Inside Out (2015)
Genre: Animation
Direction: Pete Docter
Produced by: Disney and Pixar
மகிழ்ச்சியில் திளைக்கும்போதும்.... துயரத்தில் துவழும்போதும்..... பயத்தில் உறையும்போதும்.... கோபத்தில் கணன்று எரியும்போதும்.... நம் மனதிற்கு உள்ளே கேட்கும் அந்த மந்திரக்குரல் யாருடையது?!
இதோ இவர்களுடையது என்று அனிமேஷனில் காட்டும் அற்புத க்ரியேஷன் தான் டிஸ்னி மற்றும் பிக்ஸாரின் இணைத்தயாரிப்பில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த "Inside Out" திரைப்படம்.
ரேய்லீ எனும் அழகான குழந்தை அமெரிக்காவின் ஒரு மாகாணத்தில் பிறக்கின்றது... குழந்தை சிரிக்கின்றது..... அப்போது அந்த குழந்தையின் அகத்தில் உள்ளே அழகான ஒரு சிறுமி "ஜாய்" எனும் பெயரில் உருப்பெறுகிறாள், அவள்முன் இருக்கும் ஒரு சிறிய கண்ட்ரோல் பேனலில் ஒரு குட்டி பட்டனை ஜாய் அமிழ்த்த அமிழ்த்த வெளியே மகிழ்ச்சியில் சிரிக்கிறாள் ரேய்லீ! திடீரென்று ரேய்லீ அழுகும்போது சோகமே உருவாய், நீல நிறத்தில் இன்னொரு உருவம் மெதுவாக நடந்துவந்து "நான் தான் "சோகம்"(sadness)" என்று ஜாயிடம் அகத்தில் அறிமுகம் செய்துகொள்கின்றது! ரேய்லீ மெல்ல மெல்ல வளர்கிறாள்... உற்சாகமாக ஓட்டம் பிடிக்கும்போது நடுவே இருந்த ஒரு மின்கம்பியைப் பார்த்ததும் "பயம்"(fear) எனப்படுபவன் ஊதா கலரில் உள்ளே முளைத்து பெரும் அலறல் அலறிக் கடைசி நிமிடத்தில் கஷ்டப்பட்டு ப்ரேக்கைப் பிடித்து இழுத்து, அந்த மின்கம்பியை மிதிப்பதில் இருந்து ரேய்லீயைக் காக்கிறான்! பிடிக்காத உணவுப் பொருளை வெறுப்பதற்கு பச்சை நிறத்தில் "அருவருப்பு"(disgust) தோன்றுகிறாள், அவளது பட்டன்கள் இயக்கப்படும்போதெல்லாம் ரேய்லீ வெறுப்பையும் அருவருப்பையும் கலந்து வெளிப்படுத்தத் துவங்குகிறாள்... வெறுப்பை வெளிப்படுத்தியும் அந்த உணவு தன் பெற்றோரால் திணிக்கப்படும்போது கருஞ்சிவப்பில் கடுகடுவென முணுக் கென்று தீ பற்றிக்கொள்ளும் "Mr.கோபம்" ரேய்லியின் மனதுக்குள் தோன்றித் தன் பங்குக்கு ரேய்லீயை அவ்வப்போது கோபப்படவும் வைக்கிறார்....!
இவ்வாறாக உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்து அவற்றின் கண்ட்ரோல் பேனலின் பட்டன்களுக்கு ஆடும் பொம்மைகள்தான் நாம் என்று அழகாகக் காட்சிகள் மூலம் கதைக்களம் அமைத்தது மட்டுமின்றி, உணர்ச்சிகள் குடியிருக்கும் மனித மனப்பரப்பின் பிரம்மாண்ட அமைப்பினை அனிமேஷன் மூலம் ஓர் அனிமேஷன் உலகமாகக் கட்டமைத்துக் காட்சிப்படுத்திய விதத்தில்தான் பார்வையாளனை வெகுவாய் அசத்தியிருக்கிறார் பிரபல அனிமேஷன் பட இயக்குனர் பீட் டாக்டெர்!
