Thursday, December 04, 2014

ஃபிலிப் ஹ்யூஸின் மரணமும்..... மைக்கேல் க்ளார்க்கின் அற்புதமான அஞ்சலி உரையும்!





ஓர் 21 வயது ஆஸ்திரேலிய இளைஞன் "Baggy Green"   அணிந்து ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடுவது அத்தனை எளிதான காரியமல்ல‌...... காரணம் அத்தனை வலுவானது ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பு! கில்கிறிஸ்ட், ஹேடன் போன்ற எத்தனையோ பேட்டிங் ஜாம்பவான்கள் தங்களின் சர்வதேச கேரியரின் முடிவில் அசாத்தியமான நம்பர்களைக் கைவசம் கொண்டிருக்காததின் காரணம் வயதின் அடிப்படையில் சற்று தாமதமாக தேசிய அணியில் இடம்பிடித்ததுதான்! அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் இருபத்துஒன்று வயதே ஆன இளைஞனாகக் களமிறங்கிய ஓர் இளம் கிரிக்கெட் வீரன் இதோ தனது  25 வயதிலேயே, அணித்தலைவன் மைக்கேல் கிளார்க் உட்பட, எட்டுபேர் சுமக்கத் தனது இறுதிஊர்வலத்தையே முடித்துக்கொண்டு கல்லறைப் பெவிலியனில் உறங்கச் சென்றுவிட்டான்...... அந்தப்போட்டியில் அவனது ஸ்கோர் 63* ( நாட் அவுட்!)



23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் ஒரு மரணத்துக்குக் காரணமாகப்போகும் அந்த பயங்கர பவுன்சரை வீசியபோது நிச்சியம் உணர்ந்திருக்க மாட்டார் இந்தப் பந்தை ஏன் வீசினோமெனக் காலத்துக்கும் நினைத்து மருகப்போகிறோம் என்று! இன்னும் ஒரே வாரத்தில் 26  வயதில் அடியெடுத்து வைக்கவிருந்த ஃபிலிப் அந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 161 பந்துகளை சந்தித்து 63 ரன்களுடன் வலுவான அடித்தளத்துடன் பிட்சில் ஊன்றி நின்றுகொண்டிருக்கிறார்......
அபாட்டின் அதிவேகமான அந்தப் பந்து ஒரு துல்லியமான பவுன்ஸர்...... மிகச்சரியான அளவில் ஷார்ட்-லெங்தில் தரையைத் தொட்ட வேகத்தில் மேலெழும்பி எகிறியது!  பொதுவாகவே "ஹுக்" ஷாட்டில் வல்லவரான ஃபிலிப் ஹ்யூஸ் களத்தில் "இன்-ஃபார்"மில் நின்றுகொண்டிருக்கும்போது அந்தப் பவுன்சரைத் தற்காப்புடன் விலகிக்கொண்டு விட்டுவிட நினைக்கவில்லை....... லெக் ஸைடில் "ஹூக்" செய்ய பொஸிஷன் பிடித்தார்...... நேர்த்தியான ஃபுட் வொர்க்-குடன் சரியாகவே மட்டை வீசினாலும் அவரது கணிப்பு துளியளவு மிஸ்ஸானதற்குத்தான் தன் வாழ்க்கையையே விலையாகக் கொடுத்து விடைபெற்றிருக்கிறார் ஃபில்! பந்து வீசப்பட்ட வேகத்தை வைத்து ஷாட்டைக் கணித்த ஃபிலிப்பை, அபாட்டின் பந்து பிட்சில் குத்தி எகிறும்போது தனது வேகத்தை சற்று இழந்ததுதான் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது....... முழுவீச்சில் ஃபில் சுழற்றிய மட்டையில் சிக்காமல் லெக்-திசை நோக்கி முகம் திருப்பிய ஃபிலிப்பின் பின்னந்தலையை ஹெல்மெட்டையும் மீறிப் பந்து பதம் பார்த்தது! பந்தில் அடிபட்டு மிகச்சில நொடிகளே சுயநினைவுடன் இருந்தார்.... அரை நொடி நேரத்தில் மூளை செயலிழந்து ஓர் உடலாக "சொத்"தென்று ஃபிலிப் விழும் காட்சியைக் காணொளியில் கண்ட என்னாலேயே மறக்கமுடியவில்லை நேரடியாகக்கண்ட ஷான் அபாட் எப்படித்தான் அதை மறந்து மீண்டெழுந்து தன் கிரிக்கெட் வாழ்வைத் தொடரப் போகிறாரோ என்று தெரியவில்லை!

ஃபிலிப் இறுதிவரை சுயநினைவுக்குத் திரும்பாமலேயே விடைபெற்றுவிட்டார் ஒரேயடியாக!



ஃபிலிப்பைக் காப்பாற்றிவிடக் கடுமையாகப் போராடிய மருத்துவர்கள் இறுதியில் "பந்து தலையின் எந்தப் பகுதியைத் தாக்குகிறது என்பது மிகவும் முக்கியம்!" என்று சொல்லியிருக்கிறார்கள்.... செரிப்ரத்துக்குச் செல்லும் முக்கியமான மென்மை நரம்பை இந்த பவுன்சர் கடுமையாகத் தாக்கியதின் விளைவுதான் இந்த மரணம்! மேலும் மருத்துவர்கள்,' ஒரு மில்லிமீட்டர் விலகித் தலையில் பட்டிருந்தாலும் ஃபிலிப் உயிர்பிழைத்திருக்கலாம்' என்று அரிதினும் அரிதான அடிபட்டு ஃபிலிப் ஹ்யூஸ் த‌ன்னுயிர் இழந்திருப்பதாக இவ்விளையாட்டு விபத்தை விவரிக்கின்றனர்!



கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது....... ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் க்ளார்க் ஃபிலிப்புடன் மிகவும் தோழமையான உறவைக் கொண்டிருந்தவர் என்கிற முறையில் ஒவ்வொரு முறை இந்த மரணத்தைப் பற்றித் தான் மீடியாவுக்கு அறிவிக்கவேண்டியபோதும் உடைந்து அழுததை நாம் பார்த்தோம்! மேலும் நேற்று நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் க்ளார்க் தனது ஆட்டக்கள சகோதரனான‌ ஃபிலிப் ஹ்யூஸின் நினைவுகளைத் தழுவி அழகான ஆங்கிலத்தில் ஓர் இலக்கிய உரையாற்றியுள்ளார் இந்த‌ இளம்வீரனின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில்!



அந்தவுரையின் சாராம்சம் தமிழில்: 

" அவனுக்கு என்றுமே மேக்ஸ்வைலைப்  (ஃபிலிப்பின் சொந்தஊர்) பற்றியதொரு பெருமித உணர்வு உண்டு... அதன் காரனத்தை இதோ இப்பொழுது மிக எளிதாக உணர முடிகிறது!

வெறும் 25 வயதில் நம்மிடமிருந்து முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டபோதும்........ எந்தவொரு நிமிடமும் அவனிடமிருந்து  வரக்கூடிய அவனது அழைப்புக்காகவோ அல்லது ஏதோவொரு மூலையில் அவன்முகம் தெரியப்போகும் கணத்திற்காகவோ நான் காத்திருக்கத்தான் போகிறேன்! இதனை அபத்தமென்று அறிந்திருந்தாலும் இதைத்தான் நாம் அவனது "ஆன்மா"வென்று அழைப்போமேயானால் அந்த அவனது "ஆன்மா" இன்னும் என்னுள் இருக்கின்றது அது என்றும் என்னைவிட்டு அகலாது!

