Wednesday, October 11, 2017

The Butterfly Effect [18+] (2004) - ஹாலிவுட் திரைப்படம்

முன்குறிப்பு: தலைப்பில் [18+] என்று குறிப்பிட்டிருப்பது படத்திற்குத்தான்  இந்தப் பதிவுக்கு இல்லை :-))

The Butterfly Effect (2004)



Cast: Ashton Kutcher
          Amy Smart

Written & Directed by :  Eric Bress & J. Mackye Gruber


கிட்டத்தட்ட இந்தப் படம் வெளிவந்த வருடமான 2004ம் ஆண்டுதான் என்று நினைக்கிறேன்... அன்றைய "“ஆனந்த விகட”னில் அமரர் சுஜாதா Chaos Theory பற்றி எழுதியிருந்தார். “குழப்பம்” என்று பொருள் படும் “Chaos" தியரியைக் குழப்பமின்றிப் பின்வருமாறு எளிமையாக அறிமுகம் செய்திருந்தார்! 

”ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒரேயொரு சிறகடிப்பு காற்றுமண்டலத்தில் ஏற்படுத்தும் மிகச் சிறிய மாற்றமானது கால ஓட்டத்தில் சற்றுதூரத்தில் வீசப்போகும் ஒரு பெரும்புயலுக்குக் காரணமாகலாம்  (ஆகாமலும் போகலாம்!)” - கேயோஸ் தியரியை எளிதில் விளக்கப் பயன்படும் புகழ்பெற்றதொரு Metaphor இது!


அதாவது ஒரு பெரும் சம்பவம்/அவலம் நடந்தேறும்போது அதன் மூலகாரணங்களைத்தேடிக் காலவோட்டத்தில் பின்னோக்கிச் சென்று ஆராய்ந்தோம் என்றால் அது என்றோ நிகழ்ந்த ஏதோவொரு சர்வ சாதாரணமான (ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒற்றை சிறகடிப்பை ஒத்த) மிகச்சிறியதான ஒரு நிகழ்வைத் தொட்டுத் துவங்கியிருக்கலாம் என்பதுதான் விஷயம்!


”12 பி” திரைப்படத்தில் ஷாம் வாழ்க்கையில் நிகழும் முக்கிய சம்பவங்கள் அனைத்துமே படத்தின் 12-வது நிமிடத்தில் அவர் சிட்டிபஸ்ஸில் பயணிக்கும்/அல்லது தவறவிடும் ஒரு சர்வசாதாரணமான நிகழ்வை மையமாக வைத்து நடப்பதாக இருந்ததல்லவா இதையும் “கேயோஸ்” அடிப்படையில் மேற்கண்டவாறு வகைப்படுத்தலாம்!


”தசாவதாரம்” திரைப்படத்தில் 12ம் நூற்றாண்டில் கடலுக்குள் அமிழ்த்தப்படும் விக்ரஹம் காலவோட்டத்தில் 2004ஆம் ஆண்டு சென்னையில் மாபெரும் சுனாமிக்கு மூலகாரணமாக அமைவதாகக் காட்டப்பட்டது “கேயோஸ் தியரி”யின் படி!





சுஜாதாவும் ஷங்கரும் இணைந்து எழுதிய “அந்நியன்” திரைக்கதையில் ”கேயோஸ் தியரி”யைக் கதைக்கு ஏற்றவாறு மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்தியிருந்தார்கள்! இந்தியக் குடிமகன்களின் சமூக அலட்சியங்களை மையமாகக் கொண்ட திரைக்கதையில், அதிமுக்கியமானதொரு ஃப்ளாஷ்பேக் காட்சியை வைத்திருப்பார்கள்... பள்ளிக் குழந்தைகளை சுமந்து வரும் ஒரு சைக்கிள் ரிக்‌ஷா நோ-எண்ட்ரியில் நுழைகிறது அங்கே வரும் ஒரு வண்டியில் மோதி கட்டுப்பாடு இழந்து ரிக்‌ஷா தடுமாறும்போது உள்ளே இருக்கும் ஒரு குட்டிச் சிறுமி நிலைதடுமாறி ரிக்‌ஷாவிலிருந்து கீழே விழுகிறாள். மழை தண்ணீர் தேங்கி இருக்கும் அந்தத் தெருவில் ஏற்கெனவே ஒரு மின்கம்பி அறுந்து விழுந்திருக்க, தேங்கிக் கிடக்கும் அந்தத் தண்ணியில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கின்றது. ரிக்‌ஷாவிலிருந்து கீழே விழும் அந்தச் சிறுமி சரியாக அந்தத் தண்ணீர்த் தேக்கத்திலேயே விழ மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக அந்த இடத்திலேயே உயிரிழக்கிறாள்.... அழுத்தமான இந்தக் காட்சியில் ஷங்கர், அளவுக்கதிகமான சுமையேற்றும் ரிக்‌ஷா,  நோ-எண்ட்ரியில் செல்வது, மின்கம்பி அஜாக்கிரதை, மழைநீர் தெருவில் தேங்குவது என நிறைய சமூக அலட்சியங்களை நிரப்பி வைத்திருப்பார்.... காரணம் இந்த அலட்சியங்களில் ஏதாவது ஒன்று நிகழாமல் தவிர்க்கப்பட்டிருந்தால் கூட அந்தச் சிறுமி உயிரிழந்திருக்க மாட்டாள் என்னும் உண்மையைப் பார்வையாளர்களின் மனதில் உணர்ச்சிப்பூர்வமாக அழுத்தி ஒட்டவைப்பதற்காக!....  ஒரு பெரும் அவல விளைவு (சிறுமியின் மரணம்) சம்பவத்ததின் தொடக்கப் புள்ளி மின்கம்பிகளைப் பராமறிக்காமல் விட்டதோ அல்லது அந்த சிறு தெருவில் சரியானமுறையில் ரோடுபோடாததோ என ஒரு சாதாரன நிகழ்வுதான் அதற்குத் தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கமுடியும் - இதுதான் “ அந்நியன்” சொல்லும் கேயோஸ் தியரி!


சரி... இந்தப் படத்துக்கு வருவோம்!


ஹாலிவுட்டில் 2004-ஆம் ஆண்டு Eric Bress மற்றும் Mackye Gruber எழுதி இயக்கிய “தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட்” திரைப்படமும் முழுக்க முழுக்க கேயோஸ் தியரியின் அடிப்படையில் பின்னப்பட்ட படுசிக்கலான திரைக்கதையால் உருவானது! 


மேலே குறிப்பிடப்பட்ட இந்தியப் படைப்புகள் கேயோஸ் தியரியின் அறிவுப்பூர்வமான யதார்த்தப் பதிவுகள் என்றால் இந்த ஹாலிவுட் படமோ அதே தியரியின் அடிப்படையில் உணர்வுப்பூர்வமான ஒரு ஃபேண்டஸி! 


கதை நாயகனான எவான்(Evan)-ன் வாழ்வில், பிறக்கும்போதே ரெடிமேட் குழப்பங்கள் சூழ்ந்திருக்கின்றன...  அவனது தந்தை ஒரு மனநோய் காரணமாக மனநலக் காப்பகத்தில் இருப்பவர்.... இன்னும் சொல்லப்போனால் அவனது தாத்தாவும் (அப்பாவின் அப்பா) உயிர் நீத்தது ஒரு மனநலக் காப்பகத்தில்தான்! மேலும் எவானுக்கு முன்னதாக இரண்டு குழந்தைகள் அவன் அம்மாவின் வயிற்றிலேயே மரணித்து still babies-ஆகப் பிறந்த மெடிக்கல் ஹிஸ்ட்ரி வேறு!





மிகமிக மோசமான இளம்பருவத்தைக் கடக்கிறான் சிறுவன் எவான். ஆறு வயதிலிருந்தே எவானின் அன்புக்குரிய தோழியான கேய்லீ (Kay Leigh), கேய்லீயின் மூர்க்கத்தனமான அண்ணன் டாமி (Tommy) மற்றும் இவர்களின் அப்பாவி obese  நண்பன் லெனி (Lenny) மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பவர்கள்..... எவானுக்கு கேய்லீயின் மீது சிறுவயதுமுதலே நட்பைத் தாண்டிய  நெருக்கமான உறவு உண்டு... அவளுடைய அண்னன் டாமி சிறுவயதிலேயே  கொடூரமான இயல்புடையவன். டாமி மற்றும் கேய்லீயின் தந்தை மில்லர், சிறுவர்களை வைத்து தகாத வீடியோக்கள் எடுக்கும் ஓர் ஈனத்தனமான பாத்திரம்.  தன் ஆறு வயது மகள் கேய்லீயையும், சிறுவன் எவானையும் வைத்தே அப்படியானதொரு வீடியோவை மில்லர் எடுக்க முயல்வதாக ஒரு horrible காட்சி ஒன்று இருக்கிறது படத்தில். தனது தங்கையுடன் எவான் நெருங்கிப் பழகுவது சிறுவயது முதலே டாமிக்குப் பிடிக்காது..... ஒருமுறை தன் தந்தையால் காயப்படுத்தப் பட்டிருக்கும் கேய்லீக்கு எவான் முத்தம் கொடுக்கும்போது (மருத்துவ முத்தம் அல்ல!) டாமி பார்த்துவிட அந்தக் கோபத்தில் எவானின் வீட்டிற்கு சென்று அவனையும் லெனியையும் மூர்க்கமாகத் தாக்கி எவானின் நாய்க்குட்டியை உயிருடன் ஒரு சாக்குப் பைக்குள் போட்டு எரித்துக் கொன்றுவிடுகிறான். அதே பதின்மப் பருவத் தொடக்கத்தில் விபரீதமான ஒரு விளையாட்டாக டாமியின் வீட்டிலிருக்கும் ஒரு டைனமைட்டைப் பற்ற வைத்து அருகிலிருக்கும் ஒரு வீட்டின் தபால்பெட்டியில் லெனியை வற்புறுத்தி டாமி போடவைப்பான் அது வெடித்துவிட எதிர்பாராதவிதமாக அந்த வீட்டில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தை மரணிக்கின்றது அந்தக் காட்சி அழியாத குற்ற உணர்வாக லெனி, எவான் மற்றும் கேய்லீயின் கண்கள் முன்பே நிகழ்கிறது.... இதனையொட்டி டாமி சிறுவர் ஜெயிலுக்கு செல்ல, எவானை அவன் அம்மா அந்த ஏரியாவை விட்டு வேறு இடத்துக்குப் பெயர்ந்து சென்றுவிடுவார்.... கேய்லீ தனிமையடைகிறாள் லெனி மன நலம் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறான்.....





எவான் வாழ்க்கையில் இந்த சம்பவங்கள் நடக்கும் பருவத்தில், அவனுக்குக் கிட்டத்தட்ட ஆறு வயதிலிருந்தே அவ்வப்போது “Black-out" ஆகிவிடும் பிரச்னை உண்டு.... அதாவது திடீரென்று அவன் மனம் ஒருவிதமான வெறுமை நிலையை அடைந்துவிட அவன் நினைவுகளில் ஒரு புள்ளிக்கு மேல் அந்த சூழ்நிலைகளில் என்ன நடந்தது என்று சுத்தமாக நினைவிருக்காது! மேலே சொன்ன ஒவ்வொரு மோசமான நிகழ்ச்சியிலும் ஒரு கட்டம்வரைதான் எவானுக்கு நினைவிருக்கும். சம்பந்தப்பட்ட அந்த காட்சிகளும் பாதியில் “கட்”டாகிப் பிறகு எவான் நினைவுக்குத் திரும்பிய பிறகுதான் தொடர்வதாய் திரைக்கதை அமைத்திருப்பார்கள்..... பாட்டன், தகப்பன் வழியில் எவானுக்கும் எந்த மனநோய் வந்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையுடன் முதன்முறை ப்ளாக்-அவுட் ஆனபோதே மன நல மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவார் எவானின் அம்மா.... ஆனால் தெளிவாக எவ்விதக் குறைபாடும் கண்டுபிடிக்க முடியாமல் எவானை ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை சிறு குறிப்பேடுகளில் தவறாது Journal எழுதிவருமாறு அறிவுறுத்துகிறார் மருத்துவர்..... எவானும் அவனுக்கு நினைவிழப்பு நேரும்வரையிலான சம்பவங்களைத் தொடர்ந்து Journal-லாக எழுதிவருகிறான்!

கேய்லீ, டாமி, லெனி ஆகியோரது வாழ்க்கை ஒவ்வொரு திசையில் பிரச்னைகளில் தேங்கிவிட கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றுவிடும் அளவு வளர்ந்துவிடுகிறான் எவான். அப்படியானதொரு வெற்றிகரமான சூழலில் எவானின் அம்மா எவானின் கையை ஒரு கைரேகை பார்க்கும் பெண்ணிடம் காட்டுவார்.... அதிர்ச்சியடையும் அந்தப் பெண்ணோ, எவானுக்குக் கையில் ஆயுள் ரேகையே இல்லை என்றும் அவனுக்கென்று ஓர் ஆன்மா (soul) இருக்கவே இருக்காது என்று சொல்கிறார்.... எவான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லையென்றாலும் அவனது அம்மா கோபப்பட்டு அந்த இடத்திலிருந்து தன் மகனுடன் வெளியேறிவிடுவார்......





கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலே சொன்ன காட்சிகள்தான் சற்றே குழப்பித் தெளிவான கோர்வையின்றி நான் - லீனியராகத் திரையில் விரியும். அதன்பின்பு, கல்லூரி விடுதியிலிருக்கும் எவான் தன்னுடைய சிறுவயது நண்பர்களின் நினைவு வந்து தன்னுடைய சிறுவயது ஜர்னல்களை வாசிப்பான்...... அவ்வப்போது black-out ஆகிவிடும் பிரச்னை காரணமாக ஒவ்வொரு மோசமான சம்பவமும் பாதிவரைதான் பதியப்பட்டிருக்கும் எவானின் டைரிகளில்... அச்சம்பவங்களை அவன் வாசிக்கும்போது திடீரென்று எழுத்துக்கள் ஆடத்துவங்கி அவனுக்கு மட்டும் ஏதோ நில நடுக்கம் வந்ததுபோல் உடல்ரீதியாகக் கஷ்டப்பட்டு மூக்கிலிருந்து ரத்தம் வழியத் துவங்கும் எவானுக்கு! அப்போதுதான் ஒருவழியாகத் தெரியவரும் நமக்கு..... அதாவது, எவானுடைய பழைய டைரிகளை அவன் படிக்கும்போது அந்த எழுத்துகள் அல்லது அந்த நினைவுகள் வழியே அவன் அந்தச் சம்பவம் நடக்கும் காலத்துக்கு சென்றுவிடுகிறான் என்று! (தன் டைரிக் குறிப்பு நினைவுகளின் வழியே கிட்டத்தட்ட ஒரு டைம்-டிராவல்).


 நிகழ்காலத்தில் தான் நல்லவிதமாக வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டாலும் தன்னுடன் வளர்ந்த நண்பர்கள் யாருமே நன்றாக வாழவில்லை என்னும் நிஜம் எவானை மிகவும் மனரீதியாகத் துன்புறுத்துகிறது.... அவர்களின் இந்த நிலைக்குத் தானும் ஒரு காரணம் என்னும் எண்ணம் அவனை மேலும் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது! தன் நண்பர்களின் வாழ்க்கையைக் காவு வாங்கிவிட்ட அப்படியான மூலகாரணமான சம்பவங்களை எல்லாம் தன்னுடைய டைரிக்குறிப்புகள் மூலம் கடந்த காலத்துக்கு சென்று மாற்றியமைக்க முனைகிறான்! (கேயோஸ் தியரியின் படி!).... 






