Friday, April 15, 2016

தெறி [U] (2016)




படு கலர்ஃபுல்லாக ஒரு காக்கிச்சட்டையை விஜய் சைஸுக்கு ஃபிட்டாகத் தைக்க முயன்றிருக்கிறார் அட்லீ..... அளவெடுத்துத் தைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவசரத்துக்கு அங்கங்கே சில ரெடிமேட் பிட்டுகளை சொருகியிருப்பதுதான் உருத்தல்!

அழகான கேரளாவில் ஒரு மழை நாளில் அழகுக் குட்டிச் செல்லம் நைனிகாவோடு மென்மையான விஜய் அறிமுகத்தில் இருந்து தூறலாகத் துவங்கும் திரைக்கதை மெல்ல மெல்ல வேகமெடுக்கும் ஒரு மழையைப் போல இதமாகக் கதாபாத்திரங்களையும் அவர்களுக்கு இடையிலான பிணைப்புகளையும் குழப்பமின்றிக் கூறிவிட்டு சட சடவென வேகமெடுக்கத் துவங்குகிறது..... இடையே பாட்ஷா ஸ்டைலில் ஒரு ட்ரான்ஸ்ஃபார்மேஷன் சீனில் ஆக்ஷன் இடிமுழங்க‌ ஃப்ளாஷ்பேக்கில் படம் கனமழையாக உருவெடுத்து போலீஸ் அவுட்ஃபிட்டில் அடித்து ஊற்றுகின்றது.....! இடைவேளை வரை இடைவிடாது பெய்யும் கோடைமழையாக மகிழ்விக்கும் திரைக்கதை செகண்ட் ஹாஃபில் வெறும் மேகமூட்டமாகிப் போய்விடுவதுதான் பிரச்னையென்றால் ஒருகட்டத்தில் அதுவும் விலகி வெயில் அடிக்கத்துவங்கும்போது கூட திரைக்கதையை ரிப்பேர் செய்ய ஆளே இல்லாமல் ஆவரேஜ் படமாக முடிந்துவிடுவதுதான் மைனஸ்!

மிடுக்கும் துடிப்புமான துருதுரு டெபுடி கமிஷ்னர் கதாபாத்திரத்தில் விஜய்....... கம்பீர மிடுக்கில் மிரட்டினாலும் சட்டெனக் கண்ணீர் துளிர்த்திடும் ஓர் அலாதியான கேரக்டர் விஜய்க்கு..... விஜய் புகுந்து விளையாடியிருக்கிறார் ....... பிரம்ம்ம்மாத பெர்ஃபார்மென்ஸ் விஜயிடமிருந்து! விஜய்க்கு இணையாக அடுத்த முனையில் அனாயசமாக பவுண்டரிகளை விளாசி ஸ்கோர் அள்ளுகிறார் ஜாலி அம்மாவாக வலம்வரும் ராதிகா! சுனைனாவைப் பெண் பார்க்கப் போகும் காட்சியில் தனுஷ் ஸ்டைலில் விஜய் ஆடும் லுங்கி டான்ஸெல்லாம் செம ரகம் என்றால் அதைத்  தொடர்ந்து சிக்னலில் பிள்ளைகளைப் பிச்சையெடுக்க வைக்கும் ரவுடிகளை விஜய் மெட்ராஸ் ட்ராஃபிக்கில் புகுந்து அடிப்பது சூப்பர் த்ரில்..... அப்படியே சமந்தா செக்மண்ட் ஸ்டார்ட் எடுக்க படு ஃப்ரெஷ்ஷாக ஜில்லென்று ஒரு காதல்..... சிலகாலம் முன்பு பிரபல ஐடி கம்பெனியில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தைப் பிரதிபலிப்பது போல‌ ஒரு பிரச்னை சரியான நேரத்தில் வந்து முட்டுகிறது..... திடீரென மாயமாகும் ஒரு சாஃப்ட்வேர் பெண்ணைத் தேடத் துவங்குகிறார் விஜய்.... பத்து மணி நேரத்தில் அக்யூஸ்ட் யாரென விஜய் கண்டுபிடித்துவிட்டாலும் அடுத்த நாள் காலை மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண் மீட்டெடுக்கப் படுகிறாள்..... அவளது மரண வாக்குமூலத்தை மையமாக வைத்துக்கொண்டு விஜய் எடுக்கும் ஷார்ப் ஆக்ஷன் படத்தில் சர்ப்ரைஸ் பேக்கேஜ்...... விளைவு மோசமான வில்லன் மகேந்திரனுடன் மூக்கு உரசல் துவங்குகிறது! காக்கிச்சட்டை கான்ஃபிடன்ஸில் மகேந்திரனைப் படு அலட்சியமாக விஜய் அணுகுகினாலும் நேரம் பார்த்து அடிக்கும் வில்லன் கும்பல் விஜய்யின் வாழ்வையே சின்னாபிண்ணமாக்கிவிடுகின்றது! சாந்தமான ஜோசஃபாக உருமாறும் விஜய் அழகு மகளுடன் அமைதியாய் ஓர் ஆனந்தப் பயணம் துவங்குகிறார்........ வில்லன் மீண்டும் வர ரிவெஞ்ச் படலம்  துவக்குகிறார்! பழிவாங்கல் படலத்தில் விஜய் எடுக்கும் "கோஸ்ட்" அவதாரம்தான் போதுமான டீடெயிலிங்கோ லாஜிக் மெனக்கெடல்களோ இல்லாமல் எடுபடாமல் போய்விடுகிறது....!

