இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்!
என்று கமல்ஹாசன் தெளிவாக அறிவித்தபின், தன்னிலையைச் சரியாக அவர் செதுக்குவதிலும், கூர் தீட்டுவதிலும் கவனம் காட்டிவருகிறார்.... நாம் நம்முடைய நிலையில் நமக்கான எல்லைகளில் என்ன செய்வதென்ற தெளிவு கொள்ள முற்படுவோம்.....
இப்பொழுது நம்முன்னே இருப்பது அரசியலுக்கு வந்துவிட்ட, தனிக்கட்சி துவங்க அரசியல் சூழ்நிலைகளையும் மக்களின் மனநிலைகளையும் ஆராய்ந்து வரும் கமல்ஹாசன்!
இன்றைய சூழ்நிலையில் கமல்ஹாசனின் முன் இருக்கின்ற கடுமையான சவால்களை எல்லாம் எதிர்கொண்டு வெற்றிகண்டு முதலமைச்சர் பொறுப்பு (பதவி அல்ல) என்னும் “முள்கிரீடம்” சூடுவது என்பது அத்தனை சாதாரணமான காரியம் அல்ல என்பதை அவரே அறிந்திருக்கிறார்... தனக்கான கொள்கைகளை, திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்.... நம்மளவில் நாம் நம் நிலைப்பாடுகளை வகுத்துக்கொண்டிருக்கிறோமா? மினிதொடரின் இறுதிப்பாகம் இதுவே - ஆயுதம் அறிதல்.
”கமல்ஹாசன் வேண்டுமானால் வெற்றிபெறலாம் ஆனால் மீதமுள்ள 233 தொகுதிகளுக்கு அவர் நிறுத்தப்போகும் வேட்பாளர்களால் வெல்ல முடியுமா? முதலில் அத்தனை வேட்பாளர்களை அவரால் அடையாளம் காட்ட முடியுமா?” இதுபோன்ற கேள்விகளைத்தான் பலரும் முன்வைக்கின்றனர்.... இது போன்ற வாதங்களைக் கிழட்டுத்தனமானக் கோழைவாதங்களாகவே பார்க்கிறேன்..... காரணம் தனிக்கட்சி ஆரம்பித்து ஒரு மனிதர் தேர்தலை எதிர்க்கொள்ளப்போகிறேன் என்று அறிவித்தாலே அதற்கு 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிக்காக உழைக்கப் போகிறேன் என்றுதானே அர்த்தம்?! அதில் வேட்பாளரை நிறுத்துவதும், வெற்றி பெற உழைப்பதும் அவருடைய பிரச்னை.... முழுக்க முழுக்க அவரின் நேரம்... அவரின் உழைப்பு.... அவரின் முனைப்பு.... அவரின் வியூகம்..... எல்லாம் முடித்து தேர்தல் வந்தபின்பு அத்தனை தயாரிப்புகளும் முற்றுப்பெறப் போவது நமது இறுதி மதிப்பீட்டில் தானே!.... நம் முடிவுதான் நம்மை ஆளப்போகிறது... இதற்குமுன்பாக எதற்கு இந்த வேண்டாத ஆரூடம் நமக்கு? வெற்று ஆரூடங்கள் தள்ளாமையின் அடையாளம்... இளமைக்கு அழகல்ல....!
இங்குதான் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களாகிய நாமும் வேட்பாளர்களாகிய கமல் போன்றோரும் மாற்றத்தை நோக்கிய அவரவர் பாதைகளை முதலில் அறுதியிட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது....
சென்ற பாகத்தில் குறிப்பிட்டதுபோல தமிழகத்தின் அடுத்த தலைமுறைத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான தேர்வுக்களத்தில், வாக்குரிமை பெற்றத் தலைமுறையினராக நாம் இருக்கின்றோம்... நமது ஆகப்பெரிய பொறுப்பை ஆற்றுவதில் நம் அதிகபட்ச ஆயுதம் எதுவென முதலில் நாம் தேர்ந்துகொள்ள வேண்டும்.... ஜனநாயகம் அனுமதிக்கும் போராட்ட வடிவங்களில் பதாகைகளைத் தாங்கிக் களம் காணும் வலிமை கொண்ட அறவழி வீரர்கள் நம்மிடையே உண்டு. அவர்களுக்கு அகிம்சையெனும் ஆயுதமும் தொன்றுதொட்டு உண்டு அதை அவர்கள் அறிவார்ந்து கையாள வேண்டும். களமிறங்கிப் போராட வாய்ப்பில்லாதவர்களுக்கும் இறுதி ஆயுதம் ஒன்று உண்டு அதுவே ஆட்காட்டிவிரல் நம்மை ஆளப்போகும் ஆளைக் காட்டும் வாக்குரிமை ஆயுதம்!
