Tuesday, December 21, 2010

பாட்டி கதை (பாகம் - 5)

   முந்தைய பாகங்களுக்கு இங்கே சொடுக்கவும்.....                                                   
                                                        
                                                          பாட்டி கதை (பாகம் - 5) 

                                                                           15

அடுக்கடுக்காய் மின்னும் வண்ண விளக்குகளின் ஒளியை மெட்டாலிக் ரதங்கள் பிரதிபலிக்க, ரம்மியமாய் ஜொலிக்கும் அந்த கார் ஷோரூமுக்குள் பாட்டியும் ஜீவாவும் அவர்களை வரவேற்ற அந்த இளம் எக்ஸிகியூட்டிவ் சீதாராமனைப் பின்தொடர்ந்து சென்றனர்.....

அந்தப் புதிய உலகத்தின் பிரம்மாண்டத்தைப் பாட்டியின் கண்களும்.... புதிய பாட்டிலில் ஊற்றப்பட்ட பழைய ஒயினாக மினுமினுத்துத்  தளும்பும் பாட்டியை ஜீவாவின் கண்களும்.... விடாது உற்றுநோக்கிக்கொண்டிருந்தன!!

மார்க்கெட்டின் அதிரடி எண்ட்ரியான அந்த ஜெர்மன் டெக்னாலஜியில் உருவான அவர்களின் பெருமைக்குரிய காரின் அருகே பாட்டியையும் ஜீவாவையும் அழைத்துச்சென்ற சீதாராமன்.... மிகமிகத் தன்னம்பிக்கையாகத் தன் காரின் டெக்னிகல் ப்ளஸ்பாயிண்டுகளை "வெல் மிஸ்டர் ஜீவா.....யூ ஸீ...." என்று துவங்கியதுதான் தாமதம்.... ஜீவா அவரை உடனே இடைமறித்தான்......

"ஸாரி பாஸ்...... இங்கே என் பாட்டிதான் கஸ்டமர்.......!! நான் ஜஸ்ட் அவங்களுக்கு டிரைவர்தான்...... அவங்க பார்த்து ஓகே பண்ணப்போற காரைத்தான் வாங்கப்போறோம்.... ஸோ நீங்க டைரக்டா அவங்ககிட்ட பேசுறதுதான் கரெக்ட்....!!!" என்று நட்பாகச் செல்லிவிட்டு ஜீவா நகர.....

கிராமத்து நாணத்தால் சற்றுத் தள்ளி நிற்கும் பாட்டியம்மாவை எட்டி நோக்கிய சீதாராமனுக்கு அவர்களுக்கிடையே ஒரு தலைமுறையின் இடைவெளியே தெரிந்தது!!!!!

"இந்த‌க் காரைப் பார்க்க‌லாமா பாட்டிம்மா?!!" என பவ்வியமாய்த் தன் பாட்டியின் தோள்களைப் பற்றிக்கொண்டுப் பாட்டியைப் பாசமாய் முன்னிறுத்திவிட்டு ஜீவா சற்று ஓரமாகச் சென்று அமர்ந்துகொண்டான்...!!! :)

சற்றும் எதிர்பார்த்திராத அந்த அதிரடியான மண்வாசனை கமழும் புதுக் கஸ்டமரைப் (!) பார்த்துப் புன்னகைத்த சீதாராமன் ஒருமுறை த‌ன் ஷர்ட்டின் "டை"(Shirt tie)யை ச‌ரிசெய்துகொண்டார்!!
சிரித்த முகமாகத்  த‌ங்க‌ள் காரின் டெக்னிக்க‌ல் ப்ள‌ஸ்பாயிண்டுக‌ளைப் பாட்டிக்கு ஏற்ற‌ மொழியில் எடுத்துச்சொல்ல‌த் தன்னை தயார்செய்துகொண்டு......

 " ... நம்ம கார் ஸாலிட் பாடி பாட்டியம்மா...... அதுமட்டுமில்ல.....  ஹைட்ராலிக் ச‌ஸ்பென்ஷ‌ன்ஸ்.....  சென்ட்ரல் லாக்..... பவர் விண்டோ....ஏர் பேக்...ஜிபிஎஸ்...... " என்று தன்னுடைய வழக்கமான பாணியில் டெக்னிக்கலாக அடுக்க ஆரம்பித்த சீதாராமன்..... ஒருமுறை அழுத்தமாக எச்சில் விழிங்கிக்கொண்டு...." ஹ்ம்ம்ம்ம்.... எப்ப‌டிச் சொல்ற‌து!!" என்று த‌ன‌க்குள் மென‌க்கெடுவதையெல்லாம் எதுவுமே தெரியாதவன்போல அமைதியாகத் தூர நின்று ரசித்திருந்தான் ஜீவா....!!! அப்படியே அவன் தன் பாட்டியை நோக்கிப் பார்வையைத் திருப்ப‌.....

 சீதாராமன் தன் உயிர்நோக உச்சரித்தக் கார் சம்பந்தமான கலைச்சொற்களை யெல்லாம் புரிந்துகொள்ள‌ அதிக‌ம் முய‌ற்சிக்காத  பாட்டியம்மா.... அந்தக்  காரையே சுற்றிச் சுற்றிப் பார்த்து, நடையில் தளர்ச்சியும், விழியில் மிரட்சியுமாய் உற்றுநோக்கிக்கொண்டிருந்ததை கொஞ்ச‌ம் வில‌கியிருந்து க‌ண்டு ர‌சிக்கையில் ஜீவாவுக்குக் க‌விதைக‌ள் தோன்றிய‌து ம‌ன‌துக்குள்!!! மெல்ல மெல்ல அந்தக் காரின் அருகில் சென்று அதனை ஒருமுறைத் தன் மென்மையான விரல்களால் தொட்டுப்பார்த்தார் பாட்டி!!!

இறுதியில் சீதாராமன் "ஃபீல் ஃப்ரீ அம்மா...." என்று சிரித்துப் பாட்டியைக் காருக்குள் அம‌ர்ந்து பார்க்க‌ப் ப‌ணித்தான்........சீதார‌ம‌னுக்கு உத‌வ ஓர் அழகான, குட்டைப் பாவாடை இள‌ம்பெண்ணும் சேர்ந்துகொண்டாள்!! பாட்டிய‌ம்மாவைப் பாந்த‌மாய் அழைத்துக் காருக்குள் அம‌ர‌வைத்தார்க‌ள்... பாட்டிக்கு ஸீட்பெல்ட் பொருத்திக்காட்ட‌ அந்த‌ இள‌ம்பெண் உத‌வ, அவளின் மிக்ச் சிக்கனமான உடையை வித்தியாச‌மாக‌ப் பாட்டி பார்த்த‌ பார்வை தூர‌த்திலிருந்து பார்த்த‌ ஜீவாவுக்கு சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்த‌து!!!

பாட்டிய‌ம்மா இப்போது டிரைவ‌ர் ஸீட்டில்!!! ஓட்டுந‌ரின் வ‌ச‌திக்கேற‌ப‌ப் பொஸிஷ‌னிங் செய்துகொள்ளும் வ‌ச‌தியுள்ள‌ எல‌க்ட்ரானிக் ப‌வ‌ர்ஸ்டிய‌ரிங்கில் கைவைத்துக் கொண்டுக் க‌ண்ணாடி வ‌ழியே பேர‌னைத் தேட‌த் துவ‌ங்கினார்.... !! பாந்தமாய்க் கையசைத்த ஜீவாவைப் பார்த்துப் பாட்டி புன்னகைக்கக்...... க‌டைசியாக இந்தக் காரை ஒத்த‌ ம‌ற்ற  கம்பெனி கார்களுட‌னான‌ ஒப்பீடு ம‌ற்றும் ப‌ல‌ப்ப‌லத் த‌க‌வ‌ல்க‌ள் அட‌ங்கிய‌ ப‌ள‌ப‌ள‌ பாம்ப்ளெட்டுக‌ளைப் பாட்டியிட‌ம் கொடுத்து விடைபெற்றனர் அந்தக் கார் கம்பெனிகாரர்கள்..... பாச‌மாக!!!

                                                                           16

இரண்டொரு நாட்களில் ஜீவாவின் இல்லத்தில் அஞ்சலி - ஜீவாவுக்கு  நிச்சியதார்த்தம்..... இரண்டு குடும்பங்களும் ஏற்கெனவே நீண்டகால நட்பால் நெருங்கியவைதான் எனினும் சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டு பெண்வீடாக ஜீவா தங்கியிருக்கும் அபார்ட்மெண்டிலேயே அவர்கள் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு நண்பர் வீட்டை அமைத்திருக்க, இன்று இரவு பெண்வீட்டார் விஜயம்!! இந்த நேரத்தில் ஜீவா வீட்டில் இல்லாமல், பாசத்தைக் கொட்டிக்கொடுத்தாலும் தட்டிக்கழிக்கும் தன் அம்மாவுடன் (பாட்டியுடன்) ஊர்சுற்றிக்கொண்டிருப்பதை ராஜகோபாலன் ரசிக்கவில்லை....

இதேவீட்டில் தன்னுடைய அம்மாவைப் பலமுறை தன்னுடன் தங்கிவாழும்படி சகலபிரயத்தனங்களுடன் ராஜகோபாலன் முயற்சித்தும் தன் பாசத்தை உதாசீனப்படுத்திவிட்டதான குற்றச்சாட்டு ஆழமாகத் தேங்கிப்போயிருந்தது அவருக்குள்.....

தன் மனைவியிடம் கொதித்துத் தீர்த்துக்கொண்டிருந்தார் ராஜகோபாலன்.... தன் மகனின் பாசத்தையும் இந்தக் கிழவி உதாசீனப்படுத்தத்தான் போகிறாள் என்று கட்டியம் கூறினார் முழு நம்பிக்கையுடன்!!!

அஞ்சலி குடும்பத்தினர்...... வந்திறங்கினர்.... மருமகள் தன் வீட்டிற்குள் வலதுகால் வைக்கும் நேரம் வராததால் (!) சாஸ்த்தரலு.... சம்பிரதாயலு......பெண்வீடாக அமைத்திருந்த வீட்டில் அவர்களை வரவேற்கும் பணியில் ஜீவாவின் அம்மாவும் அப்பாவும் பிஸியாகினர்......

                                                                         17

கார் ஷோரூமைக் கலக்கிய தன் "முத‌லாளிய‌ம்மா"வை ம‌ரியாதைப் புன்ன‌கையுட‌ன் காரில் மீண்டும் அலுங்காம‌ல் அம‌ர‌வைத்து ஜீவா வ‌ண்டியை செலுத்தினான் அடுத்த‌ ஷோரூமுக்குள்!!!

அடுத்த‌டுத்து மூன்று கார் ஷோரூம்க‌ளுக்கு ர‌க‌ளையான‌ அதிர‌டி விஜ‌ய‌ம் கொடுத்துவிட்டப் பாட்டிய‌ம்மா க‌ளைப்படைந்து விடும்முன்பாக‌வே த‌ன‌க்கு மிக‌வும் பிடித்த‌மான‌வ‌ர்க‌ளை எப்போதும் அழைத்துச் செல்லும் ரெஸ்டாரெண்டில் ஏற்கென‌வே 'புக்' செய்து வைத்திருந்த‌ டேபிளில் பாட்டியை அம‌ர‌வைத்து ஆர்ட‌ர் செய்த‌ ஸ்பெஷ‌ல் உண‌வுக‌ளையெல்லாம் தானே பாட்டிக்குப் ப‌ரிமாறினான்!! பல‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு கிராமத்தில், பாட்டிக்குக் குட்டிப் பேரனாய்க் க‌ழித்த எவர்கிரீன் பொழுதுக‌ளுட‌ன் இன்றைய நாளின் அனுபவங்களும், ஒரு பேரனாக அவ‌ன் ம‌ன‌ம் அடைந்த‌ திருப்தியும் சேர்ந்துகொண்ட‌து.....

தன்னுடைய  மென்மையான விரல்களால் இலையை வ‌ருடி வ‌ருடி பாட்டி சாப்பிடுவதைப்  பாட்டியம்மா கவ‌னிக்காத‌ பொழுதெல்லாம் க‌ண்கொட்டாம‌ல் பார்த்துக்கொண்டே இருந்தான்!!! அத்தனை திருத்தமாக..... அந்த வலிமை குறைந்த கரங்களால் இலைச்சோறைக் கையால் உருண்டை பிடித்து மீதமிருந்த பற்களால் பாட்டி  சவைத்து சாப்பிடுவதைப் போலவே ஜீவாவும் சாப்பிட முயற்சித்துத் தோல்வியடைந்தான்!!! :)

ம‌ண‌ம‌க‌ள் தான் விள‌க்கேற்றப்போகும்  வீட்டுக்கு வ‌ந்து சேர்ந்துவிட்ட‌தாக‌க் குறுந்த‌க‌வ‌ல் வந்தது அஞ்ச‌லியிட‌மிருந்து!!!

வீடுநோக்கி ப‌ற‌ந்தார்க‌ள் பாட்டியும் பேர‌னும்... கார்ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ க‌ண‌க்க‌ற்ற‌ ப‌ள‌பள‌ ஃபாம்ப்ளெட்டுகள், நோட்டீசுக‌ளையெல்லாம் ப‌த்திர‌ப்ப‌டுத்தி சிர‌த்தையாய்த் த‌ன் பையில் வைத்துக்கொண்டார் பாட்டி!!

                                                                            18

பார்த்த மாத்திர‌த்திலேயே அஞ்ச‌லியைப் பிடித்துப்போன‌து பாட்டிக்கு!! அஞ்சலியும்  த‌ன் சொந்த‌ப் பாட்டியைப் போன்றேதான் ந‌ம் பாட்டிய‌ம்மாவையும் ஏற்கெனவே உணர்ந்திருந்தாள் ஜீவாவின் "பாட்டி கதை"களை நாளும் அலைபேசியில் கேட்டுக் கேட்டு!!!!

அஞ்ச‌லியின் த‌ந்தையும் ஜீவாவின் அப்பா ராஜ‌கோபால‌னும் முன்பே ந‌ண்ப‌ர்களாதலால் சிர‌ம‌மின்றி எளிதில் ஒட்டிக்கொள்ள‌ முடிகிற‌து அஞ்ச‌லிக்கு!! அதிக‌ம் ப‌ரிச்சிய‌மில்லாத‌ ஜீவாவுட‌னும் இப்போது "ஃபோன் ஃபிரெண்ட்" ஆகிவிட்டாள் அல்ல‌வா!!!  சிறிது நேரம் பெண்வீட்டாருடன் பேசிவிட்டு , ஜீவாவின் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குத் திரும்பினர்........ பாட்டியுடன்  ராஜகோபாலன் பேசிக்கொள்ளவில்லை!!!  ஜீவாவின் அம்மா புன்னகைத்து வரவேற்றார் பல நாள் கழித்துத் தன் அத்தையை......கிராமத்து ஸ்டைலில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் யதார்த்தமாய்!!!

 நேரம் அதிக‌மாகிப் போய்விட‌ பாட்டிக்கென்று ஏற்கெனவே ஜீவா த‌ன் வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்த‌ அறையில் மெத்தையில் ப‌டுக்க‌வைத்துக் க‌ம்ப‌ளியால் பொதிந்து விட்டான்..... நிம்ம‌தியாக‌ப் ப‌டுத்துத் தூங்குமாறு ப‌ணித்த ஜீவா ஏற்கென‌வே பாட்டியிடம் திட்டவட்டமாக  சொல்லிவிட்டான்....... இப்போது பார்த்த கார்களானாலும் சரி... தாத்தாவின் அம்பாஸிடர் காரானாலும் சரி...... பாட்டி சொல்லும் காரைத்தான் தான் வாங்கப் போவதாக!!!!!!

பாட்டிக்கான அறையைப்  பார்த்துப் பார்த்து ஜீவா தயார் செய்ததை அறிந்திருந்த ராஜகோபாலன் த‌ன் ம‌னைவியுடன், ஜீவா சென்றபின்,  பாட்டியின்  அறைக்கு அருகே சென்றார்........த‌ன் தாயின் வறட்டு குண‌த்தைப் ப‌ற்றித் த‌ன‌க்கு ந‌ன்கு தெரியும் என்று த‌ன் ம‌னைவியிட‌ம்  சொன்னவர்.... ஜீவா சிர‌த்தையோடு ப‌ஞ்ச‌னையும் க‌ம்ப‌ளியும் கொடுத்துப் பாச‌மாய்ப் ப‌டுக்க‌வைத்த‌தை உதாசின‌ப்ப‌டுத்திவிட்டு நிச்சிய‌ம் இந்நேர‌ம்‌ த‌ன் தாய் த‌ரையில் ஒரு  பாயை விரித்துதான்  ப‌டுத்திருப்பார் என்று ம‌னைவியிட‌ம் "பெட்"(bet) வைத்துக்கொள்ளாத‌ குறையாய்ச் சொல்லி  பாட்டியை மெதுவாக‌ப் பார்த்தார்க‌ள்....

 ச‌ரியாக‌வே க‌ணித்திருந்தார் ம‌க‌ன் த‌ன் தாயை!!  ப‌டுக்கையில் பாட்டியைக் காண‌வில்லை!!

கீழே தரையில் ஒரு மெல்லிய‌ விரிப்பில்தான் போர்த்திப் ப‌டுத்திருந்தார் பாட்டிய‌ம்மா.....

ஆனால் அவ‌ர் தூங்கியிருக்க‌வில்லை......  த‌ன் க‌ணிப்பு பொய்க்காத‌ப் பெருமித‌த்துட‌ன் ராஜ‌கோபால‌ன் இன்னும் கொஞ்ச‌ம் எட்டிப்போக....... பாட்டி த‌ன் க‌ண்ணாடியைப் போட்டுக்கொண்டு கார் ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ ஏடுகள் மற்றும் பள ப்ள பாம்ப்ளேட்டுகளை யெல்லாம் தரையில் விரித்துவைத்துக் கொண்டு மிகுந்த  சிர‌த்தையாய்த் தன் பேர‌னுக்குக் காரைத் தேர்வு செய்ய‌ மென‌க்கிட்டுக் கொண்டிருந்தார் ஏசி குளிருக்க்காகத் தன் உடலை இடுங்கிக் கொண்டு........!!!

பேச வார்த்தைகளின்றி மௌன‌மாக‌த் த‌ன் அறைக்குச் சென்றார் ராஜகோபாலன்..... இயல்பாய்க் கலங்கிய கண்களுடன்!

