Saturday, August 17, 2013

ஐந்து ஐந்து ஐந்து [U/A] (2013)



தொடர்ந்து ஐந்துக்கு ஐந்து நட்சத்திரங்களையும் பெறுகின்ற திரைக்கதைகளாகத் தேர்ந்து இயக்கும் சசி, இந்தமுறை ஏனோ ஐந்துக்கு மூன்று போதுமென்று த்ரீ ஸ்டார்ஸை மட்டும் குறிவைத்துத் (!) தூக்கியிருக்கிறார்!  தனது வழக்கமான மெல்லின சினிமாவைத் தாண்டி இம்முறை வல்லினத்தில் கதை பிடித்திருந்தாலும் யரல"வளவள"ல திரைக்கதையால் படம் இடையினமாகப் போனதுதான் வருத்தம்!

பேரலல் (Parallel)  திரைக்கதையில் சாக்லேட் பாயாக பரத், புதுமுகம் மிருத்திகாவை காதலிக்கும் சுவாரஸ்ய அத்தியாயங்கள் ஒருபுறமிருக்க மற்றொருபுறம் ஆக்ரோஷ பரத் இன்வெஸ்டிகேட் செய்வது தான் காதலித்தது நிஜமா? தன் காதலி உண்மையா அல்லது கற்பனையா? என்று! பரத்தைப் பரிசோதிக்கும் டாக்டரும் பரத்தின் அண்ணன் சந்தானமும் லியானா(மிருத்திகா) என்று ஒரு பெண்ணே நிஜமில்லை என்று சத்தியம் செய்யத் தன்னைக் காதலித்து ஒரு விபத்தில் இறந்துபோன பெண்ணே நிஜமல்லையோ என்று துடிக்கிறார் பரத்........ ஒருகட்டத்தில் பரத் தன்னைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள போலி சதுக்கங்களையெல்லாம் கண்டறிய, அவற்றை உடைத்தெறியும் முயற்சியில் ஒருவழியாக சைக்கோபாத் வில்லனைக் கண்டுபிடிக்கிறார் அதன்பிறகு குழப்ப‌ முடிச்சுகள் எல்லாம் ஒன்றொன்றாக அவிழ இறுதியில் எய்ட் பேக் இரும்பு உடம்புடன் பரத் தடைகளைத் தகர்த்து காதலியை மீட்கும் ஆக்ஷன் காம்போதான் எதற்கிந்த பெயர் என்று இறுதிவரை விளங்காத "ஐந்து ஐந்து ஐந்து"!

வித்தியாசமான கதையில் விஷயம் முழுக்கத் தெரிந்த கதாபாத்திரங்கள் திரைமறைவில் இருந்து ஆட்டுவிக்க முக்கியப் பாத்திரம் உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் துடிப்பதாக அமைந்திருக்கும் திரைக்கதையில் எதுவுமே புரியாமல் படம் பார்க்கும் ஆடியன்ஸால் சஸ்பென்ஸை பரத்துக்கு முன்னாடியே யூகித்துவிடமுடிவது மட்டுமே குறை திரைக்கதை தரமாகப் பின்னப்பட்டிருந்தாலும்!

பரத்.... ஒரே படத்தில் பல பரிமாணங்கள் காட்ட ஸ்கோப் இருக்கும் படு வெயிட்டான பாத்திரம்! மொத்தப் படத்தின் கணத்தையும் தன் வலிமையான தோள்களால் சுமந்திருக்கிறார் நிறைவாக! தன்னைச் சுற்றிலும் பொய்யாகப் பின்னப்பட்டிருக்கும் மாயவலையில் சிக்குண்டு தவிக்கும் காட்சிகளிலும், தன்னிடம் "பவர்" இருக்கின்றது என்று மிருத்திகாவுடனான இன்னொசன்ட் லவ் எபிஸோடிலும் பரத்தின் உடல்மொழி கச்சிதம்! வாய்ஸ் மாடுலேஷனில் மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்! எய்ட் பேக் பாடிபில்டிங் எல்லாம் படத்தின் மார்க்கெட்டிங்குக்கும் பரத்தின் ஃப்யூச்சரிக்கும்தான் உதவியிருக்கிறதே தவிர படத்துக்கு எதற்கு என்பது கேள்விக்குறியே! எப்படிப்பார்த்தாலும் பரத்துக்கு இந்தப் படம் ஒரு பவர் பேக்ட் ஒன் மேன் ஷோ!

