தொடர்ந்து ஐந்துக்கு ஐந்து நட்சத்திரங்களையும் பெறுகின்ற திரைக்கதைகளாகத் தேர்ந்து இயக்கும் சசி, இந்தமுறை ஏனோ ஐந்துக்கு மூன்று போதுமென்று த்ரீ ஸ்டார்ஸை மட்டும் குறிவைத்துத் (!) தூக்கியிருக்கிறார்! தனது வழக்கமான மெல்லின சினிமாவைத் தாண்டி இம்முறை வல்லினத்தில் கதை பிடித்திருந்தாலும் யரல"வளவள"ல திரைக்கதையால் படம் இடையினமாகப் போனதுதான் வருத்தம்!
பேரலல் (Parallel) திரைக்கதையில் சாக்லேட் பாயாக பரத், புதுமுகம் மிருத்திகாவை காதலிக்கும் சுவாரஸ்ய அத்தியாயங்கள் ஒருபுறமிருக்க மற்றொருபுறம் ஆக்ரோஷ பரத் இன்வெஸ்டிகேட் செய்வது தான் காதலித்தது நிஜமா? தன் காதலி உண்மையா அல்லது கற்பனையா? என்று! பரத்தைப் பரிசோதிக்கும் டாக்டரும் பரத்தின் அண்ணன் சந்தானமும் லியானா(மிருத்திகா) என்று ஒரு பெண்ணே நிஜமில்லை என்று சத்தியம் செய்யத் தன்னைக் காதலித்து ஒரு விபத்தில் இறந்துபோன பெண்ணே நிஜமல்லையோ என்று துடிக்கிறார் பரத்........ ஒருகட்டத்தில் பரத் தன்னைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள போலி சதுக்கங்களையெல்லாம் கண்டறிய, அவற்றை உடைத்தெறியும் முயற்சியில் ஒருவழியாக சைக்கோபாத் வில்லனைக் கண்டுபிடிக்கிறார் அதன்பிறகு குழப்ப முடிச்சுகள் எல்லாம் ஒன்றொன்றாக அவிழ இறுதியில் எய்ட் பேக் இரும்பு உடம்புடன் பரத் தடைகளைத் தகர்த்து காதலியை மீட்கும் ஆக்ஷன் காம்போதான் எதற்கிந்த பெயர் என்று இறுதிவரை விளங்காத "ஐந்து ஐந்து ஐந்து"!
வித்தியாசமான கதையில் விஷயம் முழுக்கத் தெரிந்த கதாபாத்திரங்கள் திரைமறைவில் இருந்து ஆட்டுவிக்க முக்கியப் பாத்திரம் உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் துடிப்பதாக அமைந்திருக்கும் திரைக்கதையில் எதுவுமே புரியாமல் படம் பார்க்கும் ஆடியன்ஸால் சஸ்பென்ஸை பரத்துக்கு முன்னாடியே யூகித்துவிடமுடிவது மட்டுமே குறை திரைக்கதை தரமாகப் பின்னப்பட்டிருந்தாலும்!
பரத்.... ஒரே படத்தில் பல பரிமாணங்கள் காட்ட ஸ்கோப் இருக்கும் படு வெயிட்டான பாத்திரம்! மொத்தப் படத்தின் கணத்தையும் தன் வலிமையான தோள்களால் சுமந்திருக்கிறார் நிறைவாக! தன்னைச் சுற்றிலும் பொய்யாகப் பின்னப்பட்டிருக்கும் மாயவலையில் சிக்குண்டு தவிக்கும் காட்சிகளிலும், தன்னிடம் "பவர்" இருக்கின்றது என்று மிருத்திகாவுடனான இன்னொசன்ட் லவ் எபிஸோடிலும் பரத்தின் உடல்மொழி கச்சிதம்! வாய்ஸ் மாடுலேஷனில் மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்! எய்ட் பேக் பாடிபில்டிங் எல்லாம் படத்தின் மார்க்கெட்டிங்குக்கும் பரத்தின் ஃப்யூச்சரிக்கும்தான் உதவியிருக்கிறதே தவிர படத்துக்கு எதற்கு என்பது கேள்விக்குறியே! எப்படிப்பார்த்தாலும் பரத்துக்கு இந்தப் படம் ஒரு பவர் பேக்ட் ஒன் மேன் ஷோ!
மிருத்திகா..... குழந்தைத்தனம் கண்களில் இன்னும் மிச்சமிருக்கும் குட்டி அழகி! குறும்பு கொப்பளிக்கும் கண்கள் விழித்துக்கொள்ளும்போதெல்லாம் உற்சாகமும் சேர்ந்து தொற்றிக்கொள்கிறது! நைஸ் கேர்ள்!
சுதேஷ் பெர்ரி... வித்தியாச வில்லன்.... கண்களை மறைத்துக்கொண்டு உடலாலும் தமிழ் தடுமாறும் பேச்சாலும் வயலன்ஸ் காட்டும் சைக்கோ வில்லன்..... க்ளீன் பெர்ஃபார்மென்ஸ்
சந்தானம் இந்தப் படத்தில் சந்தானமாக மிகச்சொற்பமான காட்சிகளில்தான் காமெடியனாக சிரிக்கவைக்கிறார்.... மற்றபடி அவருக்கு இதில் சப்போர்ட்டிங் ரோல்தான் அதிகம்!
சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் வேகமும் வீரியமும் இன்னும் கொஞ்சம் கைகூடியிருந்தால் திரைக்கதைக்கு அழுத்தமும் கொஞ்சம் கைகோர்த்திருக்குமோ என்று ஓர் உணர்வு எழுந்தது! உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த சிங்கம்-2 வின் ஒளிப்பதிவைச் சொல்லலாம் பரபர ஆக்ஷன் ஸ்க்ரிப்டுக்காக ஸ்பெஷலாக மெனக்கிட்டுருக்கும் கேமரா அபாயகரமான கோணங்களிலெல்லாம் அதகளமாகப் பயணித்து வேகமான திரைக்கதையை மொமண்டம் குறையாமல் ஸ்க்ரீனில் உட்காரவைத்திருந்தது! ஆனால் இந்தப் படத்தில் அதுபோன்ற எந்தவொரு சாகசமும் செய்யவிலை சரவணன் அபிமன்யுவின் கேமரா ரொம்பவே சாத்வீகமாகமான ஒளிப்பதிவு!
சுபாரக்கின் எடிட்டிங்கைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்...... அத்தனைத் துல்லியமான படத்தொகுப்பு....
விபத்துக்காட்சிக்கு முன்னும் பின்னுமாக இன்ஸ்டால்மென்டில் கதைசொல்லும் திரைக்கதையைக் கொஞ்சமும் குழப்பமின்றி காட்சிகளால் கோர்த்துக்கொடுத்த நேர்த்தி க்ளாஸ்!
சைமனின் இசை ஜஸ்ட் பாஸ் ரகம்! பின்னணி இசை இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம் இருந்தாலும் சமகால ஆக்ஷன் படங்களைப்போல் இரைச்சல்களால் நிரப்பிவைக்காமல் விட்டது நல்ல ஆறுதல்!
சசியின் திரைக்கதை எழுதும் திறனைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை.... தமிழின் மிகத்தேர்ந்த கதைசொல்லிகளில் சசியும் ஒருவர் என்பது நிதர்சனம் இருப்பினும் தனக்குப் புதிதான களத்தில் கால்பதித்திருக்கும் சசி இந்தப் படத்தில் சற்று தடுமாறியிருப்பதுபோல் தெரிவதற்கு படத்தின் தாமதமான ரிலீஸும் ஒரு முக்கியக் காரணம்!
மற்றபடி இயக்கமெல்லாம் அருமைதான்! முதலிலேயே சொன்னதுபோல சசியின் ஃபைவ்ஸ்டார் படைப்பு இதுவல்லதான்! எனினும் தன்னால் ஒரு முழுநீள ஆக்ஷன் த்ரில்லரை வழங்க முடியுமென நிரூபித்திருப்பதில் வெற்றிகண்டிருக்கிறார் என்று நிச்சியம் சொல்லமுடியும்..... என்னதான் இருந்தாலும் "a Sasi Film" இதுவல்ல! :-(
ஐந்து ஐந்து ஐந்து --> ஐந்துக்கு ஐந்து அல்ல!
அன்புடன்,
பிரபு எம்

//தனது வழக்கமான மெல்லின சினிமாவைத் தாண்டி இம்முறை வல்லினத்தில் கதை பிடித்திருந்தாலும் யரல"வளவள"ல திரைக்கதையால் படம் இடையினமாகப் போனதுதான் வருத்தம்!//
ReplyDeleteநொறுக்குற போ :-)
//எதற்கிந்த பெயர் என்று இறுதிவரை விளங்காத "ஐந்து ஐந்து ஐந்து"!//
ReplyDeleteபேரு நல்லா தான் இருக்கு...மூணு " 5" வேற ;-) இருந்துட்டு போகட்டும்...:-)
ReplyDelete//வித்தியாசமான கதையில் விஷயம் முழுக்கத் தெரிந்த கதாபாத்திரங்கள் திரைமறைவில் இருந்து ஆட்டுவிக்க முக்கியப் பாத்திரம் உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் துடிப்பதாக அமைந்திருக்கும் திரைக்கதையில் எதுவுமே புரியாமல் படம் பார்க்கும் ஆடியன்ஸால் சஸ்பென்ஸை பரத்துக்கு முன்னாடியே யூகித்துவிடமுடிவது மட்டுமே குறை திரைக்கதை தரமாகப் பின்னப்பட்டிருந்தாலும்!//
அடேங்கப்பா...எவ்வளவு பெரிய வார்த்தை...
//திரைக்கதை தரமாகப் பின்னப்பட்டிருந்தாலும்!
ReplyDeleteசுமந்திருக்கிறார் நிறைவாக! //
உனக்குள்ளே ஒரு ஜூனுன் கவிஞர் இருப்பதை,கண்டு கொண்டேன்!கண்டு கொண்டேன்! :-)