இந்தப் பதிவை ஆட்டம் நடந்த மறுநாளே பதிந்திருக்க வேண்டியது சிலபல காரணங்களால் முடியாமல் போய்விட்டது.... தாமதத்திற்கு மன்னிச்சூ!
முதல்சீனிலேயே க்ளைமேக்ஸ் ரேஞ்சுக்குப் பரபர காட்சி வைக்கப்படும் ஜேம்ஸ்பாண்ட் படம் போல அமைந்துவிட்டது இந்த உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவுக்கு! முதல் போட்டியே பாகிஸ்தானுடன் என்ற நிலையில் வீரர்களைவிட ரசிகர்கள் அதிகமான பதற்றத்துடன் இருந்துவந்தனர்..... முடிவு நல்லவிதமாக வந்தவகையில்தான் எத்தனை நிம்மதி... நேற்றைய போட்டியின் ரிசல்ட் ஒரு "வெற்றி"யின் மகத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது...! முழுமையான திருப்தி கொடுத்த ஆட்டத்தில் இந்திய அணியின் கூட்டு செயல்பாடு மிகவும் செழுமையாக இருந்தவிதத்தில் தேசமெங்கும் நம்பிக்கை விதைகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளதும் நிஜம்....!
நேற்றைய ஆட்டத்தின் முன்பான இந்திய மனநிலையில் இத்தனை நம்பிக்கை இருந்திருக்கவில்லை என்பதே உண்மை! காரணம் மிகவும் அதிகப்படியான அழுத்தங்கள் படிந்திருந்தன கேப்டன் தோனியின் மீது....... யுவ்ராஜ் சிங் உட்பட சீனியர் வீரர்கள் யாவரும் முற்றிலுமாக தேசிய அணியைவிட்டு ஒதுக்கப்பட்டது மட்டுமன்றி அவ்வாறு நீக்கப்பட்ட அனுபவ வீரர்களுக்கு மாற்றுத் தேர்வுகளான அம்பத்தி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, அக்ஸர் படேல் போன்ற இளம்வீரர்களுக்கும் உலகக்கோப்பை விளையாடுமளவு அனுபவம் சுத்தமாக வாய்த்திருக்கவில்லை அதிலும் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆடும் பக்குவம் பெற்றிருக்க இந்திய இளம் வீரர்களுக்கு அத்தனை எளிதான சாத்தியமுமல்ல! இதுவரையிலான உலகக்கோப்பை இந்திய அணிகள் களத்தில் முன்பின் இருந்திருந்தாலும் காகிதத்தில் மிகவும் வலுவான அணிகளாகவே இருந்துள்ளன.... இந்த உலகக்கோப்பை இந்திய அணிதான் இதற்கும் விதிவிலக்காக அமைந்துவிட்டது! பேப்பரில் பெயர்களைப் பார்த்தபோது எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் திருப்தியோ நம்பிக்கையோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாததொரு அணித்தேர்வு இம்முறை! இவை அனைத்திற்கும் பொறுப்பாளராக எண்ணற்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தது எப்போதும் போல தேர்வுக்குழு அல்ல மாறாக கேப்டன் தோனி! ஆக.... தொடர் தோல்விகள், புதுமைகள் இல்லாத சோர்வான கேப்டன்சி, சீனியர் வீரர்களின் புறக்கணிப்பு என ஏகப்பட்ட விமர்சனங்களுடன் மிக அதிகமான அழுத்தத்துடனும் உலகக்கோப்பையில் களமிறங்கினார் எம்.எஸ் தோனி! இருந்தாலும் ஃபர்ஸ்ட் லுக்கில் மிக யதார்த்தமான உடல்மொழியை தோனி வெளிப்படுத்திய விதத்திலேயே அவரது தனிப்பட்ட ரசிகர்களுக்கு நேற்று நம்பிக்கை பிறந்திருக்கும்!
பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டும் என்ற உணர்ச்சிப்பூர்வமான இலக்கு முதல்போட்டியிலேயே do or die போன்றதொரு நாக்-அவுட் சூழலை உருவாக்கிவிட்டது அதைவிட அதிகப்படியான அழுத்தம் பாகிஸ்தான் மீது திணிக்கப்பட்டிருந்ததும் நிதர்சனம்! பற்றாக்குறைக்கு அந்த "மோக்கா மோக்கா" டிவி விளம்பரம் வேறு! இரு அணிகளின் மீதான அளப்பெரிய அழுத்தம் திணிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் எந்த அணி அதனை சிறப்பாக எதிர்கொள்கிறதோ அதில்தான் இருந்தது வெற்றியின் சூட்சமம்!