மிருத்திகா..... குழந்தைத்தனம் கண்களில் இன்னும் மிச்சமிருக்கும் குட்டி அழகி! குறும்பு கொப்பளிக்கும் கண்கள் விழித்துக்கொள்ளும்போதெல்லாம் உற்சாகமும் சேர்ந்து தொற்றிக்கொள்கிறது! நைஸ் கேர்ள்!

சுதேஷ் பெர்ரி... வித்தியாச வில்லன்.... கண்களை மறைத்துக்கொண்டு உடலாலும் தமிழ் தடுமாறும் பேச்சாலும் வயலன்ஸ் காட்டும் சைக்கோ வில்லன்.....  க்ளீன் பெர்ஃபார்மென்ஸ்

சந்தானம் இந்தப் படத்தில் சந்தானமாக மிகச்சொற்பமான காட்சிகளில்தான் காமெடியனாக‌ சிரிக்கவைக்கிறார்.... மற்றபடி அவருக்கு இதில் சப்போர்ட்டிங் ரோல்தான் அதிகம்!

சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் வேகமும் வீரியமும் இன்னும் கொஞ்சம் கைகூடியிருந்தால் திரைக்கதைக்கு அழுத்தமும் கொஞ்சம் கைகோர்த்திருக்குமோ என்று ஓர் உணர்வு எழுந்தது! உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த சிங்கம்-2 வின் ஒளிப்பதிவைச் சொல்லலாம் பரபர ஆக்ஷன் ஸ்க்ரிப்டுக்காக ஸ்பெஷலாக மெனக்கிட்டுருக்கும் கேமரா அபாயகரமான கோணங்களிலெல்லாம் அதகளமாகப் பயணித்து வேகமான திரைக்கதையை மொமண்டம் குறையாமல் ஸ்க்ரீனில் உட்காரவைத்திருந்தது! ஆனால்  இந்தப் படத்தில் அதுபோன்ற எந்தவொரு சாகசமும் செய்யவிலை சரவணன் அபிமன்யுவின் கேமரா ரொம்பவே சாத்வீகமாகமான ஒளிப்பதிவு!

சுபாரக்கின் எடிட்டிங்கைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்...... அத்தனைத் துல்லியமான படத்தொகுப்பு....
விபத்துக்காட்சிக்கு முன்னும் பின்னுமாக இன்ஸ்டால்மென்டில் கதைசொல்லும் திரைக்கதையைக் கொஞ்சமும் குழப்பமின்றி காட்சிகளால் கோர்த்துக்கொடுத்த நேர்த்தி க்ளாஸ்!

சைமனின் இசை ஜஸ்ட் பாஸ் ரகம்! பின்னணி இசை இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம் இருந்தாலும் சமகால ஆக்ஷன் படங்களைப்போல் இரைச்சல்களால் நிரப்பிவைக்காமல் விட்டது நல்ல ஆறுதல்!

சசியின் திரைக்கதை எழுதும் திறனைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை.... தமிழின் மிகத்தேர்ந்த கதைசொல்லிகளில் சசியும் ஒருவர் என்பது நிதர்சனம் இருப்பினும் தனக்குப் புதிதான களத்தில் கால்பதித்திருக்கும் சசி இந்தப் படத்தில் சற்று தடுமாறியிருப்பதுபோல் தெரிவதற்கு படத்தின் தாமதமான ரிலீஸும் ஒரு முக்கியக் காரணம்!
மற்றபடி இயக்கமெல்லாம் அருமைதான்! முதலிலேயே சொன்னதுபோல சசியின் ஃபைவ்ஸ்டார் படைப்பு இதுவல்லதான்! எனினும் தன்னால் ஒரு முழுநீள ஆக்ஷன் த்ரில்லரை வழங்க முடியுமென நிரூபித்திருப்பதில் வெற்றிகண்டிருக்கிறார் என்று நிச்சியம் சொல்லமுடியும்..... என்னதான் இருந்தாலும் "a Sasi Film" இதுவல்ல! :-(

ஐந்து ஐந்து ஐந்து -->  ஐந்துக்கு ஐந்து அல்ல!

