியம் கண்டுபிடித்தவர் மேடம் க்யூரி" என்பதைத் தவிர எனக்கு அவரைப் பற்றி வேறெதுவுமே ஆழமாகத் தெரியாது....
இயற்பியல், வேதியல் என ஒன்றுக்கு மேற்பட்ட அறிவியல்களில் நோபல் பரிசு பெற்ற ஒரே ஒருவர் இதுவரை உலகில் இவர்தான்...!!
இவர் வாழ்க்கையைக் கற்பனை செய்துபார்த்தேன் எனது டாப் டென்னில் வந்துவிட்டார்!!
கணவனும் மனைவியும் ஓர் ஆய்வுக்கூடத்தைப் பகிர்ந்துகொண்டு, ஒரே இலக்கை நோக்கித் திட்டமிட்டு உழைத்து... பாதியில் கணவன் ஒரு விபத்தில் திடீரென‌ மறைய, மனைவி தொடர்ந்து முயன்று ஆய்வில் வென்று உயரிய விருதாம் நோபல் பரிசு வெல்கிறாள்.... என்ன ஒரு ஒன்லைன் இவரின் வாழ்க்கைக் கதைக்கு... மேற்கொண்டு விரிவாக எனக்கு எதுவும் தெரியாது இவரைப் பற்றி..... இருப்பினும் அகமும் புறமுமாகிவிட்ட அந்த‌ ஆய்வுக்கூடத்தில் ஒரு மேசையில் கண்ணத்தில் கைவைத்து சோகமாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணாக என் மனதில் எப்படியோ பதிந்துவிட்ட மேரி க்யூரியை எனக்குப் பிடிக்கும் :)


நான் தொடர அழைப்பது....

ஜெர்ரி மாமா
ஸ்ரீ
கார்த்திகைப் பாண்டியன்
சின்ன அம்மிணி அக்கா
வெற்றி
கண்ணா
காவ்யா

இவர்களை ஏற்கெனவே யாரும் அழைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை!!




தேன் அக்காவுக்கு நன்றிகளுடன்,

Tuesday, January 19, 2010

தூரம்


நிலாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் அன்று அலுவலகத்தில்.... ஆளாளுக்கு ஒரு கதை.. ஒன்றிரண்டுபேர் கவிதைகூட சொன்னார்கள்....

திடீரென ஒரு யதார்த்த கேள்வி வந்து விழுந்தது....  

"இவ்ளோ பேசுறோமே... நேற்றிரவு நிலவை நம்மில் எத்தனைப் பேர் பார்த்திருப்போம்.. கடைசியாக நிலவைப் பார்த்த நாளாவது நமக்கு நினைவிருக்குமா?" 

துபாயில் உடன் பணிபுரியும் சக சாஃப்ட்வேர் தமிழ் சகா ஒருவன் கேட்டபோது.... அங்கே முந்தைய நாள் பிறை நிலவைக் கண்டிருந்த ஒரே நபர் அவர்களின் மரியாதைக்குரிய சீனியர் பிரபாகர் மட்டும்தான்!!  

" ஊர்ல இருக்குற என் பொண்ணும் நானும் ஒண்ணா பார்க்க முடிஞ்ச‌ ஒரே நிஜப் பொருள் அதுதானே!!... தினமும் பார்ப்பேன்.. என் பொண்ணும் பார்ப்பா.... நான் ஊரைவிட்டு வரும்போதும் ஊர்ல இருந்து இங்க வரைக்கும் கூட வர்றதும் அதுதானே!! அதுனால தினம் பார்ப்பேன்... ரொம்ப ஓவரா இருக்கோ!!" ஒரு சிரிப்புடன் முடித்தார்....  

கலகலப்பான ஆள்தான் என்றாலும் இரவு நேரங்களில் ரூம்மேட்களிடம்கூட அதிகம் பேசுவதில்லை பிரபாகர்... 
பதினான்காவது மாடியில் இருக்கும் அவர் வீட்டு பால்கனியில் நின்று வானத்தையும், துபாயின் இரவு நேர ஜொலிப்பையும் வெறித்த வண்ணம் சில நிமிடங்கள் கழித்தபின்தான் உறங்கச் செல்வார் தினமும்....  

கேட்டால் அமைதியைக் காதால் கேட்க முடியாது கண்களால்தான் பார்க்க முடியும் என்று சொல்வார்! 

உண்மைதான்.... இரவு நேர கருப்பு வானத்திடம் ஓர் ஆட்கொள்ளும் அமைதி உண்டுதானே.... கண்களால் அந்த அமைதியைத் தொடர்ந்து உள்வாங்க உள்வாங்க பூலோக இரைச்சல்கள் கவனத்தைவிட்டே கரைந்துபோகும்!! அந்த அமைதி ஒரு பொய்தான்... வானத்துப் பேரிரைச்சலைக் கேட்கும் தொலைவில் நாமில்லை என்பதால்தான் இந்த நிசப்தம்....!!

ஆம் தூரம் அமைதி தரும்.... தூரத்தில் இருப்பதால் பிரபாகருக்கு அழகான அவர் குடும்பத்தில் இரைச்சல்கள் எதுவுமில்லை...

தொடரும்....

(பி.கு : சிறுகதை ஒன்றை எழுதத் துவங்கினேன் அது இப்படியெல்லாம் விரிந்து சென்றது... எழுதிய வரை இன்று பதித்துவிட்டுச செல்கிறேன்.. நாளைக்குத்தான் தெரியும் இக்கதையின் தலைஎழுத்து!! சிறுகதையாகப் போகிறதா அல்லது சைஸ் கூடுமா என்று!! Anyways ur comments please....)


Thursday, November 05, 2009

நன்றி "யூத்ஃபுல் விகடன்"!!


இன்னொருமுறை யூத்ஃபுல் விகடனில் என் சிறுகதை ("சாபங்கள் பலிப்பதில்லை") வெளிவந்துள்ளது....
விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்!! :)


விக‌னில் ப‌டிக்க‌: CLICK HERE

நன்றி நன்றி நன்றி!! :-)

Tuesday, November 03, 2009

சாபங்கள் பலிப்பதில்லை : சிறுகதை


"இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய்ப் போகட்டும்" - பி.எஸ்.வீரப்பா (ஒரு திரைப்படத்தில்!)

மழைக்கால மத்தியாணம்...எப்பவும் புழுதிவாரி இறைக்கும் வாகனங்கள் "ஸீசனல் ஆஃபராக" சகதியை வாரிஇறைத்துச் சென்றுகொண்டிருந்தன.....அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாய், கிடைக்கிற‌ "சைடு கேப்" பில் எல்லாம் புகுந்து மும்முரமாகத் தங்கள் தலைவனுக்கு ஏதோ விழா எடுப்பதாக‌ ஸ்பீக்கர்கள், தோரணங்கள்,ட்யூப் லைட்டுகள் மற்றும் ஃப்ளக்ஸ் போர்டுகள் நட்டுவைக்கும் கலாச்சாரப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் செயல்வீரர்கள்....

ரோட்டின்மேல் இருக்கும் ராசய்யா_____ன் (ஏதாவது ஒரு ஜாதி பேரை வைத்து கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க) வீட்டு வாசல் கதவு முழுதுமாய்த் திறந்திருக்கிறது... வீட்டுக்குள் ஆள்நடமாட்டம் இருந்தவண்ணம் உள்ளது.... முன் அறையில் கொஞ்சம் பழசாகிவிட்ட‌ ஒரு மர சோபாவில் சற்று கண்ணயர்ந்தவனாய்த் தலைக்குக் கைவைத்து தூங்கிக் கொண்டிருக்கிறான் தருமராஜன்... உள் அறையில் உடைந்துபோய் அமர்ந்திருக்கிறார் சீதம்மாள்... அருகே சில பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.....

"யாரு....தருமனா இப்புடி சாய்ஞ்சு கிடக்குறான்... தேனி மாதிரி சுத்திட்டு இருப்பியேய்யா என் ராசாஆஆஆ...இப்புடி உடம்பு சோந்து கண்ணசந்து கிடக்குதியே.... உங்கப்பன் உன்ன‌ விட்டுட்டுப் போய்ட்டானேஏஏஏஏஏஏ......." என்று சவுண்டை ஸ்டார்ட்செய்து கை ரெண்டையும் விரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார் அந்தக் கிழவி, "அடியே சீத.. எஞ் சீத...உன்னய தனியா விட்டுட்டு போக எப்புடிடீ மனசு வந்துச்சு அந்தப் பயலுக்கு??.... பாவிமக கண்ணுல கத்திய போட்டுப் படுக்க வெச்சுட்டாண்டீ அந்த பாழா போற டாக்டரு... பாவிமவன்.... மூஞ்சிபாக்க குடுத்துவெக்கலியே இந்த பாழாப்போற கண்ணுக்கு...." ஐயோ ஐயோ ஐயோ!! என்று நடுநடுவே மூக்கைச் சிந்திக்கொண்டு நெஞ்சில் அடித்து அழத்தொடங்கினாள் "கிழவி" என்று அழைக்கப்படும் தருமனின் பாட்டி... ராசய்யா_____க்கு பெரியம்மா முறைவேண்டும்.... கண் ஆபரேஷன் செய்து படுத்துக் கிடந்தமையால் ராசய்யா____ன் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரால் முடியாமல் போய்விட்டது (ஓ! அதைக் கிழவியே சொல்லிடுச்சோ!!) "கிழவி"யின் அலறலிலும் தருமனின் அயர்வு அகலவில்லை.... உடலும் மனதும் உளைந்துபோக அவனையுமறியாமல் தூங்கிக் கிடக்கிறான்.....

வீட்டிற்கு வெளியே.... செயல்வீரர்கள் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் விழா துவங்குகிற வண்ணமாய், இரண்டடி இடைவெளியில் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் எல்லாம் உயிர்பெற்றுப் பிளிரத் துவங்கின.... தெரித்துக் கண்விழித்தான் தருமன்.... சீதாம்மாளிடம் இருந்த கிழவி விழித்துவிட்ட தருமனை நோக்கி அழுதவண்ணம் எழுந்துவர... துக்கம் தீர்ந்தவனாய்க் கிழவியின் துஷ்டியைக் ஏற்று அமரவைத்தான் தருமன்.... இழவில் பங்கேற்று, சம்பிரதாயப்படி சொல்லாமல் சென்றுவிட்டு, இப்போது "கிழவி"யை அழைத்துக்கொண்டு வெள்ளையுஞ் சொள்ளையுமாய் வந்திருந்தார்கள் மாமன் மச்சான்கள்....

"சரி... நடந்தது நடந்துபோச்சு...."என்று ஒருவர் ஆரம்பித்தாக‌ வேண்டுமே....!!

தருமனின் தோள்மேல் கைவைத்து ஒருவர் பேச்சை ஆரம்பிக்க "இனி ஆகவேண்டியத பாக்கணும் இல்லையா..." என்று அடுத்தவர் தொடர்ந்தார்.... குடியிருக்கும் பங்காளிகள் ஆட்கொண்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் ராசய்யா____க்கு சொந்தமான‌ பிரச்னைக்குரிய சில வீடுகளின் பத்திரங்கள் கிடைத்ததா?? என்று அக்கறையாகக் கேட்டு விசாரித்தார்கள்....

"ஒருவாரமா வீடு முழுசும் அலசியாச்சு...
எங்க வெச்சுட்டுப் போனாருன்னே தெரியல...."

"சொந்தக்காரப் பயபுள்ளகளா போயிட்டானுங்க.. இல்லைன்னா... போய் அவனுகள‌..." என்று ஒரு மச்சான் செண்டிமென்டலாக‌ சீற.....

"என்னய்யா சொந்தம்?? செத்த வூட்டுக்குக் கூட வராத பயலுகள போய் சொந்தம் கிந்தம்னு சொல்லிக்கிட்டு.." என இன்னொரு மச்சான் டென்ஷனானார்...