ரோடுகளில் இருக்கும் மேடு பள்ளங்களுக்கு வளைந்துகொடுத்து, தெருவிளக்கு இல்லாத இருளுக்கு ஈடுகொடுத்து, உயிர்காத்து பயணிக்கும்போது, அடாவடியாக வழிமறித்து ஒரிஜினல் உரிமத்தைக் கேட்கும்போது நரம்புகளில் எழுகின்ற கோப அழுத்தங்களை சேமிப்போம்..... நாளும் பொழுதும் கண்விழித்துப் படித்துக் கனவுகளோடு கண்ணசந்த வேளையில் ’நீட்’டை இறக்கி இளந்தளிரைக் கண்மூடச்செய்த கயமை கண்டெழுந்த ரௌத்திரத்தை வடிந்திடாது பாதுகாப்போம்..... தலைவணங்கா தமிழினத்தை, இடுப்பெலும்பு வளைந்த ஈனகும்பல், அடக்குமுறை ஆணவக்கூட்டத்திடம் அடகுவைத்த ஒவ்வொரு கணத்தையும் கண்களில் பொருத்திக்கொண்டே தினம் கண்துயில்வோம்..... எத்தனை நாள் ஒத்திவைத்தாலும் தேர்தல் என்று ஒன்று வந்தே தீரும்..... அன்று காட்டுவோம் நம் ஆயுதபலத்தை.... ஆட்காட்டிவிரல் நுனியில்....!
அதுவரையில் நமக்கிருக்கும் அதிமுக்கியப் பணிகள்.....
ஒன்று எதிரிகளை ஒருமைப்படுத்துவது......
இரண்டு நம்மில் இருக்கும் பலமான ஆளுமைகளை ஒருங்கிணைப்பது.....
ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கும் நாளில் தான் வீழ்த்தப்போகும் முக்கிய எதிரியை இப்போதே இறுதிசெய்வோம்..... எவ்விதக் குழப்பமுமின்றி தெளிவுற நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது யாரை எதிர்த்து நாம் வாக்களிக்கப்போகிறோம் என்பதைத்தான் அந்தத் தெளிவுதான் யாருக்கு நம் வோட்டு என்ற தெளிந்த தேர்வை நோக்கி நம்மை வழிநடத்தும்..
அதைவிட முக்கியம் இப்போதைய மாற்றத்துக்கான ஆளுமைகளை ஒருமுகப்படுத்துவது! கமல்ஹாசனை மட்டும் இங்கே குறிப்பிடவில்லை.... என்போன்றோர் கமலை நம்புகிறோம்...... சிலர் திருமுருகன் காந்தி போன்றோரை உற்று நோக்குகிறார்கள்..... கரு.பழனியப்பனைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.... இன்னும் பலவிதமான முயற்சிகளை அறம்சார்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள் ஆனால் இவர்களுக்குள் நட்பு தேவையில்லை என்றாலும் பொதுவான எதிரியை வைத்துக்கொள்ளலாமே!
இவர்கள் ஒருவரையொருவர் நகங்களால் கீறீக்கொள்வதைத் தவிர்த்து ஆளும் சோம்பேறிகளுக்கு எதிராக முதலில் திரளலாமே! எதிரிகளை எழமுடியாத அளவு வீழ்த்தும்வரை ஒன்றாக செயல்படக்கூட வேண்டாம் ஒற்றை இலக்கை நோக்கி மாத்திரம் அவரவர் திசைகளிலிருந்தே அம்புகள் எய்யலாமே, அவர்களுக்குள்ளே கிழித்துக்கொள்ளாமல்! அயோக்கியனெல்லாம் ஒரே அணியில் இருக்கும்போது அம்புகளை ஒரே திசையில் குறிவைக்காமல் இன்னும் யாருடைய வில் வலியது என்று பட்டிமன்றம் எதற்கு என்பதுதான் புரியவில்லை! ஆதரவாளர்களாவது இதைப் பின்பற்றுவோமே..... கயவர்களை வீழ்த்தியபின்னர் உரிமைக்குப் போர் புரிதல் வீரருக்கு அழகு!
