"அரசியல்படுத்தப்படாத கூட்டம்" என்பது மண்டை ஓட்டுக் குறியுடன் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டியதோர் அபாய வாசகம்!
ஆனால் அது ஏதோ சாதாரணமான அரசியல் விமர்சனமாக முன்வைக்கப்பட்டுத் தற்குறித்தனமான வாதப் பிரதிவாதங்களைத்தான் கடந்தசில வாரங்களாக ஊடகங்களில் கிளப்பி வந்தது. கரூரில் இன்று நடந்துவிட்ட இந்தக் கொடூரம் இந்திய அரசியலே கண்டிராதது! இதற்கு ஒரே காரணம் அரசியலின் அரிச்சுவடி தெரியாத பணத்திமிர் பிடித்த ஒரு கிறுக்கன் அபாயகரமானதோர் "அரசியல் படுத்தப்படாத கூட்டத்தை"த் தெருவில் திரட்டியதுதான்!
இதே கரூரில் சில தினங்களுக்குமுன் அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஊர்வலம் நடைபெற்றது.... காவல்துறை விதித்த கட்டுப்பாட்டுச் சட்டகங்களை அதில் கலந்துகொண்ட அதிமுக எனும் கட்சியின் கூட்டத்தினர் எவரும் தாண்ட முயற்சிக்கவில்லை.... தடுப்புகளின்மீது ஏறவில்லை... அவர்கள் தலைவரைக் காண எவரும் வீட்டிலிருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் கூட்டிச்செல்லவில்லை! ஏனெனில் அது ஓர் அரசியல் கூட்டம்!
தான் கூட்டும் இந்த மதிகெட்டக் கூட்டத்தின் அபாயத்தைத் தெள்ளத் தெளிவாக முன்கூட்டியே முன்னறிந்து வைத்திருந்தது விஜய்தான்! அதனால்தானே இந்தக் கூட்டத்தினரிடமிருந்துத் தன்னையும் தன்னுயிரையும் காத்துக்கொள்ள பவுன்சர்கள் புடைசூழ எங்கும் செல்கிறார்! அவரைப் பார்க்க முண்டியடித்துக்கொண்டு அவருடைய உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய அளவில்தானே அவர் கூட்டிய கூட்டமும் அவருடைய வாகனத்தின் மீதும், மின்சாரக் கம்பிகளில் தலையுரசும் மரங்களின் மீதும் கூரைகளின் மீதும் ஏறியது! விஜய்யின் நடைமேடையில் ஆபத்தான முறையில் தொங்கியெழுந்து ஏறிய ஒரு மூடனை பவுன்சர்கள் குண்டுகட்டாகத் தூக்கிக் கூட்டத்தில் வீசியெறிந்தார்களே இத்தகைய காட்சியை இதற்குமுன்பாக இந்திய அரசியல் கண்டதுண்டா?
"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு."
(சிற்றினம் சேராமை குறள் எண்: 452)
"சிற்றினம் சேராமை" என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர், மேற்கண்ட இந்த குறளில்... நீரானது நிலத்தைச் சேரும்போது தன்னுடைய இயல்பை விடுத்து அந்த நிலத்தின் இயல்பையே தன்னியல்பாக்கிக் கொண்டுவிடும் என்று சொல்லி அதேபோல்தான் மனிதரின் அறிவும் அவரவர் சாரும் கூட்டத்தின் (இனத்தின்) இயல்பாகவே மாறிவிடும் என்கிறார்!
இந்தத் திருக்குறள் முழுக்க முழுக்க மனிதர்களின் "கூட்ட மனநிலை" (Crowd mentality)க்குப் பொருந்தக் கூடியது! தனிப்பட்ட முறையில் ஒரு படித்தவனோ, பண்பாளனோ, நல்லவனோ, கெட்டவனோ அவன் ஏதோவொரு நோக்கத்துடன் கூடிய கூட்டத்தில் கலந்துவிட்டான் என்றால் அவனுடைய தனிப்பட்ட இயல்பானது அந்தக் கூட்டம் வெளிப்படுத்தும் இயல்பில் கரைந்து அந்த மொத்த இயல்பாகத்தான் பொதுவில் வெளிப்படும்! அப்படியிருக்கும்போது , ஓர் உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டியின் வெற்றியைக் கொண்டாடுகிறேன் என்று "கூடிய" கூட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை அண்டை மாநிலத்தில் அண்மையில் பார்த்துப் பதைபதைத்தோம். அந்தப் பதற்றம் தணிவதற்கு முன்பே தன்னைத்தான் தலைவனாக முன்னறிவித்துக்கொண்டு வலம் வரும் இந்த நடிகன் "கூட்டிய" இந்தக் கூட்டத்தில் இப்படி வரலாறு காணாத கோடூரம் அரங்கேறிவிட்டதே இதை எப்படிக் கடந்து செல்வது???