டாமி, எவானின் வீட்டில் லெனியைத் தாக்கி எவானின் நாய்க்குட்டியை எரித்துக் கொல்லும் காட்சிக்குச் சென்று அந்த சம்பவத்தை மாற்றுகிறான் அதன்படி அப்போதே டாமி போலீஸிடம் பிடிபட்டு கேய்லீ மற்றும் லெனி சற்று சந்தோஷமாய் எவானுடன் கல்லூரிப் படிப்பிலும் உடன் வருகிறார்கள்... எல்லாம் நன்றாகப் போனாலும் டாமியின் வாழ்க்கை வீணானதை கேய்லீயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை... அதனை சரிசெய்ய மீண்டும் ஒரு கடந்தகால சம்பவத்துக்குள் சென்று இம்முறை இவர்களின் விபரீத விளையாட்டால் மரணிக்கும் கைக்குழந்தையைக் காப்பாற்றுகிறான்,.... அந்த முயற்சியில் எவான் தன்னுடைய கை, கால்களை இழந்து சக்கர நாற்காலியில் கல்லூரி பயில்கிறான்..... லெனியும் கேய்லீயும் தன்னை நட்புடன் கவனித்துக் கொள்கிறார்கள், டாமியும் மிகவும் பண்பட்ட இளைஞனாக ஏதோ வேலை செய்கிறான்.... லெனியும் கேய்லீயும் காதலிக்கிறார்கள்! எவானுக்கு அந்த ஏமாற்றம் வலித்தாலும் ஒருவகையில் இந்த முடிவு அவனுக்குப் பிடித்திருக்கிறது.... ஆனால் அதிலும் ஒரு பிரச்னை இருக்கின்றது..... எவானின் விபத்திற்குப் பிறகு அதிகமாகப் புகை பிடித்து நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகி மரணப்படுக்கையில் இருக்கிறார் எவானின் அம்மா...... ! 


இப்படி ஒருவர் பிரச்னையை சரிசெய்யக் கடந்தகாலத்துக்கு சென்று மோசமான சம்பவங்களை எல்லாம் எவான் மாற்றியமைத்தால், அது இன்னொருவரின் வாழ்க்கையை முற்றிலும் காவு வாங்குவதாகவே அமைகிறது! இதனால் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டவனாய் ஒரு கட்டத்தில் எவான் பிறந்த மருத்துவமனையில் தன் தாயின் மருத்துவக் குறிப்புகளை வாசித்து தன் பிறந்த நாளுக்குப் பயணமாகிக் கருவிலேயே எவான் தன்னை மாய்த்துக்கொள்வான்! (தனது தாயின் மெடிக்கல் ஹிஸ்ட்ரி படியே மூன்றாவது கருவில் மாய்ந்த குழந்தையாகித் தன் வாழ்வே இல்லாமல் செய்துகொள்கிறான்!)





எவான் கருவிலேயே இறந்து பிறக்க, எவானின் தந்தை முழு மன நலமுடன் தன் மனைவியுடனே வாழ்கிறார்.... கேய்லீ, லெனி மற்றும் டாமி எவானின் பெற்றோரின் அரவணைப்பில் நல்லவிதமாக வளர்வார்கள்.... நன்றாகப் படித்து ஆளாளுக்கு சந்தோஷமாகத் திருமணம் நடைபெற்று எல்லாரும் இன்புற்றிருக்கப் படம் முடிவடையும்.... எவான் என்று ஒருவன் உலகத்திலேயே இல்லாதவனாகிப் போகிறான்.... அப்போது அந்த கைரேகை பார்க்கும் பெண் சொன்னதை ஒருமுறை ரீகால் செய்து முடிகின்றது படம்!


படுகுழப்பமான திரைக்கதை..... மிகமிக சிக்கலான கதையமைப்பு..... முக்கியப் பாத்திரங்களான எவான், கேய்லீ, டாமி மற்றும் லெனி என நான்கு பேருக்கும் ஆறு வயதும் பதின்மூன்று வயது பிறகு இருபதுகளில் என்று ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உருவ ஒற்றுமையுடன் கூடிய மூன்று நடிகர்களை நடிக்கவைத்திருப்பது என அளவுக்கும் அதிகமாகக் கடினமாக உழைத்துத்தான் இந்தப் படத்தைத் திரையில் பதிந்திருக்கிறார்கள்....... வித்தியாசமான திரைக்கதை வடிவங்களை விரும்பும் பார்வையாளர்கள் நிச்சியம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்! 


 பதிவின் அதிக நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்! உங்கள் கருத்துக்களை மறுமொழியில் தெரிவியுங்கள்....... பேசுவோம்! :-)


அன்புடன்,

பிரபு எம்























Monday, October 09, 2017

கல்லீரல் , கிட்னி மற்றும் பரோல்!

ஒருபுறம் சிறைச்சாலை.... பரோல்....

மறுபுறம் மருத்துவமனை..... உறுப்புதானம்!

ஒரு கணவன்... ஒரு மனைவி... மற்றும் சில உறவினர்கள்...


இந்த விஷயத்தையொட்டி, நடந்த, நாமனைவரும் அறிந்த சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே இந்தப் பதிவு அதன்பிறகு ஒரு சின்ன சந்தேகம் அவ்வளவுதான்....

சிறைச்சாலைப் பின்னணியில் ஷாப்பிங் போன சர்ச்சை வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது....  "5 ஸ்டார் ஜெயில்" போன்ற விஷயங்கள் நமது மூளையின் ஞாபக அறைகளில் எந்த அடுக்கில் உள்ளது என்பதை ஒருமுறை சரிபார்த்துக்கொள்க:( லைட்டா மறந்தமாதிரி இருக்குல்ல??!!)

1)  "பரோல் மறுக்கப்பட்டது" என்று ஒரு தலைப்புச் செய்தி தொடர்ந்து எல்லா சேனல்களிலும் இணையங்களிலும் அடுத்த நாள் செய்தித்தாள்களிலும் முறையே பிரேக்கிங் நியூஸ் மற்றும் தலைப்புச் செய்தி ஆனது!

உள்ளே வாசித்துப் பார்த்தால் மெடிக்கல் சர்டிஃபிகேட் இணைக்கப் படவில்லை என்று ஒரு காரணம் சிறைத்துறையில் இருந்து கொடுக்கப்படுகிறது! (இது என்ன பெரிய பிரச்னையா? வீக்கென்ட் (Weekend) முடிந்தவுடனேயே மருத்துவச் சான்றிதழை இணைத்து மீண்டும் விண்ணப்பத்தால் எளிதில் கிடைக்கப்போகிறது அவ்வளவுதானே! என்று தோன்றியது)

2 ) சிவப்புக் கட்சியில் இருப்பதாக சொல்லப்படும் ஒரு மூத்த தலைவர் "பரோல் மறுக்கப்படுவது மனிதாபமானமற்ற செயல்" என்று சம்பந்தமே இல்லாமல் கூவுகிறார்! இவரது நிறம் சிவப்புதான் ஆனால் கடந்த சில வருடங்களாகவே "இலை"யுடன் பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து குதப்பினால் மட்டுமே "சிவப்பு" தோன்றும் என்று உறுதியான நம்பிக்கையுடன் செயலாற்றும் கிழவராகத்தான் இவர் திகழ்கிறார்!

3) 'பரோல் கிடைப்பதில் மட்டுமல்ல, உறுப்புகள் கிடைப்பதிலும் பல்வேறு இடைஞ்சல்களை சந்தித்து வருகிறோம், இதையெல்லாம் யார் செய்கிறார்கள் ஏன் செய்கிறார்கள் என்பதற்குள் செல்லவில்லை ஆனால் இவை நல்லதல்ல' என்கிற ரீதியில் சம்பந்தப்பட்டவர்களின் முக்கிய உறவினர் ஒருவர் பேட்டி கொடுக்கிறார் அதுவும் பிரேக்கிங் நியூஸ் ஆகிறது!

4) உறுப்புகள் தானமாகக் கிடைக்கப்பெற்றதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன!

5) அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது.....

6) பரோல் கிடைக்கிறது..... 15 நாட்கள் கேட்கிறார்கள் 5 நாட்கள் மட்டும் கிடைக்கிறது ... நிபந்தனைகளுடன்.... (ஒரு நிபந்தனை என்னவென்றால் யாரையும் தன்னிடம் வரவழைத்து சந்திக்கக்கூடாது ஆனால் தானாக வரும் நபர்களை சந்திக்கலாம்! யாருக்காவது தெளிவாகப் புரிந்தால் தயவுசெய்து விளக்குங்கள்!)

7) பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.....

இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்... பொதுவாகவே ஒரு விஷயம் அடிக்கடி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது அது என்னவென்றால், பல்வேறு செய்திகளின் மூலம் "மக்களின் கவனத்தை திசை திருப்புவது" எனும் விஷயம்தான்! அதன் அடிப்படையில் எழுந்த சில சந்தேகங்கள் பின்வருமாறு:

1)  பரோல் நிராகரிக்கப்பட்டது பிரதான தலைப்புச் செய்தியாக கொட்டெழுத்தில் வந்தது, செய்தியின் உள்ளே சிறிய எழுத்துகளில் அதற்கான உப்புசப்பற்ற காரணம் இருந்தது அதன்பிறகு பரோல் கிடைத்தபோதும் 15 நாட்கள் கேட்டதற்கு 5 நாட்கள்தான் கிடைத்திருக்கிறது மேலும் நிபந்தனைகள் என்று எல்லாமே மிகவும் முறைப்படி ஒரு கண்டிப்புடன் நடப்பதுபோல் தோன்றுகிறதா இல்லையா? இவ்வளவு கண்டிப்பு காட்டும் அண்டை மாநில சிறை நிர்வாகம் ஏன் பழைய "ஷாப்பிங்" சர்ச்சையை இன்னும் தெளிவாக ஆதாரப்பூர்வமாக மறுக்கத் தயங்குகிறது??

2) உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் மற்றும் எண்ணற்ற இடைஞ்சல்கள் (அரசு தரப்பிலிருந்து என்னும் உள்ளர்த்தத்துடன்) கொடுக்கப்பட்டது என்னும் சேதி முதன்மை ஊடகங்களில் தெளிவாகப் பதியப்பட்டது.... ஆனால் உறுப்பு மாற்றத்தையொட்டி வெளிவந்த பல விதிமீறல்கள் நேரடியாகப்  புலனாய்வு பத்திரிக்கைகளின் கன்டென்டுக்கு சென்றுவிட்டதே? ஏன்?

உடல்நிலை சம்பந்தப்பட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு தரப்பு கடுமை காட்டுவதாக ஒருபுறம் செய்திகள் அழுத்தமாகப் பதியப்படும்போது, "விதிமீறல்கள்" விஷயத்தில் இதுவரை அரசுதரப்பில் இருந்து எந்தக் கேள்வியும் எழுப்பப்பட்டதாகத் தெரியவில்லை! இரு தரப்புகளுக்கிடையே கடுமையான மோதல் இருக்கும்போது "மனிதாபிமானம்" இல்லாத அளவுக்குக் கடுமைகாட்டும் அரசு, எதிர்த்தரப்பில் இருக்கும் வெளிப்படையானதொரு லூப்-ஹோலை (Loop hole) இவ்வளவு எளிதாக எப்படி விட்டுவைத்திருக்கிறது??? முதலில், அரசுத் தரப்பின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இல்லாமல் இப்படி கல்லீரல் மற்றும் கிட்னி கிடைப்பதில் சீனியாரிட்டி முதல் மொத்த உடலையும் அவசர விமானத்தில் எடுத்துச்சென்றது வரை இவ்வளவு சந்தேகத்துக்குரிய ஒரு விஷயம் நடந்திருக்க வாய்ப்பு உண்டா??

நிகழ்காலத்தில் அமைச்சர்களின் மங்குனித்தனமான ஸ்டேட்மெண்டுகளைப் பார்த்தால், உண்மையிலேயே இவர்கள் மோதிக்கொள்கிறார்களா? அல்லது இதுவும் சும்மாக்காச்சுக்கு சண்டைதானா? என்று எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா என்று தெரிந்துகொள்ள மட்டுமே இந்தப் பதிவு!

எந்தவொரு பெரிய பிரச்னை எழும்போதும், பிரிந்துகிடக்கும் அணிகளுக்குள்ளே ஏதாவது ஒரு கோமாளித்தனமான சர்ச்சை கிளம்பி பரபரப்புப் பிரியர்களையெல்லாம் இந்த சர்ச்சைகளுக்குள்ளே இழுத்துப் புதைத்துவிடுகின்றதாகவும் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா?? புரியவில்லை......!

அன்புடன்,
பிரபு எம்

Thursday, October 05, 2017

ஓவியாவின் பிக்பாஸ்!

ஆரவ்வின் வெற்றியை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, பிக்பாஸ்ஸின் பிரம்மாண்ட வெற்றியைப் புறக்கணித்துவிட முடியவே முடியாது!



கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பு தொலைக்காட்சி நேயர்களையும், தொலைக்காட்சியே பார்க்காதவர்களையும் தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியின் முன்பு கரைஒதுங்க வைத்தது பிக்பாஸ் என்பது மிகையற்ற உண்மை!



வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறக்கிற, வளர்கிற மக்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம்,  என்று பல அடுக்குகளில் ஒரு குழுவாகப் பயில்கிற, பணியாற்றுகிற  சூழல் உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் நிலவுகிறது. அவ்வாறு வாழும்போது ஏற்படும் Groupism-ல் தொடங்கி அந்த Group களுக்குள் எழும் குட்டிக்குட்டி Racism  வரை, நாம் படும் இன்னல்கள் சொல்லி மாளாதவை! சட்டப்படி குற்றமில்லாத இந்தப் பிரச்னைகளை அதிகபட்சம் யாரிடமும் நாம் பகிர்ந்துகொள்வது கூட இல்லை அதைவிட மோசம், இதுபோன்ற பாதிப்புகளால் அன்றாட வாழ்வில் எக்கச்சக்கப் பிரச்னைகளுக்கு நாம் ஆளானாலும் நம்முடைய மனமே இவற்றையெல்லாம் வெகு விரைவில் மறந்துவிடும், ஆனால் இவற்றால் ஏற்படும் சேதங்கள் மட்டும் வாழ்வின் பல்வேறு பக்கங்களில் ஒட்டிக்கொண்டுவிடுவதுதான் அபாயம். அதேவேளையில் இத்தகைய வாழ்க்கை முறையில் சிலபல பிரத்யேகப் பண்புகளை வளர்த்துக்கொண்டு திறம்பட செயல்பட்டால்  நம்மளவில் நாமும் நட்சத்திரமாக ஜொலிக்கலாம் என்னும் பாஸிடிவ்வும் இதில் உண்டு என்பதை மறுக்க முடியாது! இவற்றையெல்லாம் முப்பது கேமராக்களால் அப்பட்டமாக வெளிக்கொணர்ந்த பிக்பாஸுடன் நாம் அழுத்தமாக ஒன்றியதில் ஆச்சர்யம் இல்லைதான்!

பரணி சுவர் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆக முயற்சிக்கும் காட்சிகளை ப்ரோமோவில் பார்த்ததில் இருந்து அன்றைய நாள் முதல் (இடையே ஜூலி அன் கோ மீண்டும் வீட்டிற்குள் வந்த சில எபிசோடுகள் நீங்கலாக) அனைத்து நாட்களுமே பிக்பாஸைத் தவறாமல் பார்த்தேன்... விரும்பித்தான் பார்த்தேன்.




இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தமட்டில் வெற்றியாளராக யார் வரவேண்டும் என்கிற பெரிய எதிர்பார்ப்பு எனக்கு ஆரம்பத்திலிருந்தே இல்லை, காரணம் இந்த விளையாட்டில் கலந்துகொள்ளும் போட்டியாளர் ஒரு பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவரின் முக்கியத் தகுதி ஏதோவொரு விதத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டு அவர் சார்ந்த துறையில் ஒரு “தோல்வியாளராக” இருக்கவேண்டும் என்பதுதான்.....! தன் துறையில் வெற்றிகரமாகக் கோலொச்சும் யாராவது 100 நாட்களுக்குத் தங்கள் பணியைத் துறந்து இப்படி டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியுமா என்ன?! ஆக நாம் ஏற்கெனவே நிராகரித்த நபர்களில் ஒருவரைத்தான் வாக்களித்துத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் அல்லது மீண்டும் நிராகரித்திருக்கிறோம்...  ஆனால் இது ஓவியாவுக்கு மட்டும் பொருந்தாது!



காரணம்.... ஓவியாவை ஒரு நடிகையாகத் தமிழ் சமூகம் எந்த நிலையிலும் கொண்டாடியதில்லை! அவரின் பாத்திரத்தேர்வு மற்றும் நடிப்புத் திறமையால் அவரை யாருக்குமே பிடிக்கவில்லை என்பதே உண்மை! ஆனால் பிக்பாஸில் ஓவியா தமிழர்களால் அனைத்துத் தளங்களிலும் கொண்டாடப்பட்டார், கொண்டாடப்படுகிறார்... ஆச்சர்யமாக இதற்குக் காரணம் அவரது அழகோ அல்லது உடைகளோ ஏன் திறமையோ கூட இல்லை! அவரது நேர்மையான வெளிப்பாடு அவருக்குக் கிடைத்த இந்த அபார வரவேற்புக்குக் காரணமாகியது மிகவும் நல்ல விஷயம்!   ”நேர்மை” என்பது  ஒரு quality கிடையாது அது ஒரு policy! "Honesty is the best policy" என்று நேரு குறிப்பிட்டிருக்கிறார்... “பாய்ஸ்” படத்தில் “ நேர்மைதான் வெற்றியின் ரகசியமே...” என்று ஒரு பாடல் கூட இருக்கும்.....  சரி “நேர்மை”க்குள் ஆழமாக செல்லவேண்டாம்..... ஓவியாவுக்கு வருவோம்....



ஓவியாவின் நேர்மை மிகவும் துணிச்சலானது அது என்னவென்றால் எப்போதும் தானாகவே இருப்பது! (being herself) அப்படியிருக்க மிகுந்த தைரியம் வேண்டும். ஏனென்றால்... தேவையற்ற விரோதங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் எப்போதும் நம்மை அதிகமாகச் சுற்றியிருக்கும் கோழைகள் மற்றும் சுயபுத்தி இல்லாதவர்களின் இனம் புரியாத கோபத்துக்கும் பகைக்கும் எளிதில் ஆளாக வேண்டியிருக்கும்... புரளிகளுக்கு இலக்காக வேண்டிவரும் இவற்றையெல்லாம் விட சில திடீர் நாட்டமைகளுக்கும் போலி ஒழுக்கசீலர்களுக்கும் பதில் சொல்லவேண்டிவரும்! இவையனைத்தும் ஓவியாவுக்கு நேர்ந்ததைப் பார்த்தோம்.... சிநேகன், ரைஸா போன்றவர்கள் இது போன்ற பிரச்னைகளுக்குப் பயந்துதான் பெரும்பாலான நேரங்களில் diplomaticகாக நடந்துகொண்டார்கள்... ஆனால் இவற்றை எதிர்கொண்டபோது ஓவியா தேர்ந்தெடுத்த straight forward approach  நிச்சியம் தோல்வியாளர்களின் ஆயுதம் அல்ல அது வெற்றியாளர்களுக்கு மட்டுமே திறம்பட அமையும் அணுகுமுறை! அந்த வகையில் ஓவியா நிச்சியம் இந்த  தோல்வியாளர் கூடாரத்திற்கு இடையே தனியாகத் தெரிந்தார் இதில் அதைவிட ஆரோக்கியமான விஷயம் என்றால் இதைத்தான் நம் மக்களும் ரசித்தார்கள்! கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் காயத்ரிக்கும் ஓவியாவுக்குமிடையே எந்த நேரடிப் பிரச்னையும் இல்லை! க்ளீனிங் டீமில் ஓவியா இருந்தபோது அவர் பங்குக்கு வேலை செய்துகொண்டுதான் இருந்தார்.... ஆனால் தேவையில்லாமல் நமிதா அவரை நாட்டாமை செய்ய முற்பட்டபோதுதான் பிரச்னை துவங்கியது! காயத்ரிக்குத் தேவையே இல்லாமல் ஓவியாவைப் பார்க்க பார்க்க வயிறெறிந்தது அதன் விளைவாகக் கண்றாவியாகப் பேசத் துவங்கி இன்றுவரை ட்விட்டரில்  நாறுகிறார்! சுயபுத்தி இல்லாத சக்தி செம டேமேஜ் ஆகிப்போய் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள் மக்கள்! ஜூலியின் ”குறும்பட”மோ ஓவியாவை ஒட்டுமொத்த பிக்பாஸுக்கும் ஹீரோயின் ஆக்கியது!



ஆனால் ஓவியா உண்மையாக இருந்தபோது அவரது கழுத்தை நெறித்த கும்பல்களின் முகமூடிகள் கிழிந்ததற்கு ஒற்றைக் காரணம் பிக்பாஸ் வீட்டின் கேமராக்களே! கேமராக்கள் இல்லாமல் நிஜ உலகில் உண்மையாக வாழும் ஓவியாக்களைக் காப்பாற்றக் கமலஹாசன்களோ அல்லது ஆர்மியோ நேவியோ இல்லாததுதான் சோகம்! பிக்பாஸ் வீடு அழகாய்த் தெரிந்தது ஓவியாவால்தான் ஓவியா அழகாய்த் தெரிந்தது அவர் யார்போலும் இல்லாமல் “ஓவியா”வாகவே இருந்ததுதான்! இப்போது அவரைக் கண்டால் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது... எந்தவொரு பிரபலமும் ஏங்குவதற்கு இந்தப் புகழுக்காகத்தான் ஆனால் இதற்கும் ஓவியாவிடம் பெரிய மாற்றம் தென்படவில்லை..... அதே ஓவியாவாகத்தான் தொடர்கிறார்! ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் உண்மையாக, நேர்மையாக இருந்து மக்களின் லைக்ஸை அள்ளியபோதும் “ஓவியா” என்னும் பிம்பம் இப்போது பயன்படுவது பெரிய முதலாளிகளின் விளம்பரப் பகட்டுகளுக்குத்தான். கொஞ்சம் பொறுப்புணர்வோடு செயல்பட்டால் இந்த “பிக்பாஸ் ஓவியா”வின் பயன்பாட்டை நல்ல வழிகளில் கொண்டு சேர்க்கலாம். இந்த பிம்பமும் வீணாய்ப்போகுமுன் இதனைச் சீரமைக்க யாராவது முன்வந்தால் நலம் இல்லாவிட்டால் கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்டயாகிப்போய் அந்த முட்டையும் கூமுட்டையாகித்தான் போகும்!

பிக்பாஸின் மற்ற போட்டியாளர்களைப் பற்றிய பகிர்வு.... நேரமிருந்தால் மட்டும் பார்க்கவும்!




ஆரவ் : இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வந்த முதல் நாளே தெளிவாகச் சொன்னார் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு ஒரு நல்ல ஓபனிங் கிடைக்கும் என்றுதான் இதில் பங்குபெறுகிறேன் என்று! வெற்றி பெறாவிட்டாலும் அந்த நோக்கம் அவருக்கு நிறைவேறியது நிஜம். மற்றபடி டைட்டிலுக்குத் தகுதியானவரா என்று பார்த்தால் கடைசி நான்கு போட்டியாளர்களில் “குறும்படம்” மூலம் அசிங்கப்பட்டவர் இவர் மட்டுமே! அதற்குமேலும் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றது ஆச்சர்யமாகத்தான் இருந்தது!



ஜூலி : ஏகப்பட்ட திட்டங்களுடன் தான் அம்மணி பிக்பாஸுக்கு வந்திருக்கிறார்.எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் ஆட்சி செய்யும் சமகால தமிழகத்தில் வெற்றிகரமாகப் பிழைப்பதற்கு ஜூலிக்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன காரணம் ஜூலிக்கு சுயமரியாதை சுத்தமாகக் கிடையாது!



கணேஷ் - இவரை ”உன்னைப் போல் ஒருவ”னில் கரடுமுரடான போலீஸ் அதிகாரி “ஆரிஃப்” என்கிற பாத்திரத்தில் பார்த்தபோது பிரமிக்கும் அளவு நடித்திருந்தார்! அதன்பிறகு ”அபியும் நானும்” முதல் “தனி ஒருவன்” வரை இவரது செயல்பாடுகளைப் பார்த்தபோது தமிழ் சினிமா வீணடிக்கப்போகும் இன்னொரு ரியாஸ்கான் இவர் என்றுதான் நினைத்தேன். தற்போது இவரது கரியருக்கு நிச்சியம் பிக்பாஸ் கை கொடுக்கும் என்றுதான் நினைக்கிறேன்... சொல்லப்போனால் கணேஷுக்கு ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருந்தது ஆனால் கடைசி கட்டத்தில் பாயிண்டுகள் விஷயத்தில் படு அல்பமாக செயல்பட்டது பலரையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது.... மேலும் கணேஷுக்கு ஓர் எண்டர்டெய்னராகத் (entertainer) தன்னை நிலை நிறுத்திக்கொள்ளத் தெரியவில்லை.... முப்பது கேமராக்கள் முன்னிலையில் மக்களை வசீகரிக்க முற்படாமல் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கும் ஸ்கூல் பையனைப் போலத்தான் முற்றிலும் நடந்துகொண்டார்! எது  எப்படியோ, இரண்டு/மூன்று வாரங்களுக்கு முன்பாக “துப்பறிவாளன்” படம் பார்த்தபோது மதுரையில் ஒரு தியேட்டரில் கணேஷ் நடித்த ஒரு விளம்பரம் திரையில் வந்தபோது ஜனங்கள் கைதட்டினார்கள்..... ஸோ.. மிஷன் சக்ஸஸ்தான் கணேஷுக்கு!



பரணி :  இவருக்கு நிச்சியம் பிக்பாஸ் சிறப்பானதொரு விசிட்டிங் கார்டுதான்! பெண்கள் விஷயத்தில் தவறாக நடந்துகொள்பவர் என்று இவர்மீது அபாண்டமான குற்றச்சாட்டு வைத்தவர்கள் எல்லாம் எந்தமாதிரியான பெண்கள் என்று ஷோவைப் பார்த்த அனைவருக்குமே எளிதில் புரிந்துபோன காரணத்தால் அந்தக் குற்றச்சாட்டே பரணிக்குப் பெரிய ப்ளஸ்பாயிண்டாகிப்போனது! தனது பணிவான நடத்தையின் மூலம் பரணியும் கிடைத்த நற்பெயரைக் கவனமாகக் கையாண்டு வருவது வரவேற்கத்தக்கது!



வையாபுரி :   வையாபுரி தான் இழந்த மார்க்கெட்டை மிகச் சிறப்பாக நிலை நிறுத்திக்கொள்வார் என்றுதான் நினைக்கிறேன். சொல்லப் போனால் பிக்பாஸ் விளையாட்டைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர் வையாபுரிதான்! ஆரம்பத்தில் ஹோம்சிக்னஸ் இவரை ரொம்பவே வாட்டியெடுத்தது ஒவ்வொரு திங்கட்கிழமையும் இவர் ரிமைண்ட்டர் வைத்து அழுததெல்லாம் ஒரு தரப்பினரால் கிண்டலுக்கு உள்ளானது என்றாலும், ஒட்டுமொத்தமாக வையாபுரியின் செயல்பாடுகள், confessionகள் அனைத்தையும் பார்வையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம்தான் இருந்தது. வயது காரணமான தொய்வைக் கமல்ஹாசன் குறிப்பிட்டுச் சொன்னபோதெல்லாம் அதை சிரமேற்கொண்டு செயல்படுத்திட முனைந்தவர் இவர் ஒருவர்தான் என்று நினைக்கிறேன். எந்தக் கட்டத்திலும் மக்களின் ஓட்டுகளைக் கவர்வதற்காக என்று எந்த அபத்ததையும் நிகழ்த்தாத ஒரே போட்டியாளரும் இவர்தான். அதேபோல தன்னுடைய character-ல் பெரிய மாற்றம் கண்ட வெளிப்படையான போட்டியாளரும் இவரே! ஆல் தி பெஸ்ட் மிஸ்டர், வாய்ப்புரி!





ரைசா வில்சன் : அட்டகாசமான மாடல் இவர். அறிமுக மேடையிலேயே இவர் நடந்து வந்த மிடுக்கில் catwalk அனுபவமும் தன்னுடைய பிம்பத்தைத் தன்னுடனே அனாயசமாக சுமக்கும் வித்தை தெரிந்தவர் என்று மிக எளிதில் விளங்கியது (Carrying herself -என்று சிம்பிளாக ஆங்கிலத்தில் சொல்லலாம்) பெங்களூரில் வாழும் மாடல் இவர் அவ்வளவுதான் ஆனால் பிக்பாஸ் வீட்டில் சிலசமயங்களில் இவர் ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த இளவரசி போல சீன் போட்ட சமயங்களில் எல்லாம் தமிழர்கள் வடிவேலு ஸ்டைலில் “கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்!” என்று டாட்டா காட்டிவிட்டார்கள் ஆனால் தான் செய்யும் அட்ராசிடிகளை எல்லாம் அந்த எரிச்சல் மூட் மாறிய உடனேயே, தன்மீதான தவறை ஓபனாக ஒத்துக் கொளவதும் மற்றவர்களுடனான அதிருப்திகளையும் எளிதில் மறந்து கடந்துவிடுவதும் ரைசா ஸ்பெஷல். நியாயமாக எவ்வளவு தூரம் பிக்பாஸில் இவர் இருந்திருக்கலாமோ அவ்வளவு நாட்களுக்கு மக்கள் இவரை அனுமதித்தார்கள் என்று சொல்லலாம்!



ஆர்த்தி : பிக்பாஸுக்கு முந்தைய அபிப்ராயம் இவர் மேல் ரொம்ப புத்திசாலி பொண்ணு என்றுதான் இருந்தது! ஆனால் attitude என்கிற ஒரு விஷயம் கண்டபடி சொதப்ப ஜூலிக்கு முன்பு அக்கா வெளியேற நேர்ந்தது பரிதாபம்.... மக்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகி வெளியேறினாலும் சற்றும் தொய்ந்து போகாமல் தைரியமாக அடுத்தடுத்துப் பொதுவெளியில் தோன்றி புத்திசாலித்தனமாகத் தன் மீதான நெகடிவ் இமேஜை மாற்றியது ஆர்த்தியின் திறமைதான்! பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய ரீ-எண்ட்ரியில் நன்றாக இவர் ஸ்கோர் செய்தார் என்றுதான் அந்த எபிசோடுகளைப் பார்த்தவர்கள் சொன்னார்கள்!



