இந்தியப் பெருஞ்சுவரை இனி இந்தியச் சீருடையில் காணலாகாது!
கண்கொட்ட மறந்து கண்டு மகிழ்ந்த அந்த கவர்-டிரைவ்களை இனி யூ-ட்யூபில்தான் காணமுடியும்!
இனி இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டி முடிவுகள் பெரும்பாலும் வெற்றி அல்லது தோல்வியாக மட்டுமே மிஞ்சும் ஏனெனில் பவுலர்களின் பொறுமையை சோதித்து ஆட்டத்தை "டிரா" செய்யும் வாய்ப்பெல்லாம் அணியில் "டிரா"விட் இல்லாமல் கைகூடுவது சந்தேகமே!
ராகுல் டிராவிட்..... டெண்டுல்கரைவிட நான்குமாதங்கள் வயதால் மூத்திருந்தாலும் இந்திய அணியில் லிட்டில்மாஸ்டருக்கு நான்கைந்து வருடங்களுக்கு ஜுனியர் இவர்!...... டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் கஷ்டப்பட்டுக் கொஞ்சம் முன்னதாக இடம்பிடித்திருந்த இந்திய அணியில் கங்குலிக்கும் டிராவிட்டுக்கும் இடம் கிடைக்க அநியாய லேட்டானதற்குக் காரணம் சந்தேகமில்லாமல் அப்போதைய அணியில் தங்களின் இடத்தை விடாது பிடித்துவைத்திருந்த சில அசமந்த சீனியர்களின் அடமே ஆகும்!
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு, டிராவிட்டின் நீண்ட காத்திருப்புக்குக் கதவு திறந்ததற்குப் பொறுமையிழந்த கோல்கட்டா ரசிகர்களின் கல்வீச்சும் ஒரு முக்கிய காரணம்!!! 1996 உலகக்கோப்பை அரையிறுதியைத்தான் கூறுகிறேன்.... கொல்கத்தா ரசிகர்களின் கொந்தளிப்பில் சீனியர் வீரர்கள் கட்டாய ஓய்வை நோக்கித் தள்ளப்பட அப்போது பிசிசிஐ அதிரடியாய் அணியில் பாய்ச்சிய பல புதுரத்தங்களில் இன்றுவரையிலும் கொதிப்புடன் கோலொச்சி அடங்கியிருக்கும் ஓர் இளரத்தம் ராகுல் டிராவிட்!
இறுதிவரை இன்-ஃபார்ம் பேட்ஸ்மேனாக இருந்தும்கூட "ஸ்டாண்டிங் ஓவேஷ"னுடன் தனது கேரியரை முடிக்கக் காத்திராமல் ராகுல் இப்படி சட்டென ஒரு ப்ரெஸ்மீட்டைக் கூட்டி ஓய்வை அறிவித்திருப்பது சர்வதேச கிரிக்கெட் உலகுக்கே ஷாக்! இருப்பினும் இந்த கம்பீரம் கிரிக்கெட் உலகில் நிச்சியம் நீண்ட நாள் நினைவுகூறப்படும்!
ரன்குவிப்பில் சிறிது மெதுவானவராகப் பரவலாகக் கருதப்படுபவர் ராகுல்...... அதற்குக் காரணம் இன்றைய பவர்ப்ளே யுகத்தில் வேகமாக அழிந்துவரும் கலையான (!) "டெக்னிக்கல் பேட்டிங்"கில் வல்லவர் இவர்...! இருந்தாலும் டிராவிட் களத்திலிருக்கும்போது (ஒருநாள் போட்டிகளில்) ரன்ரேட் ஸ்லோவாக இருக்கும் என்று மொத்தமாக சொல்வதைவிட ஸ்டெடியாக இருக்கும் என்று சொல்வதே சரியாகப் பொருந்தும்..... பெரும்பாலான ஆட்டங்களில் தன்னுடைய முனையில் விக்கெட் சரிவை ஸ்திரமாகத் தடுத்துவைத்துக்கொள்ளும் டிராவிட் ஃபீல்டிங் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஆரம்ப ஓவர்கள் முடிந்த நிலையில் ஒன்று மற்றும் இரண்டு ரன்களாக சிறுகச்சிறுக ஓடி ஓடியே ரன்கள் குவித்த பக்குவத்தை மெய்மறந்து ரசித்திருக்கிறேன்!
அதேசமயத்தில் நேரத்துக்கு ஏற்றவாறு தன் இயல்பையும் மீறி அதிரடி ஆட்டத்தில் கலக்கவும் டிராவிட் தவறியதில்லை என்பதும் உண்மையே...... 2003ல் நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 22 பந்துகளில் அடித்துவிளாசிய அந்த அதிவேக அரைசதம் அதற்கு ஓர் உதாரணம்!
