Thursday, October 05, 2017

ஓவியாவின் பிக்பாஸ்!

ஆரவ்வின் வெற்றியை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, பிக்பாஸ்ஸின் பிரம்மாண்ட வெற்றியைப் புறக்கணித்துவிட முடியவே முடியாது!



கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பு தொலைக்காட்சி நேயர்களையும், தொலைக்காட்சியே பார்க்காதவர்களையும் தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியின் முன்பு கரைஒதுங்க வைத்தது பிக்பாஸ் என்பது மிகையற்ற உண்மை!



வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறக்கிற, வளர்கிற மக்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம்,  என்று பல அடுக்குகளில் ஒரு குழுவாகப் பயில்கிற, பணியாற்றுகிற  சூழல் உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் நிலவுகிறது. அவ்வாறு வாழும்போது ஏற்படும் Groupism-ல் தொடங்கி அந்த Group களுக்குள் எழும் குட்டிக்குட்டி Racism  வரை, நாம் படும் இன்னல்கள் சொல்லி மாளாதவை! சட்டப்படி குற்றமில்லாத இந்தப் பிரச்னைகளை அதிகபட்சம் யாரிடமும் நாம் பகிர்ந்துகொள்வது கூட இல்லை அதைவிட மோசம், இதுபோன்ற பாதிப்புகளால் அன்றாட வாழ்வில் எக்கச்சக்கப் பிரச்னைகளுக்கு நாம் ஆளானாலும் நம்முடைய மனமே இவற்றையெல்லாம் வெகு விரைவில் மறந்துவிடும், ஆனால் இவற்றால் ஏற்படும் சேதங்கள் மட்டும் வாழ்வின் பல்வேறு பக்கங்களில் ஒட்டிக்கொண்டுவிடுவதுதான் அபாயம். அதேவேளையில் இத்தகைய வாழ்க்கை முறையில் சிலபல பிரத்யேகப் பண்புகளை வளர்த்துக்கொண்டு திறம்பட செயல்பட்டால்  நம்மளவில் நாமும் நட்சத்திரமாக ஜொலிக்கலாம் என்னும் பாஸிடிவ்வும் இதில் உண்டு என்பதை மறுக்க முடியாது! இவற்றையெல்லாம் முப்பது கேமராக்களால் அப்பட்டமாக வெளிக்கொணர்ந்த பிக்பாஸுடன் நாம் அழுத்தமாக ஒன்றியதில் ஆச்சர்யம் இல்லைதான்!

பரணி சுவர் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆக முயற்சிக்கும் காட்சிகளை ப்ரோமோவில் பார்த்ததில் இருந்து அன்றைய நாள் முதல் (இடையே ஜூலி அன் கோ மீண்டும் வீட்டிற்குள் வந்த சில எபிசோடுகள் நீங்கலாக) அனைத்து நாட்களுமே பிக்பாஸைத் தவறாமல் பார்த்தேன்... விரும்பித்தான் பார்த்தேன்.




இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தமட்டில் வெற்றியாளராக யார் வரவேண்டும் என்கிற பெரிய எதிர்பார்ப்பு எனக்கு ஆரம்பத்திலிருந்தே இல்லை, காரணம் இந்த விளையாட்டில் கலந்துகொள்ளும் போட்டியாளர் ஒரு பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவரின் முக்கியத் தகுதி ஏதோவொரு விதத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டு அவர் சார்ந்த துறையில் ஒரு “தோல்வியாளராக” இருக்கவேண்டும் என்பதுதான்.....! தன் துறையில் வெற்றிகரமாகக் கோலொச்சும் யாராவது 100 நாட்களுக்குத் தங்கள் பணியைத் துறந்து இப்படி டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியுமா என்ன?! ஆக நாம் ஏற்கெனவே நிராகரித்த நபர்களில் ஒருவரைத்தான் வாக்களித்துத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் அல்லது மீண்டும் நிராகரித்திருக்கிறோம்...  ஆனால் இது ஓவியாவுக்கு மட்டும் பொருந்தாது!



