Tuesday, March 22, 2011

வைகோ ஸ்டைலில் ஒரு ராஜினாமா கடிதம்!


தேர்த‌ல் புற‌க்க‌ணிப்பு என்று ரொம்ம்ம்ம்ப‌ ந‌ல்ல‌வ‌ராக‌ வைகோ விடுத்திருக்கும் கூட்டணி விலகல் அறிக்கையை IT பேக்டிராப்பில் ஓர்  ஐடி எஞ்சினியரின் ராஜினாமா க‌டித‌மாக‌ ஒரு சின்ன ரீமிக்ஸ்.....

அன்பிற்கும் வணக்கத்துக்கும் உரிய மேலாளருக்கு,
(ம்க்கும்...ப்ராஜெக்ட் மானேஜர்!)

என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும்.... அறிமுகம் தேவையில்லை எனக்கு... இருந்தாலும் "வரலாறு மிகவும் முக்கியம்" என்று மங்குனி அமைச்சரிடம் அன்று சூளுரைத்திருக்கிறான் மாமன்னன் இருபத்திமூன்றாம் புலிகேசி...! இதோ நம் இருவருக்குமே பொதுவான, நீங்கள் வசதியாக மறந்துவிட்ட,  நமது அணியின்  வரலாறு....

ஐடி கம்பெனியிலே நெட்வொர்க் இஞ்சினியராக என் பணியைத் தொடங்கிய திராவிடன் இவன் (அதாவது நான்!) கன்னித் தமிழ்ப் பாசறையில் கணிணியின் வரலாரையும் சேர்த்துப் படித்தவன்.... யுனிக்ஸையும்... டானென்பாமின் மினிக்ஸையும் தாண்டி ஓ.எஸ் உலகில் ஓர் இலவசப் புரட்சி செய்தானே சாஃப்ட்வேரின் ஏழைப்பங்காளன் (கொடுமடா!) ரிச்சர்டு ஸ்டால்மேன்... விளையாட்டாக ஆரம்பித்து லினக்ஸைக் கண்டுபிடித்தானே ஃபின்லாந்து சகோதரன் லினல் டோர்வோல்ட்ஸ் இவர்களது வரலாற்றையெல்லாம் ஒவ்வொரு கணிணித் தமிழனுக்கும் அறிவிப்பதைக் கடமையாய்க் கொண்டுப் பல்வேறு நடைப்பயணங்களை மேற்கொள்ளத் தயங்காதவன் நான் என்பதை என் இனம் அறியும்....  ஜனநாயகத்தின் மீது என்றும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையில் 2006ஆம் ஆண்டிலிருந்து தங்கள் அணியில் (ப்ராஜெக்ட் டீம்!) என்னை இணைத்துக்கொண்டு இன்றுவரை அயராமல் உழைத்திருக்கிறேன் என்பதை நம் அலுவலகத்து சுவர்களும் என் விரல்கள் விடாமல் உரசி எழுத்துக்கள் அழிந்த கீ-போர்டுகளும் நன்கு அறியும்!

 நம்முடைய புராஜெக்ட் ஆரம்பித்த நாளில் இருந்து நமது அணியில் இருந்திருக்கிறேன் அப்பொழுதெல்லாம் நம் அணியில் தங்களையும் சேர்த்து மூவர்தான் இருந்தோம்..... "நாலெட்ஜ் ட்ரான்ஸ்ஃபர்" (KT)  பயிற்சி முகாம்களில் விடாது சுழன்றடித்து அத்தனை க்ளையண்ட் ஸைட்டுக்கும் (Client Sites!) சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அத்தனை மீட்டிங்கிலும் பங்கேற்று நான் இரைதாங்கிக் கூடு நோக்கிப் பறந்துவரும் தாய்ப்பறவைபோல‌ தகவல்கள் சேகரித்து வந்த காலங்களை நீங்கள் மறந்திருக்க முடியாது..... புராஜெக்டின் ஸ்திரத்தன்மைக்காக என்னுடைய உழைப்பில் நெகிழ்ந்த நீங்கள் அப்போது வந்த ஹாஃப் இயர்லி ரிவ்யூவில் (Half Year Review!)  ஐந்துக்கு நான்கு ரேட்டிங் கொடுத்து என்னை ஊக்குவித்தீர்கள்... பிறகு உங்களுக்கு ந‌ம் அணியில்  நேர்ந்த ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் உண்டு உறங்கும் சாதாரணமான மனிதனின் தேவைகளையும் மீறி நமது அணிக்காக உழைத்ததில் எனக்குப் பெருமையே! ஆனால் இன்று ஆன்னுவல் ரிவ்யூவை (Annual Review!) எதிர்நோக்கியிருக்கும் வேளையில் புதியவர்கள் பலர் இணைந்ததால் விரிவடைந்திருக்கும் நமது அணியில்.... புதியவர்களை நீங்கள் ஆதரிக்கும் விதமாக அவர்களுக்கு அதிக ரேட்டிங் கொடுக்க நேரும் என்பதைப் பக்குவமாய் அறிந்து, நான் நியாயமாக ஐந்துக்கு மூன்று என்கிற ரேட்டிங்கைக் கேட்டிருந்தேன்.... நீங்கள் ஐந்துக்கு ஒன்று ரேட்டிங்தான் தருவேன் என்று சொல்லியனுப்பியதால் மனமுடைந்தேன்.....