2009ல் இருந்தே ஒருநாள் போட்டிகளிலிருந்து புறக்கணிக்கப் பட்டாலும் நெருக்கடியான சமயங்களில் இந்திய தேர்வுக்குழு டிராவிட்டைத் திரும்ப அழைக்கவும் தயங்கவில்லை... உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெறாதது டிராவிட்டுக்கு நிச்சியம் ஏமாற்றமாக இருந்திருக்கும்... இருந்தாலும் உலகக்கோப்பை வென்ற கையோடு இங்கிலாந்து மண்ணில் உதைவாங்கியபோது மீண்டும் அழைக்கப்பட்ட ஆபத்பாந்தவான் அதே டிராவிட்தான்! அத்தொடரில்...... அகிலஉலக கிரிக்கெட்டுக்கே ஆச்சர்யமாக ட்வெண்டி 20 போட்டியில் டிராவிட் இடம்பெற, தன் வாழ்வின் முதலும் கடைசியுமான ட்வென்டி 20 போட்டியில் டிராவிட் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்ததெல்லாம் அல்டிமேட் ஃபேன்டஸி!!
டெஸ்ட் மேட்சுகளைப் பொறுத்தவரை.... அது முழுக்க முழுக்க டிராவிட் ஏரியாதான்!
உலகின் தலைசிறந்த ஆல்டைம் டெஸ்ட் பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தி ஒரு டீமை இனி எந்த நூற்றாண்டில் உருவாக்கினாலும் அதில் ஒன்-டவுன் இடம் ராகுல் டிராவிட்டுக்குத்தான் எப்போதுமே கிடைத்தாக வேண்டும்! டிராவிட்டின் டெஸ்ட் மேட்ச் சாகசங்களையெல்லாம் பட்டியல் போட்டுப் பாராட்ட வேண்டியதேயில்லை..... அது காலங்காலமாய் மறக்கவும் மறுக்கவும் முடியாத கிரிக்கெட் கல்வெட்டுகள்!
வெல்.... இவற்றையெல்லாம் தாண்டியும் நான் டிராவிட்டை விடாது ரசித்த சில நுட்பமான விஷயங்களும் உள்ளன.... அவை....
* பார்ட்னர்ஷிப்பில் பெஸ்ட் எப்போதுமே டிராவிட்தான்! ஆரம்பநிலையிலிருந்தே சிங்கிள்களாக அடித்து பேட்டிங் ஸ்ட்ரைக்கிங்கை ரொட்டேஷனிலேயே வைத்திருப்பார்..... (கங்குலி-டிராவிட் இணையில் ஃபீல்டிங் டீமை வலுவாய் வெறுப்பேற்றும் விஷயம் இது.. காரணம் இவர்களின் ரைட்&லெஃப்ட் காம்பினேஷன்!) சச்சின்-டிராவிட் , கங்குலி-டிராவிட், லக்ஷ்மண்-டிராவிட் என்று உலகப்பிரசித்த பெற்ற இந்த இந்திய பார்ட்னர்ஷிப்புகள் அனைத்துமே 300 ரன்களை எல்லாம் அஸால்ட்டாகப் பலமுறைக் கூட்டாக சேர்த்திருக்கும் பார்ட்னர்ஷிப்புகள்!!
* ஃபிட்னஸிலும் டிராவிட் ஒரு முக்கியமான ரோல்மாடல்!
நாற்பதை அல்மோஸ்ட் தொட்டுவிட்ட போதும்கூட ராகுலின் உடல்வேகமும் சரி அளவுகளும் சரி எப்போதும் கச்சிதம்தான்!.... அதைவிட முக்கியமாக காயம் காரணமாக டிராவிட் போட்டிகளை மிஸ் செய்வது மிக மிக அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கின்றன இந்த 16 வருட நீண்ட நெடும் பயணத்தில்!
* தான் உபயோகப்படுத்திய சாதனங்களில் (Bat, Glove, Pad etc,...) எந்தவித சர்ச்சையும் வைத்துக்கொள்ளாமல் இருந்தது டிராவிட்டின் ஒப்பற்ற ஃபிட்னஸ்ஸுக்கு முக்கியக் காரணம்..... எடை அதிகமான/குறைவான பேட்டையயோ, அல்லது பழமையான அகன்ற Pad-களையோ பழக்கத்தால் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயங்களெல்லாம் அவரிடம் இருந்ததில்லை...... தொடர்ந்து நீண்ட நேரம் களத்தில் இருந்துத், தன் இயல்பான, ஓடி உழைத்து ரன் சேகரிக்கும் ஸ்டைலை நன்கு உணர்ந்துகொண்டு அதற்கேற்றவாறு இலகுவான சாதனங்களை நவீனமாக டிராவிட் தேர்ந்தெடுக்கும் பாங்கினைப் பலமுறைக் கவனித்து ரசித்திருக்கிறேன்!
* ஃபீல்டிங்கில் ஸ்லிப் பொஸிஷனில் டிராவிட் ஓர் இண்டர்நேஷனல் எக்ஸ்பெர்ட்!
ஸ்லிப் பொஸிஷனில் டிராவிட்டைக் கவனித்தால் கால்களை நன்கு அகலவைத்து முதுகினை வளைத்து கைகளை கேட்சிங் பொஸிஷனில் எப்போதுமே தன் கால் மூட்டிற்குக் கீழே வைத்திருப்பார்! இதனால் முதுகை அதிகம் வருத்தாமல் உடலை மிக எளிதில் ஸ்ட்ரெச் செய்து தூரமான ஸ்லிப் கேட்சுகளைக்கூடக் கைப்பற்ற முடியும்! லக்ஷ்மண், பாண்டிங், அசார் உட்பட பல ஸ்லிப்கேட்ச் எக்ஸ்பெர்ட்கள் கூட உடல்சோர்வினால் பொதுவாகக் கைகளை இடுப்பளவில்தான் வைத்திருப்பார்கள்!