வியாழனன்று இரவு சிட்னி மைதானத்தில் நடந்துபோய் அதன் நடுப்பகுதியில், அந்த ஆடுகளத்தில் சற்றுநேரம் நிற்கலானேன்!  அந்தப் புல்முனைகளில் என் பாதங்கள் நின்றிருக்க..... அதே புல்முனைகளின் மேல்பரப்பில் அவனும் நானும் மேலும் எத்தனையோ எங்கள் அணிவீரர்களும் பகிர்ந்துகொண்ட எவ்வளவோ பேட்டிங் பார்ட்னர்ஷிப்புகள்..... சிறுவர்களாக கிரிக்கெட் கனவுடன் எங்கள் தலையில் நாங்களே எழுதிக்கொண்ட கனவினை வாழ்ந்த தருணங்கள்....... இங்கிருந்து அவன் சேர்த்த ரன்களுக்காக இதோ சற்றே தொலைவிலிருக்கும் ஸ்டாண்டில் எழுந்து நின்று அவனுக்காய் ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்...... இதோ இந்த ஆடுகளத்திலிருந்து அவன் பவுண்டரிக்குப் பந்துகளை எத்தனையோமுறை  அடித்தனுப்பிய சந்தோஷப் பொழுதுகள்.....! என்று எத்தனை நினைவுகள் இந்த ஆடுகளத்தில் பதிந்துகிடக்கின்றது! இன்று..... அவன் வாழ்வில் மீண்டெழமுடியாமல் வீழ்ந்துகிடந்ததும் இதே ஆடுகளப் புற்களின்மீதுதான்! அதே புற்களின் மேல் முழங்காலிட்டு ஒருமுறை அவற்றைத் தொட்டுப்பார்த்தேன்...... நாங்களிருவரும் இங்கு பேட்டிங் செய்த நாட்களில் ஃபிலிப்புடனான உரையாடல்கள்..... " தேநீர் இடைவேளைவரை நாமிருவரும் விக்கெட்டில் நிலைத்திருக்கவேண்டும்...."  என் அவன் சொன்ன தருணம்.... இன்னொரு தருணத்தில் நான் ஆடிய ஒரு லூஸ் ஷாட்டைப் பற்றி இதே ஆடுகளத்தில் அவன் அறிவுருத்தியது...... அன்றைய ஆட்டம் முடிந்ததும் இரவு என்ன படம் பார்க்கவேண்டுமென நாங்கள் பேசிக்கொண்டது.....மேலும் அர்த்தமில்லாத எத்தனையோ உரையாடல்களை நினைவுகூர்ந்தவனாய் நின்றிருந்தேன்!

"The heart of a man who lived his life for this wonderful game we play, whose soul enriched not just our sport but all of our lives."

"ஒரு மனிதனின் ஆனமா அவன் கால்பதித்த நிலங்களில் தன்னை இணைத்துக்கொள்கிறது" என்று பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் நம்புகிறார்களே அதைத்தான் இந்த உணர்வு ஊர்ஜிதப்படுத்துகிறதா?! அவர்களின் கூற்று சரியானதுதான் என்றே நான் உணர்கிறேன் சிட்னி ஆடுகளத்தில் நின்றுகொன்டிருக்கும் இவ்வேளையில்..... அவனது ஆன்மா இந்த ஆடுகள நிலத்தைத் தொட்டிருக்கின்றது மேலும் இந்த ஆடுகளம் என்றும் என் வாழ்வில் புனிதமானதாகவே நினைவில்கொள்ளப்படும்..... அவனது உடனிருப்பை நான் என்றும் உணரும் களம் இது! மேலும் அவன் எப்படி இன்று உலகம் முழுதுமுள்ள இத்தனையாயிரம் மனித உள்ளங்களைத் தொட்டுவிட்டான் என்று எனக்கு எப்போதும் சொல்லப்போகும் நிலம் இது!

Is this what we call the spirit of cricket?!! கராச்சியில் வாழும் ஒரு சிறுமி தன் கைகளில் ஓர் எரியும் மெழுகுவர்த்தியை ஏந்தியவளாக என் சகோதரனுக்குத் தனது  அஞ்சலி செலுத்துகிறாள்.....  இந்த கிரிக்கெட் விளையாட்டின் மாஸ்டர்களான டெண்டுல்கரும், ஷேன் வார்னும், லாராவும் அவனது இழப்பினால் விழையும் தங்கள் துயரத்தை உலகுடன் பகிர்கிறார்கள்..... இதோ இந்த கிரிக்கெட்டின் ஆன்மாதான் எங்கள் அனைவரையும் ஒன்றாகப் பிணைக்கின்றது!

உலகக் கிரிக்கெட்டர்கள் அனைவரும் பகிரும் இந்த பிணைப்புதான் இன்று உலகின் அத்தனை கிரிக்கெட் வீரர்களையும் இன்று தங்கள் பேட்டைத் தொடவிடாமல் நிறுத்துகின்றது......... ஃபிலிப் யாரென்றே அறியாத மக்களைக் கூட லார்ட்ஸ் மைதான முகப்பில் அவனுக்காக மலர்களைக் குவிக்கச் செய்திருக்கின்றது..... இந்தப் பூமியில் கிரிக்கெட் ஆடப்படும் ஒவ்வொரு நாட்டிலும் ஃபிலிப்பிற்காகத் தங்களின் இதயப்பூர்வமான அஞ்சலிகளைக் காற்றில் கரைத்திருக்கின்றது! மேலும் எத்தனையோ வீரர்களை ஃபிலிப் தன் உயிருக்குப் போராடியபோது அவனைத் தேடி வரவைத்தது!

This is what makes our game the greatest game in the world.

நமது கிரிக்கெட்டில் கரைந்து என்றும் நிலைத்திருக்கப்போகும் ஃபிலிப்பின் ஆன்மா இதோ களத்தில் நாம் காதலிக்கும் இந்த ஆட்டத்தின் காவல்தெய்வமாக நிலைத்து நிற்கப்போகிறது.....  நாம் அவன் ஆன்மாவிற்கு செவிகொடுக்கவேண்டும்.....  ஆடுகளத்தில் அவன் ஆன்மாவுடன் கழித்த பொழுதுகளை அதே சந்தோஷத்துடன் உள்வாங்கி உளம்மகிழவேண்டும்..... அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!


அமைதியில் உரைந்திடு என் இளைய சகோதரனே......... நானும் உன்னை சந்திப்பேன்! "


இந்த அற்புதமான உரையைத் தன் உயிர் மூச்சானது உணர்வுகளால் உதற, உணர்ச்சிப்பூர்வமாக வாசித்துமுடித்தார் மைக்கேல் க்ளார்க்!

உயிர்..... உன்னதமானது! வாழ்க்கை நிரந்தரமற்றது....... ஆன்மா அழிவில்லாதது! இந்த இளைஞன், இளம் வயதில் இன்னுயிர் நீத்துவிட்டபோதிலும், தன் ஆன்மாவைத் தனது சாதனைக் களத்தின் நிலப்பரப்பில் இணைத்துக்கொண்டுவிட்டான் ! இன்றுவரை வாழ அனுமதிக்கப்பட்டிருக்கும்  நமது சாம்பல்களும் என்றோ ஒருநாள் கங்கையிலோ காவிரியிலோ கரையட்டும்.... உடல்களும் மண்ணோடு உரமாகட்டும்...ஆனால் அழிவிலா நம் ஆன்மாக்கள் மட்டும்  நம் வினைகளாய் காற்றில் கரைந்து என்றென்றும் வாழட்டும்........ சம அலைவரிசைகளில் அது பேசிக்கொண்டே இருக்கட்டும்..... நாமும் அறியோம் என்று மறைவோமென்று......!

ஃபிலிப் ஹ்யூஸின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலுடன்,

பிரபு எம்

Saturday, November 22, 2014

ருத்ரய்யா..... "அவள் அப்படித்தான்" [A] (1978)

ருத்ரய்யா..... 



ஒரு சிறந்த இயக்குனர் காலத்தால் அழியாத பெயரெடுக்க ஒரேயொரு படம் எடுத்திருந்தால் கூட போதும் என்பதற்கு மௌனசாட்சியாய் இந்த வாரம் வரை வாழ்ந்துவந்த‌ இயக்குனர் ருத்ரய்யா இப்பொழுது உயிருடன் இல்லை...... தமிழ் சினிமாவுக்கு இவரது இழப்பு முழுமையாக 1980லேயே ஏற்பட்டுவிட்டதினால் இப்போது அது இறுதியாக ஒருமுறை ஊர்ஜிதமாகியிருக்கிறது அவ்வளவுதான்..... ஆனாலும் ரசிகர்களுக்கு இவர் இயக்கிய 1978 ல் வெளிவந்த "அவள் அப்படித்தான்" படம் பார்த்திருந்தால் இவரின் இந்தப் பிறவியை வெறும் இரண்டு திரைப்படங்களுடன் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணரலாம்.......

சிலரை உலகம் "அவர் அல்லது அவள் அப்படித்தான்" என்று முடிவுசெய்து தீர்ப்பு வழங்கிவிடும் அப்படியான முடிவுகள் ஒன்று விதிகளைத் தளர்த்திக்கொள்ளும் ஒரு தனிப்பட்ட சலுகையாகவோ அல்லது ஒட்டுமொத்த புறக்கணிப்பாகவோ அமைந்துவிடும்.....