ஓர் ஆக்ஷன் சீக்வன்ஸ் மெல்ல உருவெடுக்கத் துவங்க "அமைதியா இருங்கப்பா.... ஆகுறதப் பேசுங்க.... " என்று 'கட்' கொடுத்தார் பெரியப்பா ஒருவர்...அவரே தொடர்ந்து "குருஜி கிட்ட கேக்குறதுதானே... பத்திரம், சாவியெல்லாம் எங்க வெச்சுருப்பாருன்னு.... மை வெச்சு கண்டுபிடிச்சுச் சொல்லிடுவாறே...." என்று ஓர் அறிவுப் பூர்வமான ஐடியாவை எடுத்து விட்டார்....

"குருஜி வீட்டுக்கு வந்து பாத்துட்டு, ஐயாவோட ஃபோட்டோ முன்னாடி உக்காந்து நம்பிக்கையா கேளுங்க... யார் கனவுலயாவது வந்து பத்திரம் இருக்குற எடத்த சொல்லுவாறு"ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு...." என்றான் இளைய மகன் வேலுராஜன்

" யய்யா... அப்பா கனவுல வந்தாராய்யாஆஆ..." என்று கிழவி கூவினாள்....

"தூங்குற முன்னாலயே இந்தப் பாட்டுச் சத்தத்துல முழிச்சிட்டேனே ஆத்தா...." என்று தருமன் கண்கலங்கினான்.....!!!

அப்போதும் கடும்சத்தமாய் வெளியே விழாக்கோலம் அலறிக்கொண்டுதான் இருந்தது.... "நாசமாப் போறவனுக......" என்று ஆரம்பித்து விழா அமைப்பினரையும்... விழா நாயகர்களையும் ஒட்டுமொத்தமாய் சபித்துத் தள்ளினாள் கிழவி.....

ரெண்டு நொடி அமைதியாய் ஏதோ நினைத்த தருமன்... வெகுண்டெழுந்தான்....

"ஒருபயலும் வேணாம்... நானே போறேன்.... எண்ணி ரெண்டே நாளு... அதுக்குள்ள பத்திரத்தக் கிரயம் பண்ணுறோம்.... அதுக்குள்ள அந்த வீட்டுல இருக்குறவனெல்லாம் தலதெறிக்க ஓட விடுறேன்.... யாருகிட்ட சொல்லி, எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு எனக்குந் தெரியும்...." என்று தருமன் வெடித்துக் கிளம்பினான்....

அவன் கிளம்பும் முன்னமே.... உள் அறையிலிருந்து ஈனஸ்ருதியில் ஓர் ஒலி வந்தது... "வேணாம் தருமா... வேணாம் ராசா....பழியெல்லாம் உங்கப்பாவோட போவ‌ட்டும்... வீட்டுல இருக்குறவுகள‌ அடிச்சு விரட்டித் தெருவுல நிக்கவெச்சு அவங்க வாயில வுழ வேணாம்யா....யாரு வாயிலும் வுழ வேணாம்யா... இனிமேலும் வேணாம்யா ஏச்சும் பேச்சும்..." திடீரென்று அழத்துவங்கினார் தருமனின் தாய் சீதம்மா....

வெடித்துக் கிளம்பிய‌ தருமனின் காதில்வந்து விழுந்தது தாயின் விம்மல்.....

வேறுசில தொழில்களும் செய்திருந்தாலும் சாதாரண ராசய்யாவாக இருந்தவர் ஊர் போற்றும் ராசய்யா_____ஆக மாறியது என்னவோ வட்டிக் கொடுத்து பிழைக்க ஆரம்பித்த பின்புதான்... நிலத்தின்பேரில் கொடுக்கப்பட்ட சில வட்டிக் கடன்கள் அசலைப் பணமாய் அன்றி நிலமாகவே திருப்பிப் பெற்றுத்தந்தன‌.... வராக் கடன்களை வசூலிக்க அவர் மேற்கொண்ட சில காரியங்கள் கல்லடிபடாத ராசய்யாவுக்கு சொல்லடிகள் வாங்கிக்கொடுத்தன... கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்க சுனாமிபோல் வந்து சூழ்ந்த‌ சுற்றமும் நட்பும், உச்சவரம்பை மீறிய சொத்துகளுக்கு பினாமிகளாய் மாறின‌.... வளர்பிறையெல்லாம் முடிந்து கோர்ட்டு கேஸ் என்று தேய்பிறை துவங்க "பாவம்....ந‌ல்லா வாழ்ந்த குடும்பம்" என்று ராசய்யாவின் இறந்தவீட்டில் வந்தவர்கள் சிலர் 'உச்' கொட்டும் அளவுக்கு ராசய்ய தலைவிழும் முன்னே செழித்துக் கொழித்த காலமெல்லாம் இறந்தகாலாமாகிப் போனது...... பத்திரங்களைக் கைப்பற்றி பிரச்னைக்குரிய வீடுகளையெல்லாம் விற்றே தீர வேண்டிய பொருளாதார நிர்பந்தத்தில் இப்போது மூத்தவன் தருமன்....

பலபேர் வாயில் விழுந்து சாபங்களைக் கட்டிக் கொண்டதன் பலன்தான் இப்படி ஊர்போற்ற வாழ்ந்த வீடு தூண் விழுந்து கிடப்பதாகப் பலரும் காதுபடவே பேசினார்கள் இறந்த வீட்டில்.... சீதாம்மாளின் நம்பிக்கையும் இதுதான்.... நல்ல பணம், கெட்ட பணம், பாவப்பட்ட பணம் என்றெல்லாம் பணத்தில் வகையுண்டு என்று இன்றும் ஸ்திரமாக நம்பும் பழி பாவத்துக்கு அஞ்சும் குடும்பத்தலைவி சீதாம்மாள்....

சீதாம்மாளின் அழுகை மற்றும் மூணாம் கிளாஸ், நாலாம் கிளாஸில் எப்போதோ வாத்தியார்கள் சொல்லக் கேள்விப் பட்டிருந்த‌ நியாயம், தர்மம் போன்றவை சார்ந்த உணர்வுகள் எல்லாம் சின்ன வேகத்தடை போட்டாலும் பொங்கிவந்த வேகமும் கோபமும் குறையுமுன்னமே சீற்றத்தோடு கிளம்பினான் தருமன்..... செல்ஃபோனில் யாரையோ அழைத்து காட்டமான சில காரியங்களை செய்துமுடிக்கும் வியூகங்களோடு உத்தரவுகளைப் பிறப்பித்தான்.... சீதம்மாளுடன் சேர்ந்து "வேணாம் ராசா...." என்று கோரஸ் போட்ட அவன் வீட்டுப் பெண்களின் ஓலம் வண்டியைக் கிளப்பிச் செல்லும்வரை அவன் காதில் விழந்துகொண்டுதான் இருந்தது.....

தூக்கம் விழித்த குழந்தைபோல விசும்பிக்கொண்டிருந்தது வானம்..... முந்தைய நாள் பெய்த மழையால் தேங்கிக்கிடந்த தண்ணீரும் சுற்றிச் சூழுந்துள்ள சகதிக்கும் நடுவே விடாது ஹார்ன் அடித்து.... கிடைக்கும் சந்தடியில் நுழைந்து செல்ல‌ வாகனங்கள் போராடிக்கொண்டிருந்த‌ சூழல், அதே சாலையில் வண்டிக்குள் சூடாய் அமர்ந்திருக்கும் தருமனுக்கு இன்னும் கொஞ்சம் வெறியேற்றுவதாய் இருந்தது.... வழிநெடுக ஸ்பீக்கர்கள் அலறவிடப் பட்டிருக்கின்றன‌... மழைமேகம் சூழ்ந்து வானம் கொஞ்சம் கறுத்துவிட்டதாம், ஸோ மதியம் மூணு மணிக்கே ரோட்டின் ஓரங்களில் நட்டுவைத்திருக்கும் ட்யூப் லைட்டுகளை ஒளிர வைத்துவிட்டார்கள்..... மழைபெய்யும் நேரம் ஓபன் லைனில் கரண்ட் எடுத்து லைட்டு களை எறிய வைத்திருந்தார்கள்..... ஷாக் அடித்து செத்தால் அவர்கள் தலைவனுக்கா நஷ்டம் என்று வழிநெடுக மக்கள் கூட்டம் மண்டையிலடித்துக் கொண்டு சென்றது...... அதே தலைவர் தன் காதில் செல்ஃபோனை வைத்துக்கொண்டு "ஙே" என்று பல்லைக்காட்டி சிரித்தவாறு போஸ் கொடுத்திருந்த ஒரு பிரம்மாண்ட க்ளோஸ் அப் ஷாட் ஃபோட்டோவை கிட்டத்தட்ட இருபதடி உயரத்தில் ஃப்ளக்ஸ் போர்டாகக் கட்டிக்கொண்டிருந்ததில் பேருந்து ஒன்று செல்ல முடியாமல் நிற்க.... ரோட்டில் டிராஃபிக் ஜாம்....

டிராஃபிக்கில் மாட்டிக்கொண்ட தருமனின் மனதில் வெவ்வேறு விதமான சிந்தனைகளும் நினைவுகளும் அலையடித்த வண்ணமிருந்தன ... உடனிருந்த மச்சான்கள் இறுக்கமாய் அமர்ந்திருக்க.... தருமனின் காதில் இன்னும் "வேணாம் தருமா..." என்று சாபத்துக்கு அஞ்சிய‌ சீதம்மாளின் அழுகுரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. தன் தந்தை வாங்கிக்கட்டிக் கொண்ட சாபங்களும் அடுத்தடுத்து காட்சிமாறிய வாழ்க்கையும்கூட மனதில் வேகமாய் ஓடியது......அதேநேரம் அந்த வீட்டில் குடியிருப்பவர்களை இன்றே அடித்துத் துரத்தும் வெறியும் குறைவின்றி எக்காளமிட்டது....

விழா நாயகர் தலைவருக்கு ஒருபுறம் சிங்கிள் போஸ்... மறுபுறம் அவர் ஃபேமிலி ஃபோட்டோ...இன்னொருபுறம் ஒரு சிங்கத்தின் உடலில் அதன் தலைக்குப் பதிலாக தலைவரின் தலையை மார்ஃபிங் செய்து ஒன்று என்று ஃப்ளக்ஸ்களாக அடுக்கி வைத்திருந்தார்கள் உயிரினும் மேலான தொண்டர்கள்... வைப்பரை இயக்குமளவு இப்பொழுது மழை பெய்தது.... இந்த அரசியல் அலப்பறைகளால் இடர்பட்டுக் கிடக்கும் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டு நனையத் துவங்கிய மக்கள் எல்லாரும் கடுப்பில் நெழியத்துவங்கினார்கள்....

வெறுப்பின் உச்சத்தில் வேக ஆரம்பித்த தருமன் காரின் ஜன்னலைக் கீழே இறக்கினான்.... காதைப் பிளக்கும் ஸ்பீக்கர் சத்தத்தையும் தாண்டித் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது பொதுஜனம்... டிராஃபிக் போலீஸ் படாதபாடுபட்டு அந்த பஸ்ஸை ஒருவழியாக நகர்த்த... டிராஃபிக் ஜாம் மெல்லக் கலையத் துவங்கியது..... இங்கு கலவரமே நடந்து ஓய்ந்தாலும் கொஞ்சமும் கவலை இல்லாமல் ரோட்டு ஓரங்களில் தலைவரின் மனைவியின் ஆளுயரப் போஸ்டர் ஒன்றில் கோந்து தடவி அவர் படத்தைச் சுவரில் நிறக வைத்து ஆறுபேர் சேர்ந்து தேய் தேய் என்று தேய்த்து ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள்..... கூட்டம் கலைந்து, போவோர் வருவோர் எல்லாருமே தலைவர் "ஙே" என்று சிரிக்கும் அந்த பிரம்மாண்ட கட்‍‍‍=அவுட்டைப் பார்த்து மண்ணை வாறி தூற்றாத குறையாய் சபித்துச் சென்றனர்.....

வண்டி நகர ஆரம்பித்தவுடனே ஜன்னலை மூடிய தருமன் மெலிதாக சிரித்தான்... "ஏன்டா...இவனுகள‌ ஊரே சபிக்குது...ஆனா எவனுக்கு என்ன ஆகியிருக்கு?? யாரோ ரெண்டு பேர் சாபத்துல நான் அழியப்போறேன்னு பயப்படுறாளே என் ஆத்தா!!!.." என்று சொல்லி "வேகமா விடுறா வண்டிய..." என்று ஓங்கி முழங்கினான் தருமன்.... சீதம்மாளின் அழுகுரல் இப்பொழுது அவன் காதில் ஒலிக்கவில்லை.....