ஏற்கெனவே "ஆன்ஸைட்"  (Onsite) என்கிற பெயரில் வெளிநாடு அனுப்பாமல் வெயில் எறிக்கும் "வேலூரின் மத்திய அலுவலகத்தில்" மின்விசிறி கூட இல்லாத அறையில் என்னை பத்தொன்பது மாதங்கள் போட்டு வாட்டியிருந்த தாங்கள், அப்போதே நவ்க்ரி டாட் காமும் , மான்ஸ்டர் டாட் காமும் எனக்குக் கொடுத்த ஆயிரமாயிரம் அணித்தாவல் அழைப்புகளையும் ஏற்காது தங்களிடத்தில் மீண்டும் வந்து என்னை இணைத்துக் கொண்ட இந்த உண்மை ஊழியனை மறத்தல் எப்படித் தகும்?

இப்போதும் த‌ங்க‌ளின் அக‌ந்தையும் ஆண‌வ‌மும் உங்க‌ளிட‌ம்
 ச‌ற்றும் குறைய‌வில்லை.... நானே மீண்டும் இற‌ங்கிவ‌ந்து ஐந்துக்கு இர‌ண்டரை என்னும் ரேட்டிங்கிற்கு ச‌ம்ம‌தித்த‌போதும் ஒன்ற‌ரை த‌ருகிறேன் என்று இரவில் சொல்லிவிட்டு மீண்டும் மறுநாள் காலை  ஃபோன் செய்து ஒன்றுதான் த‌ர‌ முடியும் என்று சொல்லி உட‌ன்பாட்டுப் பி.டி.எஃப் டாகுமென்டில் டிஜிட்ட‌ல் ஸிக்னேச்ச‌ர் கேட்டீர்க‌ள்....

இதனையெல்லாம் ப‌கிர‌ங்க‌மான‌ அவ‌ம‌திப்பாக‌க் க‌ருதி நான் ந‌ம‌து அணியிலிருந்து வில‌க‌ முடிவெடுக்கிறேன்... ! மேலும் வேறு எந்த‌ வேலைக்கும் நான் அடுத்த‌ ஐந்தாண்டுக‌ளுக்கு செல்ல‌ப்போவ‌தில்லை (!) என்ப‌தையும் அறிவிக்கக் க‌ட‌மைப் ப‌ட்டிருக்கின்றேன்.... இந்த‌ இண்ட‌ர்வியூ புற‌க்க‌ணிப்பில் எந்த‌வொரு மாற்ற‌மும் இருக்க‌ப்போவ‌தில்லை என்று நாளைக்கு மீண்டும் ஓர் அறிக்கையையும் நீங்க‌ள் பார்க்க‌ நேரிடும்...!!!! அதேபோல் என்னைத் த‌ங்க‌ள் அணிக‌ளில் வ‌ச‌ப்ப‌டுத்திக் கொள்ள‌ "ச‌ன்"(!) ஜாவா போன்ற‌ அணிக‌ள் ம‌றைமுக‌ அழைப்பு விடுப்பார்க‌ள் இருப்பினும் இண்ட‌ர்வியூக்க‌ளைப் புற‌க்க‌ணிக்க‌ நானெடுத்திருக்கும் முடிவில் மாற்ற‌ம் எதுவும் இருக்க‌ப்போவ‌தில்லை என்ப‌தைத் தன்மானத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்...!!!!!

