ஒரு ஜனநாயகத்தின் ஆரோக்கியம் சாமானியர்களால் தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளால் பாதுகாக்கப் படுகிறது என்று முன்பொருகாலத்தில் (பழைய )இந்தியாவில் நம்பப்பட்டுவந்தது! புதிய இந்தியாவில் கேள்வி கேட்பதை எல்லாம் கிட்டத்தட்ட தேசவிரோத செயல்பாடுகளில் சேர்த்தாகிவிட்டது! அதையும் தாண்டி கேள்வி எழுப்பும் ஆண்டி-இண்டியன்களுக்குக் கிடைக்கும் பதில்கள் என்னவோ “என்ன கையபுடிச்சு இழுத்தியா???” ரக பதில்களே!
”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது”
இதுதான் சிஏஏ ஆதரவாளர்களின் ஒரே பதில்! நீங்கள் எந்தவொரு கேள்வியை எந்தமாதிரி முன்வைத்தாலும் உங்களுக்குக் கிடைக்கப்போகும் “திரும்பத் திரும்பப் பேசுற நீ..” பதில் இது ஒன்று மட்டுமே!
இந்த பதிலோடு கொஞ்சம் ஆக்ஷன் கொஞ்சம் செண்டிமெண்ட் சேர்த்து சமீபத்தில் ஒரு வசீகரமான ஆண் குரலொன்று சென்னையில் ஒலித்தது! அதாவது.... இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, நாங்கள் பாகிஸ்தான் செல்லமாட்டோம் இங்குதான் இருப்போம் என்று முடிவெடுத்து இங்கேயே இருந்த இந்தியர்கள்தான் இந்திய முஸ்லீம்கள் என்று ஒரு செண்டிமெண்ட் டச் வைத்து அவர்களுக்கு ஒரு பிரச்னை என்று சொன்னால் முதல் ஆளாக நின்று போராடுவேன் என்று ஒரு ஆக்ஷன் பஞ்சும் வைத்து முழங்கியதைக் கேட்க மிகவும் அற்புதமாக இருந்தது.... ஆக சிஏஏவினால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... (அடப் பாவிகளா என்னையும் சொல்ல வெச்சுட்டீங்களேடா இதே பதிலை!) அப்படியே ஆபத்து வந்தாலும் அவர்களுக்காகப் போராட ஒரு பாட்ஷாவும் இருக்கிறார்! இனிமேல் என்ன பிரச்னை என்னும் நிலையில் ஒரு சின்ன டவுட்டு வந்தது அது என்னன்னா....
பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டேன் என்று முடிவெடுத்து இந்தியன் என்னும் நிலையில் இந்திய முஸ்லீம்கள் உறுதியாக இருந்தார்கள் என்று சொல்லும்போது சிலிர்க்கிற அதே வேளையில்.. அதே பிரிவினையின் போது...... இந்தியா வந்துவிட முழுமையான வாய்ப்பிருந்தும், அன்பாக அரவணைத்துக்கொள்ள இந்தியா தயாராக இருந்தபோதும், எங்களுக்கு இந்தியா வேண்டாம், பாகிஸ்தான் தான் வேண்டும் என்று முடிவெடுத்த பாகிஸ்தானிய இந்து, கிறிஸ்தவ, சமண, சீக்கியர்கள் எல்லாருமே முழு விசுவாசமுள்ள பாகிஸ்தானியர்கள்தானே....!
சாதாரணமாக அரசை நோக்கி ஏதாவது கேள்விகேட்டாலோ அல்லது நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பற்றிப் பேசினாலோ கூட, நீ இந்தியன் இல்லை பாகிஸ்தானி.... பாகிஸ்தானுக்குப் போ என்று சீறும் திடீர் தேசபக்தர்கள், இந்தியாவை நிராகரித்து, பாகிஸ்தானைத் தங்கள் தேசமாக்கிக்கொண்ட விசுவாசமுள்ள பாகிஸ்தானியர்கள்மீது வெறும் மதத்தின் அடிப்படையில் அதீத அக்கறையும் கரிசனமும் கொண்டு அன்புக்கரம் நீட்டி வரவேற்கும் போக்குதான் மிக ஆபத்தானதொரு முரண்பாடு! கிரிக்கெட் போட்டிகளில் கூட ஒரு போரின் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்ளும் பகை நாடாக உச்சரிக்கப்படும் நாட்டைச் சேர்ந்தவர்களைக்கூடத் தன் மத அன்பர்களாக அங்கீகரிக்க முனைய முடிகிறது சில “தேச பக்தர்களால்”... அப்படியென்றால் தேசம் இங்கு மிகத் தெளிவாக இரண்டாம் பட்சம் தான் என்பதுதானே மிக அலட்சியமான நடையில் பதிவாகிறது.
இதைக் கேட்டாலும் அதுதான் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு என்றுதான் ஆரம்பிப்பார்கள்... கேள்விகளால் இனி ஒன்றும் ஆகப்போவதில்லை வெறும் எலக்ஷன் மட்டும் நடக்கும் இந்தப் பெரும்பான்மை ஜனநாயகத்தில்!
பிரபு எம்
No comments:
Post a Comment
வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)