Friday, December 28, 2012

சச்சின்.... மெல்ல விடைகொடு விடைகொடு மனமே...!


குறிப்பு: கண்டிப்பாக‌ இந்தப் பதிவு முழுக்க முழுக்க சச்சினின் தீவிர  ரசிகர்களுக்காக மட்டுமே!


ஓய்வு??!!.....மெல்ல விடைகொடு விடைகொடு மனமே..... இந்த நினைவுகள் நினைவுகள் கணமே!!


சச்சின்.....

இந்த ஒரு வார்த்தைக்கும் பலகோடி இந்திய இதயங்களின் நாடித்துடிப்புக்கும் இடையே இணைந்திருந்த இருபத்து மூன்று வருட உறவு இப்போது அதன் இறுதிக் கட்டத்தில் தழுதழுத்துக்கொண்டிருக்கின்றது.........

கிட்டத்தட்ட மூன்று தலைமுறை இந்தியர்களின் நரம்போடு நரம்பாக பிணைக்கப்பட்ட ஒட்டுமொத்த இந்தியாவின் இதயத்துடிப்பும் சச்சினின் மட்டைவீச்சிற்குத் தவறாது ஒத்திசைத்து வந்ததுதான்  இந்திய கிரிக்கெட்டின் சமகால வரலாறு!!

கிரிக்கெட்டுக்கும் இந்தியாவுக்குமான உறவைவிட யதார்த்தமானது சச்சினுக்கும் இந்தியர்களுக்கும் இடையேயான உறவு....

காரணம்......

ராஜ்யசபாவில் வேண்டுமானால் சச்சின் கௌரவ உறுப்பினராக இருக்கலாம் ஆனால் இந்திய அணியிலோ இந்த லிட்டில் மாஸ்டர் என்றுமே நம் ஒவ்வொருவரின் பிரதிநிதிதான்!......... காரணம்..... என்னையும் உன்னையும் போலவேதான் சச்சினும் முதன்மையாக கிரிக்கெட்டின் தீராத ரசிகன்.......  தன் அப்பா தனக்குக் கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுத்த அன்று நம்மைப்போலவேதான் அவனும் குதூகலித்தான் ஏதோ உலகக்கோப்பையே கையில் கிடைத்ததுபோல்......... என்னையும் உன்னையும்போலத்தான் அவனும் தெருவோர கிரிக்கெட் வீரனாகவும்.... ஸ்கூல் டீமில் செலக்டாகிவிடவும் துடித்துக்கிடந்தான்...... டிவியில் 1983 வோர்ல்டுகப் ஓடிக்கொண்டிருக்க...நம்மைப்போலவேதான் அவனும் மனதையெல்லாம் மேட்சில் வைத்துக்கொண்டு   ஆன்வல் எக்ஸாமுக்குப் படித்துக்கொண்டிருந்தான்......

அதனால்தான் சொல்கிறேன்........

நம் ஒவ்வொருக்குள்ளும் ஒரு சச்சின் இருப்பது எவ்வளவு உண்மையோ.... அதே அளவு சத்யமானது சச்சினுக்குள் நம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதும்!!!

ஒரு சாதாரண மனிதன், சரித்திரத்தில் நின்றுவிட்ட‌ சாதனையாளன் ஒருவனிடம் தன்னுடைய சுயத்தை அடையாளம் கண்டுகொள்ளமுடிவதெல்லாம் சாதிக்கத் துடிக்கும் சாதாரணர்களுக்கெல்லாம் மாபெரும் வரம்! நமது ஆதர்ஷ நாயகர்களின் வெற்றியைத் தன் வெற்றியாகவே உணர்ந்து பாஸிடிவ் எனர்ஜியை வாரியிரைக்கும் மனிதமனங்களின் அதிசிய ரசவாதம் அற்புதமானது!!

