எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Sunday, October 30, 2016
காஷ்மோரா [U/A] (2016)
விருந்துக்கென்று ஒரு வீட்டிற்குச் செல்லும்போதுஉணவைப் பரிமாறுவதற்கு முன்பு வீட்டைச் சுற்றிக்காட்டுவதும் ஒரு வழக்கம் (ரொம்ப சீக்கிரம் போய்விட்டோம் என்றால்..!) அப்படி சென்ற ஒரு வீட்டின் அதி நவீனத்துவம் வாய்ந்த, பிரம்மாண்டமான மாடர்ன் கிச்சன் ஒன்று உங்களை வசீகரிக்கின்றது..... சாதாரணமான சமையல் உபகரணங்கள்கூட அதிநுட்பமான வடிவமைப்பில் அதிசயிக்க வைக்கின்றது..... மாடுலார் கான்செப்ட்.... புகையை உள்வாங்கிக்கொள்ள நவீன சிம்னி என்று அந்த கிச்சன் உங்களை பிரம்மிக்கவே வைக்கின்றது என்று வைத்துக்கொள்வோம்! அந்த பிரம்மிப்பு உச்சம்பெற உத்தேசிப்பது என்னவோ சமையலறைக்குப் பெரும்பாலும் அடுத்திருக்கும் டைனிங் டேபிளில்தானே.... அப்பேர்ப்பட்ட கிச்சனில் சமைக்கப்பட்ட "மல்டி-குசின்" உணவுவகைகளை எச்சில் துளிர்த்துத் தயார் நிலையில் இருக்கும் நாக்கில் எடுத்து வைத்ததும் உணவு "சப்"பென்று இருந்தால் எந்தமாதிரியான உணர்வு எழும்?? ரிலீஸான தீபாவளி அன்று ஃபர்ஸ்ட் லுக், ட்ரெயிலர் எல்லாம் பார்த்துவிட்டு என்னன்னவோ கற்பனை செய்துகொண்டு தியேட்டரில் "காஷ்மோரா" பார்த்தவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும் முந்தைய கேள்விக்கான பதில்! படு காஸ்ட்லி கிச்சனில் தனது அரைவேக்காட்டு உணவை சமைத்து கான்ஃபிடன்டாகப் பரிமாறியிருக்கிறார் இயக்குனர் கோகுல்!
"மல்டி-ஜானர்" படங்கள் பொதுவாக பிரியாணிக் கடைகளைப் போன்றவை.... எம்.ஜி.ஆர், ரஜினி மாதிரி மாஸ் ஹீரோக்கள் தங்கள் ரசிகர்களுக்கு பெரும்பாலும் காமெடி, ஆக்ஷன், மியூசிக்கல், ஃபேமிலி, ரொமான்ஸ் என்று கலந்துகட்டி மல்டி ஜானர் விருந்து படைக்கவே அதிகம் முனைவார்கள்.... இங்கு முன்னணி நடிகரான கார்த்தியின் வியாபாரத்தையும் மீறிய பட்ஜெட்டில் ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி,காமெடி, என ஒரு மல்டி-ஜானர் படமென்று எதிர்பார்ப்புகளை எகிறவிட்டு வெளியிறங்கியிருக்கும் "காஷ்மோரா"வில் காமெடி மட்டும்தான் வொர்க்-அவுட் ஆகியிருக்கின்றது.
ஏழுஜென்மங்களாக சாபவிமோசனம் தேடி ஒரு பிரம்மாண்டமான அரண்மனையில் அடைபட்டுக்கிடக்கும் குரூரமான படைத் தளபதியான ராஜ் நாயக்கின் (மொட்டைத்தலை கார்த்தி) ஆத்மாவொன்று ஆயிரம் ஆண்டுகளுக்கொருமுறை நிகழும் விசேஷமான பவுர்ணமியன்று யாகம் மற்றும் நரபலி மூலம் வெளிவர வெறிகொண்டிருக்கிறது.... அதனைத் தடுத்திடத் தனது ஏழாவது ஜென்மத்திலும் முனைப்புடன் காத்திருக்கும் ரத்னமகாதேவி ( நயன்தாரா)..... இந்தப் பின்னணியில், நிகழ்காலத்தில் ஆவிகள், செய்வினை, பில்லிசூனியம் என்று படு நம்பகமாகத் தில்லுமுல்லு செய்யும் காஷ்மோரா ( நார்மல் கார்த்தி) ராஜ் நாயக்கின் ஆவியால் தனது குடும்பத்துடன் (விவேக் அன் கோ) பலிகொடுக்கப்படத் தேர்வாகிறார்... மறுபுறம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசரான தனது தந்தையையும், ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையுடன் தன் உயிரையும் தளபதி ராஜ் நாயக்கின் மூர்க்கத்தனத்துக்கு இழந்துவிட்ட இளவரசி ரத்னமகாதேவியோ அதே காஷ்மோராவைத்தான் ராஜ் நாயக்கின் சாபவிமோசனத்தை வீழ்த்துவதற்கு ஆயுதமாகத் தேர்வுசெய்கிறார்.