அன்புடன்,
பிரபு எம்

Sunday, August 04, 2013

திண்ணைப் பேச்சு - 1 (04 - 08 - 2013)



"பாரதிபுரம்" ஏரியாவில் பல மாதங்களாகப் பூட்டியிருந்தப் பழைய வீட்டில் தன்னுடைய ரிட்டையர்மெண்ட் வாழ்க்கையை ரீவைண்ட் எஃபெக்டில் வாழ எண்ணித் தன் மனைவி கற்பகத்தம்மாளுடன் சமீபத்தில்தான் குடியேறினார் மயில்வாகனம்! மாலை வேளையில் வெவ்வேறு சேனல்களின் பல்வேறு சீரியல்களின் ஒலிகேட்கும் பாரதிபுரம் பிரதான சாலையில் இத்தனை ஆண்டுகளில் சுற்றியுள்ள வீடுகளெல்லாம் அடுக்குமாடிகளாக மாறியிருக்க  மயில்வாகனத்தின் வீடு மட்டும் பழைய ஸ்டைலில் இருபுறமும் அகலமான முற்றமும், தூண்களும் பின்வாசலில் துளசிமாடமுமாக பழமையின் அழகுடன் அமைந்திருந்தது!

காலப்போக்கில் விட்டுப்போன உறவுகளெல்லாம் தற்போது அவர் வீட்டுத் திண்ணையில்கூடி ஃப்ளாஷ்பேக்குகளையும், நாட்டு நடப்புகளையும் அசைபோடுவதுதான் அந்த ஏரியாவின் தற்போதைய ஃபுல்டைம் பொழுதுபோக்கு.....  அரசியல், சினிமா, கிரிக்கெட் எனத் துவங்கி அகிலத்தையும் ரவுண்டடிக்கும் திண்ணைப்பேச்சை ஒவ்வொரு வாரமும் ஒட்டுக்கேட்கலாம் இங்கே!

                                  ================== *****  ==============

மாலை வானத்தில் மழையானது அரசியலுக்கு வரப்போன பழைய‌ ரஜினிமாதிரி "வரப்போறேன்.... வரப்போறேன்...."னு போக்குக்காட்டிக்கொண்டே இருக்க பாரதிபுரத்தின் ஜுனியர் கிரிக்கெட் டீம் ரப்பர் பால் கல்லி கிரிக்கெட்டை "டக்வொர்த் - லீவிஸ்" முறைப்படி பத்து ஓவர் போட்டியை ஐந்து ஓவராகக் குறைத்து வேகப்படுத்துக்கொண்டிருந்தார்கள்...... மயில்வாகனத்தின் வீட்டுத் திண்ணையில்  அவரும் அவரது நண்பரான "நெகடிவ்" நெடுமாறனும் அமர்ந்திருந்தார்கள்!

பத்துஓவரில் 70 ரன்கள் எடுக்கவேண்டிய டார்கெட் இப்போது ஐந்து ஓவரில் 35ஆகக் குறைக்கப்பட்டிருக்க ஒவ்வொரு பந்திலும் டென்ஷன் எகிறிக்கொண்டிருக்கின்றது....... வேகமான விருவிரு  போட்டியில் ஒரு ரன்-அவுட்டில் வந்தது பஞ்சாயத்து......

"ஏய் நீ அவுட்டுடா..... நீ அங்ங்ங்ங்க வந்துட்டு இருக்கும்போதே நான் ஸ்டம்ப் த்ரோ பண்ணிட்டேன்" என்று பவுலிங் டீம் கேப்டன் பாலு வாதாட பேட்ஸ்மேன் முருகனோ அலட்டிக்கொள்ளாமல் " நான் அவுட் இல்லை ரீச் ஆகிட்டேன்" என்று பேட்டை முதுகுக்குப் பின்னாடி பிடித்துவைத்துக்கொண்டு பிடிவாதம் பிடித்தான்....... பொறுக்காத மழை அடித்துஊற்ற ஆரம்பிக்க.......... அத்தனை கிரிக்கெட்டர்களும் அடித்துப்பிடித்து ஒதுங்க இடம்பிடித்தது நமது திண்ணையில்தான்!

"பசங்களா..... பாத்துடா..... எல்லாருக்கும் இடம் இருக்கு மெதுவா உள்ள வந்திடுங்க" என்று பாந்தமாக வரவேற்று இடம் கொடுக்கும் மயில்வாகனத்தை சற்று கோணலான முகபாவத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் "நெகடிவ்" நெடுமாறன்!

"என்ன பசங்களா! ஜிம்பாப்வேயை நம்மாளுங்க வெளுத்துவாங்கிடாங்க போல!" என பசங்களை நோக்கி மயில் தனது பேச்சை ஆரம்பிக்க......

