Tuesday, February 13, 2024

லால் சலாம் [U/A] (2024)

 "ஜாதி மல்லி" என்று ஒரு பழைய படம். கே. பாலச்சந்தர் இயக்கியது. படத்தின் டைட்டிலிலேயே ஜாதி எனும் சொல் அடிக்கப்பட்டிருக்கும்! அந்தப் படத்தில் ஜாதி மத வேற்றுமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக இரண்டு இளம் காதலர்கள் வலம் வருவார்கள். தங்கள் பெயர்களைக்கூட "மாஸ்கோ" , "பெர்லின்" என்று மாற்றிவைத்துக் கொண்டவர்களாகத் திரையில் அந்தப் பாத்திரங்களில் வினீத்தும் யுவராணியும் நடித்திருந்தார்கள். படத்தில் துடுக்கும் துள்ளலுமாக வளைய வரும் அந்த இளம்ஜோடி க்ளைமேக்ஸில் ஒரு மதக்கலவரத்தில் நடக்கும் துப்பாக்கிச்சூட்டில் சிக்கி குண்டடி பட்டு மரிப்பதாகக் கதை முடியும். அப்போது வினீத்தும் யுவராணியும் தங்கள் உடலில் இருந்து வழியும் ரத்தத்தில் கைகளை வைத்து சுவற்றில் பதித்து, "இந்த ரத்தத்தில் எது இந்து ரத்தம்? எது முஸ்லிம் ரத்தம்?? இந்த ரத்தத்தில் எது உயர்ந்த ஜாதி ரத்தம் எது தாழ்த்தப்பட்ட ஜாதி ரத்தம்?? என்று அரை உயிருடன் கேள்விகளைத் தொடுப்பார்கள்.. கலவரக்காரர்களும் காவலர்களும் திரையில் தலைகுனிய... கலவரம் நின்றுவிடும். தியேட்டரில் ஆங்காங்கே அமர்ந்திருந்த சில பலரும் கண்ணீர் சிந்த கதாபாத்திரங்கள் மரணிக்கப் படமும் ஒருவழியாக முடியும். அந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1993 மற்றும் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஆண்டு 1992.


2024ல் நான் தியேட்டரில் பார்த்த முதல் படமான "லால் சலாம்"ல் ரஜினி இரண்டு பக்கமும் கூர்மையான ஓர் ஆயுதத்தை வைத்துத் தன் மகனைக் கொல்ல ஆள் அனுப்பும் ஒரு வில்லனை ஒருபுறத்தால் குத்திக் கிழித்த ரத்தத்தையும் மறுபுறம் தன் கையைத் தானே கீறிக்கொண்டதில் வந்த ரத்தத்தையும் காட்டி இதில் எந்த ரத்தம் இந்து ரத்தம் எது முஸ்லிம் ரத்தம் என்று கேட்கிறார்.... வில்லனும் திருந்திவிடுகிறார்...! இதில் விஷயம் என்னவென்றால்.... "லால் சலாம்" படத்தின் கதை நடக்கும் ஆண்டும் அதே 1993தான்! இப்போதைய ஆடியன்ஸும் கண்ணீர் சிந்தினார்கள்தான் ஆனால் அதன் காரணத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை!

முதலில் எல்லா விமர்சகர்களும் மறக்காமல் சொல்லும் ஒரு முக்கியமான, மறுக்கமுடியாத விஷயத்தை நானும் சொல்லிவிடுகிறேன். இப்போதைய சமகால சூழலில் இந்தக் கருத்தை மையமாக வைத்த ஒரு திரைப்படத்தை இயக்கத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நிச்சியமாகப் பாராட்டுகள் சொல்லித்தான் ஆகவேண்டும்! இது அவருக்கு மூன்றாவது படம். ஏனோ தானோவென்றோ அல்லது ஒரு நேர்த்தியில்லாமலோ எல்லாம் இல்லை மிகவும் கடுமையாக உழைத்து கவனமாகத்தான் இயக்கியிருக்கிறார் ஆனால் ஓரளவு பொருளுள்ள கதையையும் அதற்கேற்ற களமும் மட்டுமின்றி லைகாவின் பொருட்செல்வமும் கிடைத்திருக்கும்போது எடுப்பதற்குமுன்னால் எழுத்தில் எல்லாவற்றையும் சரிபார்த்திருக்க வேண்டாமா சிஸ்டர்?? எனும் கேள்விக்குதான் அவரிடம் பதிலேயில்லை!