காரணம்.... ஓவியாவை ஒரு நடிகையாகத் தமிழ் சமூகம் எந்த நிலையிலும் கொண்டாடியதில்லை! அவரின் பாத்திரத்தேர்வு மற்றும் நடிப்புத் திறமையால் அவரை யாருக்குமே பிடிக்கவில்லை என்பதே உண்மை! ஆனால் பிக்பாஸில் ஓவியா தமிழர்களால் அனைத்துத் தளங்களிலும் கொண்டாடப்பட்டார், கொண்டாடப்படுகிறார்... ஆச்சர்யமாக இதற்குக் காரணம் அவரது அழகோ அல்லது உடைகளோ ஏன் திறமையோ கூட இல்லை! அவரது நேர்மையான வெளிப்பாடு அவருக்குக் கிடைத்த இந்த அபார வரவேற்புக்குக் காரணமாகியது மிகவும் நல்ல விஷயம்!   ”நேர்மை” என்பது  ஒரு quality கிடையாது அது ஒரு policy! "Honesty is the best policy" என்று நேரு குறிப்பிட்டிருக்கிறார்... “பாய்ஸ்” படத்தில் “ நேர்மைதான் வெற்றியின் ரகசியமே...” என்று ஒரு பாடல் கூட இருக்கும்.....  சரி “நேர்மை”க்குள் ஆழமாக செல்லவேண்டாம்..... ஓவியாவுக்கு வருவோம்....



ஓவியாவின் நேர்மை மிகவும் துணிச்சலானது அது என்னவென்றால் எப்போதும் தானாகவே இருப்பது! (being herself) அப்படியிருக்க மிகுந்த தைரியம் வேண்டும். ஏனென்றால்... தேவையற்ற விரோதங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் எப்போதும் நம்மை அதிகமாகச் சுற்றியிருக்கும் கோழைகள் மற்றும் சுயபுத்தி இல்லாதவர்களின் இனம் புரியாத கோபத்துக்கும் பகைக்கும் எளிதில் ஆளாக வேண்டியிருக்கும்... புரளிகளுக்கு இலக்காக வேண்டிவரும் இவற்றையெல்லாம் விட சில திடீர் நாட்டமைகளுக்கும் போலி ஒழுக்கசீலர்களுக்கும் பதில் சொல்லவேண்டிவரும்! இவையனைத்தும் ஓவியாவுக்கு நேர்ந்ததைப் பார்த்தோம்.... சிநேகன், ரைஸா போன்றவர்கள் இது போன்ற பிரச்னைகளுக்குப் பயந்துதான் பெரும்பாலான நேரங்களில் diplomaticகாக நடந்துகொண்டார்கள்... ஆனால் இவற்றை எதிர்கொண்டபோது ஓவியா தேர்ந்தெடுத்த straight forward approach  நிச்சியம் தோல்வியாளர்களின் ஆயுதம் அல்ல அது வெற்றியாளர்களுக்கு மட்டுமே திறம்பட அமையும் அணுகுமுறை! அந்த வகையில் ஓவியா நிச்சியம் இந்த  தோல்வியாளர் கூடாரத்திற்கு இடையே தனியாகத் தெரிந்தார் இதில் அதைவிட ஆரோக்கியமான விஷயம் என்றால் இதைத்தான் நம் மக்களும் ரசித்தார்கள்! கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் காயத்ரிக்கும் ஓவியாவுக்குமிடையே எந்த நேரடிப் பிரச்னையும் இல்லை! க்ளீனிங் டீமில் ஓவியா இருந்தபோது அவர் பங்குக்கு வேலை செய்துகொண்டுதான் இருந்தார்.... ஆனால் தேவையில்லாமல் நமிதா அவரை நாட்டாமை செய்ய முற்பட்டபோதுதான் பிரச்னை துவங்கியது! காயத்ரிக்குத் தேவையே இல்லாமல் ஓவியாவைப் பார்க்க பார்க்க வயிறெறிந்தது அதன் விளைவாகக் கண்றாவியாகப் பேசத் துவங்கி இன்றுவரை ட்விட்டரில்  நாறுகிறார்! சுயபுத்தி இல்லாத சக்தி செம டேமேஜ் ஆகிப்போய் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள் மக்கள்! ஜூலியின் ”குறும்பட”மோ ஓவியாவை ஒட்டுமொத்த பிக்பாஸுக்கும் ஹீரோயின் ஆக்கியது!