கதையில் புதுமை இல்லாதது சறுக்கல்தான் என்றாலும் முதல் பாதியில் தெளிவான திரைக்கதை மற்றும் சுவாரஸ்யமான வசனங்களுடன் படம் நன்றாகவே ஈர்க்கின்றது.... விஜய், சமந்தா, ராதிகா, ஏமி, மொட்டை ராஜேந்திரன் எனப் பாத்திரங்களின் பெர்ஃபெக்ட் பங்களிப்பு "தெறி"க்கு அசுரபலம் சேர்க்கிறது....... இவர்களையும் தாண்டி சர்ப்ரைஸ் தருவது இரண்டு பேர்..... டெரர் வில்லன் இயக்குனர் மகேந்திரன் மற்றும் குட்டி டார்லிங் நைனிகா!
மழலை மாறாத பேச்சால் காண்போரைக் கட்டிப் போட்டுவிடுகிறாள் குட்டி மீனா....... உதட்டோரப் புன்னகைச் சுழிப்பும் கள்ளம் கலக்காத கண்களும் அள்ள அள்ளக் குறையாத அழகுமாய் அத்தனையையும் தாண்டித் தனி விருந்து படைத்திருக்கிறாள் க்யூட் பேபி நைனிகா! நைனிகாவுக்காகவே ஒருமுறை தனியாக பார்க்கலாம் "தெறி"யை என்றால் அது மிகையில்லாத வாக்கியமே! இத்தனை இயல்பாக ஓர் அரசியல் வில்லனா என அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறார் மகேந்திரன்.... வில்லாதி வில்லத்தனத்திற்கு ராயல் சல்யூட் ஆனால் மிகக் குறைந்த காட்சிகளே வருவது ஏமாற்றம்! சமந்தாவின் அழகும் யதார்த்த நடிப்பும் சிம்ப்ளி சூப்பர்ப்!

ரவுடிகளுக்கு விஜய் ஸ்கூலில் வைத்துக்கொடுக்கும் ட்ரீட்மெண்ட்...... குட்டிப் பாப்பா முகத்தில் தண்ணீரை அடித்துவிடும் இன்னோவாவை விரட்டிப் பிடிக்கும் ஓபனிங் காட்சி....... பாடல்களில் வரும் மான்டேஜ் காட்சிகள் என குட்டி குட்டி சுவாரஸ்யங்கள் படம் முழுக்க நிரப்பியதற்கு அட்லீயைப் பாராட்டவேண்டும்..... குடும்பம் மற்றும் காதல் காட்சிகளில் அட்லீயின் அபார வீச்சு படம் முழுக்க ரசிக்கவைக்கிறது.... பாதிக்கப்படும் சாதாரண மக்களின் வேதனைகளுக்கு ஒரு போலீஸாக விஜய் கலங்குவதாய் அமைத்திருக்கும் காட்சிகளும் அழகானவையே.... ஆனாலும் மகேந்திரன் போல ஒரு வலுவான வில்லன் கதையில் இருந்தும் விஜய்-மகேந்திரன் மோதல் எபிசோடுகள் சுமார் ரகமாகிப் போய்விட்டதுதான் ஏமாற்றம்......!

டெக்னிகலாக "தெறி"ஒரு ஸ்பெஷல் ட்ரீட்...... உலகின் மூலை முடுக்கெல்லாம் தேடி சொர்க்கலோக லொகேஷன்களைக் கவர்ந்துவருவது ஷங்கர் ஸ்டைல் என்றால் அதையே சிஜி (CG) மூலமும் செட்டிங் மூலமும் சற்றும் குறைவின்றிப் படம்பிடித்து கண்களைக் குளிர்வித்திருக்கிறார் சிஷ்யன் அட்லீ! ஜார்ஜின் ஒளிப்பதிவு பஞ்சபூதங்களிலும் புகுந்து புறப்பட்டு காட்சிகளைக் கேப்சர் செய்திருக்கிறது.... ரூபனின் எடிட்டிங் படத்தின் வேகத்துக்கு உதவியிருந்தாலும் திரைக்கதையில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க உதவவில்லை......! ஜிவி பிரகாஷின் 50வது படத்தில் பாடல்களில் ஸ்பெஷல் என்று எதுவும் இல்லை..... பின்னணி இசை மாஸ் பட டெம்ப்ளேட்டில் ட்யூன் பிடிக்கிறது! கலர் கரெக்ஷனும் காஸ்ட்யூம் டிஸைனிங்கும் "தெறி"யின் கண்கவர் ப்ரெசன்ட்டேஷனுக்கு பெரிய சப்போர்ட்! மேக்கிங்கில் கவனம் சிதறாது கடினமாய் உழைத்திருக்கும் அட்லீ திரைக்கதையில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் போதும் படம் தெறிக்கவிட்டிருக்கும்..... அந்தவகையில்  ஏமாற்றம்தான் அட்லீ!

தெறியாகத் துவங்கி வெறியாடித் தீர்த்திருக்க வேண்டிய படம் வெறிச்சோடிப் போய்விடுவதுதான் அதிர்ச்சியே தவிர முதலுக்கு மோசமில்லை............ குடும்பத்தோடு சம்மருக்கு "தெறி" விசிட் அடித்தால் டிக்கெட் + பார்க்கிங + பாப்கார்ன் செலவுக்கு நஷ்டமிருக்கப் போவதில்லை......!

எப்படியெல்லாமோ "தெறி"க்கப் போகுது என எக்ஸ்ட்ராடினரியாகத் துவங்கி வெரி வெரி ஆர்டினரியாக முடிகிறது தெறி.... இருந்தாலும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் தெறிக்கும் நல்ல ஒரு ஃபேமிலி என்டர்டெயினர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.......

அன்புடன்,
பிரபு எம்

No comments:

Post a Comment

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)