ருத்ரய்யா.....
ஒரு சிறந்த இயக்குனர் காலத்தால் அழியாத பெயரெடுக்க ஒரேயொரு படம் எடுத்திருந்தால் கூட போதும் என்பதற்கு மௌனசாட்சியாய் இந்த வாரம் வரை வாழ்ந்துவந்த இயக்குனர் ருத்ரய்யா இப்பொழுது உயிருடன் இல்லை...... தமிழ் சினிமாவுக்கு இவரது இழப்பு முழுமையாக 1980லேயே ஏற்பட்டுவிட்டதினால் இப்போது அது இறுதியாக ஒருமுறை ஊர்ஜிதமாகியிருக்கிறது அவ்வளவுதான்..... ஆனாலும் ரசிகர்களுக்கு இவர் இயக்கிய 1978 ல் வெளிவந்த "அவள் அப்படித்தான்" படம் பார்த்திருந்தால் இவரின் இந்தப் பிறவியை வெறும் இரண்டு திரைப்படங்களுடன் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணரலாம்.......
சிலரை உலகம் "அவர் அல்லது அவள் அப்படித்தான்" என்று முடிவுசெய்து தீர்ப்பு வழங்கிவிடும் அப்படியான முடிவுகள் ஒன்று விதிகளைத் தளர்த்திக்கொள்ளும் ஒரு தனிப்பட்ட சலுகையாகவோ அல்லது ஒட்டுமொத்த புறக்கணிப்பாகவோ அமைந்துவிடும்.....
"அவள் அப்படித்தான்" , "கிராமத்து அத்தியாயம்" என்ற இரண்டு படங்களை இயக்கிவிட்டு திரையுலகைவிட்டு ஒதுங்கிக்கொண்டவர் இன்று 34 ஆண்டுகள் கழித்து நிலவுலகைவிட்டும் நீங்கிச்சென்றிருக்கிறார்....... ஏன் அவர் மூன்றாவது படம் எடுக்கவில்லை? என்பதற்குத் தெளிவான காரணமெதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்று நினைக்கிறேன்..... கேட்டால் ஒருவேளை சொல்லுவார்கள் "அவர் அப்படித்தான்" என்று!
"அவள் அப்படித்தான்" [A] (1978)
"அனந்துவுக்கு...." என்ற ஒற்றை வார்த்தை சமர்ப்பணத்துடன் தொடங்கும் இந்தப் படம் மனிதர்களின் பல்வேறு நிறங்களை அப்படியே தனக்குள் அள்ளிக் கொண்டுவந்து சேர்த்த ஒரு "கலர்ஃபுல்" கருப்புவெள்ளைத் திரைப்படம்!
படம் துவங்கியதுமுதல் முடியும் வரை "அப்படியே" இருக்கும் அந்த "அவளின்"திரைப்பெயர் மஞ்சு நிஜப்பெயர் ஸ்ரீப்ரியா! தன்னையும் மஞ்சுவையும் திரையில் ஒரு கணம் கூட பிரித்துப்பார்க்க அனுமதிக்கவில்லை ஸ்ரீப்ரியா..... எளிமையாக "மஞ்சுவாக ஸ்ரீப்ரியா வாழ்ந்திருக்கிறார்" என்ற அந்த க்ளிஷே வரியை உபயோகிக்கலாம்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டியதாய் அமைந்திருக்கிறதே ஸ்ரீப்ரியாவின் இந்த "மஞ்சு" அவதாரம்!
அழகான மஞ்சுவை அணுகுவது கடினம்.... காரணம் அவளைச் சுற்றி அவளே அமைத்துக்கொண்டிருக்கும் நெருப்பு வளையங்கள்!..... காரணம் ஆதரவற்ற நிலையில் ஓர் அழகான பெண் இருந்தால் அவளுடன் உறவைப் பகிர்ந்துகொள்வதைவிட உணர்வுகளுக்காக உபயோகப்படுத்திக்கொள்ளத்தானே அல்லாடும் ஆண்மனம்!
மஞ்சுவின் தாயின் நடத்தையின் அசுத்தம் ஊருக்கே வெளிச்சம் அந்த வெளிச்சத்தில் நிர்வாணமாய்க் கூனிக்குருகும் அவள் கணவன்..... இந்த ஓட்டைகளுக்குள் நுழைந்து, அறிந்தும் அறியாமலும் அல்லாடும் மஞ்சுவிடம் அத்துமீற "மாமன்" ஒருவன் எத்தனிக்கும்போது மஞ்சு பள்ளிமாணவி!