ஆனால் ஓவியா உண்மையாக இருந்தபோது அவரது கழுத்தை நெறித்த கும்பல்களின் முகமூடிகள் கிழிந்ததற்கு ஒற்றைக் காரணம் பிக்பாஸ் வீட்டின் கேமராக்களே! கேமராக்கள் இல்லாமல் நிஜ உலகில் உண்மையாக வாழும் ஓவியாக்களைக் காப்பாற்றக் கமலஹாசன்களோ அல்லது ஆர்மியோ நேவியோ இல்லாததுதான் சோகம்! பிக்பாஸ் வீடு அழகாய்த் தெரிந்தது ஓவியாவால்தான் ஓவியா அழகாய்த் தெரிந்தது அவர் யார்போலும் இல்லாமல் “ஓவியா”வாகவே இருந்ததுதான்! இப்போது அவரைக் கண்டால் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது... எந்தவொரு பிரபலமும் ஏங்குவதற்கு இந்தப் புகழுக்காகத்தான் ஆனால் இதற்கும் ஓவியாவிடம் பெரிய மாற்றம் தென்படவில்லை..... அதே ஓவியாவாகத்தான் தொடர்கிறார்! ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் உண்மையாக, நேர்மையாக இருந்து மக்களின் லைக்ஸை அள்ளியபோதும் “ஓவியா” என்னும் பிம்பம் இப்போது பயன்படுவது பெரிய முதலாளிகளின் விளம்பரப் பகட்டுகளுக்குத்தான். கொஞ்சம் பொறுப்புணர்வோடு செயல்பட்டால் இந்த “பிக்பாஸ் ஓவியா”வின் பயன்பாட்டை நல்ல வழிகளில் கொண்டு சேர்க்கலாம். இந்த பிம்பமும் வீணாய்ப்போகுமுன் இதனைச் சீரமைக்க யாராவது முன்வந்தால் நலம் இல்லாவிட்டால் கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்டயாகிப்போய் அந்த முட்டையும் கூமுட்டையாகித்தான் போகும்!

பிக்பாஸின் மற்ற போட்டியாளர்களைப் பற்றிய பகிர்வு.... நேரமிருந்தால் மட்டும் பார்க்கவும்!




ஆரவ் : இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வந்த முதல் நாளே தெளிவாகச் சொன்னார் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு ஒரு நல்ல ஓபனிங் கிடைக்கும் என்றுதான் இதில் பங்குபெறுகிறேன் என்று! வெற்றி பெறாவிட்டாலும் அந்த நோக்கம் அவருக்கு நிறைவேறியது நிஜம். மற்றபடி டைட்டிலுக்குத் தகுதியானவரா என்று பார்த்தால் கடைசி நான்கு போட்டியாளர்களில் “குறும்படம்” மூலம் அசிங்கப்பட்டவர் இவர் மட்டுமே! அதற்குமேலும் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றது ஆச்சர்யமாகத்தான் இருந்தது!



ஜூலி : ஏகப்பட்ட திட்டங்களுடன் தான் அம்மணி பிக்பாஸுக்கு வந்திருக்கிறார்.எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் ஆட்சி செய்யும் சமகால தமிழகத்தில் வெற்றிகரமாகப் பிழைப்பதற்கு ஜூலிக்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன காரணம் ஜூலிக்கு சுயமரியாதை சுத்தமாகக் கிடையாது!



கணேஷ் - இவரை ”உன்னைப் போல் ஒருவ”னில் கரடுமுரடான போலீஸ் அதிகாரி “ஆரிஃப்” என்கிற பாத்திரத்தில் பார்த்தபோது பிரமிக்கும் அளவு நடித்திருந்தார்! அதன்பிறகு ”அபியும் நானும்” முதல் “தனி ஒருவன்” வரை இவரது செயல்பாடுகளைப் பார்த்தபோது தமிழ் சினிமா வீணடிக்கப்போகும் இன்னொரு ரியாஸ்கான் இவர் என்றுதான் நினைத்தேன். தற்போது இவரது கரியருக்கு நிச்சியம் பிக்பாஸ் கை கொடுக்கும் என்றுதான் நினைக்கிறேன்... சொல்லப்போனால் கணேஷுக்கு ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருந்தது ஆனால் கடைசி கட்டத்தில் பாயிண்டுகள் விஷயத்தில் படு அல்பமாக செயல்பட்டது பலரையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது.... மேலும் கணேஷுக்கு ஓர் எண்டர்டெய்னராகத் (entertainer) தன்னை நிலை நிறுத்திக்கொள்ளத் தெரியவில்லை.... முப்பது கேமராக்கள் முன்னிலையில் மக்களை வசீகரிக்க முற்படாமல் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கும் ஸ்கூல் பையனைப் போலத்தான் முற்றிலும் நடந்துகொண்டார்! எது  எப்படியோ, இரண்டு/மூன்று வாரங்களுக்கு முன்பாக “துப்பறிவாளன்” படம் பார்த்தபோது மதுரையில் ஒரு தியேட்டரில் கணேஷ் நடித்த ஒரு விளம்பரம் திரையில் வந்தபோது ஜனங்கள் கைதட்டினார்கள்..... ஸோ.. மிஷன் சக்ஸஸ்தான் கணேஷுக்கு!