"அவள் அப்படித்தான்" , "கிராமத்து அத்தியாயம்" என்ற இரண்டு படங்களை இயக்கிவிட்டு திரையுலகைவிட்டு ஒதுங்கிக்கொண்டவர் இன்று 34 ஆண்டுகள் கழித்து நிலவுலகைவிட்டும் நீங்கிச்சென்றிருக்கிறார்.......  ஏன் அவர் மூன்றாவது படம் எடுக்கவில்லை? என்பதற்குத் தெளிவான காரணமெதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்று நினைக்கிறேன்..... கேட்டால் ஒருவேளை சொல்லுவார்கள் "அவர் அப்படித்தான்" என்று!


"அவள் அப்படித்தான்" [A]  (1978)





"அன‌ந்துவுக்கு...." என்ற ஒற்றை வார்த்தை சமர்ப்பணத்துடன் தொடங்கும் இந்தப் படம் மனிதர்களின் பல்வேறு நிறங்களை அப்படியே தனக்குள் அள்ளிக் கொண்டுவந்து சேர்த்த ஒரு  "கலர்ஃபுல்" கருப்புவெள்ளைத் திரைப்படம்!

படம் துவங்கியதுமுதல்  முடியும் வரை "அப்படியே" இருக்கும் அந்த "அவளின்"திரைப்பெயர் மஞ்சு நிஜப்பெயர் ஸ்ரீப்ரியா! தன்னையும் மஞ்சுவையும் திரையில் ஒரு கணம் கூட பிரித்துப்பார்க்க அனுமதிக்கவில்லை ஸ்ரீப்ரியா..... எளிமையாக "மஞ்சுவாக ஸ்ரீப்ரியா வாழ்ந்திருக்கிறார்" என்ற அந்த க்ளிஷே வரியை உபயோகிக்கலாம்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டியதாய் அமைந்திருக்கிறதே ஸ்ரீப்ரியாவின் இந்த "மஞ்சு" அவதாரம்!

அழகான மஞ்சுவை அணுகுவது கடினம்.... காரணம் அவளைச் சுற்றி அவளே அமைத்துக்கொண்டிருக்கும் நெருப்பு வளையங்கள்!..... காரணம் ஆதரவற்ற நிலையில் ஓர் அழகான பெண் இருந்தால் அவளுடன் உறவைப் பகிர்ந்துகொள்வதைவிட உணர்வுகளுக்காக உபயோகப்படுத்திக்கொள்ளத்தானே அல்லாடும் ஆண்மனம்!

மஞ்சுவின் தாயின் நடத்தையின் அசுத்தம் ஊருக்கே வெளிச்சம் அந்த வெளிச்சத்தில் நிர்வாணமாய்க் கூனிக்குருகும் அவள் கணவன்..... இந்த ஓட்டைகளுக்குள் நுழைந்து, அறிந்தும் அறியாமலும் அல்லாடும் மஞ்சுவிடம் அத்துமீற "மாமன்" ஒருவன் எத்தனிக்கும்போது மஞ்சு பள்ளிமாணவி!

" நேத்து உங்க அம்மாகூட ஒருத்தர் வந்தாரே.... உயரமா.....குண்டா.....அவரு யாரு உங்க அப்பாவா??" என்று பதில்தெரிந்துகொண்டே நக்கலாகக் கேட்கும் உடன்பயிலும் மாணவிக்கு மௌனத்தைப் பதிலாகத் தந்து நகரும் மஞ்சுவின் பிஞ்சுமனம் மேலும் மேலும் அவமானங்களாலும் அத்துமீறல்களாலும் இறுகிப்போன‌ கடினமான ஸ்ரீப்ரியாவாக  மொத்தப்படத்திலும் உலவவிட்டிருப்பார் ருத்ரய்யா,.....!

ஆவணப்பட இயக்குனர் அருணாகக் கமல்ஹாசன்! ஆங்கிலத்தில் genuine என்ற வார்த்தைக்கு synonymous படத்தில் கமல்! தனது தொழில், காதல் உட்பட எல்லாவற்றிலும்! மஞ்சு பணிபுரியும் விளம்பரக் கம்பெனியின் பாஸ் ரஜினி! "டேய் மாப்புள......" என்று படு அலட்சியமாகத் துவங்கிக் கமலுக்கு வாழ்க்கையைப் பற்றியும் முக்கியமாகப் பெண்களைப் பற்றியும் அவ்வப்போது பாடம் எடுக்கும் ஒரு திறந்த புத்தகம் ...... தன் இளமைக்கு இணையாக‌ இன்பத்தை நிறுத்தித் தானே சரியென்று வாழும் Casual இளைஞன் ரஜினி!ஆவணப்படம் எடுக்கவரும் தன் நண்பன் கமலுக்கு உதவிவாக இருக்கச்சொல்லி ஸ்ரீப்ரியாவைக் கமலுக்கு அறிமுகம் செய்துவைப்பார் ரஜினி!

கமலின் ஆவணப்படத்துக்கான ஆராய்ச்சிப் பொருள் "பெண்கள்"!  கிட்டத்தட்ட‌ முப்பதாண்டுகால முற்போக்கான பளிச் பளிச் வசனங்கள்தான் அன்று இந்தப்படம் புறக்கணிக்கப்பட்டதற்கும் இன்றும் நிலைத்து கம்பீரமாய் நிற்பதற்கும் ஒற்றைக் காரணம்!

"இந்த படமெடுக்குறதுல நல்ல பணம் கிடைக்கும்ல......" என்று ஸ்ரீப்ரியா கமலுடன் ஒரு காஃபி உரையாடலில் மேம்போக்காகக் கேட்பார்...... முகம் சிவக்கும் கமல், "பணம் பண்ணுறது மட்டும் என்னோட நோக்கமில்ல...." என்று அழுத்தமாக ஆரம்பிக்கும்போதே சட் டென்று ஸ்ரீப்ரியா "இப்படி வித்தியாசமாத் தன்னைக் காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்..!" என்று உரையாடலை முள்தைத்து முடித்துவைப்பார்!

வீட்டுக்கு வந்த ஸ்ரீப்ரியாவை "காஃபி சாப்பிடுறீங்களா?" என்று கமல் கேட்கும்போது "வேற என்ன பண்றது சொல்லுங்க....." என்று ஸ்ரீப்ரியாவை அஸால்டாகக் கேட்கவிட்டு அடுத்த ஃப்ரேமில் கையில் காஃபியுடன் சீன் வைத்திருப்பார் ருத்ரய்ய்யா.....!

எதிரில் அமர்ந்திருக்கும் கமலின் உணர்வுகளைத் தன் கூர் வார்த்தைகளால் படு ஈஸியாகக் காயப்படுத்தும் ஸ்ரீப்ரியாவுக்குத் தக்க பதிலைக் கொடுக்க கமலின் உதடுகள் துடித்திடும் ஆனால் அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் மைக்ரோசெகண்டில் அந்த உரையாடலையே முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவார் ஸ்ரீப்ரியா...... மெதுமெதுவாகக் கமல் ஸ்ரீப்ரியாவைப் புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்தாலும் கமலுடன் சேர்ந்து பார்வையாளர்களுக்கும்கூட எளிதில் புலப்படாது கமல் குறித்த ஸ்ரீப்ரியாவின் மனவோட்டம் எப்படிப் போகுமென்று...... அதுவரை சில மின்னல் வசனங்களை அவ்வப்போது சப்ளை செய்துகொண்டே இருப்பார் ருத்ரய்யா பார்வையாளனின் புன்சிரிப்புக்காக!

ஒரு சீனில் கமலும் ஸ்ரீப்ரியாவும் ரோட்டில் நடந்து செல்லும்போது கமல் சொல்லுவார், " நம்ம ரெண்டுபேரும் ஒண்ணா நடந்துட்டுவந்தாலும் நீங்கமட்டும் தனியாவர்ற மாதிரி இருக்கு" இது சாதாரணமான வசனம்தான் என்றாலும் ஏதோ காரணத்துடன் டல்லாக இருக்கும் மஞ்சுவைப் பேசவைக்கக் கமல் எடுக்கும் பிரயத்தனமாகக் கமல் தவிப்புடன் டெலிவர் செய்யும் விதம் அத்தனை இதமாக இருக்கும்!