சாபங்கள் பலிப்பதில்லை???!!!! :-)


Tuesday, June 30, 2009

"நன்று" என முடியும் குறள் - சிறுகதை

"சூரியன் மீதெல்லாம் கோபப் படுறதுல சத்தியமாஅர்த்தம் இல்லடா.... காம்டவுன் டா சுதன்!!"

தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வீறுகொண்டு எழுந்த‌ ஹை வோல்டேஜ் கோபத்துக்கு சடன் பிரேக் அடித்துத் துயில் முறித்தான் சுதன்!! லீவெடுத்துத்தூங்கும் போது ஏழுமணிக்கெல்லாம் சரியா மூஞ்சிலயே குறிவெச்சு வெயிலடித்து எழுப்பிவிட்டதால் சூரியன் மீது பொத்துக்கொண்டு வந்த கடுங்கோபம் அது!!

இந்த வாரத்தில் இதுவரைக் கடந்துள்ள நான்கு நாட்களில் இவ்வாறு சுதன் கட்டுப்படுத்தும் நானூற்று இருபத்து நான்காவது கோபம் இது என்பது பின் குறிப்பு!

வீட்டு சமையலறையில் தங்கை ஷாலினி கோதுமைப் பந்துகளை உருட்டித் தேய்த்துக் கொடுக்க அதைக் கொதிக்கும் எண்ணெயில் காட்டி வீங்கவைத்துப் பூரிகளாகச் சட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார் "ஹோம் மேக்கரான" சுதனின் அம்மா!! சுதன் சிரித்தமுகமாய் "ஆ.. இன்னைக்கு பூரியா!!.. உடனே குளிச்சுட்டு வரேன்" என்று சொல்லி சிரித்துவிட்டுப் போனது கொஞ்சமும் செயற்கையாக இல்லைதான்.... ஆனாலும் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.... கோபக்கார அண்ணனின் இன்முகம் பார்த்து இரண்டு நிமிடம் திகைத்துப் போன ஷாலினி , "அடுத்த பூரிக்கு மாவெங்கடி??" என்று அம்மா கதறிய குரல் கேட்டுதான் இயல்பு நிலை அடைந்தாள்!

அமைதியாக பூரி சாப்பிட்டுவிட்டு... "அம்மா நீங்களும் கையோட இப்பவே சாப்பிட்ருங்க..." என்று கணிவாக சொல்லிவிட்டு " பக்கத்தில கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடறேன் மா.... ஷாலினி உனக்கு ஏதோ புக் வாங்கணும்னு சொன்னியே.. என்னன்னு சொல்லு அண்ணன் வாங்கிட்டு வர்றேன்..." அக்கறையாய் கிளம்பிப் போன படு பொறுமையான சுதனைப் பார்க்கவே வியப்பாக இருந்தது அம்மாவுக்கும் ஷாலினிக்கும்!! ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொண்டார்கள் ஆனால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை!!

சுதனுக்கும் தன் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும்.... ஸாரி.... அவன் கஷ்டப்பட்டு ஏற்படுத்தியிருக்கும் இந்த மாற்றங்கள் அவனைச் சுற்றி எல்லோருக்கும் வித்தியாசமாய் இருக்கும் என்று தெரியாமல் இல்லை...... இனிமேல் தானொரு கோபக்கார சுதன் அல்ல... என்று அறிவிக்காத குறைதான்..... இந்த மாற்றங்களைப் பற்றியெல்லாம் வீட்டில் பேசவேண்டும் என்று சுதனுக்கு ஆசைதான்.... ஆனால்... யாருடன்?

அப்பாவிடம்?? " நோ.... அவர் கோபப்படுவதில் "சீனியர் சுதன்"

சரி.... அம்மாவிடம்?? .... " பேசலாம்தான் ஆனால் இதெல்லாம் அவர்களுக்குப் புரியாது"...

தங்கை....?? . "சே சே...சின்னப் பொண்ணு!!"

இப்படியெல்லாம் அவன் மனது ஒவ்வொருத்தர் பற்றியும் அனுமானம் சொன்னதால் யாரிடமும் பேசவில்லை... அதற்கும் ஒரு கோபம் மனதில் எழ,

" இது அவங்க சுபாவம்டா சுதன்... பொறுமையா போடா.... அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா!!"

என்று அட்வைஸ் பண்ணியது அவனுடன் அதிகம் பேசும் அவன் மனம்!! பொதுவாகவே அவர்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்வதில்லை.... இதுவும் முக்கியமான ஒரு பின்குறிப்பு!

சுதனிடம் இந்த மாற்றமெல்லாம் நான்கு நாட்களாகத்தான்.... அதாவது சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று ஏற்பட்ட ஒரு குறிஞ்சிப் பூ மாற்றமிது!!! கடந்த ஞாயிரன்று ஓர் "ஆட்டோகிராஃப்" சந்திப்புக்கு அழைப்பு வந்திருந்தது சுதனுக்குப் பிரிந்து சென்ற தன் பள்ளி நண்பர்களிடமிருந்து!! பள்ளி நண்பர்கள் எல்லாரும் மீண்டும் அதே பள்ளியில் அதே ஆசிரியர்கள் முன்னிலையில் ஒன்று கூடி அந்தநாள் ஞாபகங்களை அசைபோட‌ ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் சுதனின் பள்ளித் தோழர்கள்....

" வர முயற்சி பண்றேன் டா.." தகவல் சொன்ன ஒரு நண்பனிடம் சுதன் இழுக்க......

"டேய்... பிரவீன் எல்லாம் அமெரிக்கால இருந்து வர்றான்டா... நம்மல்லாம் லோக்கல் ல இருந்துட்டே வரலன்னா நல்லா இருக்காதுடா...."

சொன்ன மாத்திரத்தில் சுதன், "அமெரிக்கால இருக்கிறவன் லீவுக்கு ஊருக்கு வந்திருக்கான்டா.... உள்ளூர்க்காரனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்..... விடுடா.. நான் முயற்சி பண்ணுறேன்னு சொல்றேன்ல !!" என்று கோபத்தில் ஃபோனை வைத்தேவிட்டான்....

"அமெரிக்கா"..... சுதனுக்குப் பிடிக்காத சில வார்த்தைகளில் அதுவும் ஒன்று!!

நான்கு வருடங்களாக அதே டெலிகாம் கம்பெனியில் அதே மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை...... நாளொன்றுக்குக் குறைந்தது நாற்பது கிலோமீட்டராவது தன் மோட்டார் பைக்கின் ஆக்ஸலேரேட்டரைத் தொழில் நிமித்தம் திருகும் சுதன் ஒரு கடின உழைப்பாளி.... இப்போது மட்டுமல்ல படிப்பிலும் கூட ஒரு கடுமையாக உழைக்கும் மாணவன்...... கஸ்டமர்களிடம் மட்டும் கோபத்தைக் காட்டமாட்டான்....மற்றபடி உடன் வேலைபார்ப்போருக்குக் கூட ஒரு "டெரர்" இமேஜ் தான் சுதன்மீது..... எங்கிருந்து எகிறி வரும் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது ஆனால் கோபம் எறிந்து எழுந்துவிட்டால் கொட்டித்தீர்த்திடத் தெரியும் அவன் நாக்கிற்கு..... அவன் மனது கடந்த பல வருடங்களாக அவனையே " Mr. பெர்ஃபெக்ட்" விருதுக்குப் போட்டியின்றித் தேர்வு செய்துவருகின்றது!!

அந்த வெள்ளிக்கிழமை திடீரென எதிர்பாராத ஓர் அங்கீகாரம் அவனது இத்தனை நாள் உழைப்புக்குக் கிடைத்தது...... மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டி விலிருந்து நேரே ஏரியா மேனேஜர் போஸ்டுக்குப் ப்ரமோஷன்!!! சம்பளத்திலும் நல்ல முன்னேற்றம்...... சந்தோஷத்தில் நிறைந்த மனது இப்போது ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவர்களின் மறு சங்கமத்திற்கு ஓர் ஏரியா மேனேஜராகச் செல்ல அனுமதித்தது!!

சாதாரணக் கோபங்களுடன்தான் விடிந்தது அன்றைய பொழுது .... பதவி உயர்வு பற்றி சுதன் தன் வீட்டில் சொல்லியிருக்க வில்லை...... ஏதோ புத்துணர்ச்சியோடு அவன் படித்த பள்ளி நோக்கி அன்று தன் ஸ்ப்ளண்டரை இயக்கினான்.... பேக்ரவுண்டில் "ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே " என்று பி.ஜி.எம் எஃபெக்ட் எல்லாம் கேட்டது..... பழைய நினைவுகளை வாழ்ந்து பார்க்கும் ஆனந்தத்துக்கும் குறைவில்லை அவனிடம்!!!

அற்புதத் தருணமாக இருந்தது அது..... பழைய நண்பர்கள்... அதே இடம்..... ஒரு பொதுத்தேர்வு முடிந்த அன்று மெழுகுவர்த்தி கொளுத்திப் பிரிந்த கூட்டம்...... இன்று மீசை வைத்து அதே இடத்தில் மீண்டும் கூட்டமாய்!!!

கொஞ்சம் நரைத்திருந்தாலும் அதே ஆளுமை செபாஸ்டின் சாரிடம்!! பசங்க ஒவ்வொருத்தரிடமும் சில மாறாத தன்மைகளும் பல மாற்றங்களும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன........

ஒரு வகுப்புக்கு மூன்று "கார்த்திக்"குகள் இருந்தாக வேண்டுமே!! அவர்களின் வகுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.... மூன்று மாணவர்களுக்கு ஒரே பெயர் "கார்த்திகேயன்" அதிலும் இருவருக்கு இனிஷியலும் ஒன்றாக அமைந்திருந்தது!! எனவே பட்டப்பெயர் தவிர வேறு வழியில்லாமல் போக...... சில பட்டப்பெயர் திலகங்கள் ஒன்றிணைந்து மூன்று கார்த்திகளுக்கும் அவர்களது உடல் பருமனிற்கேற்பப் பின்வருமாறு பட்டாபிஷேகம் செய்தார்கள்.... கொஞ்சம் ஒல்லியானவன் கார்த்திக் (Thick), ஒரு சுற்றுப் பெருத்தவன் கார்த்திக்கர் (thikcker), மற்றும் ரொம்பப் பெரியவர் கார்த்திக்கெஸ்ட் (Thickest!!)... ...

இப்போது பார்த்தபோது திக்கெஸ்ட் கார்த்திகேயன் வடக்கில் வேலை கிடைத்து சப்பாத்தி புண்ணியத்தில் கொஞ்சம் Thin ஆகியிருந்தார்..... திக்கு க்குத் திருமணமாகி திக்கரை விடக் கொஞ்சம் திக்காகிப் போயிருந்தார்!!! அவர்களுக்கு மாற்றுப் பட்டாபிஷேகங்கள் நடந்தன!!! அவர்களின் சின்னவயது ஹீரோவாக இருந்த செபாஸ்டியன் சார் அட்டெண்டன்ஸ் எடுத்து (!) அசத்தலாக ஓர் உரையாற்றினார்!! தொடர்ந்து பசங்க ஒவ்வொருவராக மேடையேறித் தங்கள் மறக்கமுடியாத பள்ளி நிகழ்வைப் பகிரத்தொடங்கினர்!!!

நடப்பதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டு அதிகம் பங்குபெறாமல் இருந்தான் சுதன்.... மாணவர்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் எல்லாம் ரொம்ப சேட்டைக்காரர்களான ரோமியோ, பாண்டி, விஷ்ணு மற்றும் சிலரே திரும்பத் திரும்ப நினைவுகூறப்பட்டனர்!! நினைவுகூறுமளவு சுதனுக்கே தன்னைப் பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை.... அதுசரி எப்பவுமே தானுண்டு தன் படிப்புண்டு என்றிருந்தால் என்னதான் நினைவிலிருக்கும்..... ஆனால் சுதனை மேற்கோள் காட்டி ஒரு ஃப்ளாஷ் பேக் பகிரப் பட்டது அந்த மேடையில் அவனை அதிகமாக ஆச்சர்யப்படுத்தி.........