" நேத்து உங்க அம்மாகூட ஒருத்தர் வந்தாரே.... உயரமா.....குண்டா.....அவரு யாரு உங்க அப்பாவா??" என்று பதில்தெரிந்துகொண்டே நக்கலாகக் கேட்கும் உடன்பயிலும் மாணவிக்கு மௌனத்தைப் பதிலாகத் தந்து நகரும் மஞ்சுவின் பிஞ்சுமனம் மேலும் மேலும் அவமானங்களாலும் அத்துமீறல்களாலும் இறுகிப்போன கடினமான ஸ்ரீப்ரியாவாக மொத்தப்படத்திலும் உலவவிட்டிருப்பார் ருத்ரய்யா,.....!
ஆவணப்பட இயக்குனர் அருணாகக் கமல்ஹாசன்! ஆங்கிலத்தில்
genuine என்ற வார்த்தைக்கு synonymous படத்தில் கமல்! தனது தொழில், காதல் உட்பட எல்லாவற்றிலும்! மஞ்சு பணிபுரியும் விளம்பரக் கம்பெனியின் பாஸ் ரஜினி! "டேய் மாப்புள......" என்று படு அலட்சியமாகத் துவங்கிக் கமலுக்கு வாழ்க்கையைப் பற்றியும் முக்கியமாகப் பெண்களைப் பற்றியும் அவ்வப்போது பாடம் எடுக்கும் ஒரு திறந்த புத்தகம் ...... தன் இளமைக்கு இணையாக இன்பத்தை நிறுத்தித் தானே சரியென்று வாழும் Casual இளைஞன் ரஜினி!ஆவணப்படம் எடுக்கவரும் தன் நண்பன் கமலுக்கு உதவிவாக இருக்கச்சொல்லி ஸ்ரீப்ரியாவைக் கமலுக்கு அறிமுகம் செய்துவைப்பார் ரஜினி!
கமலின் ஆவணப்படத்துக்கான ஆராய்ச்சிப் பொருள் "பெண்கள்"! கிட்டத்தட்ட முப்பதாண்டுகால முற்போக்கான பளிச் பளிச் வசனங்கள்தான் அன்று இந்தப்படம் புறக்கணிக்கப்பட்டதற்கும் இன்றும் நிலைத்து கம்பீரமாய் நிற்பதற்கும் ஒற்றைக் காரணம்!
"இந்த படமெடுக்குறதுல நல்ல பணம் கிடைக்கும்ல......" என்று ஸ்ரீப்ரியா கமலுடன் ஒரு காஃபி உரையாடலில் மேம்போக்காகக் கேட்பார்...... முகம் சிவக்கும் கமல், "பணம் பண்ணுறது மட்டும் என்னோட நோக்கமில்ல...." என்று அழுத்தமாக ஆரம்பிக்கும்போதே சட் டென்று ஸ்ரீப்ரியா "இப்படி வித்தியாசமாத் தன்னைக் காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்..!" என்று உரையாடலை முள்தைத்து முடித்துவைப்பார்!
வீட்டுக்கு வந்த ஸ்ரீப்ரியாவை "காஃபி சாப்பிடுறீங்களா?" என்று கமல் கேட்கும்போது "வேற என்ன பண்றது சொல்லுங்க....." என்று ஸ்ரீப்ரியாவை அஸால்டாகக் கேட்கவிட்டு அடுத்த ஃப்ரேமில் கையில் காஃபியுடன் சீன் வைத்திருப்பார் ருத்ரய்ய்யா.....!
எதிரில் அமர்ந்திருக்கும் கமலின் உணர்வுகளைத் தன் கூர் வார்த்தைகளால் படு ஈஸியாகக் காயப்படுத்தும் ஸ்ரீப்ரியாவுக்குத் தக்க பதிலைக் கொடுக்க கமலின் உதடுகள் துடித்திடும் ஆனால் அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் மைக்ரோசெகண்டில் அந்த உரையாடலையே முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவார் ஸ்ரீப்ரியா...... மெதுமெதுவாகக் கமல் ஸ்ரீப்ரியாவைப் புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்தாலும் கமலுடன் சேர்ந்து பார்வையாளர்களுக்கும்கூட எளிதில் புலப்படாது கமல் குறித்த ஸ்ரீப்ரியாவின் மனவோட்டம் எப்படிப் போகுமென்று...... அதுவரை சில மின்னல் வசனங்களை அவ்வப்போது சப்ளை செய்துகொண்டே இருப்பார் ருத்ரய்யா பார்வையாளனின் புன்சிரிப்புக்காக!