                                                                                                                                   (தொடரும்..... )    
அடுத்த பாகம் இங்கே!                                                          

Thursday, December 16, 2010

பாட்டி கதை (பாகம் - 4)

பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
                                                      
                                                  பாட்டி கதை (பாகம் - 4)                                     

                                                                          12

வேக‌வேக‌மாகத் திரும‌ண‌ வீடாக‌க் க‌ளைக‌ட்ட‌த் துவ‌ங்கியிருந்தது ஜீவாவின் வீடு!!... வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வ‌ந்த‌ கையோடு அப்பா திருமண ஏற்பாடுகளில் பரபரப்பாகிறார்.... அம்மா அழைப்பித‌ழ்க‌ளின் ஓர‌ங்களுக்கு மஞ்சள் இட்டுக் கொண்டிருக்கிறார்... இதோ அடுத்த‌ வார‌ம் அவ‌ர்க‌ள் வீட்டிலேயே நிச்சிய‌தார்த்த‌ விழா.... தொட‌ர்ந்த‌ இர‌ண்டாவ‌து வார‌ம் திரும‌ணம்!!!.... பரீட்சை முடிந்து நாளைக்கே அஞ்சலி வ‌ந்துவிடுவாள் அவர்கள் வீட்டுக்கு!! அடுத்த இரண்டு நாட்க‌ளில் அஞ்ச‌லியின் பெற்றோரும் வ‌ந்துவிட‌ நிச்சிய‌தார்த்த‌ம் இனிதே ந‌ட‌க்க‌ப்போகிற‌து.... ஜீவாவுக்கோ, வீட்டில் இல்லையென‌த் தெரிந்தும் அந்த வெறுமையில் பாட்டியைத் தேடுகின்ற‌ன‌ க‌ண்க‌ள்.... தன் வீட்டில் பாட்டிக்கு இடம்தேட ஆரம்பித்துவிட்ட ஜீவாவின் மனது "பாட்டி வீடு" என்று தன்னைவிட்டுத் தனியாக ஓர் இடம் இந்த உலகில் இருப்பதை இனியும் ஏற்றுக்கொள்ளும் பொறுமையை இழக்கத் துவங்கியிருந்தது... காரணம்... பாட்டியைத் தேடும் பாசம் மட்டுமே....

ஒரு கார் ஷோரூமிலிருந்து அழைப்பு வ‌ருகிற‌து ஜீவாவின் அலைபேசிக்கு...அவர்களின் லேட்டஸ்ட் மாடல் காரை "டெஸ்ட் டிரைவ்" செய்துபார்ப்ப‌த‌ற்கு இன்று மாலை ஷோரூமிற்கு வ‌ர‌லாம் என்று க‌ண்ணியமாக‌ அழைப்பு விடுக்கிறார்க‌ள்!!

"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!"

ஓட்டுந‌ர் இன்றித் தன் கம்பெனி காரை இம்முறை தானே பாட்டிவீடு நோக்கி ஓட்டிச்சொல்லும் ஜீவா சிரித்துக் கொள்கிறான் தன் பாட்டியை நினைத்து!!

"இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!"

அஞ்ச‌லியிடம் ஆரோக்ய‌மாய் சவாலை ஏற்றுக்கொண்ட‌ ஜீவா தீர்க்கமாக உள்செல்கிறான் தன் பிரியமான பாட்டி வீட்டுக்குள்!!

இந்த முறை எல்லாமே முன்பே திட்ட‌மிட‌ப் ப‌ட்டிருந்த‌து... சொல்லியிருந்த நேரத்துக்கு முன்னதாகவே கிளம்பித் தயாரா இருந்த பாட்டி பதற்றமே இல்லாம முதன்முறை தன் வீட்டிற்கு சொல்லிட்டு வரும் பேரனுக்காகக் காத்துக்கொண்டு இருந்தார்.... ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களைப் பாட்டிக்குத் தரத் திட்டம் போட்டிருந்த ஜீவாவுக்கு பாட்டி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.... "ரெடியா இருங்க பாட்டிம்மா!" என்று சொல்லி ஃபோனை வைத்துக் காரை ஜீவா ஸ்டார்ட் செய்யும் கால அவகாசத்தில் சலித்தக் கடலைமாவில் கல்கண்டு சேர்த்துக் கிண்டி சூடுபறக்க உருண்டை பிடித்து சுடச்சுட மூன்று லட்டுகளை ஜீவாவுக்கு ஊட்டிவிட்டு அசத்தியது!!!

தயாராக‌ இருந்த‌ பாட்டியை மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌க் காரின் முன்னிருக்கையில் அம‌ர‌ வைத்துப் பாசமாய் ஸீட் பெல்ட் பொருத்திவிடுகிறான் பேர‌ன்.... ச‌ரியான‌ அள‌வில் குளிரூட்ட‌ப்ப‌ட்ட‌ காரில் பாட்டியின் முகபாவங்களைக் க‌வ‌னித்த‌வாறே காரை அலுங்காமல் செலுத்தினான்!!! அமைதியாய்.. வசதியான இருக்கையில் "ஜம்" மென்று கம்பீரமாய் அம‌ர்ந்து வ‌ரும் பாட்டி அந்த‌ காரின் சொகுசான‌ வ‌ச‌திக‌ளைப் புதிதாக‌ப் பார்க்கிறார்...!!

தென்ற‌ல்போல‌ மெலிதான‌ குளிர்ச்சியை இத‌மாய்த் தெளிக்கும் ஏசி... சுவாச‌த்துக்குச் சுக‌மாய் கார் ஃப்ரெஷ்ன‌ரின் வாச‌ம்..... பூப்போல‌ இய‌ங்கும் கிய‌ரும், ப‌வர் ஸ்டியரிங்கும்..... கொஞ்ச‌மும் இரைச்சலின்றி ப‌ள்ள‌ம் மேடுக‌ளில் அமுங்கிக் கொடுத்து அமைதியாய் ஊர்ந்து செல்லும் அந்த ஊர்தியின் உள்புற‌ அழ‌கை அதிகம் அசையாமல் க‌ண்க‌ளை மட்டும் உருட்டிப் புதிதாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.... அப்போது "இளைய நிலா.... பொழிகிறதே...!!" எனக் காருக்குள் இளையராஜா தாலாட்ட ஆரம்பித்தார்.... வ‌ண்டியை ஓட்டிக்கொண்டே ஓர‌க்கண்ணால் தன் பாட்டியை ஒரு குழந்தையாய்ப் பார்த்துப் புன்னகைக்கிறான் ஜீவா!!... ஊரைவிட்டு வெளியேறிய‌து வாக‌ன‌ம்..... ஜீவா வேக‌மெடுக்க‌ ... இய‌ல்பாய் க‌ண்க‌ள் சொருகித் தூங்கிப்போனார் பாட்டிய‌ம்மா!! ராஜ‌ச‌ய‌ண‌ம்!! :-)


                                                                    13


முன்ன‌தாக முந்தைய நாளில்.... ஜீவா பாட்டியிட‌ம் தான் ஏதோவொரு காரை வாங்கி ஏமாற‌த் தெரிந்த‌தாக‌வும் இப்போது பாட்டியின் அறிவுரைக் கேட்டுதான் (!) தெளிவ‌டைந்து விட்ட‌தாக‌வும் கூறினான்.... பாட்டியின் ம‌கிழ்ச்சி குறையுமுன்பே.... ஜீவா,
" எல்லா க‌ம்பெனிகாரர்களூம் எங்க‌ காரை வாங்குங்கனு ஒரே தொந்த‌ர‌வு பாட்டிம்மா..... உங்க‌ பேர‌ன் ஏமாறுவானா!! தெளிவா சொல்லிட்டேன் என் பாட்டி ச‌ம்ம‌த‌ம் சொல்லுற‌ காரைத்தான் நான் வாங்க‌ப்போறேன்னு!!"
...
கொஞ்ச‌ம் இடைவெளிவிட்டு மெதுவாக....

"அத‌னால‌ நாளைக்கு ந‌ம்ம‌ ரெண்டுபேரும் சிட்டில‌ இருக்குற‌ எல்லா கார் ஷோரூமுக்கும் போறோம்!! எல்லா காரையும் பாத்துட்டுக் கடைசியா பாட்டிம்மாக்குப் பிடிச்ச காரா பாத்து வாங்குறோம்!!
!" 
என்று நைஸாக சொருகினான்.....எந்த‌வொரு ப‌திலுக்கும் பாட்டி த‌யாராகும் முன்பே....
"நாளைக்கே பாட்டிம்மா ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்திட‌ணும்.... உங்க‌ ஒரே பேர‌னுக்கு ந‌ட‌க்க‌ப்போற‌ ஒரே க‌ல்யாணம் இது.."
என்று எப்ப‌டியோ சிரிக்க‌ வைத்துப் பேசிப்பேசியே பாட்டியைத் த‌ன் ப‌க்கம் தன் வீடு நோக்கித் தன் வாழ்க்கைக்கு செல்லப்பேரமொழிபேசி மெல்ல‌ மெல்ல‌ ந‌க‌ர்த்தியிருந்தான்!!!
இன்று.... ஜீவா தன் காரில் சிட்டிக்குள் நுழைந்தபின்னும் அகலவில்லைப் பாட்டிம்மாவின் அனந்த சயனம்... தூங்கும் பாட்டியை பார்த்துப் பார்த்தே அலுங்காமல் ஓட்டி வந்தான் தன் ஊருக்குள்!!

                                                                     14


சுகமான பயணத்தில் தூங்கிப்போன‌ பாட்டி ஒரு ஹாரன் சத்தத்தில் திடீரெனக் க‌ண்விழித்த‌போது கண்முன்னே முற்றிலும் ஒரு புதிய‌ உல‌க‌ம் ப‌ர‌ப‌ர‌வென‌ இய‌ங்கிக் கொண்டிருந்த‌து....
கிழ‌க்கு நோக்கி மேலேறித் திடுமென‌ வ‌ட‌கிழ‌க்கில் வ‌ளையும் ஒரு ஃப்ளைஓவ‌ரில் அனாய‌ச‌மாக‌ காரை வளைத்துக் கொண்டிருந்தான் ஜீவா.....இப்போது பாட்டிக்கு வண்டியின் வேக‌ம் புல‌ப்ப‌டுகிற‌து.... ப்ளைஓவ‌ரின் மேலேயிருந்து ஜ‌ன்ன‌லில் த‌லைக்குக்கீழே ரோட்டின் இருபுற‌மும் நகர இட‌மின்றி அடைத்துக்கொண்டு முன்னேறும் நூற்றுக்க‌ண‌க்கான‌ கார்க‌ளும் ப‌ஸ்க‌ளும் அரற்ற.... அந்த‌ இடைவெளிக‌ளிலும் க‌ப‌டியாடும் வித்தியாச‌மான‌ பைக்குக‌ளையும் பார்க்க‌த் த‌லைசுற்றிய‌து பாட்டிக்கு....

நான்கு ரோடுக‌ள் ச‌ந்திக்கும் ஒரு பிர‌ம்மாண்ட‌ சிக்ன‌லில் முத‌ல்வ‌ரிசையில் அவ‌ர்க‌ள் கார் நிற்கிற‌து..... சுற்றிமுற்றி நாற்புற‌மும் ஆக்ஸ‌லேட்ட‌ர்க‌ளை முறுக்கிக் கொண்டுக் காத்திருக்கும் அவ‌ச‌ர‌ம் ஒரு போர்க்க‌ள‌த் தோற்ற‌த்தைக் கொடுத்த‌து பாட்டிய‌ம்மாவுக்கு!!

குழ‌ப்ப‌மான‌ சிக‌ப்பு ப‌ச்சை ஒளிவிளையாட்டில் பதற்றமாய்ப் ப‌ங்குபெறும் பாத‌சாரிகளையும்... அஸ்த‌ம‌ன‌ வேளையின் கோப‌மான‌ ஹாரன்க‌ளிலும் உண்மையிலேயே கொஞ்ச‌ம் கிறுகிறுத்துப் போன‌ பாட்டிய‌ம்மா.... இந்த‌த் திடீர் ப‌ர‌ப‌ர‌ப்புக‌ள் ஒவ்வாம‌ல் கொஞ்ச‌ம் உட‌ல்குறுக்கிக் க‌ஷ்ட‌மாய்த் த‌ன் கைகளால் காதுக‌ளை மூடிக்கொள்ள‌ப் போனார்.... அப்போது அருகிலிருந்த‌ கிய‌ர் மாற்றும் கரம் பாட்டியின் கையைப் பாச‌மாய்ப் ப‌ற்றிக்கொண்டது.....!!!

முற்றிலும் புதிய‌ சூழ‌லில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ப் பாச‌மான‌ அந்த‌ ஸ்ப‌ரிச‌ம் தான் தூக்கிவ‌ள‌ர்த்த‌ பேர‌னுடைய‌து என்று ம‌ன‌ம் அறிந்த‌ க‌ண‌ம் சில்லிடும் ஓர் அற்புத‌மான‌ உண‌ர்வை அனுபவித்தார் பாட்டிய‌ம்மா.... !!! அதுமுதல்....  ப‌ட்ட‌ண‌த்து மிர‌ட்ட‌லைச் ச‌ந்திக்கும் புதுத்தெம்போடு இப்போது, ர‌க‌ர‌க‌மாய் மின் விள‌க்குக‌ள் க‌லர்க்கோல‌ம் போட்டிருக்கும் பட்டணத்து மாலை அழ‌கை  ஜ‌ன்ன‌ல் வ‌ழியே ர‌சிக்க‌த் துவ‌ங்கினார் கிராமத்துப் பாட்டிம்மா!!!

த‌ரையிலிருந்து பிர‌ம்மாண்ட‌மாய் எழுந்து நின்ற‌ ஒரு கார் ஷோ‍ரூமில் கால்ப‌தித்து இற‌ங்கினார்க‌ள் பாட்டியும் பேர‌னும்...

முத‌ல்நாள் ஸ்கூல்செல்லும் பிள்ளைபோல் புதிதான‌ அந்த‌ சூழ‌லில் பாட்டிம்மா முற்றிலும் சர‌ண‌டைந்துவிட்டதோர் உட‌ல்மொழியை வெளிப்ப‌டுத்தித் த‌ய‌ங்கி ஒடுங்கி நின்றார்... பாட்டியின் சின்னச் சின்ன‌ அசைவுக‌ளைக் கூட‌ இப்போது மொழிபெய‌ர்க்க‌த் தெரிந்துகொண்ட‌ ஜீவா... காரிலிருந்து இற‌ங்கிக் கொஞ்ச‌ம் குறுகி நின்ற‌ பாட்டியின் தோள்பிடித்து உள் அழைத்துச் சென்றான்.....

 "ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்" என்று அல‌ட்டிக்கொள்ளும் மாபெரும் பிரம்மாண்ட கார் ஷோரூம் அது!! ஸ்டுடியோ எஃபெக்டில் மிர‌ட்ட‌லாய் அழ‌க‌ழ‌கு கார்க‌ள் பேராண்மையுடன் கம்பீரமாய் மின்னொளியில் ஜொலித்துக்கொண்டு ட‌ய‌ரூன்றி(!) நின்றுகொண்டிருக்கின்றன..
...
"ஹலோ ஐம் சீதாராமன்"

என்று தானாக‌வே ஜீவாவிடம் அறிமுக‌மாகிக்கொண்டார் ஓர் எக்ஸிகியூட்டிவ்!! ப‌டுஸ்மார்ட்டான‌ ஓப‌னிங்.... கொடுத்துக் கை குலுக்கிக் கொண்ட‌ அந்த இளம் எக்ஸிகியூட்டிவ் தன் கார் மார்க்கெட்டிங் தொழில்வாழ்வின் மிக‌ வித்தியாச‌மான‌தொரு சத்திய‌சோத‌னையை இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்க‌ப்போவ‌தை அப்போது உண‌ர்ந்திருக்கவில்லை....!!


                                                                                                                      தொடரும்.......
அடுத்த பாகம் இங்கே!

Wednesday, December 15, 2010

பாட்டி க‌தை (பாக‌ம் 3)

பாகம்- 1
பாகம்- 2     

                                                          பாட்டி க‌தை (பாக‌ம் 3)                                            

                                                                             9

நெஞ்சம் நிறைய சந்தோஷம் நிறந்திருந்தாலும் தூக்கம் வரத் தாமதம் ஆனது ஜீவாவுக்கு...

"பாட்டி வீடு" என்று தனக்கொரு இடம் பூமியில் இன்னும் எத்தனை நாள் இருக்கும்?? இன்று நாள்முழுதும் கேட்ட‌ அந்த‌க் கணிந்த‌ குர‌ல் இன்னும் எவ்வ‌ள‌வு நாள் ஒலிக்கும்...??? தொடர்ந்த கேள்விகளால் இன்று உற‌ங்கிவிடுவ‌து அவ்வ‌ள‌வு எளித‌ல்ல‌ என்று புரிந்த‌து!

பாட்டிவீட்டுச் சுவ‌ரில் க‌ம்பீர‌மாய் சிரித்துக் கொண்டிருக்கும் தாத்தாவின் புகைப்ப‌ட‌ம் ம‌னதைக் காரணமின்றி வ‌ட்ட‌ம‌டித்துக் கொண்டேயிருந்தது... தான் புகைப்ப‌ட‌த்தில் ம‌ட்டுமே க‌ண்டிருக்கும் தன் தாத்தா, மிக‌க் க‌ம்பீர‌மாக‌த் த‌ன்னுடைய‌ பெருமித‌ அடையாள‌மான, அவருடைய‌ கார் அருகில் வைத்து எடுத்துக்கொண்ட அதே படம்தான்!!

அந்த‌க் கிராம‌த்து ம‌ண‌ல்வெளியில் முத‌ன்முத‌லில் கார் ட‌யரின் அச்சுப்ப‌தித்த‌ பெருமைக்குரிய‌வ‌ர் ஜீவாவின் தாத்தாதான்! அந்த‌ப் பெருமையை ஊருக்குள் இன்றும் ச‌ந்தோஷ‌மாய்ச் சும‌ந்துவ‌ருகிறார் பாட்டி! இன்றைய உலகில் சாதார‌ண‌மாகிப் போய்விட்டாலும்... டிராஃபிக், பார்க்கிங்.. என‌ ஆயிர‌ம் இன்ன‌ல்க‌ள் இருந்தாலும்... "கார்"... தேவையும் ஆசையும் ஒருங்கே ஈடேறும் ஓர் அழ‌கிய‌ முத‌லீடு!!

புகைப்ப‌ட‌த்தில் பார்த்த‌ அந்தப் ப‌ழைய‌ மெட்டாலிக் ர‌தம், தாத்தா முக‌த்தின் பெருமித‌ப் புன்னகையோடு, இன்றுவரைப் பாட்டியை அக‌ம‌கிழ‌ச்செய்கிறது!!

கம்பெனி காரில் சென்றதைவிட ஒருவேளை பாட்டிவீட்டு வாசலில் தன் சொந்தக் காரில் சென்றிருந்தால்....???  சொந்தமா ஒரு கார் வாங்கி தாத்தாவுக்குப் பேரனா அந்த ஊர் மண்ணுல பாட்டிவீட்டு வாசலில் போய் நின்றால்...??

பாட்டிக்காகவே ஒரு கார் வாங்கினால் என்ன என்று சின்னதொரு சிந்தனை மின்னல் அவன் மனதைப் பிரகாசமாக்கியது!!


வேக‌மாய் விடிந்துவிட்ட‌து பொழுது..... முதுகைத் த‌ட்டிக்கொடுத்து ஆமோதித்தார் ராஜ‌கோபால‌ன் தன் ம‌க‌னின் கார் வாங்கும் திட்டத்தை.... வங்கிகள் இந்த மிட்டாய்க்கடை மேனேஜருக்கு (!) எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் லோன் த‌ர‌க்காத்திருப்ப‌தால் திரும‌ணச் செல‌வுக‌ளில் கார் குறுக்கிட‌ப் போவ‌தில்லை!