கமலின் ஆவணப்படத்துக்காகக் குட்டிபத்மினியைப் (படத்தின்படி அவர் ஒரு க்ளாமர் நடிகை) பேட்டியெடுப்பார்கள்...... "இப்படி ஆடியன்ஸுக்காக அதிலும் குறிப்பாக ஆண்களுக்காக இப்படி மேக்-அப், க்ளாமரான ஆடை போட்டுக்கறது உங்களுக்கு ஒரு மாதிரி அடிமைத்தனமா தெரியலயா?" என்று கமல் கேட்க.... அலட்டிக்கொள்ளாமல் பதில்வரும் நடிகையிடமிருந்து. "மிஸ்டர், அருண் உங்களுக்கு நிறைய நேரம் இருக்குதுபோல..... இவ்ளோயெல்லாம் யோசிக்கிறீங்க?? (லேசான சிரிப்புடன்) இதோ இப்போ ஒரு குடும்பப்பெண் வேடம் ஈவ்னிங் அடுத்த ஷூட்டிங்ல அப்படியே ஆப்போஸிட்.... ப்ராஸ்டிடியூட் வேஷம்.... யோசிக்கவெல்லாம் டைம் இல்ல...." இப்படி யதார்த்தங்களை அளவுகோலாக வைத்துப்பார்த்தால் படம் வந்த சமகாலத்து கே.பாலசந்தர் படங்கள்கூட முற்போக்கில் அவள் அப்படித்தானுடன் மிகவும் தள்ளித்தான் நிற்கமுடியும்.... ஆனால் அப்போது அதனை "ஆபாசம்" என்று தள்ளிவைத்துவிட்டோம்..... நாமெல்லாம் கண்ணகி மைந்தர்கள் ஆயிற்றே! இப்பொழுது ருத்ரய்யாவை வியந்தும் "அவள் அப்படித்தான்"-ஐக் கொண்டாடி எழுதும் விகடனாரே அப்போது இந்தப் படத்துக்குப் போட்ட மார்க்கையும் எழுதிய விமர்சனத்தையும் படித்தால் விழுந்து சிரிக்கலாம் அந்த நிறமாற்றத்தைப் பார்த்து!

ருத்ரய்யா சாகாவரம்பெற்று நிமிர்ந்து நிற்பது மஞ்சுவின் பாத்திரப்படைப்பில்தான்! மேலுக்கு அவள் ஏதோ மிகக்கடினமான வித்தியாசமான பெண் போலத் தோற்றமளித்தாலும், ஒரு சாதாரணப்பெண்ணின் தவிப்புகளும் தன்மீது விழும் துச்சாதன விமர்சனங்களுக்கு அவளுக்கு எழும் சீற்றங்களும் அனைத்துமே அப்படியே அசலாக நாம் சாதரணமாக உடன்வாழும் பெண்மைகளைத்தான் பறைசாற்றும்! ஆனால் அவளது பேச்சுக்களும் மிகமிக மெச்சூர்டாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் நடவடிக்கைகளும் அவளாக உருவாக்கிக்கொண்ட வெறும் செயற்கை அரண்கள்தான் என்பது பார்வையாளனுக்குத் தெளிவாகத் தெரியும்,....... ஒரு பெண்ணின் insecurity-யை இத்தனை நெருக்கமாக விளைவுகளுக்கும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவளின் தயாரிப்புளுக்கும் மையம்வைத்து உருவாக்கிய ஒரு படைப்பை அவ்வளவு எளிதாகத் தமிழில் கூகுளால் கூட கண்டுபிடித்து சொல்லிவிடமுடியாது!

மஞ்சுவைக் கமல் திருமணம் செய்துகொண்டால் ஒரு குடும்பஸ்த்ரியாக எப்படி இருந்திருப்பாள் என்று படத்தின் நடுவே ஒரு நிமிடம் Pause போட்டு சிந்தித்தால் நிச்சியமாக ஒரு பாங்கான சராசரி குடும்பப்பெண்ணாக அருமையான ஒரு மனைவியாகத்தான் மஞ்சு இர்ந்திருப்பாள் என்றுதான் மனது சொல்லும் இத்தனைக்கும் ஒரு கே.பி பட ஹீரோயினைவிட நூறுமடங்கு அதிகமாக புரட்சியும் சுதந்திரமும் பேசும் பாத்திரம் இது..... சில பவர்ஃபுல் காட்சிகளால் மஞ்சுவின் இத்தனை மெனக்கிடல்களையும் மீறி அவளையும் ஒரு Girl Next Door -ஆக‌ப் பார்வையாளனின் மனதில் நிலை நிறுத்தியதைத்தான் ஒவ்வொருமுறை இந்தப் படம் பார்க்கும்போதும் ருத்ரய்யாவை வியந்து, கமலைப் போலவே நானும் மஞ்சுவைக் காதலிக்கிறேன் மௌனமாக.......!

தவறான நபர்களிடம் காதலித்து ஏமாற்றத்தையும் அருவருப்பையும் சம்பாதித்துக்கொண்ட விரக்தியில், மஞ்சு தான் தேடுவதும் ஒரு நல்ல துணையைத்தான் என்பதை அவளுடன் நெருக்கமாகப் பழகும் தோழிக்கோ, அவளைப் பற்றி மிகத் தீர்க்கமான ஒரு புரிதலில் இருக்கிறோம் என்று நம்பும் ரஜினிக்கோ ஏன் அவளை அப்படியே ஏற்றுக்கொண்டு அவளாகவே அவளைக் காதலிக்கும் கமலுக்கே கூடப் புரியாதவாறு தான் உருவாக்கிக்கொள்ளும் சிக்கலான இமேஜில் தானே சிக்குண்டு பொக்கிஷமாகக் கிடைத்த ஒரேயொரு துணைவனையும் இழந்து தூரத்தில் தனியாக நிற்பாள் மஞ்சு அந்தக் கடைசி காட்சியில்.......

முதலில் கூறியவாறு பார்வையாளனும் கமல்ஹாசனும் மஞ்சுவின் தேவை மற்றும் காதல் பற்றிய நிலைப்பாடில் ஒரேமாதிரியான‌ குழப்பமான மனநிலையில் இருப்பதாகச் செல்லும் திரைக்கதையில் ஒரு பகுதியில் பார்வையாளன் மஞ்சுவின் "சாதாரணத்தை"ப் புரிந்துகொண்டு அவளின் அடிமனதில் கமல்மீது தோன்றும் காதலையும் எளிதாக உணரத் துவங்கிவிடுவான் ஆனால் கமலுக்கு அது இறுதிவரைக்கும் குழப்பமாகவே மிஞ்சிவிடுவதுதான் இந்தத் திரைக்கதையின் யதார்த்த மந்திரம்!

திரைக்கதையைவிட அதி நவீனமானது இந்தப் படத்தின் ஒளிப்பதிவு...... ஒரு கருப்பு-வெள்ளைப் படத்தில் கேமரா இவ்வளவு விளையாடமுடியுமா?? என்று கர்ணன், பி.எஸ். லோக்நாத், அஷோக்குமார் போன்ற ஜித்தர்களைப் பார்த்து மிரண்டிருக்கிறேன் ஆனால் இந்தப் படத்தில் நல்லுசாமி-ஞானசேகரன் கேமராவைக் கையாண்டிருக்கும் கோணங்களும் வண்ணங்கள் இல்லாமலேயே க்ரியேட் செய்யும் மூட்-களும் அபாரமானவை...... பெரும்பாலும் க்ளோஸ்-அப் கள்தான் ஆனாலும் ஒன்றுக்கொன்று அதிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பெர்ஃபார்மன்ஸையும் சரி உணர்வுகளையும் சரி நேரடியாக முழுவதுமாக அள்ளிக்கொண்டேயிருக்கும்!

நடிப்பு என்று சொன்னால்........ ஸ்ரீப்ரியாவின் நடிப்பை ஏற்கெனவே சொல்லிவிட்ட்டேன் முழுமையாக என்னால் எழுதிவிடமுடியாவிட்டலும்! கமலிடம் இந்தப் படத்தில் மிக அதிகமாக ரசித்தது........ ரஜினியிடமும் ஸ்ரீப்ரியாவிடமும் உரையாடல்களில் நேர்மாறான கருத்துகள் கொண்டவராகத்தான் அநேகக் காட்சிகளில் கமல் இருப்பார் ஆனாலும் அவர்கள் இருவரும் எதிர்மறைக் கருத்துகளைக் கேட்பவர்களே இல்லை பாத்திரப்படைப்புகளில்! தனது கருத்து முரண்பட்ட நிமிடத்திலேயே பேச்சை இருவரும் முடித்துக்கிளம்பிவிடுவார்கள்..... அப்போது அந்த ஒவ்வொரு சீனிலும் அடுத்து தான் பேச வேண்டிய பத்துவரி வசனத்தைத் தனது ஒற்றை முகபாவத்தாலேயே பேசுவார் கமல்..... நிறைய சீன்களில் கமலிடமிருந்து வெளிப்படும் இந்த மௌன நடிப்பு வெகுவாகக் கவரும்........!

