"History will be kinder to me than the contemporary media!"
- Dr. Manmohan Singh
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்... பத்து ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றி முடித்திருந்த சமயத்தில் கடுமையான விமர்சன வெப்பத்தில் அரசானது உழன்று கொண்டிருந்த காலகட்டம் அது! அப்போது பிரதமர் மன்மோகன் சிங் ஒரு விரிவான ஊடக சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்! தனது இரண்டு ஐந்தாண்டுகால ஆட்சிகளில் அவர் நடத்திய மூன்றாவது ப்ரெஸ் மீட் அது! இந்தியாவின் பிரதமர் ஒருவர் ஊடகங்களைச் சந்திப்பது அதுதான் கடைசி முறை என்பதை இந்த தேசம் அப்போது அறிந்திருக்கவில்லை!
அந்த ஊடக சந்திப்பில்தான் மேலே குறிப்பிட்டிருக்கும் அவரின் புகழ்பெற்ற வாசகத்தை உச்சரித்தார் Dr. சிங்!
'நிகழ்காலத்தில் ஊடகங்கள் பிடிவாதமாய் மறுக்கும் கருணைப் பார்வையைத் தனக்கு வரலாறு வழங்கும்!' என்று தனக்கே உரித்தான மென்மொழியில் அழுத்தமாக அன்று பதிவு செய்தார்... அது எவ்வளவு நிஜம் என்பதை நாம் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறோம்!
Dr.மன்மோகன்சிங் அவர்கள் நிஜமாகவே இந்திய யூனியனுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்! பொருளாதாரத்தில் ஒரு முனைவராகத் திட்டக் கமிஷன் உட்பட பல உயரிய அரசுப் பணிகளில் அமர்ந்தார்! பொருளாதார நிபுணராக 80-களில் அவர் உருவெடுத்திருந்த போது அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து இந்திய ரூபாய் நோட்டுகளில் கையொப்பமிட்டார்! பின்னர் 90-களில் பல பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து அதன் கோப்புகளில் ஒன்றிய நிதியமைச்சராக அவர் இட்ட கையொப்பங்கள் தான் பின்னாளில் அவரை ஒரு "பொருளாதார மேதை" என்று உலகளவில் நிறுவியது.
ஒரு விசித்திரமான அரசியல் சூழலில் 2004 ஆம் ஆண்டு டாக்டர். மன்மோகன்சிங் UPA கூட்டணி அரசின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது, அவர் இந்தியாவின் எந்தத் தொகுதியிலும் நின்று வெல்ல வாய்ப்பில்லாத ஓர் அரசியல்வாதி! தனக்கு முகவரி இல்லாத அஸ்ஸாம் மாநிலத்தின் ராஜ்யசபா உறுப்பினராகத்தான் நாடாளுமன்ற இருக்கையில் தக்கவைக்கப் பட்டிருந்தார்! காரணம்.... அரசியலின் அதிகபட்சப் பதிவிகளில் செயலாற்றியிருந்தாலும் டாக்டர். சிங் ஓர் அரசியல்வாதி அல்ல மாறாக ஒரு தலைசிறந்த ஆட்சியாளர்... ஓர் ஆளுமை!
அவர் பிரதமராக முடிசூடவில்லை மாறாகப் பொறுப்பேற்றார்!
அவர் பொறுப்பேற்றுக் கொண்டபோது யாரும் அரியாசனம் ஏறினார் என்று எழுதவில்லை மாறாக அப்போது அந்த இருக்கை ஒரு கூட்டணி அரசாங்கத்தின் "நாற்காலி" என்றே அறியப்பட்டது! அவர் கட்டளைகளைப் பிறப்பிக்கவில்லை ஆனால் வலுவான பல திட்டங்களில் கையெழுத்திட்டார்! பத்தாண்டு காலம் அதிகாரங்களை எல்லாம் அபகரித்து ஆட்சி செய்யவில்லை மாறாக ஒரு பிரதமராக அவர் பணியாற்றினார்! மாநிலத் தேர்தல்களின் பிரச்சார வாகனங்களில் அவர் வலம் வரவில்லை ஆனால் அந்தத் தேர்தல்களில் அவர்களின் கூட்டணி அடைந்த தோல்விகளுக்குப் பொறுமையாகப் பொறுப்பேற்று பதிலளித்தார்!
இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்த எளிமையை எல்லாம் மக்களாகிய நாம் ரசிக்கவில்லை என்பதுதான்! அரசை முழுவன்மையுடன் விமர்சிக்க அவர் காலத்தில் ஊடகங்களுக்குச் சுதந்திரம் இருந்தது, ஆனால் அந்த வன்மை எனும் சொல்லை ஊடகங்கள் வன்மம் என்று உருமாற்றிக்கொள்ளத்தான் அந்த சுதந்திரம் அப்போது பயன்பட்டது!