ஒரு சீனில் கமலும் ஸ்ரீப்ரியாவும் ரோட்டில் நடந்து செல்லும்போது கமல் சொல்லுவார், " நம்ம ரெண்டுபேரும் ஒண்ணா நடந்துட்டுவந்தாலும் நீங்கமட்டும் தனியாவர்ற மாதிரி இருக்கு" இது சாதாரணமான வசனம்தான் என்றாலும் ஏதோ காரணத்துடன் டல்லாக இருக்கும் மஞ்சுவைப் பேசவைக்கக் கமல் எடுக்கும் பிரயத்தனமாகக் கமல் தவிப்புடன் டெலிவர் செய்யும் விதம் அத்தனை இதமாக இருக்கும்!
கமலின் ஆவணப்படத்துக்காகக் குட்டிபத்மினியைப் (படத்தின்படி அவர் ஒரு க்ளாமர் நடிகை) பேட்டியெடுப்பார்கள்...... "இப்படி ஆடியன்ஸுக்காக அதிலும் குறிப்பாக ஆண்களுக்காக இப்படி மேக்-அப், க்ளாமரான ஆடை போட்டுக்கறது உங்களுக்கு ஒரு மாதிரி அடிமைத்தனமா தெரியலயா?" என்று கமல் கேட்க.... அலட்டிக்கொள்ளாமல் பதில்வரும் நடிகையிடமிருந்து. "மிஸ்டர், அருண் உங்களுக்கு நிறைய நேரம் இருக்குதுபோல..... இவ்ளோயெல்லாம் யோசிக்கிறீங்க?? (லேசான சிரிப்புடன்) இதோ இப்போ ஒரு குடும்பப்பெண் வேடம் ஈவ்னிங் அடுத்த ஷூட்டிங்ல அப்படியே ஆப்போஸிட்.... ப்ராஸ்டிடியூட் வேஷம்.... யோசிக்கவெல்லாம் டைம் இல்ல...." இப்படி யதார்த்தங்களை அளவுகோலாக வைத்துப்பார்த்தால் படம் வந்த சமகாலத்து கே.பாலசந்தர் படங்கள்கூட முற்போக்கில் அவள் அப்படித்தானுடன் மிகவும் தள்ளித்தான் நிற்கமுடியும்.... ஆனால் அப்போது அதனை "ஆபாசம்" என்று தள்ளிவைத்துவிட்டோம்..... நாமெல்லாம் கண்ணகி மைந்தர்கள் ஆயிற்றே! இப்பொழுது ருத்ரய்யாவை வியந்தும் "அவள் அப்படித்தான்"-ஐக் கொண்டாடி எழுதும் விகடனாரே அப்போது இந்தப் படத்துக்குப் போட்ட மார்க்கையும் எழுதிய விமர்சனத்தையும் படித்தால் விழுந்து சிரிக்கலாம் அந்த நிறமாற்றத்தைப் பார்த்து!
ருத்ரய்யா சாகாவரம்பெற்று நிமிர்ந்து நிற்பது மஞ்சுவின் பாத்திரப்படைப்பில்தான்! மேலுக்கு அவள் ஏதோ மிகக்கடினமான வித்தியாசமான பெண் போலத் தோற்றமளித்தாலும், ஒரு சாதாரணப்பெண்ணின் தவிப்புகளும் தன்மீது விழும் துச்சாதன விமர்சனங்களுக்கு அவளுக்கு எழும் சீற்றங்களும் அனைத்துமே அப்படியே அசலாக நாம் சாதரணமாக உடன்வாழும் பெண்மைகளைத்தான் பறைசாற்றும்! ஆனால் அவளது பேச்சுக்களும் மிகமிக மெச்சூர்டாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் நடவடிக்கைகளும் அவளாக உருவாக்கிக்கொண்ட வெறும் செயற்கை அரண்கள்தான் என்பது பார்வையாளனுக்குத் தெளிவாகத் தெரியும்,....... ஒரு பெண்ணின் insecurity-யை இத்தனை நெருக்கமாக விளைவுகளுக்கும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவளின் தயாரிப்புளுக்கும் மையம்வைத்து உருவாக்கிய ஒரு படைப்பை அவ்வளவு எளிதாகத் தமிழில் கூகுளால் கூட கண்டுபிடித்து சொல்லிவிடமுடியாது!
