Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, September 19, 2025

ரோபோ சங்கர் - கனவுகளைக் கைப்பற்றிக் காற்றில் கரைந்த கலைஞன்!

 இன்னிக்குக் காலைல ஆறு மணி இருக்கும்....

கோழியும் கொக்கரக்கோ என்றுதான் கூவியது....

ஆனால் கேள்விப்பட்ட செய்தியோ அதிர்ச்சி நிறைந்ததாய் இருந்தது!

ரோபோ சங்கர் அவர்களின் இறப்பு செய்தியுடன் தான் விடிந்தது இந்தக் காலை!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!


"கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியின் முதன்முதல் சீசனில் மிகவும் கவர்ந்தவர்களுள் முக்கியமானவர் ரோபோ சங்கர்!

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் பலவிதமான கலைஞர்கள் வந்து நகைச்சுவையில் கலக்கினாலும், சிரிக்க வைப்பதில் consistency மற்றும் vareity யைத் தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் விடாமல் காட்டுவது சாதாரண விஷயம் கிடையாது. அந்த சவாலை அனாயசமாகக் கையாண்ட நான்கு பேர் அதன் இறுதிச்சுற்றுக்குத் தேர்வானார்கள் அவர்கள்: கோவை குணா, மதுரை முத்து, வடிவேலு டேவிட் மற்றும் ரோபோ சங்கர்! இவர்கள் நால்வருமே ஒவ்வோர் ஏரியாவில் ரொம்பவே ஸ்பெஷலானவர்கள்!

இறுதிச் சுற்றில் போட்டியிடப் போவது இவர்கள்தான் என்று தெரிந்ததுமே அந்த வார ஆனந்த விகடனில் இந்த நால்வருடைய பேட்டியுடன் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ரோபோ சங்கரின் பேட்டி இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மதுரையில் ஒரு காமெடி மற்றும் நடனக் குழுவில் இடம்பெற்றிருப்பதாகச் சொன்னவர் அந்தக் குழுவில் அவருடைய தனித்துவமான திறமை என்பது உடல் முழுதும் சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு உடலின் ஒவ்வொரு தசையையும் தனித்தனியாக டெக்னோ இசைக்கு ஏற்றவாறு அவர் அசைத்துக்காட்டி நடனமாடும் "ரோபோ டான்ஸ்"தான் என்றும் அதனை அவர் KPYயின் இறுதிச்சுற்றுக்கான  அஸ்திரமாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இறுதிப்போட்டியில் முதலில் ஒரு வார்ம்-அப் ரவுண்ட் வைத்திருந்தார்கள்... வெற்றிக்குத் தேவையான மதிப்பெண்கள் கணக்கில் சேராத அந்த ஆயத்தச் சுற்றில் மற்ற மூன்று போட்டியாளர்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ஆனால் ரோபோ சங்கர், அதிலும் அலப்பறையாக மிமிக்ரி செய்தார்... முக்கியமாக 80களின் கமல்ஹாசன் பேசுவதைப் போல அவர் பேசியது அதில் அந்தக் காலத்துக் கமலுக்கே உரித்தான வினோதமான ஓர் ஆங்கில உச்சரிப்பு இருக்குமே, அதை அவ்வளவு நுணுக்கமாக அதே மாடுலேஷனில் ஆனால் கிண்டலாக அவர் பேச விழுந்து விழுந்து சிரித்தது இன்றும் நினைவுகளில் பசுமையாக இருக்கின்றது! அடுத்தச் சுற்றிலும் சங்கர் கலக்கத்தான் செய்தார்.... 80களின் சினிமா நடனங்களை அப்படியே ஆடிக்காட்டித் தன் முழுத் திறமையையும் காட்டுத்தனமானதொரு எனர்ஜியில் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்.... மீண்டும் 80களின் கமல்ஹாசனின் டிஸ்கோ நடன அசைவுகளை தத்ரூபமாக அதே நேரத்தில் காமெடியாகவும் ஆடிக்காட்டியதை யூடியூபிலோ ஹாட்ஸ்டாரிலோ காண வாய்ப்பிருந்தால் நிச்சியமாக இப்போதுகூட பார்த்து வியக்கலாம்.... கமல் தவிர நடனமாட அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களும் அதற்கேற்ற அவரது அசைவுகளிலும் மனிதர் தன்னுடைய முழு ஆற்றலையும் கொட்டியிருந்தார்.. முத்தாய்ப்பாகக் கடைசியில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது சில்க் ஸ்மிதாவை! ஆஜானுபாகுவான அந்த உடலில் சில்க் ஸ்மிதாவின் நடன அசைவுகளையும் காமப்பார்வையையும் செட்யூஸிங் உடல்மொழியையும் நகைச்சுவையாக அவர் அரங்கேற்ற அரங்கமே அதிர்ந்தது சிரிப்பில்! ஆனால் அடுத்த சுற்றில்தான் பாவம் அவருடைய தனி அடையாளமான ரோபோ டான்ஸை உடல் முழுவதும் சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு ஆடினார் ஆனால் நகைச்சுவைக்கான மேடையில் அவரது அந்த நடனும் முற்றிலும் பொருத்தமில்லாததாகப் போக எதை அவர் பிரதான அஸ்திரமாக அரங்கேற்றினாரோ அந்த நடனமே அவரைப் போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டது! ஃபைனலில் அசாதாரணமாகக் கலக்கிய கோவை குணா வெற்றி பெற்றார்... நகைச்சுவைப் பேச்சாற்றலில் தன் முழுவீச்சைக் காட்டி அசரடித்த மதுரை முத்து இரண்டாமிடம் பிடித்தார்!

