Friday, January 02, 2015

வெல்கம் 2015!!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....




புத்துணர்ச்சி தரும் எந்தவொரு துவக்கமும் மகிழ்ச்சியான தருணங்களே!

பளபளக்கும் புது காலண்டர்கள்.. மொத்த பக்கங்களும் நம் பதிவுகளுக்காகக் காத்திருக்கும் குண்டு டைரிகள்..... அத்தனை நாட்கள் நம்மை பாதித்துவந்த செய்திகள் யாவும் ஓரங்கட்டப்பட்டு திடீரென்று கடந்து வந்த பாதைகளாகச் சென்ற 12 மாதத்தின் அலசல்கள்..... ப்ரச்னைகளுக்கு சடன் ப்ரேக் போட்டுக்கொண்ட கொண்டாட்டங்கள்..... என நம் உலகில்  புத்தாண்டு என்பது ஒவ்வொரு தனிமனித மனத்தையும் மிக எளிதாக புத்துணர்வுடன் சிலிர்க்கவைத்துவிடுகிறது!

தனிமனித வாழ்க்கையாகட்டும் பொதுவாழ்க்கையாகட்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்வுக்கென்று ஒரு பாதை அதன்வழியே மட்டும் பயணம் என்பதுதான் நியதி..... ஜன்னலோர வேடிக்கைகளாக அல்லது எதிர்ப்படும் காட்சிகளாகத்தான் அடுத்த மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களைப் பார்க்கவோ சில நேரங்களில் பகிரவோ வாய்ப்பு கிடைக்கின்றது...... நண்பர்கள், பகைவர்கள், நீண்டகால உறவுகள், குறுகியகால உடன்பாட்டுடன் ஒட்டுறவாடும் தோழமைகள்..... என சக பயணிகள் பலவகைப்பட்டாலும் ஒரு நாளை முடித்து மறுநாளைத் துவங்கும்போது நம்மில் பெரும்பாலானோருக்கு வாழ்க்கை என்னவோ மாற்றங்கள் இல்லாத அன்றாடமாகவே இருக்கின்றது!

என்றோ நடக்கப்போகும் தாக்குதலுக்காக எங்கெங்கோ விழிப்புடன் இயங்கும் போலீஸுக்கும்......  என்று தாக்கப்போகிறோம் என்று தெரிந்துவைத்துக்கொண்டு அன்று வரை சந்தேகமின்றி சாதாரணமாக உலவும் தீவிரவாதிக்கும் ஜனவரி 1 நடு நிசி 12 மணி என்பது இன்னுமொரு நாள்.... இன்னுமொரு நிமிடம் மட்டுமே! ஆக புத்தாண்டு பிறந்த நொடியில், நிமிடத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்போர் பாக்கியசாலிகளே! அந்தவொரு ஸ்பெஷல்  நிமிடத்தில் எங்கோ தொலைதூரத்திலிருந்தோ அல்லது நம்வீட்டின் இன்னொரு அறையிலிருந்தோ ஒரு வாழ்த்துச் செய்தியைப் பெற்றிருப்போமேயானால் வாழ்வின் ஸ்பெஷலான தருணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள சகபயணிகள் இருக்கிறார்கள் என்றே அர்த்தம்.... அது தரும் மகிழ்வும் அலாதிதான்........

"இன்று புதிதாய்ப் பிறந்தேன்" எனும் அழகான மன நிலைப்பாட்டை எல்லா நாளும் அடைவது சாதாரணர்களுக்கு அத்தனை சாத்தியமில்லை ....... அந்த வகையில் சாமானியனும் தன் பயணத்தைப் புதிதாகத் திட்டங்களுடனும் மறு சீரமைப்புடனும் ரீஸ்டார்ட் செய்ய எத்தணிக்கும் இந்த புத்தாண்டுக்கு நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

மகிழ்ச்சியாகவே 2015-ஐத் துவங்கியிருக்கிறோம்..... அதேவேளையில் மன நிறைவுடன் 2014-க்கு விடைகொடுத்திருக்கிறோமா?! என்று எண்ணிப்பார்த்தால் இந்தப் புத்தாண்டு துவக்கத்திற்குப் புது அர்த்தங்களும் கிடைக்கும்....... இந்த சந்தோஷப் புத்தாண்டு அடுத்த டிசம்பர் 31-ல் நிறைவான நிம்மதியான ஆண்டாகவும் இருக்க பிரார்த்தனைகளும்.... முனைப்புகளும். முயற்சிகளும் சிறக்கட்டும்.....

Wish you all a Very Happy New Year 2015!!!!

அன்புடன்,
பிரபு எம்










No comments:

Post a Comment

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)