தட் என்னது இந்திராகாந்தியக் கொன்னுட்டாங்களா?! மொமண்ட்தான்.... பட் என்ன பண்ணுறது.... எப்பவோ எழுதியிருக்க வேண்டியது... இப்போதான் நேரம் கிடைத்தது!
ஏற்கெனவே ரொம்ப லேட்டு அதனால்...எந்தக் கதையும் பேசாமல் நேரடியாக லிஸ்டுக்குள் சென்றுவிடுவோம்...
10. மான்ஸ்டர்:
”ஒரு நாள் கூத்து” படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேஷின் இரண்டாவது படம்.. S.J சூர்யா, ப்ரியா பவானிசங்கர், கருணாகரன் எனப் பொறுத்தமான கேஸ்டிங்குடன் வந்திருந்தது... ஒர் எலியினால் பிரச்னைக்குள்ளாகும் இளைஞன் எனும் சிம்பிளான லைனுக்குள், வள்ளலாரின் ஜீவகாருண்யம் தொடங்கி அரேஞ்ட் மேரேஜ் அழகியல்கள் வரை வசந்தமான சின்ன சின்ன சுவாரஸ்யங்களை வைத்துப் படம் முழுக்க மென்மையான கதைசொல்லலில் “மான்ஸ்டர்” மிகவும் கவர்ந்தது... எஸ்.ஜே சூர்யா - ப்ரியா பவானிசங்கரின் பாந்தமான நடிப்பு படத்தை இலகுவாக நகர்த்தியது.... கதையோடிணைந்த அளவான நகைச்சுவையும் திரைக்கதையில் அலுப்பில்லாமல் பார்த்துக்கொள்ள, இறுதிக்காட்சியில் அந்த எலி எதற்காக எஸ்.ஜே சூர்யாவை விடாமல் துரத்தவேண்டும் எனும் கேள்விக்கு ஓர் ஈரமான பதிலையும் வைத்து நிறைவாகவே முடித்திருந்தார்கள்... சிறுசிறு குறைகளைத்தவிர நிம்மதியான ஃபேமிலி வாட்சிங் கொடுத்த படம்.
9. பேட்ட
"கபாலி”, “காலா” என்று வேற ரூட்டில் போயிக்கொண்டிருந்த ரஜினியை மீண்டும் கமர்ஷியல் டிராக்கில் பக்காவாக ஃபிட் செய்த படம்! கார்த்திக் சுப்பராஜ் முழுக்க முழுக்க ரஜினி ரசிகனாக இருந்து மொத்த ஸ்க்ரீனையும் ரஜினிஃபை செய்திருந்தார்.. அனிருத்தின் வெறித்தனமான இசையில், ஜில்லென்ற ஹில்ஸ்டேஷனில் நடக்கும் ஃபர்ஸ்ட் ஹாஃபில் படு ஃப்ரெஷ்ஷான ரஜினியை ”லவ்”வோட சமையல் செய்ய வைத்ததிலிருந்து மதுரைப் பின்னணியில் மேளத்துக்கு ஆடிக்கொண்டே வந்து பொட்டென்று வில்லனைப் போட்டுத்தள்ளுவது, ரஜினி பட விண்டேஜ் காட்சிகளை நினைவு படுத்தியது , கடைசியில் எவர்கிரீன் ”ராமன் ஆண்டாலும்..” பாட்டுக்கு குத்தாட்டம் போட்டது வரை ரகளையான ஒரு ரஜினி சினிமாவை அதற்கேற்ற எளிமையான கதைக்களத்தை அமைத்து ட்விஸ்ட்டுகளோடு சிறப்பாக அரங்கேற்றியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். நவாசுதீன் சித்திக், விஜய சேதுபதி, குருசோமசுந்தரம், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் போன்று ஆச்சர்யமான கேஸ்டிங்கும் ரஜினி பொங்கலுக்கு அலப்பறை கூட்டியது! டோட்டல் ரஜினிஃபிக்கேஷன்!