........ஆனால் அப்படி நம்முடைய ஹீரோவுடன் நம்மை அடையாளம் கண்டுகொள்ள‌ வாய்ப்பு கிடைக்கப்பெறுவதற்கோ அந்த சாதனையாளன் தனது சாதனைக்களம் தவிர்த்தத் தன் வாழ்க்கையில் தன்னுடைய "சாதாரணத் தன்மை"யையும் உணர்ந்தவனாய் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்!! அந்த வகையில்....... சமகாலத்தில் யாரும் தன்னை நெருங்க முடியாத சாதனைகளைப் படைத்திருக்கும் போதிலும் சற்றே தளர்வான நிகழ்காலத்திற்குப் பொறுப்பேற்று ஒரு கசப்பான சூழ்நிலையில் தன் ஓய்வை அறிவித்தகையோடு தனது கடைக்கோடி ரசிகனுக்குத் தன்னிலை விளக்கம் தரும் அளவிற்கு இறங்கிவந்து நெகிழ்ச்சியாகக் கடிதம் எழுதியிருக்கும் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.... தனது  "அசாதாரண" சாகசங்களையெல்லாம் தன் உழைப்பால் மட்டுமே சாத்தியமாக்கிய  "சாதாரண மனிதன்"!! இந்த மனிதனின் ரசிகன் என்கிற வகையில் இறுதிவரை மிஞ்சப்போவது பெருமை மட்டுமே..!!




சச்சின் ஒரு மாபெரும் இன்ஸ்பிரேஷன்....... சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது களமாகக் கிரிக்கெட்டை இளமையிலேயே தேர்ந்தெடுத்து நாளும் அதில் வளர்ந்து... மீண்டும் மீண்டும் பயிற்சி மேற்கொண்டு.... இன்று கிரிக்கெட்டின் அத்தனைப் பரிமாணங்களிலும் சாதனைகளால் தன் பெயரைப் பொறித்துச்சென்ற இந்த சூப்பர் ஹீரோவைப் பற்றி இன்னும் இன்னும் எழுதிக்கொண்டே போகமுடியும்.... இருப்பினும் சச்சினுக்கு சமர்ப்பணமாக..... இதுவரை எனது வலைப்பூவில் சச்சினுக்காகவும் சச்சினைப் பற்றியும் எழுதியிருக்கும் அத்தனைப் பதிவுகளையும் இங்கே சமர்ப்பித்து விடைபெறுகிறேன் சச்சினின் தீராத ரசிகனாக!



சச்சின் பற்றிய முந்தைய பதிவுகளின் தொகுப்பு


அன்புடன்,

பிரபு எம்

3 comments:

  1. /சமகாலத்தில் யாரும் தன்னை நெருங்க முடியாத சாதனைகளைப் படைத்திருக்கும் போதிலும் சற்றே தளர்வான நிகழ்காலத்திற்குப் பொறுப்பேற்று ஒரு கசப்பான சூழ்நிலையில் தன் ஓய்வை அறிவித்தகையோடு தனது கடைக்கோடி ரசிகனுக்குத் தன்னிலை விளக்கம் தரும் அளவிற்கு இறங்கிவந்து நெகிழ்ச்சியாகக் கடிதம் எழுதியிருக்கும் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.//

    யம்மாடி ...எவ்வளவு பெரிய லைன் :-)

    ReplyDelete
  2. //அவனது நம்பர்கள் எல்லாம் எனக்கும் தலைகீழ் பாடமாகிப்போனது! சச்சினுக்கு எதிராகப் பேசுபவர்களோடு துல்லியமான நம்பர்களுடன் சண்டைபோட்டு ஜெயிப்பது ஒருகாலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொழுதுபோக்காக இருந்தது! :-))//

    ரைட்டு...:-))

    ReplyDelete
  3. உணர்ச்சிக் கலவை தெறித்து விழுது சச்சின் ரசிகனே..

    பி.கு..நான் சச்சின் ரசிகை அல்ல :-))

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)