 அடுத்தக்க‌ண‌மே ஃபோன் கால் ப‌ற‌ந்த‌து அஞ்ச‌லிக்கு.... அம்முனையும் ஆன‌ந்த‌ம‌ழை!!


"என்ன‌ கார் வாங்க‌லாம்??" என்ற‌ மில்லிய‌ன் டால‌ர் கேள்வியை அஞ்ச‌லியின் இஷ்ட‌த்துக்கு விட்டுவிட்டான் ஜீவா... ஆனால் த‌ன‌க்கு luxury கார் ப‌ற்றியெல்லாம் ஞான‌ம் அதிகம் கிடையாது என்று சொல்லிக் க‌ழன்றுகொண்ட‌ அஞ்ச‌லி த‌ன‌க்குப் பிடித்த‌ மெட்டாலிக் க‌ரும்ப‌ச்சை நிற‌ம் அமைந்தால் ம‌கிழ்ச்சி என்று ம‌ட்டும் கோரிக்கை வைத்தாள்!!!


"பாட்டிகிட்ட‌ சொல்லியாச்சா....??"


ஆர்வமாய்க் கேட்ட அஞ்சலியிடம்...


"நேர்ல‌ போறேன்.. என் பாட்டியோட‌ப் ப‌ல்விழுந்த‌ சிரிப்பு பார்க்க‌..!!"


சொல்லிக் கிள‌ம்பினான் ஜீவா!!!


                                                                            10


முன்கூட்டி சொல்லாம‌ல்தான் இம்முறையும் பாட்டியின் முன்னால் போய் நின்றான் ஜீவா....!  மீண்டும் பேரனைக் கண்ட அதிர்ச்சி வில‌காத‌ பாட்டியை அப்ப‌டியே தாத்தாவின் ஃபோட்டோவுக்கு அருகில் அழைத்துச் சென்று...

"உன் பேர‌னும் கார் வாங்க‌ப் போறான் பாட்டி!!!"

 என்று போட்டுடைத்தான்.....

என்னவொரு ஆனந்தமான‌ த‌ருண‌மது!! "ஏழைப்பேர‌ன்" லாட்ட‌ரி அடித்தது போல் திடீரென பாட்டியின் ம‌ன‌தில் உச்ச‌த்துக்குப்போய் வெற்றிக்கொடி நாட்டினான்!!! இந்த‌ ம‌கிழ்ச்சிப் பேர‌லைக‌ளை அந்த முதிய‌ இத‌யத்தால் தாங்கமுடியுமா?? என்று ச‌ந்தேகமே வ‌ந்துவிட்ட‌து ஜீவாவுக்கு.
...
ஆன‌ந்த‌மாய்த் தாத்தா ஃபோட்டோ ப‌க்க‌ம் திரும்பி கைகூப்பி ஏதோ முணுமுணுத்துப் பேர‌னின் நெற்றியில் ப‌க்தியுட‌ன் தில‌க‌மிட்டார் பாட்டி...

குழந்தையாய் சிரிக்கும் சந்தோஷப் பாட்டியிடம்.... என்ன கார் வாங்கலாம் என்று தேர்வு செய்வ‌த‌ற்காக‌ வைத்திருக்கும் மிக‌வும் விலையுய‌ர்ந்த‌ லேட்ட‌ஸ்ட் ஆட‌ம்ப‌ர‌ ம‌கிழ்வுந்துக‌ளின் ப‌ட‌ங்களையெல்லாம் தாங்கிய சில மோட்டார் இத‌ழ்களைக் காட்டிப் பாட்டியை மேலும் சந்தோஷப் பட வைக்க‌ ஜீவா வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்..... அப்போது திடீரென்று பாட்டி ச‌ற்று சீரிய‌ஸாக‌ ஜீவாவின் அருகில் வ‌ந்து....


"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!"

என்று பாட்டி சொல்ல‌ ஒரு நொடி திகைத்து நின்ற‌ ஜீவாவுக்கு கார் மீது லாரி மோதிய‌துபோல் இருந்த‌து!!

அப்ப‌டியே நின்றுவிட்ட‌ ஜீவாவிட‌ம் பாட்டி, இப்போது வ‌ந்திருக்கும் ப‌ல‌ கார்க‌ளைத் தான் பார்த்திருப்ப‌தாக‌வும்.. எல்லாம் "சோப்பு டப்பா" மாதிரி இருப்பதாகவும் (!) அந்த‌க் கால‌க் கார்க‌ளின் வ‌லுவான‌ உறுதி எதிலும் இல்லையென்றும்... காசுபோட்டுக் காரை வாங்கிக் காலை ம‌டக்கிக் குனிந்து அம‌ர்வ‌து அசௌக‌ரிய‌ம் என்றும் அடுக்கிக்கொண்டே போனார்!!! க‌வ‌ன‌மாக‌ ந‌ல்ல‌ அம்பாசிட‌ர் காராக‌ப் பார்த்துவாங்குமாறு பேரனுக்கு சீரிய‌ஸாக‌ அறிவுரை சொன்ன‌ பாட்டி ஜீவா சொல்ல‌ வ‌ந்த‌ எதையும் ஏற்ப‌தாக‌ இல்லை!!

                                                            
                                                                                11


வெள்ளையாக‌ விழுந்து விழுந்து ஃபோனில் சிரிக்கிறாள் அஞ்ச‌லி....!!!

ஜீவா ஃபோனைக் காதில் வைத்திகொண்டு அப்பாவியாய் பாட்டி சொன்ன‌தையெல்லாம் சொல்ல‌ச் சொல்ல‌ சிரித்து ர‌சித்த‌ அஞ்ச‌லி,

 "இப்போ என்ன‌ செய்ய‌ப் போறீங்க‌?? அம்பாசிட‌ர் கார் லேட்ட‌ஸ்ட் மாட‌ல் புக் ப‌ண்ணிடுவோமா!!"

என‌க் குறும்பாய்க் கேட்க‌ ஜீவாவும் த‌ன் பாட்டியின் உல‌க‌ம‌றியா குழந்தைத்த‌ன‌த்தை நினைத்து வாய்விட்டுச் சிரித்தான்.....!!

"பாட்டிக்காக‌த்தான் கார் வாங்குற கான்செப்டே ம‌ன‌சுல‌ வ‌ந்திச்சு அதுல இப்பவும் எந்த‌ மாற்ற‌மும் இல்ல‌... பாட்டியோட விருப்பப் படி வாங்கினால்தான் அதுல அர்த்தமே இருக்கு.... சின்ன வயசுல மிஸ் பண்ண ஒரு பெரிய விஷயம் இப்போ திரும்ப கிடைச்சிருக்கு... என்னோட அப்பாவி பாட்டிகூட சுவாரஸ்யமா ஒரு கார் விளையாட்டு விளையாட கொஞ்சம் லேட்டா ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு அவ்ளோதான்... இதை நான் மிஸ் பண்ணுறதா இல்ல.. !!.." ........

பாட்டியைத் த‌ன் தொழில்சார்ந்த‌ எம் பி ஏ பேச்சுத்திற‌னால்,  தான் வாங்க‌ எண்ணியிருக்கும் காரையே வாங்க‌ச் சொல்ல‌வைக்க தன்னால் மிக‌ எளிதில் முடியும் ... ஆனால் தான் அவ்வாறு செய்ய‌ப் போவ‌தில்லையென்று உறுதியாக‌ இருந்த‌ ஜீவாவிட‌ம் ..

"இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!"

என்று அஞ்சலி ஃபோனில்  க‌லாய்க்க‌ ஆரோக்ய‌மான‌ இந்த‌ ச‌வாலை  ஏற்றுக்கொண்டான் ஜீவா!!


                                                                                                                     தொடரும்.......

அடுத்த பாகம் இங்கே!

பாட்டி கதை (பாகம் 2)

பாகம்-1 இங்கே  
                                                     
                                                   பாட்டி க‌தை (பாக‌ம் 2)

                                                                            5

ஒன்ப‌தாம் வ‌குப்புப் ப‌டித்த‌போது வ‌ந்த‌ கொடுமையான‌ ம‌ஞ்ச‌ட் காமாலையால் க‌டும் அவ‌தியுற்ற‌ ஜீவாவை நாட்டுவைத்திய‌த்துக்காக‌ கிராம‌த்துக்கு அழைத்துச்சென்று காப்பாற்றிய‌து அவன் பாட்டிதான்...

உட‌ல் நோவு வாட்டியெடுத்த‌போது ம‌டியில்போட்டுத் த‌லைவ‌ருடிக்கொடுத்த‌ பாட்டியின் பாச‌ம்.... இப்போது ஜீவாவின் த‌லைய‌ணையை ந‌னைக்கிற‌து க‌ண்ணீர்த்துளியாய்... குண‌மாகிப் ப‌த்து நாள் பாட்டியின் ஊட்ட‌த்தால் தேறியதும்... அந்த‌ப் ப‌த்து நாளும் பூர்வீக‌ நில‌புல‌ன்க‌ளில் சின்ன‌ மைன‌ராக‌ வ‌ல‌ம் வ‌ந்ததும்... குள‌த்தில் நேர‌ம்தெரியாம‌ல் குளித்துக் கிட‌ந்த‌வ‌னுக்காக‌க் க‌ரையிலேயே காத்துக் கிட‌ந்துப் பாட்டித் தலை துவ‌ட்டிவிட்டதும்...பாட்டியின் கைப்பக்குவத்தில் தேன்குழ‌ல் முருக்கு, அதிர‌ச‌ம், கேச‌ரி,ரொம்ப‌ப் பிடித்த‌ பால்ப‌னியாரம் ருசித்தது...!!! ப‌த்துநாளும் ப‌ல‌வித‌மாய்க‌ க‌ழிந்தன‌....

"பாட்டிய‌ விட்டுட்டு ம‌றுப‌டி போக‌ப்போறியா??"

"இதோ இப்ப‌வே ஜ‌ன‌வ‌ரி முடிஞ்சிருச்சு... பிப்ர‌வ‌ரி, மார்ச்..அவ்ளோதான்... ஏப்ர‌ல் மாச‌ம் லீவு.. நான் திரும்ப‌ வ‌ந்திடுவேன்!!!"

க‌ன்ன‌மிர‌ண்டிலும் முத்த‌ம் கொடுத்து நெற்றியில் முத்த‌ம் வாங்கித் தெரு முடியும்வ‌ரை திரும்பிப்பார்த்து கை காட்டிக்கொண்டே சென்றான்.... த‌ன் அம்மாவிட‌ம் அதிக‌ம் பேசிக்கொள்ளாத‌ ராஜ‌கோபால‌ன் சிரித்துக்கொண்டே எதுவும் பேசாம‌ல் ம‌க‌னை அழைத்துக்கொண்டு போனார்....

ஏப்ர‌ல் வ‌ந்தது.... ப‌த்தாம் வ‌குப்புப் பாட‌ங்க‌ளை லீவிலேயே துவ‌க்க‌ ஏற்பாடுக‌ளை செய்திருந்தார் அப்பா!! பாட்டியை ம‌ற‌ந்து ப‌டிப்பில் தீவிர‌மானான் ஜீவா...முடிவில் ம‌திப்பெண்க‌ளோடு மெட‌ல்களும் குவிந்த‌ன‌...

"ப‌ப்ளிக் எக்ஸாம் டென்ஷ‌ன் எல்லாம் முடிஞ்சிபோச்சு பாட்டி.... அடுத்த‌ ரெண்டு மாச‌ம் நான் உங்க‌ கூட‌வேதான் இருப்பேன்!!!" ....  அன்புள்ள‌ பாட்டிக்கு என்று ஓர் இன்லேண்ட் லெட்ட‌ரில் சேதி போன‌து...

ஆனால் அந்த‌ இர‌ண்டுமாதங்களுக்கும் "ஸ்விம்மிங், க‌ராத்தே, ப்ரென்ச் க்ளாஸ், கிள‌ப் கிரிக்கெட்.. என்று குறுகிய‌ கால‌ க‌டமைக‌ளை அடுக்கிவைத்திருந்தார் ராஜ‌கோபால‌ன்... சார்ல‌ஸ் டிக்கின்ஸ், அக‌தா கிறிஸ்டி ப‌டிக்க‌ணும்... உல‌க‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌த்துக்கிற‌ வ‌ய‌தில் அந்த‌க் கிராம‌த்துக்குப் போவதாவது... விடாது சிவ‌ப்புக்கொடி ப‌ற‌க்க‌விட்டார்!!

ப்ள‌ஸ் ஒன் முடிந்து ப்ள‌ஸ் டூ கூட‌ முடிந்துபோன‌து.... "பாட்டீ நான் ப்ள‌ஸ் டூ பாஸாகிட்டேன்.." என்று "ப‌தினாறு வ‌ய‌தினிலே" ஸ்டைலில் ஆண்"ம‌யிலா"க‌ வ‌ய‌ல்வ‌ர‌ப்பில் அகவுகிற‌ ஜீவாவின் கனவுக்கு எம‌னாக‌ வ‌ந்த‌து எண்ட்ரென்ஸ் எக்ஸாம்.....சரி காலேஜ் போன‌ப்புறமாவது... ஸாரி நோ சான்ஸ்.. அவ‌ன் ப‌டித்த‌து அல‌காபாத்தில் உள்ள‌ ஆர்.ஈ.சி யில்!! பெங்க‌ளூரில் சாஃட்வேரில் இரண்டுவ‌ருட‌ம் வேலை...அத‌ன்பின் மீண்டும் எம்.பி.ஏ... அதுவும் மும்பையில்....

இரண்டொருமுறை கட்டாயப்படுத்திப் பாட்டியை நகரத்திலிருக்கும் தன்வீட்டுக்கு அழைத்துவந்து தங்கவைத்தார் ராஜகோபாலன்... ஒரே வாரத்தில் அவர் வேலைக்குப் போயிருந்த நேரத்தில் ஏனோதெரியவில்லை பாட்டி சொல்லிக்கொள்ளாமல் பழையபடி கிராமத்துக்கு சென்றுவிட்டார்...!!

பாட்டிக்கு ஞான‌ப்ப‌ழ‌ம் வேண்டுமென்றால் தாத்தாவை ஒருமுறை சுற்றி வ‌ந்து வாங்கிக் கொண்டுவிடலாம்!!! அந்த‌க் கால‌த்திலேயே கார் வைத்திருந்த‌வ‌ர் ஜீவாவின் தாத்தா!!  வீடு, வ‌ய‌ல் ம‌ற்றும் தோப்பெல்லாம் வைத்திருந்தும் அந்த‌க் கால‌த்தில் கார் வைத்திருந்த‌துதான் இந்த‌க்காலத்திலும் அவரது பெருமித‌ அடையாள‌மாக‌ இருந்துவ‌ருகிற‌து... குறிப்பாக‌ப் பாட்டியின் ம‌ன‌தில்!!..... த‌ன்னைவிட‌ப் ப‌ல‌வ‌ய‌து மூத்த‌வ‌ரான‌ த‌ன் க‌ண‌வ‌ருக்கு இறுதிவ‌ரை ஒரு குழ‌ந்தையாக‌த்தானிருந்தார் பாட்டிய‌ம்மா!! சொந்த‌ நில‌த்தைக் குல‌தெய்வ‌க் கோயிலுக்குக் கொடுத்துவிட்ட‌ திருப்தியுட‌ன் திடீரென்று தாத்தா மாண்டுபோவார் என்று யாருமே நினைத்திருக்க‌வில்லை.... சிறுவ‌ய‌திலிருந்தே த‌ன‌க்குத்தானே கோடுபோட்டு வாழ‌ப் ப‌ழ‌கிக்கொண்ட‌, அவ‌ர்க‌ளின் ஒரேம‌க‌ன் ராஜ‌கோபால‌ன், தன் த‌ந்தை ம‌ரணிக்கும்போதே ப‌ட்ட‌ண‌த்தில் அர‌சாங்க‌வேலையில் சேர்ந்திருந்தார்.... த‌ன‌க்கு உல‌க‌மாயிருந்த‌ க‌ண‌வ‌ன் திடீரென‌ ம‌றைந்துபோக‌ உயிராய் வ‌ள‌ர்த்த‌ ம‌க‌னிட‌ம் த‌ஞ்ச‌ம‌டைவார் என‌ அனைவ‌ரும் நினைத்திருக்க‌, த‌ங்க‌ள் பெரிய‌ வீட்டை அந்த ஊர்ப் ப‌ள்ளிக்கூட‌த்துக்குக் கொடுத்துவிட்டு ஆர‌ம்ப‌கால‌த்தில் த‌ன் க‌ண‌வ‌ன் க‌ட்டிய‌ சின்ன‌வீட்டில் த‌னியாக‌ப் பாட்டிய‌ம்மா வாழ‌த்துவ‌ங்கியது ஏனென்பது இன்றுவ‌ரை யாரும் அவிழ்க்க‌விய‌லாத‌‌ ஒரு ம‌ர்ம‌ முடிச்சு!! பேரன் ஜீவாவுக்கு ம‌ஞ்ச‌ள்காமாலை தாக்கியிருந்த‌போது பாட்டி போராடிக் காப்பாற்றிய‌ இதேவீட்டில்தான் இன்று அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குழ‌ந்தைக்கு சோறூட்டிவிடுகிறார்!!

 ந‌டு இர‌வில் பாட்டி நினைவுகள் தாலாட்ட ஒருவழியாய் ஜீவா தூங்கிவிட‌..... தொண்டை விக்க‌ல் அட‌ங்கிப்போய்... மறுநாள் காலை, தின‌ம் தின‌ம் வாச‌ல்தெளித்து சுத்த‌ம் செய்த‌ முறைவாசலில் சொந்தப் பேரனின் பாதம் ப‌ட‌ப்போவ‌தை ய‌றியாம‌லேயே தூங்கிவிட்டார் பாட்டிய‌ம்மா!!!


                                                                 6

வ‌ழ‌க்க‌ம்போல் அன்றும் வாச‌ல்தெளித்து மிக‌ச்சுத்த‌மாக‌ மொழுக‌ப்ப‌ட்டிருந்த‌து  பாட்டி வீட்டின் முக‌ப்பு...

கார் க‌தவு திற‌ந்து..... அரிசிமாவில் வ‌ரைந்த‌ எட்டு புள்ளிக் கோல‌த்தில் பட்டுவிடாத‌வாறு எச்ச‌ரிக்கையாய்த் த‌ரையில்தன் கால்ப‌தித்தான் ஜீவா.... வாச‌ல்க‌தைவை மூடும் வ‌ழ‌க்க‌ம்தான் அந்த‌க் கிராம‌த்துக்கே கிடையாதே!! காரிலிருந்து இற‌ங்கி ஒன்றுமே பேசாம‌ல் வீட்டுக்கு உள்ள்ள்ளே... வாச‌லிலிருந்து நேரே தூர‌மாய் அம‌ர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த, இன்னும் கொஞ்ச‌ம் முதுமைய‌டைந்துவிட்ட த‌ன் பாட்டியைத் த‌லையை ஒருபுற‌ம் ச‌ரித்த‌வ‌னாய்ப் பார்த்த‌வாறே நின்றிருந்தான் ஜீவா!!!!

