நியூ இயர் வந்தாலே நாட்டுல இந்த அவார்டு கொடுக்குறவனுங்க தொல்ல தாங்கமுடியறதில்ல! அநேகமா அவார்டு வாங்குறவங்களவிட அவார்டு கொடுக்குறவங்க அதிகமா இருக்குற ஒரே ஏரியா நம்ம ஏரியாதான்னு நினைக்கிறேன்...சிறந்த படத்துல ஆரம்பிச்சு சிறந்த பப்படம் வரைக்கும் சலிக்காம அவார்டு கொடுக்குறாங்க நம்மாளுங்க! சரி நாமளும் போன வருஷ சோதனையாளர்களுக்கு... ஸாரி... சாதனையாளர்களுக்கு (அட...ரெண்டும் ஒண்ணுதானே!) ஏதாவது கொடுக்கலாமேன்னு யோசிச்சா அதாவது நம்ம பாக்கெட் மணி பட்ஜெட்டுக்குள்ள யோசிச்சு இங்கே நம்ம செலிபரிட்டிங்களுக்கு நூதனமான நினைவுப்பரிசுகளை வழங்குறதா முடிவு செஞ்சிருக்கேன்.... நம்ம கொடுக்குற நினைவுப்பரிசுகளை அவங்க ஷோ-கேஸ்ல (!) பாக்கும்போது எல்லாம் அவங்களுக்கு நம்ம ஞாபகம் வரக்கூடாது 2013 ஞாபகம் வரணும்! ஹிஹி...
நினைவுப் பரிசு லிஸ்ட் கீழே!
கமல்ஹாசன்:
தீபாவளிக்கு முன்னால வரைக்கும் நம்ம புஸ்ஸ்வரூபம் சாரி விஸ்வரூபம் கமல் சாருக்கு 2013 நினைவுப் பரிசா, இந்த உலகத்துல மதச்சார்பே இல்லாத ஏதாவது ஒரு நாட்டைக் கண்டுபிடிச்சு அங்கேபோய் அவர் செட்டிலாக வசதியா ஒரு "உலக உருண்டை"யத்தான் நினைவுப் பரிசா தரலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்.. ஆனால் சம்பந்தப்பட்ட டிவி சேனலுடைய தீபாவளி சிறப்புப் பட்டிமன்றத்தைப் பாத்தப்புறம் மனுஷருக்கு படத்தோட செகண்ட் பார்ட் ரிலீஸ் பண்ணுறதுக்கும் சேர்த்து இன்னும் நிறைய பட்டிமன்றத்துல பேச வேண்டியிருக்கும்னு அனலைஸ் பண்ணி அவரோட ஒரே மனதைரியத்தைப் பாராட்டி மேலும் மேலும் மேடைப்பேச்சுல அவரு பட்டைய கிளப்ப அவரின் கரகர தொண்டைக்கு குளுகுளு நினைவுப்பரிசாக ஒரு "விக்ஸ் மாத்திரை"யை நமது வலைப்பூவின் சார்பாகக் கொடுப்பதில் பெருமிதம் அடைகிறேன்!
கருணாநிதி:
தலைவருக்குதான் 2013க்கு என்ன நினைவுப்பரிசு கொடுக்குறதுன்னு ரொம்ப நேரம் யோசிக்கவெச்சுட்டாரு! நல்ல கனிஞ்ச ஒரு மாம்பழத்தை சாரி மாங்"கனி"யை எடுத்து அதை ஒரு கம்பி போட்ட கதவுக்குப் பின்னால வெச்சு சிம்பாலிக்கா கொடுக்கலாமான்னு யோசிச்சேன் ஆனா அந்தளவுக்கு க்ரியேடிவிட்டி எனக்குப் பத்தல..சரி..அவரும் ஃபேஸ்புக், ட்விட்டர்னு களமிறங்கிக் கலக்க ட்ரை பண்ணினதை ஊக்குவிச்சு ஒரு இன்ஸ்டாக்ராம் அல்லது வாட்ஸ்-அப் அக்கவுண்ட் க்ரியேட் பண்ணி அதை அவருக்கு நினைவுப்பரிசா கொடுக்கலாம்னு யோசிச்சா, பாவம் அவரே அக்கவுண்ட் ஆரம்பிச்ச பாவத்துக்காக டெய்லி அவரே கேள்விகேட்டு அவரே பதில் போட்டு அல்லு பட்டுட்டுஇருக்கிறத பாத்தா மனசு கஷ்டமா இருக்கு.... என்னதான் பண்ணுறதுன்னு பாத்தப்போதான் ஞாபகம் வந்துச்சு 2013ல டோட்டல் தமிழ்நாடும் கண்டமேனிக்குக் கழுவி ஊத்தினது இவரைத்தான் அதுனால அவருக்கு நம்ம சிக்கனப் பரிசு "2013" என்று பொறித்த "காட்டன் கர்சீஃப்"!!