சிநேகன் :  “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...”
“ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள....”
“ஆராரிராரோ... தாயே நீ கண்ணுறங்கு....”
போன்ற சமகாலத்தின் கருத்து செறிவுள்ள தமிழ்த்திரைப்பாடல்களை எழுதிய கவிஞர் ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என்று நம்பிக்கையாக சொல்லுவார் என்றால் அவர் பெயர் சிநேகன்!
நான் பார்த்த வரையில் பச்சமண்ணாக இருக்கும் வெள்ளந்தி மனிதன் தான் இவர் ஆனால் ஏனோ இவர்மீது இவருக்கே இருக்கும் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையோ என்னவோ தெரியவில்லை தேவையே இல்லாமல் தன்னைத்தான் ஒரு கடினமான ஆசாமி போலக் காட்டிக்கொள்ள முனைந்து, காண்ட்ரவர்சிகளில் தலையைக் கொடுத்து, காமுகன் போல நடந்துகொண்டு ஆரம்பகட்டத்தில் ரொம்பவே இம்சையைக் கொடுத்தார் ஆனால் முகமூடிகள் இல்லாத இவரது முகம் சராசரியான ஒரு harmless மனிதராகத்தான் இருந்தது! இவர்மட்டும் தன்னுடைய சுயத்தை சேதப்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து இயங்கினால் இயல்பாக submissive ஆன மனிதராக இவரை எல்லாருக்கும் பிடிக்கத்தான் செய்யும் என்று நினைக்கிறேன்!



சுஜாவருணீ :  கடுமையான இவரது உழைப்பைக் கேனத்தனமான செயல்களால் இவரே கெடுத்துக்கொண்டார் இருந்தாலும் இப்போது சுஜாவை எல்லாருக்கும் தெரியும்! ஓடிப்போன இவருடைய அப்பாவையும் இப்போது எல்லாருக்கும் தெரியும்! :-))



பிந்துமாதவி / ஹரீஸ் : இவர்கள் இருவருமே பிக்பாஸ் வீட்டின் சாக்லேட் பேபீஸ்! தங்களது கரியருக்கு இந்த பிக்பாஸ் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட புத்திசாலிகள்! ஹரிஷ் பிக்பாஸ் வீட்டின் புஜ்ஜிம்மாவாக இருந்ததை எல்லாரும் ரசித்தது உண்மைதான் ஆனால் அந்த இமேஜ் ஹீரோவாக நடிக்கும்போது அவருக்குப் பிரச்னையாக இருக்குமா என்று தெரியவில்லை!



காஜல் :  எப்படி வந்தாரோ அப்படியே இருந்தார் எப்படி இருந்தாரோ அப்படியே கிளம்பியும் சென்றார்! பிக்பாஸ் வீடு காஜலைக் கடந்து சென்றது போலவேதான் பிக்பாஸ் அனுபவத்தையும் ஜஸ்ட் கடந்து போனார் காஜல்!



என்னைப் பொறுத்தவரை, இவர்களைத் தவிர பிக்பாஸ் முதல் சீஸனில் கலந்துகொண்ட எல்லாருமே ஏதோ கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டு கிடைத்த வாய்ப்பையும் கோட்டை விட்ட மண்டுகள் தான்! (ஸ்ரீ, அனுயா நீங்கலாக!)

இது பிக்பாஸ் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும்போதே எழுதி ட்ராஃப்டில் இருந்த பதிவு.... இதைப் பதிவிட ஆர்வம் இல்லாமல் போகவே அப்படியே விட்டுவிட்டேன்.... இப்போது பிக்பாஸ் முடிந்துவிட்ட வேளையில் பட்டி டிங்கரிங் பார்த்துப் பதிவிடுகிறேன்..... பிடிக்காதவர்களுக்கு ஸாரி!

அன்புடன்,
பிரபு எம்















Sunday, October 01, 2017

Eternal Sunshine of the spotless mind (2004) - ஹாலிவுட் திரைப்படம்

Starring:       Jim Carrey, Kate Winslet, Kristen Dunst
Written by:   Charlie Kaufman
Directed by: Michael Gondry


”நினைக்கத் தெரிந்த மனமே... உனக்கு மறக்கத் தெரியாதா?!
 பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?”

”ஆனந்த ஜோதி”(1963) திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் - தேவிகா காதலுக்காகக்  கண்ணதாசன் எழுதிய எவர்கிரீன் “ப்ரேக்-அப்” சாங் இது! "Eternal sunshine of the spotless mind" ஜிம்கேரி-கேட்வின்ஸ்லெட் நடிச்ச படமாச்சே... என்று குழம்ப வேண்டாம்! (கொஞ்சம் லேட்டாக) மேட்டருக்கு வந்துவிடுகிறேன்...



மனித உறவுகளில் தாய், தந்தையில் தொடங்கி நண்பர்கள் வரைக்கும் இருக்கும் எல்லா உறவுகளாலும் வாழ்வில் சிலருக்கு  “ஏமாற்றங்கள்”   நிகழத்தான் செய்கின்றன..... சிலவற்றை மன்னிக்கிறோம் பலவற்றை மறந்து உறவுகளில் கலந்தும்விடுகிறோம்... ஆனால் “ஏமாற்றம்” ஏற்பட்ட உடனேயே  சம்பந்தப் பட்டவர்களை நினைவுகளைவிட்டே நாம் அழித்துவிடத் துடிப்பது உடைந்துபோன காதல் உறவுகளில் மட்டும்தான்!

 மற்ற உறவுகளால் எப்பேர்ப்பட்ட துரோகத்தை சந்தித்தாலும், பரம விரோதிகளாகிப் போனாலும் கூட அவர்களுடனான நினைவுகள் மூளையின் ஏதோ ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போவதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.... ஆனால் பெரும்பாலும் காதலர்கள் மட்டும் ஏனோ தெரியவில்லை “ப்ரேக்-அப்” ஆகிவிட்டால் அதுவரை அவர்கள்  நேசித்தவர்களின் நினைவுகளை, ஸ்பரிஸங்களை, மனதில் தங்கிவிட்ட அவர்களின் உருவங்களை ஏன் நெருங்கி முகர்ந்த மணங்களைக் கூட மனதைவிட்டு மொத்தமாக அழித்துவிடத் துடிப்பார்கள்! என்னதான் முனைந்தாலும் எவ்வளவுதான் முயன்றாலும் மனித மனதில் "Backspace" பட்டன் இல்லாததை நினைத்து வருந்தித் தவிப்பார்கள்! அவர்களுக்காகத்தான் நினைவுகளைச் சேகரிக்கத் தெரிந்த மனதிற்கு அவற்றை மறக்கும் மெக்கானிஸம் தெரியவில்லையே என்று காதலின் வலியைக் கம்ப்யூட்டர் காலத்துக்கு முன்பாகவே நுணுக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன், ரியல் ஜீனியஸ்!

இங்கே, 2004-ஆம் ஆண்டு Michael Gondry இயக்கத்தில்,  வெளியான Eternal Sunshine of the Spotless Mind படத்திலும் கிட்டத்தட்ட அதே பிரச்னைதான் காதலர்களான ஜிம்கேரிக்கும் - கேட் வின்ஸ்லெட்டுக்கும்!

இந்தப் படத்தின் திரைக்கதை நகர்வதும், காட்சிகள் இடம்பெறுவதுமான கதைக்களமே நாயகனின் மனம்தான்! அதுதான் படமாக்கலின் மிகப்பெரிய  ஹைலைட்டான அம்சம்! திரைக்கதையில் இடம்பெறும் இடங்கள், மாந்தர்கள், பொருட்கள் உட்பட எல்லாமே கதை நாயகனின் மனதில் அவை பதிந்திருக்கும் விஷுவல் பதிவுகளாகத்தான் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்! உருவமில்லாத மனித மனத்தை வண்ணங்களின் துணைகொண்டு மாடர்ன் ஓவியங்களாக ஓவியர்கள் வடித்தெடுத்திருக்கிறார்கள், இங்கே திரைக் கலைஞர்கள் அகக் கண்ணுக்கு  மட்டுமே புலப்படும் மனதின் ரூபங்களை ஆடியன்ஸின் கண்களுக்குத் திரை விருந்தாக்கியிருப்பதுதான், மேலுக்குச் சாதாரணமாய்த் தோன்றும், இந்தக் காதல் கதைக்கு "Cult" அந்தஸ்துக் கிடைத்திருப்பதன் காரணம்!

ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் போலவே காட்சியமைப்புகள் மிரட்டினாலும், இது ஓர்அக்மார்க் காதல்கதை என்பதுதான் க்ளைமேக்ஸ் வைத்திருக்கும் சர்ப்ரைஸ் ட்விஸ்ட்!

ரொம்பவே சாதாரணனாகக் காட்சியளிக்கும் ஜிம்கேரி ஒரு சாதாரண நாளில் தனது ஆஃபிஸுக்குக் கட் அடித்துவிட்டு சம்பந்தமேயில்லாமல் Montauk என்னும் இடத்துக்கு செல்லும் ட்ரெயினில் ஏறிப் பயணிப்பார்.... அதே ட்ரெயினில் கேட் வின்ஸ்லெட்டைப் பார்ப்பார். பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்குமிடையே பரிச்சியம் ஏற்பட்டுவிடும். இயல்பாக ஒட்டிக்கொள்ளும் ஒரு நல்ல ஜோடியாகப் பளிச்செனப் பதிந்துவிடுவதாகத்தான் காட்சிகள் நகரும்..... ஆனால் சில நிமிடங்கள் கழித்துதான், ஜிம்கேரியும் - கேட் வின்ஸ்லெட்டும் ஏற்கெனவே காதலித்து இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து காதல் வாழ்க்கை கசந்துப் பிரிந்தவர்கள், என்று குழப்பமான Non-Linear காட்சிக்கோர்வையின் மூலம் திரைக்கதை நமக்கு உணர்த்தும்! அதனை அடுத்த ஒரு காட்சியில், ப்ரேக்-அப் ஆன வலியில் ஜிம்கேரி முழுமையாக மீண்டுவிடாத வேளையில் கேட்வின்ஸ்லெட்டை அவுட்டோரில் சந்திப்பார் அப்போது கேட் வின்ஸ்லெட் ஜிம்கேரியிடம் அவரை முற்றிலும் யாரென்றே தெரியாததுபோல் நடந்துகொள்வார்..... அப்போதுதான் தெரியவரும்  கேட் வின்ஸ்லெட் Lacuna, INC என்னும் (கற்பனை)கம்பெனியின் உதவியுடன் தன்னை மிகவும் தொல்லை செய்யும் தன் பழைய காதலன் ஜிம்கேரியின் நினைவுகளை மொத்தமாகத் தன்னுடைய மூளையிலிருந்து டெக்னாலஜிக்கலாக அழித்துவிட்டார் என்று! இதனால் மேலும் மனமுடைந்து போகும் ஜிம்கேரி, தன்னுடைய  நினைவுகளில் இன்னும் பழைய காதலியாக வாழும் கேட் வின்ஸ்லெட்டின் தடங்களைத் தானும் அழித்துவிட அதே கம்பெனியின் உதவியை நாடுகிறார்!

Lacuna-வில் ஜிம்கேரியின் மனதிலிருந்து கேட்வின்ஸ்லெட்டின் நினைவுகளை அழிக்கும் procedure-ன் போது அங்கு அரங்கேறும் வித்தியாசமான சம்பவங்களும், ஜிம்கேரியின் மனதின் நினைவுகளின் காட்சிப்பதிவுகளும்தான் கிட்டத்தட்ட எண்பது சதவீத திரைக்கதை! அழிக்கப்படும் மனதின் பதிவுகளை விஷுவலாகக் காட்டுவதில் நிகரற்ற கற்பனைவளமும் க்ரியேட்டிவிட்டியும் நம்மை பிரமிக்கவைக்கும்... (என்ன நடக்குது... என்ன சொல்லவர்றாய்ங்கன்னு மூளையையும் பிஸியாக வைத்திருக்கும்!)

கேட்வின்ஸ்லெட்டின் நினைவுகளை மொத்தமாக அழிக்கும் ப்ராசஸ்ஸுக்காக (process) சக்திவாய்ந்த sedation கொடுக்கப்பட்டு ஜிம்கேரி ஆழ்நிலைத் தூக்கத்தில் இருக்க, ஜிம்கேரியின் மூளை நரம்புகளுடன் இணைக்கப்பட்ட கணினியின் துணையோடு அவர் காதலியின் தடங்கள் பதிந்திருக்கும் நினைவுகளைப் பிரித்து அவற்றை முற்றிலுமாக  அழிக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கும்.... அந்த நேரம் பார்த்து, ஜிம்கேரிக்கு தன்னுடைய காதலியின் நினைவுகளை முழுமையாக அழித்துவிட மனம் ஒப்புக்கொள்ள மறுக்கப் பிரச்னை ஆரம்பிக்கிறது. பாதிக்குப் பாதி அழிந்துவிட்ட நிலையில் அவரது மூளை, ஆழ்நிலை மயக்கத்தில், இவர்களின் மறக்கவைக்கும் மெக்கானிஸத்துக்கு எதிர்ப்பு காட்ட ஆரம்பிக்கிறது! இன்னொரு பிரச்னை என்னவென்றால் அதே நேரத்தில் Lacuna கம்பெனிக்குள்ளும் பல உள்ளடிப் பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வருவதுதான்!

 ஜிம்கேரியின் நினைவுகளை அழிக்கும் பணியிலிருக்கும் நிபுணர்களான ஸ்டேனுக்கும் மேரிக்கும் இடையே காதல் என்கிற பெயரில் காமப் பகிர்வுகள், ஜிம்கேரி உறங்கவைக்கப்பட்டிருக்கும் அதே அறையிலேயே, அரங்கேறிக்கொண்டிருக்கும்.... ஒருகட்டத்தில்  அன்-கான்ஷியஸில் வைத்து காதலியின் நினைவுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஜிம்கேரியின் மூளை (conscious brain) தன் காதலியின் நினைவுகளை மறக்க மறுத்து எதிர்வினை ஆற்ற ஆரம்பிக்க க்ளினிக்கலாக   ஜிம்கேரியின் நிலை மிகுந்த சிக்கலுக்குள்ளாகிவிடும். அப்போது ஒரு high risk situation-ல்  Lacunaவின் தலைவரான டாக்டர்.ஹாவோர்ட் அந்த நள்ளிரவு வேளையில் தானே நேரில்வந்து சிக்கலான இந்த கேஸில் troubleshoot செய்ய வருகிறார். அப்போது நேரும் மேலும் பல குழப்பங்களுக்கிடையே,  மேரியுடன் ஏற்கெனவே டாக்டர் ஹார்வோர்ட் தவறான உறவுகொண்டிருந்ததும் பின்பு அந்த நினைவுகளை மேரியின் மூளையிலிருந்து அவரே அழித்ததும் தெரியவருகிறது! தற்சமயம் அவள் காதல் வயப்பட்டிருக்கும் ஸ்டேனும் அதேரீதியில்தான் தன்னை ஜஸ்ட் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் மேரிக்கு புலப்படும்!  அங்கே பணிபுரியும் இன்னொரு இளைஞனான பேட்ரிக், ஜிம்கேரியின் நினைவுக் குறிப்புகளின் மூலம் கேட்வின்ஸ்லெட்டின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கேட்டை அடைவதற்காக  வலைவிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் இன்னொரு ட்ராக்கில் அம்பலமாகும்!

  டாக்டர். ஹார்வோர்ட் மற்றும் Lacuna கும்பலின் துரோகத்தைத் தாங்க முடியாத மேரி (Kristen Dunst),  Lacuna மூலம் தங்கள் பழைய நினைவுகளை அழித்துக்கொண்ட அத்தனை கஸ்டமர்களுக்கும் அவர்களின் அழிக்கப்பட்ட உறவுகளின் தகவல்களையும் அப்போது பதிவுசெய்யப்பட்ட டேப்களையும் ரகசியமாக மேரி தபால் மூலம் அவர்களுக்கே அனுப்பிவிடுகிறாள். கேட் வின்ஸ்லெட்டுக்கும் ஜிம்கேரியுடனான, தான் அழித்துவிட்ட நினைவுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் அந்த தபால் வந்தடைகிறது!