கேப்டன் கூல்:
தோனியும் சரி மிஸ்பாவும் சரி இருவருமே நிதானத்தில் தேர்ந்தவர்கள்...... ஆனால் தோனியின் ஆளுமையில் அவர் தனது கூல் ஆட்டிட்யூடை அணிவீரர்களுக்கும் கடத்திவிடுவார் அங்குதான் சொதப்பிவிட்டார் மிஸ்பா.... தான் மட்டும் கூலாக களத்தில் நின்றுவிட்டால் வெற்றிக்குப் போதாது என்பதைத் தான் அவர் உணர்ந்து செயலாற்றவேண்டும் அடுத்த போட்டிகளில்! டாஸில் வென்று சென்டிமென்டலாக பேட்டிங்கைத் தேர்வு செய்தபோது க்ளீன் ஷேவில் அத்தனை புத்துணர்வு தெரித்தது தோனியிடம்.... முந்தைய தொடரின் தோல்விகளையெல்லாம் அவர் முற்றும் மறந்திருந்த துள்ளல் உடல்மொழி தந்த நம்பிக்கையே அலாதியாக இருந்தது! இந்தப் போட்டியில் நான் தோனீயிடம் ரசித்த விஷயங்கள்......
1) வெற்றிக்கென அமைத்த வியூகங்களை மிகவும் எளிமையானதாக அமைத்துக்கொண்ட விவேகம்.
2) களத் தடுப்பில் மிக வெளிப்படையான அணுகுமுறையால் அத்தனை பெரிய மைதானத்தில் மொத்த அணியையும் தெளிவான புரிதலுடன் இயக்கிய விதம்.
3) சுறுசுறுப்பான ஃபீல்டிங் வியூகங்கள்.... வேகவேகமாக தோனியால் நேற்று ஃபீல்டிங் அமைப்பினை மாற்ற முடிந்தது மிகச் சிறப்பான ஆளுமை.... பாக். பேட்ஸ்மேன்கள் செட்டிலாவதற்குக் கடும் சவாலாக இருந்தது தோனியின் இந்த அணுகுமுறை
ஒரேயொரு நெகடிவ் அம்சம் என்னவென்றால்...... துவக்க ஓவர்களில் தடுமாறிய வேகப்பந்துவீச்சாளர் முகம்மது ஷமியை விக்கெட் கீப்பிங் பொஸிஷனில் இருந்து தோனியால் பேக்-அப் செய்ய முடியவில்லை.... பொதுவாக இதுபோன்ற வேளைகளில் ஜாகிர்கான் தலைமைப் பண்புடன் செயலாற்றுவார் பவுலர் தடுமாறும்போது தானே முன்வந்து சில டிப்ஸ் வழங்கி லைனை முறைப்படுத்துவார் ஆனால் பவுலிங் டிபார்ட்மென்டில் "ஸ்பியர்ஹெட்" இல்லாத சூழ்நிலையில் கேப்டன் தோனிதான் இதனை வரைமுறைப் படுத்தியாக வேண்டும் ஒருவேளை பாகிஸ்தானின் துவக்கவீரர்கள் சொதப்பாமல் எடுத்த எடுப்பிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை மோசமாகிப்போயிருக்கும்!
இன்றியமையாத நிலையில் ஷிகார் தவான் கண்டிருக்கும் கம்-பேக்:
ஷிகார் தவானின் ஆட்டம் நேற்று வயிற்றில் பீரை வார்த்தது! ஸ்கோர் செய்வதைவிட அடுகளத்தில் நிலைத்து ஆடுவதே மிகவும் முக்கியம் என்று எக்ஸ்பர்ட்கள் அறிவுறுத்துவார்கள் அவுட் ஆஃப் ஃபார்ம் பேட்ஸ்மேன்களை.... தொடர்ந்து சொதப்பிவந்த தவான் நேற்று சரியான டச்-சில் இருந்தார்..... ஸ்கொயர் கட் ஷார்ட்களை அவர் கனெக்ட் செய்த விதம் நம்பிக்கையை வாரி வழங்குவதாய் அமைந்திருந்தது..... வெற்றிகரமான 2003 மற்றும் 2011 உலகக்கோப்பைத் தொடர்களில் சச்சின்-சேவாக் இணைந்து கொடுத்த துவக்க நிலையை இப்பொழுது ஏற்றிருப்பது ரோஹித் ஷர்மா - ஷிகார் தவான் இணை என்று நினைத்துப்பார்க்கையில் இவர்களின் பொறுப்பு புரியும் இவ்வகையில் தவான் தனது இயல்பான ஆட்டத்தை முதல் பவர்ப்ளேயில் சிறப்பாக வெளிப்படுத்துவது அத்தியாவசியம்! முதல்போட்டியில் தவான் வெளிப்படுத்திய ஃபார்ம் தொடர்கையில் பெரிய வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்துத்தர அவரால் முடியும்.... நம்பிக்கையுடம் காத்திருப்போம் குடுமி வாலாவின் சாகசங்களுக்காக!