சுதனுக்கு அடுத்த ரோல் நம்பர் மாணவன் சுந்தர பாண்டியன்..... சூனா பானா என்று அன்போடு அழைக்கப்படும் இப்போதைய சாஃப்ட் இன்ஞ்சினியரான சுந்தர பாண்டி தன்னுடைய நினைவுகளை சுவையோடு பகிர மேடையேறினார்.....

" நான் வாழ்க்கையில கடைசியா பரிச்சையில காப்பி அடிச்ச சம்பவம் அது!!" என்று ஆரம்பித்த சூனா பானா.....

" ஒரு தமிழ்ப் பரிட்சை.... அதிசியமா நான் நல்லா படிச்சிட்டு வேற போயிருந்தேன்..... நல்லாத்தான் எழுதிட்டு இருந்தேன்.... திருக்குறள் கேள்வி ஒண்ணு வந்திச்சு.... " நன்று" என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக என்று கேட்டிருந்தாங்க.... எனக்குக் கைக்கு எட்டுது ஆனா வாய்க்கு எட்டல..... ஏதோவொரு வேகத்துல முன்னால உக்காந்திருந்த சுதன் கிட்ட அந்தக் குறளைக் காண்பிக்க சொல்லிட்டேன்......

"இனரெறி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று"

என்கிற திருக்குறள் அது..... படிப்பாளி சுதன் வேகவேகமா எழுதிட்டு இருந்தவன் என்னை சட்டை பண்ணவேயில்லை..... "சுதன், அந்த திருக்குறள் ஸ்டார்ட்டிங் மட்டும் சொல்லுடா" ன்னு நான் தொடர்ந்து நச்சரிக்க...... "வெகுளாமை" கொஞ்சமும் தெரியாத‌ சுதன் வெகுண்டு எழுந்துட்டான்..... "பேப்பரக் குடு உனக்கும் நானே பரிச்சை எழுதித்தறேன்"னு அவன் கோபமாக் கத்த நான் கிழிஞ்சி போய்ட்டேன்!! அந்த நேரம் பாத்து சூப்பர்வைஸ் பண்ணிட்டு இருந்த தமிழ் வாத்தியார் பாத்துட்டாரு....... எல்லாம் முடிஞ்சுபோச்சுனு நினைச்ச நேரம்... அவர் வேகவேகமா ஓடிவந்து "என்னடா பிரச்னை" என்று பதற‌ நான் பயத்துல உண்மய சொல்லி அப்ரூவராகிட்டேன்..... கதை முடிஞ்சிச்சுடானு நான் இருந்த சமயம் அவர் திடீர்னு சிரிச்சுட்டாரு..... சுதனைப் பார்த்து " அடப்பாவி.. "வெகுளாமை நன்று" அப்படின்னு வள்ளுவர் சொன்ன குறளுக்கே இப்படி வெகுண்டு எழுறியே.... கோபத்தைக் குறைசுசுக்கோடா தம்பி... நீ கத்துனதை நம்ம ஹெட் மாஸ்டர் கேட்டுட்டா அப்புறம் எனக்கு இன்ரெறி தோய்ஞ்சுபோகும்டா!!!னு சொல்லி... என்பக்கம் திரும்பி " மவனே.... பரிச்சைல காப்பி அடிக்கக் கூடாதுனு வள்ளுவர் சொல்லியிருக்காரானு தெரியல இன்னொரு தடவ நீ பேசுறத பாத்தேன்....." என்று நாக்கைத் துருத்திக் காட்டிட்டு போயிட்டார்!!!....சத்தியமா சொல்லுறேன் அதுக்கப்புறம் நான் என் வாழ்க்கையில பரிச்சை எழுதும்போது பேசினது கூட கிடையாது..." என்று சொல்லி... "டேய் சுதன்.... உன்னையும் உன் கோபத்தையும் என்னால மறக்கவே முடியாதுடா" என்று சொல்ல அனைவருமே சிரித்தார்கள்.... கொஞ்சம் கூட இருக்கம் இல்லாமல் வாய்விட்டு சுதனும் சிரித்தான் மனமாற!!!

தொடர்ந்து எத்தனையோ சந்தோஷப் பரிமாற்றங்கள் அரங்கேற டவுசர் போட்ட காலத்துக்கே சென்றுவிட்ட உணர்வோடு.... மனக்கசப்புகளோ.... ஏற்றத்தாழ்வுகளோ கொஞ்சமுமின்றி... பாசமாகக் கண்ணீர்த்துளிகளுடன் ஆரத்தழுவி விடைபெற்றனர் அனைவரும்.... எல்லாருமே ஒரு நிறைவான மகிழ்வுடன் அங்கிருந்து சந்திப்பு முடிந்து கிளம்ப... கொஞ்சம் கலங்கியிருந்த கண்களுடன் சுதனும் தன் பைக்கை எடுக்கப் போனான்........ அவன் பைக்கை எடுக்க வழியில்லாமல் இரண்டு மூன்று சைக்கிள்கள் குறுக்கே நிறுத்தப் பட்டிருந்தன...!!!

அதிசியம்.... சுதனுக்குக் கோபம் வரவில்லை!! அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது....
" நன்று" என முடியும் அந்தக் குறளையும் அந்த நிகழ்வையும் நினைத்துப் பார்த்தவன் மீண்டும் ஒருமுறை சிரித்துக் கொண்டு மெதுவாக அந்த சைக்கிள்களை நகர்த்தி வைத்துவிட்டுத் தன் பைக்கை எடுத்துக் கிளம்பினான்.....

"இனறெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று"

சுதனுக்கு இந்தத் திருக்குறள் இப்போது நினைவில்லை ஆனால் அன்று பரிட்சையில் தெரியாமல் விழித்த சூனா பானாவுக்கு இன்றுவரை அடிபிறழாமல் நினைவிருப்பதை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டான்!!

"வெகுளாமை நன்று".... குறளின் இந்தக் கடைசி இரண்டு அடிகளுக்கு மட்டும்தான் அர்த்தம் தெரிந்தது....." ஹ்ம்ம்ம்ம்..வெகுளின்னா கோபம்.... வெகுளாமை நன்று.... கோபப்படாம இருக்குறது நல்லது!!" மற்ற அடிகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.... எவ்வளவோ முயன்றும் "தமிழ்" புரியவில்லை!!

"வள்ளுவருக்கு ஏன் இந்தப் பிடிவாதம்? நல்ல விஷயத்த எழவு புரியுற மாதிரி சொல்லிவெச்சாத்தான் என்னவாம்??!!" வெகுளாமை சொன்ன வள்ளுவரையே எறித்தது சுதனின் வெகுளி!!

"டேய் சுதன்..... டேய்.... இது ரொம்ப டூ மச்டா!! யாரைத் திட்டுற? திருவள்ளுவர்டா... கன்னத்துல போட்டுக்கோ!!"

கரெக்ட் !!... சுதனின் மனது பிரேக் அடித்த வாழ்க்கையின் முதல் கோபம் இதுதான்.... இப்படி ஆரம்பித்துதான் அடுத்த நான்கே நாட்களில் நான்கு செஞ்சுரிகளுக்கும் மேலான கோபத் தீக் கொழுந்துகளை கிடைக்கிற கேப்பில் எல்லாம் உள்புகுந்து ஊதி ஊதி அணைந்து வந்தது சுதனின் மனது!!!

பைக்கை நேரே ஓட்டிக்கொண்டிருக்கும் போது... மனது "கோபம்" எனும் டாபிக் கில் ஒரு பி.ஹெச்.டிக்கே அடிபோட்டுக்கொண்டு வந்தது!!.... "எப்படி நான் "கோபக்காரன்"னு ஊரெல்லாம் பேரெடுத்தேன்??" .........."ஏன் எனக்கு இவ்வளவு வேகமா கோபம் வருது???" ......... "
"எப்போ இருந்து நான் இப்படி கோபப் படுறேன்??.... எப்போ எல்லாம் கோபப்படுறேன்??" கேள்விகளில் கவனமிழந்து ஒரு நொடியில் "ஏலேய்... ரோட்டுல வண்டிய ஓட்டுடா" என ஒரு கோபக்குரல் வெளியிலிருந்து காதில் விழ்ந்தது... சுதனைத் தாண்டிச் சென்ற கார் காரனின் கோபம் அது!! " இப்படி மனச வேற எங்கேயோ வெச்சிக்கிட்டு பைக்கைத் தாருமாறா ஓட்டினா திட்டமாட்டானா??!!" முதன்முறையாக அடுத்தவனின் கோணத்திலிருந்தெல்லாம் சிந்தித்து அவன் மனம் அவனையே ஆச்சர்யப் படுத்தியது!!

அப்போது நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்த வலியை சுதன் ஒருகணம் அனுபவித்தான்!!!! ஆம்.... ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு....." யுரேகா.....யுரேகா!!!"

"கோபம் இந்த பாழாய்ப் போன கோபம்..... அடுத்தவர்களின் உணர்வைப் புரிந்துகொள்ளும்போது குறைகிறது..... அந்த குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொள்கிறபோது கோபம் காணாமலேயே போகிறது!!"

"ஆஹா... சுதன்.... சூப்பர்டா.... கலக்குறியே.... என்ன ஒரு கண்டுபிடிப்பு !!" என்கிற ரீதியில் சுதனின் மனம் சிலாகிக்கத் தொடங்கியது........ இப்படி யோசிக்கும் திற‌ன் அனைவ‌ருக்கும் இருந்தால் உல‌கில் கோப‌மே இருக்காது என‌ எண்ணிக்கொண்டான்!!

இப்போது யோசித்துப் பார்க்கும்போது சுதனின் உலகில் ஜனத்தொகை மிகவும் குறைவாகவே தோன்றியது மனதுக்கு.... அம்மா.... அப்பா.... தங்கை.... இவர்களிடம் இருக்கும் குறைகளை சகித்துக்கொண்டு (!) அந்தக் குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொண்டாலே போதும் கோபம் என்னும் தீயினால் தன் வாழ்க்கை இனி புகையாது.... என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான்......

இந்தப் புதிய பதிவியுயர்வு வேலையின் அலைச்சல்களை முற்றிலும் களைந்து விடும்!! எனவே எரிச்சல் இருக்காது... மேலும்.... ஒரு முற்றிலுமான மாற்றம் காட்ட இந்த புதிய ஆரோக்யமானதொரு தொடக்கத்தை மிகச்சிறந்த ஒரு வாய்ப்பாக‌ உணர்ந்தான் சுதன்!!

அவன் கன்னத்தை அவனே பிடித்து முத்திக்கொள்ளாத குறையாக (!) அடுத்தவர்களின் குறைகளை ஏற்றுக்கொள்ளும் முடிவெடுத்திருந்தான் "Mr. Perfect" சுதன்..... ஒருவாரம் லீவிற்க்குப்பின் புதிய பதவியில் டியூட்டி ஜாயின் செய்தால் போதும்.... நான்கு நாட்களாகிப் போனது...... கொழுந்துவிட்டு எழுந்த எத்தனையோ கோபங்களையெல்லாம் தடுத்து ஒருமுறை கூட வெடித்துச் சிதறாமல் உண்மையிலேயே கவனமாய்க் கச்சிதமாய் தன்னை நிதானமாக நிலை நிறுத்திக் கொண்டான்.....

குறைகள்..... எத்தனைக் குறைகள்.... ஆனால் அதையும் தாண்டி ஒரு பாசம் இருக்கத்தானே செய்கிறது!! இனிமேல் குறைகளைக் கண்ணோக்காமல் அந்த அன்பையே பிரதானப் படுத்திக் கொள்வோம் என்கிற ரேஞ்சில் ஒரு "சுதனானந்தாவாக" அவனையே அறியாமல் மெல்ல அவதாரம் தரித்துக் கொண்டிருந்தான்!!