தூர‌த்தில் நிற்கும், நிழ‌லாய்த் தெரியும் அந்த‌ ம‌ங்க‌லான‌ உருவ‌ம் பாட்டியின் ம‌ன‌தில் மெதுவாகச் சின்ன‌ச் சின்ன‌ ம‌த்தாப்பூக்க‌ளைக் கொளுத்திப் போடத் துவங்கியது... முக‌ச்சுருக்க‌ங்க‌ள் கேள்விக்குறிக‌ளாய் மேலும் சுருங்கி... கையிலிருந்த‌தை அப்ப‌டியே போட்டு விட்டுத் திடீரென‌த் த‌ட‌புட‌லாய் எழுகிறார் பாட்டிய‌ம்மா!!! 

"பேரன்!!!!!"

ஜீவாவின் இமைக்காத‌ பார்வைக்குப் பாட்டியின் சிறு அசைவுகூட‌த் த‌ப்ப‌வில்லை... வேக‌ம்காட்டும் பொருட்டு இருகைக‌ளையும் த‌ரையில் ஊன்றிப் ப‌ல‌ம் திர‌ட்டி எழுந்து அந்த‌ வ‌ய‌திற்கு அதிவேக‌மாய் த‌ன்னை நோக்கி நெருங்கிவ‌ரும் பாட்டி.... உருவ‌ம் தெளிவாக‌த் தெரிந்திடும் தூர‌ம் நெருங்கிய‌தும் கைக‌ளிர‌ண்டையும் உத‌ற‌த் துவ‌ங்கினார் ப‌த‌ற்ற‌மாய்!!

வேக‌ந‌டை ஓட்ட‌மாகி உத‌றிய‌ கைக‌ள் நேரே ஜீவாவின் க‌ன்ன‌ங்க‌ளில் ப‌திந்த‌த‌ன‌!! இய‌ல்பாக‌வே க‌ல‌ங்கியிருந்த‌ க‌ண்க‌ளால் மங்கலாய்த் தெரியும்  காட்சியை முழுதாக‌ ந‌ம்ப‌ இய‌லாத‌து தெளிவாக‌வே தெரிந்த‌து....!

"சொல்லிட்டுப் போன‌ மாதிரியே ஏப்ர‌ல் மாசம் வந்துட்டேனா!!"

ஜீவா சிரிக்க‌....

 " கண்ணீர்மல்க‌ த‌ன் பேர‌னை உச்சிமுக‌ர்ந்தார் பாட்டி பல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து......!!

                                                                       7

மஞ்சள் நிற மாலை வெயிலில் கூட வெப்பத்தின் தடயங்கள் தோய்ந்திருக்கின்றன அந்தக் கிராமத்தில்... கரடுமுரடான பாதையில் கவனமாகக் காரை செலுத்துகிறார் ஓட்டுநர்... குளிரூட்டப்பட்ட பின்னிருக்கையில் ஜீவா!! அதே பாதை... ஆனால் இம்முறைப் பயணமோ பாட்டியை விட்டுத் தன் அணுதின வாழ்வை நோக்கி... அந்தக் காரிலும் சரி அவன் வீட்டிலும் சரி இன்னும் இடம் நிறையவே உள்ளது எனினும் பாட்டியின் நினைவுகளை மட்டும் முடிந்தவரை அந்தக் காரில் நிரப்பிக்கொண்டுப் பாட்டியை அந்த‌ச் சிறிய‌ வீட்டிலேயே விட்டுவிட்டுதான் சென்றுகொண்டிருக்கிறான்.... தன்னுடன் வந்துவிடுமாறு பாட்டியிடம் ஜீவா இறுதிவரை ஒருவார்த்தை கூட சொல்லவேயில்லை!!

 "எப்படித் திடீரென்று என்னைத்தேடி வந்தான் என் பேரன்??"

என்று இந்நேரம் பாட்டி நினைத்துக்கொண்டிருக்கலாம் ஆனால் அந்த அழகிய கிராமத்துக் குடில் இன்று சந்தோஷத்தால் நிரம்பிப்போனது மட்டும் நிதர்சனம்.. இயல்பாகப் பனித்திருந்த கண்களைத் தன் கையால் துடைக்கையில் வலதுகையில் பருப்புருண்டைக் குழம்பு வாசம்!!!

சமையலறையில் பாட்டி சமைத்துக் கொண்டிருந்த‌ போது ஜீவா ஓர் அண்டாவைக் கவுத்திப்போட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டு பாட்டியின் ஒவ்வோர் அசைவையும் அதிசியத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்... விடாது பல கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள் பாட்டியும் பேரனும்!....

 சட்டியில் குழம்பு கொதிக்கத் துவங்கிவிட்டது.... பாட்டியோ, வீட்டின் பின்புறம், கொள்ளைப்புற வாழைமரத்தில் இலைவெட்டிக்கொண்டிருந்தார்.... வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழம்பைச் சட்டியிலிருந்து இறக்கிவைத்து... ஒருமுறை ருசிபார்த்தபின்புதான் சந்தோஷமாய்ப் பரிமாறினார் தன் கைமணத்தை!!!.... மீண்டும் தனது கையை முகர்ந்து பார்க்கிறான் ஜீவா... பாட்டி வாசம்!!! .....செல்போன் அழைத்தது.... மறுமுனையில் அஞ்சலி!!

"சொல்லுங்க....சொல்லுங்க.... என்ன ஆச்சு?? பாட்டி ஹேப்பியா??"

ஜீவாவுக்கு இணையான ஆர்வமிகுதியில் அஞ்சலி துவங்க மீதமுள்ள பயணம் இனிமையாய் நகர்ந்தது....

"இனிமேலும் என் பாட்டியைத் த‌னிமையில் த‌விக்க‌விட‌ மாட்டேன்" என்று சூளுரைத்துக் கிள‌ம்பிய‌வ‌ன் பாட்டியைத் த‌ன்னுட‌ன் வந்துவிடுமாறு சொல்ல‌க்கூட‌ இல்லை என்ப‌து புதிராக இருந்தது அஞ்ச‌லிக்கு!

"இங்கே கிராமத்துல ராஜா மாதிரி இருக்க வேண்டிய பேரன் வாழ இடமில்லாத நகரத்துல மாட்டிக்கிட்டுத் தவிக்கிறானே!!!" என்று தனக்காகப் பாட்டி பரிதாபப்படுவதை (!)  எப்படி இவளுக்குப் புரியவைப்பதென்று குழம்பிக்கொண்டிருந்தான்....!!!


                                                                      8

த‌ன்னையும் த‌ன் வ‌ள‌ர்ச்சியையும் க‌ண்டுப் பெருமித‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும்தான் க‌ட‌ந்த‌ சில ஆண்டுகளாகவே பார்த்திருக்கிறான் ஜீவா....ஆனால் த‌ன்மீது பேர‌ன்பு கொண்ட தன் பாட்டியோ தன் வாழ்வை நினைத்துத் தனக்காகப் பரிதாபப் பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அதிர்ந்துதான் போனான் ஜீவா!

 அஞ்சலியும் மௌனமாகிப் போனாள்!!!

"சிட்டியிலேயே ரொம்ப‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் சொந்த‌வீடு, இவ்வ‌ள‌வு சின்ன‌ வ‌ய‌சிலேயே வாங்கியிருப்பதுதான் ப‌ரிதாப‌நிலையா???'"

என்று இப்போது கேட்கும் அஞ்ச‌லியைப் போலத்தான் ஜீவாவும் எண்ணினான்.... ஆனால் பாட்டி....

"ஒரே க‌ட்ட‌ட‌த்துக்குள்ள மூச்சப் பிடிச்சுக்கிட்டு நாப்ப‌த்துயேழு வீட்டக் கட்டிவெச்சிருக்கான் ....வாசக்க‌த‌வ‌க்கூட‌ திற‌ந்து வெச்சுக்க‌ முடிய‌ல‌... ஆசையா ஓர் ஆட்டுக்குட்டி வ‌ள‌ர்க்க வழியிருக்குமா??"

என்று கேட்டால் பாவம் என்னதான் பதில் சொல்லுவான் ஜீவா!!!

பூமியைத் தொழுது நிலத்தை உழுது வாழும் ம‌ண்வாச‌னை ம‌னித‌ர்க‌ளுக்கு சொந்த‌ பூமியில் வேய்ந்த குடிசை பெருமித‌மாக‌வும், அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆட‌ம்ப‌ர‌வீடுக‌ள் அந்த‌ர‌த்தில் அம்மாஞ்சிகள் வாங்கிப்போடும் அசையா சொத்தாக‌வும்தான் தெரிகிறது போலும்!!

அடுக்குமாடிக‌ளின் இன்றிய‌மையா தேவையான‌ லிஃப்டுக‌ளை ம‌னித‌ர்களின் வெளிஉல‌க‌த்தொட‌ர்பைத் துண்டிக்கும் வில்லனாக‌ விம‌ர்சிக்கிறார் பாட்டி!! (பாட்டிக்கு லிஃப்டை இயக்க‌த்தெரியாது.... ப‌தினோருமாடிக்கு ப‌டிக்க‌ட்டில் போவ‌தும் முடியாத‌ காரிய‌ம்.. அந்த‌ ஆற்றாமைதான்!!)

இதையெல்லாம் கூட‌ப் பொறுத்துக் கொண்டான் ஜீவா... மிக‌ப்பெரிய சாக்லேட் க‌ம்பெனியின் ரீஜின‌ல் ஹெட் என்ற தன்னுடைய அல‌ங்கார‌ப் பத‌வியைப் பாட்டி, த‌ன் பேர‌ன் ஒரு "மிட்டாய் க‌ம்பெனி"யில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் கணித்திருக்கிறார் என அறிந்த கணத்தில் பாட்டியின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் "ஜீவா"வின் வறுமை (!) நிலையைப் புரிந்துகொண்டுப் பேச வார்த்தையின்றி அமைதியானான்!!!

அத்தோடும் விடவில்லை பாட்டி...... ப‌க்க‌த்து வீட்டு அல‌மேலுவின் ம‌க‌ன் அந்த‌ கிராம‌த்தில் ப‌டித்த‌வ‌ன்தான் என்றாலும் ஒரு பெரிய்ய்ய்ய‌ மோட்டார் க‌ம்பெனியில் வேலைபார்ப்ப‌தாக‌ப் பெருமையாய்க் கூறினார்!!

"என் பேர‌ன் பாவ‌ம்ப்பா உன்னைவிட‌ அதிக‌மாப் ப‌டிச்சிட்டு ஏதோவொரு மிட்டாய் க‌ம்பெனியில‌ வேலை பாத்துட்டு இருக்கான்... உன்ன‌ப்போல‌ ந‌ல்ல‌ பெரிய‌ க‌ம்பெனில‌ உத்தியோக‌ம் எதுவும் கிடைச்சா அவ‌னுக்கும் சொல்லுப்பா!!"

என்று அவ‌னிட‌ம் பாட்டி சொல்லி வைத்திருந்ததை நல்லவேளை ஜீவாவிடம் பாட்டி சொல்லவில்லை!!

எக்க‌ச்ச‌க்க‌ ஆசையோடு பெருமையாய்ப் போனவன் இப்படி எக்குத்தப்பாய் 'டேமேஜ்' ஆகிப்போயிருக்கும் த‌ன் வருங்காலக் கணவனுக்கு ஆறுத‌ல் சொல்ல‌வா?... என்ன‌ சொல்லவோ? என்று மௌன‌மாகவே இருந்தாள் அஞ்சலி.... இன்னொருபுற‌ம் அவனது பேச்சைவைத்து இந்த‌க் கணம் அவ‌ன் முக‌த்தைக் கணித்துப் பார்க்கையில் அவளுக்குக் கொஞ்ச‌ம் சிரிப்பும் வ‌ந்த‌து...!!

இவற்றையெல்லாம் தாண்டி.. அந்த‌ச் சிறிய‌ கிராம‌த்து வீட்டில் வ‌சிப்ப‌தில் பாட்டியிட‌ம் ஒரு க‌ம்பீர‌த்தைக் கவனித்தான் ஜீவா..... தாத்தாவுடைய‌ ப‌டைபுலன்க‌ளுட‌ன் தான் வாழ்ந்த‌ பெரிய‌ வீட்டைப் புற‌க்க‌ணித்துவிட்டு, க‌ண‌வ‌ன் ம‌னைவியாய் ஆர‌ம்ப‌கால‌த்தில் அவர்கள் வாழ்க்கையைத் துவ‌க்கிய, வ‌ச‌திக‌ள‌ற்ற இந்தச் சிறிய‌ வீட்டில் பாட்டி தனியாக வாழ்ந்துவருவதில் ஏதோவொரு ஜீவனுள்ள அர்த்தமுள்ளது என்றும் ,பிடிவாதமாய்த் தனக்குத்தானே பாட்டி  ஏற்படுத்திக்கொண்ட இந்தத் த‌ன் த‌ந்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் எண்ணுவ‌தைப்போல வெறும் "வ‌ற‌ட்டுப் பிடிவாத‌ம்" கண்டிப்பாக இல்லை என்றும் ஜீவாவால் தெளிவாக‌ உண‌ர‌முடிந்த‌து......


                                                                                                                        தொடரும்.......

Tuesday, December 14, 2010

பாட்டி க‌தை (பாக‌ம் 1)

    

                                               பாட்டி க‌தை (பாக‌ம் 1)
                                             


                                                                1

அழகான அதிகாலை....அருகில் உள்ள‌ கிராமத்தில் சேவல் ஒன்று கூவுகிற‌து.... ஒரு சின்ன‌ பீப்பாய் நீர் பாய்ந்து வ‌ந்து ம‌ண்ணை நனைக்க .....ம‌ழைபெய்தால் கிளம்பும் ம‌ண்வாச‌னை ப‌ர‌வுகிறது... சாண‌த்தோடு க‌ரைத்த‌ நீரால் அந்த‌ ம‌ண்ணை மெழுகுகிறார் வாச‌ல்தெளிக்கும் அந்த‌ப் பாட்டிய‌ம்மா!!!

தோல்சுருங்கி மென்மையான‌ ந‌ர‌ம்புக‌ள் கையெங்கிலும் வெளியே தெரிகின்றன... த‌சைக‌ளெல்லாம் முறுக்கின்றித் தொங்கிப் போயிருந்தாலும் வாளிக்குள் இருக்கும் நீரை வலுவாக அடித்துத் தெளிக்கின்ற‌ன‌ அந்தக் கைக‌ள்.... சில‌ நொடிக‌ளில் புழுதிம‌ண்ணின்றி ப‌க்காவாக‌ செட்டாகியிருக்கிற‌து வீட்டுவாச‌ல்.... வேண்டியோர் ப‌ல‌ரின் காலடி படுவதற்காகப் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக ஏங்கிக் காத்திருக்கும் அந்த வீட்டு வாசல்!!

சில மணித்துளிகள்தான்...... பாட்டி இப்போது சமையலறையில்... அடுப்புப் பற்றவைத்ததுதான் தாமதம் அந்த அனுபவக் கைகளின் சமையல் ஜாலத்தில் இதோ சட்டியில் குபு குபு வென குமிழ்கள் வெடிக்கின்றன கொதிக்கும் புதுக் குழம்பில்!!! சரியாக எண்ணெய் சட்டியில் கடுகுகள் பட்டாசு வெடிக்கும் நேரத்தில்.... வாசலில் ஒரு மழலைப் புல்லாங்குழல்!!

"பாட்டிம்ம்மா...."

அழைக்கிறாள் ஸ்கூல்யுனிபார்ம் போட்ட அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிதேவதை கையில் ஒரு காலி டிஃப‌ன்பாக்ஸுட‌ன்!!

"ஏய்ய்ய்... பூட்ஸு காலோட‌ உள்ள‌ வ‌ராதேனு பாட்டி எத்தனை த‌ட‌வ‌ சொல்லியிருக்கேன்...."

செல்ல‌மாக‌ அத‌ட்டிக்கொண்டே, வேக‌மாக‌ப் பாட்டி நடந்து வ‌ந்தாலும் ந‌டையில் த‌ள‌ர்ச்சி தெரிய‌த்தான் செய்கிற‌து!!! அந்த‌க் குழ‌ந்தை நாக்கை நீட்டி வ‌ழ‌க்க‌ம்போல் சிரித்துக்கொண்டே உட‌லை ஒருவித‌மாக‌க் கோணிக்கொண்டு நிற்கிறாள் பூட்ஸைக் கழற்றிவிட்டால் மீண்டும் மாட்டிக்கொள்ளத் தெரியாதவளாய்....

"அப்பா இன்னிக்கு இக்கிலி செஞ்சாங்க‌...!!" 

பேச்சை மாற்றிவிட்டாள்!!... ;-)

டிஃப‌ன் பாக்ஸில் ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ பாட்டி வைத்த சாம்பார் ஊற்ற‌ப் ப‌டுகிற‌து!!!  பாட்டியின் மெல்லினக் கைகள் அவள் தலையைப் பின்னிவிட.... டாட்டா காட்டிவிட்டு ஓடுகிறாள் குழ‌ந்தை..... அவ‌ள் அம்மாவுக்கு அர‌புநாடு ஒன்றில் நர்ஸ் வேலை!! சொந்த‌ப் பாட்டியில்லை பேத்திக்கு ஜ‌டை பின்னிவிட‌!!!

தன்னந்தனியாக இந்த எழுபத்தியெட்டு வயதில் அந்தச் சிறய குடில்போன்ற வீட்டுக்குள் இங்கும் அங்கும் உற்சாகப் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருக்கும்  இளமைப் பாட்டியம்மாவைக் கம்பீரமாகப் பார்த்து எப்போதுமே சிரித்துக் கொண்டிருந்தார், ரொம்பவே இளமையாக, முன் அறைச் சுவற்றின் மாலைபோட்ட ஃபோட்டோ ஃப்ரேமுக்குள் தாத்தா!!! அந்த ஊரிலேயே முதன்முதலில் கார் வாங்கியவர், தன் பெருமிதச் சின்னமான அந்த வெள்ளைநிற அம்பாசிடர் காரின் பக்கத்தில் நின்று முறுக்குமீசைப் புன்னகையோடு எடுத்த படம் அது!!!


                                                                             2

சில‌மைல்க‌ள் தொலைவில் சேவ‌லுக்குப் ப‌திலாக‌ ஸ்கூல்பஸ்களின் ஹார‌ன்கள் கொக்கரிக்கும் ந‌க‌ர‌த்து அதிகாலை.... நூறுவ‌ய‌து ல‌ட்சிய‌த்துட‌ன் வேகமாய் ந‌டைப்ப‌யிற்சி செய்யும் குல்லாபோட்ட தாத்தாக்க‌ளுக்கு இடையே கொஞ்சம் இளமையாய் உண‌ர்கிறார் நிமிர்ந்து நடக்கும் ராஜ‌கோபால‌ன்....

ட்ராக் சூட், கேன்வாஸ் புதிது... வாக்கிங் ரூல்ஸ் க‌ற்றுக் கொள்ள இன்னும் கொஞ்சகாலம் பிடிக்கும்......

 "நேர‌மாகிவிட்ட‌தோ... ???"

வழக்கமான பழக்கத்தில் மனம் அலாரம் அடிக்க‌....

 "அட!! நேரமானால்தான் என்ன‌!!!"

அச‌ட்டுத் த‌ன‌மாக‌த் தெரிந்த‌து ம‌ன‌தின் இத்தனை வருடத்து வ‌ழ‌க்க‌மான‌ காலை நேர ஆஃபிஸ் ப‌த‌ற்ற‌ம்... !!