ஒரு பழுத்த தேசிய ஊடகவியலாளர் (சாம் டேனியல்) அரசியல் கூட்டத்தில் மட்டுமல்ல எத்தனையோ அவலமான கூட்டங்களில் நின்றுகூட செய்திகளை நேரலையில் அறிவித்திருக்கிறார். ஆனால் விஜய்யின் கடந்த கூட்டத்தில் அவர் எதிர்கொண்ட அருவருப்பான வினைகளை உலகமே பார்த்து உழிந்ததே, அப்போது கூட ஊடகங்கள் இதில் உள்ள ஆபத்தை உணரவில்லையா? இந்த நெறிகெட்டக் கூட்டத்தின் ஆபத்தை எந்த ஊடகமாவது முன்னறிவித்ததா? எச்சரிக்கை விடுத்ததா? இந்தக் கூட்டத்தைத் தடுக்கவேண்டி எந்த ஊடகமாவது அரசை நோக்கி உரைத்ததா? இப்படிப்பட்டத் தறிகெட்ட மூடர்கூட்டத்தின் நிகழ்வுகளை நேரம்காலம் பார்க்காது நேரலை செய்வதும், இந்தத் தரம்கெட்டத் தற்குறிகளிடையே தொடர்ந்து மைக்கை நீட்டுவதும் என்று நீண்ட ஊடக செயல்பாடுகள் மதிகெட்ட இந்தக் கீழ்மனிதர்களின் கூட்டத்தை எந்தவிதமாக மோடிவேட் செய்யும் என்று ஊடகக் கூடங்களுக்குத் தெரியாதா?
த.வெ.க கட்சியின் சார்பாக எழுத்துவடிவில் முறையாக விண்ணப்பிக்கப்பட்ட இடங்களுக்கே காவல்துறை நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதற்குமுன் இந்தக் கட்சி நடத்திய ஒவ்வொரு ஊர்வலத்திலும் விதிகளெல்லாம் கண்கூடாக மீறப்பட்டுள்ளது. திமிர்பிடித்த திருடனான விஜய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும் தான் கூட்டும் அபாயகரமான இந்தக் கூட்டத்தை நோக்கி, வழக்கமாகக் காவல்துறை வழங்கும் கட்டுப்பாடுகளைக்கூடத் தன்மீதான மாநில அரசின் பயமாகக் கட்டமைத்து, அவன் கட்சியினர் கோரிக்கை வைத்து வாங்கிய மின் தடை உட்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைக்கூட அரசின் வினையாக மடைமாற்றி விஷமத்தனமான அரசியல் செய்தான். மேற்கொண்டு அவனது ஊர்வலங்களை அரசு தடுத்தால் நிச்சயம் அதை வைத்தும் மலிவான அரசியலை அவனது மந்தப்புத்திக் கூட்டத்தை வைத்து மிகமோசமாகக் கட்டவிழ்த்துவிடுவான் என்பதும் தெருந்ததுதான். இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம் இன்று ஒரு கொலைகாரனாக உருவெடுத்துவிட்ட இந்த சமூக விரோதியின் முன்மதியற்ற திமிரை முன்னறிந்து அடக்கியிருக்க வேண்டாமா???