கோவை குணா 2023லேயே மரணமடைந்துவிட்டார்! மதுரை முத்துவும் ரோபோ சங்கரும் அதன்பிறகு அவரவர் திறமைக்கேற்ப அடுத்தடுத்து உச்சங்களைத் தொட்டுப் பேரறிந்த திறமையாளர்களாகக் கொண்டாடப்பட்டார்கள் என்பது கண்கூடு. நேற்றிரவோடு ரோபோ சங்கர் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டுவிட்டார்.

அவரது மரணச்செய்தி வந்தபின் எழுதப்படும் இந்தக் கட்டுரையில் அவரது புகழ்ப் பயணத்தின் தொடக்கப்புள்ளி சம்பவத்தை விவரித்து எழுதியதன் காரணம் புகழேணியில் அவர் அடுத்தடுத்து வைத்த அடிகள் அனைத்துமே ஆதித்யா சேனல் உள்ளிட்ட தமிழின் அனைத்து நகைச்சுவைத் தளங்களிலும்  அழுத்தமாக ஆவணம் செய்யப்பட்டிருக்கின்றது! மேலும் மதுரையில் பிறந்தவன் எனும் அடிப்படையில், ரோபோ சங்கர் அவர்களின் இளமைக்காலம் எப்படி இருந்திருக்கும், மேலும் தன்னுடைய துறையாகக் கலையைத் தேர்வு செய்த ஓர் இளைஞனின் முன்னிருக்கும் வாய்ப்புகளும் கனவுகளும் மற்றும் இவை இரண்டுக்கும் இடையேயான இடைவெளியும் எப்படியிருந்திருக்கும் என்று என்னால் தெளிவாக உணரமுடியும். எண்ணற்ற திறமைகளின் கனவுகளை ஈடேற்ற வாய்ப்புக் கதவுகள் திறக்காமலேயே போன ஏராளமான வரலாறுகள் மதுரையின் ஒவ்வொரு தெருவிலும் உண்டு! அப்படியிருக்க அன்றைய "கலக்கப் போவது யாரு?" ஒரு பறக்கும் ஜன்னலை போன்றதுதான்! அந்தச் சுழலும் சாளரம் தன் பக்கம் வரும் வேளையில் அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து அதற்குள் குதித்து அதன் அடுத்தடுத்த அடுக்குகளுக்குள் நுழைய வேண்டும். தன்னுடைய திறமையையும் உழைப்பையும் சரியாகப் பிரயோகித்துத் தன்னை நிரூபித்து, திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று அதிலும் தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துவிட்டு இப்போது பூவுலகில் தனக்குரிய இடத்தை விட்டகன்றிருக்கிறார் ரோபோ சங்கர்!

"கலக்கப் போவது யாரு?" இறுதிச் சுற்றில் அவர் எய்து அவரையே தாக்கி வெளியேற்றிய அவருடைய அஸ்திரமான அதே "ரோபோ டான்ஸ்", அதற்காக எண்ணற்ற முறை அவர் தன் தோலில் பூசிக்கொண்ட சில்வர் பெயிண்ட், அதனால் ஏற்பட்ட உடல் பாதிப்புகள்தான் இந்த நாற்பத்து ஆறாம் அகவையில் இந்த உலகை விட்டு அவர் வெளியேறுவதற்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கிறது என்பது வேதனை! அதுபோக அவரே தன் வாழ்க்கை அனுபவமாக உடல் நலத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தைச் சமீபத்தில் ஒரு காணொளியில் பதிந்திருக்கிறார். அப்படிப் பேசுவதற்கு ஓர் ஆரோக்கியமான சமூகம் நன்றிகளைத்தான் சொல்ல வேண்டும் ஆனால் பிளாஸ்டிக் குப்பைகளுக்கும் அதுபோலவே மடிந்தாலும் மக்காத போலித்தனங்களுக்குள்ளும் சிக்குண்டு மூச்சுத்திணரும் நிகழ்கால நம் சமூகமோ அவர் மரணத்துக்குக் காரணம் என்று ஆளுக்கொரு பட்டியல் போட்டு சுய விளம்பரம் மற்றும் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது! ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையின் இடறல்களைத் தேடுவதை விடுத்து ஒரு கலைஞனாகத் தொடங்கிச் சில கல்வெட்டுகளில் தன் பெயரைத்தானே பொறித்துக்கொண்டு சீக்கிரமே போய்விட்ட ரோபோ சங்கரின் திறமைகளுக்கு என் இறுதி வணக்கங்கள்!