கர்சீஃப் கலர் கண்டிப்பா மஞ்சள் தாம்ப்பா... நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா!!!
மன்மோகன் சிங்:
நான் ஜாஸ்தி யோசிக்கவே இல்ல.... "சைலண்ட் மோடில் மட்டுமே இயங்கும் ஒரு செகண்ட் ஹாண்ட் மொபைல்" தான் நம்ம பிரதம மந்திரிக்கு நம்ம ப்ளாக் தரும் நினைவுப்பரிசு!
சோனியாகாந்தி:
கீ-கொடுக்காமல்..பெட்ரோல் போடாமல் அட கரண்ட் கூட இல்லாமல் சூரியஒளியிலேயே சக்தி எடுத்துக்கொண்டு சொன்னதையெல்லாம் செய்துகாட்டும் ஒரு மன்மோகன்சிங் பொம்மையை நமது விஞ்ஞானிகள் குழுவைவெச்சு வடிவமைச்சு அன்னை சோனியாகாந்திக்கு வழங்கலாம்னு ஐடியா! (ஏன்னா மேடம் அவங்க கட்சி ஆட்சியிலும் நம்ம கிஃப்டைப் பயன்படுத்தணுமே!)
ஷீலா தீக்ஷித்:
கடந்த மூன்றைந்து பதினஞ்சு வருஷமா பாவம் முதலமைச்சர் ஆஃபீஸ்லயே காலம் கடத்திட்டு இப்போ திடீர்னு ஆஃபீஸும் பறிபோய் சட்டசபை சீட்டும் காலியாகி வீட்டுக்குப் போய் தூசிதட்டுற சூழ்நிலையில யாராவது இவங்க வீட்டைக் கூட்டிப்பெருக்க "துடைப்பத்தை" தூக்கிட்டுவந்து சுத்தம் செய்ய வந்தா இந்தம்மா மனசு என்ன பாடுபடும்.... அதனால அம்மா ஷீலா தீக்ஷித்துடைய மனசப் புரிஞ்சு நம்ம கைக்காசப் போட்டு க்விக்கர் டாட் காம்ல வாங்கித்தர்ற நினைவுப் பரிசு "ஒரு வேக்வம் க்ளீனர்" (Vacuum cleaner) !! சுத்தம் அவங்களுக்கு சுகம் தரட்டும்!
வைகோ:
. இவரோட அழுகை ஃபேமஸாச்சேன்னு இவருக்கு ஒரு க்ளசரின் பாட்டிலை வாங்கிவெச்சுட்டுப் பாத்தா க்ளிசரினைவிட வேகமா இவருக்குக் கண்ணீர் பொத்துட்டு வந்துடுறதுனால இவருக்கு நம்ம கிஃப்ட் தேவையில்லாமயே போயிடுமேன்னு யோசிச்சு.... இலங்கைப் பிரச்னைக்குத் தாவி.... நம்ம அரசியல்வாதிங்க ரொம்ப சேஃபா இங்க இருந்துகிட்டே குடுக்கும் ஊமைக்குத்துக்களுக்கு எல்லாம் சேர்த்துவெச்சு நம்ம வைகோ சாருக்கு நம்ம குடுக்குற நினைவுப்பரிசு ராஜபக்சே படம் போட்ட "பஞ்ச் பேக்" (Punch Bag) ஏன்னா குத்து குத்துன்னு குத்தினாலும் யாருக்கும் வலிக்காது பாருங்க!
அன்னா ஹசாரே:
லோக்பால்...லோக்பால்னு இவரு போட்ட எல்லா பாலும் நோ-பாலாவே போயிட்டிருந்த காலம் போய்க் கடைசில மசோதாவே தாக்கலாகிடிச்சு..... தாத்தா உண்ணாவிரதம் இருக்குற ஜன்டர் மண்டர் ஏரியாவுக்கு ப்ளாக்ல எல்லாம் டிக்கெட் எடுத்துட்டு போயிட்டு இருந்த கூட்டமெல்லாம் கடைசி சீஸன் உண்ணாவிரத ஷோ டைம்ல ஆம் ஆத்மி கட்சியில பிஸியாகிப் போனதுல தாத்தா உண்ணாவிரதம் கிட்டத்தட்ட நம்ம "இரண்டாம் உலகம்" படம் ஓடின தியேட்டர் மாதிரி ஆகிட்டதா கேள்வி! சரி இனிமே என்ன காரணத்துக்காக உண்ணாவிரதம் இருக்கலாம்னு ஹசாரே யோசிக்குற வரைக்கும் நம்ம அவருக்குக் கொடுக்கப்போற நினைவுப்பரிசு வேற என்ன "ஒரு டம்ளர் பழச்சாறு"தான்!