ருசியாக நேரத்துக்கு சமைத்துப் போடுவதைத் தவிர வேறெதெவுமே அறியாத ஒரு அம்மா தனக்கு இருப்பதனால்தான் சுதனுக்குதான் எத்தனை குறைகள்.... ஆஃபீஸில் நடந்த‌ ஒரு விஷயத்தை சமையலறையில் ஆர அமர பகிர்ந்து கொள்ளமுடிகிறதா......

ஓர் இ‍மெயில் ஐடி இல்லாத கல்லூரி மாணவி அவன் தங்கை..... கோலப்புத்தகம் வாங்கிப் பத்துப் புள்ளிக் கோலம் போட ஃபோன் பன்ணி டிஸ்கஸ் செய்யும் தோழிகளை இந்த மாடர்ன் யுகத்தில் எப்படித்தான் அவள் தேடிக் கண்டுபிடித்தாளோ???

மகனுடன் கொஞ்சம் ஃப்ரண்ட்லியாகத்தான் பழகினால் என்ன இந்த அப்பாவுக்கு!! அச்சு அசலாக ஒரு தனுஷ் படத்தில் வரும் அப்பா கேரக்டரைப் பிரதிபலிக்கும் தந்தையாக இருக்கிறாரே!!!

எத்தனை எத்தனை குறைகள்.... அத்தனைக் குறைகளையும் ஏற்றுக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு அன்பாகவே நடந்துகொண்டிருந்தான் இந்த நாட்களில்........

புரமோஷன் விஷயத்தை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருந்தான்..... நேரம் பார்த்து ஜாலியாக சொல்லி சர்ப்ரைஸ் தர நினைத்திருந்தான் சுதன்......

வெள்ளிக்கிழமை....... அன்றைக்கு வாசலில் அட்டகாசமாக ஒரு கோலத்தைப் போட்டுக் கொண்டிருந்தாள் ஷாலினி..... "உங்க அண்ணன் மேனேஜர் ஆகிட்டாருன்னு ஸ்பெஷல் கோலமா!!" அசால்டாகக் கேட்டுவிட்டுப் போனாள் சுதனின் உடன்பணிபுரிபவன் ஒருவனின் த‌ங்கை!! கோல‌த்தை அப்ப‌டியே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் ஷாலினி.... "அம்மா...அம்மா... ந‌ம்ம‌ அண்ண‌னுக்கு...."
சொன்ன‌வாறே உள்ளே குதித்துச் சென்றாள்....

மாலைவீட்டுக்கு வ‌ந்த‌ சுத‌னிடம் எதுவும் தெரியாத‌துபோல்தான் அவ‌னுடைய‌ அம்மா ந‌ட‌ந்துகொண்டார்.... ஷாலினிக்கோ அந்தள‌வு ப‌க்குவ‌ம் கைகூடாம‌ல் கொஞ்ச‌ம் குறும்பாக‌வே சுத‌னிட‌ம் பேசிக்கொண்டிருன்தாள்..... ஏதோ வித்தியாச‌த்தை உண‌ர்ந்து கொண்டிருந்த‌ சுத‌னிட‌ம் ஷாலினி... ம‌றைத்து ம‌றைத்து வைத்திருந்த‌ ஒரு ச‌ந்தோஷ‌ செய்தியைத் த‌ன் influence(!)மூல‌ம் க‌ண்டுபிடித்துவிட்ட‌ பெருமையில் ஹீராயிஸ‌மாக‌ப் ப‌த‌வியுய‌ர்வு விஷ‌ய‌த்தைத் தாங்க‌ள் க‌ண்டுபிடித்துவிட்ட‌தாக‌ அறிவித்தாள் ஷாலினி! ஏதோ ஒரு சந்தோஷ‌த்துக்காக‌, ச‌ர்ப்ரைஸ் த‌ருவ‌த‌ற்காக‌ வைத்திருந்த‌ விஷ‌ய‌ம் லீக் ஆகிவிட்ட‌ ஏமாற்ற‌ம் மெதுவாக‌ கோப‌மாக‌ க‌ண‌ன்ற‌து அவ‌னுக்குள்..... த‌ன் அண்ண‌னுக்குள் ஏற்ப‌ட்டிருந்த‌ த‌லைகீழ் மாற்ற‌ங்க‌ளுக் கெல்லாம் இந்த‌ப் ப‌த‌வியுய‌ர்வுதான் கார‌ண‌ம் என்கிற‌ ரீதியில் ஷாலினி க‌மெண்ட் அடிக்க‌ வீட்டில் எல்லாரும் சிரிக்க‌(ச‌ந்தோஷ‌மாக‌த்தான்!) சுத‌னால் இம்முறைக் கோப‌த்தைக் க‌ட்டுப்ப‌டுத்த‌வே முடிய‌வில்லை.... வெடித்து சித‌றிவிட்டான் ஒருவார‌ம் இன்முக‌ம் காட்டிய‌ த‌ன் அண்ண‌ன் த‌ன்முக‌ம் காட்டிய‌தில் ப‌ய‌ந்தே போய்விட்டாள் ஷாலினி.... யாருமே எதிர்பார்த்திருக்க‌வில்லை சுத‌னின் கோப‌த்தை எத‌ற்குக் கோப‌ப்ப‌டுகிறான் என்ப‌தையும் யாரும் புரிந்திருக்க‌ வாய்ப்பில்லை... வ‌ழ‌க்க‌ம் போல் கோப‌த்தில் வார்த்தைக‌ளில் அமில‌ம் தெளித்து கொட்டித் தீர்த்த‌ ச‌த்த‌த்தில் வீட்டுச் சுவ‌ரின் காரைக‌ள் பெய‌ர்ந்திருக்கும்..... கோப‌த்தின் முடிவில் "விர்ர்ர்ர்ர்ர்...." என்று பைக் ச‌த்த‌ம் கேட்ட‌து வீட்டு வாச‌லில்.....

கொஞ்ச‌ தூர‌த்தில் ரோட்டோர‌த்தில் பைக்கை நிறுத்திவிட்டு ஒரு ம‌ண‌ற்குவிய‌லில் அம‌ர்ந்திருந்தான் சுத‌ன்.... த‌ன் கோப‌த்தைக் கைவிட்ட‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ குறிப்பிட‌த்த‌க்க‌ ஒரு மாற்ற‌ம்.... தானாக‌வே த‌ன்னைப் ப‌ற்றிய‌ ஓர் உண்மையை உண‌ர்ந்து த‌ன்னையே மாற்றிக்கொள்வ‌த‌ன் ம‌க‌த்துவ‌த்தை அறியாத‌ இந்த‌க் கூட்ட‌ம் இங்கு என்னைப் பார்த்து சிரிக்கிற‌தே..... என்று த‌ன் ம‌ன‌திட‌ம் புல‌ம்பினான்.... முன்பு த‌ன் கோப‌த்தைக் கிண்ட‌ல் அடித்திருப்பார்க‌ள் இன்று தான் கோப‌ப்ப‌டாத‌த‌ற்குக் கேலியாய்க் கார‌ண‌ம் க‌ற்பிக்கிறார்க‌ள்....ஹ்ம்ம்ம்ம்ம்ம்.... இவ‌ர்க‌ளுக்குத் தெரியுமா என் சிந்த‌னையின் ஆழ‌ம்??? இவ‌ர்க‌ளுக்குப் புரியுமா அவ‌ர்க‌ளின் குறைக‌ளோடு அவ‌ர்க‌ளை ஏற்றுக்கொள்வ‌தின் வ‌லி??????

"இதுவும் அவ‌ர்க‌ள‌து குறைதான் என‌ ஏற்றுக்கொள்வோம்" என‌ வேண்டா வெறுப்பாக‌ ம‌ன‌தை அமைதிப் ப‌டுத்திக்கொண்டு வீடு திரும்பினான்....

வீட்டில் நுழைந்தான்.... ஷாலினி ஏதோ ப‌டித்துக் கொண்டிருந்தாள்... அப்பா டிவியில் வ‌ழ‌க்க‌ம்போல் செய்திக‌ள் பார்த்துக் கொண்டிருந்தார்.... அம்மாவுக்கு ச‌மைய‌ல்!! க‌த்திக் குவித்துவிட்டு வீடு திரும்பிய‌ சுத‌ன் வீடு திரும்பிய‌தில் யாரும் புதிதாக‌ எதுவும் காட்டிக்கொள்ளாத‌து ஏனோ சுத‌னுக்கு இப்போது புதிதாக‌ இருந்த‌து!!


"சுத‌ன் வ‌ந்துட்டியா எங்கே ராத்திரி சாப்பாடுக்கு வ‌ந்திடாம‌ போயிடுவியோனு க‌வ‌லைல‌ இருந்தேன்.... பாய‌ச‌ம் ப‌ண்ணியிருக்கேன்யா.... உனக்கு வேலைல‌ ப்ர‌மோஷ‌ன் ஆன‌துக்கு... ஏய் ஷாலினி அண்ண‌னுக்கு ஒரு ட‌ம்ள‌ர் எடுத்துட்டுவா..... "

என்று ச‌க‌ஜ‌ம் காட்டிய‌ அம்மாவிட‌ம் மெல்ல‌ சென்று... "அம்மா.... நான் கோப‌ப்ப‌ட்டு இப்ப‌டி க‌த்தி ஆர்ப்பாட்ட‌ம் ப‌ண்ணிட்டுப் போய் வ‌ந்திருக்கேன்... ஆனா நீங்க‌... நீங்க‌...எப்ப‌டி இவ்ளோ ச‌க‌ஜ‌மா.... என‌க்கு ஒண்ணும் புரிய‌ல‌ மா...." முத‌ன்முறையாக‌ வாழ்க்கையில் இப்ப‌டியெல்லாம் கேள்வி கேட்கிறான் சுத‌ன்.....

"இதுல‌ என்ன‌ய்யா இருக்கு.... ஒவ்வொருத்த‌ருக்கும் ஒவ்வொரு குண‌ம்... உன‌க்குக் கோப‌க்கார‌ சுபாவ‌ம்.... வீட்டுக்குள்ள‌ எல்லார் சுபாவ‌த்தையும் ப‌ழ‌கிட்டுப் போறதுதானே..... நீ சீக்கிர‌மா சூடு ஆறுற‌துக்குள்ள‌ அந்த‌ப் பாய‌ச‌த்த‌க் குடிச்சிடுப்பா.."

என்று சொல்லிவிட்டு சென்றார் சாதார‌ண‌மாக‌......

"ந‌ன்று" என‌ முடியும் குற‌ளுக்கு இன்னும் முழுமையாக‌ அர்த்த‌ம் தெரிய‌வில்லை சுத‌னுக்கு.... ஆனால் புரிந்த‌வ‌ரைப் போதுமான‌தாகத் தோன்றிய‌து இப்பொழுது..

"வெகுளாமை ந‌ன்று!!"

பிர‌பு. எம்

Wednesday, May 06, 2009

"தரிசனம்"- சிறுகதை



"தரிசனம்"- "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!

"இளமை"விகடனில் இரண்டாவது முறையாக என்னுடைய சிறுகதை வெளிவந்திருப்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். விகடனுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள்!! இதைப் போன்று பொது ஊடகங்களில் எழுத்துக்கள் பிரசுரமாகிற பொழுது பலரின் பார்வை நம் படைப்புகளில் படும் அரியதொரு வாய்ப்பு கிடைக்கின்றது.... தொடர்ந்து ஊக்கமளித்துவரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்!!


Click here to view the story


தரிசனம்


மாலை 5:30 மணியிருக்கும். அது ஒரு பரபரப்பான மாலை வேளையாகத்தான் இருந்தது, சிபிக்கு. அவன் படிக்க வேண்டுமென்பதற்காக அவனுடைய அப்பா வீட்டு மாடியில் கட்டித் தந்த பத்துக்குப் பத்து அளவிலான சிறிய அறையில் கதிரவனின் மாலைக் களைப்பினால் கருமை மெல்லப் படர்ந்து வருகிறது... ஒரு மரமேசை அதற்கு ஒரு நாற்காலி, படுத்து உறங்குவதற்கென்று மெல்லிய மெத்தையிடப்பட்ட ஒரு கட்டில் ஆகியன மட்டுமே அந்த அறையை ஆக்கிரமித்திருந்தன.