பரணி :  இவருக்கு நிச்சியம் பிக்பாஸ் சிறப்பானதொரு விசிட்டிங் கார்டுதான்! பெண்கள் விஷயத்தில் தவறாக நடந்துகொள்பவர் என்று இவர்மீது அபாண்டமான குற்றச்சாட்டு வைத்தவர்கள் எல்லாம் எந்தமாதிரியான பெண்கள் என்று ஷோவைப் பார்த்த அனைவருக்குமே எளிதில் புரிந்துபோன காரணத்தால் அந்தக் குற்றச்சாட்டே பரணிக்குப் பெரிய ப்ளஸ்பாயிண்டாகிப்போனது! தனது பணிவான நடத்தையின் மூலம் பரணியும் கிடைத்த நற்பெயரைக் கவனமாகக் கையாண்டு வருவது வரவேற்கத்தக்கது!



வையாபுரி :   வையாபுரி தான் இழந்த மார்க்கெட்டை மிகச் சிறப்பாக நிலை நிறுத்திக்கொள்வார் என்றுதான் நினைக்கிறேன். சொல்லப் போனால் பிக்பாஸ் விளையாட்டைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர் வையாபுரிதான்! ஆரம்பத்தில் ஹோம்சிக்னஸ் இவரை ரொம்பவே வாட்டியெடுத்தது ஒவ்வொரு திங்கட்கிழமையும் இவர் ரிமைண்ட்டர் வைத்து அழுததெல்லாம் ஒரு தரப்பினரால் கிண்டலுக்கு உள்ளானது என்றாலும், ஒட்டுமொத்தமாக வையாபுரியின் செயல்பாடுகள், confessionகள் அனைத்தையும் பார்வையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம்தான் இருந்தது. வயது காரணமான தொய்வைக் கமல்ஹாசன் குறிப்பிட்டுச் சொன்னபோதெல்லாம் அதை சிரமேற்கொண்டு செயல்படுத்திட முனைந்தவர் இவர் ஒருவர்தான் என்று நினைக்கிறேன். எந்தக் கட்டத்திலும் மக்களின் ஓட்டுகளைக் கவர்வதற்காக என்று எந்த அபத்ததையும் நிகழ்த்தாத ஒரே போட்டியாளரும் இவர்தான். அதேபோல தன்னுடைய character-ல் பெரிய மாற்றம் கண்ட வெளிப்படையான போட்டியாளரும் இவரே! ஆல் தி பெஸ்ட் மிஸ்டர், வாய்ப்புரி!





ரைசா வில்சன் : அட்டகாசமான மாடல் இவர். அறிமுக மேடையிலேயே இவர் நடந்து வந்த மிடுக்கில் catwalk அனுபவமும் தன்னுடைய பிம்பத்தைத் தன்னுடனே அனாயசமாக சுமக்கும் வித்தை தெரிந்தவர் என்று மிக எளிதில் விளங்கியது (Carrying herself -என்று சிம்பிளாக ஆங்கிலத்தில் சொல்லலாம்) பெங்களூரில் வாழும் மாடல் இவர் அவ்வளவுதான் ஆனால் பிக்பாஸ் வீட்டில் சிலசமயங்களில் இவர் ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த இளவரசி போல சீன் போட்ட சமயங்களில் எல்லாம் தமிழர்கள் வடிவேலு ஸ்டைலில் “கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்!” என்று டாட்டா காட்டிவிட்டார்கள் ஆனால் தான் செய்யும் அட்ராசிடிகளை எல்லாம் அந்த எரிச்சல் மூட் மாறிய உடனேயே, தன்மீதான தவறை ஓபனாக ஒத்துக் கொளவதும் மற்றவர்களுடனான அதிருப்திகளையும் எளிதில் மறந்து கடந்துவிடுவதும் ரைசா ஸ்பெஷல். நியாயமாக எவ்வளவு தூரம் பிக்பாஸில் இவர் இருந்திருக்கலாமோ அவ்வளவு நாட்களுக்கு மக்கள் இவரை அனுமதித்தார்கள் என்று சொல்லலாம்!