மஞ்சுவைக் கமல் திருமணம் செய்துகொண்டால் ஒரு குடும்பஸ்த்ரியாக எப்படி இருந்திருப்பாள் என்று படத்தின் நடுவே ஒரு நிமிடம் Pause போட்டு சிந்தித்தால் நிச்சியமாக ஒரு பாங்கான சராசரி குடும்பப்பெண்ணாக அருமையான ஒரு மனைவியாகத்தான் மஞ்சு இர்ந்திருப்பாள் என்றுதான் மனது சொல்லும் இத்தனைக்கும் ஒரு கே.பி பட ஹீரோயினைவிட நூறுமடங்கு அதிகமாக புரட்சியும் சுதந்திரமும் பேசும் பாத்திரம் இது..... சில பவர்ஃபுல் காட்சிகளால் மஞ்சுவின் இத்தனை மெனக்கிடல்களையும் மீறி அவளையும் ஒரு Girl Next Door -ஆகப் பார்வையாளனின் மனதில் நிலை நிறுத்தியதைத்தான் ஒவ்வொருமுறை இந்தப் படம் பார்க்கும்போதும் ருத்ரய்யாவை வியந்து, கமலைப் போலவே நானும் மஞ்சுவைக் காதலிக்கிறேன் மௌனமாக.......!
தவறான நபர்களிடம் காதலித்து ஏமாற்றத்தையும் அருவருப்பையும் சம்பாதித்துக்கொண்ட விரக்தியில், மஞ்சு தான் தேடுவதும் ஒரு நல்ல துணையைத்தான் என்பதை அவளுடன் நெருக்கமாகப் பழகும் தோழிக்கோ, அவளைப் பற்றி மிகத் தீர்க்கமான ஒரு புரிதலில் இருக்கிறோம் என்று நம்பும் ரஜினிக்கோ ஏன் அவளை அப்படியே ஏற்றுக்கொண்டு அவளாகவே அவளைக் காதலிக்கும் கமலுக்கே கூடப் புரியாதவாறு தான் உருவாக்கிக்கொள்ளும் சிக்கலான இமேஜில் தானே சிக்குண்டு பொக்கிஷமாகக் கிடைத்த ஒரேயொரு துணைவனையும் இழந்து தூரத்தில் தனியாக நிற்பாள் மஞ்சு அந்தக் கடைசி காட்சியில்.......
முதலில் கூறியவாறு பார்வையாளனும் கமல்ஹாசனும் மஞ்சுவின் தேவை மற்றும் காதல் பற்றிய நிலைப்பாடில் ஒரேமாதிரியான குழப்பமான மனநிலையில் இருப்பதாகச் செல்லும் திரைக்கதையில் ஒரு பகுதியில் பார்வையாளன் மஞ்சுவின் "சாதாரணத்தை"ப் புரிந்துகொண்டு அவளின் அடிமனதில் கமல்மீது தோன்றும் காதலையும் எளிதாக உணரத் துவங்கிவிடுவான் ஆனால் கமலுக்கு அது இறுதிவரைக்கும் குழப்பமாகவே மிஞ்சிவிடுவதுதான் இந்தத் திரைக்கதையின் யதார்த்த மந்திரம்!
திரைக்கதையைவிட அதி நவீனமானது இந்தப் படத்தின் ஒளிப்பதிவு...... ஒரு கருப்பு-வெள்ளைப் படத்தில் கேமரா இவ்வளவு விளையாடமுடியுமா?? என்று கர்ணன், பி.எஸ். லோக்நாத், அஷோக்குமார் போன்ற ஜித்தர்களைப் பார்த்து மிரண்டிருக்கிறேன் ஆனால் இந்தப் படத்தில் நல்லுசாமி-ஞானசேகரன் கேமராவைக் கையாண்டிருக்கும் கோணங்களும் வண்ணங்கள் இல்லாமலேயே க்ரியேட் செய்யும் மூட்-களும் அபாரமானவை...... பெரும்பாலும் க்ளோஸ்-அப் கள்தான் ஆனாலும் ஒன்றுக்கொன்று அதிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பெர்ஃபார்மன்ஸையும் சரி உணர்வுகளையும் சரி நேரடியாக முழுவதுமாக அள்ளிக்கொண்டேயிருக்கும்!