8. சூப்பர் டீலக்ஸ்:
விஜயசேதுபதி, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் என ஒருபக்கம் நடிப்பு அசுரர்கள்... மறுபக்கம் சமந்தா, மிஷ்கின், பக்ஸ் என்று ஸர்ப்ரைஸ் பேக்கேஜ்! ”ஆரண்ய காண்டம்” வந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தியாகராஜன் குமாரராஜா இயக்கம் என எதிர்பார்ப்புகளைத் தெறிக்கவிட்ட படம் ஆனால் வெளிவந்த பிறகு வேறுவிதமாக திருப்தியளித்தது! படுசிக்கலான கதைக்களத்தில் சூப்பர் டீலக்ஸ் டீல் செய்த எமோஷன் “எம்பாரஸ்ஸ்மெண்ட்” என்று ஆங்கிலத்தில் தெளிவாக அர்த்தம்பெறும் உச்சபட்ச சங்கடம்! வாழ்வின் அதிகபட்ச சங்கடத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையும் சிக்கவைத்து அதைவிட மேலதிகமான சங்கடத்தில் பார்வையாளனையும் நெழிய வைத்துக் கிட்டத்தட்ட “என்னடா எடுத்து வெச்சிருக்கான்??” என்று எகிறப்போகிற கணத்தில் வில்லன் பக்ஸ்ஸின் தலையில் சிறுவர்கள் உடைத்த LED டிவி விழ... நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்த மொமண்ட் நமக்கு.... அதன்பிறகு கதையில் விரியும் தெளிவுநிலையானது விளிம்பு நிலையில் வைத்து நிம்மதி ஹார்மோன் சுரக்க வைப்பதாக இருந்தது! மீண்டுமொருமுறை தனது பயங்கரமான மெச்சூரிட்டியால் திரையுலகைத் தெறிக்கவிட்டிருந்தார் தியாகராஜன் குமாரராஜா இருந்தாலும் மொத்தமாக எதற்காக “சூப்பர் டீலக்ஸ்”? எனும் கேள்வி எழத்தான் செய்தது எக்கச்சக்கமாக எம்பாரெஸ் ஆனதில்! - Oddly Satisfying Movie!
7. நேர்கொண்ட பார்வை:

சென்ற வருடத்தின் ஆகச்சிறந்த ரீமேக் படம் என்றால் அது “நேர்கொண்ட பார்வை”தான்! ”NO" எனும் சொல் ஒரு வார்த்தை மட்டுமல்ல அது ஒரு வாக்கியம் என்று சொல்லி, ஜஸ்ட் ”வேண்டாம்” என்ற மென்மையான மறுத்தலை மீறுகின்ற வன்செயல் எவ்வளவு பெரிய குற்றம் என்கிற ரீதியில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த “பிங்க்” படத்தின் ரீமேக்! அமிதாப் படத்தில் அஜித்தா??!! என்று திகைத்த அத்தனை பேரையும் திரைக்கதையில் அனாயசமாக சின்னச் சின்னதாய் மாற்றங்களை நுழைத்து மிகச் சிறப்பாக அஜித்திற்குப் பொருத்திக்காட்டினார் சமகாலத்தின் மிக முக்கியமான இளம் இயக்குனர் H.வினோத் என்றால் அஜித் தன் பங்குக்குத் தோற்றம், நடை, தளர்வு, நிதானம், ரௌத்ரம் என அந்த பாத்திரத்தை கம்பீரமாக நடித்துக்காட்டியது அபாரம்! முக்கியப் பாத்திரங்களான மூன்று பெண்களும் மிகத் துல்லியமான நடிப்பைத் துணிவுடன் கொடுத்தது மேலும் சிறப்பு! எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று “கெட்ட” பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த பேராண்மை முயற்சி இந்தப் படம்! சமூகம் பெண்களுக்கென்று சில அளவீடுகளை வைத்திருக்கிறது அதை மீறீவிட்டால் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக் கொல்லப்பட்டாலுமே அந்த அவலத்துக்கு அவளேதான் பொறுப்பேற்க வேண்டும் அதையெல்லாம் மீறி பெரும்பான்மைப் பார்வையில் மிகமிகக் கெட்ட பெண்களின் “NO" வை பெருங்குரல்கொண்ட பேரொலியாய் சமூகத்தின் கேடுகெட்ட சுவர்களில் மோதி எதிரொலிக்கவிட்டது “ நேர்கொண்ட பார்வை”! மேலும் அந்த “கெட்ட” பெண்களுக்குக்கூட அவர்களின் அந்தரங்கத்துக்கு மதிப்பளித்து அழகாய் அணுகும் சட்டம் கொண்டது இந்த நாடு (அதாவது பழைய இந்தியா!) என்ற அடித்தளமும் அமைதியாய் ஒலித்திருக்கும் படத்தில்! மிகமிக முக்கியமான படைப்பு!