"ஆமா..... ஒரு சப்பையான் டீம் கிடைச்சுட்டா போதுமே இவனுங்களுக்கு வீரத்தக் காட்ட!" என்று பசங்களுக்கு முந்திக்கொண்டு கிரிக்கெட் டாபிக்கை பொசுக் கென்று நசுக்கினார் நெடுமாறன்!

" ஜிம்பாப்வே சப்ப டீமா இருந்தாலும் நம்ம டீம்லயும் தோணி, அஷ்வினெல்லாம் இல்லதான....... கோலி கேப்டன்ஸில இன்-எக்ஸ்பீரியன்ஸ்டு இந்தியன் டீம் தான அனுப்பினோம்........ அதுவும் அவங்க பிட்சுலயே போய் அவங்கள அடிச்சது பெரிய விஷயம்தான் அங்கிள்!" பசங்க ஸைடிலிருந்து வந்தது பதில்

பசங்களுக்கு சப்போர்ட்டாக மயில்வாகனம் , "அதான...... ஐ.பி.எல் ல பெங்களூர் கேப்டனா இருந்தப்ப இதோ இப்ப நீங்க ஒரு ரன்-அவுட்டுக்கு அடிச்சுக்கிட்டீங்களே அதுமாதிரிதான் காம்பிர்கூட போய் சண்ட போட்டுட்டு இருந்தான் இந்த கோஹ்லிப்பய...... இவன் தேற மாட்டான்னு நெனச்சுட்டு இருந்தேன்..... ஆனா இன்னிக்கு கப் வாங்குன அப்புறம் தோணிகிட்ட நான் பாத்து கத்துக்கிட்ட ஸ்ட்ராடெஜியைத் தான் பயன்படுத்தினேன் இந்தத் தொடரில்னு பக்குவமா பேசினது எனக்கும் பிடிச்சுதான் இருந்திச்சு! ஆனாலும் இந்த ஸீரீஸில் இந்தியாவோட பலத்தைவிட ஜிம்பாப்வேயோட பலவீனம்தான் பெருசு!" என்று மயில்வாகனம் பேலன்ஸ் பண்ணிப் பேசியதில் பசங்களுக்கும் உடன்பாடு தெரிந்தது!

"அட..... என்னப்பா.... எல்லா டீம்லயும் ஸ்ட்ராங்கா ரெண்டு பவுலர் வெச்சிருக்கான் இங்க ஒரு ஃபாஸ்ட் பவுலரைக் காட்டு பாப்போம்!.... இப்பவும் ஸ்பின்னர் அமித் மிஷ்ராதான விக்கெட் எடுத்திருக்கான்....... ஏதோ ஒரு தமிழ்நாட்டுக்காரன் கொஞ்ச நாளா டீம்ல ஸ்பின்னரா அசத்திட்டு இருந்தான் இப்போ அதுக்கும் ஆப்பு வெச்சுருவானுங்க...... இந்த அமித் மிஷ்ராவ உள்ள விட்டுட்டு அஷ்வினத்தான் தூக்கப்போறானுங்க டீமைவிட்டு....... நம்ம ஊருக்காரன் ஒருத்தன் வந்திடக்கூடாதே இந்த சப்பாத்தி துன்னுறவனுங்களுக்கு!" கோபமாக ட்ராக் மாறினார் நெடுமாறன்......

"பிசிசிஐ விவகாரத்தை வெச்சு சொல்லுறியா நெடுமாறா?!" என்று மயில்வாகனம் கொக்கி போட.......

"ஆமாம்பா...... தமிழ்நாட்டுக்காரன் எவன் வந்து சேர்ல உக்காந்தாலும் இந்த ஜெக்மோகன் டால்மியாவுக்கு என்னதான் செய்யுமோன்னு தெரியாது..... அது ஏசி முத்தையாவா இருந்தாலும் சரி..... இந்த  இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீ நிவாசனா இருந்தாலும் சரி..... எதையாவது செஞ்சு மூக்கை நுழைச்சிடுறானே! மேட்ச் ஃபிக்ஸிங் யாருதான் பண்ணல! சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிச்சா மட்டும் ஃபிக்ஸிங்காம் என்னமோ மத்தவனெல்லாம் உத்தமன் மாதிரி!" என நெடுமாறன் பாயிண்டுகளை அடுக்க.........