வடிவேலு:
கடந்த ரெண்டு வருஷமா அண்ணனை ஆதித்யா சேனல் தவிர வேற எங்கேயுமே பார்க்க முடியல.... இந்த வருஷம் இவரு படம் ரிலீஸ் ஆகுதுன்னு சொல்றாங்க... படம் பேருகூட ஏதோ "ஜெகஜ்ஜால புஜஜ்ஜால எச்சச்ச கச்சச்ச தெனாலிராமன்"னு சொல்லுறாங்க எது எப்படியோ நம்ம காமெடி வேலு அடுத்தடுத்து படம் நடிச்சு கால்ஷீட் கல்லாகட்டி பிஸியா இருக்க வாழ்த்தி நம்ம அவருக்குக் கொடுக்கப்போற நினைவுப்பரிசு "ஒரு புத்தம்புது 2014 டைரி!"
ரஜினிகாந்த்:
ஹாலிவுட் வரைக்கும்கூட தேடிப்பாத்தாச்சு ஒரு கார்ட்டூன் படத்துக்குக் கால்ஷீட் கொடுத்து கால் நூற்றாண்டு காலம் காத்திருந்த ஒரே ஸ்டார் நம்ம சூப்பர்ஸ்டார்தானாம்!
கால்கடுக்கக் காத்திருந்து ரசிகர்களுக்குக் கிடைச்ச ஒக்கே ஒக்க சூப்பர் ஹிட் பாட்டான "எங்கே போகுதோ வானம்" பாட்டுகூட போனவாரம் ராத்திரி எஃப்.எம்ல "நெஞ்சில் நின்ற ராகத்"துல போட்டுட்டாங்களாம்! படத்த வுடுங்க பாக்கி பாட்டாவது வெளிவருமான்னு தலைவரே நம்மள மாதிரிதான் காத்துட்டு இருக்குறாருன்னு நாம கேள்விப்படுறோம் ஸோ இப்ப அவருக்கான 2013 நினைவுப்பரிசு சும்மா பளபளபளன்னு ஓர் "எம்டி எம்பி-3 சிடி" (Empty MP3 CD)!!!!
கேப்டன் விஜயகாந்த்:
அரசியல்ல ஆரம்பமே அதிரடியா கட்சித்தலைவரா சொந்தக்கட்சி ஆரம்பிச்சு வந்தவருக்கு இப்போ கட்சியில சொந்தக்காரங்க மட்டும்தான் இருக்காங்களாம்! இருந்தாலும் யாருமே இல்லாத டீக்கடையில் மட்டும் நான் யாருக்கும் டீ ஆத்திட மாட்டேன்னு ஒரே மன உறுதியோட சொந்தக்காசுல டெல்லிக்குப் போய் டீக்கடையப்போட்ட (அதுவும் இப்போ டீக்கடையில பன்னு,ரொட்டி கூட இல்லையாம்!) நம்ம "கால் தாதா" கேப்டனுக்கு நம்மளோட நினைவுப்பரிசு ஒரு "காலி கண்ணாடி டம்ளர்" அதுல அவரு டீ, காஃபி ஏன் போன்விட்டா கூட குடிக்கலாம்! :-)))
நரேந்திர மோடி:
சென்னைக்கு ஒரு மம்மின்னா குஜராத்துக்கு இந்த தாடி வெச்ச டாடிதான் ஆக்ஷன் ஹீரோ! குஜராத்ல ஆக்ஷன் ஹீரோன்னாலும் ஆல் இண்டியா ரேஞ்சில் ஆன்டி ஹீரோவா களத்துல இறங்கி மன்மோகன் சிங்கில் இருந்து ராகுல்காந்தியோட கொள்ளுத் தாத்தா வரைக்கும் சகட்டுமேனிக்கு அதிரடியா பேசி மிரட்டல் அடி அடிச்சுட்டு இருந்த மனுஷனுக்கு சிவகாசில செஞ்ச ஒரு தௌஸன் வாலா சரவெடி தரலாம்னு நெனெச்சுட்டு இருக்கும்போதுபாத்து அலகாபாத் நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்படாததால் நிரபராதின்னு சொல்லி இவரை ஃப்ரீயாவிட, அண்ணன் அவரு ப்ளாக்ல எழுதின அழுவாச்சி காவியத்த பாத்து நானே அழுதுட்டேன்! வேதனை, வலி, தாங்கவொண்ணா துயரம் எல்லாம் அடைந்தேன்னு சொல்லி நெஞ்ச போட்டு நக்கியெடுத்துட்டாரு! என்னா..ரைமிங்கெல்லாம் சரியாத்தான் இருந்தாலும் பாவம் டைமிங்குலதான் கோட்டைவிட்டுட்டாரு...ஜஸ்ட் ஒரு பத்து வருஷம் லேட்டா இந்த அறிக்கைய விட்டுருக்காருன்னு ஒட்டுமொத்த மீடியாவும் மோடியை ஒரே ஃபை ஃபை... கலாச்சிஃபை!! சரி.. நமக்கென்னன்னு மோடி ஐயாவின் செண்டிமெண்ட் மூடுக்கேத்தமாதிரி நம்ம அவருக்குத் தர்ற நினைவுப்பரிசு... யெஸ் அதேதான்... முதல்ல வைகோ அண்ணனுக்காக வாங்கின "க்ளசரின் பாட்டில்"தான்!! வாழ்க்கைல (முதன்)முதல்ல கண்ணீர் வடிக்கிறவரைப் போய் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்னு சொல்லாதீங்கப்பா மனசு வலிக்குது!
