எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Friday, July 19, 2013
கவிஞர் வாலி - நீங்காத நினைவுகள்
வயோதிகத்தால் இறுதிவரை வென்றெடுக்க முடிந்திராத "வாலி"பத்தைக் காத்திருந்து முடித்தழைத்துச் சென்றிருக்கின்றது மரணம்!
"எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களுள் -
எமனும் ஒருவன்......
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !"
இவை.... கவியரசர் கண்ணதாசனின் மரணத்தைப் பற்றி அன்னாரின் இரங்கல் கூட்டத்தில் "கண்ணதாசனே.... என் அன்பு நேசனே...!" என இன்று மரித்துவிட்ட கவிஞர் வாலி பாடிய இரங்கல் கவிதையின் கடைசி வரிகள்!
ஆனால்.... வாலியின் மரணத்தில் என்னால் எமனை எழுதப் படிக்கத் தெரியாதவனாகப் பார்க்கமுடியவில்லை....... ஆயிரமாயிரம் அற்புதக் கற்பனைகளை சுத்த ரத்தம் பாய்ச்சி செழிப்பாய் வளர்த்தெடுத்த அந்த இதயம் தன்னியக்கம் மங்கிய நிலையில் இத்தனை நாளாய்த் துவண்டிருந்த நிலை காணப்பொறுக்காதுதான் எமன் இந்த அற்புதக் கவிதையைப் பொத்திவைத்துப் படித்துமகிழத்தான் கசங்காமல் அள்ளிச்சென்றிக்கிறான் என்று நினைக்கிறேன்!
காலமானது மறைந்திருந்து தாக்கிய முதுமை அம்புகளால் சற்றும் சரிந்துவிடாத இந்த நவீன வாலி..... மரண சுயம்வரத்தில் வாழ்க்கை வில்லை வீரமாய் வளைத்து வென்றுகாட்டியதில் என்றும் இராமன்தான்!
"மீசையில்லா பாரதி நீ.... தாடியில்லா தாகூர் நீ!" என்று கண்ணதாசனைப் பாடிய கவிஞர் வாலி முன்பொரு தொலைக்காட்சிக் கவியரங்கில் பாரதியைப் பற்றி " முண்டாசு கட்டிய பட்டாசு...... செருப்பணிந்து நடந்த நெருப்பு....... லட்சுமி ஈன்றெடுத்த சரஸ்வதி......... திருவல்லிக்கேணி யானை தின்ற கரும்பு......" என்று பாடித் துதித்த வரிகள் போல இத்தனை எளிமையாய் பாரதியாரை எவரும் உணர்த்திப் பாடியதில்லை என்பேன்!
ஒரு இசை மேடையில் ஏ ஆர் ரஹ்மானைப் பற்றி........"ஹாலிவுட்..... பாலவுட்...... கோலிவுட் என மூன்றுவுட்டுகளையும் தன் இசையால் கொள்ளையடித்திடும் ரஹ்மான் ஒரு ராபின்ஹுட்!" என்று தடால் டைமிங்கில் வார்த்தை முத்துக்களைச் சிதறிவிட்டுச் சென்ற கம்பீரம் இன்றும் கண்களைவிட்டு அகலமறுக்கிறது!
பின்பொரு விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தரைப் பற்றி ஒரே வரியில் சட் டெனச் சொன்னார்..... "ரஜினி - கமல்.... இருவரும் கே.பி ஈன்றெடுத்த பேபீஸ்" என்று!
கே பாலச்சந்தரின் இயக்கத்தில் அனாயசமாக நடித்துக் கலக்கிய நடிகர் வாலியின் ரசிகன் நான்! தமிழ்த் தொலைக்காட்சிகளில் வந்த ஓர் அருமையான தொடரான "கையளவு மன்சு"வில் துருப்புச் சீட்டாகக் கதை முழுதும் பயணிக்கும் குறும்பும் அதே சமயம் அழுத்தமுமான பாத்திரம் கவிஞர் வாலிக்கு....... ஒரு முழுநேர நடிகருக்குக் கூட அத்தனை இயல்பாக அந்தப் பாத்திரத்தை நடித்துக் கொடுத்திருப்பது எளிதானதாக இருந்திருக்காது ஆனால் அந்தத் தொடர் முழுக்க வாழ்ந்திருந்தார் வாலி! இன்றும் ஞாபகம் இருக்கிறது வாலி வரும் எபிஸோடுகளை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன் அந்த நாட்களில்!
அமரர் சுஜாதா தன் மாணவப் பருவத்தில் ஸ்ரீரங்கத்தில் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் பிரதான கார்ட்டூனிஸ்டாக இருந்தவர் கவிஞர் வாலிதானாம்! அப்போது கார்ட்டூனில் கோலொச்சிய மாலி போல் வரவேண்டும் என்று ஒரு தோழன் பரிந்துரைத்த பெயர்தான் "வாலி" என்றுகூட எங்கோ எதிலோ எப்போதோ படித்த ஞாபகம்!
எம் எஸ் வி, இளையராஜா, அண்ணா, கருணாநிதி,எம் ஜி ஆர், பாலசந்தர், ரஜினி கமல் எனப் பலரைப் பற்றியும் தன் எண்ணத்தில் எழுச்சிபெற்ற ஏற்றமிகு நினைவுகளையெல்லாம் மிக இயல்பாக " நினைவு நாடாக்கள் ஒரு ரீவைண்ட்" எனத் தொகுத்து எழுதிவந்தார்......
இறுதிவரை நடுக்கமடையாத கரங்கள் பேனா பிடித்து எழுதிய தீராத கவிதைகள் வாலிபக் கவிஞரின் பெயரை வானளாவ எதிரொலித்துக் கொண்டுதானிருக்குமென்றாலும் இனிவரப்போகும் இசைத் தலைமுறைகள் இமைக்கும் நேரத்தில் இசைக்குப் பாட்டெழுதித்தரும் இந்த இஷ்ட தேவனின் இழப்பை ஈடுசெய்யத் தவித்துத்தான் கிடக்கும் இனிவரும் காலமெல்லாம்........
ஓய்ந்துவிட்ட உடல் அஞ்சலிக்காக அசைவின்றி உறங்கிக்கொண்டிருக்க ...... அந்த இளமை உள்ளமோ இசையோடு இணைந்த தன் பாடல்கள் பயணிக்கும் அதே காற்றில்தான் கரைந்திருக்கின்றது..... வாலிபக் கவிஞரின் உற்சாகத் தரிசனங்கள் என்றும் நமக்கு இலவசமே அவர் கலந்திருக்கும் காற்றோடு இசையாய்.... இசையோடு கவியாய்!
கவியை வணங்கி.....
பிரபு எம்
Subscribe to:
Posts (Atom)
