குரங்கனியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்ற குழுவினர், சிக்கிக்கொண்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது... ஆழ்ந்த வருத்தத்துக்குரியது.
இந்த துர்சம்பவத்தை எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் இறுதியில் இது ஒரு “விபத்து”தானே தவிர இதில் காற்றையும் நெருப்பையும் தாண்டி வேறு எவரையும் குற்றம் சொல்வது மனிதாபிமானமற்ற மாபெரும் தவறாகும். அப்துல் கலாம் முதல் ஸ்ரீ தேவி வரை அத்தனை மரணங்களையும், முகாந்திரம் இல்லாத சந்தேகங்களை முன்வைத்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், கொச்சைப் படுத்துவதைத் தொழிலாகவே சிலர் செய்துவரும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிகழ்காலத்தில் வாழ்ந்துவரும் பரிதாபத் தமிழர்கள் நாம்! குற்றம், குறை, சந்தேகம் என்றே பரபரப்புக்குப் பலியாய்க் காத்திருக்கும் நமது ஊடகங்கள், கோரமான இந்த விபத்தையும் ஆரம்பம் முதலே, அரசாங்கம் முதல் இந்த மலையேற்றப் பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பு வரை யாரையாவது குற்றஞ்சாட்டும் நோக்கிலேயேதான் தகவல்களைப் பதிந்து வருகிறார்கள். உடனே பயந்துபோன இந்த மூடர்கூடமும் (அதாவது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசாங்கம்), ”முறைப்படி அனுமதி பெறாமல் அவர்கள் மலையிலேறியிருக்கிறார்கள்” என்று அறிவிக்கிறது..... உடனே அந்த கிளப் உறுப்பினர்கள் தலைமறைவு என ஊடகங்கள் பரபரப்பேற்றுகின்றன!
ஏன் இவ்வளவு வன்மம் பிடித்து அலைகிறோம்? இந்த விபத்தில் மிகக் கடினமான மீட்புப்பணியானது இன்னும் நடந்துகொண்டிருக்கின்றது. தீக்காயங்களுடன் உயிர்பிழைத்த இளைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது? என்பது மிகவும் வேதனையான கேள்விக்குறி! அப்படியிருக்கையில், இந்த சம்பவத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மட்டுமே மிகுதியாக உண்டு......
இதனை எதிர்பாராத ஒரு விபத்தாகப் பார்த்து, இந்த விபத்து நமக்குக் கொடுத்திருக்கும் அதிர்ச்சிகளை ஆராய்ந்து அவற்றைத் தவிர்ப்பதற்கான எதிர்கால நடைமுறைகளை அரசாங்கமோ/ அமைப்புகளோ செய்ய வற்புறுத்தும் விதமாகத்தான் நமது சமூக வலைதளப் பதிவுகள் இருக்கவேண்டுமே தவிர, பொறுப்பற்ற நமது ஊடகங்களின் வியாபாரத்துக்கு நாம் பலியாகிவிடக்கூடாது!
என்ன நடந்தாலும் அதற்கு ஒரு வில்லனைத் தேடுவதும், கிடைக்காவிட்டால் உருவாக்கிவிடுவதும் ஓர் ஆபத்தான வன்ம மனநிலை. இது இப்படியே தொடர்ந்தால், ஒரு சமுதாய மனச்சிதைவையே உருவாக்கிவிடும். ஆகவே, விபத்துகளை விபத்துகளாகப் பார்ப்போம்.... சம்பவங்களைக் கதாபாத்திரங்களாக்குவதைத் தவிர்ப்போம்!
உயிரிழந்த காயமடைந்தவர்களுக்காக ஆழ்ந்த வருத்தத்துடன்,
பிரபு எம்.
Excellent words... Even if people have got a picture in mind... Not possible to put in right words.. In this case you have done it.. Last two paras are worth distributing
ReplyDeleteThanks a lot for the beautiful expression my dear friend.
DeleteIt really encourages me to record some more responsibly.
you are right.
ReplyDeleteThank you friend....
Delete