இப்ப‌டிக்கு,

த‌ங்க‌ளின் த‌ன்மான‌முள்ள‌ திராவிட‌ன்
மறுமலர்ச்சிக் க‌ணிணித் த‌மிழ‌ன்!

=========================================================================

ஹி ஹி..

நான் வைகோவின் எதிர்ப்பாள‌னும் அல்ல‌..... திமுக‌, அதிமுக‌ கார‌னும் அல்ல‌... அர‌சிய‌ல் பார்வையாள‌ன் என்றெல்லாம் சுற்றி வ‌ளைத்துக் காமெடி செய்யாம‌ல் ஒரு "வாக்காளனா"க‌ வைகோவின் தேர்த‌ல் புற‌க்க‌ணிப்பு நிலைப்பாட்டு அறிக்கையைப் ப‌டித்து உருண்டு உருண்டு சிரித்தேன்!

கூட்ட‌ணியில் அவ‌ம‌தித்துவிட்டார்க‌ள் என்று தேர்த‌லைப் புற‌க்க‌ணிப்ப‌தால் யாருக்கு லாப‌ம்? யாருக்கு ந‌ட்ட‌ம்?  எதிர்க்கூட்ட‌ணியில் போய் சேர்ந்தால் ஏதோ இருப்ப‌தாய்ச் சொல்லப்ப‌டும் த‌ன்மானத்துக்கு இழுக்கு   ச‌ரி... வேண்டாம்.... ஏற்கென‌வே 2001ல் க‌டைசி நிமிட‌த்தில் க‌லைஞ‌ர் க‌ழ‌ற்றிவிட்ட‌போது செய்த‌துபோலத் தனியாக நின்றால்..... ஓட்டைப் பிரித்து எதிர‌ணியின் வெற்றிக்கு வ‌ழிவ‌குத்துவிடும் அபாயம் நேரிடுமாம்.. சரி அதையும் ஏற்கலாம்... ஆனால் சென்ற‌முறை 35 தொகுதிக‌ளில் போட்டியிட்டு ஆறில் வெற்றிபெற்று க‌ட்சி தாவிய‌வ‌ர்க‌ளைத் த‌விர்த்து, 3 சிட்டிங் எம் எல் ஏக்களை (ந‌‌ம்ப‌ர்க‌ள் ச‌ரியாக‌ நினைவில்லை) வைத்திருக்கும் க‌ட்சிதானே ம‌திமுக‌..... மேலும் இர‌ண்டு மூன்று தொகுதிக‌ளில் நூலிழையில்தான் வெற்றியைத் த‌வ‌ற‌விட்டோம் என்றும் மார்தட்டுபவர்கள்.... அட்லீஸ்ட் அதிமுக‌ அணியில் இறுதி உட‌ன்பாட்டுக்கு வைகோ தானாகவே இறங்கி வந்து சம்மதம் சொன்ன‌ 23 தொகுதிக‌ளிலாவ‌து வெற்றிவாய்ப்பை ஆராய்ந்து த‌னியாக‌ நின்று பார்ப்ப‌துதானே..... ஏற்கென‌வே சொன்ன‌துபோல், அணிதாவ‌லின் லாங்ஜ‌ம்ப் சாம்பிய‌ன் பாம‌க‌ கூட‌, த‌னித்து நின்றாலும் க‌ணிச‌மான‌ வாக்கு வாங்க‌ (சாதி அடிப்ப‌டையில்!) சில‌ தொகுதிக‌ளை வைத்திருக்கிற‌து.... நேற்று வ‌ந்த‌ தேமுதிக‌ 2006ல் தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றியும் பெற்றிருக்கிறது... அப்ப‌டியிருக்க நீண்ட நெடுங்காலமாக தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாதவராக இருப்பவர் என்று பலரும் கொக்கரிக்கும் வைகோ ம‌ற்றும் மதிமுக‌ வுக்கு  234 தொகுதிக‌ளில் த‌னித்து நின்று ஒரு தொகுதியைக் கூட‌ வெல்ல‌ முடியாது என்றுதான் அர்த்தமா??  உண்மையில் வைகோ செய்திருப்பதைப் போல் (!) நான் அவரையும் மதிமுகவையும் அண்டர் ரேட் செய்ய முனையவில்லை..... என்றுமே வைகோ மேல் ஒரு தனிப்பட்ட அபிமானம் இருந்த‌தில்லை என்றாலும் சமீபகாலங்களில் வைகோவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை உண்மை என்றே க‌ருதுகிறேன்....