6. கைதி:

அங்குமிங்கும் அசைவில்லாமல் எடுத்த எடுப்பில் டாப் கியரைப்போட்டு கேப் விடாமல் புகுந்து அடித்த ஓர் அதிரடி ஆக்ஷன் படம் கைதி! 90s Hollywood ஸ்டைல் கதை.... (கிட்டத்தட்ட Con-Air படத்தின் இன்வெர்ஸ் மாடல் திரைக்கதை என்று சொல்லலாம்!) அதைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று சேஸிங்கில் பேக்ரவுண்டில் ஐடம் சாங் வைக்காமல் திரைக்கதையில், வேகமெடுக்கும் அந்த அரைப்பாடி லாரி, உடைக்கமுடியாத பிரிட்டிஷ்காரன் கட்டிடம், பிரியாணித் தூக்கு, க்ளைமேக்ஸ் Gun blaze என்று புதுப் புது ஐட்டங்களை உள்ளே புதைத்து முழுக்க முழுக்க வில்லன்களுக்கு சாதகமான களத்தில் குறைந்தபட்ச சாத்தியங்களுடன் ஹீரோ க்ரூப் விடாது போராடி ஜெயிக்கும் சீட் நுனி அத்தியாயங்களால் ஜொலித்தது “கைதி” லோகேஷ் கனகராஜ் இனி அனைத்து உச்ச நட்சத்திரங்களுக்கும் செல்லப்பிள்ளையாக வலம் வருவார்.... கார்த்தி, நரேன் மற்றும் ஜார்ஜ் மரியான் மூவரின் நடிப்புமே பிரமாதமாகப் படைக்கப்பட்ட பாத்திரங்களை சுமக்கத் திரைக்கதை லாரி சிரமமின்றி சீறிப்பாய்ந்தது....கார்த்திக்கு இது முக்கியமான செஞ்சுரி இன்னிங்ஸ்! அக்மார்க் ஆக்ஷன் விருந்து!