மனதுக்குள் மகிழ்ச்சி, கவலை, பயம், கோபம், வெறுப்பு என்று உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில், வெளிஉலகத்தில் சஞ்சரிக்கும் ரேய்லியின் அன்றாட வாழ்வில் அவளது உணர்வுக்கேற்ப சம்பவங்கள் நிகழ்கின்றன... அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஞாபகமாக, ஒவ்வோர் உணர்ச்சியின் நிறத்தில் ஒளிரும் கண்ணாடிப் பந்துகளாக அன்றைய நாளின் அடுக்குகளில் இடம்பிடித்துக்கொண்டேயிருக்கும்! அந்த ஒவ்வொரு நினைவின் வாயிலாகவும் தூரத்தில் ரேய்லியின் மனவெளியில் குடும்பம், நட்பு, அவளுக்கு மிகவும் பிடித்த ஹாக்கி விளையாட்டு போன்ற தனித்தீவுகள் தோன்றி அவை சார்ந்த சம்பவங்கள் மற்றும் நினைவுகள் மலரும்போதெல்லாம் அந்த தீவுகள் ஜெகஜோதியாய் மிளிர்வதை உணர்ச்சிப் பாத்திரங்கள் பார்த்து மகிழ்வர்! ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்றைய நாளின் கலர் கலர் ஞாபகப் பந்துகள் மூளை நரம்புப் பாதைகளில் ஓங்கியெறியப்பட்டு ரேய்லியின் Longterm memoryயில் பிரம்மாண்ட அடுக்குகளில் அடுக்கிவைக்கப்படும்! இதையெல்லாம் இரண்டு நிமிட அனிமேஷனில் காட்சிகளாய் விரியும்போது சுவாரஸ்யம் நம்மைத் தொற்றிக்கொள்ளாமல் இருக்காது!
வெளிஉலகத்தில் ரேய்லியைச் சுற்றிக் கதையும் அவ்வப்போது நகர்ந்துகொண்டுதான் இருக்கும்... அவ்வகையில் ரேய்லியின் தந்தைக்கு பணி நிமித்தமாக மிகவும் அமைதியான அவர்களின் வாழிடத்தைவிட்டு படுபிஸியான சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு ரேய்லியின் குடும்பம் இடம்பெயரும்!
மனதுக்கு இனிக்காத அந்த இடமாற்றத்தோடு, ரெய்லீயின் மன நிலையில் பதின்மவயது குழப்பங்களும் சேர்ந்துகொள்ள ஒட்டுமொத்தமாக ரெய்லீயின் personalityயே மாற்றம் காணத்துவங்கும். அதனால் ரெய்லீயின் பெற்றோரைவிட அதிகம் கலவரம் அடைவது என்னவோ ரெய்லீயின் மனதுக்குள் குடியிருக்கும் கதை நாயகியான ஜாய்தான்! காரணம் மனதுக்குள் அத்தனை உணர்ச்சிகள் இருந்தாலும் மகிழ்ச்சியின் உருவகமான "ஜாய்"தான் தானாகவே தலைமைப் பொறுப்பை எப்போதும் நிர்வகிப்பாள்! அவளுக்கு ரெய்லீயின் நினைவுகள் எல்லாமே மகிழ்ச்சியின் நிறத்தில் ஜொலிக்கவேண்டும் என்று பேராசை! எப்படியாவது ரெய்லீயை மகிழ்ச்சிப்படுத்த ஜாய் எப்போதும் முயற்சி செய்துகொண்டே இருப்பாள், மற்ற உணர்ச்சிகளை இதற்காகத் தன் கட்டுப்பாட்டில் வைக்கத் தன்னுடைய இனிமையான சுபாவத்தையும் மீறிய பரபரப்புடன் திகழ்வாள் மகிழ்ச்சியின் உருவகமான "ஜாய்"! அதனால் ரேய்லீயின் core memoryயை முழுக்கத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாள் ஜாய்... அது முழுக்கவும் மகிழ்ச்சியான நினைவுகளால் ஆனதாக இருக்கும்! ஒரு கட்டத்தில் கவலை (sadness) தன் கட்டுப்பாட்டை இழந்து அந்த core memory பந்துகளில் ஒன்றில் கையைவைக்க அது கவலையின் நிறமான நீல நிறத்தில் மாறுகிறது அதனைத் தடுக்க ஜாய் பாய ஏற்படும் களேபரத்தில் ஒருகட்டத்தில் அன்றைய நினைவுப்பந்துகள் longterm memoryயை நோக்கித் தூக்கியெறியப்படும்போது தவறுதலாக ஜாயும், sadnessஉம் சேர்ந்து மனவெளியின் தூரதேசங்களுக்குப் போய் விழுந்துவிடுவார்கள்! அடிப்படை உணர்ச்சிகளான மகிழ்ச்சியும் துக்கமும் இல்லாமல் ரெய்லீயின் பதின்ம வயது வாழ்க்கைத் தடுமாற..... ஆழ்மனதின் அடுக்குகளில் தொலைந்துபோகும் மகிழ்ச்சி மற்றும் துயர உணர்ச்சிகள் எப்படியெல்லாம் முயன்று மீண்டு வருகிறார்கள் என்பதுதான் அனிமேஷன் படங்களுக்குரிய ஹியூமர் மற்றும் அட்வென்சர் கலந்து க்ரியேட்டிவாக சொல்லப்பட்டிருக்கும் inside out-ன் மீதிக்கதை!