இன்னும் முழுதாக‌ப் ப‌ழ‌க‌வில்லை மனது இந்த‌ப் புது ரிட்டைய‌ர்மென்ட் வாழ்க்கைக்கு!!!.....

சீரான‌ நடை வீடு நோக்கி..... இன்னும் சிறிது நேர‌த்தில் வெயிலும் தூசியும் ப‌ர‌ப‌ர‌ப்புமாக‌ இந்த அழ‌கை ஊர் இழ‌ந்துவிடும்.... அந்த‌ப் ப‌ர‌ப‌ர‌ப்பில் அவ‌ருக்கு வேலையேதுமில்லை.. குளிரூட்ட‌ப்ப‌ட்ட தன் சொந்த அறையில் நேற்று வாங்கிய, சின்ன‌ வ‌ய‌தில் ர‌சித்துப் பார்த்த, ஹிட்ச்காக்கின் ப‌ழைய‌ ப‌ட‌ டி.வி.டி ஒன்று பார்ப்பதற்குத் தயாராக‌ உள்ள‌து!!

ஒரு வ‌ருட‌மாகியும் கூட‌ இப்போது வ‌சிக்கும் வீடு இன்னும் புதிதாக‌த் தெரிகிற‌து.... ந‌க‌ர‌த்தின் மிக‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் ஒரே ம‌க‌ன் ஜீவா வாங்கிய‌ வீடு...! திரு.ராஜகோபாலன்....  அலுவ‌ல‌க‌த்தில் க‌றாரான‌ அதிகாரி....  வீட்டில் க‌ண்டிப்பான‌ அப்பா... திட்ட‌மிடுதலும் அதைச் சிறிதும் பிச‌காம‌ல் செய‌ல்ப‌டுத்தி முடித்தலும்தான் அவர் வாழ்க்கைக் க‌தையின் ஒன்லைன்.... சொல்ல‌ப்போனால் ஒரே லைன்!

த‌ன் ஒரே ம‌க‌ன்  ஜீவா பிற‌ந்த‌போதே அவ‌ன‌து முதல் இருப‌து ஆண்டுகளை அவர் திட்ட‌மிட்டுவிட்டார்... இடையே ப‌ள்ளிக்கால‌த்தில் அவ‌னுக்கு வ‌ந்த‌ ம‌ஞ்ச‌ள் காமாலையைத் தவிர மற்ற‌ அனைத்துமே அந்தத் திட்டத்தின்ப‌டிதான் ந‌ட‌ந்தது!

ஜீவா...... எம்.பி.ஏ...சாக்லெட்டுகள், பிஸ்கெட்க‌ள் ம‌ற்றும் ஹெல்த்டிரிங்க்ஸ் தயாரிக்கும் பெரிய‌தொரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தின் ரீஜின‌ல் ஹெட்!! அலுவ‌ல‌க‌ ம‌ற்றும் சொந்த‌த் தேவைக‌ளுக்கென‌ விலையுய‌ர்ந்த‌ கார் ஒன்றை அவனுக்கென‌ ஓட்டுந‌ருட‌ன் வ‌ழ‌ங்கியிருந்தது ஜீவா ப‌ணிபுரியும் நிறுவ‌ன‌ம்....

இனிமேல் தன் ம‌க‌னின் முடிவுக‌ளின்ப‌டிதான் வாழ்க்கை என்று மனதிற்குள் முடிவெடுத்திருந்த ராஜ‌கோபால‌ன் வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்..... ரொம்பவே சந்தோஷ‌மாக‌....காரணம் இன்னும் ஒரு மாதத்தில் ஜீவாவுக்குத் திரும‌ண‌ம்!! அப்பாதான் பெண்பார்த்து முடிவுசெய்திருந்தார்  அஞ்சலியை.....  ஜீவாவின் ப‌ரிபூர‌ண‌ ச‌ம்ம‌த‌த்துட‌ன்!!

                                                                                 3

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன்புதான் ஜீவா அஞ்ச‌லியிட‌ம் முத‌ன்முறையாக‌ போனில் பேசினான்.....!!

"பேசிட்டியா??.."

வழக்கமான போலீஸ் தோரணையில் போனில் அதட்டினார் ராஜகோபாலன்.

"அப்பா...ஆஃபீஸ்ல இருக்கேன்.... அப்புறம் பேசுறேனே... ஏன் இப்படி ஆளாளுக்கு மிரட்டுறீங்க??!!!"

"இப்படித்தான் நேத்தும் சொன்ன... ...எட்டுமணிக்குப் போயிட்டு அஞ்சு மணிக்கு வரவனுக்குதான் ஆஃபீஸ் எல்லாம்... மணி ஏழரையாச்சு... அந்தப் பொண்ணுக்கு ஃபைனல்  செமஸ்டர் நடக்குதாம்... படிக்காம உனக்காகக் காத்துக்கிட்டிருப்பா...... உடனே கால் பண்ணு... Dont make me call again... "
..
....
......
........
சில நிமிடங்களில் சற்று தூரத்தில் செல்போனில் மணியடிக்கிறது....

"ஹலோ..... ஹலோ.... நான் அஞ்சலி பேசுறேன்....ஹலோ....."

"ஹம்..ஹலோ..... ஹாய் அஞ்சலி.... நான் ஜீவா... சொல்லியிருப்பாங்கனு நினைக்கிறேன்.. நான் பேசுவேன்னு..."

(மிக மெல்லிய புன்னகை உதட்டைக் கீறிக் குரலோடு கலந்தொலிக்கிறது...)"ஓ! ஹலோ...ஹ்ம்ம்ம்ம்...சொன்னாங்க... ஆனா நேத்தே பேசுவீங்கனு சொன்னாங்களே....!!"

" ம்ம்...ஆமா... நானும் கால் ப‌ண்ணேனே...!!!"

"இல்லையே..!!!"

"நேத்து இதே டைம்ல‌ ரெண்டு ரிங் ம‌ட்டும் வ‌ந்து ஒரு கால் க‌ட் ஆகியிருக்குமே!!"

இருமுனையிலும் கொஞ்ச‌மே கொஞ்ச‌ம் சிரிப்பு....
.................
........................

மீண்டும் ஜீவாவின் அப்பா அழைக்க‌... என்கேஜ்ட் டோன் கேட்டது...சிரித்துக்கொண்டே தொலைபேசியை அணைத்தார்!!!


இஷ்ட‌ப்ப‌ட்டு உழைப்ப‌தால் கஷ்டம் தெரியாமல் முன்னேறியவன் ஜீவா..... தின‌ம்தினம் ஜீவா லேப்டாப்பை மூடுவ‌த‌ற்குள் அந்த‌ அலுவ‌ல‌க‌த்தின் தொலைதூர‌ ஊழிய‌ர்கூட‌ டிராஃபிக் ம‌ற்றும் சிக்ன‌ல்க‌ளைக் க‌ட‌ந்து வீடுபோய் சேர்ந்துவிடுவார்!...... இப்போதெல்லாம் தின‌மும் வேலைமுடியும் நேர‌ம் உத‌ட்டோர‌ம் கொஞ்சம் இனிக்கிற‌து...... அஞ்ச‌லியுட‌ன் பேசுவ‌து பிடித்திருக்கிற‌து ஜீவாவுக்கு!!  ஓர் இனிமையான‌ அனுபவமாய் அறியாம‌லேயே அறிந்துகொண்டார்க‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் அழ‌காக‌!

"இந்தியாவுக்கு விளையாடுற‌ எல்லாரையும்தான் எனக்கு ரொம்ப‌ப் பிடிக்கும்... கிரிக்கெட் ஒரு டீம் வொர்க் இல்லையா!!!"

"எல்லாருமேதான் ந‌ல்லா ந‌டிக்கிறாங்க‌.... ஒவ்வொரு ப‌ட‌த்திலும் ஒவ்வொருத்த‌ரைப் பிடிக்கும்... பிடிச்சவங்கன்னா யாரைச் சொல்லுறது!!"

இதுதான் அஞ்ச‌லி!!!

இருப்பினும் ஜீவா அறிந்திருந்தான் ச‌ச்சினும், க‌ம‌லஹாச‌னும் அவ‌ளுக்குக் கொஞ்ச‌ம் ஸ்பெஷ‌ல் என்று!......  அஞ்சலியின் விருப்பங்களை அறிந்துகொள்ளும் சுவார‌ஸ்யமான சவால் எந்தவொரு கம்ப்யூட்டர் கேமும் கொடுத்திராத இன்பத்தைக் கொடுத்தது ஜீவாவுக்கு!

 ம‌ணிர‌த்ன‌ம்....ஏ ஆர் ர‌குமான்... ர‌ச‌குல்லா...... த‌யிர்சாத‌ம்..... மாதுள‌ம்ப‌ழ‌ம்.......ஸ்பைட‌ர்மேன்..... கொடைக்கான‌ல்......எஸ்.பி.பி....இன்னும் இன்னும்....இன்னும்...  எல்லாரையும் ம்ற்றும் எல்லாவ‌ற்றையும் ஏற்றுக்கொண்டு ர‌சிக்கும் அஞ்ச‌லிக்கே தெரியாது இவையெல்லாம் அவளுக்கு ஸ்பெஷ‌ல்க‌ள் என்று... ஆனால் ஜீவா ஒவ்வொன்றாக‌த் தெரிந்துகொண்டிருந்தான் பின்னாட்களில் அவ‌ள் ஆசைக‌ளை அவ‌ளிட‌ம் கேட்டு நிறைவேற்றும் அவ‌சிய‌மே இல்லாம‌ல்! அஞ்ச‌லியே த‌ன‌க்கு ரொம்ப‌ ரொம்ப‌ ரொம்ப‌ப் பிடிக்குமென்று ஒத்துக்கொண்ட‌து இர‌ண்டே விஷ‌ய‌ங்களைத்தான் ஒன்று ப‌ச்சை நிற‌ம் இன்னொன்று அவ‌ளுடைய பிரியமான பாட்டி!!!

அஞ்ச‌லியின் த‌ந்தைக்கு உயிர‌ளித்த‌ அவ‌ள் பாட்டியால் அவ‌ள் க‌ல்லூரி சேர்ந்த‌ வயதுவரைதான் உட‌ன்வ‌ர‌முடிந்த‌து... அந்த‌ இத‌ய‌ம் இறுதியாகத் துடித்த‌து அஞ்ச‌லியின் அர‌வ‌ணைப்பில்தான்...

 "உன‌க்கு ஒன்னும் ஆகாது பாட்டி... நீ என்கூட‌த்தான் இருக்க‌ப்போற‌.."

என்று தன் பாட்டியை அணைத்துக்கொண்டு அஞ்ச‌லி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த‌ இத‌ய‌த்தின் துடிப்பு தானாக‌ அட‌ங்கிப்போன‌தை அந்த‌ அணைப்பிலேயே நேர‌டியாக‌ உண‌ர்ந்தாள் அஞ்ச‌லி...... அவ‌ள் குழ‌ந்தையாக‌ இருந்த‌போது வலது கையில் சோறுபிடிக்கவும், இருகால் ஊன்றித் தரையில் நடக்கவும் கற்றுக் கொடுத்து, பின்பு தானே ஒரு குழந்தையாகிப்போய் டிவி ரிமோட்டில் சேன‌ல் மாற்றவும், மைக்ரோவேவில் சோறு சமைக்கவும் தன் பேத்தியிடம் கற்றுக்கொண்ட‌ செல்ல‌ப் பாட்டி!!! பாட்டியின் நினைவுக‌ள் ப‌சுமையாக‌வே தொட‌ர்ந்தன‌ அஞ்ச‌லியின் ப‌ய‌ண‌த்தில்.... அஞ்சலியின் 'பாட்டிகதைகள்' பொதுவாகப் பாட்டியில்லாதவர்களை ஏங்கவைக்கும் ஆனால் அவை ஜீவாவை வேறுவிதமாகப் பாதித்தன‌!!!

                                                                           4

கிராம‌த்துவீட்டில் அதே ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிப்பாப்பாவுக்கு இர‌வு உண‌வு ஊட்டிக்கொண்டிருந்தார் பாட்டிய‌ம்மா......

 திடீரென‌ப் பாட்டிக்குத் தொண்டையில் ஏதோ உத‌றல்... பேச‌ முடிய‌வில்லை.... ஒருவித‌மாக‌த் தொட‌ர்ந்து புறையேறிக் கொண்டேயிருந்த‌து... க‌தை சொல்ல‌க் க‌ஷ்ட‌ப்ப‌ட்டப் பாட்டிக்குத் த‌ண்ணீர் குடித்தும் அட‌ங்க‌வில்லை... மீண்டும் மீண்டும் விம்மியிழுத்துக் கொண்டேயிருந்தது நெஞ்சு... ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ர்களையெல்லாம் அழைத்து ஊரைக் கூட்டிவிட்டாள் குட்டிப்பாப்பா.....ஆளுக்கொரு வைத்திய‌ம் சொல்லியும் விக்கல்  அட‌ங்க‌வேயில்லை...... இர‌வு ரொம்ப‌ நேர‌ம்வ‌ரைக்கும் தொட‌ர்ந்த‌து தொண்டைக் குமுற‌ல்!!

பின்னே... இத்த‌னை நாள் இல்லாமல் கிட்டத்தட்ட‌ ம‌ற‌ந்தேபோய்விட்ட பேரன் த‌ன் பாட்டியைத் திடீரென்று நினைத்து நினைத்து அங்கே தூக்க‌மின்றித் தவித்துக் கொண்டிருக்கும்போது தொண்டை விக்காதா பாட்டிக்கு!!

அஞ்ச‌லியின் பேச்சைக் கேட்ட‌திலிருந்தே தன் சொந்தப் பாட்டியின் நினைவுகள் தொடர்ந்து வட்டமிட்டு வலிகொடுத்தது ஜீவாவுக்கு...

"என்ன பாவம் செய்தாள் என் செல்லப் பாட்டி.... இந்த வயதிலும் இப்படி தனிமைத் தண்டனையில் துவழ??"

ம‌ன‌ம் கேட்கும் கேள்விக‌ளுக்கு விடைய‌ற்றுத் தவித்தான் ஜீவா..... பாட்டிக்கு அங்கே தொண்டை விக்குவது தெரியாமல்........

பேரன்தான் நினைக்கிறான் என்று தெரிந்திருந்தாலாவது சந்தோஷமாகவே விக்கித் தீர்த்திருப்பாள் பாட்டி இங்கு இவன் தூங்கும்வரை!

                                                                                                                            
                                                                                                                              (தொட‌ரும்......)
அடுத்த பாகம் இங்கே!

Sunday, December 12, 2010

ஓர் ஒப்ப‌ற்ற‌ ச‌காப்த‌த்தின் நினைவாக‌.....

டிசம்பர் 12 விடிவதற்குள்ளாகப் பதிவிட்டுவிடுகிறேன்....

இந்த‌ நாள்... டிசம்பர் 11....

இன்று அதிகாலை உதித்த‌ அதே சூரியன், ஒருநூறு வருட இளமையுடன், இதே இந்த நன்னாளில் சுமார் 128 ஆண்டுகள் முனபு உதித்திருந்த‌போது, பூமியில் ஒரு சூரியன் சின்னதொரு அக்கினிக் குஞ்சாய்ப் பிறந்திருந்ததாம்...

மகாகவி பார‌தியாரின் 128ஆவ‌து பிற‌ந்த‌ நாளல்லவா இன்று....

எத்தனைக் காலம் தொடர்ந்து எரிந்தாலும் நெருப்பின் புகை ந‌ரைப்ப‌தில்லை...
அதுபோலத்தானோ இவ‌ரின் சிகையும் ந‌ரைத்திட‌வில்லை?  :‍‍-((

("தழல் வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!")

நூறாண்டிற்கும் மேலான முதிர்ச்சியை முப்பதாண்டிலேயே எய்திவிட்டு 'இன்னும் என்ன?' என்று தமிழால் கேட்டு நிமிர்ந்து  நின்றதால்தான் இவருக்கு முதுமையைப் படைத்திருக்க‌வே இல்லையோ, இவரை சுட‌ர்மிகும் அறிவுட‌ன் ப‌டைத்துவிட்ட‌ சிவ‌ச‌க்தி...?

ந‌ல்ல‌துதான்.... இன்னும் வாழ்ந்திருந்தால் ம‌ட்டும் கொண்டாடியிருக்க‌வா போகிறோம்...

சில‌ருடைய‌ எழுத்துக‌ள் வ‌ருங்கால‌த்துக்கான‌வை என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌.... ஆனால்....

"வருங்காலம்" என்று பார‌தியார் அவ‌ர்த‌ன் "ஞான‌ர‌த‌த்தில்" ஏறிச்சென்று பார்த்த‌தாய்ப் புனைந்த‌ க‌ன‌வைப் ப‌டித்த‌பின் உண‌ர்ந்தேன் அது பூமியில் என்றுமே வ‌ர‌ப்பெறாத‌ வ‌ச‌ந்த‌கால‌ம்
என்று...

வேற்றுகிர‌க‌த்தில் பிற‌க்க‌ வேண்டிய ஓர் உன்னத உயிர் பிர‌ம்ம‌ப் பிழையால் பூமிக்கு வ‌ந்தாரோ??? .... அச்ச‌ம் த‌விர்த்து... நேர்ப்ப‌ட‌ பேசி.... நைய‌ப்புடைத்து... ரௌத்திர‌ம் ப‌ழ‌கி... இந்த‌த் த‌லைமுறை ம‌னித‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ இனிவ‌ரும் த‌லைமுறையின‌ரும் இப்ப‌டி ஒரு ம‌னித‌ன் வாழ்ந்த‌தையே விய‌ப்பாக‌க் காணும‌ள‌வு முடிவிலாத‌ ஒரு ப‌ய‌ணத்தை, வெகுசீக்கிர‌ம் விடைபெற்றும், தொட‌ர்ந்துகொண்டிருக்கும் அணையா நெருப்பாம், உண்மையிலேயே ஒரு "வித்தியாச‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்"  ம‌காக‌வி சி சுப்ர‌ம‌ணிய‌ பார‌தியாரை அஞ்சித் தொழுகிறேன் அவர் பிறந்த இந்த நினைவுதினம் முடியுமுன்பு.....

பார‌தியாரின் அழ‌குக் காத‌ல் த‌மிழை வார்த்தைக்கு வ‌லிக்காம‌ல் மெல்லிசை ம‌ன்ன‌ர் இசைய‌மைத்து அத‌னைத் த‌ன் தேன் குர‌லால் எஸ் பி பி அவ‌ர்க‌ள் பாடிய‌ இந்த‌ப் ப‌சுந்தேன் பைந்த‌மிழ் கான‌த்தைப் பார்த்து, கேட்டு ம‌கிழ‌வும்....



தாம‌த‌மாக‌ப் ப‌திவிட்ட‌த‌ற்கு வ‌ருந்தி....