எங்கும் எதையும் அரசியலாக மக்களைப் பார்க்கப் பழக்கிவிட்ட ஊடகங்கள் மீதும் இன்று மரணித்த அப்பாவிக் குழந்தைகளின் இரத்தக்கறை படிந்திருக்கிறதுதான்! அரசியல் என்பது வெறும் கட்சிகளின் சூளுரையா?? பொய்களை மெய்களாக மக்களிடையே பேசுவதை அரசியல் மேடைகள் அனுமதிக்கலாம் ஆனால் அவை யார்யார்வாய்க் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் கண்டு மக்களுக்கு அறிவிப்பதுதானே ஊடகத்தின் பணி. யார் என்ன சொன்னாலும் அது சொல்பவரின் கருத்து என்று தற்காப்பு வாக்கியத்தையும் தொழில் சார்ந்த மற்றும் அறம்சார்ந்த தங்கள் பொறுப்புகளுக்கு எல்லாம் துறப்புகளையும் முன்னறிவித்துத் தானே ஊடகங்கள் "உள்ளது உள்ளபடி" என்று சொல்லி உள்ளும் புறமும் ஆராயாமல் அப்படியே இருளையும் கூட ஒளிபரப்புகிறார்கள்! ஊடகங்களின் மறைமுகமான அச்சுருத்தலும் இந்த வெறிபிடித்த மடையனின் கூட்டத்தை அனுமதிப்பதில் அரசியல் முன்னெச்செரிக்கையுடன் செயல்பட அரசையும் காவல்துறையையும் மறைமுகமாக நிர்பந்தித்திருக்கிறது! மாறாக, இந்த ஊடங்கங்கள் விஜய்யின் ஆபத்தான முன்னெடுப்பை வன்மையாகக் கண்டித்திருந்தால், இந்தக் கூட்டத்தினால் ஏற்பட வாய்ப்பிருந்த அவலங்களைக் குறித்து மக்களை எச்சரித்திருந்தால் நிச்சயமாக இந்தக் கொடூர சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். ஊடகங்களும் இன்றைய கொலையின் பங்குதாரர்களே!
இதையெல்லாம் தாண்டிய என் மனவேதனையாக நான் உணர்வது கல்வியால் மேம்பட்ட நம் தமிழ்ச்சமூகம் வெறும் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்துகளில் மட்டும் மேம்பட்டுவிட்டு அறிவுசார்ந்த அறம்சார்ந்த பண்புசார்ந்த மேம்பாடுகளிலெல்லாம் வருடம்தோறும் தேய்ந்துகொண்டே செல்வதைப் பார்த்துதான்! கல்வியறிவில் பின் தங்கியிருந்த நம் முன்னோர்கள்தான் எம்ஜிஆர் என்ற நடிகனைத் திரையில் பார்க்க "சினிமாவுக்குப் போன சித்தாளு"கள். ஆனால் அவர்களுக்கு அப்போது இருந்த சமூக ஒழுக்கமும், தன்னறிவும், மனிதாபிமானமும் இப்போது கல்வியில் பலமடங்கு தேறிவிட்ட நிகழ்காலத் தலைமுறைக்குக் கிஞ்சிற்றும் இல்லையே! அல்லு அர்ஜுனுக்காகவும் விஜய்க்காகவும் முறையற்ற கூட்டமாய்க்கூடி உயிரையே மாய்த்துக்கொண்டவர்கள் படித்தவர்களும் பட்டங்கள் தரித்தவர்களுமாயிற்றே!
"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். "
("கல்வி" குறள் எண்- 393)
கற்றோரே கண்ணுடையவர்கள் கல்லாதோரோ முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் என்ற வள்ளுவர் வாக்கையே நம் நிகழ்காலக் கல்வி கற்ற தமிழ்ச்சமூகம் பொய்யாக்கிவிட்டோமே! இன்று கூட்டத்தில் சிக்கிக் கொடூரமாக உயிர்விட்ட உடல்களில் உள்ள ஆறாத புண்களாக அல்லவா ஆகிவிட்டது நம் கல்வி!
இன்னும் இன்னும் என்ன சொல்லி என்ன பயன் என்று மனம் நொந்து இதுபோன்ற இன்னொரு நிகழ்வு என்னாளும் நடந்துவிடக்கூடாது என்ற பிரார்த்தனையுடன், கடுங்கோபத்துடனும் பெரும் வேதனையுடனும் எழுதியிருக்கும் இந்தப் பதிவை முடிக்கிறேன்.
பெருவலியுடன்,
பிரபு எம்
A good analysis. Genuine concern
ReplyDeleteChitra