ஜாய் மற்றும் sadnessஇன் பயணம் ரேய்லியின் மறந்துபோன குழந்தைகால நினைவுகள், அவள் உறங்கும்போது உற்சாகமாக செயல்படும் அவளின் கனவுகளின் படப்படிப்புத் தளம், மூளைக்குள் உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையேயான தளத்தில் ஓடும் எக்ஸ்ப்ரஸ் ட்ரெயின் என்று மனதின் வெவ்வேறு விசித்திர அடுக்குகளுக்குள் ஓர் அட்வெஞ்சராகப் படம் நகர்ந்தாலும் மனித மனதையே பாகுபலியின் மகிழ்மதி போன்று ஓர் உலகமாக்கிக் காட்சிப்படுத்தும் பிரம்மாண்டம், திரைக்கதை சற்று சலிப்படையவைத்தாலும், தொடர்ந்து நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும்!
வழக்கமான ஓர் அனிமேஷன் படமாக inside out ஐச் சுருக்கிவிட முடியாது.... இது குழந்தைகளுக்கான படம் என்று சொல்வதைவிட, இப்படத்தை ஆறுமுதல் பன்னிரண்டு வயதுடைய குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து பார்ப்பது மிகவும் அழகான அனுபவத்தையும் அதையும்தாண்டிய ஒரு புரிதலையும் ஏற்படுத்தக்கூடியது... அந்த வகையில்தான் இது ஒரு முக்கியமான படைப்பாக உருப்பெறுகிறது!
உணர்ச்சிகளின் பிடியில்தான் பெரும்பாலும் நாம் நமது உறவுகளையும் நட்புகளையும் காயப்படுத்திவிடுகிறோமே தவிர அது நம் இயற்கையான இயல்பு இல்லை என்பதை விஷுவலாக மனதில் பதியவைக்கும் வாய்ப்புப் பெற்ற ஓர் அதிசிய அனிமேஷன் இது... அதுமட்டுமன்றி சமகால உலகம் எப்போதுமே "மகிழ்ச்சி" "நிம்மதி" "பாஸிட்டிவிட்டி" என்று நேர்மறை உணர்வுகளின்மேல் ஒருவிதமான obsessionல் வெற்றியை நோக்கி மிகவும் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்மறை உணர்வுகளாக அறியப்படும் "கவலை" "அச்சம்" "கோபம்" போன்ற உணர்ச்சிகளின் அத்தியாவசியத்தையும் சரியான வகையில் பதிவுசெய்தவிதத்தில் மனிதனின் emotional quotient-ன் சமநிலையை மிகமிக அழகாக இந்தப் படம் புரியச்செய்கிறது!
அது இன்பமோ துன்பமோ பயமோ கோபமோ வெறுப்போ காமமோ.... உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா அல்லது நாம் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறோமா என்பதை வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் உறுதிசெய்துகொள்ளப் படத்தின் அகப் பாத்திரங்கள் கையாளும் அந்த "கண்ட்ரோல் பேனலை" ஒருமுறை மனக்கண்முன் நிறுத்திப் பார்த்தாலே போதுமானது!
ஒரு நல்ல ஃபேமிலி வாட்ச்சிங் அனுபவத்தைக் கொடுக்கும் படம் "Inside Out" இதுவரைக் காணும் வாய்ப்புக் கிட்டாதவர்கள், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்த்து மகிழுங்கள்... நடு நடுவே சற்று போரடித்தாலும் குழந்தைகளுடன் படத்தில் பங்கெடுத்துப் பார்ப்பது நிச்சியம் சிறந்த அனுபவமாகவே இருக்கும்!
Have a nice family time with "Inside Out"!
அன்புடன்,
பிரபு எம்







