இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்!
தமிழகத்துக்கு இப்படியா ஒரு சோதனைக்காலம் வரவேண்டும்?
இப்போதைய சூழலில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு திமுககாரர்களும் வருத்தப்படுகிறார்கள்... கலைஞரின் வெற்றிடத்தை அதிமுக அபிமானிகளும் வெறித்துப் பார்த்து வேதனைப்படுகிறார்கள்! சிங்கங்கள் இல்லாத காட்டுக்குள் ஓநாயும் நரியும் ஆட்சியைப் பிடித்துக்கொள்ள தூர தேசத்துக் கழுதைப் புலிகளும் காட்டு நாய்களும் அதிகாரத்துடன் மேற்பார்வை செய்கின்றன.
தலையலடித்துக்கொண்டு அகிம்சையாய் வாழும் வரிப்புலிகளாய்த் தமிழர்கள்!
தலைமை என்ற ஒன்றின் அவசியத்தை ஒவ்வொரு குழுவும் புரிந்துணர்ந்து செயல்படத் தமிழனுக்குக் காலம் வைத்திருக்கும் அமிலச் சோதனையாய்த்தான் நகர்கிறது நிகழ்காலம். ஒரு கட்சியோ இயக்கமோ ஏன் குடும்பங்களில் கூட அடுத்தடுத்த அடுக்குகளில் ஒருவருக்கு மாற்றாக அடையாளம் காணப்படவேண்டிய தலைமைகள் அதாவது ஆளுமைகள் இருந்தே ஆகவேண்டும்! தலைமையை விட்டுக்கொடுக்க மனமில்லாத முதுமைகளும், தலைமையைப் பொறுப்பாக எண்ணாமல் பதவியாக அனுபவிக்கும் அவசரத்தில் தனி ஆவர்த்தனம் செய்யப் புறப்பட்டுவிட்ட சில இளமைகளும் சேர்ந்துதான் இன்று தமிழினத்தை அனாதையாக்கியிருக்கின்றனர்..... ஆட்சி கிடைத்துவிட்ட அடிமைகளோ, தம் இனத்தை அடகு வைத்திடவே துணிந்துவிட்டனர்!
இந்த மாபெரும் பொறுப்புக்கு ஒவ்வொரு முகாமும் காட்டும் மாற்று முகங்கள் ஒன்றுகூட முழு நம்பிக்கைக்கு உகந்ததாய் இல்லாமல் போனது துரதிர்ஷ்டத்தின் உச்சம்!
புதுமுகத் தேடல் ஒரு புறம்..... 96-ல் கிட்டத்தட்ட தலைமையாய்ப் பளிச்சிட்ட ஒரு முகம் மீண்டும் வந்து கிச்சுக்கிச்சு மூட்டிய வேளையில் மீண்டும் சினிமாவிலிருந்தா? மறுபடியும் முதலில் இருந்தா? என்று எழுந்த அனுபவ ஆதங்கங்கள் இன்னொரு புறம்! இவ்வேளையில் தான் ட்விட்டரில் இருந்து மிகவும் பரிச்சியப்பட்ட ஒரு குரல் ஒலித்தது!
புரிந்துகொள்ளக் கஷ்டப்பட்டாலும் இம்முறை குழப்பமில்லை குரலில்!
கமல்ஹாசன்.......
சமகாலப் பகட்டுத் தனங்களைத் தன் கேள்விகளால் கூறு போடும் புதுமுக அரசியல் தமிழன்!
முத்தமிழ் அறிந்த திரைத் தமிழ் வித்தகன், அரசியல் தமிழில் நிகழ்காலக் கேள்விகளின் நாயகன் ஆனது மொக்கைப் படமாய்ப் போய்க்கொண்டிருந்த தமிழக அரசியலில் இண்டெர்நெட் வழியே வந்த விறுவிறு இண்டர்வெல் ப்ளாக்! (Interval block)
எதிர்பாராத திசையிலிருந்து வந்திருக்கும் இந்த நாயகனின் மேல் இயல்பாக நம்பிக்கை பிறந்ததற்கு எவ்விதக் கவச்சியும் காரணமல்ல என்பதை ஊர்ஜிதம் செய்தபின் தான் இதனை எழுதத் துவங்கினேன் எனவே தொடர்வதற்கு ஐயமில்லை. அரசியல்வாதி கமல் என்று இனிமேல்தான் புதிதாக அழைக்கத் தயாராகிறோம் என்றால் நாம் காலத்தால் மிகவும் தாமதப்பட்டுப் போவதற்கே சாத்தியம் அதிகம், ஏனென்றால் இப்போதைக்குத் தமிழகத் தீவிர அரசியலில் ஆளும் வர்க்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் எதிர்க்கட்சியாக செயல்படுவதில் கமல்ஹாசனுக்குத் தான் முதலிடம் என்று தோன்றுகிறது!