அன்புட‌ன்,

பிர‌பு எம்

Thursday, December 09, 2010

மீண்டும் ஒரு தியேட்டர் - சினிமா அனுபவம்!! :-))))

"குருவி"யைத் தியேட்ட‌ரில் பார்த்த‌ கதையைப் போல‌வே மற்றொமொரு மறக்கமுடியாத‌ தியேட்ட‌ர் அனுப‌வ‌ம் இது!! :-)))))

ஆனால் நீங்க‌ள் ப‌ய‌ப்ப‌டும் அள‌வுக்கு இதுவும் ஒரு விஜ‌ய் ப‌ட‌ம் அல்ல‌... சொல்ல‌ப்போனால் ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌ம்.... க‌ம‌லும் கௌத‌மும் கைகோர்த்த‌ "வேட்டையாடு விளையாடு" -an another episode in a police officer's life!!

"குருவி"க்குக் கூட‌வ‌ந்த‌ அதே பாச‌க்கார‌ப் ப‌ட்டாள‌த்தோட‌தான் இந்த‌ப்ப‌ட‌த்துக்கும் கிள‌ம்பினேன்....

 2006.....ம‌துரை ம‌தி தியேட்ட‌ர்...

"மதி"யில் புதுப்ப‌ட‌ம்னா  ஏஏ ரோட்டில்‌ கூட்ட‌ம் அம்மும்... மேட்னி ஷோவுக்கு டைம் வேற‌ ஆச்சு...

நாங்க‌ நாலுபேர்....

எங்க‌ளுக்கு ப‌ய‌ம் இல்ல‌....

டிபார்ட்மெண்ட்ல‌ எங்க‌ளை எல்லாரும் எங்க‌ளோட‌ சொந்த‌ பேர் சொல்லிதான் கூப்பிடுவாங்க‌!!!  (என்ன டயலாக்னு புரியுதுதானே!!)

அதாவ‌து எங்க‌ளுக்கு ஏன் ப‌ய‌ம் இல்ல‌ன்னா..... ஏற்கென‌வே டிக்கெட் வாங்கிவைக்க‌ சொல்லி தியேட்ட‌ருக்குப் ப‌க்க‌த்துல‌ ஒரு டீக்க‌டைக்கார‌னுக்கு இருப‌து ரூபா குடுத்து வெச்சிருந்தேன்!!!

"க்யூல‌ நின்னு டிக்கெட் வாங்கினா.... க‌வ‌ர்மெண்டுக்கு ரொம்ப‌ செலவு.... ட்ராஃபிக் ஜாம் ஆகும்.... போலீஸ் ப‌ந்த‌ப‌ஸ்து த‌ர‌ணும்... இப்போ பாரு ரொம்ப‌ சிம்பிள்... வெறும் இருப‌து ரூபா.... அதுவும் என் பணம்!!"

என்று நான் "காக்க‌... காக்க‌..." சூர்யா மாதிரி பில்ட்-அப் கொடுத்த‌போது ந‌ண்ப‌ர்க‌ள் யாரும் சிரிக்க‌வில்லை... :-‍(  

"வாடா... படம் போட்டுற போறான்"னு விதியை நொந்து ஒருத்தன் சொல்ல...

தியேட்ட‌ருக்குப் போயிட்டோம்...

"என் க‌ண்ணு வேணும்னு கேட்டியாமே!"

என்று "ராக‌வ‌னாக"க் கம‌ல் தன் க‌ண்ணை விரித்து காட்ட‌.. தியேட்ட‌ரில் க‌ம‌ல் ஃபேன்ஸுக்கு எல்லாம் ஏக‌க்குஷி... என்னா மாதிரி ஓர் ஓப‌னிங் ஸீன் அது!!! செம பவர்ஃபுல்.... அப்ப‌டியே க‌ண்டினியூ ப‌ண்ணி ஒரு சூப்ப‌ர் பாட்டு வேற‌...



Raghavannn...... Stay in process
Top dollar... Scurry lil's.... yeh  ready come on....
Lets go go...go....go....

என்று "கற்க கற்க" பாடலில்  ஹாரிஸ் ஜெய‌ராஜ் மிர‌ட்ட‌.... திரையில் க‌ம்பீரமாக எழும் ராக‌வ‌னைப் பார்த்து எங்க‌ளுக்கெல்லாம் "துடிக்குது புஜம்"னு கிட்ட‌த்த‌ட்ட‌  செம ஆக்ஷன் எஃபெக்ட்..... ப‌ட‌ம் போற‌ ஸ்பீட்ல‌ எங்க‌ ஹார்ட்பீட்டும் ஏறி ப‌டு ஸ்பிரிட்டா ப‌ட‌ம்பாத்துட்டு இருக்கும்போது வ‌ந்தானுங்க‌ அந்த‌ ரெண்டு வில்ல‌னுங்க‌..... (ப‌ட‌த்துல‌தான்...!!) "அமுதன்" "இளமாறன்".... அவ‌னுங்க ஸ்க்ரீன்ல வர்ற ஓப‌னிங் ஸீன்ல‌யே உள்ள‌ புகுந்து அடி வெளுக்க‌ணும்போல‌ இருக்கும்... (அப்போ நான் "சினிமா வ‌ன்முறை" தொடர் எல்லாம் எழுதல‌!!) அந்த‌ ரேஞ்சுக்கு ஃபீலாகியிருக்கும்போது வ‌ந்திச்சு இண்ட‌ர்வெல்....

"ஹேய் நீங்க‌ எல்லாம் கேண்டீன்ல‌ இருங்க‌... நான் போய் எல்லாருக்கும் கோன் ஐஸ் வாங்கிட்டு வ‌ந்துர்றேன்.... ரொம்ப‌ கூட்ட‌மா இருக்கும் ஸோ நீங்க‌ எங்க‌ இருக்கீங்க‌ன்னு மொபைல்ல ஃபோன் பண்ணி சொல்லுங்க‌!!"ன்னு சொல்லிட்டு வேக‌மா கிள‌ம்பிட்டேன்

(வேற ஒண்ணுமில்ல மொபைல்ஃபோன் வெச்சுருக்கோமாம்!!! அதான் என்னோட முதல் மொபைல்ஃபோன் ஸோ ஒன்ஸ் அகெய்ன் பில்டப்ஸ்!!)

என்ன‌தான் ஃப‌வுண்டைன் பெப்ஸி, ஃப்ளேவ‌ர்ட் பாப்கார்ன்னு (அப்போ அதெல்லாம் புதுசு!) எவ்வ‌ள‌வோ வ‌ந்திருந்தாலும் இந்த‌க் கோன்-ஐஸுக்குக் கூட்ட‌ம் குறையுற‌தேயில்ல‌.... ஹ்ம்ம்ம் "ராக‌வ‌ன்" எஃபெக்டில் டி‍‍-ஷர்ட்டை இழுத்துவிட்டுக்கிட்டு க‌ம்பீர‌மா கூட்ட‌த்துக்குள்ள‌ புகுந்து டோக்க‌ன் வாங்கி.... நாலு கோன்-ஐஸை ஸ்லோ மோஷன்ல‌ கையில் நான் வாங்கிட்டு இ...ரு...க்...கே...ன்...

திடீர்னு அங்கே ஒரே 'த‌ள்ளுமுள்ளு'....!  என்ன‌ விஷ‌ய‌ம் ஏதுன்னு தெரிய‌ல‌ திடீர்னு ஒரு நாலுபேர் கோன்-ஐஸ் வாங்குற‌ இட‌த்துல‌ ஒரே க‌லாட்டா.... தேவையில்லாம‌ மேல‌ விழுற‌து... பிடிச்சு த‌ள்ளுற‌துன்னு..... ஒரு நாலுபேர் சும்மா தேவையே இல்லாம‌ க‌லாட்டா ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சு எரிச்ச‌ல‌க் கிள‌ப்பிட்டு இருந்தானுங்க‌....

அவ்ளோதான்.... ஃபுல்ஃபார்ம்ல இருந்த எனக்கு உடனே "ரட்சகன்" நாகார்ஜுனா மாதிரி கையில நர நரன்னு நரம்பெல்லாம் கிராஃபிக்ஸ்ல மரமாய் முளைக்க....  ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட ப‌பாய்ங்..ப‌பாய்ங்..ப‌பாய்ங்னு "ராக‌வ‌ன்" தீம் மியூசிக் கேட்க‌ ஆர‌ம்பிச்சிடிச்சு....

Raghavan...... Stay in the process
Top dollar Scurry lil's,  ready come on....
Lets go go...go....go....

லெட்ஸ் கோஓஓஓஓன்னு க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டேன்..... என்கூட‌ இன்னும் ஒரு நாலு பேர் சேர்ந்துக்கிட்டாங்க‌ (ம‌துரை!!) தேவையில்லாம‌ த‌ள்ளுமுள்ளு ப‌ண்ண அந்த நாலுபேரையும் அந்த‌க் கூட்ட‌த்தில‌ க‌ரெக்டா குறிபார்த்து பிடிச்சு.... த‌ள்ளிவிட்டு...ஷார்ப்பா லுக்கெல்லாம் விட்டு அப்புற‌ப்ப‌டுத்திட்டோம்...

ஆர‌ம்ப‌த்துல் அந்த லுங்கி கட்டுன லோக்கல் கும்பல் "ஊய்ய்...ஓய்ய்ய்"னு ச‌வுண்ட் விட்டாலும் க‌டைசியில‌ "ஸாரி பாஸு" என்று அடங்கி அப்ரூவ‌ராகி அமுங்கிப்போன‌து!!!

திடீர் ஹீரோவாகிவிட்ட‌ நாங்க‌ள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமையாய் சிரித்துக்கொண்டோம்.... ("ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே..." என்று பேக்ர‌வுண்டில் அதே "க‌ற்க‌ க‌ற்க‌" பாட‌ல் ஃபுல் வால்யூமில் கேட்டுக்கொண்டிருந்த‌து!!)

சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள் எல்லாம் ஒரு ப‌ய‌ம்க‌ல‌ந்த‌ ம‌ரியாதையுட‌ன் வெறித்த‌போது.... கால்க‌ள் த‌ரைக்குமேல் இருந்த‌ன‌......!!

அப்போதுதான் க‌வ‌னித்தேன்..... அருகில் உருவாகியிருந்த‌ அந்த‌ இன்னொரு ஹீரோ கையெல்லாம் ஒரே கோன்-ஐஸ்.....!! கோன் உடைந்து ஐஸ் ஜாமாகியிருந்த‌து......!! பின்ன‌ ச‌ண்டையில இதெல்லாம் ஜ‌க‌ஜ‌ம் தானே.....

உட‌னே ட‌க்கென்று என் கையில் பார்க்கிறேன்... நாலு கோன்-ஐஸும் ஒரு சொட்டு கூட சிந்தாமல் அப்ப‌டியே இருந்த‌து!!!

 "டேய்..பிர‌பு... எப்புடிடா?? உன்னால மட்டும்...!!!! என்ன‌மோ போடா!!!"

என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு (!) ந‌ண்ப‌ர்க‌ள் ஞாப‌க‌ம் வ‌ந்து வேக‌வேக‌மாக‌ தியேட்ட‌ர் கேண்டீனில் காத்துக்கொண்டிருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளை நோக்கி விரைந்தேன்....

"டேய்... எங்கேடா போயிருந்த இவ்ளோ நேர‌ம்?? உன் ஃபோனுக்கு அடிச்சுட்டே இருந்தோம் நாட் ரீச்ச‌பிள்னு வ‌ருது" என்று சொன்னான் நண்ப‌ன்....

சிந்தாத‌ கோன்-ஐஸை ந‌ண்ப‌னிட‌ம் கொடுத்துவிட்டு பேண்ட் பாக்கெட்டைத் துழாவினேன்.... என் மொபைலைக் காண‌வில்லை!!!!!!!!

அடித்துப் பிடித்து கோன்-ஐஸ் க‌டைக்கு ஓடினால் அங்கே யாருமில்லை எல்லாம் செக‌ண்ட் ஹாஃப் பார்க்க‌ போயிட்டாங்க‌..... ப‌க்க‌த்துல‌ ஒரு சின்ன‌ விசும்ப‌ல் ச‌த்த‌ம்...

திரும்பிப் பார்த்தால்... என் கூட‌ முளைத்திருந்த‌ அதே ஹீரோக்க‌ள்.... அவ‌ர்க‌ளின் மொபைல்க‌ளையும் காண‌வில்லையாம் தியேட்ட‌ர் மேனேஜ‌ரிட‌ம் புகார் கொடுத்துக் கொண்டிருந்தார்க‌ள்!!! (அதுல‌ ஒரு ஹீரோ இழுத்து இழுத்து அழுத‌துதான் பெரும் கொடுமை!!)

அப்புற‌ம்தான் புரிந்த‌து எங்க‌கிட்ட‌ ச‌ர‌ண்ட‌ரான‌ கூட்ட‌ம் விளையாட்டா ஒரு ச‌ண்டைய‌ போட்டு செல்ஃபோனை வேட்டையாடிட்டு போயிட்டாங்க‌ன்னு!!!!

நான் அமைதியா திரும்பிப் பார்க்க‌ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் தோள் மேல‌ கைவெச்சு ஒரு லுக் கொடுத்தார்கள் (ஆறுத‌லாம்!!) அப்ப‌டியே திரும்பி மெதுவா ந‌ட‌க்க‌த்துவ‌ங்கினோம்.... மீண்டும் ராக‌வ‌னைப் பார்க்க‌.....
இந்த‌முறை பேக்ர‌வுண்டில் ஒலித்தது இளையராஜா குரல்....

ஆமா.. அதே பாட்டுதான்........

"தென் பாண்டிச் சீமையிலே.... தேரோடும் வீதியிலே..... மான்போல‌ வ‌ந்த‌வ‌னை... யார‌டிச்சாரோ.... யார‌டிச்சாரோ.... யார‌டிச்சாரோஓஓஓஓ!!!!!......டொன்ட டொன்ட டொன்டடொய்ங் டொன்டடொய்ங்... :-(((

இதுதான் நான் தொலைச்ச மொபைல்.....அவ்வ்வ்வ்!!!!



ஃபீலிங்ஸுடன்,

பிரபு எம்

Tuesday, December 07, 2010

சினிமா வன்முறை : மினிதொடர் (பாகம் 3)


(கடந்த இரண்டு பாகங்களுக்கும் மிகவும் சென்ஸிபிளான‌ பின்னூட்டங்கள் கொடுத்து இந்தத் தொடர் தொடாத பகுதிகளையும் தொட்டு விளக்கமான கருத்துகளைப் பதிவுசெய்து ஒரு முழுமையான வடிவம் கொடுத்த ஒவ்வொரு நண்பருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!)

மீடியா, சமூகம், அரசியல், மதம் போன்ற விஷயங்களை சாடலாம் என்று களத்தில் இறங்கிவிட்டால் சாடிக்கொண்டே இருக்கலாம் உலகம் அழியும் வரை... ஆனால் அத‌ற்குமுன்னேயே முடிந்துவிட‌ப் போகும் ந‌ம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிட‌த்தையும் ர‌சனையுட‌ன் ம‌ட்டும‌ல்ல கவனமுடனும் வாழ்வ‌துதான் ஒரிஜினல் சுவார‌ஸ்யம்!!

தமிழனின் வாழ்க்கையின் ஒரு முக்கிய‌மான‌ அங்கமான‌ த‌மிழ்சினிமாவின் "பொற்காலம்" என்றால் அது தியேட்ட‌ரில் குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த‌ கால‌ம்!! நிறைமாத‌த்தில்கூட‌ சினிமாவைத் த‌வ‌ற‌விட்டுவிட‌ முடியாத‌ அள‌வுக்கு அன்று பெண்க‌ளை சினிமா க‌ட்டிப்போட்டுவைத்திருந்தது .... இன்று "பெண்க‌ளுக்கும் குழ‌ந்தைக‌ளுக்குமான‌ ப‌ட‌ம் அல்ல‌" என்று மார்க்கெட்டிங் செய்தே ஓர‌ள‌வு வெற்றியும் பெற்றுவிட்டது ஆர்.ஜி.வியின் "ர‌த்த‌ ச‌ரித்திர‌ம்!!" 

பெண்கள்தான் இப்போது டிவி சீரிய‌லில் "க‌ண்ணீர் ச‌ரித்திர‌ம்" எழுதுவ‌தில் ஆல்டைம் பிஸியாக விட்டார்களே...! பெண்க‌ளும், குடும்ப‌ங்க‌ளும் தியேட்ட‌ர் ப‌க்க‌ம் குழுமுவ‌தே குறைந்துபோய், என்ன‌ ப‌ட‌மோ யார் ஹீரோவோ... கும்ப‌லாக‌ச் சென்று விசில‌டித்துப் படம் காட்டுவதற்கே படம் பார்க்கப் போகும் கூட்ட‌மும் வெறும் இருட்டுக்காக‌ தியேட்ட‌ரில் ஒதுங்குப‌வ‌ர்க‌ளும் த‌ஞ்ச‌ம்புகும் இட‌மாக‌ தியேட்ட‌ர்க‌ள் மாறிவிட்டால்... டிக்கெட் க‌ட்ட‌ண‌ங்க‌ள் உய‌ர்வதும்.... தியேட்ட‌ர்க‌ள் ஷாப்பிங் மால்க‌ளாக‌ மாறுவ‌து ம‌ட்டும‌ல்ல திரைப்ப‌ட‌ங்க‌ளின் தர‌ம் வீழ்வ‌தும் நித‌ர்ச‌ன‌ம்தான்.....

த‌ர‌ம‌ற்ற அரிவாள், அடியாள் திரைப்ப‌ட‌ங்க‌ள் ஏன் வெற்றிபெறுகின்ற‌ன என்றால் (பின்னூட்டங்களில் நண்பர்கள் சொன்ன கருத்துதான்) உண்மைதான் ந‌ம் அடிம‌ன‌தின் அபிலாஷைக‌ளை அதீத‌ வ‌ன்முறைக் க‌ற்ப‌னைக‌ள் த‌ணிக்கின்ற‌ன‌.... சிக்ன‌லில் நம்மை நிறுத்தி ல‌ஞ்ச‌ம் வாங்கிய‌ போலீஸ்கார‌னை ஒன்றும் செய்ய‌முடியாம‌ல் போகும்போது.... ஸ்டேஷ‌ன் புகுந்து வெட்டும் ஹீரோவை எப்ப‌டி ர‌சிக்காம‌ல் இருக்கும் அட‌க்கிவைக்க‌ப்ப‌டும் ம‌ன‌ம்?? அதற்காக நாமும் யாரையும் வெட்டக் கிளம்பப்போவதில்லை...

உண்மையில் "சினிமா வ‌ன்முறை" ச‌மூக‌த்தில் பெரிய‌ அள‌வில் எந்த‌வித‌ விப‌ரீத‌த்தையும் விளைவிக்காதுதான்... அதாவ‌து "சைக்கோ"க்க‌ளை உருவாக்காது.... க்ரைம் ரேட்டைக் கூட்டாது.... ஆனால்.... ம‌ன‌ந‌ல‌ ம‌ருத்துவ‌ர்க‌ளிட‌ம் வெவ்வேறு சின்ன‌ச்சின்ன‌ வித்தியாச‌மான‌ பிர‌ச்னைக‌ளாலும், ம‌ன‌ரீதியான‌ போராட்ட‌ங்க‌ளாலும் சிகிச்சைக்கு செல்லும் டீன் ஏஜ‌ர்க‌ளின் ரேட்டைக் கூட்டிய‌தில் ந‌ம் சினிமா, சீரிய‌ல், வீடியோ கேம்க‌ளுக்குக் கணிசமான‌ ப‌ங்கில்லை என்று கூற‌முடியுமா????