5. மகாமுனி:
”மௌனகுரு” வாய்க் காணாமல்போன சாந்தகுமார் திரும்பி வந்தது 2019ல் மகாமுனியாய். அழுத்தமும் திருத்தமுமான திரைமொழி பேசிய மிக முக்கியமான திரைப்படம் “மகாமுனி”! மைக்ரோஸ்கோப் நுணுக்கத்தில் புனைந்த திரைக்கதையைக் கூரான உளியாய்ச் செதுக்கி வடித்திருந்தது படத்தின் வசனங்கள்! பேருந்து ஜன்னலோரங்களில் திடீரெனத் திகைக்க வைக்கும் தமிழ் நாட்டின் மிஸ்டிக் பியூட்டி நிலப்பரப்பிலெல்லாம் பிரேக் அடித்து இறங்கி, ரசித்து, கேமராவில் பதிந்து வந்து பொறுமையாகப் பல தத்துவங்கள் பேசும் த்ரில்லர் ஜானரில் பிசிரே இல்லாமல் சுவாரஸ்ய ஸ்கெட்சுபோட்டிருந்தார் சாந்தகுமார். ஆர்யா நடிப்பில் தான் விட்டதையெல்லாம் பிடித்து ஒரே படத்தில் தமிழ்சினிமாவில் தன் சீட்டில் தானே வந்து மீண்டும் அமர்ந்துவிட்டார்.... அருண் பத்மனாபனின் ஒளிப்பதிவில் தமிழ்த்திரை கண்டிராத இயற்கை அழகு கொஞ்சியது படத்தின் கடுமையான நிகழ்வுகளுக்கு இடையிலும்! மென்மையும் வன்மையும் இரண்டறக் கலந்து திகைப்பூட்டிய நிதானமான திரைக்கதையில் கடைசியில் மட்டும் ஏன் அவ்வளவு அவசரம் என்றுதான் புரியவில்லை... காட்சிகளால் மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு மிச்சமுள்ள க்ளைமேக்சை மட்டும் எழுதிவைத்து வாசித்து முடித்து வைத்தது, மொத்த உழைப்புக்கும் படம் சேர்ந்திருக்க வேண்டிய தூரம் செல்லவிடாமல் தடுத்ததுதான் துன்பமான துரதிர்ஷ்டம்..... மகாமுனி - ஆழ்நிலை தியானம்!
4. அசுரன்:
A Signature adapted screenplay from Vetrimaran!
ஆழமும் தீர்க்கமுமாய் ஓர் அசுரன் 2019ன் கடைசிக் காலாண்டில் வந்து திரையுலகத்தை மட்டுமின்றி இலக்கியம் அதையும் தாண்டி அரசியல் வரைப் புரட்டிப் போட்டான் என்று சொன்னால் அது உண்மையே! இந்தப் படம் பாராட்டப்பெற்ற விதத்தில் ஓர் இடைத்தேர்தல் முடிவு வரை ஊடுறிவிப் பாதித்தது! அதைத்தாண்டி முக்கிய எதிர்க்கட்சியை இன்றுவரை ஆளாளுக்குச் சீண்டிப் பார்க்கும் ஓர் அரசியல் சிண்டு முடிவதற்கு ஆதாரமாக நிற்பவனும் இதே அசுரனே! அசுரன் பேசிய அரசியல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக உண்டாக்கிய அதிர்வலைகள் அவ்வளவு ஆழமானவை! ஒரு நாவலையும் , சில வரலாற்று உண்மைகளையும் ஒருங்கிணைத்து ஓர் ஆக்ஷன் சினிமாவாகவும் திரை இலக்கியப் பதிப்பாகவும் ஒருங்கே கொடுத்திருக்கும் வெற்றிமாறனுக்கு ஒரு சல்யூட்டும் அதற்கு முழுமையாக உயிர் கொடுத்த தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி உள்ளிட்ட நடிகர்களுக்கு வீரவணக்கங்களும் செலுத்தத் தமிழ் ரசிகன் தவறவில்லை..! ஜீவி பிரகாஷின் தீப்பிடிக்கும் இசைப் படத்தின் உஷ்ணத்தைக் குறையாமல் பார்த்துக்கொண்டது! அசராமல் அடித்து ஜெயித்தவன் இந்த அசுரன்!