ஒரு CAG அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு "2G ஊழல்" என்று எதிர்க்கட்சிகளுக்கு லக்கி நம்பராகிப் போன அந்த ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடியை அதன் பின் 3G, 4G, இப்போது 5G வரை அலைக்கற்றை ஏலங்கள் ஒருமுறை கூடத் தொடவில்லை ஆனால் 2G அலைக்கற்றை ஏலத்திலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்று அவ்வளவு பெரிய தொகை கணக்கீடு செய்யப்பட்டிருந்தது! அதில் 175 எனத் தொடங்கி அத்தனை பூஜ்ஜியங்கள் அடுக்கப்பட்டிருந்தெல்லாம் குமாரசாமி கணக்கு என்று இப்போது கூட நாட்டுக்குத் தெரியாது! 2G மட்டுமல்ல, அரசை உலுக்கிய நிலக்கரி பேர ஊழல் குற்றச்சாட்டுக்கும் கூட ஜனநாயக அமைப்பில் எதிர்க்கட்சிகள் கோரிய அத்தனை விசாரணைக் குழுக்களுக்கும் இசைவு வழங்கினார், ஒத்துழைத்தார், தனது அமைச்சரவை சகாக்களை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கினார் அவர்கள் அந்த ஆட்சிக்காலத்தில்தான் சிறைக்கும் சென்றார்கள் ஆனால் அத்தகைய வெளிப்படைத் தன்மையையும் ஜனநாயக அடிப்படையை மீறாத செயலாற்றலையும் மீடியாக்கள் தூற்றியதும் கேலி செய்ததும்தான் விநோதம்!
மக்களுக்குத் தேவையெல்லாம் பளபளப்பான வாளுடனும், பரந்து விரிந்த மார்புடனும், மெட்டாலிக் உடைகள் மற்றும் உபகரணங்களுடனும் புழுதி பறக்க "டகடிக்.... டகடிக்.... டகடிக்" என்று குதிரையில் வேகமாகப் படை கிளப்பி வரும் ஒரு வீரன் வாள்முனையில் ஊழலை ஒழித்துப் பெட்ரோல் விலையைக் குறைத்து, சுவிட்சர்லாந்து வங்கிப் பணங்களை எல்லாம் வாரி எடுத்து வந்து அதைப் பங்கிட்டு குடிமக்கள் அக்கவுண்டில் போடுவான் என்பதாகத் தான் இருந்தது! இதை இப்போது நினைத்துப் பார்க்கையில் அம்புலி மாமா கதைபோல நகைப்பாகத் தோன்றினாலும் ஊரை ஏமாற்றி உலக அளவில் ஏளனத்துக்கும் அவமானங்களுக்கும் நாட்டை ஆளாக்கி வரும் அம்புலி மாமாக்கள் ஆட்சியைப் பிடித்த கதையே இதுதான் என்பதே உண்மை!
அவலங்கள் அரங்கேறும் போது அம்பலங்களின் அறம் தேயும்! எல்லாம் எறிந்து அழிந்த பின் அந்த சாம்பல்களால் விரல் தொட்டு எழுதப்படுவதுதான், அடுத்த பேரழிவுக்கும் முன்கூட்டியே அறிகுறிகளைக் காட்டும், "வரலாறு" எனப்படுவது!
இதை அச்சு அசலாக அப்போதே உணர்ந்து தான் சமகால ஊடகப் பதிவுகளில் தான் எவ்வளவு கீழ்த்தரமாகப் பதியப்பட்டாலும், சாம்பலினால் எழுதப்படப் போகும் வரலாறு தன்னை வருங்காலத்துக்குச் சரியாகக் காட்சிப்படுத்தும் என்று கம்பீரமாக உரைத்திருக்கிறார் டாக்டர். மன்மோகன் சிங்! "வருங்காலம்" தன்னைக் கருணையுடன் அணுகும் என்று கூறாமல் "வரலாறு" என்று அவர் குறிப்பிட்டிருப்பதன் நுட்பமான அர்த்தம் இதுதான்!
அழிவுப் படலத்தின் முடிவுரையில் தான் அவர் சொன்ன "வரலாறு" எழுதப்படும் .... அழிவானது எப்போது ஒழியும் என்பதை அடுத்த ஆண்டு நம் விரல் நுனிகள்தான் தீர்மானிக்கும்! அதுவரை நம் விரல்களைப் பதற்றமாகப் பின்னிக்கொள்ள வைத்திருக்கும் 2023 நிகழ்காலத்தில் இன்று தனது 91 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் டாக்டர். மன்மோகன் சிங் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்!!!!
அன்புடன்
பிரபு எம்
.jpeg)
No comments:
Post a Comment
வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)