மேசையில் புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. சிபி கட்டிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்திருக்கிறான். கட்டிலிலும் சில புத்தகங்களும், வினாத்தாள்களும், 'கணக்குப் போட்டுப் பார்க்கிறேன்' என்று கிறுக்கப்பட்ட வெள்ளைத்தாள்கள் சிலவும் சிதறிக் கிடக்கின்றன. அவன் மடியில் ஓர் எழுதும் பலகை, அதில் திறந்த மேனிக்கு ஒரு வினாவங்கிப் புத்தகம். அதற்கு வேகமாக விடையெழுதும் முகமாக கணக்குகளுக்கு விடைகளை ஒரு வெள்ளைத்தாளில் கிறுக்கிக்கொண்டிருக்கிறான் சிபி.
நாளைய தினம் +2 பொதுத் தேர்வு கணிதப் பரிட்சை!

ஒரு 10 மார்க் கணக்குக்கு விடையெழுத முனைகிறான் சிபி. ஏனோ கணக்குப் பாதியில் தடுமாறுகிறது. பதற்றம்... 'கடிகாரத்தின் நொடிமுள் இன்று மட்டும் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறது?', 'அதற்குள் இருட்டிவிட்டதே?' என மனம் பதை பதைக்கிறது.

அந்தக் கணக்குக்கு விடை தெரியவில்லை.

'நன்றாகப் படித்த கணக்கு தானே, ரிவிஷனில் கூட நான் எழுதினேனே, அப்படியானால் படித்தவை அனைத்தையும் நான்
மறந்த விட்டேனா?' என்றெல்லாம் அவன் மனம் அவனைப் போட்டு வாங்கியது. சரட்டென்று அந்தக் கணக்கை அடித்துவிட்டு ஒரு புதிய தாளில் மீண்டும் எழுதத் துவங்கினான். அதே இடத்தில் கணக்கு மீண்டும் பிரேக் அடித்தது. செய்வதறியாது திகைத்த சிபியின் கண்கள் தனக்கு நேரெதிரில் உள்ள சுவற்றை நிலைகுத்திப் பார்த்தன...

அந்த மஞ்சள் சுவற்றில் சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்த நிலையில் ஒரு வடிவமற்றுச் சிதறி இருந்தன. அந்த சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே சிபியின் கண்களுக்கு ஒரு பிம்பம் தோன்றியது. மெல்ல அது உருப்பெற்றது. அது ஒரு முகம், அது
சிரிக்கின்றது. அது சிபியின் அபிமான நடிகருடைய முகம்.

அந்தச் சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே அந்த முகம் அத்தனை தத்ரூபமாகக் குடிகொண்டிருந்தது! அடிக்க‌டி அதே சுவ‌ற்றுக் கீற‌ல்க‌ளிலும், மொஸைக் த‌ரை டிஸைன்க‌ளிலும், ப‌ல‌முறை அவ‌ன் 'த‌லைவ‌ர்' இதே போல் அவ‌னுக்கு விசித்திர‌
த‌ரிச‌ன‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார். அவை அதுவ‌ரை அவ‌னுக்கு ஓர் அதிசிய‌ அனுப‌வ‌மாக‌வே இருந்துவ‌ந்துள்ள‌து. ஆனால் இன்று...

திடீரென்று "ச்ச்சீய்" என்று கூறித் த‌லையை சிலுப்பிக் கொண்டுத் தன் நிலைகுத்திய‌ பார்வையைக் க‌லைத்தான்.

சில‌ நொடிக‌ள் அவ‌ன் ம‌ற‌ந்திருந்த‌ ப‌த‌ற்ற‌ம் அவ‌னை ஆட்கொண்ட‌து.

இப்போது அறை மேலும் க‌ருத்திருந்த‌து. எழுந்தான்... க‌ச‌ங்கிய‌ அழுக்கு லுங்கியிலிருந்து பேன்ட், ச‌ர்ட்டுக்கு மாறினான். க‌ணித‌ப் புத்த‌க‌த்தையும் சில‌ நோட்டுக்களையும், கையிலேந்திக் கொண்டு த‌ன் அறைக் க‌த‌வைப் பூட்ட‌ ம‌ற‌ந்த‌வ‌னாய் வேக‌மாக‌ப் ப‌டியிற‌ங்கினான். கீழே வீட்டில் சிபிக்குக் கொஞ்ச‌மும் தொல்லைத‌ரா வ‌ண்ண‌மாய் மிக‌வும் குறைக்க‌ப்பட்ட‌ ஒலியில் அம்மா
டிவியில் சீரிய‌ல் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் ம‌டியில் ஒரு நிமிட‌ம் ப‌டுக்க‌லாம் என‌ ம‌ன‌ம் ஏங்கிய‌து. ஆனால், அத‌ற்கு நேர‌மில்லை. வீட்டு வ‌ராந்தாவில் வானொலியில் த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பாட‌லை பாட‌விட்டும் அதனோடு
சேர்ந்து உற்சாகமாக முணுமுணுத்துக் கொண்டும் ப‌ள்ளி ஆசிரிய‌ரான‌ அப்பா சில விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தார்.

சிபி சைக்கிளைத் திற‌க்கும் ஒலிகேட்டு நிமிர்ந்த‌ அப்பா, "என்ன‌ சிபி சார்.. எங்கே கிள‌ம்பிட்டார்?" என்று
கேட்டார், பாசம் கனிந்த முகத்துடன்.

அப்பா குஷியாக‌ இருந்தால் சிபியை 'சார்' போட்டு அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதுவரை வில்ல‌னாக‌த் தெரிந்த‌ த‌ந்தையின் முக‌ம்
அன்று அன்பொளி வீசிப் பிர‌காச‌மாய் ஜொலித்த‌து.

"ப‌டிச்சு முடிச்சிட்டியாடா க‌ண்ணா?" என்று எதிர்பார்ப்புட‌ன் தொட‌ர்ந்த‌ த‌ந்தையிட‌ம், "ப‌டிச்சிட்டேன்பா, ஒரு க‌ண‌க்கு ச‌ந்தேக‌மாயிருக்கு அதான் ச‌ந்திரா அக்காகிட்டே போய்க் கேட்க‌ப்ப போறேன்," என்று விடைபெற்றுக் கிள‌ம்பினான் சிபி.

ச‌ந்திரா அக்கா... எம்.எஸ்.சி க‌ணித‌ம் தேறிய‌வ‌ள். அர‌சாங்க‌ வேலைக்காக‌க் காத்துக் கொண்டு உள்ளூரில் ஒரு த‌னியார்ப் ப‌ள்ளியில் க‌ண‌க்கு டீச்ச‌ராக‌ வேலை பார்த்து வ‌ருப‌வ‌ள். காண்போர் அனைவ‌ராலும் ஓர் அறிவுஜீவியாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌டுப‌வ‌ள். சிபியைப் பொறுத்தவ‌ரை, ச‌ந்திரா அக்கா ஒரு ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம். க‌ண்சிமிட்டும் நேர‌த்தில் க‌ண‌க்குப் போட்டுக் காட்டும் ஒரு ம‌ந்திர‌வாதி! அவ‌ளிட‌ம் தொட‌ர்ந்து ப‌யின்றிருந்தால் இந்த‌ நிலைத் த‌ன‌க்கு வ‌ந்திருக்காது என‌ சிபி ந‌ன்கு அறிவான். மேலும் தன்னுடைய‌ இந்நிலையில் ச‌ந்திரா அக்காவால் என்ன செய்துவிட‌ முடியும்? ப‌ரிட்சைக்கு இன்னும் முழுதாக‌ அரைநாள் கூட‌ இல‌லையே? என்றும் தன்னைத்தான் நொந்த‌வ‌னாய் சைக்கிளை வேக‌மாக‌ அழுத்தினான்.

மெயின்ரோடு வ‌ந்த‌து... அந்த ரோட்டைக் க‌ட‌ந்த‌தும் வ‌ரும் நேர் சந்தில் ச‌ற்று வேக‌மாக‌ சைக்கிளில் ப‌ய‌ணித்தால் ஐந்தாவ‌து நிமிட‌த்தில் ஒரு காய்க‌றி மார்க்கெட் வ‌ரும். அந்த மாலை நேர‌த்து மார்க்கெட்டின் ஜ‌ன‌ சந்த‌டியில் சைக்கிளை மூன்றாவ‌து சந்தில் செலுத்தினால் ச‌ந்திரா அக்கா வீடு வ‌ரும். ச‌ற்று தூர‌ம்தான், ஆனால் அதையெல்லாம் சிபி பொருட்ப‌டுத்த‌வே இல்லை.

அவ‌ன் மெயின் ரோட்டைக் க‌ட‌க்க‌ எத்த‌னித்துக் கொண்டிருக்கிறான். அந்த ரோட்டின் இருபுற‌மும் ஏதொவொரு க‌ளேப‌ர‌ம். யாரோவொரு பிர‌ப‌ல‌ம் அந்த ரோட்டு வ‌ழியே செல்ல‌ப் போகிறார் என்று புரிந்த‌து...

அது யார்? என்று எண்ணிய‌ப‌டி தலையைத் திருப்புகிறான்... சுவ‌ரெங்கும் அவனது அபிமான‌ ந‌டிக‌ரை வ‌ர‌வேற்றுப் போஸ்ட‌ர்க‌ள் ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன! சிபியின் க‌ண்ணில் ஒரு சிறு மின்ன‌ல் "ஹை த‌லைவ‌ர் வ‌றாரா?" என்று ஒரு திகைப்பு.
மெயின் ரோடு முழுவ‌தும் கூடும் கூட்ட‌த்தைக் க‌லைத்துக் கொண்டு பாதையை ஒழுங்கு செய்கிற‌து சிபிக்கு மிக‌வும்
ப‌ரிச்ச‌ய‌மான‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ப் ப‌ட்டாள‌ம்.

புத்த‌க‌ப் புழுவாக‌ வீட்டிலேயே முட‌ங்கிக் கிட‌ந்த‌ சிபிக்கு அந்த‌ ந‌டிக‌ர் என்றால் ஒரு த‌னி ஈர்ப்பு. அதுவும் சொந்த‌க்கார‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் த‌ன்னை அந்த‌ ந‌டிக‌னின் சாய‌லில் இருப்ப‌தாக‌ப் புக‌ழ்வ‌தைக் கேட்டால் பூரித்துப் போவான். அந்த‌ பூரிப்பு தான் அவ‌னைத் திசை மாற்றிய‌து. பாதிநாள் த‌ன் த‌னிய‌றையின் ர‌ச‌ம் தேய்ந்த‌ க‌ண்ணாடியின் முன்னேயே செல‌வ‌ழித்தான். "நீ
ந‌ம்ம‌ த‌லைவர் மாறியே இருக்கேடா!" என்று புக‌ழ்ந்து புக‌ழ்ந்தே ரசிக‌ர் ம‌ன்ற‌ விழாவில் அந்த‌ ந‌டிக‌ரைப் போல‌வே வேட‌ம‌ணிந்து மேடையேற்றின‌ர் சிபியை..

க‌ன‌விலேயே கால‌ம் க‌ரைந்த‌து. தேர்வு நாளும் வ‌ந்த‌து. அந்த‌ ந‌டிக‌ர் மேல் சிபிக்கு இன்றும் ஓர் இன‌ம் புரியாத‌ மோக‌ம் இருக்க‌த்தான் செய்த‌து.

அழுத்திப் பிடித்திருக்கிறான் சைக்கிள் பிரேக்கை... சில‌நொடி தாம‌தித்தால் ம‌ன‌ம் விரும்பும் நாய‌க‌னை முத‌ன்முறை நேரில் த‌ரிசிக்க‌லாம். ஆனால் ம‌ன‌மோ தொட‌ர்ந்து சைக்கிளை செலுத்துமாறு அழுத்துகிற‌து. எனினும் சிபி மீண்டுமொருமுறை ம‌றுப‌ரிசீல‌னை செய்கிறான். அதோ தூர‌த்தில் திற‌ந்த‌ ஜீப்பில் த‌லைக்குமேல் கைகாட்டிய‌ வ‌ண்ண‌ம் அந்த‌ உருவ‌ம் ம‌ங்க‌லாய்த் தெரிகிற‌து. ச‌ற்று நேர‌த்துக்கு முன்பு சுவ‌ற்றில் சுண்ணாம்புக் காரைக‌ளுக்கு இடையே தோன்றிய‌ அதே முக‌ம்!