ஆவிகளுடன் பேசுவதும் பேய்களை ஓட்டுவதும் செய்வினை எடுப்பதுமாய் மீடியா வெளிச்சத்தில் ஆன்-டிமாண்டில் இருக்கும் காஷ்மோரா கார்த்தி அடிக்கும் லூட்டிகள், நிஜத்திலும் செம கல்லாகட்டும் இதுமாதிரி சூப்பர் நாச்சுரல் தில்லாலங்கடிகளை "சதுரங்க வேட்டை" ரேஞ்சுக்கு தோலுரிக்கின்றன. இது உண்மையில் பாராட்டத்தக்க பகுதி படத்தில்... மிகவும் சுவாரஸ்யமான பகுதியும் கூட... அந்தப் போர்ஷனில் காமெடி நன்றாக எடுபடுகின்றது திரைக்கதையில்...! ஒரு கட்டத்தில் ராஜ் நாயக்கின் சதியால் அந்த அரண்மனையில் குடும்பத்தோடு காஷ்மோரா அடைபட இல்லாத பேய்களை வைத்தே பிழைப்பு நடத்தும் பக்கா ஃப்ராடு கார்த்தி ரியல் பேயையும் அதேபோல அணுகுவது நன்றாகவே சிரிப்பு வரவைகின்றது திரையில். அக்மார்க் கார்த்தி ஃப்ளேவர் காமெடி சீன்கள் இவை! அப்போதுதான் ஓபனாகிறது ட்ரெயிலரில் காட்டும் "பாகுபலி" ரக ஃப்ளாஷ் பேக்..... பாகுபலி என்று டைப் செய்ததற்கே கையைக் கழுவிவிட்டு வரவேண்டும்! அத்தனை அலட்சியமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் கோகுல் மொத்தத் தொழில்நுட்ப மெனக்கிடல்களையும் மொன்னையாக்கிவிட்டு! ஒரு போர்ப்படையின் வியூகங்களையே தனி ஆளாக (!) வீழ்த்திவிடும் மகாதீரராம் இந்த ராஜ் நாயக்.... கொஞ்சம்கூட ஒட்டாத காட்சிகள்..... புதுமை தென்படாத நடிப்பு.... க்ராபிக்ஸை மட்டுமே நம்பும் ஆக்ஷன் கோரியோக்ராஃபி என்று அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்ட முக்கியப் பகுதியாகிறது படத்தின் இந்த ஃபேண்டஸி ஃப்ளாஷ்பேக்.....!
அதிலும் தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதிவரலாறுகளை அரண்மனையில் மாட்டிக்கொண்ட காஷ்மோரா கார்த்தி எப்படிக் கண்டுபிடிக்கப்போகிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால், படு சப்பையாக, நிகழ்கால "தினமலர்" தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஓர் ஓலைச்சுவடியில் (!) மொத்தக் கதையையும் படித்துத் தெரிந்துகொள்கிறாராம்......!
க்ளைமேக்ஸ் நெருங்கும் நேரத்திலும் காமெடிதான் செய்கிறார் காஷ்மோரா கார்த்தி ஆனால் ரத்னமகாதேவி தன்னுடலில் புகுந்ததாக நடித்து வில்லன் ஆவியைக் கலாய்க்கும் அந்தக் காட்சி படத்தில் காமெடியின் உச்சம்! செம்ம சிரிப்பு சத்தம் கேட்கின்றது தியேட்டரில்! அப்படியே தொடர்ந்து எல்லாருக்கும் ஏற்கெனவே தெரியும் க்ளைமேக்ஸுடன் சப் பென்று முடிகிறது படம்!