கதையின் முக்கியக் கதாபாத்திரம் யார்?? எந்தக் கதாபாத்திரத்தைச் சுற்றிக் கதை பயணிக்கிறதோ அதுதான் முக்கியப் பாத்திரம் என்றால் "லால் சலாமின்" முக்கியப் பாத்திரம் விஷ்ணு விஷால் இல்லை..! விக்ராந்தா? என்ற கேள்விக்கே இடமில்லை! திரைக்கதையின் அனைத்து conflictகளுக்கும் மொத்தமாகப் பொறுபேற்கிறார் விஷ்ணு விஷால் ஆனால் அந்த இடியாப்பச் சிக்கல்களை எல்லாம் ஓர் இட்லிக் கொப்பரைக்குள் வைத்து ரஜினி solve செய்துவிட்டார் என்பதே விஷ்ணு விஷாலுக்கு ஆடியன்ஸைப் போலவே கடைசி சீனில்தான் தெரியும். அப்போ ரஜினிதான் முக்கியப் பாத்திரமா என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும் ரஜினி இந்தப் படத்தில் கபில்தேவைப் போலவே ஒரு special appearance தான் கொடுத்திருக்கிறார் என்று! உண்மையில் ரஜினியின் மொய்தீன் பாய் பாத்திரம் திரைக்கதையில் மொத்தக் குட்டியூண்டு கேன்வாஸிற்குள் மெகா சைஸில் accomodate செய்யப்பட்டிருக்கும் கதைக்கு முற்றிலும் அந்நியமான பாத்திரம்தான்!

திரைக்கதை அமைப்பதில் ஆரம்பக் காட்சிகளில் சஸ்பென்ஸ் வைத்து முன்னும் பின்னும் கதையை நகர்த்தும் மிகமுக்கிய சம்பவம் என்னவென்று படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் தெரியும்! சொல்லப்போனால் விஷ்ணு விஷால் விக்ராந்தை அடிக்கும் அந்த சம்பவத்தை ட்ரெய்லரிலேயே காட்டிவிட்டார்கள்... ஆனாலும் ஒரே மனதைரியத்தோடு கதையை அந்த சம்பவத்தை சஸ்பென்ஸாக வைத்து முன்னும் பின்னுமாக ஆறுமாத இடைவெளியில் இண்டர்வெல் தாண்டியும் நான்-லீனியர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதே கதை அதே களம் கதாபாத்திரங்களின் தேவைகளில்கூட மாற்றமில்லாத ஆறுமாத இடைவெளியில் சீன்கள் மாறி மாறி வந்தால் என்னவாகும்? எது ஃப்ளாஷ்பேக் எது நிகழ்காலம் என்று நாம் கண்டுபிடிப்பதே தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிடுகிறது. குறைந்தபட்சம் ஜெயிலுக்குப் போவதற்கு முந்தைய விஷ்ணு விஷாலின் தாடியையாவது கொஞ்சம் ட்ரிம் செய்து வேரியேஷன் காட்டியிருக்கலாம் ஜெயிலுக்காவது மரியாதை மிஞ்சியிருக்கும்!

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் அதில் அத்தனைபேருமே அனுபவமிக்க நடிகர்கள். ஆனால் திரையில் ஸ்கோர் செய்வதற்கு ஸ்கோப் இருப்பது தம்பி ராமையாவுக்கு மட்டும்தான்! விஷ்ணு விஷால், விக்ராந்த், ஹீரோயின்கள் (முகமே ஞாபகம் இல்ல இதுல பேரைத் தெரிஞ்சிக்க நான் விக்கிபீடியா வரைக்கும் போகணுமா?) லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா என யாருக்குமே ஸ்க்ரீனில் ஸ்பேஸ் கிடைக்கிறதே தவிர பிரகாசிக்க, மக்களுடன் கனெக்ட் செய்ய எந்த ஸ்கோப்பும் கிடையாது.
தனக்குக் கிடைத்த தனி ஆவர்த்தண வாய்ப்புகளைத் தம்பி ராமையா மிகவும் சிரத்தையாகப் பயன்படுத்தியிருக்கிறார். அருமையான நடிப்பு அவரிடமிருந்து வெளிப்படுவது படத்தை ஓரளவு காப்பாற்றியிருப்பது உண்மை!