ஜிம்கேரி - கேட்வின்ஸ்லெட் தங்கள் வாழ்வில் முதன்முறையாக சந்தித்துக்கொண்டபோது கேட்வின்ஸ்லெட் சொல்லும் ஒற்றை வாக்கியமான "Meet me in Motauk" ,  இத்தனைக் கலவரத்திலும் அழியாத காதலின் சாட்சியாய், மறக்காத வாக்கியமாய் இருவர் மனதிலும் தங்கிவிடுவதுதான் ஒருவருக்கொருவர் முற்றிலுமாய் மறந்துவிட்ட பழைய காதலர்களான அவர்களை சம்பந்தமேயில்லாமல் நிகழ்காலத்தில் Montauk  நோக்கிப் பயணிக்கச் செய்கிறது! ஞாபகங்களுக்குள்ளே கண்ணாம்பொத்தியாடும் ஒரு ஹை-டெக் காதல் விளையாட்டு முடிச்சுகள் எல்லாம் தெளிவாய் அவிழ்ந்த ஒரு விருவிருப்பான கட்டத்தில் அழகாய் முடிகின்றது!

ஓர் ஆண் மனதின் பதிவுகளுக்குள் புகுந்து அதில் அவன் காதலியைப் பிரித்தெடுத்து அவற்றை  நினைவிலிருந்து அழிப்பதும், அதற்கு தூக்கத்திலிருக்கும் காதலன் மனம் மறக்க மனமில்லாமல் அழிந்து கொண்டிருக்கும் நினைவுகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்கப் போராடுவதையும் ஓர் அரைத்தூக்கக் கனவாக, விஷுவலாக, உயிர்கொடுக்கும் காட்சியமைப்புக்காகவும்,  இத்தனைக் குழப்பமான கதைக்கு நேர்த்தியான திரைக்கதையமைத்து கடைசியில் குழப்பமுமின்றி நிறைவானதொரு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் திரைஎழுத்து வித்தைக்காகவும்தான் திரையுலகம் இந்தப் படத்தை இடைவிடாது கொண்டாடுகிறது!

Eternal Sunshine of the Spotless Mind! மனமும் மனம் சார்ந்ததுமான கருப்பொருள் படைப்பு - A poly-chromatic Dream in Technicolor!

எண்ணங்கள் வண்ணங்களாய் விரியும் திரைப்பட ஊடகத்தில் வண்ணங்கள் எண்ணங்களாய் திரைவிரியும் அதிசிய மேக்கிங்கை அவசியம் கண்டுகளியுங்கள்!

நினைத்தலும் மறத்தலும் என அழுத்தமான திரைப்படத்தைப் பார்த்துமுடித்தபின் மீண்டும், கண்ணதாசனே காதில் கவிதை வாசித்தார்.....

 நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? என்று!

டெயில் பீஸ்:

இந்தப் பதிவை எழுதிமுடித்திருந்த நேரத்தில் சமீபத்தில் இசை வெளியாகியிருக்கும், இன்னும் சில நாட்களில் ரிலீஸாகப் போகும் “மேயாத மான்” (தயாரிப்பு: கார்த்திக் சுப்புராஜ்) படத்தின்  பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.... அதில் ஒரு பாடலில் வரும் பின்வரும் வரிகளைப் பாருங்கள்.....

“உன் ஞாபகம் தீயிட, விறகாயிரம் வாங்கினேன்...
அறியாமலே நானதில் அரியாசனம் செய்கிறேன்...”

ஹாஹா... இந்த ஞாபகப் பிரச்னை ரொம்பப் பெரிய பிரச்னையாத்தான் இருக்கும்போலயே!

அன்புடன்,

பிரபு எம்



















Tuesday, September 26, 2017

”முதலமைச்சர் கமலஹாசன்” - மினி தொடர் - பாகம் 3 : ஆயுதம் அறிதல் (இறுதிப் பாகம்)

”தனிக்கட்சி துவங்குவது உறுதி.... அரசியலில் ஏற்கெனவே இறங்கிவிட்டேன்”

இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்!




என்று கமல்ஹாசன் தெளிவாக அறிவித்தபின், தன்னிலையைச் சரியாக அவர் செதுக்குவதிலும், கூர் தீட்டுவதிலும் கவனம் காட்டிவருகிறார்.... நாம் நம்முடைய நிலையில்  நமக்கான எல்லைகளில் என்ன செய்வதென்ற தெளிவு கொள்ள முற்படுவோம்.....

இப்பொழுது நம்முன்னே இருப்பது அரசியலுக்கு வந்துவிட்ட, தனிக்கட்சி துவங்க அரசியல் சூழ்நிலைகளையும் மக்களின் மனநிலைகளையும் ஆராய்ந்து வரும் கமல்ஹாசன்!

இன்றைய சூழ்நிலையில் கமல்ஹாசனின் முன் இருக்கின்ற கடுமையான  சவால்களை எல்லாம் எதிர்கொண்டு வெற்றிகண்டு முதலமைச்சர் பொறுப்பு (பதவி அல்ல) என்னும் “முள்கிரீடம்” சூடுவது என்பது அத்தனை சாதாரணமான காரியம் அல்ல என்பதை அவரே அறிந்திருக்கிறார்... தனக்கான கொள்கைகளை, திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்....  நம்மளவில் நாம் நம் நிலைப்பாடுகளை வகுத்துக்கொண்டிருக்கிறோமா? மினிதொடரின் இறுதிப்பாகம் இதுவே - ஆயுதம் அறிதல்.

”கமல்ஹாசன் வேண்டுமானால் வெற்றிபெறலாம் ஆனால் மீதமுள்ள 233 தொகுதிகளுக்கு அவர் நிறுத்தப்போகும் வேட்பாளர்களால் வெல்ல முடியுமா? முதலில் அத்தனை வேட்பாளர்களை அவரால் அடையாளம் காட்ட முடியுமா?”  இதுபோன்ற கேள்விகளைத்தான் பலரும் முன்வைக்கின்றனர்.... இது போன்ற வாதங்களைக் கிழட்டுத்தனமானக் கோழைவாதங்களாகவே பார்க்கிறேன்..... காரணம் தனிக்கட்சி ஆரம்பித்து ஒரு மனிதர் தேர்தலை எதிர்க்கொள்ளப்போகிறேன் என்று அறிவித்தாலே அதற்கு 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிக்காக உழைக்கப் போகிறேன் என்றுதானே அர்த்தம்?! அதில் வேட்பாளரை நிறுத்துவதும், வெற்றி பெற உழைப்பதும்  அவருடைய பிரச்னை.... முழுக்க முழுக்க அவரின் நேரம்... அவரின் உழைப்பு.... அவரின் முனைப்பு.... அவரின் வியூகம்..... எல்லாம் முடித்து தேர்தல் வந்தபின்பு அத்தனை தயாரிப்புகளும் முற்றுப்பெறப் போவது நமது இறுதி மதிப்பீட்டில் தானே!.... நம் முடிவுதான் நம்மை ஆளப்போகிறது... இதற்குமுன்பாக எதற்கு இந்த வேண்டாத ஆரூடம் நமக்கு? வெற்று ஆரூடங்கள்  தள்ளாமையின் அடையாளம்... இளமைக்கு அழகல்ல....!

இங்குதான் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களாகிய நாமும் வேட்பாளர்களாகிய கமல் போன்றோரும் மாற்றத்தை நோக்கிய அவரவர் பாதைகளை முதலில் அறுதியிட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது....

சென்ற பாகத்தில் குறிப்பிட்டதுபோல தமிழகத்தின் அடுத்த தலைமுறைத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான தேர்வுக்களத்தில், வாக்குரிமை பெற்றத் தலைமுறையினராக நாம் இருக்கின்றோம்... நமது ஆகப்பெரிய பொறுப்பை ஆற்றுவதில் நம் அதிகபட்ச ஆயுதம் எதுவென முதலில் நாம் தேர்ந்துகொள்ள வேண்டும்.... ஜனநாயகம் அனுமதிக்கும் போராட்ட வடிவங்களில் பதாகைகளைத் தாங்கிக் களம் காணும் வலிமை கொண்ட அறவழி வீரர்கள் நம்மிடையே உண்டு. அவர்களுக்கு அகிம்சையெனும் ஆயுதமும் தொன்றுதொட்டு உண்டு அதை அவர்கள் அறிவார்ந்து கையாள வேண்டும். களமிறங்கிப் போராட வாய்ப்பில்லாதவர்களுக்கும் இறுதி ஆயுதம் ஒன்று உண்டு அதுவே ஆட்காட்டிவிரல் நம்மை ஆளப்போகும் ஆளைக் காட்டும் வாக்குரிமை ஆயுதம்!

ரோடுகளில் இருக்கும் மேடு பள்ளங்களுக்கு வளைந்துகொடுத்து, தெருவிளக்கு இல்லாத இருளுக்கு ஈடுகொடுத்து, உயிர்காத்து பயணிக்கும்போது, அடாவடியாக வழிமறித்து ஒரிஜினல் உரிமத்தைக் கேட்கும்போது  நரம்புகளில் எழுகின்ற கோப அழுத்தங்களை சேமிப்போம்.....  நாளும் பொழுதும் கண்விழித்துப் படித்துக் கனவுகளோடு கண்ணசந்த வேளையில் ’நீட்’டை இறக்கி இளந்தளிரைக் கண்மூடச்செய்த கயமை கண்டெழுந்த ரௌத்திரத்தை வடிந்திடாது பாதுகாப்போம்..... தலைவணங்கா தமிழினத்தை, இடுப்பெலும்பு வளைந்த ஈனகும்பல், அடக்குமுறை ஆணவக்கூட்டத்திடம் அடகுவைத்த ஒவ்வொரு கணத்தையும் கண்களில் பொருத்திக்கொண்டே தினம் கண்துயில்வோம்..... எத்தனை நாள் ஒத்திவைத்தாலும் தேர்தல் என்று ஒன்று வந்தே தீரும்..... அன்று காட்டுவோம் நம் ஆயுதபலத்தை.... ஆட்காட்டிவிரல் நுனியில்....!

அதுவரையில் நமக்கிருக்கும் அதிமுக்கியப் பணிகள்.....
ஒன்று எதிரிகளை ஒருமைப்படுத்துவது......
இரண்டு  நம்மில் இருக்கும் பலமான ஆளுமைகளை ஒருங்கிணைப்பது.....

ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கும் நாளில் தான் வீழ்த்தப்போகும் முக்கிய எதிரியை இப்போதே இறுதிசெய்வோம்..... எவ்விதக் குழப்பமுமின்றி தெளிவுற நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது யாரை எதிர்த்து நாம் வாக்களிக்கப்போகிறோம் என்பதைத்தான் அந்தத் தெளிவுதான் யாருக்கு நம் வோட்டு என்ற தெளிந்த தேர்வை நோக்கி நம்மை வழிநடத்தும்..

அதைவிட முக்கியம் இப்போதைய மாற்றத்துக்கான ஆளுமைகளை ஒருமுகப்படுத்துவது! கமல்ஹாசனை மட்டும் இங்கே குறிப்பிடவில்லை.... என்போன்றோர் கமலை நம்புகிறோம்...... சிலர் திருமுருகன் காந்தி போன்றோரை உற்று நோக்குகிறார்கள்..... கரு.பழனியப்பனைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.... இன்னும் பலவிதமான முயற்சிகளை அறம்சார்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள் ஆனால் இவர்களுக்குள் நட்பு தேவையில்லை என்றாலும் பொதுவான எதிரியை வைத்துக்கொள்ளலாமே!

இவர்கள் ஒருவரையொருவர் நகங்களால் கீறீக்கொள்வதைத் தவிர்த்து ஆளும் சோம்பேறிகளுக்கு எதிராக முதலில் திரளலாமே! எதிரிகளை எழமுடியாத அளவு வீழ்த்தும்வரை ஒன்றாக செயல்படக்கூட வேண்டாம் ஒற்றை இலக்கை நோக்கி மாத்திரம் அவரவர் திசைகளிலிருந்தே அம்புகள் எய்யலாமே, அவர்களுக்குள்ளே கிழித்துக்கொள்ளாமல்! அயோக்கியனெல்லாம் ஒரே அணியில் இருக்கும்போது அம்புகளை ஒரே திசையில் குறிவைக்காமல் இன்னும் யாருடைய வில் வலியது என்று பட்டிமன்றம் எதற்கு என்பதுதான் புரியவில்லை! ஆதரவாளர்களாவது இதைப் பின்பற்றுவோமே..... கயவர்களை வீழ்த்தியபின்னர் உரிமைக்குப் போர் புரிதல் வீரருக்கு அழகு!

சென்ற பாகத்தின் முடிவில் அணுகியிருந்த கேள்வி-பதில்களில் திமுகவுடன் இணங்கித்தான் கமல் வருகிறாரா என்னும் சந்தேகத்துக்குச் சரியான பதில் சொல்லவில்லை என்று என் நண்பன் முகநூலில் குறிப்பிட்டிருந்தான் அதற்கு என்னளவிலான விளக்கம்....

திமுக தான் அதிமுகவுக்கு வலுவான எதிர்முகாம், அவர்கள் கட்சியில் தான் இணையப் போவதில்லை என்று கமல் அறிவித்துவிட்டார்.... தனிக்கட்சி என்று அறிவித்துவிட்டாலே அது திமுகவுக்கும் சேர்த்துத்தான் பின்னடைவு ஏற்படுத்தும்... பின்னாளில் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்களைப் பற்றி கமல்ஹாசன்தான் முடிவெடுக்க முடியும் அதை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்காததும் அவரவர் முடிவு.... சூழ்நிலைகளையும் மனத்தடைகளையும் பொறுத்தது! பொதுவாகவே எதிர்க்கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்துக் கொள்வது என்னைப் பொறுத்தவரை குழப்பமான  அணுகுமுறை! (இதைத்தான் விஜயகாந்த் தெளிவாக செய்தார்!) எனவே இப்போதைக்கு ஆள்கிறவர்களை மட்டுமே கமல் கடுமையாக எதிர்ப்பது சரியான அணுகுமுறையே! சிந்தாமல் சிதறாமல் அடித்தால்தான் தகுதியின்றி ஆளும் கூட்டத்தை தடமின்றி அகற்ற முடியும்!

தெளிந்த மனதோடு கமல்ஹாசன் கொடுக்கும் பேட்டிகளை, கேள்விகளை நிதானமாக எதிர்கொள்ளும் பாங்கினை, மீடியாவின் பிரேக்கிங் நியூஸ் பசிக்கு இரையாகிவிடாத லாவகத்தை, பதற்றமும் அவசரமும் இன்றி ஊடகங்களை சந்திக்கும் துணிவை, தடுமாறாத தமிழை இயல்பாக ரசிக்க முடிகிறது...   நம்பகமான நகர்வுகள் மீது நம்பிக்கை கொள்ளத் தோன்றியவர்கள் நம்புகிறோம்! அதீத சந்தேகங்கள் யாவரின் மனதிலும் விரவிக் கிடக்கும் வேளையிது கமல்ஹாசன் போன்றோர் தங்களுடைய ஒவ்வொரு நகர்விலும் உச்சபட்ச கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கமல்ஹாசன் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளட்டும் நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்வோம் யார்மீது நம்பிக்கை வருகிறதோ அவர்களையே நம்புவோம்....! மீண்டும் அழுத்திக் கூற விழைகிறேன் “நம்புவோம்”.