சமுதாயத்தின் "க‌லாச்சார‌ சிதைவு" என்ற வார்த்தை ஒரு பெரிய விஷயமே அல்ல‌...ஏனென்றால் இன்று இல்லாவிட்டால் நாளை சிதையப் (ஆக்சுவலி மாறப்போகும்!) போகும் விஷய‌ம் அது... ஆனால் த‌னிம‌ன‌த‌ "ம‌னச் சிதைவு" என்னும் வார்த்தையோ அத்த‌னை மொழிக‌ளிலுமே ஒரு கொடூர‌மான‌ வார்த்தை....அதை நாம் மற‌ந்துவிட‌க்கூடாது.

சினிமாக்க‌ள் எப்ப‌டி வேண்டுமானாலும் வ‌ர‌ட்டும்..... த‌மிழ்நாட்டில் சென்சார் போர்டு "ஏ" கொடுத்தால் தெலுங்கில் ட‌ப் செய்து ஆந்திராவில் "யு" வாங்கி இந்தியா முழுதும் இவர்கள் ரிலீஸ் செய்ய‌ட்டும்.... நாம் தரமற்ற குப்பைகளைத் தியேட்ட‌ருக்குப்போய்ப் பார்க்க‌ப் போவ‌தில்லை... ஆனாலும் ப‌க்க‌த்துவீட்டுக்கார‌ன் புண்ணிய‌த்திலும், இருப‌து ரூபாய் ப‌ஜார் டிவிடிக‌ளாலும், ஞாயிற்றுக்கிழமை டிவியின் புதுப்படமாகவும் ந‌ம் வீடுதேடி வ‌ந்து, எடுத்த‌வ‌னுக்கும் லாப‌ம் இல்லாம‌ல் நம்வீட்டுப் பிஞ்சுகளையும் பாதித்துக்கொண்டு இருக்கின்ற‌னவே இந்த‌ சீப் க‌ம‌ர்ஷிய‌ல் ஃப்ளிக்குக‌ள்... !!

த‌ர‌ம‌ற்ற‌ எந்த‌ப் பொருளும் ம‌லிவான‌ விலையில் கிடைக்கும்போது அதை ஆத‌ரிக்காத‌ ந‌ம் குடும்ப‌ங்க‌ள்... எந்த‌த் திரைப்ப‌ட‌ம் வ‌ந்தாலும் (தியேட்டர் செல்லாவிட்டாலும்) குடும்ப‌த்தோடு டிவிடியில் பார்த்துவிடுவ‌து ஒருவேளை எல்லா ப‌ட‌ டிவிடிக‌ளும் ஒரே இருப‌து ரூபாயில் கிடைப்ப‌தாலா???

ச‌மூக‌ வ‌ன்முறைக‌ளுக்கு சினிமா கார‌ண‌மாக‌ட்டும், கார‌ண‌மாகம‌லும் போக‌ட்டும்.... சினிமா மட்டுமல்ல சமுதாயத்தில் தாக்கம் விளைவிக்கும் எந்தவொரு விஷயத்தின் அடிப்படைத் தாக்கத்திலிருந்தும் தனிமனிதன் தன்னை அப்புறப்படுத்திக்கொள்ள முடியும்..... வாழும் வ‌ரையில் ந‌ம் ம‌ன‌தை ச‌ந்தோஷ‌மாக‌வும்  ஆரோக்ய‌மாக‌வும் வைத்துக்கொள்ளும் பொறுப்பு ந‌ம‌க்கு இருக்கிற‌து அதைவிட‌ முக்கிய‌மாக‌ ந‌ம் வீட்டு இள‌ம்பிஞ்சுக‌ளின் ம‌ன‌தைப் பண்படுத்தி அடிக்கடி பழுதுபார்க்கும் க‌ட‌மை இருக்கிற‌து.... நம்வாழ்வில் / நம்வீட்டில் நடப்பவை நம்மை மீறி நடக்காதவரைக்கும்..... சினிமாவில் யார் யாரை வெட்டினாலும் ரத்தம் கொட்டினாலும் கேடு எதுவும் இல்லை என்பதுதான் நடைமுறை நிதர்சனம்...

பதில் சொல்ல யாருமே இல்லாத விஷயங்களை நோக்கி மீண்டும் மீண்டும் கேள்விக‌ள் எழுப்புவ‌தை விட நமக்கு நாமே பதிலை எழுதிவைத்துக் கொள்வதே ரொம்ப‌ ஈசியான‌ தீர்வு என்னும் நம்பிக்கையில்,
பொறுமையான‌ உங்க‌ள் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் ந‌ன்றிகள் சொல்லி "சினிமா வ‌ன்முறை" : மினிதொட‌ர் முடிவடைகிற‌து!

                                                                (முற்றும்.)

அன்புட‌ன்,

பிர‌பு எம்


பின்குறிப்பு:

க்ளைமேக்ஸ் சீன் ஹீரோ மாதிரி சீரிய‌ஸா பெரிய சொற்பொழிவை ஆற்று ஆற்று என்று ஆற்றிவிட்டேனோ!!! ரொம்ப‌ ஆற்றியிருந்தா ஸாரி சொல்லிக்கிறேன்... ;-)
சீக்கிர‌மா ஒரு ஜாலி ப‌திவு ரெடி ப‌ண்ணுறேன்!!!

Monday, December 06, 2010

சினிமா வன்முறை : மினிதொடர் (பாகம் 2)


முதல் பாகத்தில் பகிர்ந்த ச‌ம்ப‌வ‌ங்களையே இன்னும் கொஞ்சம் ஆழமாக‌ யோசித்துப்பார்த்தோம் என்றால்....  அச்சம்பவங்களில் சினிமாக்களின் தாக்க‌ம் அப்ப‌ட்ட‌மாக‌த் தெரிந்தாலும் அவற்றில் காணப்படும் கொடூரமான மற்றும் மூடமான செய‌ல்க‌ளின் மூல காரணமான மனதின் வக்கிரங்களை விதைத்ததில் சினிமா மற்றும் ஊடகங்களின் தாக்கம் இருப்பதாகத் தோன்றாது!!

மனித மனதின் வ‌க்கிரங்களும், சைக்கோத்தனங்களும், மூடத்தனங்களும் நிச்சியம் சினிமா மற்றும் ஊடகத் தாக்கங்களின் பிரதிபலிப்பில் தோன்றுவதோ அல்லது புதிதாக முளைப்பதோ இல்லைதான்.... ஆனால் அவ்வாறு தோன்றும் மிருக எண்ணங்களுக்கு இந்தத் தாக்கங்கள் ஓர் இன்ஸ்ட்ருமெண்டாகி விடுவதை நிச்சியம் எவராலும் மறுக்க முடியாது....!

அடுத்த கட்டம் செல்லுமுன் தனிமனித சைக்காலஜிகளைக் கொஞ்சம் புறம்தள்ளிவிட்டு நம் சமூகத்தின் பொதுவான‌ ம‌ன‌விய‌ல் கோணத்தில் வன்முறையின் ஆஸ்தானத்தை யோசிப்போம்...

* ஆக்ஷ‌ன் ப‌ட‌ங்க‌ளுக்கு என்றுமே மினிம‌ம் கியார‌ண்டி உள்ள‌து ந‌ம் சமுதாயத்தில்... ஃப‌ர்ஸ்ட் ஹாஃபில் ஒரு பொண்ணை நான்குபேர் கொடூர‌மாக‌ ரேப் செய்வ‌தைக் காட்டிவிட்டு அந்த‌ நாலு பேரையும் சாதார‌ண‌ ஹீரோ ச‌ட்ட‌த்துக்கும் போலீஸுக்கும் தெரியாம‌ல் புத்திசாலித்த‌ன‌மாக‌ அதே நேர‌ம் கொடூர‌மாக‌க் கொலை செய்துவிட்டால் இப்போது கூட‌ போட்ட‌காசுக்கு ப‌ங்க‌ம் இல்லாம‌ல் ப‌ட‌ம் ஓடக்கூடிய அளவு வெற்றி பெறும் ஃபார்முலாதான் இது...

* எம் ஜி ஆர் கால‌த்தில் ச‌ண்டைக்காட்சிக‌ள் க‌லையாக‌வும் வித்தையாக‌வும் அறிய‌ப்ப‌ட்டிருந்த‌தை ம‌ற‌ந்துவிட‌க் கூடாது...

* வில்லன் க‌டைசி சீனில் திருந்தினாலோ(!), அல்ல‌து "டுட்டுர்ர்ருட்டுட்டுட்டுர்ர்ர்ருட்டுர்ர்ர்" என்ற (சிரிப்புப்) போலீஸ் மியூசிக்குடன் மேலே சுட்டுக்கொண்டு "ஹேண்ட்ஸ் அப்" என்று க‌டைசி காட்சியில் காக்கிச்சட்டைகள் திடீரெனத் தோன்றி வில்ல‌ன்க‌ளை அரெஸ்ட் செய்தாலோ, அவ்வளவு பின்னோக்கிப் போவானேன்...ஹீரோ க்ளைமேக்ஸில் கொஞ்சம் சிம்பிளாக‌ வில்லனைக் கொன்றுவிட்டால் கூட ந‌ம‌க்கு இப்போதெல்லாம் டிக்கெட் வாங்கிய‌ காசுக்குப் போதுமாகிவிடுகிற‌தா?? "வில்ல‌னை சிம்பிளா கொன்னுட்டாங்க‌ப்பா.... அவ‌னை இன்னும் கொடூரமா அணுஅணுவா கொன்னுருக்க‌னும்" இதுபோன்ற‌ வார்த்தைக‌ளைப் பேசுவ‌து சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளான‌ ந‌ம்முடைய‌ வாய்க‌ள் தானே!!

ஆக ஒரு ச‌மூக‌மே வ‌ன்முறையை நேசிப்பதும் வன்முறையில் ஆசுவாசம் காண்பதும் க‌ண்கூடாக‌ இருக்கும்போது அதே சமூகத்தின் ஒரிஜினல் வன்முறைகளுக்கு "சினிமா" என்னும் கொழுத்த பணம் புரளும் "பிஸினஸ்" ஒரு ந‌ல்ல‌ இன்ஸ்ட்ருமெண்ட்டாகி இருப்பதில், சமூக அக்கறையும் கவனமும் கொஞ்சமும் இல்லாத நம் சமுதாயத்தில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?
 
இவை அத்த‌னையும் விட்டுவிடுவோம்... குற்ற‌ங்க‌ள் ம‌ற்றும் வ‌ன்முறைக்குப் பின்னால் சினிமா இல்லை என்று க‌தறிக் காசுபார்க்கும் மீடியாக்க‌ளையும் விட்டுவிடுவோம்... ப‌ள்ளிக‌ளில் மாண‌வ‌ர்க‌ள் ஒருவ‌ருக்கொருவ‌ர் போட்டுக்கொள்ளும் "ச‌ண்டைக‌ள்" ச‌க‌ஜ‌மான‌வை.....
 என் அப்பா காலத்தில் எம் ஜி ஆர் ரசிகர்களான ஸ்கூல் மாணவர்கள், சுற்றி ந‌ண்ப‌ர்க‌ள் புடைசூழ‌ பாக்ஸிங் ஸ்டைலில் "குத்துவ‌ரிசை" போட்டு ப‌ல‌த்தின் ப‌ராக்கிர‌ம‌த்தை சோதித்துக் கொண்டார்களாம் வாத்தியார் கண்ணில் படாமல்........  நான் ப‌ள்ளியில் ப‌யின்ற‌ கால‌த்திலும் அதேதான், என்ன ஒரு வித்தியாசம்... ச‌ண்டையில் அடித்துக்கொள்ளும்போது "டிஷ்யூம்" ச‌த்த‌த்தை வாயால் கொடுத்து சேர்த்துக்  கொண்டோம்!!

ஆனால்....

 இப்போது ப‌ள்ளிக‌ளில் காணும் ச‌ண்டைக‌ளைப் பார்க்கும்போது விபரீத‌மாய் இருக்கிற‌து.... க‌ழுத்தைப் பிடித்து திருகுவதும்.. ப‌ற‌ந்து வ‌ந்து மூஞ்சில் உதைப்ப‌தும்... த‌ண்ணீரில் முக்குவதுமாய் ஆபத்தான வன்முறைகள்.... இதையெல்லாம் செய்வ‌து ப்ரைம‌ரி ஸ்கூல் பிஞ்சுகள்!!!

இந்த‌ விப‌ரீத‌ம்.... குற்ற‌மில்லை.... வ‌க்கிர‌மில்லை... சைக்கோத்த‌ன‌மும் இல்லை....சொல்லப்போனால் "குழ‌ந்தைத்த‌னம்" என்று தான் சொல்லவேண்டும்......  இத‌ற்குப் முழுப்பொறுப்பும், மூல‌கார‌ணமும் எல்லாமுமே சினிமாவும் அதில் ர‌சித்து ர‌சித்துக் காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌டும் அதீத கற்பனைகளுடன் கூடிய‌ வ‌ன்முறைக்காட்சிகளே..... இத‌னை எந்த‌ ச‌ர்வே கொண்டும் காப்பாற்ற‌ முடியாது......!!

ஆனாலும்..... ந‌ம்ம‌ ச‌முதாய‌த்தில் பிழை க‌ண்டுபிடிப்ப‌த‌ற்கும் நிரூபிப்பதற்கும் நெற்றிக்க‌ண் தேவையில்லை...ஏன் சாதார‌ண‌ ந‌ம் க‌ண்க‌ள்கூட அவசியமில்லை இங்கிருக்கும் குறைகள் காண!!  எனவே "சினிமாதான் கார‌ணம்" என்று கொக்க‌ரித்தாலும், கூக்குர‌லிட்டாலும்... அது அப்ப‌டியே எதிரொலித்து  மீண்டும் கேட்க‌த்தான் செய்யுமே த‌விர‌ எதுவும் மாறாது... ஆனால் ந‌ம்மை இந்த‌த் தாக்க‌ங்க‌ளிலிருந்து அப்புற‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முடியும்.....

                                                                                                                                     (தொட‌ரும்...)

(இதேபோல ந‌ம் அனைவ‌ருக்கும் தெரிந்த‌ விஷ‌ய‌ங்க‌ளையே மீண்டும் மீண்டும் வ‌லியுறுத்தி நாளை மூன்றாம் பாக‌த்தோடு முடிவ‌டையும்)

Sunday, December 05, 2010

சினிமா வன்முறை : மினிதொடர் (பாகம் 1)

இந்த‌ திடீர் மினிதொட‌ரை ஒரு "ரத்த சரித்திர"ப் பின்விளைவாகக் கூடக் கருதலாம்...

"சினிமாவில் வன்முறை அத்துமீறும் காட்சிகளால்தான் சமூகத்தில் வன்முறை கட்டவிழ்த்து ஆடும் விகிதம் கூடிக்கொண்டே போகிறது" 

என்கிற ரீதியிலான விவாதத்தை நான் ப்ரைமரி ஸ்கூலிலிருந்து கேட்டு வந்திருக்கிறேன்... எல்லாரும்தான் கேட்டிருக்கிறோம்....

"திரையில் வன்முறைக் காட்சிகளைக் காண்பதால் மனதில் எழும் வக்கிரம் வன்முறையைத் தூண்டுமளவு ஏற்படுவதில்லை... மீறியும் நடக்கும் தாக்கங்களும் மிகமிகக்குறைவுதான்"

இதுதான் உள‌வியல் மற்றும் மீடியா துறையின் தேர்ந்த நிபுணர்கள் பறைசாற்றும் ச‌ர்வேக்களின் முடிவு...

இந்த‌ ச‌ர்வேதான் கிட்ட‌த்த‌ட்ட இன்றுவரை ஒவ்வொரு முறை இந்த‌ விவாத‌ம் எழும்போதும் ஒரே ப‌திலாக‌ இருந்து வ‌ருகிற‌து.....

மிக‌ச் ச‌மீப‌த்தில் சென்னையில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ஒன்று...
இருப‌து வ‌ய‌து பைய‌ன் ஒருவ‌ன்.... அவ‌ன் வ‌சிக்கும் அபார்ட்மெண்ட் வாட்ச்மேனை திடீரென்று அரிவாள் போன்ற‌ ஆயுத‌ம்கொண்டு கொடூர‌மாக‌த் தாக்கியிருக்கிறான்... உயிருக்கு ஆப‌த்தான‌ நிலையில் வய‌தான‌ வாட்ச்மேன் ம‌ருத்துவ‌ம‌னையில் இருக்க‌ தாக்குத‌லுக்கு அவன் சொன்ன‌ கார‌ண‌ம்... அவ‌னுக்கு ஒரு ர‌வுடிபோல‌ ஏதாவ‌து செய்ய‌ ம‌ன‌துக்குள் ஓர் உந்துத‌ல் தீவிர‌ம‌டைந்துகொண்டே இருந்திருப்ப‌தாக‌ சொல்லியிருக்கிறான்....

ம‌துரைப் புற‌ந‌க‌ர் ப‌குதி ஒன்றில் சின்ன‌ப்பைய‌ன் ஒருவ‌னை மைன‌ர் சிறுவ‌ர்க‌ள் சேர்ந்து கொலைசெய்த‌ வ‌ழ‌க்கு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்குமுன் பெரும் ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்திய‌து... திடுக்கிட‌ வைத்த‌ அந்த‌ சிறுவ‌ர்க‌ளின் வாக்குமூல‌த்தில்... கொலைசெய்து உட‌லை அப்புற‌ப்ப‌டுத்திவிட்டுப் போலீஸ் நாயிட‌ம் இருந்து த‌ப்பிக்க‌ மிள‌காய்ப்பொடியை அந்த‌ இட‌த்தில் தூவிவிட்டு வ‌ந்தோம் என்று சொல்லியிருக்கிறார்க‌ள்....

இது சில‌வ‌ருட‌ங்க‌ளுக்குமுன் ர‌யிலில் ந‌ட‌ந்த‌ உண்மைச் ச‌ம்ப‌வ‌ம்.... ந‌ள்ளிர‌வு ர‌யிலில் கூட்ட‌மில்லாத‌ ஒரு க‌ம்பார்ட்மெண்டில் டிக்கெட் செக்கிங் இன்ஸ்பெக்ட‌ர் செக்கிங் செய்துகொண்டிருந்த‌போது ஒருவ‌ன் மிக‌வும் ச‌ந்தேக‌த்துக்குரிய‌ முறையில் தோன்ற‌ அவ‌னை நெருங்கிய‌தில் அவ‌ன் வாயெல்லாம் ர‌த்த‌மாக‌ இருந்திருக்கிறது. அதிர்ச்சிய‌டைந்த‌ அதிகாரிக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிற‌து அவ‌ன் கையில் வைத்திருந்த‌ பேப்ப‌ர் ம‌டிப்பில் அவ‌ன் நாக்கை வெட்டி சுருட்டிவைத்திருப்ப‌தை அவ‌ன் காட்டிய‌போது...!!
காத‌ல்தோல்வியாம்.... எப்ப‌டியோ செய்துவிட்டான் வ‌லி தாங்க‌முடியவில்லை உத‌வுங்க‌ள் என்று எழுதிக்காட்டியிருக்கிறான்....

இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் முத‌ல் இர‌ண்டு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் செய்தித்தாளில் ப‌டித்த‌து.... மூன்றாவ‌து ச‌ம்ப‌வ‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அதிகாரியே சொன்ன‌து (என்னுடைய‌ உற‌வின‌ர்)

ஒவ்வொரு ச‌ம்ப‌வ‌த்தையும் வாசிக்கும்போதும் குறிப்பிட்ட‌ சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளின் பெய‌ர்க‌ள் நினைவுக்கு வ‌ருகிற‌தா... வ‌ர‌த்தான் செய்யும்... ஆனாலும் தேர்ந்த‌ உள‌விய‌லாள‌ர்க‌ளும், அனாலிஸ்டுக‌ளும் ஆராய்ந்து வ‌ழ‌ங்கியிருக்கும் ச‌ர்வே முடிவுக‌ள் மேலேசொன்னவை... என‌வே க‌ண்டிப்பாக‌ சினிமாவின் தாக்க‌த்துக்கும் ச‌மூக‌ வ‌ன்முறைக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இருப்ப‌தாக‌ மூட‌த்த‌ன‌மாக‌ எண்ணிவிட‌வே கூடாது.. ச‌ரியா? வெரிகுட்!

                                                                                                                                      தொட‌ரும்...
                                                                                                        (இர‌ண்டாம் பாக‌ம் நாளை..)


பின்குறிப்பு:

இந்த‌ மினி தொட‌ரை மூன்று பாக‌மாக‌ப் பிரித்து எழுதுவ‌த‌ற்கு ஒரே கார‌ணம் க‌ட்டுரையின் சைஸ்தான்..
இதில் நிபுண‌ப்பார்வையும், துல்லிய‌மான டேட்டா மற்றும் நம்பர்கள் எல்லாம் இருக்க‌ப்போவ‌தில்லை... நான் சமூகத்தில் வெறுக்கும் இர‌ண்டு விஷ‌ய‌ங்க‌ள் என்றால் அவை இந்த‌ இர‌ண்டும்தான்.... ச‌மூக‌வாழ்க்கையில் ஒரு காம‌ன்மேன் வாழ்வ‌த‌ற்கு காம‌ன்சென்ஸ் மட்டுமே போதும்..... எவ்வித‌ நிபுண‌த்துவ‌மோ, விஷ‌ய‌ங்க‌ள் மாறினால் தானும் மாறப்போகிற‌ ந‌ம்ப‌ர்களோ, க்ராஃப்களோ வாழ்க்கைக்குத் தேவையேயில்லை என்ப‌து என்க‌ருத்து... சினிமாவைக் காத‌லிக்கும், அத‌ன் தாக்க‌த்தைத் தன்னுள் உண‌ரும் எண்ண‌ற்ற‌ இளைஞ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன் என்கிற‌ ரீதியிலான‌ ஒரு குட்டிப் ப‌ய‌ண‌ம் அவ்வ‌ள‌வே.... எல்லாருக்கும் தெரிந்த‌ விஷ‌ய‌ங்க‌ள் நாளையும் நாளை மறுநாளும் தொட‌ர்ந்து வ‌ரும்.....

"ரத்த சரித்திரம்" [A] - (2010)

சூர்யாவின் கூரிய விழிகளால் ராம்கோபால் வர்மா ரத்தம் தொட்டு எழுதியிருக்கும் ஓர் உண்மை சரித்திரம்.... இந்த "ரத்த சரித்திரம்"

ஹிந்தி தெலுங்கு மொழிக‌ளில் இர‌ண்டு ப‌குதிக‌ளாக வெளிவ‌ந்த‌ க‌தையை ஒரே ப‌ட‌மாக‌ சுருக்கித்த‌ந்திருக்கிறார் த‌மிழுக்காக‌!

இர‌ண்டு ச‌ட்டி அளவுக்குக் கிண்டிய‌ கார‌க் குழ‌ம்பை கொதிக்க‌ வைத்தே ஒரு ச‌ட்டிக்கு வ‌ற்ற‌ வைத்துப் பரிமாறியிருப்பதால்... கார‌ம் காய்ச்சி எடுத்திருக்கிறது.... அதுவும் ம‌சாலா கார‌மில்லை... அசல் மிளகாய்க் கார‌ம்!!

டூ இன் ஒன் ப‌ழிவாங்க‌ல் க‌தை! வில்ல‌னும் ஒரு ஹீரோதான்... ஹீரோவும் வில்ல‌னுக்கு வில்ல‌ன்தான்!!!

பழிக்குப் பலிவாங்க அரிவாள் தூக்கும் க‌தைக‌ளின் யுனிவ‌ர்ச‌ல் விதிக‌ள் இர‌ண்டு உள்ளன‌...

ஒன்று... குத்திக் குடலறுக்கும் கத்திக்கு ர‌த்த‌ருசி திக‌ட்டிவிட்டாலும் ப‌கையையும் ப‌ழியையும் மிச்ச‌ம் வைத்துவிட்டு வ‌ர‌க்கூடாது...

இர‌ண்டு... ப‌லிபோடும் ப‌டுகொலைக்க‌ள‌த்தில் பெண்க‌ளும் குழந்தைக‌ளும் ப‌லியாக‌க் கூடாது..!

புகை மூண்டதும் இருள் வ‌ந்து சூழ்வ‌துபோல‌வே ப‌கை மூண்டதுமே அர‌சிய‌ல் வ‌ந்து சூழ்ந்துவிடுவ‌தும் ஒரு நிக‌ழ்கால‌ நித‌ர்ச‌ன‌ம்தான்...! தூக்கிவ‌ள‌ர்த்த‌ அப்பா ந‌ல்ல‌வ‌ரோ கெட்ட‌வ‌ரோ க‌ண்முன்னே கொடூர‌மாய்க் கொல்ல‌ப்ப‌ட்டு சிதைந்த‌ உட‌லாய்க் கிட‌க்கும்போது ம‌க‌ன் க‌த்தியைத் தூக்க‌த்தான் செய்வான் ர‌த்த‌ம்பார்க்க‌...  இங்கே முத‌லில் அரிவாள் தூக்கும் ம‌க‌ன் விவேக் ஓப‌ராய்... அம்மாவின் க‌ண்முன்னேயே க‌ழுத்தில் அரிவாள் இற‌க்கிச் சாக‌டிக்க‌ப்ப‌டும் அப்பாவைப் ப‌றிகொடுக்கும் அடுத்த‌ ம‌க‌ன் சூர்யா!! (வெட்டுப‌வ‌ன் விவேக் ஓப‌ராய்!) சூர்யாவோ தானும் உடனே ஆயுதம் தூக்காம‌ல் கொல்ல‌த் துடிக்கும் த‌ன் த‌ம்பியையும் அட‌க்குகிறார் த‌ன் அம்மா ம‌ற்றும் த‌ங்கைக்காக‌.... ஆனால் ப‌ழிவாங்க‌லின் இர‌ண்டாம் விதையை (!) ஓப‌ராய் மீறிவிட‌ யாருக்காக‌ சூர்யா அட‌ங்கிப்போகிறானோ அவ‌ர்க‌ளையே சித‌றிப்போன‌ துண்டுக‌ளாய்க் க‌ண்முன்னே ப‌றிகொடுத்த‌பின் ஓப‌ராயின் உயிரை வாங்குவ‌த‌ற்காக‌ ம‌ட்டுமே மீத‌மிருக்கும் உயிரைப் ப‌ணய‌ம் வைக்கிறான்..."சாகுறதுக்கு ப‌ய‌ப்பட‌வில்லை அவ‌னை சாக‌டிக்காம‌ செத்துவிடுவேனோன்னுதான் ப‌ய‌ப்ப‌டுறேன்" என்று சூர்யா உருமும்போது அந்த‌க் க‌ண்க‌ளில் ஜீவ‌னே இல்லாத கொலைவெறி மிர‌ட்டும்.... எதிரிக‌ளையெல்லாம் வேர‌றுத்துவிட்டு அர‌சிய‌லில் ஆல‌ம‌ர‌க்க‌ன்றாய் விழுதுவிடும் முய‌ற்சியில் இருக்கும் ஓபராய்க்கு எதிரியாய் வேர்விட்டு முளைக்கிறான் சூர்யா.... ஓபராய் பிழைத்தானா..... சூர்யா ஜெயித்தானா... அதுதான் ர‌த்த‌ச‌ரித்திர‌ம்!!

சூர்யா....... "நேருக்கு நேர்" ப‌ட‌த்திலும் இவ‌ரின் முக‌த்தில் இர‌ண்டு விழிக‌ள் இருந்த‌ன‌!
ஒரு ச‌ங்குப் பாலில் மிதக்கும் ஒற்றைத் திராட்சையாக மிதந்த‌ கருவிழி களங்கமில்லாத கண்ணில் அங்கும் இங்கும் உருண்டு கேமரா வெளிச்சத்துக்குக் க‌ண்கூசி கலவரப்பட்டது!  அதே சூர்யாவின் அதே பால்விழிக‌ளில்  நஞ்சைக் க‌ல‌ந்த‌து பாலாவா? கௌத‌மா?  இல்லை ராம்கோபால் வ‌ர்மாவா?? காந்த‌ச‌க்தியால் இழுத்து நிறுத்திய‌துபோல் கொலைவெறி ப‌ள‌ப‌ள‌க்கும் க‌ண்க‌ள் குத்தி நின்று மிர‌ட்டுவ‌து முற்றிலும் புதிது! சூர்ய‌வின் க‌ண்க‌ளை நேருக்கு நேர் எதிர்கொள்ள‌ கேம‌ராவின் மென‌க்கிட‌லை அந்த‌ப் பார்வையின் இன்டென்ஸிட்டியைத் திரையில் காணும்போது புரிந்துகொள்வீர்க‌ள்!

விவேக் ஓப‌ராய்.... எதிர்பார்த்திருக்க‌வில்லை இந்த‌ முக‌ம் பாரித்தால‌ ர‌விபோன்ற‌தொரு எக்ஸ்ப்ளோஸிவ் பெர்ச‌னாலிடியாக‌ இத்த‌னை ப‌வ‌ர்ஃபுல்லாக‌ வெளிப்ப‌ட்டிருக்கும் என்று... வெறியைக் காட்டுவ‌தில் விவேக் ஓப‌ராய் த‌ன்னுடைய‌ மேக்ஸிம‌ம் பொட்ட‌ன்ஷிய‌ல் காட்டியிருந்தாலும் டிஸ்க‌வ‌ரி சேன‌லில் பார்த்திருக்கும் வேட்டைச் சிங்கப் புலிக‌ளின் க‌ண்ளில் எறியும் தீயைமிஞ்சும் பார்வையால் சூர்யா இவ‌ரை ஓவ‌ர்டேக் செய்துவிடுகிறார் என்றாலும் விவேக் ஓப‌ராயின் கதாபாத்திரம் காட்டும் மெருகேறிய‌ மெச்சூரிட்டி அபார‌ம்! இறுதிக்காட்சியில் திடீரென‌க் க‌ண்முன் தோன்றி நிற்கும் சூர்யாவை நோட்ட‌ம்விடும் காட்சியில் அந்த‌க் குட்டிக் க‌ண்களால் தானும் ஏதோ செய்திருப்பார்! த‌ன‌க்கெதிராக‌ ப்ரியாம‌ணி தேர்த‌லில் போட்டிபோடுகிறார் என்று தெரிந்த‌தும் த‌ன் மீசையின் ஒற்றைமுடியை ந‌றுக்கிப்போடும் அல‌ட்சிய‌ பாடிலேங்குவேஜ் செம வில்ல‌த்த‌ன‌ம்!

சுதீப் கிடைத்திருக்கும் ரொம்ப‌ச் சிறிய‌ வாய்ப்பிலும் த‌ன்னுடைய‌ மேன்லின‌ஸ்ஸைக் காட்டியிருக்கிறார் ஆனால் இழுத்துவைத்து வீண்டிக்க‌ப்ப‌ட்டிருக்கிறார் இந்த‌ க‌ன்ன‌ட‌ ஸ்டார்!  மேக்க‌ப் இல்லாத‌ இய‌ல்பான‌ ப‌ள‌ப‌ள‌ப்பினால் ப்ரியாம‌ணி க‌வ‌ர்கிறார் த‌ன்னுடைய‌ பாத்திர‌த்தை ந‌ன்றாக‌வே செய்திருக்கிறார்... குத்துவிள‌க்கைப் போல‌ ராதிகா ஆப்தே இர‌ண்டு காட்சியில் ம‌ட்டும் ந‌ட‌க்க வாய்ப்பு... நிறைவாக‌த் துடித்திருக்கும் ஹோம்லி ப்யூட்டி! கிட்டி, கோட்டாசீனிவாச‌ராவ், வித்யார்த்தி என‌ எல்லாமே பெரிய‌ டிக்கெட்டுக‌ள் சின்ன‌ச் சின்ன‌ ச‌ந்துபொந்துக‌ளிலும் புகுந்து மிர‌ட்டுகின்றன‌ர் பெருசுக‌ள்!!

ராம்கோபால் வ‌ர்மாவின் இய‌க்க‌த்தை ர‌சித்தேன்... நாட்டில் ஒரு காட்டுவாழ்க்கையைப் ப‌ட‌ம்பிடித்திருக்கும் மனித‌ர் இவ்வ‌ள‌வு ரா ஆக்ஷ‌னை சாவுவிழுங்கும் த‌ருண‌த்தின் விழிக‌ளின் மிர‌ட்சியாலும், வெறியில் ஆடும் முக‌த்தின் த‌சைக‌ளாலும், ஒவ்வொரு கொலையின் வீரிய‌த்தையும் வெவ்வேறு கோண‌த்தில் காட்சிப்ப‌டுத்தி புஜ‌ங்க‌ளைத் துடிக்க‌வைத்திருக்கிறார் பார்வையாள‌னுக்கும்! நடிக‌ர்க‌ளை ந‌ம்பி க்ளோஸ‌ப் காட்சிக‌ளாலேயே ஃபோர்ஸ் காட்டியிருப்ப‌து AN RGV Film! என்று மார்த‌ட்டுகிற‌து!

இசை... பாடல்க‌ளையே பின்ன‌ணி இசையாய்ப் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்ப‌து ப‌ட‌த்தைக் காப்பாற்றியிருக்கிற‌து (ஒரு பாட‌ல்காட்சி இருந்திருந்தால் கூட‌ ப‌ட‌ம் ப‌ப்ப‌ட‌ம்தான்!) அதைத்த‌விர‌ சொல்லிக்கொள்ளும்ப‌டி இசையில் ஒன்றும் இல்லை ப‌ட் பாஸ்மார்க் வாங்கியிருப்ப‌து நித‌ர்ச‌ன‌ம்..... ஃபெயிலாவ‌து ர‌தோட்டின் ஒளிப்ப‌திவுதான் :-( க்ளோஸ் அப் காட்சிக‌ளில் துல்லிய‌த்தைத் த‌வ‌ற‌விட்டிருக்கிறார்.... கோண‌ங்க‌ளில் இய‌க்குன‌ரின் க‌ண்ணாக‌ அவ‌த‌னித்து இருந்தாலும் ஆழ‌ப்பார்வையைக் காட்ட‌ ச‌ரியான‌ லென்ஸ்க‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌த் த‌வ‌ற‌விட்டுவிட்டாரோ என‌த் தோன்றுகிற‌து.... சூர்யா- விவேக் ஓப‌ராய் ச‌ந்தித்துக்கொள்ளும் காட்சியில் இருட்டுட‌ன் கைகோர்த்து விளையாடியிருப்ப‌தை ம‌ட்டும் ர‌சிக்க‌முடிகிற‌து... சூர்யாவின் க‌ண்க‌ளிட‌ம் கேம‌ரா தோற்றுப்போகிற‌து... ர‌தோட் க‌லர் மற்றும் ஷேட்க‌ளுட‌ன் இன்னும் கொஞ்ச‌ம் த‌னித்துவ‌மாக‌ வெளிவ‌ந்திருந்தால் ர‌த்த‌ம் இன்னும் சூடாக‌க் கொத்திருக்கும்.....

எடிட்டிங் மிக‌ ந‌ன்று... இர‌ண்டு திரைக்க‌தைக‌ளாக‌ எழுதி இயக்கிவிட்டு மீண்டும் எடிட்ட‌ர் ரூமில் உட்கார்ந்து க‌த்திரிபோட்டு ஒரு திரைக்க‌தையாய் எப்ப‌டித்தான் வ‌டித்தாரோ ஆர்ஜிவி! இருப்பினும் மாறிமாறி வெட்டுவ‌தும்... ஸ்கெட்சுகூடப் போடாம‌ல் சினிமாத்த‌ன‌மாக‌ அடுத்த‌டுத்து போட்டுத்த‌ள்ளுவ‌தும் நிச்சிய‌ம் டெம்போ குறைந்து நெழிய‌வைத்துவிடுகிற‌து.... ஸ்லோமோஷ‌ன் காட்சிக‌ளையெல்லாம் நார்ம‌ல் ஸ்பீடில் காட்டியிருந்தால் ப‌ட‌த்தின் நீள‌ம் பாதியாய்க் குறைந்திருக்கும்! அந்தள‌வுக்கு ப‌ட‌ம்முழுக்க‌ ஒன் பை டூ ஸ்பீடில்தான் ந‌க‌ர்கிற‌து.... அடிக்க‌டி த‌லைகீழாக‌க் சுழ‌லும் கேம‌ரா  ஆமைவேகத்தில் சுழன்று க‌ழுத்தை நெறிக்கிற‌து... ஒரு கேம‌ரா யுக்தியாக‌ முய‌ற்சி செய்திருக்கும் விஷ‌ய‌ம் தியேட்ட‌ர் ஆப‌ரேட்ட‌ரின் த‌வ‌றோ என்று யோசிக்க‌ வைப்ப‌து அப‌த்த‌ம்!

 ப‌ழிவாங்க‌லைப் ப‌ட‌ம் வ‌ரைந்து விள‌க்குவ‌த‌ற்கு இந்திய‌ சினிமாவின் ரைட் ப‌ர்ச‌ன் ராம்கோபால்வ‌ர்மாதான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் என்று சொல்ல‌முடியும்.... அவ்வ‌ள‌வுதான்!

நான் ப‌ல‌ காட்சிக‌ளை ர‌சித்தேன் சில‌ ச‌ம‌ய‌ம் நெழிந்தேன்... சூர்யாவை ம‌ட்டுமே முழுக்க‌ முழுக்க‌ வெறித்து ர‌சித்தேன்... அடுத்த‌ சூர்யாவின் ப‌ட‌த்துக்கு அநேக‌மாக‌ அவ‌ர் திரையில் தோன்றும் முத‌ல்காட்சிக்கு விசில் அடிப்பேன் என்று நினைக்கிறேன்...!

மீண்டும் ஒருமுறை.....

இது சூர்யாவின் விழிக்கூர்மையில் ர‌த்த‌ம் தொட்டு எழுத‌ப்ப‌ட்டிருக்கும் ஓர் உண்மை ச‌ரித்திர‌ம்!

ர‌த்த‌ச‌ரித்திர‌ம் - Worth watching but watch at your own risk... ;-)

அன்புட‌ன்
பிர‌பு எம்