தம்பி ராமையாவுக்குப் பிறகு உணர்ச்சிப்பூர்வமாக நடிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் லைட்டாக skid ஆனாலும் cringe கழகமாகிவிடும் சாத்தியங்கள் எக்கச்சக்கமாக உள்ள ரிஸ்க்கான பாத்திரம் விஷ்ணுவிஷாலின் அம்மாவின் பாத்திரம்! ராதிகா அல்லது சரிதா ரேஞ்சில் காஸ்டிங்கை வைத்து சமாளிக்க வேண்டிய அந்த கேரக்டருக்கு, தான் ஆக்டிவ்வாக நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே சுமாராக நடித்து ரிட்டையரான நடிகையான ஜீவிதாவைக் கட்டாயப்படுத்தி நடிக்கவைத்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்று நான் லீவ் போட்டு யோசித்ததுதான் இவ்வளவு லேட்டாக இதை எழுதுவதற்கு முக்கியக் காரணம்! பாவம் கஷ்டப்பட்டு அழுது தீர்த்திருக்கிறார் படம் முழுக்க ஆனால் ஒரு தருதலையைப் பெத்து தரித்திரம் தாண்டவமாடும் கேரக்டர் பண்ணும்போதும் மூஞ்சியில் இருந்து முக்கால் செண்டிமீட்டருக்கு முன்னோக்கி அப்பிப் பூசப்பட்ட மேக்-அப் க்ரீமைக் கூட லிட்டர் லிட்டராக ஜீவிதா சிந்தும் கண்ணீரால் கரைக்க முடியவில்லை!

செந்திலுக்கு (உண்மையான) special appearence ரோல், அதை நன்றாகச் செய்திருக்கிறார். படத்தின் ஹீரோ என்று அவரையும் சேர்த்து நம்பவைக்கப் பட்டிருக்கும் விஷ்ணு விஷால் க்ளோஸப்பில் எடுக்கப்பட்ட கிரிக்கெட் மேட்ச் காட்சிகளில் மட்டும்தான் சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு மற்றபடி அவரது "திரு" பாத்திரத்தின் மீது நமக்கு எவ்வித ஈர்ப்போ அபிமானமோ ஏன் ஒரு குறைந்தபட்ச நம்பிக்கைக்குக் கூட வாய்ப்பில்லை. ஆனாலும் படத்தில் அவர் வேலையை அவர் சரியாக செய்திருக்கிறார் ஆனால் அவருக்குத் தேவையான வேலையை திரைக்கதை செய்யவில்லை!

அத்தனையையும் தாண்டிப் படத்தை ஒருமாதிரி தன்னுடைய screen presenceஆலேயே pleasant ஆக்கிவிடுவதுதான் ரஜினியின் மேஜிக். ஒரு சூப்பர்ஸ்டார் ஜொலிப்பதற்கு யாரும் வானத்தை வரைந்து வைக்கத் தேவையில்லை என்பதுபோல் கதை நடக்கும் இடங்களில் கிடைக்கும் மலைகளிலும் மடுக்களிலும் அடிக்கடி உதித்து வெளிச்சம் தருகிறார் சூப்பர்ஸ்டார். ஹீரோயிஸம் இல்லாமல் சிம்பிளான உணர்ச்சிகளை வயதின் சோர்வையும் மீறி வசீகரமாக ரஜினி வெளிப்படுத்துவது படத்திற்கு மிகப்பெரிய ஆறுதல்தான் என்றாலும் அதில் ஆச்சர்யம் எதுவுமில்லாததால் ரஜினி தோன்றியும் காட்சிகளில் விசில் சத்தங்கள் பெரிதாகக் கேட்கவில்லை ஆனால் நடிப்பில் வழக்கம்போல் அநாயசமாக அள்ளுகிறார் ரஜினி நூற்றி அறுபத்து ஒன்பதாவது முறையாக!

ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமிதான் படத்தின் கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். எழுத்தில் உள்ள கதைக் களத்தைக் காட்சிகளாக விரிப்பதில் அவருக்கு எந்த சிரமமும் இல்லை ஐஸ்வர்யாவுக்கு இயக்கத்தில் பக்கபலமாக செயலாற்றி இருக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் பாடல்களிலும் பாடல்களுக்கான குரல்தேர்விலும் பின்னணி இசைக்கோர்ப்பிலும் அதீத சிரத்தை கொண்டு செதுக்கியது திரைக்கதை வறட்சியில் எத்தனை பேருக்குப் போய்ச்சேர்ந்திருக்கும் என்று கூட தெரியவில்லை.