சென்ற பாகத்தின் முடிவில் அணுகியிருந்த கேள்வி-பதில்களில் திமுகவுடன் இணங்கித்தான் கமல் வருகிறாரா என்னும் சந்தேகத்துக்குச் சரியான பதில் சொல்லவில்லை என்று என் நண்பன் முகநூலில் குறிப்பிட்டிருந்தான் அதற்கு என்னளவிலான விளக்கம்....
திமுக தான் அதிமுகவுக்கு வலுவான எதிர்முகாம், அவர்கள் கட்சியில் தான் இணையப் போவதில்லை என்று கமல் அறிவித்துவிட்டார்.... தனிக்கட்சி என்று அறிவித்துவிட்டாலே அது திமுகவுக்கும் சேர்த்துத்தான் பின்னடைவு ஏற்படுத்தும்... பின்னாளில் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்களைப் பற்றி கமல்ஹாசன்தான் முடிவெடுக்க முடியும் அதை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்காததும் அவரவர் முடிவு.... சூழ்நிலைகளையும் மனத்தடைகளையும் பொறுத்தது! பொதுவாகவே எதிர்க்கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்துக் கொள்வது என்னைப் பொறுத்தவரை குழப்பமான அணுகுமுறை! (இதைத்தான் விஜயகாந்த் தெளிவாக செய்தார்!) எனவே இப்போதைக்கு ஆள்கிறவர்களை மட்டுமே கமல் கடுமையாக எதிர்ப்பது சரியான அணுகுமுறையே! சிந்தாமல் சிதறாமல் அடித்தால்தான் தகுதியின்றி ஆளும் கூட்டத்தை தடமின்றி அகற்ற முடியும்!
தெளிந்த மனதோடு கமல்ஹாசன் கொடுக்கும் பேட்டிகளை, கேள்விகளை நிதானமாக எதிர்கொள்ளும் பாங்கினை, மீடியாவின் பிரேக்கிங் நியூஸ் பசிக்கு இரையாகிவிடாத லாவகத்தை, பதற்றமும் அவசரமும் இன்றி ஊடகங்களை சந்திக்கும் துணிவை, தடுமாறாத தமிழை இயல்பாக ரசிக்க முடிகிறது... நம்பகமான நகர்வுகள் மீது நம்பிக்கை கொள்ளத் தோன்றியவர்கள் நம்புகிறோம்! அதீத சந்தேகங்கள் யாவரின் மனதிலும் விரவிக் கிடக்கும் வேளையிது கமல்ஹாசன் போன்றோர் தங்களுடைய ஒவ்வொரு நகர்விலும் உச்சபட்ச கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கமல்ஹாசன் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளட்டும் நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்வோம் யார்மீது நம்பிக்கை வருகிறதோ அவர்களையே நம்புவோம்....! மீண்டும் அழுத்திக் கூற விழைகிறேன் “நம்புவோம்”.
இத்துடன் இந்த மினிதொடர் முற்றுப்பெறுகின்றது! தொடர்ந்து வாசித்து, மறுமொழி கொடுத்து, அலைபேசியில் விவாதித்து என்னுடன் பங்குகொண்ட அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..... மாற்றத்தை வேண்டும் ஒரு கெஞ்சலின் ஒரு பகுதிதான் இந்தத் தொடர்..... அதீத எதிர்பார்ப்புகளை ஏறக்கட்டிவிட்டு அத்தியாவசியங்களை நிலைநாட்டும் ஏதேனும் ஒரு நிலையான ஆளுமையின் மேல் நம்பிக்கையை விதைக்க இதுவே ஏற்ற நேரம் விதைக்கும் காலத்தில் விழிப்புடன் இருக்குமாறு நட்புடன் கெஞ்சுகிறேன்.... அறுவடை நேரத்தில் சந்திப்போம்..... நம்பிக்கையுடன்!
தொடர் முற்றும்.... ஆனால் தொடர்ந்து பேசுவோம்!
அன்புடன்,
பிரபு எம்.

மீண்டும் அழுத்திக் கூற விழைகிறேன் “நம்புவோம்”.
ReplyDeleteமினி தொடர் முடிந்தாலும் இது மனதில் ஏற்படுத்திய தாக்கம் தொடர்கிறது.......
நன்றி அண்ணா....
ReplyDelete