ஆர்த்தி : பிக்பாஸுக்கு முந்தைய அபிப்ராயம் இவர் மேல் ரொம்ப புத்திசாலி பொண்ணு என்றுதான் இருந்தது! ஆனால் attitude என்கிற ஒரு விஷயம் கண்டபடி சொதப்ப ஜூலிக்கு முன்பு அக்கா வெளியேற நேர்ந்தது பரிதாபம்.... மக்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகி வெளியேறினாலும் சற்றும் தொய்ந்து போகாமல் தைரியமாக அடுத்தடுத்துப் பொதுவெளியில் தோன்றி புத்திசாலித்தனமாகத் தன் மீதான நெகடிவ் இமேஜை மாற்றியது ஆர்த்தியின் திறமைதான்! பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய ரீ-எண்ட்ரியில் நன்றாக இவர் ஸ்கோர் செய்தார் என்றுதான் அந்த எபிசோடுகளைப் பார்த்தவர்கள் சொன்னார்கள்!



சிநேகன் :  “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...”
“ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள....”
“ஆராரிராரோ... தாயே நீ கண்ணுறங்கு....”
போன்ற சமகாலத்தின் கருத்து செறிவுள்ள தமிழ்த்திரைப்பாடல்களை எழுதிய கவிஞர் ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என்று நம்பிக்கையாக சொல்லுவார் என்றால் அவர் பெயர் சிநேகன்!
நான் பார்த்த வரையில் பச்சமண்ணாக இருக்கும் வெள்ளந்தி மனிதன் தான் இவர் ஆனால் ஏனோ இவர்மீது இவருக்கே இருக்கும் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையோ என்னவோ தெரியவில்லை தேவையே இல்லாமல் தன்னைத்தான் ஒரு கடினமான ஆசாமி போலக் காட்டிக்கொள்ள முனைந்து, காண்ட்ரவர்சிகளில் தலையைக் கொடுத்து, காமுகன் போல நடந்துகொண்டு ஆரம்பகட்டத்தில் ரொம்பவே இம்சையைக் கொடுத்தார் ஆனால் முகமூடிகள் இல்லாத இவரது முகம் சராசரியான ஒரு harmless மனிதராகத்தான் இருந்தது! இவர்மட்டும் தன்னுடைய சுயத்தை சேதப்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து இயங்கினால் இயல்பாக submissive ஆன மனிதராக இவரை எல்லாருக்கும் பிடிக்கத்தான் செய்யும் என்று நினைக்கிறேன்!



சுஜாவருணீ :  கடுமையான இவரது உழைப்பைக் கேனத்தனமான செயல்களால் இவரே கெடுத்துக்கொண்டார் இருந்தாலும் இப்போது சுஜாவை எல்லாருக்கும் தெரியும்! ஓடிப்போன இவருடைய அப்பாவையும் இப்போது எல்லாருக்கும் தெரியும்! :-))



பிந்துமாதவி / ஹரீஸ் : இவர்கள் இருவருமே பிக்பாஸ் வீட்டின் சாக்லேட் பேபீஸ்! தங்களது கரியருக்கு இந்த பிக்பாஸ் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட புத்திசாலிகள்! ஹரிஷ் பிக்பாஸ் வீட்டின் புஜ்ஜிம்மாவாக இருந்ததை எல்லாரும் ரசித்தது உண்மைதான் ஆனால் அந்த இமேஜ் ஹீரோவாக நடிக்கும்போது அவருக்குப் பிரச்னையாக இருக்குமா என்று தெரியவில்லை!