செல்வாக்குள்ள தொகுதிகளில் தனித்து நின்று ஒரு எம் எல் ஏ ஸீட்டு கூட‌ வாங்குவதற்குத் தங்களால் முடியாது என்றால் எதற்காக‌ இந்த‌ ச‌ட்ட‌ச‌பைப் பொதுத்தேர்த‌லை ம‌ட்டும் புற‌க்க‌ணிக்க‌ வேண்டும்?? மொத்த‌மாக‌க் க‌ட்சியைக் க‌லைத்துவிட்டு விஜ‌ய் டிவியில் (சுத்த‌த் த‌மிழில்) டாக் ஷோ ந‌ட‌த்த‌லாமே!!!!

அன்புட‌ன்,
பிர‌பு எம்

13 comments:

  1. ஹி ஹி நல்ல comparison

    ReplyDelete
  2. நன்றி பிரசன்னா :-)

    ReplyDelete
  3. நல்ல கற்பனை வளம் சார் உங்களுக்கு....:)))

    ReplyDelete
  4. ரொம்ப பாவமாய் இருக்கிறது வைகோவை பார்த்தால்.

    ReplyDelete
  5. நன்றி தக்குடு :-)
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  6. note a point. there is no money for election expenses. MDMK party has only 2 crores in hand which is noway sufficient...

    ReplyDelete
  7. வணக்கம் அமுதா அக்கா...
    பாவம்தான் அக்கா...! ஆனால் இன்று வைகோவுக்கு நேர்ந்தது நாளை விஜயகாந்த்துக்குக் கூட நேரலாம் அவரும் உஷாராக இல்லாமல் கூட்டணிக்குள் உருகினால்...!!
    கூட்டணி என்பது நண்பர்களின் கூட்டு இல்லையே எதிரிகளின் கூட்டமைப்புதானே... பொதுவான எதிரியை வீழ்த்துவதற்காக விரோதங்கள் அமைத்துக்கொள்ளும் தற்காலிக அட்ஜஸ்ட்மெண்ட்டில் முழுமையாகத் தன்னை மூழ்கடித்துக்கொண்டவர் தன் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க மறந்துவிட்டாரே... என்ன சொல்லுறது... வருத்தம்தான்!!

    ReplyDelete
  8. @ Kovilpati Anandhan

    Point noted friend...
    But its a common fact which we both and also everyone knows that No excuses in this Ruthless Politics... :-)

    ReplyDelete
  9. அருமை தோழரே!

    ReplyDelete
  10. @ Suvadugal

    மிக்க நன்றி நண்பரே.. :-)

    ReplyDelete
  11. பிரபு....அரசியலில குதிச்சிட்டீங்களோ.
    பாவம் நீங்களும் !

    ReplyDelete
  12. வணக்கம் ஹேமா அக்கா :)
    ஹாஹாஹா சூடான எலக்ஷன் டைம்ல‌ இப்படி ஜில்னு வைகோ காமெடி பண்ணா என்ன பண்ணுறது?? குதிச்சுடுடா கைப்புள்ளனு வடிவேலே அரசியல்ல குதிச்சிட்டாரு!!! :))

    நான் அரசியல்னு இல்லக்கா கவனத்தை ஈர்க்குற விஷயங்களைப் பார்த்து மனசுல தோணுறதைப் பதிவோமேன்னு தான்!!! :) இன்னிக்கு அணல் பறக்குற மேட்ச் இல்லையா... ஸோ நாளைக்கு நான் Back to Cricket!! :)))

    ReplyDelete
  13. பிரபு, நீ தான் எழுதுறியா? அரசியல் பத்தி !!!!!!!!!!!!!!!
    இறுதி பத்தி படித்து விட்டு குழம்பிவிட்டேன், நான் படிப்பது பிரபு. எம்மா அல்லது வேறொன்றா?????????

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)