"அதெல்லாம் சரிதான் ஆனா பிசிசிஐ பாட்டுக்கு அவங்க இஷ்டத்துக்கு ஒரு ரிட்டையர்டு ஜட்ஜை வெச்சு விசாரணை நடத்தினாங்களாம்.... ராஜஸ்தான் ராயல்ஸ் குந்த்ராவும் சரி சி.எஸ்.கே குருநாத்தும் சூதாடவே இல்லைன்னு ஒரு அறிக்கைய விட்டுட்டுப் பிரச்னைய முடிக்க முயற்சி பண்ணதும் ஓவர்தானே!" நெடுமாறனை மயில்வாகனம் லாஜிக்காக மடக்கி சூடேற்ற........... மழை கொஞ்சம் குறையத்தொடங்கியது.....

"சரி....... பழைய சூதாட்டப் பிரச்னையை முறைப்படி டெல்லிபோலீஸும், கோர்ட்டு நியமிச்ச டீமும்தான் விசாரணை பண்ணினாங்க..... என்ன ஆச்சு?!!! கடைசில பாவம் செத்துப்போன ஹான்ஸி குரோனி மட்டும்தான் கெட்டவராம் நம்ம அசாருதீன் ஃபிக்ஸிங்குல ஈடுபட்டதுக்கு எந்த ஆதாரமும் இல்லையாம்! குரோனிகூட சேர்ந்து மாட்டுன கிப்ஸு சிப்ஸுயெல்லாம் கூட நல்ல பசங்கதான்னு ரிஸல்டு வந்திருக்கு! இதுக்கு என்ன பண்ணுறதுன்னு சொல்லு!" தன்பக்க வாதத்துக்கு நெடுமாறன் வலுசேர்க்க........ மழைவிட்டஜோரில் பசங்க மீண்டும் விளையாடத் தெருவில் குதித்தோடினார்கள்....... ஆஃபீஸ் வேலை முடிந்து வந்து  சற்றே நனைந்தவராகத் திண்ணையில் வந்து இணைந்தார் எல்.ஐ.சியில் வேலைபார்க்கும் கதிர்வேலன்!

"மேட்டூர் டாம் இன்னும் ரெண்டு நாள்ல நெறையப் போகுதாம்....... பாசனத்துக்கும் நேத்தே தண்ணி தெறந்துவிட்டாங்க போல..... மழையின்னும் விட்டபாடில்லயேப்பா!" என்றவாறே வந்தமர்ந்தார் கதிர்வேலன்.....

"ஏன் மழைதான் பெய்ஞ்சுட்டுப் போகட்டுமே! பூமி குளிர்ந்தா நல்லதுதானே...... இந்த வருஷம் அப்போ கர்நாடகா கூட காவிரிச் சண்ட இருக்காதுன்னு சொல்லு......." என மயில் சொன்னதுதான் தாமதம்......

"அதான் கேரளாக்காரன் சண்டைபோட முறுக்கிக்கிட்டு நிக்குறானே முல்லைப் பெரியாறுல! இதுலயும் தமிழந்தான் இளிச்ச வாயன்! தமிழ்நாட்டுக்கு முல்லைப் பெரியாறுல இருந்த உரிமையெல்லாம் முடிஞ்சுபோச்சாம் ஹைகோர்ட்டுல சொல்லியிருக்கானுங்களாம்....... அடுத்த நாளே சுப்ரீம் கோர்ட் கமிஷன் கேட்டாங்களே...... ஏன் உரிமையில்லன்னு! வாயடுச்சுப் போயிருக்கானுங்க இப்போ கேரளாகாரனுங்க!" மழை டாபிக்கிலும் வெயிலேற்றினார் நெடுமாறன்.......!

"இந்த நதிகளையெல்லாம் இணைக்கணும்னு எல்லாம் பேசிக்கிட்டு இருந்தாங்களே........ என்ன ஆச்சு அந்த பேச்செல்லாம்?" கதிர்வேலனைப் பாத்து மயில்வாகனம் கேட்க......

"மாநிலத்தையெல்லம் பிரிக்கிற மூடுல கவர்ன்மென்ட் இருக்குது நீ இப்ப வந்து நதியையெல்லாம் இணைக்கச் சொல்லிட்டு இருக்குற...!!" டைமிங்கில் ஸ்கோரடித்துவிட்ட சந்தோஷம் கதிர்வேலனுக்கு.......