அன்னிக்குக் காலைல ஆறுமணியிருக்கும்... என்ற அவரின் புகழ்பெற்ற காமெடியைப் போலவே மரணம் எனும் இந்த இடர்ப்பாட்டைத் தொடர்ந்து மீண்டும் முதலிலிருந்து தொடங்க வாய்ப்பிருந்தால் திரும்பி வாருங்கள் மிஸ்டர். சங்கர்! எங்களை சிரிக்கவைத்த உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

வருத்தத்துடன்,
பிரபு எம்.







Sunday, August 27, 2023

புரட்சித் தவழர்!!!!!

நல்ல எண்ணத்துல தான் சொல்லுறேன்... ஒரு பட்டம் என்றால் அது தனித்துவமா இருக்கணும்அதாவது வேற யாருக்கும் அந்தப் பட்டம் ஏற்கனவே அடையாளமா இருக்கக்கூடாது! அதே மாதிரி, அந்தப் பட்டத்தின் பெயரைக் கேட்டவுடனே உங்க முகம் கடைக்கோடித் தமிழனுக்கும் சட்-னு ஞாபகம் வர்ற மாதிரி இருக்கணும்


"புரட்சித் தமிழன்" என்ற பட்டம் சத்யராஜோடது! ஸோ.... அதைக் கேட்டவுடனே கட்டப்பா ஞாபகம்தான் வருதே தவிர வேற எந்த எட்டப்பா ஞாபகமும் வர மாட்டேங்குது! (எதுகை மோனைக்கு மட்டுமே எட்டப்பனின் பெயர் இங்கு பயன் படுத்தப்பட்டுள்ளது என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்!) 


வெல்... ரேடியோ மிர்ச்சி மாதிரி நம்ம கட்சின்னாலே புர்ச்சிதான் ஸோ, "புரட்சி"யை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.... புரட்சியை first word fix பண்ணிட்டு இப்போ second word ஐத் தேடுவோம்.... புரட்சியோட சேர்த்துத் தலைவன்-னு சேர்த்தவுடனேயே மைண்டுல  ஒரு வொயிட்டான முகம் ஃபார்ம் ஆகி ரெண்டு கையையும் வீசி காத்துல காஃபி ஆத்துதா? யெஸ்ஸ் that is the புரட்சித் தலைவன்! தலைவி-னு add பண்ணா அடுத்த செகண்டே டெரராகி லைட்டா முதுகு பெண்டாகுதா?! அப்படிப் பிடிக்கணும் செகண்ட் word-! " தமிழர்" Word நல்லா இருந்தாலும் அதைக் கேட்ட செகண்ட்ல சேக்கிழார் மூஞ்சிதான் ஞாபகம் வருமே தவிர வேற எந்த ஜோக்... சரி வேண்டாம் விட்ருவோம்

 மம்ம்....புடுச்சிட்டேன் தலைவா புடுச்சிட்டேன்...  இந்த செகண்ட் word-ஐக் கேட்ட செகண்ட்ல உங்களத் தவிர வேற எவன் முகமும் ஞாபகம் வராது.... வர வாய்ப்பும் கிடையாது, in fact, இதுக்கு முன்னாடி இப்படி ஒரு வார்த்தையே தமிழ்ல யாருக்கும் use பண்ணதே இல்ல.... and that பட்டம் is "புரட்சித் தவழர்”!!!!!


தரையில் தவழ்ந்த தங்கத் தலைவா...

சிங்கிள் வோட்டுக் கட்சியோடு பக்காவா சிங்கான எங்கள் சிங்கத் தலைவா....

இன்று முதல் நீ "புரட்சி தவழர்" என்று அன்போடு அழைக்கப்படுவாய்!!!



May be an image of 2 people



அன்புடன்,

பிரபு எம் 😜