ரஜினியின் தெளிவான படு இயல்பான நடிப்பு படத்திற்கு பெரும்பலம்....... "நேச்சுரல் ஆக்டிங்"கில் இந்திய சினிமாவுக்கு ஒரு மாபெரும் முன்னோடி ரஜினிகாந்த் ஆனால் ஸ்டைலுக்காக மட்டுமே நினைவுகூரப்பட்டுவருகிறார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக! இந்த ஆதங்கம் எழுவதைத் தவிர்க்கமுடியாது இந்தப் படம் பார்க்கும்போது! ரஜினியின் ஸ்டைலும் வேகமும் இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் தியாகு கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கும் பாங்கினையும் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம்! சில காட்சிகளில் நன்றாகப் பயன்படுத்தியிருப்பார் ருத்ரய்யா.....!

இன்னொரு முக்கியமான ஆட்ட நாயகன் இளையராஜா! மஞ்சுவின் ஆழத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட இன்னொரு ஜீவன் இளையராஜாவாகத்தான் இருக்கமுடியும் அத்தனை தேர்ந்த இசையை வழங்கியிருப்பார்..... "உறவுகள் தொடர்கதை...." ஒரு பாடல்போதும் இளையராஜாவின் இத்தனை சிரத்தையான இசையமைப்பை சர்வசாதாரணப் படங்கள் அத்தனை எளிதில் பெற்றிடமுடியாது அனுபவித்து இசை வழங்கியிருப்பார் பெரும்பான்மை மௌனங்களுடன்!

நான் ருத்ரய்யாவின் இரண்டாவது படமான "கிராமத்து அத்தியாயங்கள்" பற்றி அதிகம் கேள்விப்பட்டதுகூட கிடையாது..... ஒரு பத்து ஆண்டுகளுக்குமுன்பாக விகடனில் அவரது பேட்டி ஒன்றைப் படித்தேன்.... ஒரு பிடிவாதக்காரராக அடையாளம் காட்டப்பட்டிருந்தார்........ அவரது பேச்சும் விடாப்பிடியாகத்தான் தெரிந்தது...... ரஜினி-கமல்.... அஜித்... விக்ரம் வரை அவரின் பார்வை பதியப்பட்டிருந்தது அந்தப் பேட்டியில் அதன்பிறகு அவரது மரணச்செய்தியைத்தான் கேள்வியுற்றேன்.......

ருத்ரய்யாவின் இந்தப் பிறவியில் அவர் எடுத்திருப்பது இரண்டே படங்கள்தான் என்றாலும் "அவள் அப்படித்தான்" அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் ஒரு தமிழ்ப்படமாக இருக்கும்!

இந்தப்படத்தை ஒரு ஜப்பான் அல்லது கொரிய மொழியில் டப் செய்து சப்-டைட்டிலுடன் வெளியிட்டிருந்தால் நம்மவர்கள் கொண்டாடிப்பார்த்திருப்பார்கள் ஓர் உலகசினிமாவாக........!


ருத்ரய்யாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளுடன்......

பிரபு . எம்


Saturday, August 23, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் [U] (2014)




"எனக்கு ஒரு விஷயம் நல்லா தெரியும் "புதியபாதை" சமயத்தில் இருந்த பார்த்திபனைவிட இப்போதைய பார்த்திபன் அறிவாளி.... ஆனால் அப்போ கொடுக்க முடிஞ்ச வெற்றிப்படங்களை இப்போ என்னால ஏன் கொடுக்கமுடியலன்னுதான் புரியல!"

"குடைக்குள் மழை" சமயத்தில் பார்த்திபன் மேற்கண்டரீதியில் ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் பேசிய வார்த்தைகள் இவை.....அந்த படம்... சூழ்நிலை..... ஏன் அந்த பேட்டியே கூட நினைவைவிட்டு அகன்று விட்டாலும் இந்த வார்த்தைகள் சற்று நேரம் சிந்திக்கவைத்ததாலோ என்னவோ நினைவுகளில் எங்கோ ஒரு ரூம் போட்டுத் தங்கிவிட்டது போல....நேற்று "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று மனதில் கதவைத் தட்டின பார்த்திபனின் இந்த வார்த்தைகள்! அனுபவசாலி பார்த்திபன் தன் அறிவைக் கசக்கிப் பரிசோதித்துப் பார்த்திருக்கும் புதிய அனுபவம் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்"!

இன்றைய தமிழ்சினிமாவின் ஸ்டார் ஹீரோ யார்? என்று கேட்டால் விஜய சேதுபதி , சிவகார்த்திகேயன் எட்சட்ரா.... என்று கூகிளே தப்பான பதில்களைத்தான் சொல்கின்றது..... இன்றைய தேதியில் தமிழ்சினிமாவின் உண்மையான உச்ச நட்சத்திரம் "திரைக்கதை" தான்! கடைசியா நல்லா ஓடின எல்லா படங்களிலுமே ரியல் ஹீரோ "ஸ்க்ரீன் ப்ளே"தான்...... இதனைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கும் நேற்றைய " நாளைய இயக்குனர்கள்!" அதான் இன்றைய இளம் இயக்குனர்கள் எல்லாருமே பாரபட்சம் இல்லாமல் "ஸ்க்ரீன் ப்ளே"யிடமே தொடர்ந்து கால்ஷீட் வாங்கி ஹீரோவாக்கிப் பட்டையக் கிளப்பும் இன்றைய புதுமைகளுக்கு இடையே தானும் திரைக்கதையை ஹீரோவாக்கி மேலும் தன்பங்குக்குக் கதையை ஜீரோவாக்கி  வசனபலத்தாலும் தன்னுடைய ட்ரேட்மார்க் குறும்புகளாலும் ஒரு நேரோ கேப்பில் சக்ஸஸ் கண்டிருக்கிறார் பார்த்திபன்!

ஒரு திரைப்படத்துக்குக் "கதை" தேடும் டீம்... அந்தத் தேடல்தான் படத்தில் "கதை" இருக்கவேண்டிய ஸ்பேஸை நிரப்புகின்றது மற்றபடி திரைக்கதையும்-வசனமும்தான் மொத்தப்படமும்! பாஸிடிவ் எனர்ஜியுடன் முதல்பட வாய்ப்புக்குக் காத்திருக்கும் டைரக்டர் அஸ்பைரன்ட் தமிழ்....... "முதல்படம் எடுத்துட்டுதான் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்"னு தமிழ் சொல்லும்போது "ஓகே அப்போ அதுவரைக்கும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்"னு சொல்லி காஷுவலாகத் தமிழைக் கரெக்ட் பண்ணும் அவனுடைய மாடர்ன் சம்சாரம் தக்ஷா!  கல்யாணத்துக்குப் பிறகுதான் தமிழுக்குத் தெரிகிறது தனது மாடர்ன் சம்சாரம் ஓர் எக்ஸன்ட்ரிக் மினசாரமும் கூடவென்று! தக்ஷாவிடம் அப்பப்போ ஷாக் வாங்கிக்கொண்டும் தமிழ் சினிமா "சீனியர்" தம்பி ராமையா மற்றும் சிலபல புதிய ஆர்வங்களையும் வைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஸ்டோரி டிஸ்கஷன் என்கிற பெயரில் நடக்கும் குளறுபடிகள்... போராட்டங்கள்..... வாய்ப்புத் தேடல்கள் என்று அன்றாடக் கசகச அத்தியாயங்களையே வசனக் கிச்சுக்கிச்சு மூட்டி அடுத்தடுத்து கடத்துகிறார்.... இடையே இயக்குனர் பார்த்திபனாகவே கேமியோ கொடுத்து அடுத்து வரப்போகிற இரண்டு பரபர சீன்களை முன்னதாகவே காண்பித்து டெம்போ மெயின்டெய்ன் பண்ணுகிறார்...! "கதை" என்று ஸாலிடாக எதுவும் இல்லாததால் திருப்பங்களுக்குக் கதாபாத்திரங்களைத்தான் ரீப்ளேஸ் செய்தாக‌வேண்டும் அந்த வகையில் "இன்ட்யூஷன்" தீபாவும் , ஜாலித் திருடன் "முரளி-சுருளி"யும் படத்தை ஸ்வாரஸ்யமாக நகர்த்துகிறார்கள்! இதுவரை பார்த்திபனின் "அனுபவம்"தான் ஸ்கோர் செய்யும் ஆனால் அதுவரை தமிழின் வாழ்வில் நடந்த, வந்து போன பாத்திரங்களை வைத்தே தமிழ் தன் திரைக்கதையை செதுக்க ஆரம்பிக்கும் அத்தியாயங்களில் இதுவரை வந்த காட்சிகளையே அற்புதமாக  நிஜம் என்னும் பேஸ்லைனில்(Base line) பொருத்திக்கொண்டு அதற்கு மேல்கீழாகத் தமிழின் "கற்பனைகள்" கலந்ததாய்க் கண்முன் விரியும் தமிழின் "திரைக்கதை"! அதில் ஆர்யா-அமலாபால் (அமலாபாலுக்கு ஏன் மேக்-அப் போடாமல் பயமுருத்தியிக்கிறார்கள் என்று தயவுசெய்து விளக்கம் கொடுப்பது நலம்!) நாயகன்- நாயகி! ..... படத்துக்குள் படமாகப் பார்க்கும்போது நம்முடன் பழகிய நண்பன் ஒருவன் நமக்குப் பரிச்சியமான அனுபவங்களையே படமாக்கினால் ஓர் அழகான உணர்வு வருமே அந்த உணர்வை அத்தனை ஆடியன்ஸிடம் இழுத்துவருவதில் வெற்றிகண்டுவிட்டார் பார்த்திபன் என்றுதான் சொல்லவேண்டும்! அந்த "லிவ் தி மொமண்ட்" க்ளைமேக்ஸ் செம சேட்டை......  தில்லான முடிவு!