"பரவாயில்லப்பா எத்தனையோ போராட்டதுக்கு அப்புறம் தனித் தெலுங்கானா கிடைச்சிருச்சே அந்த மக்களுக்கு....... 60 களிலிருந்தே உறுதியா போராடிப் பெற்றிருக்குற வெற்றி இது அந்த மக்களுக்கு! சுமூகமா முடிஞ்சா சரிதான்!" மயில்வாகனம் சொல்ல......

" நிலம் வாரியா பிரிக்காம மொழிவாரியா மாநிலங்களப் பிரிக்கணும்னு நேரு அரசு எப்போதோ காட்டின பிடிவாதம் இன்னிக்கு வரைக்கும் எவ்வளவோ ரத்தம் பாத்துதான் அடங்குற நிலைமைக்கு வந்திருக்குது!" என ஆமோதித்தார் கதிர்வேலன்.......

"இன்னும் பிரச்னையெல்லாம் தீரல....... தெலுங்கானா உருவாகிட்டா தெலுங்குதேசம் சந்திரபாபு நாயுடுவுக்குக் கணிசமான பின்னடைவு ஏற்படும்னு இப்பவே உலுக்க ஆரம்பிச்சிடிச்சு அரசியல் வட்டாரம்..... சுத்திமுத்தி ஒய் எஸ் ஆர் பையனுக்குக் கொஞ்சம் லாபமாவும் அமையுமாம் இந்த தெலுங்கான பிளவு! எல்லாம் அரசியல்தான்யா...... மக்களுக்கு ஒரு நல்லதும் நடக்காதுதான்!" இது வழக்கமான நெடுமாறன் ஸ்டேட்மென்ட்........

"ஒரு புது மாநிலம் பிறக்கப்போகுதுபா கிட்டத்தட்ட ஒரு சுதந்திரப் போராட்டமே நடந்திருக்கு! நல்லதோ கெட்டதோ பொறுத்திருந்துதான் பார்ப்போமே!" என மயில்வாகனம் பாஸிடிவ்வாக முடிக்க முயற்சித்தாலும்......

"அதுக்குள்ள ஆளாளுக்குக் கெளம்பிட்டாய்ங்கய்யா எங்க ஸ்டேட்டையும் பிரிக்கணும்னு!" எனத் தொடர்ந்தார் நெடுமாறன்!

"ஆமாமா...... ஜம்முவையும் காஷ்மீரையும் பிரிக்கணுமாம்...... மாயாவதிக்கு உத்திரப் பிரதேசத்தை நாலா பிரிக்கணுமாம்........ ஏன் தமிழ்நாட்டைக்கூட காவிரி நதியை மையமா வெச்சு ரெண்டா பிரிக்கணும்னு கூட ஒரு அப்பாடக்கரு காமெடி அறிக்கை விட்டிருக்காறாம்!" என்று டேட்டா கொடுக்க ஆரம்பித்தார் கதிர்வேலன்......

"தமிழ் சினிமால தான் இந்த "ட்ரெண்டு" ப்ரச்னை பாடா படுத்துதுன்னா நம்ம நாட்டு அரசியலும் இப்படித்தான்யா இருக்குது..... டெல்லில ஒரு ரேப் நடந்தது பரபரப்பா ஆச்சுன்னா உடனே ஊரெல்லாம் நடக்குற அத்தன ரேப் கேஸும் திடீர்னு லைம்லைட்டுக்கு வர்றதும்.......... பீகார்ல சத்துணவு சாப்பிட்டு பிள்ளைங்க மயங்கி விழுந்ததுல இருந்து இப்ப தினம் தமிழ்நாட்டுல ஒரு நியூஸ் வருது மதிய உணவு சாப்பிட்ட குழந்தை மயக்கம்னு! ஒரு மாநிலத்த நாப்பது வருஷப் பிரச்னைகளுக்கு அப்புறம் பிரிச்சா அதே ட்ரெண்டுல எல்லா மாநிலத்தையும் பிரிக்கக் கேக்குறாங்க! என்ன ட்ரெண்டு மாறினாலும் மாறாத ரெண்டே விஷயம் நம்ம பி.எம் மோட மௌனமும் இங்க நம்ம சி.எம் மோட கொடநாடு விசிட்டும்தான்யா!" நீளமாகப் பேசி மயில்வாகனம் ஒருவழியாக அரசியல் டாபிக்கை முடித்துவைக்க.........