3. தடம்:
மகிழ்திருமேனியின் இயக்கத்தில் வெளிவந்த அறிவார்ந்த ஆக்ஷன் த்ரில்லர்... விக்ரமுக்கு அடுத்து நீண்ட வருடங்கள் நம்பிக்கையோடும் தயாரிப்போடும் காத்திருந்து வெற்றிபெற்றவர் அருண்விஜய்... அவருக்குத் “தடையறத் தாக்க” மூலம் ஸ்டார் அந்தஸ்து வாங்கிக்கொடுத்த மகிழ்திருமேனி மேலும் ஒரு டபுள் பவர் 5 ஸ்டார் படத்தினை அருண்விஜய்க்கு சென்ற வருடம் பரிசளித்தார்! எழில், கவின் என்று வலிமையிலும் அறிவிலும் ஒருவருக்கொருவர் டஃப் கொடுக்கும் ஐடெண்டிக்கல் ட்வின்ஸ் எனும் சூப்பர் பாத்திரப்படைப்புக்கு ஏற்றவாறு சிக்ஸ்பேக்குடன் சிக்கென்று வந்து நின்று, நடிப்பிலும் மேனரிஸத்திலும் எளிதாக இரண்டு பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டினார் அருண் விஜய் என்றால்..... அறிவுப்பூர்வமாகத் திரைக்கதையை முன்னெடுத்துச் செல்ல மகிழ்திருமேனிக் கொட்டிய உழைப்பில் அவரது மூளைத் தசைகளில் சிக்ஸ்பேக் தோன்றியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...! மையக்கதையில் பலப்பல புத்திசாலித்தனமான முடிச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக சுவாரஸ்யமாகக் கட்டவிழும் விதமாகத் திரைக்கதையை அமைத்திருந்தார் ஆனாலும் கூட படம் கதைக்குள்ளே நுழைவதற்கு முந்தைய அடித்தளக் காட்சிகளுக்குக் கூட ரசிக்கும் படியான ஐடியாக்களை வாரி இரைத்திருந்தார். அறிவார்ந்த கதை சொல்லலில் இது ஓர் அழியாத தடம்!
2. ஒத்த செருப்பு சைஸ் 7:
பார்த்திபனின் எக்ஸ்பெரிமெண்ட் ஒன்று நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு ஒர்க் அவுட் ஆனதில் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒருசேர சங்கமித்து வாழ்த்துமழை பொழிந்தது “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்துக்கு! பொதுவாக புத்தகம், ரேடியோவுக்கு இருக்கும் மரியாதை விஷுவல் மீடியங்களான டிவி மற்றும் சினிமாவுக்குக் கிடையாது.. டிவியை ”இடியட் பாக்ஸ்” என்று இன்றுவரை பாப்புலராகப் பழித்துரைக்கும் குரல்கள் இருக்கத்தான் செய்கின்றன! இதற்கு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது... ஒரு புத்தகத்தை வாசிக்கும்போதோ அல்லது ரேடியோவில் கேட்கும்போதோ நாம் உள்வாங்கும் விஷயங்களை, ஓர் இணைகோட்டில் நமது கற்பனையில் காட்சிவடிவம் பெற்றுக்கொண்டே இருக்கும்.... அதுவே விஷுவலாகவே ஒரு கதையையோ அல்லது செய்தியையோ பார்க்கும்போது நமது கற்பனை சக்திக்கு எதுவும் வேலை இருப்பதில்லை காட்டுவதைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறோம் என்று கற்பனை வளத்தை மட்டுப்படுத்துவதாக சினிமா மீதும் டிவி மீதும் காலம்காலமாக ஒரு கம்ப்ளைண்ட் இருந்துவருகிறது...! ”ஒத்த செருப்பு” அந்த விஷயத்தை முறியடித்தது என்றே சொல்லவேண்டும் ஏனென்றால் படம் பார்த்தவர்கள் சட்டென்று சிந்தித்துப் பாருங்கள் பார்த்திபனின் மகனாக நடித்தக் குட்டிப்பையன் யார் என்று? அந்த நல்ல போலீஸ் ஆஃபீஸர், சைக்கியார்ட்ரிஸ்ட் லேடி, அந்த எம்.எல்.ஏ யார் யார் என்று? நிச்சியம் முகங்கள் மனதில் தோன்றத்தான் செய்யும்! ஒரு த்ரில்லர் கதையைக் கதையோட்டத்தின் கயிற்றைப் பிடித்த இறுக்கம் சற்றும் தளராமல் ட்விஸ்ட் & டர்ன்களோடு சொன்னவிதத்தில், விஷுவலாகப் பார்த்திபன் கண்முன்னே திரையில் கதையை ஒரு தனி நபர் வாக்குமூலமாகச் சொல்லிக்கொண்டே இருந்தாலும் நம் மனத்திரையில் அந்தக் கதையின் உலகம் எந்தத் தடங்கலுமின்றி காட்சிகளாக விரிந்துகொண்டே இருந்தது...வாவ் என்ன ஓர் இதமான கதைசொல்லி இந்தப் பார்த்திபன்! என்று மனம் நிறைந்த திருப்தி கிடைத்தது பார்த்திபனின் இந்த ஒன் மேன் ஷோவில்! ஒத்த செருப்பு பத்த வெச்ச நெருப்பு அணைய லேட்டாகும்!
