டயனா மரியம் குரியன் என்னும் கேரளப் பெண் பின்னாளில் நயன்தாரா எனும் பெயரில் லேடி சூப்பர்ஸ்டாராக உருவெடுத்துத் தனக்கெனப் பெரும் ரசிகர் கூட்டத்துடன் ஓர் உச்ச நட்சத்திரமாகக் கோலோச்சிவரும் சமகாலத்தில், முற்போக்கான கதைக்களங்களைக் கிட்டத்தட்ட முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்ட தென்னிந்தியத் திரையுலகம் என்று சந்தேகமில்லாமல் சொல்லமுடிகிற நிலையில் இருக்கும் மலையாளத் திரையுலகின் முதன்முதல் கதாநாயகியின் வரலாறு காலத்தால் அழித்துவிடமுடியாத ஓர் அவல வரலாறு மட்டுமல்ல அது ஒரு பெரும் சோகம்.... கடும் அவமானம்....!
1928ஆம் ஆண்டு, "மலையாளத் திரையுலகின் தந்தை" என்று பின்னாட்களில் கௌரவிக்கப்பட்டு நினைவுகூரப்படும் அமரர். ஜேசி டேனியல் அவர்கள், இயக்கித் தயாரித்த "விகதகுமாரன்" எனும் மௌனப்படம்தான் அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரையில் வெளிவந்த முதன்முதல் மலையாளத் திரைப்படம். அதில் கதாநாயகியாக நடிக்கக் கலையம்சம் கொண்ட ஒரு பெண்ணை டேனியல் தேடிக்கொண்டிருக்க, இயல்பாகவே நாட்டியம் மற்றும் நாடகத்தில் ஆர்வம் கொண்டு மேடைகள் ஏறியிருக்கும் PK ரோஸி எனும் இளம்பெண்ணைத் தனது கதையில் வரும் நாயகியான
"சரோஜினி"யாகப் பார்த்திருக்கிறார் ஜேசி டேனியல்! அதைத் தொடர்ந்து PK ரோசி மலையாள சினிமாவின் முதலாவது கதாநாயகியாக ஒப்பந்தமாகி "விகதகுமாரன்" படத்தில் நடித்தும் முடித்துவிட்டார்.

"ஸ்த்ரீ பார்ட்" என்கிற பெயரில் மேடை நாடகங்களில் பெண்வேடங்களை ஆண்களே ஏற்று நடித்துவந்த காலம் அது... அந்தக் காலத்தில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் எல்லாம் புராண மற்றும் இலக்கியப் படைப்புகளாகத் தான் இருந்திருக்க வேண்டும்..... ஆறறிவு கொண்ட மனிதப் பெண்களின் வெறுமனே பாலியல் தனித்துவங்களாக நிறுவப்பட்ட "பெண்மை" என்னும் குணத்தொகுப்பை ஓரறிவுள்ள பூக்களுக்கும் உயிரற்று ஓடிக்கொண்டிருக்கும் நதி நீருக்கும் உருவகங்களாக்கி அதில் கட்டாய மென்மையைப் புகுத்தி, தேவையற்ற நளினங்களையெல்லாம் நடை உடைகளில் பச்சை குத்தி, பெண்மையின் கூந்தலில் மணமுண்டு இதழ்களுக்கு இயல்பான செந்நிறம் உண்டு என்றெல்லாம் நம்புமளவு மக்கு ஆண்களை எல்லாம் பேராண்மைகளாக நிறுவிய படைப்புகள் அவை.... அழகிய மொழி ரசத்தால் கட்டமைக்கப்பட்ட அத்தகைய "பெண்மை" என்னும் விஷயமே சுத்தமாக இல்லாத டெஸ்டஸ்டிரோன் சுரக்கும் ஆண்கள், பெண்வேடமிட்டு அபிநயிப்பதை எவ்வித சிரமுமின்றி ஏற்றுக்கொண்டு ரசிக்கவும் முடிந்த அன்றைய கலா ரசிகர்களால் ஏனோ சமுதாயத்தால் தாழ்ந்த சாதி என்று வரையறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த PK ரோசி எனும் இயற்கையான பெண்மை, திரையில் "சரோஜினி" எனும் உயர்சாதி பெண்ணாக நடித்திருந்ததை ஜீரணிக்கக்கூட முடியவில்லை! முதன்முதலில் திரைப்படம் என்ற ஒன்று திரையிடப்படுகிறது.... அதில் திரையில் தன்னைக் காண்பதே ஒரு பெருஞ்சுகம் அதையும் தாண்டி ஒரு பெருங்கூட்டத்தினால் தன் நடிப்பும் அழகும் வரவேற்கப்படுவதும் கொண்டாடப்படப்போவதும் எவ்வாறிருக்கும் எனும் உற்சாகக் கற்பனைகள் எல்லாம் நிச்சயம் பிகே ரோசிக்கும் இருந்திருக்கும்... ஆனால் திரையில் ஓர் உயர்சாதிப் பெண்ணாக PK ரோசி தோன்றியதும் ஒட்டுமொத்தமாக முகம்சுளித்த பார்வையாளர்கள் திரையை நோக்கிக் கல்லெறிந்து (அவ்வளவு அறிவுக்கூர்மை!) கலவரம் செய்து, அனைத்துக் கண்றாவித்தனங்களையும் கட்டவிழ்த்து வெறியாட்டம் ஆடி, மக்களினங்களுக்குள் "குறில் - நெடில்" வேறுபாடுகளை உட்படுத்திப் பிறப்பால் உயர்ந்தவர்களாகத் தங்களை நம்புகிறவர்கள் மக்களல்ல, நாங்கள் "மாக்கள்" என்று சுயநினைவுடனேயே நிரூபித்திருக்கிறார்கள்!