* பார்ட்-டைம் விக்கெட் கீப்பரான டிராவிட்... இந்திய அணியில் விக்கெட் கீப்பருக்காக ஒரு பேட்ஸ்மேனின் ஸ்லாட்டை விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில் தன்னம்பிக்கையுடன் களமிறங்கித் தொடர்ந்து கடும்பயிற்சி மேற்கொண்டுத் தன் அதீத பேட்டிங் சுமையுடன் நீண்ட நாட்கள் விக்கெட் கீப்பிங்கையும் கவனித்து வந்தது டிராவிட்டின் மன உறுதிக்குச் சான்றிதழ்!
* அணிக்கு வந்தபுதிதில்.... மாடலிங் உலகம் டிராவிட்டையும் அப்படியே அள்ளிக்கொள்ளத் துடித்தது..... பெப்ஸி, தாம்ஸன்,கோடக் என்று டிராவிட்டும் ஒரு ரவுண்டு வந்தார்.... தன் அப்பா பணிபுரிந்த "கிஸான்" ஜாம் நிறுவனத்திற்காக நட்புடன் டிராவிட் மாடலிங் செய்தார்.... (அணி வீரர்கள் இவரை Jamyyy என்று அழைப்பதன் காரணம்!) ஏகப்பட்ட பெண் ரசிகைகள் டிராவிட்டை வளையமிட்ட காலம் அது..... என்னதான் இருந்தாலும் டிராவிட் "தான் ஒரு விளையாட்டு வீரன்" என்ற நிதர்சனத்தில் உறுதியாக இருந்ததும் ஓர் அழகான பாடம்! உதாரணத்திற்கு... பதினாறு வருடங்களாக டிராவிட்டைப் பார்த்துவருகிறோமே..... என்றைக்காவது அவரது தோற்றத்தில் மாற்றத்தைக் கண்டிருக்கிறோமா?!! அதே ஹேர்ஸ்டைல் (அதிகமாக கேசத்தை வளரவிட்டதுகூட் கிடையாது!!) , ஒரு மீசை, ஃப்ரென்ச் பியர்ட்... ம்ஹும்!! ஷேவ் பண்ண மறந்த இரண்டு நாள் தோற்றங்கள் கூட ரொம்ப அரிதுதான்!!!.... பக்கா ப்ரொஃபஷனல் ப்ளேயர் என்றால் உடனே சொல்லலாம் டிராவிட்டை!
* எல்லாவற்றையும் விட டிராவிட் எப்போதுமே வெளிப்படுத்திய அந்த மிஸ்டர்.க்ளீன் இமேஜ் மற்றும் அவரது Most Disiplined Body Language - இந்த இரண்டும் ஒரு பர்சனாலிட்டியாக டிராவிடிடம் ரசித்தது மட்டுமின்றி வாழ்க்கையில் பின்பற்றவும் தூண்டப்பட்ட அழகான விஷயங்கள்! :-)
கேப்டனாக டிராவிட்... சர்ச்சைக்குரிய சாப்பலின் செல்லமாக நடந்துகொண்ட நாட்களில்தான் சில கெட்டபெயர்களைத் தேடிக்கொண்டார்! 2007 உலகக்கோப்பையின் வலி மிகுந்த வெளியேற்றம்..... 194 ரன்கள் குவித்த நிலையில் சச்சின் பேட்டிங் செய்யும்போது இன்னிங்ஸை டிக்ளேர் செய்துவிட்டு மிகவும் அயர்னியாக தகுந்த பதிலளிக்காமல் இருந்தது..... ஐபிஎல் லில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது முக்கிய முடிவுகளில் தொடர்ந்து சொதப்பியது போன்ற சில நெகட்டிவ் விஷயங்கள் திருஷ்டியாக இருந்தாலும் டிராவிட்டின் பதினாறு வருட கிரிக்கெட் கேரியர் சந்தேகமேயில்லாமல் ஒரு பெருமைக்குரிய பயணமே!
எப்பேர்ப்பட்ட பக்குவமான வீரரும்கூட் ஓய்வு என்று வரும்போது அறிவித்துவிடுவதா அல்லது இன்னுமொரு தொடரில் ஆடிப்பார்ப்பதா என்று மதில்மேல் பூனையாகக் குழம்பித்தவிக்கும் எதார்த்தத்தில், திடமாக எடுத்த தன் ஓய்வு முடிவைத் தீர்க்கமாய் அறிவித்த இந்திய அணியின் வலிமையான மதிலாகக் கருதப்படும் டிராவிட் பூனையல்ல எப்போதுமே புலிதான்! :-))
வீ வில் மிஸ் யூ டிராவிட்!!!!
அன்புடன்,
பிரபு எம்