"பார்த்துவிட்டுத்தான் போவோமே!" என்று முடிவுட‌ன் இருந்த‌ சிபியின் ம‌ன‌ம் திடீரென அந்த‌க் க‌டைசி க‌ட்ட‌த்தில், "உனக்கு இந்நிலை வ‌ர‌க்கார‌ண‌மே இந்த‌ மோக‌ம்தான், இத‌னை இக்க‌டைசி த‌ருண‌ம் வ‌ரை நீடிக்க‌ச் செய்தால் சிறிதும் நியாய‌ம் ஆகாது. இந்தத் தியாக‌த்தையாவ‌து நீ செய்தே ஆக‌ வேண்டும்!" என்று எச்ச‌ரித்த‌து. மேலும், வீட்டில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தந்தை, தாயின் பாச முகங்கள் ஒருமுறை மனதில் வந்து போக, தன் மனதின் இந்த‌க் க‌டைசிநேர‌ எச்ச‌ரிக்கைக்கு அடிப‌ணிந்த‌வ‌னாய்த் த‌ன் பார்வைக்கு எட்டும் தூர‌த்தில் இருக்கும் த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ நாய‌க‌னைக் காணாம‌ல் க‌ண்ணுக்குக் க‌டிவாள‌ம் இட்டு நேரே த‌ன் பாதையைத் தொட‌ர்ந்தான்!

சைக்கிளில் இப்போது ஒரு புதுவேக‌ம், ம‌ன‌தில் ஒரு புதுத்தெம்பு, எங்கிருந்தோ துளிர்விடும் ஒரு புது ந‌ம்பிக்கை...
புத்துண‌ர்வுட‌ன் ச‌ந்திரா அக்கா வீட்டு வாச‌லில் சைக்கிளை நிறுத்திவிட்டு உத்வேக‌த்துட‌ன் கத‌வைத் த‌ட்ட‌ப்போன‌வ‌னை
திண்டுக்க‌ல் பூட்டுதான் வ‌ர‌வேற்ற‌து...

ம‌னதில் நிலைகொள்ளாத‌ ஒரு மிர‌ட்சியுட‌ன் ப‌க்க‌த்து வீட்டுப் பாட்டியிட‌ம், "அக்கா எங்கே?" என்று விசாரிக்க‌, "இங்கே மெயின்ரோட்டுக்கு யாரோ சினிமா ஸ்டாரு வ‌ந்திருக்கேனாம்ல‌ அவுக‌ள‌ப் பார்க்க‌த்தான் இவ‌ளுக‌ எல்லாம் போயிருக்காளுக‌!" என்று அச‌ராம‌ல் கூறி முடித்தாள் பாட்டி, வெற்றிலை குத‌ப்பிய‌ வாயால்.

ஏதேதோ எண்ண‌ங்க‌ள் மிரட்சியாய் ம‌ன‌தில் வ‌ந்து முட்ட‌ ஏமாந்து போன‌வ‌னாய் சைக்கிளை நோக்கித் திரும்பினான் சிபி...

பிர‌பு. எம்

Saturday, April 25, 2009

"ஏகநாயகி" - "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!



"ஏகநாயகி" - "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!


விகடனின் வலைதளத்தில் "யூத்ஃபுல் விகடன்"ல் இன்று என்னுடைய "ஏகநாயகி" சிறுகதை வெளிவந்துள்ளது!! "கிரேட்" பகுதியில் வெளியிட்டிருக்கும் விகடனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!! ஒரு பொது ஊடகத்தில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்திருப்பது இதுவே முதன்முறை...

என்னுடைய வலைப்பதிவிற்கு வருகை தந்து என்னுடைய எழுத்துக்களை உங்கள் கருத்துரைகளால் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருடனும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன்!!


Click here to view the story in Vikatan.com

ஏகநாயகி

மாடிவீடுகளில் குடியிருப்பவர்களின் மனநிலையைக் கண்டிப்பாக‌ப் படிக்கட்டுகள் வெளிக்காட்டிவிடுகின்றன! அவர்கள் ஏறுகிற மற்றும் இறங்குகிற விதங்கள் அவர்களது அப்போதைய மன உணர்வுகளை நிச்சியம் பிரதிபலித்துவிடும்.

ஞாயிற்றுக்கிழமை...

காபியுடன் செய்தித்தாள் புரட்ட நேரம் தரும் ஒரேநாள். வீட்டு வாசலில் அமர்ந்து அன்றைக்கு டி.வியில் என்ன படம் என்று பார்த்துக் கொண்டிருந்த கீழ்வீட்டு வசந்தனின் உற்சாகத்தை "சொத்... சொத்"தென்று சுரத்தையே இன்றி வினோத் படியிறங்கும் விதம் கொஞ்சம் சீண்டிப்பார்த்தது...

தொங்கிய தோள்களுடன் வினோத் படியிறங்கும் கோலத்தைத் தனது திரைப்படத் தேடலை ஒரு நிமிடம் ஒத்திவைத்து ஏறிட்டார். வினோத் அந்த 'நடையழகு' மாறாமல் பைக்கை எடுக்க, பின்னேயே... படிக்கட்டில் இப்போது அவன் மனைவி. கிட்டத்தட்ட வாரநாட்களில் வேலைக்குப் போகும் அதே ஒப்பனை, படியிறங்கும் வேகம் மட்டும் கொஞ்சம் குறைச்சல். சின்னதொரு பதற்றத்துடன் வினோத்தையே பார்த்த வண்ணம் படியிறங்கி வசந்தனைக் கடக்கிறாள். பைக் ஸ்டார்ட் ஆகிறது... மனைவி பின்னிருக்கையில் அமரப் பயணம் தொடங்கியது... கணவன் மனைவி முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளவேயில்லை. வசந்தன் எதையோ புரிந்து கொள்கிறார்... தனது தேடலைத் தொடர்கிறார்!

வாரநாட்க‌ளின் நெரிச‌லின்றி சாலைக‌ள் கொஞ்ச‌ம் மூச்சுவாங்கிக் கொள்வ‌து போல் த‌ன் அக‌ல‌த்தைப் ப‌ர‌ப்பி வாக‌ன‌ங்க‌ளுக்குத் தார‌ள‌மாய் இட‌ம் கொடுத்திருந்த‌ன‌. வினோத் மிக‌வும் இருக்க‌மாக‌ அம‌ர்ந்திருக்கிறான். மௌன‌மாக‌வே அம‌ர்ந்திருந்த‌ ம‌னைவி வ‌ண்டியின் பின்புற‌ம் பார்க்கும் க‌ண்ணாடியில் த‌ன் முன்புற‌ம் உள்ள‌ க‌ண‌வ‌னின் முக‌த்தைத் தேடினாள். எதிர்க்காற்றில் கேச‌ம் க‌லைந்து, முக‌த்தில‌டிக்கும் புழுதிக்காக‌க் க‌ண்க‌ளை இடுக்கிக் கொண்டுத் த‌ன் பார‌த்தை சும‌க்கும் வ‌லியோடு வ‌ண்டியோட்டும்
வினோத்தின் முக‌த்தைப் பார்க்க‌ அவ‌ளுக்கு மிக‌வும் பாவ‌மாக‌ இருந்த‌து.

வினோத்தால் ஏமாற்ற‌ங்க‌ளைத் தாங்கிக் கொள்ள‌முடியாது. அவ‌ன‌து எதிர்பார்ப்புக‌ளும் மிக‌ப்பெரிதாக‌ இருக்காது. சின்ன‌ச்சின்ன‌ ச‌ராச‌ரி எதிர்பார்ப்புக‌ள்தான் அவ‌னுடைய‌து. ஆனால் அவை நிறைவேறாத‌போது மிக‌வும் உடைந்துபோவான். அவ்வாறு உடைந்துபோய் விடுவ‌தை ம‌றைக்க‌வும் அவ‌ன் அதிக‌ம் முனைவ‌தில்லை. அவ‌ன‌து வேதியிய‌ல் மாற்ற‌ங்க‌ள் யாவும் வெளிப்ப‌டையாக‌வே தெரியும். அத‌னாலேயே வினோத் முக‌த்தின் க‌வ‌லை ரேகைக‌ள் அவ‌ன் ம‌னைவிக்கு உள்ளே ஊடுறுவி வ‌லியை ஏற்ப‌டுத்தின‌...

ஒருவாறாக‌ப் ப‌ய‌ண‌ம் முடியும் நிலையை அடைந்த‌து. இதோ இந்த சாலையின் வ‌ல‌துப‌க்க‌த்தில்தான் மீராவின் வீடு உள்ள‌து. ந‌க‌ரின் பிர‌தான சாலைக‌ளில் அதுவும் ஒன்று, அத‌னைக் க‌ட‌க்க‌ வேண்டி இட‌துகையால் பைக்கைத் தாங்கிக் கொண்டுக் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வ‌ல‌துகையை நீட்டி சிக்ன‌ல் செய்த‌வாறே ரோட்டின் வ‌ல‌ப்புற‌ம் வினோத் இற‌ங்க‌... "நான் கை காட்டுறேன்... நீங்க‌ விடுங்க‌.." என்று ப‌ய‌ண‌த்தை முடித்து வைத்தாள் ம‌னைவி.

மீரா வீட்டு வாச‌லில் பைக்கிலிருந்து இற‌ங்கி, "ஈவினிங் நானே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வ‌ந்துட‌றேன், நீங்க‌ சிர‌ம‌ப்பட வேண்டாம்" என‌க்கூற‌, வினோத் த‌லையை ம‌ட்டும் ஆட்டிக்கொண்டு... "போன் ப‌ண்ணு... நானே வ‌ந்து பிக்‍ அப் செஞ்சுக்கிறேன்... ஆட்டோவெல்லாம் வேண்டாம்" என‌க்கூறிக்கொண‌டே இறுக்க‌ம் த‌ள‌ராம‌ல் பைக்கைத் திருப்பிக் கிள‌ம்பினான். அவ‌ன் த‌லைம‌றையும் வ‌ரை அங்கேயே நின்று பார்த்துவிட்டு மீராவின் வீடு நோக்கித் திரும்பினாள்.

வீட்டுமாடி ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌, "ஹாய்..! என்ன‌ப்பா இவ்ளோ லேட்டா வ‌ர்றே?" என வர‌வேற்ற‌ மீராவைப் பார்த்துப் புன்ன‌கைத்த‌வாறே வீட்டினுள் நுழைந்தாள்.

"உட‌ன் ப‌ணிபுரியும் நெருக்க‌மான‌ தோழி இர‌ண்டு நாட்க‌ளில் அமெரிக்கா செல்கிறாள், அலுவ‌ல‌க‌த் தோழிக‌ள் அனைவ‌ரும் க‌ல‌ந்துகொள்ளும் பார்ட்டியை எப்ப‌டிப் புற‌க்க‌ணிப்ப‌து? கொஞ்ச‌ம் புரிஞ்சுக்கோடா புருஷா!" என ம‌ன‌துக்குள் நினைத்துக் கொண்டே விருந்தில் ஐக்கிய‌மானாள் திரும‌தி. வினோத்!

"கிடைக்கிற‌ ஒருநாள் விடுமுறையையும் இப்ப‌டி க‌மிட் ப‌ண்ணிக்கிட்டா, வீட்டுவேலைக‌ளை எப்போதான் பார்ப்ப‌து?" என்று த‌ன்ப‌க்க‌ நியாய‌த்தை நினைத்துக் கொண்டே பைக்கைப் ப‌ள்ள‌த்துக்குள் விட்டான் வினோத்.