இத்துடன் இந்த மினிதொடர் முற்றுப்பெறுகின்றது! தொடர்ந்து வாசித்து, மறுமொழி கொடுத்து, அலைபேசியில் விவாதித்து என்னுடன் பங்குகொண்ட அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..... மாற்றத்தை வேண்டும் ஒரு கெஞ்சலின் ஒரு பகுதிதான் இந்தத் தொடர்..... அதீத எதிர்பார்ப்புகளை ஏறக்கட்டிவிட்டு அத்தியாவசியங்களை நிலைநாட்டும் ஏதேனும் ஒரு நிலையான ஆளுமையின் மேல் நம்பிக்கையை விதைக்க இதுவே ஏற்ற நேரம் விதைக்கும் காலத்தில் விழிப்புடன் இருக்குமாறு நட்புடன் கெஞ்சுகிறேன்.... அறுவடை நேரத்தில் சந்திப்போம்..... நம்பிக்கையுடன்!

தொடர் முற்றும்.... ஆனால் தொடர்ந்து பேசுவோம்!

அன்புடன்,

பிரபு எம்.


















Wednesday, September 20, 2017

”முதலமைச்சர் கமலஹாசன்” - மினிதொடர் - பாகம்-2 : எதிர்பார்ப்பு vs நம்பிக்கை

 நண்பர்கள் கொடுத்த பின்னூட்டங்களுக்கும், சமூக வலைதளப் பகிர்வுகளுக்கும் நன்றி.

மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்
முதல் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.



கமல் என்னும் தலைமையைப் பற்றிய உரையாடல்களிலும் சமூக வலைதளங்கள் மற்றும் பொது இணையதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகளில் பெரும்பான்மைக் கருத்துக்கள் அரசியல் கமலுக்கு ஆதரவானவையே! இருப்பினும் இந்தத் தொடருக்காக சேகரிக்கப்பட்டவை எதிர்க்கருத்துக்கள் மட்டுமே. எதிர்மறை எண்ணவோட்டங்களை  கட்டுடைத்து பார்த்து அவையெல்லாம்  குவியம் கொள்ளும் புள்ளிகளைத் தொட்ட சில கருத்துக்களையே இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் விவாதிக்கிறோம்..... 

வாழ்க்கையில் வரப்போகும் இன்னல்களையும் துரதிர்ஷ்டங்களையும் வருமுன்பே எதிர்பார்ப்பது  மனதளவில் அவற்றின் தாக்கங்களை சற்று குறைக்கும் என்று சோதிடத்தில் நம்பிக்கை கொண்ட நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்...... ஆனால் அதுவே வாழ்வின் இன்பங்களையும் வெற்றிகளையும் அதீதமான எதிர்பார்ப்புகளுடன் அணுகும்போது அவை நல்லதாகவே அமைந்தாலும்கூட எல்லையற்ற எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உளரீதியாக சற்று தரம் குறைந்துதான் போகிறதோ என்னும் எண்ணத்தைப் பலமுறை வாழ்விலேயே கவனித்திருக்கிறேன். சம்பள அப்ரைசல் முதல் சமீபகால ஷங்கர் படங்கள் வரைக்கும் ”எதிர்பார்ப்புகள்” தான் ஏமாற்றங்களை எழச்செய்யும் முக்கிய காரணிகளாவதை உணர்ந்திருக்கிறேன்....!

ஆனால்... ஏமாற்றத்தையே எதிர்பார்த்து  இரு கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்துப் பழகிவிட்ட நாம், தமிழகத்தின் “தலைமை” வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்கும் புதியவர்களிடம் மட்டும் சற்று மிகுதியான ”எதிர்பார்ப்புகளைத்” திணித்துக் கொண்டிருக்கிறோமோ என்கிற எண்ணம் மேலோங்குவதைத் தவிர்க்க முடியவில்லை!

தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளை நாம் முற்றிலுமாக இழந்துவிட்டோம் இனி அவர்கள் இல்லை என்பதை முதலில் அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு தமிழனும் அவசரமாகத் தங்கள் மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய  கட்டாயத்தில் இருக்கிறோம்....  கூவத்தூர் கூத்துக்களையும், தெர்மாக்கூல் விஞ்ஞானத்தையும் பார்த்து அதிர்ந்தோம்,  வலிமையான போராட்டங்களில் கூட காவல்துறையின் வன்முறையால் உதிர்ந்தோம்,  நீட் பிரச்னையை ஆளாளுக்கு நீட்டி முழக்கியதில் அனிதாவின் இழப்பில் மனதளவில் இடிந்தோம்! ஆனால் இன்னும் இன்னும் இன்னும் ஒன்றை ஒன்று மிஞ்சிக்கொண்டு அனுதினமும் அரங்கேறும் பேரபத்த நகர்வுகளால்  நம் மாநிலத்தைக் கவ்வப்போகும் பேராபத்தை  நாம் உணர்ந்தும் உணராமல் இருப்பதற்கு ஒரே காரணம், இதுவரை சுயமரியாதை காத்த, மாநில இறையாண்மைக்கு இரும்பு அரண் அமைத்திருந்த இரண்டு முக்கிய ஆளுமைகளை நாம் முற்றிலுமாக இழந்துவிட்டதை இன்னும் நம் ஆழ்மனது ஏற்றுக்கொள்ளாததே ஆகும்! மரணங்களைக் கடந்து விடலாம் ஆனால் அதன் இழப்பை ஏற்றுக்கொள்ளத்தான் காலம் பிடிக்கும் என்பதுதான் அனுபவ அறிவு! ஆனால் தற்போது காலம் தாழ்த்த நம்மிடம் மணித்துளிகள் இல்லை எனும் நிதர்சனம்தான் அபாயச் சங்கு ஊதுகிறது!...... தற்கால போலித் தலைமைகள் முன்பிருந்த துதிபாடலைவிட இருமடங்கு அதிகமாய் வார்த்தைக்கு வார்த்தை முந்தைய தலைவர்களின் பெயர்களை வலுக்கட்டாயமாக உச்சரிப்பதன் தேவை இதுவேதான்...அதாவது அவர்கள் இனி இல்லவே இல்லை என்கிற  நிரந்தர வெற்றிடத்தை மக்களின் ஆழ்மனம் ஏற்றுக்கொள்வதைத் தங்களால் இயன்றவரை மக்கள் மனங்களிலிருந்து காலந்தாழ்த்தி அந்த இடைவெளியில் தாங்கள் வேர்விட்டுக்கொள்வது!

பழையன கழிந்தாயிற்று இனி புதிய தலைவர்களை அவர்களின் நோக்கம் ஆராய்ந்து நாம் தான் கை தூக்கி விடவேண்டும்! ஆனால் நாமோ எல்லையற்ற “எதிர்பார்ப்புகளை” அவர்கள் மீது திணிப்பதும், அரை நூற்றாண்டுகளாக நம் பாரம்பரியத் தலைமைகளையே திணறடித்த நீர், உழவு, மின்சாரம், கல்வி போன்ற நெடுங்காலப் பிரச்னைகளுக்கு ஒற்றைத் தீர்வை முன்மொழியச் சொல்லி முட்டுக்கட்டைப் போடுவதுமாய் மேதாவித்தனத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறோம்! இப்பொழுது இவர்களிடம் நாம் காட்டும் இந்த அதீத எச்சரிக்கை உணர்வை நம் ஓட்டுகள் விற்பனைக்கு விலைபேசப்படும் கலாச்சாரம் சகஜமாகி  போன போது எங்கே வைத்திருந்தோம்? இலவசங்களுக்கு இளித்த வாயுடன் வாக்களித்தபோதெல்லாம் இந்த அதிபுத்திசாலிக் கேள்விகளைக் கேட்க ஏன் மறந்தோம்?!

கேள்விகள் கேட்பதைப் பிழை சொல்லவே இல்லை கேள்விகள் மட்டுமே நம் ஆயுதம்... தமிழனின் ஒற்றை ஆயுதமான வினாக்களை நம் தமிழிலக்கணம் அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என வகைப்படுத்தி வைத்துள்ளது! இதில் ”அறிவினா” என்பது கேள்விக்கான பதிலை அறிந்துவைத்துக்கொண்டு எதிராளியிடம் கேட்டுச் சோதிப்பது..... ”அறியாவினா” என்பது நமக்குத் தெரியாத பதிலைக் கேட்டறியத் தொடுப்பது!  நம்மை ஆளப்போகும் நம்மில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல்களில் நமக்கே பதில் தெரியாத அறியாவினாக்களைக் கேட்பது நியாயமல்ல.... அறிவினாக்கள்தான் ஆள வருபவனை ஆய்ந்தறிய உதவும்! இதைத்தான் சொல்ல விழைகிறேன் கேள்வி கேட்பதன் நியாயத்தையும் பொறுப்புணர்வையும் உணரக்கோரும் ஒரு கெஞ்சல்தான் இது.

வருங்காலத் தமிழகத்துக்கு வரைபடத்தை முன்மொழியும் சமகால ஆளுமைகளில் ஆகச் சிறந்தவராகக் கமல்ஹாசன் என் கண்களுக்குத் தென்படும் காரணங்களை அடுத்த பாகத்தில்  தேவையிருந்தால் அலசலாம்!

இப்போது வருவோம் கமல்ஹாசன் மீது வைக்கப்படும் சில கேள்விகளுக்கு!

1) ஜெயலலிதா இருந்தபோது கமல்ஹாசன் எங்கேயிருந்தார்? அப்போதெல்லாம் இந்தச் சத்தம் கேட்கவில்லையே?

அதான் ஜெயலலிதா இருந்தாரே! அவரிடம் கலைஞர் என்றொருவர் நாளும் பல கேளிவிகளும் கடுமையான எதிர்ப்பறிக்கைகளும் எழுதிவந்தாரே?
ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதாவின் மரணம் நிகழ்ந்திருக்காது, நீட் தேர்வு வந்திருக்காது, காவிரி மேலாண்மை அமைந்திருக்கும், விவசாயம் செழித்திருக்கும் என்று ஆரூடம் கூறுபவர்கள்தான் மேற்படி கேள்வியையும் கேட்பவர்களாக இருக்கிறார்கள்..... பிறகு எதற்கு கமல்ஹாசனின் சத்தத்தைக் கேட்கவில்லை என்கிறார்கள்? தமிழகத்தைப் பார்த்துக்கொள்ள ஆளிருந்ததால் விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள், மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள், கமல்ஹாசன் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்!


2) ட்விட்டரில் முழங்குவதுதான் கமலைப் பொறுத்தவரை அரசியலா?

அவர் முழங்குவது மக்களின் காதுகளுக்குப் போய் சேருகிறதே! அவை திசைகள் எங்கும் எதிரொலிக்கின்றதே, வேறு என்ன வேண்டும்? திருவள்ளுவர் ஏன் திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதவேண்டும் என்று கேட்பீர்களா? அதைப் போல்தான் இருக்கிறது கமல்ஹாசன் ஏன் ட்விட்டரில் முழங்க வேண்டும் என்கிற கேள்வி.... கமல்ஹாசன் தன் கேள்விகளைப் பொதுவில் பதிவு செய்கிறார்..... அந்தக் கேள்விகளுக்குப் பதில் எங்கே? பதில் சொல்லவேண்டியவர்கள் எங்கே? பதில் சொல்லத் திராணி இல்லையா? அல்லது பதில்களே இல்லையா? முதலில் நம் மனதில் எழவேண்டிய கேள்வி இவையாக அல்லவா இருக்கவேண்டும்? மக்கள் கேள்வி கேட்கவேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் ஏன் மக்களில் ஒருவனாகக் கமல் கேட்கும் கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி கேட்கவேண்டும்?


3) கமலுக்குப் பின்னால் திமுக இருக்கிறதா? பிஜேபி கூட இருக்குமோ?

டீக்கடைகளில் இயற்றப்படும் அரசியல் அனுமானங்கள், நம் “துப்பறிவாளர்”களையெல்லாம் மிஞ்சக் கூடியது! மெய்ப்பொருள் காண்பதே அறிவு! என்னைப் பொறுத்தவரை கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன், போத்தீஸ் விளம்பரத்துக்கும், பிக்பாஸுக்கும் அடியெடுத்து வைத்தாலே ஆயுளுக்கும் சம்பாதிக்கும் சாத்தியம் இருக்கும்போது இப்படிக் கட்சிகளுக்கு குடுகுடுப்பு வேலை பார்க்க வந்துத் தன் ஒரே மூலதனமான நன்மதிப்பை கெடுத்துக்கொள்ளத் துணிவாரா? அத்தகைய அறிவற்றவராகவா கமலை உங்கள் உள்ளுணர்வு சந்தேகிக்கிறது?


4) கமலின் கொள்கைகள் என்ன?

இதற்குப் பதிலைச் சொல்லாமலா முதலமைச்சர் ஆகிவிடப் போகிறார்?
தனது சித்தாந்தங்களுக்குப் பொருந்தும் கட்சிகள் இல்லாத காரணத்தினால்தான் தனிக்கட்சியை நோக்கி நகர்கிறேன் என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே..... தளிர் நிலையிலேயே சித்தாந்தரீதியாக அரசியல் பயணத்தைக் கட்டமைக்க எண்ணும் பக்குவம் கொள்கைகளை வகுத்துக்கொள்ளாமலா கட்சியைத் தோற்றுவிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பல்வேறு நிலைகளில் பேச்சுக்கள் மற்றும் பேட்டிகள் மூலம் தனது கொள்கைகளைக் கமல்ஹாசன் தன் பொதுவாழ்வின் ஆரம்பத்திலிருந்தே பதிவு செய்துதான் வந்திருக்கிறார்.

5) முக்கியப் பிரச்னைகளில் கமலின் நிலைப்பாடு என்ன?

இதற்கான பதிலை முந்தைய பத்திகளிலேயே விவாதித்து விட்டோம்.

6) கமல் இதுவரை எந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்?

கமல் இதற்கு முன்னர் முன்னெடுத்த போராட்டங்களைப் பற்றி அவ்வப்போது பேசியிருக்கிறார் (சமீபத்தைய உதாரணம் இளமைக் காலத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியது பற்றிப் பேசியது) ஆனால் தனது மகளைப் பள்ளியில் சேர்க்கையில் ஜாதியைக் குறிப்பிடமாட்டேன் என்று ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறார் அந்தத் தெளிவான போராட்டம் ஒன்று போதும் போலி அரசியல்வாதிகளின் போலித்தனமான போராட்டங்களைத் தோலுறித்துக் காட்ட!


இதுபோன்ற கேள்விகள் எல்லாம் என் மனதுக்கு சத்துள்ளவையாகத் தோன்றவே இல்லை ஆனால் ஒரு கேள்வி மட்டும் மனதில் சற்று ஆழமாக ஊடுறுவுகிறது.....

அதற்குக் கமல்ஹாசன்தான் பதில் சொல்ல வேண்டும்......

* கமல்ஹாசனுக்கு சினிமா தாகம் முற்றிலும் வற்றிவிட்டதா? சினிமாவை முற்றிலுமாக விட்டுவிடும் இந்த ஆகப்பெரிய முடிவைத் தடாலடியாக எப்படி எடுக்கத் துணிந்தார்? உண்மையில் கமல் தன் கலைப் பயணத்துக்கு மூட்டை கட்டிவிட்டு தலைமை தாங்க முழுமனதுடன் வந்துவிடுவாரா??

என்னும் கேள்விதான் அது!

கமல்ஹாசன் போன்ற ஒருவரை வருங்காலத் தலைமையாக ஏற்கும் என்போன்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றே அறிகிறேன்.... திட்டங்களைக் கமல் சரியாக வகுப்பார் என்னும் நம்பிக்கை இருக்கிறது.... சீக்கிரம் வகுக்க வேண்டும் எனும் தவிப்பும் இருக்கிறது!