1. சில்லுக்கருப்பட்டி:

2019ம் வருஷத்தின் அழகழகான படங்களிலெல்லாம் ஆகச்சிறந்தபடம் என்னைப் பொறுத்தவரை வருஷம் முடிவதற்கு நான்கு நாட்கள் மிச்சமிருக்கும்போது வந்த இந்தத் தித்திப்பு ஓலைப்பெட்டிப் பொக்கிஷம்தான்! நான்குப் பருவ மனிதர்கள், நான்கு கதைகள்.... ”காதல்” என்ற உணர்வை மையக்கோடாகக் கொண்டு அதைச்சுற்றியே தொட்டும் தொடாமலும் அலையாடும் குட்டிக் குட்டிப் பெயரற்ற உணர்வுகளை நான்கு பருவத்து ஆண் - பெண்களை வைத்துக் கடத்திய அற்புதமான இரண்டேகால் மணி நேரமாக இதமாகச் சிந்தையில் கரைந்தது இந்தச் “சில்லுக்கருப்பட்டி”! அதனைத் திகட்டாமல் வழங்கிய ஹலீதா ஷமீமுக்கு இனிமையான நன்றிகள்!
நிஜ வாழ்வை அதன் முழு யதார்த்தத்தோடு கமர்ஷியல் சினிமாவுக்குள் கடத்துவது மிகமிக சவாலானது காரணம் எந்த இடத்தில் ரசம் சரியாக சேர்க்கவேண்டும் எந்தெந்த இடங்களை அதன் போக்கில் அப்படியேவிட வேண்டும் என்று தெள்ளத்தெளிவாக உணர்ந்து எழுதவேண்டும். அதை அத்தனை அழகாகக் கையாண்டிருந்தார்கள் ஒட்டுமொத்த குழுவும்..... நடிகர்களின் பங்களிப்புகள் மீட்டரில் நூறு சதவீதத்தையெல்லாம் அனாயசமாகத் தாண்டியது! பிங்க் பேக் அத்தியாயத்தில் மாஞ்சா தன் குப்பைவிடு தூதில் மிட்டியைக் கண்டுபிடித்தபோது பற்கள் தெரிய சிரிக்கும் அந்த அழகான க்ளோஸ்-அப்பில் அவன் கண்களும் புருவமும் கூட சேர்ந்து சிரிக்கும்! யஷோதாவாக வரும் லீலா சாம்சன் சருக்கில் சருக்கும் காட்சியில் காட்டும் முதிர்ந்த நாணம் அந்த பார்க்கில் இருக்கும் சருக்கைவிட வழுவழுப்பாக அந்தக் காட்சியை நெகிழவைக்கும்! கதாபாத்திரங்களின் >100% நடிப்பை இம்மி தவறாது அள்ள கேமரா என்னென்ன கோணங்களைப் பிடிக்க எந்தெந்த பொசிஷன்களில் வைக்கப்பட்டதோ என்று ஆச்சர்யப்படுத்திய ஓளிப்பதிவை வழங்கியிருந்தார்கள் ஒளிப்பதிவாளர்கள்! இந்தப் படத்தில் ஒளிப்பதிவின் அழகியலில் கேமராக்களால் நுணுக்கமாகக் கவரப்பட்டது மனித முகங்கள்..... முகங்களின் நவரசங்கள்! எல்லாவற்றுக்கும் மேல் சில்லுக்கருப்பட்டிக்குப் பின்னணி இசை சேர்த்தது யார்? என்று கண்ணைமூடிக்கொண்டு கேட்டால் இளையராஜா என்றுதான் சொல்லியிருப்பேன்! ஆனால் கண்ணைத் திறக்கவைத்த இசை பிரதீப்பினுடையது! இசையின் சத்தம் திரையின் மென்மையான