கார்த்தி....... காஷ்மோரா, ராஜ் நாயக் மற்றும் அவனது ஆவி என்று மூன்று ரோல்களில் வித்தியாசம் நன்றாகக் காட்டுகிறார் ஆனால் தனக்கு நன்கு பழக்கப்பட்ட காஷ்மோரா ரோலில் மட்டும்தான் செமத்தியாக ஸ்கோர் செய்கிறார் புதிதாக ஏற்றிருக்கும் வரலாற்று ராஜ் நாயக் ரோலில் கரகரவென்று கமலஹாசனை நினைவுபடுத்தும் குரலில் பேசுகிறார்.... ரத்தவெறியையும், காம பலவீனத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் ஸ்கோப்பில் படு சாதாரணமாகத்தான் எடுபடுகிறது கார்த்தியின் நடிப்பு பிரத்யேகமான பாடி லாங்குவேஜும், மாடுலேஷனும் மொத்தமாக மிஸ்ஸாவது ஏமாற்றம்...! ராஜ் நாயக்கின் ஆவி பாத்திரத்தில் துண்டிக்கப்பட்ட தலையாக முகபாவனையிலும் வசன உச்சரிப்பிலும் நன்றாக செய்திருக்கிறார்! இருபது நிமிடமே வரும் நயன் தாரா ஏஞ்சலிக் லுக்கில் அழகால் கவர்கிறார் நடிப்பிலும் மிடுக்கிலும் கம்பீரம்காட்டி தனது பங்கை சிறப்புற வழங்கியிருக்கிறார்....... சிம்பிளான ரோலில் ஸ்ரீதிவ்யா வீணடிக்கப்பட்டிருக்கிறார்! கார்த்தியின் அப்பாவாக விவேக்கிற்கு இது அல்வா ரோல் அஸால்ட்டாக அள்ளுகிறார் விவேக் என்றாலும் அவருக்கு ஸ்கோப் குறைவே!
இத்தனை காலம் படப்பிடிப்பில் இருந்த படம் அரைவேக்காடான திரைக்கதை அமைப்பில் அல்லாடுவது பரிதாபத்துக்குரியதாகிறது! பிரம்மாண்டமான கேன்வாஸ்..... பலமாய் ஒலிக்கும் பின்னணி இசை..... முன்னணி நட்சத்திரங்கள்...... நவீன தொழில்நுட்பம்.... இவற்றையெல்லம் வைத்துவிட்டு படம்பார்க்கும் அத்தனை ரக ஆடியன்ஸையும் நான்கைந்து முறை விழுந்து சிரிக்கவைத்துவிட்டால் போதும் போட்ட காசுக்கு லாபம் பார்த்துவிடலாம் என்கிறரீதியிலான மற்றுமொரு சமகால தமிழ்சினிமா முயற்சிதான் இது...!
ப்ளூ ஸ்க்ரீனில் (blue screen) ஷுட் செய்துவிட்டு க்ராஃபிக்ஸில் பிரம்மாண்டமான பேக்-ட்ராப்களை க்ரியேட் செய்யும் நுட்பத்தில் இந்தப்படமும் ஒரு டெக்னிக்கல் ட்ரீட் தான் ஆனாலும் பேப்பரில் எதுவும் இல்லாத காரணத்தினால் எல்லாம் வீணாய்ப்போகிறது..... ஒரு ஹை-பட்ஜெட் படத்தின் சாத்தியங்களைப் பல்வேறு கோணங்களில் ஒளிப்பதிவு செய்யப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஓம்குமாரின் கேமரா அற்புதமாய் இயங்கியிருக்கின்றது! சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு தடுமாறும் திரைக்கதைக்கு எந்தவித பின்பலத்தையும் சேர்த்ததாகத் தெரியவில்லை. அதிகம் எதிர்பார்க்கவைத்த சந்தோஷ் நாரயணனின் இசையும் படத்தின் வீச்சைத் தாண்டி எவ்வித விருந்தும் படைக்கவில்லை.... "ஓயா ஓயா" பாடல் மட்டுமே மனதில் தங்குகின்றது... பின்னணி "சப்தங்கள்" வழக்கம்போல நன்றாக இருக்கின்றன ஆனால் இளையராஜா காலத்தில் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது "இசை" என்றல்லவா அழைக்கப்பட்டு வந்தது!
"காஷ்மோரா" - More Cash invested to make More and More Crap! Crapmora!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)