ச‌ரியான‌ ப‌ள்ள‌ம்... ந‌ல‌ல‌வேளை கீழே விழ‌வில்லை. என்ஜின் அணைந்துவிட்ட‌து. இருகால்க‌ளையும் த‌ரையில் ஊன்றி ப‌ல‌ம்திர‌ட்டி வ‌ண்டியைப் ப‌ள்ள‌த்திலிருந்து மீட்கிறான். சுற்றிமுற்றி அனைவ‌ரும் அவ‌னைப் பார்த்த‌வாறே க‌ட‌ந்து செல்வ‌தைப் பார்க்க‌க் கொஞ்ச‌ம் கூசிய‌து. ஒருவ‌ழியாக‌ப் ப‌ள்ளத்தைக் க‌ட‌ந்தாகி விட்ட‌து. அதுவ‌ரை ம‌ன‌தில் மைய‌ம் கொண்டிருந்த ஒரு விரைப்பு இள‌கிய‌து.

இய‌ல்பு நிலைய‌டைந்த‌வுட‌ன், "எத‌ற்காக‌ இத்த‌னை இறுக்க‌ம்?" என்கிற‌ ரீதியில் எதுவுமே தெரியாம‌ல் ஏதோ பாதியிலிருந்து க‌தை ப‌டிக்கும் ஒரு வாச‌கனைப் போல் அவ‌ன் ம‌ன‌ம் அவ‌னையே கேட்ட‌து!

வினோத்துக்கு நிச்சிய‌மாக‌ ஒரு "இடைவேளை" தேவைப்ப‌ட்ட‌து. ஆஹா... அருகிலேயே ஒரு டீக்க‌டை. பைக்கை ஓர‌மாக‌
நிறுத்திவிட்டு க‌டைக்குள் சென்று பெஞ்சில் அம‌ர்ந்தான். சூடாக‌ பாய்ல‌ர், அருகே த‌ள‌த‌ள‌வென‌ கொதிக்கும் பால், வ‌டிக‌ட்டியில் புது டிக்காஷ‌ன்...

அந்த‌ ந‌றும‌ண‌த்தை ஒருமுறை முக‌ர்ந்து முடிக்கும் முன்னேயே சுட‌ச்சுட நுறைபொங்க‌க் க‌ண்ணாடி த‌ம்ள‌ரில் தேநீர் முக‌ம‌ருகே நீட்ட‌ப்ப‌ட்ட‌து.

வாங்கிப் ப‌ருக‌ப் ப‌ருக‌ப் புது ர‌த்த‌ம் சுர‌ப்ப‌து போன்ற‌ ஓர் உண‌ர்வு...

இன்னும் இளமையாக‌ உண‌ர்ந்தான். த‌ன் க‌ல்லூரிக்கால‌ நினைவ‌லைக‌ளில் மூழ்கினான்.

ஸ்வேதா... அந்த‌ இனிய‌ நாட்க‌ளின் நாய‌கி! திரும‌ண‌த்துக்குப் பிற‌குதான் ம‌னித‌னுக்கு வாழ்வில் முடியுதிர்கால‌ங்க‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌. அதுபோன்ற‌ நேர‌த்தில் இதுபோல வாழ்வில் வ‌ந்துபோன‌ சில‌ வ‌ச‌ந்த‌கால‌ங்க‌ளை நினைத்து ம‌ன‌தாறிக்கொள்வ‌து வினோத்தின் வ‌ழ‌க்க‌ம். அவ‌ன் வாழ்வின் வ‌ச‌ந்த‌கால‌ம் என்றாலே அது ஸ்வேதாவுட‌னான‌ காத‌ல்கால‌ம் தான்!!

டீயை ருசித்து முடித்துப் ப‌ய‌ண‌ம் தொட‌ர‌ பைக்கைப் பார்த்தான், இப்பொழுது வ‌ண்டி புதிதாய்த் தெரிந்த‌து. ஏறிய‌ம‌ர்ந்தான் ஒரேமிதியில் வ‌ண்டி ஸ்டார்ட் ஆன‌து. வ‌ண்டிக் க‌ண்ணாடியில் முக‌ம்பார்த்தான். ச‌ற்று நேர‌த்திற்குமுன் அவ‌ன் ம‌னைவி த‌ன் க‌ண‌வ‌னின் அக‌த்தின் அழ‌கை முக‌த்தில் பார்த்த‌ அதே க‌ண்ணாடி... வினோத்திற்கு இப்பொழுது அதில் ஸ்வேதாவின் முக‌ம் தெரிந்த‌து.

கூந்த‌ல் ப‌ற‌க்க‌ சுடிதாரில் இள‌மையாக‌ வினோத்தின் பின்னால் ஸ்வேதா அம‌ர்ந்து வ‌ல‌ம் வந்த அந்த‌க்கால‌ம் இப்போது அந்த‌க் க‌ண்ணாடியில் தெரிந்த‌து.

ஸ்வேதாவோடு உற்சாக‌மாய் பைக்கை வீடு நோக்கி செலுத்தினான். வீடு வ‌ந்துவிட்டது.

வசந்தன் இன்னும் செய்திதாளைப் புரட்டி முடிக்கவில்லை. இம்முறை வினோத் இர‌ண்டிர‌ண்டு ப‌டிக‌ளாக‌த்தாவி வேக‌மாக‌ வீட்டை அடைந்தான். க‌த‌வு திற‌ந்த‌தும் அல‌ங்கோல‌மாய் பொருட்க‌ள் இறைஞ்சிக்கிட‌ந்த‌ன‌. ம‌னைவி மீது க‌டும் வெறுப்பு வ‌ந்து முட்டிய‌து. கைக்க‌டிகார‌த்தில் ம‌ணி பார்த்தான், காலை ப‌தினோரு ம‌ணி. ஒருமுறை உட‌ல் கோணி நெட்டிமுறித்துவிட்டு வீட்டை ஒழுங்குப‌டுத்தும் வேலையில் இற‌ங்கினான். முன்ன‌தாக‌ அது ப‌ல‌நாள் ஒத்திவைப்புக்குப் பின் இவ்வார‌ இறுதியில் இருவ‌ரும் இணைந்து செய்வ‌தாக‌த் திட்ட‌மிட‌ப் ப‌ட்டிருந்த‌ வேலை!

ச‌னிக்கிழ‌மை... ம‌னைவிக்கு வ‌ழ‌க்க‌ம் போல் ப‌ணிவிடுப்பு கிடைக்க‌வில்லை என்ப‌தால் ஞாயிற்றுக்கிழ‌மையான இன்று வேலையை முடித்தாக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். இன்றைக்குள் வீட்டை சீர்ப‌டுத்திவிட‌ வேண்டும் என்று உறுதியாக‌ இருந்தான் வினோத். அது நன்கு தெரிந்தும் மீராவின் விருந்துக்கு சென்ற‌தை நினைக்க‌ நினைக்க‌ வினோத்துக்கு வெறுப்பு கொப்ப‌ளித்த‌து.
அத்தனை கோப‌த்தையும் செய‌லில் காட்டிப் ப‌டுவேக‌மாக‌ப் பொருட்களை ஒழுங்கு வைத்தான் வினோத். பெரும்பாலும் ஓர் ஒழுங்க‌ற்று சித‌றிக்கிட‌ந்த‌து அவ‌ன் ம‌னைவியின் பொருட்க‌ள்தான். அதிலும் குறிப்பாக‌ அவ‌ள‌து அல‌ங்கார‌ப் பொருட்க‌ள்தான்! வேலையின் சோர்வு தெரியாம‌லிருக்க‌ கூட‌ சேர்ந்து பாடிக்கொண்டிருந்த‌து எப்.எம் ரேடியோ.

"நேர‌ம் இப்பொழுது ப‌ன்னிர‌ண்டு ம‌ணி நாற்ப‌து நிமிட‌ம்."

பெருங்க‌ளைப்பாக‌ உண‌ர்ந்தான் வினோத். இத‌ற்குமேல் த‌னியாக‌ இந்த‌ வேலையை செய்ய‌ முடியாது என்ற‌ நிலையை அடைந்த‌க‌ண‌ம் அவ‌ன் க‌ண்ணில் ஒரு குட்டிப் பை ப‌ட்ட‌து. ப‌ல‌நாட்க‌ளாக‌ அவ‌ன் பொதிந்து வைத்திருந்த‌ பொக்கிஷ‌ம் அது!

ஸ்வேதாவின் நினைவுக‌ளைத்தான் பொதிந்து வைத்திருந்தான் அந்தப் பைக்குள்!

அவ‌னைப் பொறுத்த‌வ‌ரை அவை அவ‌ன‌து காத‌லின் நினைவுச்சின்ன‌ங்க‌ள் அல்ல‌, அவ‌ன‌து காத‌லின் அடையாள‌ங்க‌ள், காத‌லித்த‌த‌ன் அர்த்த‌ங்க‌ள்!

அவ‌ன் அதை ம‌றைத்தோ, ஒளித்தோ வைத்திருக்கவில்லை. அடிக்க‌டி அதை அவ‌ன் எடுத்துப் பார்ப்ப‌துண்டு. உள்ளே வ‌ழ‌க்க‌ம்போல் ஸ்வேதாவின் ப‌ழைய‌ கைக்குட்டைக‌ள், காலி நெயில் பாலிஷ் பாட்டில்க‌ள், ஹேர் கிளிப்புக‌ள் எல்லாம் இருந்த‌ன‌. அவ‌ற்றையெல்லாம் தொட்டுப்பார்த்தான். அவை ஒவ்வொன்றும் அவ‌னுக்கொரு க‌தைசொல்லும் போலும். உள்ளே பாதிப்புகைத்த‌ சிக‌ரெட் துண்டு ஒன்று கிடைந்த‌து. ஸ்வேதாவுக்குப் புகைபிடிக்கும் ப‌ழ‌க்க‌ம் கிடையாது. அது ஸ்வேதாவுக்குப் பிடிக்காது என்று வினோத் ம‌ங்க‌ள‌ம் பாடிய‌ க‌டைசி சிக‌ரெட்!

அதுமுதல் இன்றுவ‌ரை வினோத் புகைபிடித்த‌து கிடையாது. இப்படித் தோண்ட‌த் தோண்ட‌க் கிடைத்த‌ப் புதைய‌ல்க‌ளுக்கு அடியில் ஆழ‌த்தில் ஒரு க‌வ‌ர். அது ஒரு க‌ல்யாண‌ப் பத்திரிக்கை. அதைத் திற‌க்கிறான். வினோத்-ஸ்வேதாவின் திரும‌ண‌ அழைப்பித‌ழ் ஒரு ப‌ள‌ப‌ள‌ப்பான‌ காஸ்ட்லி கார்டில் அச்சிட‌ப்ப‌ட்டிருந்த‌து.

ஏதேதோ நினைவ‌லைக‌ளில் மூழ்கிய‌வ‌னாக‌ அதை அப்ப‌டியே ஒருமுறை த‌ன் விர‌ல்க‌ளால் வ‌ருடினான். அத‌ற்கும் ஆழ‌த்தில் ஒரு புகைப்ப‌ட‌ம். அதில் ம‌ண‌க்கோல‌த்தில் வினோத் ம‌ற்றும் ஸ்வேதா அருக‌ருகே நின்றிருந்தன‌ர். வினோத்திற்குத் த‌ன்னுள்ளார்ந்த‌ காத‌லை உயிர்ப்பித்த‌தோர் உண‌ர்வு. அதில் அதிக‌ நேர‌ம் ல‌யித்திருப்ப‌தைத் த‌ட‌ங்க‌ல் செய்த‌து காலிங்பெல் ச‌த்த‌ம். க‌த‌வைத் திற‌ந்தான்... அங்கு ஸ்வேதா நிற்கிறாள்..!

வினோத் அவ‌ளை ச‌ற்றும் எதிர்பார்த்திருக்க‌வில்லை.

"உங்க‌ளைத் த‌னியா இங்கே விட்டுட்டு என்னால‌ அங்கே பார்ட்டியில் நிம்ம‌தியா க‌ல‌ந்துக்க‌வே முடிய‌ல‌. அதான் பாதியிலேயே ஓர் ஆட்டோ பிடிச்சு வ‌ந்துட்டேன். ஐம் ஸோ ஸாரி வினோத்!" புன்முறுவ‌லுட‌ன் வீட்டிற்குள் நுழைந்தாள் திரும‌தி. ஸ்வேதா வினோத்!

பிரபு. எம்