தருணங்களில் கதாபாத்திரங்களைத் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதுபோல் அத்தனை அணுக்கமான இசை! சத்தங்களே இல்லாத இசையானது கிரங்கவைக்கும் சுகத்தில் மௌனத்தின் இசையை ரசிக்கத் துவங்குவதாய் உணர்ந்தேன்... பிரதீப்பின் இசையமைப்பில் ஒரு கவிஞனின் பேனாமுனையும் ஓவியனின் தூரிகையும் ஒருசேர இசையாய் சங்கமித்திருப்பதைக் கண்டு மிரண்டுபோனேன்! இப்படித்தான் “சில்லுக்கருப்பட்டி” பார்த்ததிலிருந்தே எக்கச்சக்கமாய் பேசிக்கொண்டே இருக்கிறேன்.... தனிப்பதிவுதான் எழுதணும்! கே.பாலசந்தர் 20 வருடங்களுக்கு முன்பு திரையில் பதிந்த மனித உறவுகளின் சில சுவையான சிக்கல்களை இப்போதைய அப்கிரேடேஷனோடு அழகாக தன்னுடைய சிக்னேச்சரோடு பதிந்திருக்கிறார் மிக அழகாக ஹலீதா ஷம்மீம் சென்ற வருடத்துக்கான என்னுடைய முதலிடம் சந்தேகமின்றி “சில்லுக்கருப்பட்டி”க்கே!
அன்புடன்,
பிரபு எம்


இந்த எதார்த்த நடை நன்றாக உள்ளது. தொடரட்டும்
ReplyDeleteநன்றி நண்பா....🙏👍
Deleteநானும் லேட்டாப் படிச்சு லேட்டாப் பதிவு பண்றதால, 'என்னாது, நித்தியக் காணோமா மொமண்ட் தான்' . ஆனா, இதுல புத்திசாலித்தனமான விஷயம் என்னான்னா, படங்கள் பழசா ஆகும். ஆனா, விமர்சனங்கள் என்னிக்குமே நிக்கும். அந்த வகையில் செம்ம. முன்னாடியெல்லாம் (ஒரு வேள இப்பவுமா?) ஜேம்ஸ் வசந்தன் ஒரு ஒசரமான சேர்ல (எப்டித்தான் வுளுகாம ஒக்கார்றாய்ங்களோ?) உக்காந்துட்டு கால் மேல கால் போட்டு திரைப்பட விமர்சனம் பண்ணி, படமெடுத்த ஆளுங்க கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டார். அதுக்குப் பொறவுதான் அடக்கமா நின்னுகிட்டு விமர்சிச்சார். நம்ம பிரபு சார், சர்வ சுதந்திரமா , சரளமா விமர்சனம் பண்றதப் பாக்கும் போது ஆனந்தத்துல அழுவாச்சியே வருது. நான் பொதுவா படம் பாக்கறது இல்ல. தெரியாத்தனமா ஒரு தெலுங்கு டப்பிங் பாத்துட்டு பல நாள் பைத்தியம் புடிச்சாப் போல இருந்ததோடு அதுக்குப் பொறவு புத்தகம் உண்டு, எழுதற வேல உண்டுன்னு கெடக்கேன். இப்போ ரஜினிஃபிகேஷன் ல ஆரம்பிச்சு சில்லுக் கருப்பட்டி வரை மாஸ் விமர்சனம் படிச்சதும் தைரியமா பார்க்கலாம் னு தோணுது. தேங்க்ஸ் பிரபு சார்.
ReplyDeleteநீங்க கலக்குங்க.
கி.சரஸ்வதி,
19.06.21