ஒருபுறம் சிறைச்சாலை.... பரோல்....
மறுபுறம் மருத்துவமனை..... உறுப்புதானம்!
ஒரு கணவன்... ஒரு மனைவி... மற்றும் சில உறவினர்கள்...
இந்த விஷயத்தையொட்டி, நடந்த, நாமனைவரும் அறிந்த சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே இந்தப் பதிவு அதன்பிறகு ஒரு சின்ன சந்தேகம் அவ்வளவுதான்....
சிறைச்சாலைப் பின்னணியில் ஷாப்பிங் போன சர்ச்சை வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது.... "5 ஸ்டார் ஜெயில்" போன்ற விஷயங்கள் நமது மூளையின் ஞாபக அறைகளில் எந்த அடுக்கில் உள்ளது என்பதை ஒருமுறை சரிபார்த்துக்கொள்க:( லைட்டா மறந்தமாதிரி இருக்குல்ல??!!)
1) "பரோல் மறுக்கப்பட்டது" என்று ஒரு தலைப்புச் செய்தி தொடர்ந்து எல்லா சேனல்களிலும் இணையங்களிலும் அடுத்த நாள் செய்தித்தாள்களிலும் முறையே பிரேக்கிங் நியூஸ் மற்றும் தலைப்புச் செய்தி ஆனது!
உள்ளே வாசித்துப் பார்த்தால் மெடிக்கல் சர்டிஃபிகேட் இணைக்கப் படவில்லை என்று ஒரு காரணம் சிறைத்துறையில் இருந்து கொடுக்கப்படுகிறது! (இது என்ன பெரிய பிரச்னையா? வீக்கென்ட் (Weekend) முடிந்தவுடனேயே மருத்துவச் சான்றிதழை இணைத்து மீண்டும் விண்ணப்பத்தால் எளிதில் கிடைக்கப்போகிறது அவ்வளவுதானே! என்று தோன்றியது)
2 ) சிவப்புக் கட்சியில் இருப்பதாக சொல்லப்படும் ஒரு மூத்த தலைவர் "பரோல் மறுக்கப்படுவது மனிதாபமானமற்ற செயல்" என்று சம்பந்தமே இல்லாமல் கூவுகிறார்! இவரது நிறம் சிவப்புதான் ஆனால் கடந்த சில வருடங்களாகவே "இலை"யுடன் பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து குதப்பினால் மட்டுமே "சிவப்பு" தோன்றும் என்று உறுதியான நம்பிக்கையுடன் செயலாற்றும் கிழவராகத்தான் இவர் திகழ்கிறார்!
3) 'பரோல் கிடைப்பதில் மட்டுமல்ல, உறுப்புகள் கிடைப்பதிலும் பல்வேறு இடைஞ்சல்களை சந்தித்து வருகிறோம், இதையெல்லாம் யார் செய்கிறார்கள் ஏன் செய்கிறார்கள் என்பதற்குள் செல்லவில்லை ஆனால் இவை நல்லதல்ல' என்கிற ரீதியில் சம்பந்தப்பட்டவர்களின் முக்கிய உறவினர் ஒருவர் பேட்டி கொடுக்கிறார் அதுவும் பிரேக்கிங் நியூஸ் ஆகிறது!
4) உறுப்புகள் தானமாகக் கிடைக்கப்பெற்றதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன!
5) அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது.....
6) பரோல் கிடைக்கிறது..... 15 நாட்கள் கேட்கிறார்கள் 5 நாட்கள் மட்டும் கிடைக்கிறது ... நிபந்தனைகளுடன்.... (ஒரு நிபந்தனை என்னவென்றால் யாரையும் தன்னிடம் வரவழைத்து சந்திக்கக்கூடாது ஆனால் தானாக வரும் நபர்களை சந்திக்கலாம்! யாருக்காவது தெளிவாகப் புரிந்தால் தயவுசெய்து விளக்குங்கள்!)
7) பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.....
இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்... பொதுவாகவே ஒரு விஷயம் அடிக்கடி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது அது என்னவென்றால், பல்வேறு செய்திகளின் மூலம் "மக்களின் கவனத்தை திசை திருப்புவது" எனும் விஷயம்தான்! அதன் அடிப்படையில் எழுந்த சில சந்தேகங்கள் பின்வருமாறு:
1) பரோல் நிராகரிக்கப்பட்டது பிரதான தலைப்புச் செய்தியாக கொட்டெழுத்தில் வந்தது, செய்தியின் உள்ளே சிறிய எழுத்துகளில் அதற்கான உப்புசப்பற்ற காரணம் இருந்தது அதன்பிறகு பரோல் கிடைத்தபோதும் 15 நாட்கள் கேட்டதற்கு 5 நாட்கள்தான் கிடைத்திருக்கிறது மேலும் நிபந்தனைகள் என்று எல்லாமே மிகவும் முறைப்படி ஒரு கண்டிப்புடன் நடப்பதுபோல் தோன்றுகிறதா இல்லையா? இவ்வளவு கண்டிப்பு காட்டும் அண்டை மாநில சிறை நிர்வாகம் ஏன் பழைய "ஷாப்பிங்" சர்ச்சையை இன்னும் தெளிவாக ஆதாரப்பூர்வமாக மறுக்கத் தயங்குகிறது??
2) உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் மற்றும் எண்ணற்ற இடைஞ்சல்கள் (அரசு தரப்பிலிருந்து என்னும் உள்ளர்த்தத்துடன்) கொடுக்கப்பட்டது என்னும் சேதி முதன்மை ஊடகங்களில் தெளிவாகப் பதியப்பட்டது.... ஆனால் உறுப்பு மாற்றத்தையொட்டி வெளிவந்த பல விதிமீறல்கள் நேரடியாகப் புலனாய்வு பத்திரிக்கைகளின் கன்டென்டுக்கு சென்றுவிட்டதே? ஏன்?
உடல்நிலை சம்பந்தப்பட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு தரப்பு கடுமை காட்டுவதாக ஒருபுறம் செய்திகள் அழுத்தமாகப் பதியப்படும்போது, "விதிமீறல்கள்" விஷயத்தில் இதுவரை அரசுதரப்பில் இருந்து எந்தக் கேள்வியும் எழுப்பப்பட்டதாகத் தெரியவில்லை! இரு தரப்புகளுக்கிடையே கடுமையான மோதல் இருக்கும்போது "மனிதாபிமானம்" இல்லாத அளவுக்குக் கடுமைகாட்டும் அரசு, எதிர்த்தரப்பில் இருக்கும் வெளிப்படையானதொரு லூப்-ஹோலை (Loop hole) இவ்வளவு எளிதாக எப்படி விட்டுவைத்திருக்கிறது??? முதலில், அரசுத் தரப்பின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இல்லாமல் இப்படி கல்லீரல் மற்றும் கிட்னி கிடைப்பதில் சீனியாரிட்டி முதல் மொத்த உடலையும் அவசர விமானத்தில் எடுத்துச்சென்றது வரை இவ்வளவு சந்தேகத்துக்குரிய ஒரு விஷயம் நடந்திருக்க வாய்ப்பு உண்டா??
நிகழ்காலத்தில் அமைச்சர்களின் மங்குனித்தனமான ஸ்டேட்மெண்டுகளைப் பார்த்தால், உண்மையிலேயே இவர்கள் மோதிக்கொள்கிறார்களா? அல்லது இதுவும் சும்மாக்காச்சுக்கு சண்டைதானா? என்று எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா என்று தெரிந்துகொள்ள மட்டுமே இந்தப் பதிவு!
எந்தவொரு பெரிய பிரச்னை எழும்போதும், பிரிந்துகிடக்கும் அணிகளுக்குள்ளே ஏதாவது ஒரு கோமாளித்தனமான சர்ச்சை கிளம்பி பரபரப்புப் பிரியர்களையெல்லாம் இந்த சர்ச்சைகளுக்குள்ளே இழுத்துப் புதைத்துவிடுகின்றதாகவும் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா?? புரியவில்லை......!
அன்புடன்,
பிரபு எம்
No comments:
Post a Comment
வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)