கோலி மேஜிக்:
கோலியின் பேட்டிங் திறமை உலகம் அறிந்தது..... சச்சின் டெண்டுல்கரின் இடத்தை விராட் கோலியை வைத்துதான் இந்தியா நிரப்புவதாக ரமீஸ் ராஜா நேற்று வெளிப்படையாகவே கோலியிடம் சொல்ல விராட்டுக்கு வாயெல்லாம் ஒரே புன்னகை... நிற்க.. பேட்டை சுழற்றுவதில் கோலியின் இயற்கையான திறமையும் சர்வதேச அளவில் விளையாட ஆரம்பித்தபின் தனது ஃபார்மை இவ்வளவு வலுவாக நிறுவியிருக்கும் கோலியின் அர்ப்பணிப்பையும் யாரும் சந்தேகிக்கப்போவதில்லைதான் ஆனாலும் கன்ஸிஸ்டன்ஸிதான் சச்சினைத் தொடர்ந்து உலகக்கோப்பை நாயகனாக நிலைநிறுத்தியிருந்தது என்பதை கோலி உணர்ந்து செயலாற்ற வேண்டும்.. நேற்றைய போட்டியில் கோலியின் பாஸிடிவ் பேட்டிங் கண்களைக் கவரும் விதமாக இருந்தது...... சுழல்பந்துவீச்சை அழகாக ஆன்டிஸிபேட் செய்து அட்டகாசமாய் ஆடினார்.... அதீத தற்காப்புடன் அவர் ஆடிய பெரிய ஷாட்களை ரசித்தபோதும் பொறுமையிழக்காமல் தொடர்முழுக்க ஆடவேண்டுமே என்கிற பயமும் மிரட்டிக்கொண்டேதான் இருக்கிறது!
ரெய்னா:
என்னைப் பொறுத்தவரை இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரெய்னா தான்! அதிரடியானாலும் நிலைத்து ஆடவேண்டுமென்றாலும் நிலைமைக்கு ஏற்ப தன்னை செயல்படுத்தும் திறமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட டீம் ப்ளேயர்..... கடந்த உலகக்கோப்பையில் யுவ்ராஜ் சிங்கின் இடத்தை நிரப்பும் பொறுப்பு ரெய்னாவிடம்தான் இருக்கிறது..... ரெய்னாவின் பழகிய பிரச்னைகளான ஸ்லோ பவுன்சர் பந்துகள் மற்றும் க்விக் ரன் அவுட்கள் போன்றவற்றைச் சரியாக அணுகும்பட்சத்தில் ரெய்னாவால் இந்தியாவுக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றூத்தர முடியும்!
அஷ்வினின் மெய்டன்கள்:
நேற்று அஷ்வினின் பவுலிங் சார்ட்டை வெறுமனே பார்த்தால்... 8 ஓவர்களில் 41-1 என்று 5.13 எகானமி ரேட்டில் சர்வ சாதாரணமாகத்தான் தெரியும் ஆனால் அஷ்வின் வீசிய மூன்று மெய்டன் ஓவர்கள் ஆட்டத்தில் இந்தியாவை வெற்றிபெற வைத்தது என்பதே நிஜம்! அவர் வீசிய மெய்டன்களின் கணக்கிற்கு அஷ்வினின் பிந்தைய ஓவர்களில் மிஸ்பா பவுண்டரிகளை விளாசி சரிக்கட்டிவிட்டார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கதறினாலும்.... அந்த மெய்டன் ஓவர்கள் சேஸிங்கில் பாகிஸ்தான் மீது திணித்த கூடுதல் அழுத்தமே தொடர்ந்த விக்கெட்டுகளுக்குக் காரணம்.... என்னைப்பொறுத்தவரை நேற்றைய மேன் ஆஃப் தி மேட்ச் மூன்று மெய்டன்களுக்காக ரவிச்சந்திரன் அஷ்வின்தான்!