திரைக்கதையைத் திட்டித் தீர்த்தாலும் நேர்மையாகவே உணரமுடியும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தக் கதைக்கு யூகிக்கமுடியாத ட்விஸ்டையோ அல்லது கதை நடக்கும் காலத்துக்கும் வறுமைதோய்ந்த பகைசூழ்ந்த களத்துக்கும் பெரிய சுவாரஸ்யங்களை எல்லாம் சேர்த்துக் கதை சொல்ல வாய்ப்புகள் மிகமிகக் குறைவுதான். படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் தெரிந்ததுதான் கடைசிக்காட்சியில் எப்படித் தேர் வரும் என்னும் சங்கதி ஆனாலும் அது வரும்காட்சியில் நல்லதோர் உணர்வுதான் மனதில் எழும். அப்படிப்பட்ட படைப்புதான் இது ஆனால் இதை எப்படி இவ்வளவு மோசமாக படத்தொகுப்பு செய்தார் படத்தின் எடிட்டர் ப்ரவீன் பாஸ்கர் என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது! முன்புபோல ஃபிலிமில் எடுத்துத் தள்ளி முடித்தபின் இருப்பதை வைத்து எதையோ செய்துவைப்பதாக எல்லாம் இப்போதைய டிஜிட்டல் சினிமா இல்லை. அப்படியிருக்க இழுவையைக் கூட இயக்குனர் தலையில் கட்டிவிடலாம் ஆனால் இவ்வளவு குழப்பமான கதைசொல்லலை எடிட்டிங் டேபிளில் கவனிக்காமல் விட்டதை எப்படி எடிட்டிங் என்றே அழைக்கமுடியும் என்று தெரியவில்லை!

முதலிலேயே சொன்னதுபோல இயக்குனர் ஐஸ்வர்யா மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது திருவிழாவிற்குத் தயாராகும் ஊரில் 90களின் மைக்செட் கலாச்சாரத்துக்கு ஏற்பப் பாடல்களைக் கேஸெட்டுகளில் ரெக்கார்டு செய்பவர்கள் அந்தப் பாடல்களையும் அவை இடம்பெற்ற திரைப்படங்களின் பெயர்களையும் காஸெட் கவரில் அழகான கையெழுத்தில் எழுதிவைப்பார்கள் அதைக்கூட நுணுக்கமாக ஓரிரு நொடி திரையில் வரும் ஒரு ஃப்ரேமில் capture செய்ய உழைத்திருக்கிறார்தான் ஆனால் கதை நடக்கும் கற்பனை கிராமமான முரார்பாத்தில் முக்கிய சம்பவம் நிகழும் முன்பாக இருமதத்தவரும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்று ஆளாளுக்கு வசனம்தான் பேசுகிறார்களே தவிர காட்சியில் அப்படி எந்தப் பதிவும் இல்லை. சொல்லப்போனால் ஃப்ளாஷ் பேக்குக்குள் வரும் ஒரு ஃப்ளாஷ் பேக்கில் லிவிங்ஸ்டனின் மரணச்சடங்குகளை இந்து முறைப்படி நடத்தக்கூடாது என்று முஸ்லிம்கள் முட்டுக்கட்டை போடுவதாகத்தான் காட்சி இருக்கும்! இதுபோன்ற அடிப்படை விஷயங்களில் செம்மையாகக் கோட்டைவிட்டிருக்கிறார்! திரைக்கதையின் எழுத்துமொழியும் படத்தொகுப்பின் காட்சிமொழியும் ஒன்று சளைத்தால் மற்றொன்று எழுந்து தாங்கிவிட்டால் போதும் ஒரு படம் பிழைத்துவிடும் இங்கு திரைக்கதையும் படத்தொகுப்பும் பிழைகளையே சளைக்காமல் படம்முழுக்கச் செய்துவைத்தால் ஆனானப்பட்ட ரஜினிகாந்த்தே படத்தில் இருந்தாலும் காப்பாற்ற முடியாது எனும் பாடத்தைத்தான் லைகாவின் செலவில் கற்றுக்கொள்வதாய் அமைகிறது படம்!

லால் சலாம் --> நாடு இருக்கும் கேடுகெட்டதொரு சூழ்நிலையில் ஒரு நல்ல விஷயத்தைத் தாங்கி வந்திருக்கும் படம் இப்படி வீணாணதில் கோபப்படுத்தவில்லை வருத்தப்படவைத்திருக்கிறது அந்த வகையில் சுமார் ரகப் படமாகி விடுகிறது!