"என்னங்க......... மகளோட காதலுக்கு எதிரானவன் இல்லன்னு சேரன் விளக்கம் கொடுத்திருக்காருங்க" என்று கற்பகத்தம்மாளின் குரல் கேட்டது வீட்டுக்குள் சன் நீயூஸ் சானல் ஒலியுடன் சேர்ந்து!

" இவரு மட்டும் படத்துல  பத்மப்ரியாவையும், லத்திக்காவையும் உருகி உருகிக் காதலிப்பாராம்..... வாழ்க்கைல ஹீரோவா இல்லாம தன் பொண்ணுக்கு அப்பாவா ஆகும்போது மட்டும் இவரு படத்துல வர்ற ஹீரோயின் அப்பா கேரக்டர் மாதிரியே இவரும்  மாறிடுவாராம்...... அதுசரி அந்த கேரக்டரை உருவாக்குனதும் அவருதான!!" தனக்கே உரிய கோணத்தில் நெகடிவ் கமெண்ட் அடித்தார் நெகடிவ் நெடுமாறன்!

"யோவ் அதுக்காக..... பெத்த புள்ளய விட்டுட முடியுமாய்யா! இதென்னய்யா பேச்சாயிருக்கு........ நான் கூடத்தான் அம்பிகாபதி - அமராவதி காதல்கதையை காதல் ரசம் சொட்ட பசங்களுக்குப் பிடிக்குறமாதிரி காலேஜ்ல பாடம் எடுத்திருக்கேன் அதுக்காக என் வீட்டுல எவனையோ ஒருத்தன எம்பொண்ணு விரும்புறேன்னு வந்து நின்னா எப்படியோ போன்னு விட்டுட முடியுமா!" ரிட்டையர்டு டீச்சராகக் களம்குதித்தார் மயில்வாகனம் சேரனுக்கு ஆதரவாக!

"சரி நெடுமாறா உன்னைய மாதிரிதான் ஊர்முழுக்க பேசுறானுங்க இந்த விவகாரம் வந்ததிலிருந்து...... உன் பாயிண்டையே எடுத்துக்குவோம்....... சினிமால சேரனோட‌ காதலை ஹீரோயின் சைடுல இருந்து எதிர்க்குற மாதிரி காட்டுறப்போ காதலிக்குறவன் நல்லவனா? கெட்டவனான்னு படம் பாக்குற எனக்கும் ஒனக்கும் தெரியும்........... அதுனால சேர்த்துவைக்காம வறட்டுப்பிடிவாதம் பிடிக்குற பொண்ணோட அப்பன் கெட்டவனா தெரியுறான்...... இங்க நெஜத்துல அந்தப் பொண்ணையும் நமக்குத் தெரியாது அவ லவ் பண்ணுற பையன் யாருன்னும் நமக்குத் தெரியாது.... இந்த விஷயத்துல திடீர்னு குதிச்சு ஒரு அப்பனா தவிச்சுட்டு இருக்குற சேரனுக்கு டஃப் கொடுக்க நம்ம யாருய்யா! பாவம்... சொந்த விஷயத்துக்கு சம்பந்தமேயில்லாம பொதுமக்களுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்காரு அவரு!"
தரைவரைக்கும் இறங்கி வாதாடினார் கதிர்வேலன்......

"உனக்கு யாருய்யா எல்.ஐ.சியில வேலை கொடுத்தது...... பேசாம நீ லாயரா போயிருக்கலாம்ல...." என்று சிச்சுவேஷனைக் கூலாக்க மயில்வாகனம் கமெண்ட் அடிக்க......

"இல்ல இல்ல உனக்கு லா பாயிண்ட விட சென்டிமெண்ட்டுதான்  நல்லா வருது........ சீரியலுக்கு வசனம் எழுதப் போயிடு உனக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்குய்யா!" என கவுண்டர் கொடுத்தது எதிர்க்கட்சி நெடுமாறன்!

சீரீயல்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது...... எம் பொண்டாட்டி இப்போ சீரியல்ல உக்காந்தான்னா ராத்திரி வரைக்கும் அவள அசைக்க முடியாது நாம்போயி மாவு வாங்கிட்டு வந்து தோசை ஊத்துறேன்......... ஒத்தாசைக்கு வர்றீங்களாய்யா?! என்று மயில்வாகனம் கேட்க........ அப்பீட்டானார்கள் நெடுமாறனும், கதிர்வேலனும்!

                                 ============= **** ===================