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் உங்களின் மனது ஏற்றுக்கொள்ளும் தலைமையை ஆய்ந்தறியுங்கள் ஆனால் இந்த ஆட்டத்துக்கு உங்கள் தலைவன் மீதான “எதிர்பார்ப்புகளை” அடுக்குவது உதவாது மாறாக அவர்மீது வலுவானதொரு ”நம்பிக்கை”பிறக்கிறதா என்று மட்டும் பாருங்கள்! “எதிர்பார்ப்பு” முடிவில்லாத் தாமதத்தையே விளைவிக்கும் “நம்பிக்கை”எதிர்காலத்தைக் கட்டமைக்கும்!

எதிர்பார்ப்புகளுக்கு எல்லையற்றுப் போனால் ஏமாற்றமே மிஞ்சும்....
எல்லைகள் கடந்த நம்பிக்கை வைப்பது சாத்தியமானால் ஒரு தலைவன் உதயமாவான்!

அடுத்த பாகத்தில் சந்திப்போம்!

அன்புடன்,
பிரபு எம்












Monday, September 18, 2017

”முதலமைச்சர் கமலஹாசன்” - மினி தொடர் - பாகம் 1 : முன்னுரை

அடி பிறழாமல் கமல் போட்ட சில ட்வீட்களுக்கே கதி கலங்கிப்போனது பட்டெக்ஸில் பசை தடவி அரியணையில் அமர்ந்திருக்கும் இந்த அறம்கெட்ட அரசாங்கம்!

இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்!



தமிழகத்துக்கு இப்படியா ஒரு சோதனைக்காலம் வரவேண்டும்?
இப்போதைய சூழலில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு திமுககாரர்களும் வருத்தப்படுகிறார்கள்... கலைஞரின் வெற்றிடத்தை அதிமுக அபிமானிகளும் வெறித்துப் பார்த்து வேதனைப்படுகிறார்கள்! சிங்கங்கள் இல்லாத காட்டுக்குள் ஓநாயும் நரியும் ஆட்சியைப் பிடித்துக்கொள்ள தூர தேசத்துக் கழுதைப் புலிகளும் காட்டு நாய்களும் அதிகாரத்துடன் மேற்பார்வை செய்கின்றன. 
தலையலடித்துக்கொண்டு அகிம்சையாய் வாழும் வரிப்புலிகளாய்த் தமிழர்கள்!

தலைமை என்ற ஒன்றின் அவசியத்தை ஒவ்வொரு குழுவும் புரிந்துணர்ந்து செயல்படத் தமிழனுக்குக் காலம் வைத்திருக்கும் அமிலச் சோதனையாய்த்தான் நகர்கிறது நிகழ்காலம். ஒரு கட்சியோ இயக்கமோ ஏன் குடும்பங்களில் கூட அடுத்தடுத்த அடுக்குகளில் ஒருவருக்கு மாற்றாக அடையாளம் காணப்படவேண்டிய தலைமைகள் அதாவது ஆளுமைகள் இருந்தே ஆகவேண்டும்! தலைமையை விட்டுக்கொடுக்க மனமில்லாத  முதுமைகளும், தலைமையைப் பொறுப்பாக எண்ணாமல் பதவியாக அனுபவிக்கும் அவசரத்தில் தனி ஆவர்த்தனம் செய்யப் புறப்பட்டுவிட்ட சில இளமைகளும் சேர்ந்துதான் இன்று தமிழினத்தை அனாதையாக்கியிருக்கின்றனர்..... ஆட்சி கிடைத்துவிட்ட அடிமைகளோ, தம் இனத்தை அடகு வைத்திடவே துணிந்துவிட்டனர்!

இந்த மாபெரும் பொறுப்புக்கு ஒவ்வொரு முகாமும் காட்டும் மாற்று முகங்கள் ஒன்றுகூட முழு நம்பிக்கைக்கு உகந்ததாய் இல்லாமல் போனது துரதிர்ஷ்டத்தின் உச்சம்!

புதுமுகத் தேடல் ஒரு புறம்..... 96-ல் கிட்டத்தட்ட தலைமையாய்ப் பளிச்சிட்ட ஒரு முகம் மீண்டும் வந்து கிச்சுக்கிச்சு மூட்டிய வேளையில் மீண்டும் சினிமாவிலிருந்தா? மறுபடியும் முதலில் இருந்தா? என்று எழுந்த அனுபவ ஆதங்கங்கள் இன்னொரு புறம்! இவ்வேளையில் தான் ட்விட்டரில் இருந்து மிகவும் பரிச்சியப்பட்ட ஒரு குரல் ஒலித்தது!
புரிந்துகொள்ளக் கஷ்டப்பட்டாலும் இம்முறை குழப்பமில்லை குரலில்!

கமல்ஹாசன்.......

சமகாலப் பகட்டுத் தனங்களைத் தன் கேள்விகளால் கூறு போடும் புதுமுக அரசியல் தமிழன்!

முத்தமிழ் அறிந்த திரைத் தமிழ் வித்தகன், அரசியல் தமிழில் நிகழ்காலக் கேள்விகளின் நாயகன் ஆனது மொக்கைப் படமாய்ப் போய்க்கொண்டிருந்த தமிழக அரசியலில் இண்டெர்நெட் வழியே வந்த விறுவிறு இண்டர்வெல் ப்ளாக்! (Interval block)

எதிர்பாராத திசையிலிருந்து வந்திருக்கும் இந்த நாயகனின் மேல் இயல்பாக நம்பிக்கை பிறந்ததற்கு எவ்விதக் கவச்சியும் காரணமல்ல என்பதை ஊர்ஜிதம் செய்தபின் தான் இதனை எழுதத் துவங்கினேன் எனவே தொடர்வதற்கு ஐயமில்லை. அரசியல்வாதி கமல் என்று இனிமேல்தான் புதிதாக அழைக்கத் தயாராகிறோம் என்றால் நாம் காலத்தால் மிகவும் தாமதப்பட்டுப் போவதற்கே சாத்தியம் அதிகம்,  ஏனென்றால் இப்போதைக்குத் தமிழகத் தீவிர அரசியலில் ஆளும் வர்க்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் எதிர்க்கட்சியாக செயல்படுவதில் கமல்ஹாசனுக்குத் தான் முதலிடம் என்று தோன்றுகிறது!

எனவே இனியும் காலதாமதமின்றி, “கமல் முதல்வரானால்...” என்று சாதக பாதகங்களை விவாதித்துப் பார்க்கும் ஒரு முயற்சிதான் இது.... எதிர்பார்ப்புகளையும் சந்தேகங்களையும் அடுக்கிப் பார்க்கலாம்..... ”முதலமைச்சர் கமல்ஹாசன்” என்னும் வினோத வாக்கியத்தில்  அமைத்து எழுதக்கூடிய சொற்களையெல்லாம் தொகுத்துப் பார்க்கலாம்.....

கமல் கேட்கும் கேள்விகளைவிட அரசியல் ரீதியாக கமலை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளும் இப்போது ரொம்பவே சூடாக வந்து விழுகின்றன.... அவற்றிலிருந்தே விவாதங்களைத் தொடங்கலாம் அடுத்த பாகத்திலிருந்து......
சில ரிப்பீட்டட் க்வெஸ்டின்ஸ் இங்கே......

1) மீண்டும் ஒருமுறை சினிமாவில் இருந்துதான் தமிழகத்துக்குத் தலைமை வரவேண்டுமா?

2) கமலுக்குப் பின்னே ஏதேனும் கட்சிக்காரர்கள் ஒளிந்திருக்கிறார்களா?

3) ட்விட்டரில் குரல் கொடுத்தால் மட்டும் போதுமா?

4) ரஜினியுடன் இணைந்து செயலாற்றுவாரா அல்லது தனித்து வரவேண்டுமா?

5) தனிக்கட்சி துவங்கவேண்டுமா அல்லது ஏதேனும் கட்சியில் இணைய வேண்டுமா?

6) கமலின் கொள்கைகள் என்ன? காவிரி, விவசாயம், நீட் போன்ற பிரச்னைகளில் நிலைப்பாடு என்ன?


இது போன்ற பொதுவான கேள்விகளுடன் அடுத்த அத்தியாயத்தில் பகிர்வைத் தொடங்குவோம்.....

மறுமொழிகள், பின்னூட்டங்கள் மூலமாக இதை உரையாடலாகத் தொடரலாம் எனவே உங்கள் கருத்துக்களை கேள்விகளை தயவுசெய்து பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்.....


இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்!


அன்புடன்,

பிரபு. எம்



Thursday, September 14, 2017

துப்பறிவாளன் [U/A] (2017) - விமர்சனம்

வில்லன் எகிறுவதற்கு முன்பாகவே ஷோல்டரைத் தூக்கி சண்டைக்குத் தயாராகிவிடும் விஷாலை ஷெர்லாக் ஹோல்ம்ஸாக்கித் துப்பறிய வைத்திருக்கிறார் மிஷ்கின்!



தனியார் துப்பறிவாளர் கணியன்பூங்குன்றனாக விஷால், அவரது உதவியாளர்/ நண்பர் மனோவாக பிரசன்னா.... ஷேர்லக்ஹோம்ஸ் - வாட்ஸன் மாடலிலேயே ஒரு க்ளாஸிக்கல் ஸ்டைலில் ஆஃபீஸ், பல அடுக்குப் புத்தகங்கள், ட்ரேட்மார்க் இருக்கை என ஹோம்ஸ் படங்களைப் பார்த்தவர்களும் கதைகள் படித்தவர்களும் மிக எளிதில் கனெக்ட் ஆகிவிடுமாறு நேரடியாகக் கதைசொல்லத் துவங்கியிருக்கிறார் மிஷ்கின்!

அதற்கு முன்னமே படம் ஓபன் ஆன வேகத்திலேயே திரையில் இரண்டு மரணங்கள்! இடிமின்னல் (இதே ஆர்டரில்தான் முதல்ல இடி அப்புறம் மின்னல்!) தாக்கி ஒரு பொறியாளர் உயிரிழக்கிறார் பிறகு ஒரு கான்ஃபிரன்ஸில் வைத்து ஒரு காவல்துறை அதிகாரி வியர்த்துக்கொட்டி இரத்தம் உறையாமல் ஊற்றி உயிரழக்கிறார்!

தனது அதீதமான துப்புறியும் மூளைக்குச் சரியான தீணி போடும் கேஸ் கிடைக்காமல் விஷால் எரிச்சலின் உச்சத்தில் இருக்கிறார்.... ஒரு மாபெரும் செல்வந்தர் காணாமல் போன மகளைக் கண்டுபிடிக்க லட்சங்களில் விலை பேசி ஒரு கட்டத்தில் ப்ளான்க் செக்கையே நீட்டுகிறார் ஆனால் விஷால் அந்தக் கேஸை டச்சிங்கான காரணம் சொல்லித் தட்டிக்கழிக்கிறார்......

அடுத்த ஸீனிலேயே ஸ்கூல் யுனிஃபார்ம் குட்டிப்பையன் இறந்துபோன தன்னுடைய நாயின் உடலில் இருந்து எடுத்த ஒரு புல்லட் தடயத்துடன் விஷாலை அணுக, விஷால் அந்த கேஸில் சீரியஸாகக் கமிட் ஆகிறார்......
பொம்மரேனியன் நாய் உடலில் புல்லட் என்கிற ஒற்றை லீடை வைத்துக்கொண்டு துப்பறிவாளர் துப்புத்துலக்க பல விபத்து போன்ற காரணங்களால் மூடப்பட்டப் பல மர்டர் கேஸ்களில் தூசு பறக்கிறது....

கொடூரமான வில்லன் குரூப்.... கொடூரத்தில் புதுமை காட்டுவது மிஷ்கின் ஸ்பெஷல்! நல்ல உயரமான ஓங்குதாங்கு ஆசாமிகள்.. டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க தனது வலுவான புஜங்கள் புடைக்கும் கரங்களால் பக்குவமாக உணவைத் தயாரித்து ஒவ்வொரு தட்டிலும் மெயின் வில்லன் வினய் பரிமாறப் பொறுமையாக சாப்பிடுகிறது கில்லர் டீம்.... படு அமைதியான அந்த சீனில் ஆண்ட்ரியா ஃப்ரிட்ஜைத் திறந்து ஜூஸ் பாட்டிலை எடுத்து மூடும்போது நமக்கு அந்த ஃப்ரிட்ஜுக்குள் ஒருவன் உட்கார்ந்த நிலையில் இருப்பது தெரியும் பகீரென்று!

விவரிப்பதில் இருக்கும் கொடூரம் திரையில் அப்படி Raw-வாகத் தெரியாது மாறாக அந்த உணர்வுகளை மட்டுமே கடத்துவதாகத்தான் சீன் வைத்திருக்கிறார் மிஷ்கின்..... கண்கள் மையம் கொள்ளாத இடங்களில்தான் சடலங்களையும் கொலைகளுக்கான contact point-டும் இருக்குமாறு பொறுப்புடன் காட்சியமைத்திருக்கிறார் மிஷ்கின், அப்படியிருந்தும் அக்மார்க் த்ரில்லுக்கு 100% கியாரண்டி கொடுப்பது அர்ரோல் கொலேரியின் பின்னணி இசைதான்! ஸ்ட்ரிங் இன்ஸ்ட்ருமெண்டுகளால் இந்தப் படத்துக்காக அர்ரோல் வடிவமைத்திருக்கும் தீம்களை வைத்து ஏதாவது ஒரு மேலை நாட்டிற்குச் சென்று சிம்பொனியே நடத்திக்காட்டலாம் அவ்வளவு கிரியேட்டிவ் மியூசிக் படத்துக்கு! தரமான Taste-ல் சரியான Mood-ஐத் துல்லியமாகக் கடத்துகிற பின்னணி இசை அத்தனை எளிதில் அமைந்து வந்துவிடுவதில்லை! குறிப்பாகப் படத்தின் விறுவிறு சண்டைக் காட்சிகளுக்குப் பின்னணியில் அமைத்திருக்கும் அர்த்தமுள்ள Theme இசைக்கோர்வைகள் நம்மைச் சுற்றியிருக்கும் சூழலையே, சீன் கடத்தும் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிவிடுகிறது! அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் அர்ரோல் கொலேரி!

கார்த்திக்கின் கேமரா கோணங்கள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் Point-of-view-வில்தான் காட்சிகளை சேகரித்திருக்கிறது. விஷாலின் பாத்திரம் தன் மனதுக்குள்  தோன்றும் ரேண்டம் புள்ளிகளை இணைத்து இணைத்துப் பார்த்துதான் விஷயங்களை கிரஹிப்பதாய் அமைத்திருக்கிறார் மிஷ்கின் அந்த துப்பறிவாளனின் தவிப்பை விஷுவலாக இவ்வளவு candid-ஆகக் கொடுத்ததற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக்கும் இயக்குனர் மிஷ்கினும் பாராட்டுக்குரியவர்கள் ஆகிறார்கள். படுவேகமான துப்பறிவாளனின் மனம் ஒரு விஷயத்தை முழுமையாகக் கணித்துவிட்ட அந்த நொடியிலேயே, யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கிடைத்த க்ளூவை நோக்கி தடதடவென ஓடிவிடுவார் விஷால் கேமரா அவர் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து எல்லா திசைகளிலும் ரெடியாகக் கோணம் பார்த்து நிற்கும்! கார்த்திக்கின் கேமரா பாத்திரங்களின் கண்களாகவும் ரசிகர்களின் பார்வையாகவும் வேலை செய்திருப்பது படத்துக்கு பலம் சேர்க்கிறது.