காஜல் :  எப்படி வந்தாரோ அப்படியே இருந்தார் எப்படி இருந்தாரோ அப்படியே கிளம்பியும் சென்றார்! பிக்பாஸ் வீடு காஜலைக் கடந்து சென்றது போலவேதான் பிக்பாஸ் அனுபவத்தையும் ஜஸ்ட் கடந்து போனார் காஜல்!



என்னைப் பொறுத்தவரை, இவர்களைத் தவிர பிக்பாஸ் முதல் சீஸனில் கலந்துகொண்ட எல்லாருமே ஏதோ கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டு கிடைத்த வாய்ப்பையும் கோட்டை விட்ட மண்டுகள் தான்! (ஸ்ரீ, அனுயா நீங்கலாக!)

இது பிக்பாஸ் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும்போதே எழுதி ட்ராஃப்டில் இருந்த பதிவு.... இதைப் பதிவிட ஆர்வம் இல்லாமல் போகவே அப்படியே விட்டுவிட்டேன்.... இப்போது பிக்பாஸ் முடிந்துவிட்ட வேளையில் பட்டி டிங்கரிங் பார்த்துப் பதிவிடுகிறேன்..... பிடிக்காதவர்களுக்கு ஸாரி!

அன்புடன்,
பிரபு எம்















2 comments:

  1. வாவ் !!ரொம்ப அழகா தெளிவா எழுதியிருக்கப்பா .
    நானும் ட்ரோல் வீடியோஸ் பார்க்க சும்மா ஆரம்பிச்சி பிக் பாசில் மூழ்கிட்டேன் :)
    நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை ..ஓவியா தனது சுயத்தை இழக்க கூடாது நம் சமூகம் அப்படியானது //கொக்கு இட்ட முட்ட கட்ட முட்டயாகிப்போய் அந்த முட்டையும் கூமுட்டையாகித்தான் போகும்!//

    people have accepted oviya as she is .. ஆனா மற்ற கண்டெஸ்டண்ட்ஸை அப்படி ஏத்துக்கறது ரொம்ப கடினம் .பொதுவாவே மனிஷங்களுக்கு தற்பெருமை பொறாமை ஹெட்வெயிட் பிடிக்காது ..
    தனது இருப்பை பாதுகாப்பை மட்டும் உறுதி செய்து கொண்டு safe கேம் ஆடிய பிந்துவெல்லாம் என்னை பொறுத்தவரை டோட்டல் வேஸ்ட் wrong role model ..அதான் இறுதி நாள் செலிப்ரேஷனலில் கூட அவர் பெரிதாக வரவேற்கப்படவில்லை என்பது எனது அனுமானம்

    எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஜெலஸ் : மற்றும் சந்தர்ப்பவாதம் ) அந்த ஜெலஸ் அங்கிருந்த சிலருக்கு இல்லாதிருந்தா நிச்சயம் ஓவியாவால் இவ்ளோ பிரபலமாகியிருக்க முடியாது :)



    அப்புறம் தம்பி ஓவியா ரசிகராயிட்டாப்ல இருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. Thank you akka.... :)

      //எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஜெலஸ் : மற்றும் சந்தர்ப்பவாதம் ) அந்த ஜெலஸ் அங்கிருந்த சிலருக்கு இல்லாதிருந்தா நிச்சயம் ஓவியாவால் இவ்ளோ பிரபலமாகியிருக்க முடியாது :)
      //

      This is the real point haha.. :-))

      ஓவியா தவிர எல்லாருமே செயற்கையாத்தான் நடந்துக்கிட்டாங்க.... சிலபேர் அட்லீஸ்ட் வெறுப்பு வந்திடாத மாதிரியாவது safe play பண்ணித் தப்பிச்சுக்கிட்டாங்க.... ஒருசில பேர் வந்ததுக்கு முதலுக்கே மோசமாகிப் போனதுதான் பரிதாபம்! Except Oviya all are losers only and there's nothing to take home from them for us.

      ஓவியாவை எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போனது உண்மைதான் அக்கா :-)))
      பிக்பாஸுக்கு முன்னாடி அவங்கள எனக்கு சுத்தமா பிடிக்காதுங்கறதும் உண்மை :-)

      Delete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)