இத்தனை ட்ரிம் அன்ட் ஸ்லிம்மாகப் படத்தை நறுக்கித் தந்திருந்தாலும் தேவையற்ற ஸீன்களும் படத்தில் இருப்பது மைனஸ்! திடீரென்று சேரன் தமிழின் வீட்டுக்கு வந்து தமிழின் முந்தைய திரைக்கதையை யாரோ திருடிப் படம் எடுத்திருப்பதாகச் சொல்வது படத்துடன் ஒட்டவில்லை! இந்தமாதிரி சவசவ காட்சிகளைத் தவிர்த்திருந்தால் படம் இன்னும் ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கும்..... அதேபோல "எந்த ஒரு விஷயமும் அது இல்லாதபோதுதான் அருமை புரியும்" என்று சொல்லுவார்களே அப்படித்தான் இங்கு படத்தில் கதையில்லாத தருணங்களில்தான் "கதை"யின் அருமை புரிகிறது! கதையில்லாமல் வெறும் காட்சியமைப்பு - வசன ஸ்வாரஸ்யம் வைத்து மூவ் பண்ணமுடிந்தாலும் ஒருவித அலுப்புத் தட்டுமே என்றால் பதில் "ஆமாம்! தட்டத்தான் செய்கிறது!" ஆனால் அதிலிருந்து மீட்டெடுத்து முடித்துவைத்ததுதான் இங்கு பார்த்திப வெற்றி!

நடிகர்கள் எல்லாருமே யதார்த்தமாக வாழ்ந்திருக்கிறார்கள்..... தம்பி ராமையா மட்டும் ஆங்காங்கே "நடிக்கிறார்" ஆனால் நன்றாகத்தான் நடிக்கிறார்! பார்த்திபனின் குறும்பு அப் டு டேட்டாக இருப்பதற்கு ஓர் ஆளுயுர ஆச்சர்யக்குறி!
மனிதர் பின்னிப் பெடலெடுக்கிறார் .....ஒன்லைனர்களில் அத்தனை இளமை! நரம்பும் குறும்புமாகத் தனக்குள் ஒரு காலேஜ் பையனை இன்னும் அதே உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்......

சத்யாவின் இசை - ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு - சுதர்சனின் எடிட்டிங் மூன்றுமே படத்துடன் பிரிக்கமுடியாதபடி இணைந்து செயல்பட்டது இயக்குனருக்கு பெரும்பலம் எந்தக் காட்சியும் பின்னணியில் உருத்தவேயில்லாமல் காட்சிகளின் செய்திகளை அப்படியே ரன்னிங் டைமில் உள்வாங்க முடிவதற்கு இந்த மூன்றுபேரின் உழைப்பும் அற்புதம்!

விஷால் - விஜயசேதுபதி-பிரகாஷ்ராஜ்-தப்ஸி பன்னு தோன்றும் அந்த முதல் காட்சி டீஸர் சீன்கள் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

மிக நல்ல முயற்சி..... ஆச்சர்யமான கம்-பேக்...... " கதையில்லாமல் ஒரு திரைப்படம்?" என்ற ஒரு டேக்-லைனால்தான் ஜெயித்திருக்கிறார் பார்த்திபன்...... சி.வி. குமாருக்கே டஃப் கொடுக்கும் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜி அது! பார்த்திபனும் இன்னும் ரேஸில் இருக்கும் ஓர் இளம் இயக்குனர்தான்...... ஆல் தி பெஸ்ட் சார்....

கதை திரைக்கதை வசனம் இயக்கம் -  Might not be exceptional but worth an experiment :-)

அன்புடன்
பிரபு எம்

Friday, January 03, 2014

பிரபலங்களுக்கு 2013 நினைவுப் பரிசுகள்!

நியூ இயர் வந்தாலே நாட்டுல இந்த அவார்டு கொடுக்குறவனுங்க தொல்ல தாங்கமுடியறதில்ல! அநேகமா அவார்டு வாங்குறவங்களவிட அவார்டு கொடுக்குறவங்க அதிகமா இருக்குற ஒரே ஏரியா நம்ம ஏரியாதான்னு நினைக்கிறேன்...சிறந்த படத்துல ஆரம்பிச்சு சிறந்த பப்படம் வரைக்கும் சலிக்காம அவார்டு கொடுக்குறாங்க நம்மாளுங்க! சரி நாமளும் போன வருஷ சோதனையாளர்களுக்கு... ஸாரி... சாதனையாளர்களுக்கு (அட...ரெண்டும் ஒண்ணுதானே!) ஏதாவது கொடுக்கலாமேன்னு யோசிச்சா அதாவது நம்ம பாக்கெட் மணி பட்ஜெட்டுக்குள்ள யோசிச்சு இங்கே நம்ம செலிபரிட்டிங்களுக்கு நூதனமான நினைவுப்பரிசுகளை வழங்குறதா முடிவு செஞ்சிருக்கேன்.... நம்ம கொடுக்குற நினைவுப்பரிசுகளை அவங்க ஷோ-கேஸ்ல (!) பாக்கும்போது எல்லாம் அவங்களுக்கு நம்ம ஞாபகம் வரக்கூடாது 2013 ஞாபகம் வரணும்! ஹிஹி...

நினைவுப் பரிசு லிஸ்ட் கீழே!

கமல்ஹாசன்:




தீபாவளிக்கு முன்னால வரைக்கும் நம்ம புஸ்ஸ்வரூபம் சாரி விஸ்வரூபம் கமல் சாருக்கு 2013 நினைவுப் பரிசா, இந்த உலகத்துல மதச்சார்பே இல்லாத‌ ஏதாவது ஒரு நாட்டைக் கண்டுபிடிச்சு அங்கேபோய் அவர் செட்டிலாக வசதியா ஒரு "உலக உருண்டை"யத்தான்  நினைவுப் பரிசா தரலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்.. ஆனால் சம்பந்தப்பட்ட டிவி சேனலுடைய தீபாவளி சிறப்புப் பட்டிமன்றத்தைப் பாத்தப்புறம் மனுஷருக்கு படத்தோட செகண்ட் பார்ட் ரிலீஸ் பண்ணுறதுக்கும் சேர்த்து இன்னும் நிறைய பட்டிமன்றத்துல பேச வேண்டியிருக்கும்னு அனலைஸ் பண்ணி அவரோட ஒரே மனதைரியத்தைப் பாராட்டி மேலும் மேலும் மேடைப்பேச்சுல அவரு பட்டைய கிளப்ப அவரின் கரகர தொண்டைக்கு குளுகுளு நினைவுப்பரிசாக‌ ஒரு "விக்ஸ் மாத்திரை"யை நமது வலைப்பூவின் சார்பாகக் கொடுப்பதில் பெருமிதம் அடைகிறேன்!