அதிகமான ஐ.க்யூ (IQ) கொண்ட கதாநாயகன், குற்றத்தையும் செய்துவிட்டு துப்பறிவாளன் துப்பறிவதையும் விடாமல்  பின்தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் வில்லன்கள் என ரொம்பவே இண்ட்ராக்டிவ்வான திரைக்கதை அமைத்திருக்கும் மிஷ்கின் முதல்பாதியை டெய்லர் மேடாகக் (Tailor -made) கொடுத்திருக்கிறார். அத்தனை திருத்தமான திரைக்கதை மற்றும் நேர்த்தியான ஆக்கமும் கூட. ஆனால் இரண்டாம் பாதியில் கதையோட்டத்துக்குத் தொய்வை உண்டாக்கும் ஒன்றிரண்டு விஷயங்களில் தன் இயல்பான வேகத்தைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு ஏறி இறங்கித்தான் க்ளைமேக்ஸை நெருங்கி வந்து சேர்கிறது திரைக்கதை! எடிட்டிங்கிலும் இரண்டாம் பாதியில் ஓர் அவசரம் தெரிவது மெல்லியதொரு மைனஸ் படத்துக்கு.

மிஷ்கினின் signature காட்சிகளும், clarity குறைந்த அனு இம்மானுவேல்-விஷால் காம்பினேஷன் காட்சிகளும் தனியாக நன்றாக இருந்தாலும் பட ஓட்டத்துக்குத் வேகத்தடை போடுகின்றன.

இம்பாஸிபிளாகச் சிந்திக்கும் ஹீரோவின் அறிவாற்றலை ஆரம்பம் முதலே சரியாகக் கணிக்கிறது வில்லன் கும்பல். அவர்களும் அசாதாரணமான உள்ளுணர்வுடன்தான் விஷாலின் அடுத்தடுத்த நகர்வுகளைத் தடயங்களின்றி சிதைக்க முனைகிறார்கள். ஆனால் கமலேஷ் பாத்திரம் (ஜான் விஜய்) அவசரப்பட்டு விஷாலைக் கொல்ல professionals அனுப்பும் அந்த சைனா ரெஸ்டாரெண்ட் சண்டைக் காட்சிக்குப் பிறகு வில்லன்களின் கை சரியத் தொடங்கிவிடுகிறது அதன்பிறகு ஒரு வலுவான கம்-பேக் வில்லன்கள் சைடில் இல்லவே இல்லை! மேலும் அவ்வளவு careful-ஆக நகரும் வில்லன்கள் கண்டிப்பாக மாட்டிக்கொள்ளும் ரிஸ்க்கில்தான் பைக் சேஸிங்கில் தப்பிக்கப் பார்க்கிறார்கள்! அதிலும் ஆண்ட்ரியா தப்பித்துவிடுவதில் நம்பகத்தன்மை இல்லை.... பாக்கியராஜ் (சத்தியமாகக் கண்டே பிடிக்கமுடியாத கெட்-அப்) வீட்டில் நடக்கும் காட்சியிலும் திடீரென்று தோன்றும் படுத்த படுக்கையான பெண் கதாபாத்திரமும் அந்தத் தலையணைக் கொலையும் எதற்கென்று புரியவில்லை.
குறைகளையெல்லாம் மறக்கடிக்கச் செய்கிற சூப்பர் க்ளைமேக்ஸ் அமைத்திருக்கிறார்கள்.... ஆனால் அதிலும், எப்போதும் விஷாலுடனேயே நிழல்போல் தொடரும் பிரசன்னா வெளியே இருப்பதை உணராமல் வினய் எச்சரிக்கையில்லாமல் இருப்பது சற்று உறுத்துகிறது. அதைவிட க்ளைமேக்ஸில் விஷாலையும், அந்த போலீஸ் அதிகாரியையும் கொன்றுவிட்டுத் தப்பித்து செல்லும் அவசரத்தில் வினய் காட்டும் casualஆன உடல்மொழியும் கட்டிப்போட்டுவிட்டு உள்ளே சென்று packing செய்வதும் த்ரில்லைக் குறைப்பதாய் இருக்கிறது. இருந்தாலும் விஷால் வினய்யுடன் நடத்தும் சுவாரஸ்யமான பேச்சுவார்த்தைகளும் இடையிடையே இடம்பெறும் சாதுர்யமான hintகளும் சூப்பர்!

ஒட்டுமொத்தத்தில் இரண்டாம் பாதியில் திரைக்கதையிலேயே ஓர் அவசரம் தென்படுகிறது.. இலங்கைத் தூதரகத்தில் ஒரு அவுட்டோர் ஷாட் மற்றும் வில்லன் தப்பிக்கப் போகும் ப்ளானை வங்காள வரைகுடாவிலேயே மேப் போட்டுக் காட்டிவிட்டுப் பிறகு அதையெல்லாம் கோர்த்து க்ளைமேக்ஸில் விஷால் விளக்கிச் சொல்வதும் சற்றே பழமையான உக்தியாகத் தெரிகிறது.

விஷால் நடிப்பில் ஜீவனுள்ள ஒரு துப்பறிவாளன் படம் முழுக்க துடிப்புடன் துள்ளித் தீர்த்திருக்கிறான்! ஷெர்லாக் ஹோம்ஸைக் காப்பியடிக்காமல் தன் பாணியிலேயே டயலாக் டெலிவரி மற்றும் உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளது சிறப்பு! பிரசன்னாவுக்கு Dr.Watson பாத்திரம் அளவுக்கு screen space கிடையாது! பழைய படங்களைப் போன்ற side-kick பாத்திரமாகத்தான் இருக்கிறது (க்ளைமேக்ஸ் தவிர்த்து) ஆனால் அதிலும் நிறைவாகச் செய்திருக்கிறார் பிரசன்னா. வினய்யின் ஆஜானபாகு தோற்றமும் கடுமையான குரலும் டெவில் பாத்திரத்தை ஒரிஜினல் டெவிலிஷாக நிலை நிறுத்திவிடுகிறது... ஆண்ட்ரியா, பாக்யராஜ், தீரஜ் ரத்னம் அனைவருமே பக்குவமான வில்லத்தனம் காட்டுகின்றனர். அனு இம்மானுவேலுக்கு வித்தியாசமான பாத்திரம் அளவாக நடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்தத்தில்  தரமான ஒரு துப்பறிவாளத் திரைப்படம் கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.... ஆங்காங்கே வெள்ளைப் பின்புலத்தில் தெரியும் சின்னச் சின்ன நெருடல்களையும் சரிசெய்து இன்னும் துப்புரவாகக் கொடுத்திருந்தால் மறக்கமுடியாத பதிவாக இருந்திருக்கும் என்கிற ஆதங்கம் தவிர எல்லாம் நலமே!

அன்புடன்,
பிரபு. எம்









Tuesday, September 12, 2017

தமிழகத்தில் ஹிந்தி வளர்ந்து வருகிறதாம் - “தமிழ் இந்து” சொல்லிடிச்சு!

கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி
தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி

இப்படியொரு தலைப்புடன் ஒரு செய்தியை இன்று (செப்டம்பர் 12,2017) தேதியிட்ட “தமிழ் இந்து” செய்தித்தாளில் 11-ம் பக்கத்தில் பார்த்தேன்... அது செய்தியா இல்லை விளம்பரமா அல்லது ஏதேனும் கட்டுரையா என்று பார்த்தவுடன் புரியும்படி இல்லை! சரி.. ஓர் ஒப்பீட்டுப் புரிதலுக்காகப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு செய்தியைப் பார்த்தேன்


காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து சூழ்நிலை முன்னேறி உள்ளது

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

என்று இருந்தது! இந்த செய்தி உறுத்தவில்லை..... “காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து சூழ்நிலை முன்னேறி ப்ளா ப்ளா ப்ளா.... என்று தலைப்பு பார்த்தவுடனேயே செய்தித்தாள்களைப் படித்து பழக்கப்பட்ட கண்கள் சொன்னது யார் என்று தேட ஆரம்பித்தது அதற்குள் மூளையும், யாருப்பா அது பழைய ஹோம் மினிஸ்டர் ராஜ்நாத் சிங்கா அல்லது புது ராணுவ அமைச்சர்  நிர்மலாவா? என்று "probables" யோசிக்க ஆரம்பித்தது.... அங்கும் இருக்கவே இருந்தது உப தலைப்பு “உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்” என்று... ஒருவேளை இந்த ஒரு ஸ்டேட்மெண்ட்டை எதிர் முகாமிலிருந்து  ப.சிதம்பரம் போன்ற ஒருவர் சொல்லியிருந்தார் என்றால் படிப்பதற்கு ஒரு சுவாரஸ்யமாய்க் கண்கள் விரிந்திருக்கும் என்பது வேறு விஷயம்! சரி விஷயத்திற்கு வருவோம்!

இப்படித்தான் செய்தித்தாள்களுடன் உறவாடி வந்திருக்கிறோம் தலைமுறைகளாக...! தலைப்பு என்பது விஷயத்தைப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்லிவிடும் மேலும் யார் சொன்னது.... எந்த சூழ்நிலையில் சொன்னது போன்ற விவரங்களை உபதலைப்புகள், புல்லட் பாயிண்டுகள் போன்றவை விளக்கிவிடும்! மெயின் தலைப்புக்கு மேலே சற்று சிறிய எழுத்துருவில் அந்த செய்திக்கான பின்னணியையும் வழங்கிவிடுவார்கள். ஆக... செய்தித்தாள்களுடன் கையில் காஃபி மக்குடன் நாம் அளவளாவி மகிழும் ஓர் அரைமணி நேர ஸ்பரிசத்துக்கு என்று பலவிதப் புரிதல்களும், சமிக்ஞைகளும் உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை!

இப்போது மெயின் விஷயத்திற்கு வருவோம் அதாவது “தமிழகத்தில் ஹிந்தி வளர்ந்து வருகிறது” என்னும் செய்தி!

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், சொன்னது யார்? என்று கண்கள் தேடின... பதில் இல்லை..... சரி இது ஏதும் ஆய்வு முடிவா? தெளிவில்லை!
ஸ்போக்கன் ஹிந்தி விளம்பரமா?? பார்த்தால் அப்படித் தெரியவுமில்லை! 

தலைப்புக்கு மேலே “கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி”

என்று ஒரு பின்னணி வேறு அச்சிடப்பட்டிருந்தது! எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இப்போது கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி  நடைமுறையில் இருப்பது நீட் தேர்வு மட்டுமே! இந்தி வளர்வதற்குக் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற போது நான் பிறக்கவில்லை என் தந்தைகூட ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போதான் படித்துக்கொண்டிருந்திருப்பார்! 

சரி... ஏதாவது ”back to the future" சமாச்சாரம் போலிருக்கிறது என்று படித்துப் பார்த்தேன்.....

அதாகப்பட்டது......

“தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பை மீறி அங்கு இந்திமொழி வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது” என்றது முதல் பத்தி.

மேலும் அதில் உள்ள செய்தி என்னவென்றால்....

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்தி இயக்குனரகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மையத்தில் தொலைதூரக் கல்வி முறை மூலம் ஹிந்தி மொழி கற்றுக்கொள்ள விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கைத் தமிழகத்தில் கணிசமாக (அதிகபட்சம் சுமார் 7000 பேர்!) அதிகரித்திருக்கிறதாம்!

இதுதான் செய்தி..... ஆனால் இப்போது இந்தப் பதிவின் துவக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைப் பாருங்கள்......

”தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி” (அதுவும் கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறியாம்!) 

இதில் ஓர் ஈனத்தனமான அரசியலோ அல்லது கீழ்த்தரமான ஒரு எண்ணமோ இருப்பது உங்களுக்குப் புலப்படுகிறதா??

”தொலைதூரக் கல்வி வழியே ஹிந்தி கற்றுக்கொள்ள தமிழகத்தில் ஆர்வம் கணிசமாக உயர்வு” : இந்தி இயக்குனரக தொலைதூரக் கல்வி மையம் தகவல்

என்று வந்திருக்க வேண்டிய செய்தித் தலைப்பு எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்... மற்றவை யாவும் தங்களின் சிந்தனைக்கே.....!

சரி... இப்பொழுது ஓர் ஆசுவாசத்துக்காக ஒரு சின்ன கேள்வி... இந்த வாரம் செய்திகளைப் பின் தொடர்ந்தவர்கள் இந்தப் புகைப்படக் கேள்விக்குப் பதில் தெரிந்த துரதிர்ஷ்டசாலிகளாக இருக்கலாம்!



இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார்??

இந்தப் பெண்ணின் புகைப்படம் கடந்த இரு நாட்களாக பெரும்பாலான ஆங்கிலப் பத்திரிக்கைகளில், தமிழ் நாளேடுகளில் வெளிவந்துள்ளது....

அனைத்து ஊடகங்களிலும் இவரது படம் அதுவும் ANI (Asian News International) மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் படம் என்றால் இவர் ஒரு புதிய சமூகப் போராளியாக இருப்பாரோ?! அல்லது ஏதேனும் புரட்சிகரமான வழக்குத் தொடுத்து சட்டப் போராட்டம் நடத்தியிருப்பாரோ? ஏதாவது துணிச்சலான கருத்து சொன்னவராகக் கூட இருக்கலாம் என்று யோசிக்கிறீர்களா.... மிகவும் சரிதான்..... செய்தித்தாள்களில் ஒருவரின் புகைப்படம் வெளிவருவது அவ்வளவு எளிதா என்ன? ஏதாவது ஒரு சாதனை செய்திருந்தால் தானே ஊடக வெளிச்சம் பொதுஜனம் மீது விழும்! இந்தப் பெண்மணி செய்த சாதனைதான் என்ன??

இந்த கிரேட் இண்டியன் லேடியின் பெயர் கஞ்சன் படேல்..... இவருக்குக் கடந்தவாரம் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன அவைகளுக்கு அவர் “காரவி, சாஞ்சி, தாரவி” என்று பெயர் சூட்டியிருக்கிறார்!
ஓ..அப்படியா... மகிழ்ச்சி! சரி... இதில் என்ன சாதனை என்று கேட்கிறீர்களா? குழந்தைகளின் பெயர்களை நாம் கவனிக்கவேண்டுமாம்.....

Garvy, Saanji, Taravi - அதாவது GST!

இந்தக் கேடுகெட்ட அரசாங்கம் கொண்டுவந்த GST வரி இந்த அம்மையாரைக் கவர்ந்துவிட்டதாம் அதனால் தன் குலக் கொழுந்துகளுக்கு அதே முதலெழுத்துகளில் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறாராம்.....

இந்தக் கருமத்துக்குத்தான் இத்தனைப் பெரிய அங்கீகாரம், சேனல்கள் முதல் செய்தித்தாள்கள் வரை அம்மையாருக்குப் புகைப்படத்துடன் கூடிய பதிவேற்றங்கள்! ஜிஎஸ்டி பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? எந்த விஷயத்தில் இவர் ஜிஎஸ்டி மீது இத்தனை ஈர்க்கப்பட்டார்? இவரின் கல்வித் தகுதி மற்றும் வணிகச் செய்திகளின் புரிந்துணர்வு எத்தகையது? போன்ற விஷயங்களை யாரோ ஒரு சாதாரண நிருபர் அலட்சியமாகக் கேள்வி கேட்டால் கூடத் தோலுறிக்கப் பட்டிருக்கும். ஆனால் அப்படியில்லாமல் போனது, இதுபோன்ற விளம்பர மோகம் மற்றும் அருவருப்பான மீடியா வியாபாரங்கள் எல்லாம் எப்படி நகர்கின்றன அல்லது மக்களை எப்படி நகர்த்துகின்றன என்பதற்கான அவல ஆதாரமாய்ப் பதிவு செய்யப்பட்டு இந்த அபார சாதனை சர்வதேச செய்தியாக உலக ஊடகங்களின் பார்வைக்குப் போயிருக்கிறது!

ஏன் பிரதர், நம்ம ஊரு உருப்படும்னு நினைக்கிறீங்க??!

 நன்றி!

பிரபு எம்.