அரவிந்த் கெஜ்ரிவால்:
சாதாரண மனிதனுக்கு அரசியல் என்பது புலிவால் என்றிருந்த இந்திய அரசியலில் 2013 அரசியல் அரங்கில் இந்த "ஆம் ஆத்மிகள்" சேர்ந்து கட்டியெழுப்பியிருக்கும் "க்ரேட் வால்" இந்த கெஜ்ரிவால்...! புகழ்ச்சிக்கெல்லாம் இன்னும் காலம் வரவில்லை, இவரும் என்னத்தக் கிழிக்கப்போறாருன்னு பார்ப்போம், என்றெல்லாம் விமர்சனங்கள் எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டுமே...! ஒரு மாற்று அரசியலுக்கான விதையைத் தூவிய மாத்திரத்தில் அடியில் வேர்விட்டு வெளியே துளிரும் விட்டிருக்கும் இந்த டெல்லி சி.எம்முக்கு 2013 நினைவுப்பரிசு அன்புடனும் எதிர்பார்ப்புடனும்கூடிய ஒரு "வெல்கம் பூங்கொத்து"தான்.....
வெல்....
நானும் என் பங்குக்கு எல்லாருக்கும் ஏதோவொன்னு கொடுத்துட்டேன்....
அப்புறம் இதையெல்லாம்கூடப் பொறுமையா படிச்ச உங்களுக்கெல்லாம் நான் சொல்லிக்க விரும்புறது என்னன்னா...... வேறன்ன.... கொஞ்சம் லேட்டான "புத்தாண்டு வாழ்த்துக்கள்"தான்!! :-))
விஷ் யூ ஆல் அ வெரி ஹேப்பி நியர்...
அன்புடன்,
பிரபு எம்












அனைத்து அவார்டும் அட்டகாசம். அதும் ரஜினி, கேப்டன், வடிவேலு, கமல் விருதுதான் டாப். எல்லாம் சரி அம்மாவை விட்டுட்டீங்களே! ஏன்?
ReplyDeleteSuper :-)
ReplyDelete//"சைலண்ட் மோடில் மட்டுமே இயங்கும் ஒரு செகண்ட் ஹாண்ட் மொபைல்" தான் நம்ம பிரதம மந்திரிக்கு நம்ம ப்ளாக் தரும் நினைவுப்பரிசு!////// Sema...Sema...Sema Bro! :-)
ReplyDeleteஒக்கே ஒக்க சூப்பர் ஹிட் பாட்டான "எங்கே போகுதோ வானம்" பாட்டுகூட போனவாரம் ராத்திரி எஃப்.எம்ல "நெஞ்சில் நின்ற ராகத்"துல போட்டுட்டாங்களாம்! // :-))))))))
ReplyDelete//இப்போ திடீர்னு ஆஃபீஸும் பறிபோய் சட்டசபை சீட்டும் காலியாகி வீட்டுக்குப் போய் தூசிதட்டுற சூழ்நிலையில யாராவது இவங்க வீட்டைக் கூட்டிப்பெருக்க "துடைப்பத்தை" தூக்கிட்டுவந்து சுத்தம் செய்ய வந்தா இந்தம்மா மனசு என்ன பாடுபடும்.... //
ReplyDeleteகுறியீடுகளில் பின்றீங்க ப்ரோ :-)
உண்ணாவிரத ஷோ டைம்ல ஆம் ஆத்மி கட்சியில பிஸியாகிப் போனதுல தாத்தா உண்ணாவிரதம் கிட்டத்தட்ட நம்ம "இரண்டாம் உலகம்" படம் ஓடின தியேட்டர் மாதிரி ஆகிட்டதா கேள்வி// :-))))))))))
ReplyDelete