க‌ருணாநிதி:




த‌லைவ‌ருக்குதான் 2013க்கு என்ன‌ நினைவுப்ப‌ரிசு கொடுக்குற‌துன்னு ரொம்ப‌ நேர‌ம் யோசிக்க‌வெச்சுட்டாரு! நல்ல‌ க‌னிஞ்ச‌ ஒரு மாம்ப‌ழ‌த்தை சாரி மாங்"கனி"யை எடுத்து அதை ஒரு க‌ம்பி போட்ட‌ க‌த‌வுக்குப் பின்னால‌ வெச்சு சிம்பாலிக்கா கொடுக்க‌லாமான்னு யோசிச்சேன் ஆனா அந்த‌ள‌வுக்கு க்ரியேடிவிட்டி என‌க்குப் ப‌த்த‌ல..சரி..அவரும் ஃபேஸ்புக், ட்விட்டர்னு களமிறங்கிக் கலக்க ட்ரை பண்ணினதை ஊக்குவிச்சு ஒரு இன்ஸ்டாக்ராம் அல்லது வாட்ஸ்-அப்  அக்க‌வுண்ட் க்ரியேட் ப‌ண்ணி அதை அவ‌ருக்கு நினைவுப்ப‌ரிசா கொடுக்க‌லாம்னு யோசிச்சா, பாவ‌ம் அவ‌ரே அக்க‌வுண்ட் ஆர‌ம்பிச்ச‌ பாவ‌த்துக்காக‌ டெய்லி அவ‌ரே கேள்விகேட்டு அவ‌ரே ப‌தில் போட்டு அல்லு ப‌ட்டுட்டுஇருக்கிற‌த‌ பாத்தா ம‌ன‌சு க‌ஷ்ட‌மா இருக்கு.... என்ன‌தான் ப‌ண்ணுற‌துன்னு பாத்த‌ப்போதான் ஞாபகம் வந்துச்சு 2013ல‌ டோட்ட‌ல் த‌மிழ்நாடும் க‌ண்ட‌மேனிக்குக் க‌ழுவி ஊத்தின‌து இவ‌ரைத்தான் அதுனால‌ அவ‌ருக்கு ந‌ம்ம‌ சிக்க‌ன‌ப் ப‌ரிசு "2013" என்று பொறித்த‌ "காட்ட‌ன் க‌ர்சீஃப்"!!
கர்சீஃப் கலர் கண்டிப்பா மஞ்சள் தாம்ப்பா... நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா!!!

ம‌ன்மோக‌ன் சிங்:




நான் ஜாஸ்தி யோசிக்க‌வே இல்ல‌.... "சைல‌ண்ட் மோடில் ம‌ட்டுமே இய‌ங்கும் ஒரு செக‌ண்ட் ஹாண்ட் மொபைல்" தான் ந‌ம்ம‌ பிர‌த‌ம ம‌ந்திரிக்கு ந‌ம்ம‌ ப்ளாக் த‌ரும் நினைவுப்ப‌ரிசு!

சோனியாகாந்தி:




கீ-கொடுக்காம‌ல்..பெட்ரோல் போடாம‌ல் அட‌ க‌ர‌ண்ட் கூட‌ இல்லாமல் சூரிய‌ஒளியிலேயே ச‌க்தி எடுத்துக்கொண்டு சொன்ன‌தையெல்லாம் செய்துகாட்டும் ஒரு ம‌ன்மோக‌ன்சிங் பொம்மையை நம‌து விஞ்ஞானிக‌ள் குழுவைவெச்சு வ‌டிவ‌மைச்சு அன்னை சோனியாகாந்திக்கு வ‌ழ‌ங்க‌லாம்னு ஐடியா!  (ஏன்னா மேடம் அவங்க கட்சி ஆட்சியிலும் நம்ம கிஃப்டைப் பயன்படுத்தணுமே!)

ஷீலா தீக்ஷித்:



க‌ட‌ந்த‌ மூன்றைந்து ப‌தின‌ஞ்சு வ‌ருஷமா பாவ‌ம் முத‌ல‌மைச்ச‌ர் ஆஃபீஸ்ல‌யே கால‌ம் க‌ட‌த்திட்டு இப்போ திடீர்னு ஆஃபீஸும் ப‌றிபோய் ச‌ட்ட‌ச‌பை சீட்டும் காலியாகி வீட்டுக்குப் போய் தூசித‌ட்டுற‌ சூழ்நிலையில யாராவ‌து இவ‌ங்க‌ வீட்டைக் கூட்டிப்பெருக்க‌ "துடைப்ப‌த்தை" தூக்கிட்டுவந்து சுத்த‌ம் செய்ய வந்தா இந்த‌ம்மா ம‌ன‌சு என்ன‌ பாடுப‌டும்.... அத‌னால‌ அம்மா ஷீலா தீக்ஷித்துடைய‌ ம‌ன‌ச‌ப் புரிஞ்சு ந‌ம்ம‌ கைக்காச‌ப் போட்டு க்விக்க‌ர் டாட் காம்ல‌ வாங்கித்த‌ர்ற‌ நினைவுப் ப‌ரிசு "ஒரு வேக்வம் க்ளீன‌ர்" (Vacuum cleaner) !! சுத்த‌ம் அவங்களுக்கு சுக‌ம் த‌ர‌ட்டும்!

வைகோ:


. இவரோட‌ அழுகை ஃபேம‌ஸாச்சேன்னு இவருக்கு ஒரு க்ள‌சரின் பாட்டிலை வாங்கிவெச்சுட்டுப் பாத்தா க்ளிச‌ரினைவிட‌ வேக‌மா இவ‌ருக்குக் க‌ண்ணீர் பொத்துட்டு வ‌ந்துடுறதுனால‌ இவ‌ருக்கு ந‌ம்ம‌ கிஃப்ட் தேவையில்லாம‌யே போயிடுமேன்னு யோசிச்சு.... இல‌ங்கைப் பிர‌ச்னைக்குத் தாவி.... ந‌ம்ம‌ அர‌சிய‌ல்வாதிங்க ரொம்ப சேஃபா இங்க‌ இருந்துகிட்டே குடுக்கும் ஊமைக்குத்துக்க‌ளுக்கு எல்லாம் சேர்த்துவெச்சு ந‌ம்ம‌ வைகோ சாருக்கு ந‌ம்ம‌ குடுக்குற‌ நினைவுப்ப‌ரிசு ராஜ‌ப‌க்சே ப‌ட‌ம் போட்ட‌ "ப‌ஞ்ச் பேக்" (Punch Bag)  ஏன்னா குத்து குத்துன்னு குத்தினாலும் யாருக்கும் வ‌லிக்காது பாருங்க‌!

அன்னா ஹசாரே:




லோக்பால்...லோக்பால்னு இவ‌ரு போட்ட‌ எல்லா பாலும் நோ-பாலாவே போயிட்டிருந்த‌ கால‌ம் போய்க் க‌டைசில‌ ம‌சோதாவே தாக்க‌லாகிடிச்சு..... தாத்தா உண்ணாவிர‌த‌ம் இருக்குற‌ ஜ‌ன்ட‌ர் ம‌ண்ட‌ர் ஏரியாவுக்கு ப்ளாக்ல‌ எல்லாம் டிக்கெட் எடுத்துட்டு போயிட்டு இருந்த‌ கூட்டமெல்லாம் க‌டைசி சீஸ‌ன் உண்ணாவிரத ஷோ டைம்ல‌ ஆம் ஆத்மி கட்சியில‌ பிஸியாகிப் போன‌துல‌ தாத்தா உண்ணாவிர‌த‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ ந‌ம்ம‌ "இர‌ண்டாம் உல‌க‌ம்" ப‌ட‌ம் ஓடின‌ தியேட்ட‌ர் மாதிரி ஆகிட்ட‌தா கேள்வி! ச‌ரி இனிமே என்ன‌ கார‌ண‌த்துக்காக‌ உண்ணாவிர‌த‌ம் இருக்க‌லாம்னு ஹ‌சாரே யோசிக்குற‌ வ‌ரைக்கும் ந‌ம்ம‌ அவ‌ருக்குக் கொடுக்க‌ப்போற‌ நினைவுப்ப‌ரிசு வேற‌ என்ன‌ "ஒரு ட‌ம்ள‌ர் ப‌ழ‌ச்சாறு"தான்!