நடிப்பு என்று சொன்னால்........ ஸ்ரீப்ரியாவின் நடிப்பை ஏற்கெனவே சொல்லிவிட்ட்டேன் முழுமையாக என்னால் எழுதிவிடமுடியாவிட்டலும்! கமலிடம் இந்தப் படத்தில் மிக அதிகமாக ரசித்தது........ ரஜினியிடமும் ஸ்ரீப்ரியாவிடமும் உரையாடல்களில் நேர்மாறான கருத்துகள் கொண்டவராகத்தான் அநேகக் காட்சிகளில் கமல் இருப்பார் ஆனாலும் அவர்கள் இருவரும் எதிர்மறைக் கருத்துகளைக் கேட்பவர்களே இல்லை பாத்திரப்படைப்புகளில்! தனது கருத்து முரண்பட்ட நிமிடத்திலேயே பேச்சை இருவரும் முடித்துக்கிளம்பிவிடுவார்கள்..... அப்போது அந்த ஒவ்வொரு சீனிலும் அடுத்து தான் பேச வேண்டிய பத்துவரி வசனத்தைத் தனது ஒற்றை முகபாவத்தாலேயே பேசுவார் கமல்..... நிறைய சீன்களில் கமலிடமிருந்து வெளிப்படும் இந்த மௌன நடிப்பு வெகுவாகக் கவரும்........!
ரஜினியின் தெளிவான படு இயல்பான நடிப்பு படத்திற்கு பெரும்பலம்....... "நேச்சுரல் ஆக்டிங்"கில் இந்திய சினிமாவுக்கு ஒரு மாபெரும் முன்னோடி ரஜினிகாந்த் ஆனால் ஸ்டைலுக்காக மட்டுமே நினைவுகூரப்பட்டுவருகிறார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக! இந்த ஆதங்கம் எழுவதைத் தவிர்க்கமுடியாது இந்தப் படம் பார்க்கும்போது! ரஜினியின் ஸ்டைலும் வேகமும் இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் தியாகு கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கும் பாங்கினையும் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம்! சில காட்சிகளில் நன்றாகப் பயன்படுத்தியிருப்பார் ருத்ரய்யா.....!
இன்னொரு முக்கியமான ஆட்ட நாயகன் இளையராஜா! மஞ்சுவின் ஆழத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட இன்னொரு ஜீவன் இளையராஜாவாகத்தான் இருக்கமுடியும் அத்தனை தேர்ந்த இசையை வழங்கியிருப்பார்..... "உறவுகள் தொடர்கதை...." ஒரு பாடல்போதும் இளையராஜாவின் இத்தனை சிரத்தையான இசையமைப்பை சர்வசாதாரணப் படங்கள் அத்தனை எளிதில் பெற்றிடமுடியாது அனுபவித்து இசை வழங்கியிருப்பார் பெரும்பான்மை மௌனங்களுடன்!
நான் ருத்ரய்யாவின் இரண்டாவது படமான "கிராமத்து அத்தியாயங்கள்" பற்றி அதிகம் கேள்விப்பட்டதுகூட கிடையாது..... ஒரு பத்து ஆண்டுகளுக்குமுன்பாக விகடனில் அவரது பேட்டி ஒன்றைப் படித்தேன்.... ஒரு பிடிவாதக்காரராக அடையாளம் காட்டப்பட்டிருந்தார்........ அவரது பேச்சும் விடாப்பிடியாகத்தான் தெரிந்தது...... ரஜினி-கமல்.... அஜித்... விக்ரம் வரை அவரின் பார்வை பதியப்பட்டிருந்தது அந்தப் பேட்டியில் அதன்பிறகு அவரது மரணச்செய்தியைத்தான் கேள்வியுற்றேன்.......
ருத்ரய்யாவின் இந்தப் பிறவியில் அவர் எடுத்திருப்பது இரண்டே படங்கள்தான் என்றாலும் "அவள் அப்படித்தான்" அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் ஒரு தமிழ்ப்படமாக இருக்கும்!
இந்தப்படத்தை ஒரு ஜப்பான் அல்லது கொரிய மொழியில் டப் செய்து சப்-டைட்டிலுடன் வெளியிட்டிருந்தால் நம்மவர்கள் கொண்டாடிப்பார்த்திருப்பார்கள் ஓர் உலகசினிமாவாக........!
ருத்ரய்யாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளுடன்......
பிரபு . எம்