உமேஷ் யாதவ் - மோஹித் மற்றும் ஷமி:
இதே பாகிஸ்தானுக்கு எதிரான 2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியின் முடிவில் தோனி சொன்னார், "எங்களிடம் அச்சுருத்தும் வேகம் இல்லை, திணறடிக்கும் ஸ்விங் பவுலிங்கும் இல்லை அதனால் நாங்கள் தேர்ந்துகொண்ட ஆயுதம் "டிசப்ஷன்" என்று! அதாவது லைன், லெங்த் மற்றும் பேஸ் களில் வேரியேஷன் மூலமாக பேட்ஸ்மேன்களை ஏமாற்றித்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினோம்" என்று! நான்கு வருட இடைவெளியில், அப்போதைய வேகப்பந்துவீச்சாளர்களான ஜாஹிர்,முனாஃப், நெஹ்ரா மூவருமே இப்போது அணியில் இல்லை..... ஆனாலும் அவர்களின் மாற்று வீரர்களான உமேஷ்-மோஷித்-மொஹமத் ஷமி யைப் பார்க்கும்போது இவர்களிடம் மட்டும் வேகமோ, ஸிவிங்கோ இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் வரும் என்று எல்லாருக்கும் தெரியும்.... உமேஷ் தொடர்ந்து 140 kmph க்கு மேல் வீசுகிறார்தான் என்றாலும் கண்ட்ரோலில் அவ்வளவு போதிய ஆளுமையில்லாததால் அச்சுருத்த முடியவில்லை! மேலும் இவர்களிடம் அனுபவமும் இல்லை.....! நேற்றைய போட்டியில் இவர்களின் செயல்பாடு ஓரளவு நன்றாக இருந்தது ஆனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளுடன் இவர்களது பவுலிங் எடுபடவேண்டும் என்பது பெரும் சவால்!
மேலே குறிப்பிட்டதைப் போல ஜாஹிர்கான் இல்லாத நிலையில் தோனி இந்த பவுலர்களை நெருக்கடி நேரங்களில் பேக் செய்ய வேண்டும்.... முஹம்மத் ஷமி தான் இழந்த ஃபார்மை மீட்டெடுப்பது அடுத்த போட்டியிலேயே கட்டாயம்!
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஸ்கில்களை விட "இந்தியா-பாகிஸ்தான்" என்னும் அழுத்தத்தைக் கையாளும் விதத்தில்தான் வெற்றி-தோல்வி இருந்தது அந்த வகையில் வெற்றி தோனிக்குத்தான்..... பேட்டிங் சிறப்பாக அமைந்ததில் அதிகமான நம்பிக்கை மேலோங்கியிருக்கின்றது..... ஃபீல்டிங் அற்புதமாக இருந்தது மிக நல்ல விஷயம்.... தோனி இதே துடிப்புடன் தொடர்ந்து அணியை வழி நடத்தும்போது ஏதாவது அதிசியத்தை எதிர்பார்க்கலாம் இந்தியாவிடமிருந்து! ஆனால் கடைசி ஓவர்களில் சரிந்து விழும் மிடில்-ஆர்டரும், பந்துவீச்சு பலவீனமும் இப்போதும் தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டேதான் வருகிறது என்பதையும் மறக்கமுடியவில்லை... வழக்கம்போல் நேற்றைய போட்டியிலும் 20-30 ரன்கள் குறைவாகத்தான் நாம் ஸ்கோர் செய்திருந்தோம் என்பது கண்கூடு! இருந்தாலும் இந்த ஒரு வெற்றி பலவிதங்களில் சிறப்பானது...... நம்பிக்கை தந்த வீரர்களுக்கு நாம் தட்டும் ஒவ்வொரு கைத்தட்டலும் அவர்களது வெற்றிக்கு வாழ்த்தாய் தோள்களில் தட்டிக்கொடுக்கும்!
காத்திருப்போம்...... தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியில் சந்திப்போம்.....
Pictures Courtesy: Espncrcinfo.com
அன்புடன்
பிரபு எம்






பாப்போம்....அடுத்த டெஸ்டில் ....
ReplyDeleteமலர்