எனவே இனியும் காலதாமதமின்றி, “கமல் முதல்வரானால்...” என்று சாதக பாதகங்களை விவாதித்துப் பார்க்கும் ஒரு முயற்சிதான் இது.... எதிர்பார்ப்புகளையும் சந்தேகங்களையும் அடுக்கிப் பார்க்கலாம்..... ”முதலமைச்சர் கமல்ஹாசன்” என்னும் வினோத வாக்கியத்தில் அமைத்து எழுதக்கூடிய சொற்களையெல்லாம் தொகுத்துப் பார்க்கலாம்.....
கமல் கேட்கும் கேள்விகளைவிட அரசியல் ரீதியாக கமலை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளும் இப்போது ரொம்பவே சூடாக வந்து விழுகின்றன.... அவற்றிலிருந்தே விவாதங்களைத் தொடங்கலாம் அடுத்த பாகத்திலிருந்து......
சில ரிப்பீட்டட் க்வெஸ்டின்ஸ் இங்கே......
1) மீண்டும் ஒருமுறை சினிமாவில் இருந்துதான் தமிழகத்துக்குத் தலைமை வரவேண்டுமா?
2) கமலுக்குப் பின்னே ஏதேனும் கட்சிக்காரர்கள் ஒளிந்திருக்கிறார்களா?
3) ட்விட்டரில் குரல் கொடுத்தால் மட்டும் போதுமா?
4) ரஜினியுடன் இணைந்து செயலாற்றுவாரா அல்லது தனித்து வரவேண்டுமா?
5) தனிக்கட்சி துவங்கவேண்டுமா அல்லது ஏதேனும் கட்சியில் இணைய வேண்டுமா?
6) கமலின் கொள்கைகள் என்ன? காவிரி, விவசாயம், நீட் போன்ற பிரச்னைகளில் நிலைப்பாடு என்ன?
இது போன்ற பொதுவான கேள்விகளுடன் அடுத்த அத்தியாயத்தில் பகிர்வைத் தொடங்குவோம்.....
மறுமொழிகள், பின்னூட்டங்கள் மூலமாக இதை உரையாடலாகத் தொடரலாம் எனவே உங்கள் கருத்துக்களை கேள்விகளை தயவுசெய்து பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்.....
இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்!
அன்புடன்,
பிரபு. எம்

👍👏👏👏
ReplyDeleteநன்றி தேடல்....
Deleteதலையலடித்துக்கொண்டு அகிம்சையாய் வாழும் வரிப்புலிகளாய்த் தமிழர்கள்!
ReplyDeleteஅரும அருமை தம்பி பிரபு இதை இதைதான் எதிர்பார்தேன் வாழ்த்துக்கள்
முதல் அமைச்சர் கமல்ஹாசன் செம தலைப்பு...
நன்றி அண்ணா.... :)
Delete//இந்த நாயகனின் மேல் இயல்பாக நம்பிக்கை பிறந்ததற்கு எவ்விதக் கவச்சியும் காரணமல்ல என்பதை ஊர்ஜிதம் செய்தபின் தான் இதனை எழுதத் துவங்கினேன் //
ReplyDeleteஅதே அதே !! வழிமொழிகிறேன் :)
தொடர்கிறேன் :)
நீண்ட நாட்களுக்குப் பின் உங்க கூட உரையாட வாய்ப்புக் கிடைத்ததே மிக்க மகிழ்ச்சி.... Thank you sis...
Deleteஅவர் கேட்கும் தொகுதியில் வேண்டுமானால் டெபாசிட் வாங்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் ஜெயிக்கலாம்.
Deleteஅவர் நிறுத்தும் மீதி 233 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெல்வது அல்லது டெபாசிட் வாங்குவது நடக்கவே நடக்காது