வ‌டிவேலு:




க‌ட‌ந்த‌ ரெண்டு வ‌ருஷ‌மா அண்ண‌னை ஆதித்யா சேன‌ல் த‌விர‌ வேற‌ எங்கேயுமே பார்க்க‌ முடிய‌ல‌.... இந்த‌ வ‌ருஷ‌ம் இவ‌ரு ப‌ட‌ம் ரிலீஸ் ஆகுதுன்னு சொல்றாங்க‌... ப‌ட‌ம் பேருகூட‌ ஏதோ "ஜெக‌ஜ்ஜால‌ புஜ‌ஜ்ஜால‌ எச்ச‌ச்ச‌ க‌ச்ச‌ச்ச‌ தெனாலிராம‌ன்"னு சொல்லுறாங்க‌ எது எப்ப‌டியோ ந‌ம்ம‌ காமெடி வேலு அடுத்த‌டுத்து ப‌ட‌ம் ந‌டிச்சு கால்ஷீட் க‌ல்லாக‌ட்டி பிஸியா இருக்க‌ வாழ்த்தி ந‌ம்ம‌ அவ‌ருக்குக் கொடுக்க‌ப்போற‌ நினைவுப்ப‌ரிசு "ஒரு புத்த‌ம்புது 2014 டைரி!"

ர‌ஜினிகாந்த்:




ஹாலிவுட் வ‌ரைக்கும்கூட‌ தேடிப்பாத்தாச்சு ஒரு கார்ட்டூன் ப‌ட‌த்துக்குக் கால்ஷீட் கொடுத்து கால் நூற்றாண்டு கால‌ம் காத்திருந்த‌ ஒரே ஸ்டார் ந‌ம்ம‌ சூப்ப‌ர்ஸ்டார்தானாம்!
கால்க‌டுக்க‌க் காத்திருந்து ர‌சிக‌ர்க‌ளுக்குக் கிடைச்ச‌ ஒக்கே ஒக்க‌ சூப்ப‌ர் ஹிட் பாட்டான‌ "எங்கே போகுதோ வான‌ம்" பாட்டுகூட‌ போன‌வார‌ம் ராத்திரி எஃப்.எம்ல "நெஞ்சில் நின்ற‌ ராகத்"துல‌ போட்டுட்டாங்க‌ளாம்! ப‌ட‌த்த வுடுங்க‌ பாக்கி பாட்டாவ‌து வெளிவ‌ருமான்னு த‌லைவ‌ரே ந‌ம்ம‌ள‌ மாதிரிதான் காத்துட்டு இருக்குறாருன்னு நாம‌ கேள்விப்ப‌டுறோம் ஸோ இப்ப அவருக்கான 2013 நினைவுப்ப‌ரிசு சும்மா ப‌ள‌ப‌ள‌ப‌ள‌ன்னு ஓர் "எம்டி எம்பி-3 சிடி" (Empty MP3 CD)!!!!


கேப்ட‌ன் விஜ‌ய‌காந்த்:




அர‌சிய‌ல்ல‌ ஆர‌ம்ப‌மே அதிர‌டியா க‌ட்சித்த‌லைவ‌ரா சொந்த‌க்க‌ட்சி ஆர‌ம்பிச்சு வ‌ந்த‌வ‌ருக்கு இப்போ க‌ட்சியில‌ சொந்த‌க்கார‌ங்க‌ ம‌ட்டும்தான் இருக்காங்க‌ளாம்! இருந்தாலும் யாருமே இல்லாத‌ டீக்க‌டையில் ம‌ட்டும் நான் யாருக்கும் டீ ஆத்திட மாட்டேன்னு ஒரே மன‌ உறுதியோட‌ சொந்த‌க்காசுல‌ டெல்லிக்குப் போய் டீக்க‌டைய‌ப்போட்ட (அதுவும் இப்போ டீக்கடையில பன்னு,ரொட்டி கூட இல்லையாம்!) ந‌ம்ம‌ "கால் தாதா" கேப்ட‌னுக்கு ந‌ம்ம‌ளோட‌ நினைவுப்ப‌ரிசு ஒரு "காலி க‌ண்ணாடி ட‌ம்ள‌ர்" அதுல‌ அவ‌ரு டீ, காஃபி ஏன் போன்விட்டா கூட‌ குடிக்க‌லாம்! :-)))

ந‌ரேந்திர‌ மோடி: 




சென்னைக்கு ஒரு மம்மின்னா குஜராத்துக்கு இந்த தாடி வெச்ச டாடிதான் ஆக்ஷ‌ன் ஹீரோ! குஜராத்ல ஆக்ஷன் ஹீரோன்னாலும் ஆல் இண்டியா ரேஞ்சில் ஆன்டி ஹீரோவா களத்துல இறங்கி மன்மோகன் சிங்கில் இருந்து ராகுல்காந்தியோட கொள்ளுத் தாத்தா வரைக்கும் சகட்டுமேனிக்கு அதிரடியா பேசி மிரட்டல் அடி அடிச்சுட்டு இருந்த மனுஷனுக்கு சிவகாசில செஞ்ச ஒரு தௌஸன் வாலா சரவெடி தரலாம்னு நெனெச்சுட்டு இருக்கும்போதுபாத்து அலகாபாத் நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்படாததால் நிரபராதின்னு சொல்லி இவரை ஃப்ரீயாவிட, அண்ணன் அவரு ப்ளாக்ல எழுதின அழுவாச்சி காவியத்த பாத்து நானே அழுதுட்டேன்! வேதனை, வலி, தாங்கவொண்ணா துயரம் எல்லாம் அடைந்தேன்னு சொல்லி நெஞ்ச போட்டு நக்கியெடுத்துட்டாரு! என்னா..ரைமிங்கெல்லாம் சரியாத்தான் இருந்தாலும் பாவம் டைமிங்குலதான் கோட்டைவிட்டுட்டாரு...ஜஸ்ட்  ஒரு பத்து வருஷம் லேட்டா இந்த அறிக்கைய விட்டுருக்காருன்னு ஒட்டுமொத்த மீடியாவும் மோடியை ஒரே ஃபை ஃபை... கலாச்சிஃபை!! சரி.. நமக்கென்னன்னு மோடி ஐயாவின் செண்டிமெண்ட் மூடுக்கேத்தமாதிரி நம்ம அவருக்குத் தர்ற நினைவுப்பரிசு... யெஸ் அதேதான்... முத‌ல்ல‌ வைகோ அண்ணனுக்காக வாங்கின "க்ளசரின் பாட்டில்"தான்!! வாழ்க்கைல‌ (முத‌ன்)முத‌ல்ல‌ க‌ண்ணீர் வ‌டிக்கிற‌வ‌ரைப் போய் முத‌லைக் க‌ண்ணீர் வ‌டிக்கிறார்னு சொல்லாதீங்க‌ப்பா ம‌ன‌சு வ‌லிக்குது!

அர‌விந்த் கெஜ்ரிவால்:




சாதார‌ண‌ ம‌னித‌னுக்கு அர‌சிய‌ல் என்ப‌து புலிவால் என்றிருந்த‌ இந்திய‌ அரசிய‌லில் 2013 அரசியல் அரங்கில் இந்த "ஆம் ஆத்மிகள்" சேர்ந்து கட்டியெழுப்பியிருக்கும் "க்ரேட் வால்" இந்த‌ கெஜ்ரிவால்...! புக‌ழ்ச்சிக்கெல்லாம் இன்னும் கால‌ம் வ‌ர‌வில்லை, இவ‌ரும் என்ன‌த்த‌க் கிழிக்க‌ப்போறாருன்னு பார்ப்போம், என்றெல்லாம் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் எல்லாம் இருந்துவிட்டுப் போக‌ட்டுமே...! ஒரு மாற்று அர‌சிய‌லுக்கான‌ விதையைத் தூவிய‌ மாத்திர‌த்தில் அடியில் வேர்விட்டு வெளியே துளிரும் விட்டிருக்கும் இந்த‌ டெல்லி சி.எம்முக்கு 2013 நினைவுப்ப‌ரிசு அன்புடனும் எதிர்பார்ப்புடனும்கூடிய‌ ஒரு "வெல்க‌ம் பூங்கொத்து"தான்.....

வெல்....

நானும் என் ப‌ங்குக்கு எல்லாருக்கும் ஏதோவொன்னு கொடுத்துட்டேன்....
அப்புற‌ம் இதையெல்லாம்கூட‌ப் பொறுமையா ப‌டிச்ச உங்க‌ளுக்கெல்லாம் நான் சொல்லிக்க‌ விரும்புற‌து என்ன‌ன்னா...... வேற‌ன்ன‌.... கொஞ்ச‌ம் லேட்டான "புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்"தான்!! :-))

விஷ் யூ ஆல் அ வெரி ஹேப்பி நிய‌ர்...


அன்புட‌ன்,
பிர‌பு எம்