PK ரோசியின் இல்லம் கொளுத்தப்படுமளவு அவலங்கள் அரங்கேறியதாக அதிகாரப்பூர்வமற்ற சில செவிவழிச் செய்திக்குறிப்புகள் இப்போது இணையத்தில் காணக்கிடைக்க, இந்தக் களேபரங்களில் இருந்தெல்லாம் தப்பித்துத் தன் சொந்த ஊரைவிட்டு ஒரு லாரி டிரைவரின் உதவியுடன் தப்பித்துச்சென்று அந்த லாரி ஓட்டுனரையே மணமுடித்துத் தான் ஒரு நடிகை அதுவும் மலையாள சினிமாவின் முதன்முதல் கதாநாயகி எனும் பெருமிதமான வரலாறை வாழுமட்டும் யாருக்கும் தெரியாத ஓர் இரகசியமாகக் காத்து வந்திருக்கிறார்கள் பயத்தினால்! (ஓர் "இனம்"புரியாத பயம் என்று சொல்வோமே அது இதற்குத்தான் பொருந்தும் போல! )
கிடைத்த தகவல்களின் படி 1988 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் இயற்கை எய்தியிருக்கிறார் கேரளத்து முதல் வெள்ளித்திரை நாயகி! 2013ஆம் ஆண்டில் பிரித்திவிராஜ் நடிப்பில் இயக்குனர் கமல் இயக்கிய "செல்லுலாய்ட்" என்னும் ஜேசி டேனியலின் பயோபிக்கின் மூலம்தான் PK ரோசியின் கதையும் இந்த அவல வரலாறும் பேசுபொருளானது!

தன் வாழ்நாளில் PK ரோசி நிச்சயமாகத் திரைப்படங்களைப் பார்த்திருப்பார்.... அலங்காரப் பதுமைகளாகவும் அதிகாரமிக்க நட்சத்திரங்களாகவும் ஜொலித்த எத்தனையோ நடிகைகளைப் பற்றி அறிந்திருப்பார்.... பழம்பெரும் நடிகை என்று கௌரவிக்கப்பட்டிருக்கும் பல "ஜுனியர்"களையும் கண்டிப்பாகக் கண்டு மனதளவில் கடந்துசென்றுமிருப்பார் சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கெல்லாம் சூப்பர் சீனியரான இந்த விகதகுமாரி! (தொலைந்துபோன மகள் என்பது பொருள்!) அப்போதெல்லாம் இந்த நாயகியின் மனவோட்டங்கள் எப்படியானதாக இருந்திருக்கும் என்றுதான் கூகுளின் டூடுளில் கம்பீரமாகக் காட்சியளித்த இந்தக் கதாநாயகியைப் பார்த்தபோது என் மனதுக்குள் எண்ணங்கள் ஓடின!
Google-இன் இந்த ஒரு gesture என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தி மகிழ்வித்தது!
#Thankyou_Google என்று மனதுக்குள் ஒரு ஹேஷ்டேகை உருவாக்கிக்கொண்டேன்!
மறைந்துவிட்ட PK ரோசிக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா என்று நமக்குத் தெரியாது.... ஆனால் ஒன்று மட்டும் மீண்டுமொருமுறைக் கண்முன்னே ஊர்ஜிதமானது.... அது என்னவென்றால், வரலாற்றில் எப்பேர்ப்பட்ட அசிங்கங்களையும் நாம் பதித்துவிட முடியும் ஆனால் பதித்த எதையும் அழிக்க மட்டும் முடியவே முடியாது.... என்று!
அதே வேளையில், 1928ல் நடந்த இந்த சம்பவங்களை 2023ல் புதிதாய்க் கேட்பவரின் கற்பனைக்குக் கூட இந்த அவலங்கள் எட்ட வாய்ப்பில்லாத நிதர்சனம் நாம் கடந்து வந்திருக்கும் பாதை சரியானதுதான் என்று தெளிவாக உணர்த்துகிறது! இருப்பினும் இந்த சமகாலத்திலும் அவ்வப்போது கேள்விப்படும் சில அருவருப்பான செய்திகள், வட்டப்பாதைகளில் வழிதவறி மீண்டும் பின்னோக்கிப் போய்விடுவோமோ என்று அச்சம் கொள்ளவும்தான் வைக்கின்றது! எது எப்படியிருந்தாலும், மனித இனம் தன் மன அழுக்குகளை நிகழ்காலத்தில் களைந்துகொள்வதே நாளைய வரலாற்றின் தூய்மையைக் காக்கும்!
கல்லெறிவதாலும் கலவரம் செய்வதாலும் சாதனைகளைக் காலத்தின் பக்கங்களிலிருந்து அழித்துவிட முடியாது என்று Google-ன் முகப்புப் பக்கமும் ஒரு முழு நாளுக்கு சாட்சி சொல்லியிருக்க, முதல் நாயகிக்கு ஒரு ரசிகனின் வீர வணக்கங்கள்!
அன்புடன்,
பிரபு எம்!